Saturday, 2 April 2022

மாவோ எழுதிய “செவ்வேடு” (Red Book) (மாசேதுங்கின் மேற்கோள்கள்) நூலின் சாரம் (நான்காம் பகுதி)

 

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

56 வது வார வகுப்பு – 02-04-2022)

மாவோ எழுதியதில் இருந்து திரட்டப்பட்ட மேற்கோள்களைக் கொண்ட நூல் “செவ்வேடு” இதனை “மாவேதுங்கின் மேற்கோள்கள்” என்றும் “சிறிய செவ்வேடு” என்றும் வழங்கப்படுகிறது என்பதை சென்ற வகுப்பினில் பார்த்தோம்.

இந்த நூலில் மொத்தம் 33 தலைப்புகள் இருக்கிறது நாம் இதுவரை 25 தலைப்புகளைப் பார்த்துவிட்டோம். மீதமுள்ள 8 தலைப்புகளை இன்று பார்க்கப் போகிறோம்.

                இருபத்தி ஆறாவது தலைப்பு, “கட்டுப்பாடு.”

      அரசியலில் ஈடுபடுபவர்கள், அரசியல் கலைச் சொற்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதனைப் பின்பற்ற முடியும். ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம், சுதந்திரம், கட்டுப்பாடு போன்ற சொற்களை புரிந்து செயல்பட வேண்டும்.

      ஜனநாயகம் என்றால் அது ஜனநாயக மத்தியத்துடன் தொடர்புடையது. அதே போல சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுடன் தொடர்புடையது. இரண்டும் முழுமையின் எதிர்மறைகள். ஒரு பொருளோ நிகழ்வோ அதில் முரண்பாடும் இருக்கும் அதனிடத்தில் ஐக்கியமும் காணப்படும்.

      ஜனநாயக மத்தியத்துவத்தின் பெயரால் கட்சியில் காணப்படும் ஜனநாயகத்தைப் பறித்திடக்கூடாது. அதே போல கட்சியின் ஜனநாயகம் என்ற பெயரால் ஜனநாயக மத்தியத்துவத்தை மீறக்கூடாது.

      அதாவது ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை முன்வைத்து ஜனநாயகமாக முன்வைக்கும் கருத்தை தடுக்கக்கூடாது.

      கட்சியின் கட்டுப்பாடு என்ற பெயரால் கட்சியில் உள்ள சுதந்திரத்துக்கு தடை போடக்கூடாது. அதே போல சுதந்திரம் என்ற பெயரால் கட்டுப்பாட்டை மீறக்கூடாது.

       ஒன்றை ஒருதலைபட்சமாக வலியுறுத்தி மற்றொன்றை மறுக்கக் கூடாது என்பதுதான் இதற்கு பொருள்.

      கட்சிக் கட்டுப்பாட்டின் ஒரு தன்மை, சிறுபான்மை பெரும்பான்மைக்குக் கீழ்படிதலாகும்.

கட்சி மாநாட்டில் ஒரு கருத்து நிராகரிக்கப்பட்டால், மறுக்கப்பட்ட கருத்தையே மனதில் கொண்டு கட்சியில் செயல்பட்டாலோ, அந்தக் கருத்தை நடைமுறைப்படுத்த முனைந்தாலோ அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலேயாகும். தேவைப்பட்டால் அடுத்த மாநாட்டில் அந்தக் கருத்தை மறுபரிசீலனைக்குக் கொண்டுவரலாம். ஆனால் மாநாட்டில் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்படக்கூடாது.

      கட்சியின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவற்கு செய்ய வேண்டிய நான்கை மாவோ குறிப்பிடுகிறார்.

1) தனிநபர் அமைப்புக்குக் கீழ்படிய வேண்டும்,

2) சிறுபான்மை பெரும்பான்மைக்குக் கீழ்படிய வேண்டும்,

3) கீழ்மட்டம் மேல் மட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்,

4) உறுப்பினர் அனைவரும் மையக் கமிட்டிக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

      கீழ்படிதல் என்பது “அதிகாரப் போக்கு”க்கு கட்டுப்படுதல் என்பது பொருள் அல்ல. சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு கட்டுக்போப்பு அவசியம். இந்த கட்டுப்பாட்டுக்குத்தான் கீழ்படிதல் பற்றி இங்கே பேசப்படுகிறது. மேலே உள்ள கமிட்டியானது, கீழே உள்ள கமிட்டி மற்றும் தோழர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியாது.

முடிவெடுத்தக் கருத்துக்களை செயல்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு ஒன்றிணைந்து வேலை செய்வதற்கு வகுக்கப்பட்டதே கீழ்படிதல். கீழ்படிதல் என்றால் அடங்கி இருத்தல் என்பது பொருள் அல்ல. கட்சியின் முடிவுக்கு கட்டுபடுதல் என்பதே பொருளாகும். மேலே கூறப்பட்ட நான்கு கீழ்படுதல்களை கடைப்பிடித்தால் மட்டுமே கட்சியின் ஒற்றுமை வலுப்பெறும்.

      கட்டுப்பாட்டின் மூன்று முக்கிய விதிகளாக மாவோ கூறுவதைப் பார்ப்போம்.

      1) அனைத்து கட்சி நடவடிக்கைகளிலும் கட்டளைக்குக் கீழ்படிய வேண்டும்,

      2) மக்களிடம் இருந்து ஒரு ஊசியையோ ஒரு துண்டு நூலையோ எடுக்கக்

  கூடாது.

      3) கைப்பற்றப்பட்ட அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்.

      கீழ்படிதலோடு மற்றென்றையும் மாவோ குறிப்பிடுகிறார். மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து எதையும் வாங்கக்கூடாது அப்படி எதேனும் வாங்கி இருந்தால் அவைகளை மக்களிடம் திரும்பக் கொடுத்திட வேண்டும். மக்களுக்கு சேவகம் செய்கிறேன் என்ற பெயரில் எதையும் பெறக்கூடாது.

      அதே போல மாவோ கவனமாக கடைப்பிடிக்க வேண்டிய எட்டுக் கருத்துக்களை கூறியுள்ளார். இந்த எட்டும் கம்யூனிஸ்டுகளின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவிடும்.

1) அனைவரிடமும் மரியாதையாகப் பேச வேண்டும்

2) வாங்கியப் பொருளுக்கு உரிய பணத்தைக் கொடுக்க வேண்டும்

3) கடனாக வாங்கியதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

4) தேசத்தின் பொருளை சேதப்படுத்தினால் அதற்கு உரிய பணத்தை செலுத்த

   வேண்டும்

5) மக்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது.

6) பயிர்களை சேதப்படுத்தக் கூடாது

7) பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது

8) கைதிகளை மோசமாக நடத்தக் கூடாது.

      இவைகள் மிகவும் சாதாரணமானதுதான், ஆனால் இதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கம்யூனிஸ்டுகளின் ஒழுக்கம் வளப்படும். ஒற்றுமை மேலோங்கும்.

      இருபத்தி ஏழாவது தலைப்பு, “விமர்சனமும் சுயவிமர்சனமும்.”

      இந்த விமர்சனம், சுயவிமர்சனம் ஆகிய இரண்டும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதிகம் பேசப்படுகிறது. பேசும் அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. மற்றவர்களிடம் விமர்சனம், சுயவிமர்சனம் ஆகியவற்றின் தேவையைப் பற்றி அதிகமாக பேசப்படுகிறது, ஆனால் அதை கடைபிடிக்க வேண்டிவரும்போது மறக்கப்படுகிறது.

      மாவோ “சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பரப்புரை பணி பற்றிய தேசிய மாநாட்டுரையில்” கூறியதை முதலில் பார்ப்போம்.

“கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. காரணம், நாம் மார்க்சியவாதிகள், உண்மை நம் பக்கத்தில் இருக்கிறது. அடித்தள மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர்கள் நம் பக்கத்தில் இருக்கின்றனர்.”

(1957) 

      இது மிகவும் முக்கியமானதாகும். மார்க்சியவாதிகள் உண்மையின் பக்கத்தில் இருப்பவர்கள். அதனால் விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. இந்த அஞ்சாமைக்குக் காரணம், கம்யூனிஸ்ட் பக்கத்தில் உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர்கள் இருப்பதே ஆகும்.

உண்மைக்கு மாறாக கம்யூனிஸ்டுகள் செயல்பட்டால் அது கம்யூனிஸ்டுகளுக்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும். கம்யூனிஸ்டுகள் தமது இறுதிக் குறிக்கோளை மறைப்பதில்லை, அதனால் விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை.

      பொருள்முதல்வாதம் எதார்த்தத்தைப் புரிய வைக்கிறது. அதனால் பொருள்முதல்வாதிகளான கம்யூனிஸ்ட்டுகள், எதிர்படும் இடர்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் பிறர்மீது விமர்சனம் செய்வதிலும் தங்கள் மீதான விமர்சனத்தை ஏற்பதற்கும் தயங்க மாட்டார்கள்.

இத்தகைய சிறப்புகளை ஒரு கம்யூனிஸ்ட் பெற வேண்டுமானால் பொருள்முதல்வாதத்தின்படி செயல்பட வேண்டும்.

      விமர்சனம், சுயவிமர்சனம் என்கிற மார்க்சிய லெனினிய ஆயுதத்தை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும். தவறானதை நீக்குவதன் மூலமும், சரியதானதில் செல்வதின் மூலமும் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.

      சுயவிமர்சனம் என்பதே மற்ற கட்சிகளிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியை பிரித்துக் காட்டுகிறது என்கிறார் மாவோ. கம்யூனிஸ்ட் கட்சி, உண்மையின் பக்கம் நிற்பதினாலும், கட்சிக்குள் ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பதினாலும் சுயவிமர்சனத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறது.

நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், இடது அமைப்புகள் மாவோ சுட்டிக்காட்டுகிற சுயவிமர்சனத்தை கடைப்பிடிக்கிறார்களா என்ற கேள்விக்கு “இல்லை” என்பதே பதிலாக இருக்கிறது. மற்ற கட்சிகளைப் போலவே இவைகளும் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. மற்ற கட்சிகளிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி வேறுபடுகிறது என்பதை மக்கள் உணரும்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நம் நாட்டில், விமர்சனமோ, சுய விமர்சனமோ அனைத்தும், கட்சியை சிறுமைப்படுத்தும் என்ற கருத்தே மேலோங்கிக் காணப்படுகிறது. கட்சி பற்றிய விமர்சனமானது, கட்சியில் உள்ள தோழர்களிடம் கட்சி பற்றிய தவறான கருத்து உருவாக்கிவிடுமோ என்ற அச்சமே மேலோங்கிக் காணப்படுகிறது.  இந்தப் போக்கைவிட்டு வெளிவராமல் கட்சி, அமைப்பு ஆகியவற்றை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற பேருண்மையை புரிந்து கொள்ள வேண்டும். திருத்திக் கொள்ள வேண்டியதை, விமர்சனத்தின் மூலமே அறிந்து கொள்ள முடியும். தவறானதை திருத்திக் கொண்டு செயல்பட்டால் தான் வெற்றியை நோக்கிய பயணமாக நமது செல்வழி இருக்கும்.

      உட்கட்சி விமர்சனத்தில், அகநிலைவாதம், மனம்போன போக்கு, விமர்சனத்தை இழிவு படுத்தும்போக்கு ஆகியவற்றுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவோ கூறுகிறார்.

      தவறுகளுக்கு, கம்யூனிஸ்டுகள் வெளிப்பாடையாக மன்னிப்பைக் கேட்பார்கள். விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் விமர்சனத்தை சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். தவறு நடைபெற்ற பிறகு மட்டுமே சுயவிமர்சனம் செய்வதை பழக்கமாகிக் கொள்ளக் கூடாது என்று மாவோ எச்சரிக்கிறார். தவறு செய்வது இயல்பு தான், ஆனால் தவறு செய்வதையே இயல்பாகக் கொள்ளக்கூடாது.

      இருபத்தி எட்டாம் தலைப்பு, “கம்யூனிஸ்டுகள்.”

      இதில் தொகுக்கப்பட்ட அனைத்தையும் நாம் நன்றாகப் படித்துப் புரிந்து செயல்பட வேண்டும். இதில் உள்ள எதையும் விட்டுவிட முடியவில்லை. இருந்தாலும் வகுப்பில் அனைத்தையும் பார்க்க முடியாது. சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்ட முடியும். வகுப்பில் கலந்து கொள்பவர்கள், மாவோவின் “செவ்வேடு” என்கிற நூலை எடுத்து படிக்க வேண்டும். இந்தத் தலைப்பை மட்டுமல்லாது முழு நூலையும் படிக்க வேண்டும்.

      ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று 1937ஆம் ஆண்டில் மாவோ கூறியதை பார்ப்போம்.

      ஒரு கம்யூனிஸ்ட் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர் போல் கருதப்பட வேண்டும். தனது தனிப்பட்ட நலன்களை புரட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்போதும் அவர் சரியான கோட்பாட்டின்படி நடக்க வேண்டும். தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராக சளைக்காமல் போராட வேண்டும். (தாராளவதத்தை எதிர்ப்போம் – 7 செப்டம்பர், 1937)

      இதற்கு விளக்கம் தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் இறுதி மூன்றை மட்டும் பார்ப்போம். ஒரு கம்யூனிஸ்ட், புரட்சியின் நலனை முன்வைத்தே செயல்பட வேண்டும். தன்னுடைய சொந்த நலனை, புரட்சியின் நலனுக்கு கீழாகத்தான் வைக்க வேண்டும். அடுத்து சரியானக் கோட்பாட்டின்படி நடக்க வேண்டும் என்று மாவோ கூறுகிறார். பொதுவாக எந்த கட்சிகளும் தங்களது கோட்பாட்டை மறப்பதில்லை, மீறுவதில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்டுகளிடம் தாராளப் போக்கு அதிகம் காணப்படுகிறது. கதம்பப் போக்கையே கடைபிடிக்கின்றனர், இந்தக் கதம்பப் போக்கு இயக்கவியலுக்கு எதிரானது.

கம்யூனிஸ்டுகள் தவறானதை எதிர்த்து சளைக்காமல் போராட வேண்டும். தவறானதிற்கு இடம் கொடுத்தால், ஏற்றுக் கொண்ட கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியாது.

இயக்கவியலையோ, மார்க்சியக் கோட்பாட்டையோ கம்யூனிஸ்டுகள் மீறினால் கம்யூனிச வழிப்பட்டக் குறிக்கோளை அடைய முடியாது. அனைத்துக் கட்சிகளைவிட கம்யூனிஸ்டுகள்தான் தங்களது கோட்பாட்டில் உறுதியாக நிற்பார்கள். ஆனால் நமது நாட்டில் இது எதிர்மறையாக நடக்கிறது. இந்த போக்கில் இருந்து நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும்.

      கம்யூனிஸ்ட்டின் கருத்துகளையும் செயல்களையும் சோதித்துப் பார்க்கும் அதி உயர்ந்த முறை என்னவென்றால், அவை பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு இசைவாக இருக்கின்றதா? இல்லையா? அவர்களுடைய ஆதரவை பெற்றுள்ளதா இல்லையா என்று பார்ப்பதே ஆகும். மாவோ காட்டும் இந்த முறை மிகவும் எளிதானது மேலும் சிறப்பானது.

      நமது செயல்பாடு பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு உதவிடும் வகையில் இருந்தால்தான் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற முடியும். மேலும் இதனை சோதித்து அறிவதின் மூலம் நமது செயல்பாட்டை சரிபார்க்கலாம்.

      கம்யூனிஸ்டுகள் எப்போதும் உண்மைக்கு வாதாடத் தயாராய் இருக்க வேண்டும். ஏன் என்றால் உண்மை என்பது மக்களின் நலன்களுக்குச் சாதகமானது.  கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். காரணம் தவறுகள் மக்களின் நலன்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். தவறு என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, தவறுகள் மக்களிடம் இருந்து நம்மைப் பிரிக்கும். மக்களிடம் இருந்து பிரிந்த இயக்கம் எதையும் சாதித்திட முடியாது.

      கம்யூனிஸ்டுகள் தங்களது இறுதிகுறிக்கோளையும் அதனை அடைவதற்கான வழியையும் அமைத்து செயல்பட வேண்டும். அவர்கள் நடைமுறை சாத்தியப்பாடு, தொலை நோக்குப் பார்வை ஆகிய இரண்டிலும் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும், தற்போதைய சாத்தியப்பட்டின் மூலமே கம்யூனிஸ்டுகள் தங்களது இறுதிக் குறிக்கோளை அடைய முடியும்.

      கம்யூனிஸ்ட்டுகள் மக்களிடம் கொள்ள வேண்டிய உறவைப் பற்றி மாவோ கூறுகிறார், கம்யூனிஸ்டுகள் படிப்பில் ஒரு முன்னுதாரனமாக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் மக்களின் ஆசிரியராக விளங்க வேண்டும், அதே நேரத்தில் மக்களுக்கு மாணவர்களாகவும் இருக்க வேண்டும்.

இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் மக்களிடம் இருந்து கற்றதை தொகுத்தே அவர்களுக்கு போதிக்கிறோம். அதனால் கம்யூனிஸ்டுகள் மக்களிடம் மாணவராகவும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும்.

      கட்சிக்கு வெளியிலுள்ளவர்களின் கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் கவனமாகக் கேட்டறிய வேண்டும். அவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வது சரியாக இருக்குமானால் அதை கம்யூனிஸ்டுகள் வரவேற்க வேண்டும். மாவோவின் இந்த ஆலோசனை மிகவும் முக்கியமானதாகப் படுகிறது.

      கட்சிக்கு வெளியில் நின்று ஆதரிப்பவர்கள் கட்சிக்கு தேவை என்றால், அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். அதில் உள்ள சரியானதை கட்சி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கட்சிக்கு உள்ளே உள்ளவர்களின் கருத்துக்களையே, நம் நாட்டில் உள்ள கட்சிகள் கேட்பதில்லை என்கிற மோசமான நிலைமையைதான் சந்தித்து வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சி என்பது மேலிருந்து அதிகாரம் செலுத்துபவையாக இருக்க முடியாது, அடிமட்ட கட்சி ஊழியர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்ளும் வகையில் கட்சி செயல்பட வேண்டும். அதே போல் கட்சிக்கு வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் கருத்துக்கள் சரியாக இருந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பரந்துப்பட்ட பார்வை இல்லாமல் கம்யூனிஸ்டுகள் வெற்றியை சாதித்தியப்படுத்த முடியாது.

இருபத்தி ஒன்பதாவது தலைப்பு, “ஊழியர்கள்.”

      ஒரு சரியான கொள்கைகளையும் அதற்கான திசைவழியையும் கம்யூனிஸ்ட் அமைத்துக் கொண்டால் மட்டும் போதாது. இதனடிப்படையில் பல ஆயிரம் ஊழியர்களை தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டியுள்ளது என்கிறார் மாவோ.

      கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு பெரும் பொறுப்புகள் இருக்கின்றன. நாட்டின் சமூக பொருளாதார நிலைமைக்கு ஏற்ப திட்டங்களை வகுப்பது, அதற்கு ஏற்ப தீர்மானங்களை போடுவது இது முதல்வகைப் பொறுப்பு. இந்த முதல் பொறுப்பு கருத்துக்களை முன்வைக்கிறது.

கருத்துக்களை முன்வைத்தால் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்துவதற்கு கட்சி ஊழியர்களை ஒன்றுபட்டு செயல்பட பயிற்றுவிக்க வேண்டும். இது கட்சியின் இரண்டாவது பொறுப்பு என்கிறார் மாவோ.

      புரட்சியை, கட்சி ஊழியர்களைக் கொண்டு மட்டும் நிகழ்த்தப்பட முடியாது. அதனால் கட்சி ஊழியர்கள் மீது கவனம் செலுத்தினால் மட்டும் போதாது, கட்சிக்கு வெளியில் உள்ளவர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். புறக்கணிக்க முடியாத திறமைசாலிகளில் பலர் கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். அதனை கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனிமை, செருக்கு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, கட்சியில் இல்லாதவர்களையும் நன்றாக வேலை செய்ய அவர்களுக்கு உதவிட வேண்டும், அவர்களிடம் அன்போடும், தோழமை மனப்பான்மையோடும் பழக வேண்டும். அப்போதுதான் எதிரியை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்த முடியும். இந்தக் கடமையை கம்யூனிஸ்டுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

      முப்பதாவது தலைப்பு, “இளைஞர்.”

      இன்றைய உலகம், இளைஞர்கள் முதியர்வர்கள் ஆகிய இருவருக்கும் உரியது, ஆனால் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் இருக்கப் போகிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மாவோ கூறுவதைப் பார்ப்போம்.

      1957ல் சீன நாடு மிகவும் வறிய நாடாக இருக்கின்றது. ஒரு குறுகிய காலக்கட்டத்தில் இதனை மாற்றிட முடியாது. இதனை மாற்றப் போகிற இளைஞர்களுக்கு, எதிர்கால கடமைகளை அவர்கள் உணரும் வகையில் புரிய வைக்க வேண்டும். எதிர் காலத்தில் சோஷலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்பது இன்று கனவாக இருக்கிறது. இதனை நனவாக்கப் போகிறவர்கள் இளைஞர்களே. அதனால் இன்றைய இளைஞர்கள் கடின உழைப்பு செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும் என்கிறார் மாவோ.

      முப்பத்தி ஒன்றாவது தலைப்பு, “பெண்கள்.”

      ஆண்கள் மீது மூன்று அதிகார அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசியல் அதிகாரம், குடும்ப அதிகாரம், மத அதிகாரம் என்கிற மூன்று ஆதிக்கத்துக்கு ஆண்கள் ஆளாகுகிறார்கள். பெண்களோ இந்த மூன்று ஆதிக்கத்துடன் ஆணாத்திக்கம் என்கிற ஆதிகத்துக்கும் ஆளாகுகிறார்கள். ஆக ஆண்களைவிட பெண்களே அதிகமான ஆதிக்க சக்திகளை சந்திக்கின்றனர். இந்த ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு மாவோ கூறுவது என்னவென்றால், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் பெண்கள் ஈடுபடவேண்டும், பெண்கள் ஒன்றுபட்டு உற்பத்தியிலும் அரசியல் நடிவடிக்கையிலும் பங்குபெற வேண்டும்.

      பெண்கள் தங்கள் மேம்பாட்டிற்கு மட்டும் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படவில்லை. ஒரு பெரும் சோஷலிச சமூகத்தைக் கட்டி வளர்ப்பதற்கும் அவர்கள் உற்பத்தி நடவடிக்கையில் பங்குபெற வேண்டும், அதற்கு ஏற்ப பரந்தளவு உற்பத்தியில் ஈடுமாறு அவர்களை நாம் தூண்ட வேண்டும். உற்பத்தியில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் கிடைக்கப்பெற வேண்டும். ஆண் பெண் ஆகிய இருபாலினங்களுக்கு இடையிலான உண்மையான சமத்துவத்தை சோசலிச மாற்றத்தின் மூலம் மட்டுமே கொண்டிவர முடியும் என்கிறார் மாவோ.

இதற்கு என்ன பொருள் என்றால், இப்போது படிப்படியாக பெண்களுக்குக் கிட்டும் விடுதலை சோஷலிச சமூகத்தில் முழுமை அடையும். முழுமையான விடுதலைப் பெறுவதற்கு இப்போது முதலே, பெண்கள் படிப்படியான விடுதலையை பெறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூக உற்பத்தியில் பெண்கள் முழுமையாக சோஷலிச சமூகத்தில் மட்டுமே ஈடுபட முடியும். அப்போது ஆண் பெண் ஆகியோர்களுக்கு இடையில் உண்மையான சமத்துவம் உருவாகி இருக்கும். அந்த நேரத்தில் ஆணாதிக்கம் முடிவுக்கு வந்திருக்கும், அப்போது பெண் விடுதலைக் கோரிக்கை தேவைப்படப் போவதில்லை.

      முப்பத்தி இரண்டாவது தலைப்பு, “கலையும் பாண்பாடும்.”

      பொதுவாக சமூகத்தில் “கலை கலைக்காகவே” என்ற கருத்தே மேலோங்கி காணப்படுகிறது. கலையை அழகியல் உணர்வோடு சுருக்கிக் கொள்வதால் இத்தகையப் போக்கு நிலவுகிறது.

உண்மையில் இன்று கலையாக, பண்பாடாக பொதுப்படக் கூறப்படுபவை அனைத்தும், ஆளும் வர்க்கத்தின் கலையாகவும், ஆளும் வர்க்கத்தின் பண்பாடாகவும் இருக்கின்றன. கலை என்பதையோ பண்பாடு என்பதையோ அனைத்து வர்க்கத்துக்கானது என்று பொதுபடக் கூறுவது தவறானது. அரசியலில் இருந்து கலை, பண்பாடு போன்றவை பிரிந்து காணப்படவில்லை. அனைத்திலும் அரசியல் கலந்து காணப்படுகிறது. வர்க்க சமூகத்தில் பொதுவான கலையோ, பொதுவான பண்பாடோ இருக்க முடியாது.

       பண்பாடும், கலையும் வர்க்க சார்பானதே. சுரண்டும் வர்க்கத்துக்கு என்றும்; சுரண்டலை எதிர்க்கும் வர்க்கத்துக்கு என்றும் கலையும் பண்பாடும் தனித்தே காணப்படுகிறது. அனைவருக்குமான கலை, பண்பாடு என்று கூறுவது உண்மையையில் அது சுரண்டும் வர்க்கத்தின் ஆளும் வர்க்கத்தின் கலையும் பண்பாடும் ஆகும். பொதுவான கலை, பொதுவானப் பண்பாடு என்பது இருக்க முடியாது என்பதை நாம் நன்றாக மனதில் கொள்ள வேண்டும்.

சுரண்டலை எதிர்த்துப் போராடுகிற உழைப்பாளர்கள் விவசாயிகள் ஆகியோர்களுக்கு தனித்த கலை, பண்பாடு இருக்க வேண்டும் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் கலையாக, பண்பாடாக மாவோ கூறுவதைப் பார்ப்போம்.

“முழு புரட்சிகர இயந்திரத்தின் ஒரு பகுத்தியாக (கலையும் பண்பாடும்) அமைய வேண்டும். அது மக்களை ஒன்றுபடுத்தவும், கற்பிக்கவும், எதிரியை தாக்கி அழிப்பதற்கு சக்தி வாய்ந்த ஆயுதமாக செயல்படும்படியும் இருக்க வேண்டும். மேலும் உழைக்கும் மக்களின் ஒரே சிந்தனையுடன் ஒரே மனத்துடன் எதிரியை எதிர்ப்பதற்கு அது துணை புரிய வேண்டும்”

(ஏனான் கலை இலக்கிய கருத்தரங்கு உரை – மே, 1942)

புரட்சிக்கு புறநிலை அடிப்படை என்றாலும் இந்த அடிப்படையே புரட்சியை நிகழ்த்திவிடாது. அதற்கான அகநிலைத் தயாரிப்பு அவசியமாகும். புறநிலையும் அகநிலையும் சரியாக இணையாமல் புரட்சி நடைபெறாது. கலை, பண்பாடு போன்றவை உழைக்கும் மக்களை புரட்சிக்கு தயார்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இதுவே அகநிலைத் தயாரிப்பாகும்.

1940ஆண்டு "புதிய ஜனநாயகம்" என்ற நூலில் மாவோ கூறியதைப் பார்ப்போம். புரட்சிகர பண்பாடு பரந்துபட்ட மக்களுக்கு ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர ஆயுதம். இது புரட்சி வருவதற்கு முன்பே கருத்தியல் வழியில் களத்தை தயார்படுத்துகிறது. இந்தக் கருத்தியல் தயாரிப்பே புரட்சியின் போது ஒரு முக்கியமான அவசியமான போர் முன்னணியாக இருந்து செயல்படும்.

கம்யூனிட் கட்சியினுடையப் படையில், பண்பாடு இல்லாது போனால் அது மந்த-புத்தி உள்ள ஒரு படையாக பின்தங்கிவிடும். ஒரு மந்த-புத்தியுடைய படை எதிரியைத் தோற்கடிக்கும் தயாரிப்பில் இருக்காது. அதனால் தோல்வியையே தழுவும்

இங்கே பண்பாட்டுக்கு கூறியதே கலைக்கும் உரியதாது ஆகும்.

      பண்பாடு, கலை போன்றவை கட்சியில் உள்ள சிலரின் கருத்தாகவோ, கட்சிக்கு வெளியே உள்ள சிலரின் கருத்தாவோ இருக்கக்கூடாது. அனைவரின் கருத்தையும் உள்ளடக்கி செழுமை பெற்றதாக இருக்க வேண்டும். அதற்காக நூறு கருத்துக்களை வராவேற்க வேண்டும், அனைத்தையும் முட்டி மோதி சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். நூறு மலர்கள் மலரட்டும் என்கிற மாவோவின் கூற்று மிகவும் புகழ்பெற்றதாகும். அவர் கூறியதைப் பார்ப்போம்.

“நூறு மலர்கள் மலரட்டும், நூறு சிந்தனைப் பள்ளிகள் முட்டி மோதட்டும் இது கலை வளர்ச்சியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் நமது நாட்டின் சோஷலிச பண்பாட்டினையும் மேம்படுத்துவதற்கு உரிய கொள்கையாகும்.”

(மக்கள் மத்தியில் முரண்பாடுகளை சரியாகக்

கையாள்வது குறித்து - பிப்ரவரி 27, 1957)

      முப்பத்தி மூன்றாவது தலைப்பு, “படிப்பு.”

      கம்யூனிஸ்டுகள் தங்களது செயல்பாட்டை சிறப்பாக அமைவதற்கு படிப்பு அவசியமாகும். நடைமுறையே தனக்கு சிறந்த படிப்பு என்று கருதுபவர்களை நம்நாட்டில் அதிகம் பார்க்கிறோம். நடைமுறையற்ற படிப்போ, படிப்பற்ற நடைமுறையோ சிறப்பான செயல்பாட்டுக்குத் தடையாகவே இருக்கும். படிப்பு என்பது நடைமுறையோடு இணைக்கப்பட்டதுதான்.

படிப்பு என்பது அவசியமான ஒன்று. படிப்பைப் புறக்கணிப்பது அனைத்தையும்  பாதிக்கும். படிப்பின் அவசியத்தின் வெளிப்போடே நமது, "செங்கொடி மையம்” என்கிற படிப்பு வட்டம் ஆகும்.

      படிப்பது பற்றி மாவோ நிறைய ஆலோசனை கூறியுள்ளார்.

“நிலைமைகள் நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டே இருக்கின்றன, புதிய நிலைமைகளுக்கு ஏற்ப ஒருவரின் சிந்தனையை மாற்றியமைக்க படிக்க வேண்டும். மார்க்சியத்தை ஓப்பிட்டு முறையில் நன்கு படிக்க வேண்டும், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்கள் கூட படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புதியவற்றை உள்வாங்க வேண்டும், புதிய பிரச்சினைகளை ஆராய வேண்டும்.”

(பரப்புரைப் பணிகள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட்

கட்சியின் தேசிய மாநாட்டில் உரை -மார்ச் 12, 1957)

படிப்பானது பழையவற்றை அறிவதற்கு மட்டுமானதல்ல, பழைய சமூகத்தை ஒழிப்பதற்கு மட்டுமல்ல, புதிய பிரச்சினைகளை ஆராய்ந்து புதிய சமூகத்தை உருவாக்குவதில் சிறந்து விளங்குவதற்கும் ஆகும்.

      படிப்பதில் இருண்டு விதங்கள் இருப்பதாக மாவோ கூறுகிறார். ஒன்று வறட்டுத்தனமானது, மற்றொன்று படித்ததில் உள்ள அனுபவங்களை தமது நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப பொருந்தி படிப்பது ஆகும். வறட்டுத்தனமானப் படிப்பு நடைமுறைக்கு உதவாது. படித்ததை உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தி பார்க்க வேண்டும்.

மாவோ கூறுவதை பார்ப்போம்.

“படிப்பில் இரண்டு விதமான கண்ணோட்டங்கள் உண்டு. ஒன்று நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தினாலும் சரி, பொருந்தாவிட்டாலும் சரி, எல்லாவற்றையும் அப்படியே எடுத்து நடும் வறட்டுக் கண்ணோட்டம். இது நல்லதல்ல, மற்றது, நமது மூளையைப் பாவித்து, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தியவற்றைப் படிக்கின்ற, அதாவது, நமக்கு பயனுள்ள அனுபவங்களைக் உள்வாங்கிக் கொள்கின்ற கண்ணோட்டம், இதுதான், நாம் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணோட்டம்.”

(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச்

சரியாகக் கையாள்வது பற்றி - 27 பிப்ரவரி, 1957)

      தமது நாட்டு நிலைமைகளை ஆராய்ந்து பார்க்காமல், பிற நாட்டு அனுபவங்களை வறட்டுத்தனமான படித்து அப்படியே பின்பற்றுவது வறட்டுவாதமாகும். சீனாவில் கடைபிடித்ததையோ, ருஷ்யாவில் கடைபிடித்ததையோ சர்வதேசியப் பார்வையில் அதனை தொகுத்துப் புரிந்து கொள்ளாமல் அப்படியே இங்கே பின்பற்றுவது வறட்டுவாதம் ஆகும். சர்வதேசிய அனுபவங்கள் நமக்கு பயன்படுகின்றன. பொதுக் கோட்பாட்டை அந்த அனுபவங்களோடு பொருத்திப்பார்க்க வேண்டும். ஆனால் அந்த அனுபவங்களை அப்படியே பிடிங்கி நம் நாட்டில் நட முடியாது.

      நமது நாட்டு நிலைமைகளை மார்க்சிய வார்த்தைகளைக் கொண்டு விளக்கினாலே அதை வறட்டுவாதம் என்று கூறுபவர்கள் நமது நாட்டில் அதிக பேர் இருக்கின்றனர். மார்க்சியக் கோட்பாட்டை பயன்படுத்துவதையோ பின்பற்றுவதையோ வறட்டுவாதம் என்று மார்க்சியம் கூறவில்லை.  அன்று, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைமைக்கு எடுக்கப்பட்ட முடிவுகளை, இன்று காணப்படும் சூழ்நிலைமைகளை இணைத்துப் பார்க்காமல் அப்படியே பின்பற்றுவது வறட்டுவாதமாகும்.

      மார்க்சும் எங்கெல்சும் அன்றைய நிலைமையைக் கணக்கில் கொண்டு புரட்சியானது வளர்ச்சி அடைந்த தேசங்களில் நடைபெறும் என்று கூறினார்கள். அதாவது ஒரு நாட்டில் அல்லாது வளர்ச்சி அடைந்த சில நாடுகளில் இணைந்து நடைபெறும் என்று கணித்தார்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது உண்மையே. ஆனால் புதிய நிலையில் சீரற்ற வளர்ச்சியின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லெனின் முடிவெடுத்தார். அதாவது ஒரு தனிநாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் வெற்றியின் தொடர்ச்சியாக பிறநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்று விளக்கினார்.

இந்த முடிவுகளை மட்டும் கணக்கில் கொள்ளும் சிலர். மார்க்ஸ் கூறியது பொய்த்துவிட்டது லெனின் கூறியது நடந்துவிட்டது என்று கூறுகின்றனர். மார்க்ஸ் கூறிய கருத்தில்தான் லெனினும் பலகாலம் பின்பற்றிவந்தார், ஆனால் ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தில் சமச்சீரற்ற வளர்ச்சியை முன்வைத்து ஒரு தனிநாட்டில் புரட்சியை நடத்த முடியும் என்று லெனின் கூறினார். முடிவுகள் இரண்டும் வேறுபட்ட சூழ்நிலைமைகளால் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு சூழ்நிலைமைகளுக்கும் எந்த அணுகுமுறையைப் பயன்படுத்தினார்களோ அதுவே மார்க்சியம். முடிவுகள் சூழ்நிலைமைக்கு ஏற்ப மாறுபடும், ஆனால் அடிப்படைக் கோட்பாடு மாறாது.

 

“மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடு உலகளவில் பொருந்தும். நாம் அதை வறட்டுத்தனமாக அல்ல, செயலுக்கு ஒரு வழிகாட்டியாகக் கருத வேண்டும். மார்க்சிய - லெனினியத்தைப் படிப்பது என்பது வெறும் சொற்களையும் சொற்றொடர்களையும் படிக்கும் விசயமல்ல, பதிலுக்கு அதைப் புரட்சியின் விஞ்ஞானமாகப் படிக்க வேண்டும். அது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உண்மையான வாழ்க்கை மற்றும் புரட்சிகர அனுபவத்தின் விரிவான ஆய்வில் இருந்து பெறப்பட்ட பொதுவான விதிகளைப் புரிந்து கொள்ளும் ஒரு விசயம் மட்டுமல்ல, பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதில் அவர்களின் நிலைப்பாடு மற்றும் முறையைப் படிப்பது ஆகும்.”

(தேசியப் போரில் சீனக் கம்யூனிஸ்ட்

கட்சியின் பங்கு - அக்டோபர் 1938)

      மாவோ இங்கே கூறியதில் மிகவும் முக்கியமானது, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடு உலகளவில் பொருந்தும் என்பதாகும். நம் நாட்டில் உள்ள பலபேருக்கு இதில் சந்தேகம் எழுந்துள்ளது. நம் நாட்டுக்குப் பொருந்தாது என்று சொல்கிற தாம்தான் உண்மையான மார்க்சியவாதி என்று கூறுவதை நாம் ஏற்க முடியாது. மார்க்சியத்தை மறுதலித்து நம் நாட்டுக்கு மார்க்சியம் பொருந்தாது என்று கூறுவர் மார்க்சியவாதியாக மாட்டார். அவர் எந்த கொள்கையை முன்வைத்து மார்க்சியம் நம் நாட்டுக்கு பொருந்தாது என்று கூறுகிறாரோ அந்தக் கொள்கையே அவரது கொள்கை, அந்த கொள்கையின்படியே அவரை அழைக்க வேண்டும்.

மாவோ மேலே கூறியதின் பொருள் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைமைக்கு எடுக்கப்பட்ட முடிவுகளை மார்க்சியக் கோட்பாடாகக் கொள்ளக்கூடாது. அப்படிக் கூறுவது வறட்டுவாதம். எதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, அதாவது எந்த அணுகுமுறையால் இந்த முடிவு எடுக்கப்பட்டு என்று பார்க்க வேண்டும். இந்த பொது வழிகாட்டியே மார்க்சியமாகும்.

மார்க்சியத்தின் பொதுவிதி அனைத்து உலகத்துக்குமான பொதுவிதியாகும். இந்த அடிப்படையில் தான் மார்க்சியத்தைப் படிக்க வேண்டும்.

“மார்க்சிய தத்துவத்தைப் பொறுத்த வரையில், அதில் தேர்ச்சி பெற வேண்டும், அதைப் பயன்படுத்த வேண்டும். தேர்ச்சி பெறுவதன் நோக்கம் அதைப் பயன்படுத்தத்தான், ஒன்று அல்லது இரண்டு நடைமுறைப் பிரச்சினைகளைத் தெளிவு படுத்த முடியுமானால், நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள், ஓரளவு சாதனைகளை ஈட்டியவர்கள் ஆவீர்கள். எவ்வளவுக்கு அதிகமான பிரச்சினைகளை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்களோ, எவ்வளவுக்கு முற்றாகவும் ஆழமாகவும் தெளிவுபடுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு உங்கள் சாதனையும் பெரிதாய் இருக்கும்.”

(கட்சி வேலை நடையைச் சீர் செய்வோம் - 1 பிப்ரவரி, 1942)

      மாவோ கூறுகிறபடி மார்க்சிய அடிப்படைகளை படித்தபின்பு சில பிரச்சினைகளுக்கு அதனடிப்படையில் அணுகி தீர்வு காண வேண்டும். இத்தகையப் பயிற்சியின் மூலமே ஒரு கம்யூனிஸ்ட் சிறந்த கம்யூனிஸ்ட்டாக திகழமுடியும். மார்க்சியம் படித்தல் என்பது பயன்படுத்துவதற்கே ஆகும்.

படிப்பது என்பது கற்பதாகும். அதை நடைமுறைப்படுத்துவதும் ஒரு வகை கல்வியாகும். அதனால், கட்சிப் பணியில் அனுபவம் உள்ள தோழர்களும் மார்க்சியத்தை தொடர்ந்து படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும் என்கிறார் மாவோ.

“வேலையில் அனுபவம் உடையவர்கள் கோட்பாட்டுப் படிப்பை மேற்கொள்ள வேண்டும்; தீவிரமாகப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் தமது அனுபவத்தை ஒழுங்குபடுத்தி, தொகுத்து, அதை கோட்பாட்டின் நிலைக்கு உயர்த்த கூடியவர்களாய் இருப்பர். அப்பொழுதுதான் தமது அரைகுறை அனுபவத்தை பொது உண்மை என்று கருதாமல், அனுபவவாதத் தவறுகளை இழைக்காமல் இருக்க முடியும்.”

(கட்சி வேலை நடையைச் சீர் செய்வோம்- 1 பிப்ரவரி, 1942)

      தவறுகளை தவிர்க்க வேண்டுமானால் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். படிப்பதில் சுயதிருப்தி என்பது படிப்புக்கு எதிரியாகும். கம்யூனிஸ்ட்டைப் பொறுத்த வரையில் “படிப்பதில் தெவிட்டாமை” என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்கு “கற்றுக் கொடுப்பதில் சளையமை” என்ற கண்ணேட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் மாவோ.

      அனைத்துக் கம்யூனிஸ்டுகளும் அரசியல் பொருளாதாரத்தைக் கற்க வேண்டும். மாவோ கூறுவதைப் பார்ப்போம்.

“பொருளாதாரப் பணியை எப்படி செய்வது என்பதை தெரிந்தவர்கள், யாராக இருந்தாலும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவர்களை ஆசிரியர்களாக மதிக்க வேண்டும், அவர்களிடம் மரியாதையுடனும் மனசாட்சியுடனும் கற்றுக் கொள்ள வேண்டும். தெரியாத போது தெரிந்தது போல் நடிக்கக் கூடாது.”

(மக்கள் ஜனநாயக சர்வாதிகரம் பற்றி – ஜீன், 1949)

      இந்த மாவோவின் கூற்றுக்கு விளக்கம் ஏதும் தேவைப்படாது.

      இறுதியாக, எப்படி மார்க்சியத்தை படிக்க வேண்டும் என்பது பற்றி மாவோ கூறியுள்ளதைப் பார்ப்பதோடு இன்றைய வகுப்பையும், இந்த தொடர் வகுப்பையும் முடித்துக் கொள்வோம்.

      மார்க்சியத்தை உண்மையில் படித்து உள்வாங்க வேண்டும் என்றால், நூல்களில் இருந்து மட்டுமல்லாது, முக்கியமாக வர்க்கப் போராட்டத்தின் மூலமும், நடைமுறை வேலைகளின் மூலமும், பரந்துபட்ட தொழிலாளர்கள் – விவசாயிகள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் மூலமும் படிக்க வேண்டும். மாவோ மிகவும் எளிய வார்த்தைகளில் படிப்பின் தேவையை சிறப்பாக விளக்கியுள்ளார்.

      மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்களைக் கொண்டதாக இந் “செவ்வேடு” இருக்கிறது. அதில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நாம் பார்த்தோம், அந்த நூலையும், அதில் குறிப்பிட்ட நூல்களையும் எடுத்து படிக்க வேண்டும்.

      மாவோவின் மேற்கோள்களில் இருந்து மார்க்சிய அடிப்படைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டே இந்த வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிய அடிப்படைகளை விளக்குகிற மேற்கோள்களை தேர்ந்தெடுத்து வகுப்பில் பார்த்திருக்கிறோம். வறட்டுவாதம், திருத்தல்வாதம், அகநிலைப் போக்கு, வலது-இடது திரிப்பு ஆகியவற்றை எதிர்த்து மார்க்சியம் வழியில் செல்வதற்கு மாவோவின் “செவ்வேடு” என்ற சிறு நூல் பயனுள்ளதாக இருக்கும் என்தில் ஐயமில்லை.

மார்க்சியம் பயில்வோம் புரட்சிகர நடைமுறையில் இணைவோம்.

பொருளடக்கம்                         

         முந்தைய பகுதிக்கு செல்ல

No comments:

Post a Comment