Sunday 1 May 2022

1 கடவுள் மதம் ஆகியவற்றின் தோற்றத்துக்கு முன்பான நிலைமைகள்

              (“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட
60 வது வார வகுப்பு – 30-04-2022)
 

1. மாயவித்தை

(Magic)

      கடவுள், மதம், தத்துவம் போன்றவைகள் தோன்றுவதற்கு முன்பு இரண்டு போக்குகள் காணப்பட்டது. ஒன்று மாயவித்தை மற்றொன்று தாந்தரீகம்.

டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட, பழங்குடிகளாக இருந்த அநாகரீக மனித சமூகமே, இன்றைய நவீன நாகரீக மனித சமூகமாக வளர்ச்சி பெற்றதை என்பதை ஏற்றுக்கொள்வர்கள். அந்த பழங்குடி சமூகத்தில் கடவுள் நம்பிக்கையோ, மதமோ, தத்துவமோ தோன்றவில்லை. அன்று அவர்களிடம் முதலில் காணப்பட்டது மாயவித்தை, அதற்கு அடுத்து தாந்தரீகம்.

முதலில் மாயவித்தையைப் பார்ப்போம்.

      கிடைக்காத ஒன்றை கிடைத்தது போல் பாவனை செய்தலே மாயவித்தை. பழங்குடிகளிடம் தொழில்நுட்பம் இல்லாத குறையை நீக்குவதற்கு மாயவித்தை பயன்பட்டது. இதில் காணப்படும் பாவனை, பொய்த்தோற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டு இதனை மதத்தின் போக்காக கருதிடக்கூடாது. மாயவித்தை செய்யும் மக்கள் எந்தவித தெய்வீக உதவியையும் நாடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      எதார்த்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினால், உண்மையிலேயே அதை கட்டுப்பாடிற்குள் வைத்திட முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது மாயவித்தை. மழை பொய்கின்ற காலத்தில் மழை பெய்வதாக பாவனையாக பாடி நடனமாடுவார்கள். இந்த பாவனையால் என்ன விளைவுகள் ஏற்பட்டது என்பதை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுயுள்ளார்.

“உண்மையில் மழை பெய்கிறதா? இல்லவே இல்லை. இருப்பினும் இந்தப் பாடல்கள் பயனற்றவை அல்ல. ஏனென்றால் முதுவேனிற் வறட்சி நீண்டது, கொடியது. இது விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரிய சோதனையாகும். வறண்ட பூமி மழையில் மூழ்குவது, குழந்தைகள் நீந்துவது ஆகிய பாடல் காட்சி "பொருளியல் எதார்த்தம்" அல்லவென்றாலும், அது ஒரு "உளவியல் எதார்த்தம்” ஆகும். அதாவது இந்தப் பாடல் விவசாயிகளுக்கு உற்சாகமளிக்கிறது. கொடூரமான இயற்கைக்கு முன்னர் எதிர்நிற்க மாட்டாத ஆதரவற்ற நிலையை வெற்றி கொள்ள இது உதவுகிறது. இந்த முறையில் ஒரு பிரமையான உத்திமுறையாக இருந்தாலும் மாயவித்தை உண்மையான உத்தி முறைக்கு உதவுகிறது.”

(உலகாயதம், பக்-141-142) 

      உற்பத்திக் கருவிகளின் குறைபாடு அன்றைய பழங்குடி மக்களை மாயவித்தையில் ஈடுபட வைத்தது. வேட்டையில் விலங்கு கிடைத்திடாதபோது, விலங்குகளை பிடிப்பது போல நடனமாடுவார்கள். கிடைப்பது அரிதான நிலையில் இதனையே செய்வார்கள். கிடைக்காததை கிடைத்தது போல் பாவனை செய்வது அவர்களுக்கு என்ன பயன்கிட்டும்?

வேட்டையாடுவதாக அவர்கள் ஆடும் நடனத்தின் மூலம் வேட்டை ஆடுவதற்கான நுட்பத்தை ஒத்திகை செய்து பழகிக் கொள்வார்கள், உணவு கிடைக்காத நிலையில் இவ்வகையான நடனத்தை ஆடுவதின் மூலம் தங்களது சோர்வைப் போக்கிக் கொள்வார்கள், தங்களது உற்சாகத்தை இழக்காமல் வேட்டைக்கு தயார்படுத்திக் கொள்வார்கள்.

      மாயவித்தையைப் பற்றி ஜார்ஜ் தாம்சன் சிறப்பாக விளக்கியிருக்கிறார்:-

“கடவுள் நம்பிக்கையும் வழிபாடு அல்லது பலிதானமும் மதத்தின் சிறப்பம்சங்கள். இன்றும் மிகப் பழங்குடிக் காட்டு மிராண்டிகளுக்குக் கடவுளுமில்லை, வழிபாடுமில்லை, பலிதானமுமில்லை. இன்று நாகரிகம் அடைந்தவர்களாக உள்ள மக்களின் ஆதிகாலத்தை ஆராயப் புகுந்தால் அவர்களுக்கும் அக்காலத்தில் கடவுள்கள் இருக்கவில்லை, வழிபாடும் பலிதானமும் இருக்கவில்லை என்பது தெரியவரும். அக்காலத்தில் இருந்ததெல்லாம் மாயவித்தை மட்டுமே.

 

எதார்த்தத்தை, புற உலகை, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுபோல் ஒரு பொய்த்தோற்றத்தை, போலியை உருவாக்குவதன்மூலம் எதார்த்தத்தை, புற உலகை உண்மையாகவே தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதே மாயவித்தைக்கு ஆதாரமாக இருக்கும் மூலக்கருத்து. அதன் ஆரம்பக் கட்டங்களில் அது வெறும் போலச்செய்தலாகவே இருந்தது. மழை வேண்டும் என்று விரும்பினால், மேகக் கூட்டத்தையும் இடியையும் மின்னலையும் பொழியும் மழையையும்போல் நடித்து நடனமாடுவார்கள். தாம் விரும்பும் எதார்த்தத்தை, புற உலகப் பொருள்களை, நிகழ்ச்சிகளைக் கைகூடச் செய்ய அது கைகூடியது போல் கற்பனை செய்து நடிப்பார்கள். பிந்திய கட்டத்தில் போலச்செய்தலோடு கட்டளை பிறப்பித்தலும் இருக்கும். மழையே பெய்" என்று கூவுவது கட்டளையிடுவதாக இருக்குமேயன்றி வேண்டுதலாக இருக்காது. இவ்வாறு கூட்டாகக் கட்டளையிடுதல் சமுதாய வளாச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பொருத்தமானது. இந்தக் கட்டத்தில் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபடாமல் ஒன்றாக முழுமையாக இருந்தது. சமூகம் எல்லா உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு தனி உறுப்பினருக்கும் மேலான ஒன்றாக இருந்தது. அவர்களுக்குப் பகைபோல் தோன்றிய இயற்கைச் சக்திகளுக்கு எதிரான பலவீனமான ஆனால் ஒன்றுபட்ட அணியாக விளங்கியது.”             

(மதத்தைப் பற்றி)

     

தனிமனிதனின் வழிபாட்டை, அடிப்படையாகக் கொண்டது மதம். கூட்டாக மனிதர்கள் செய்யக்கூடியது மாயவித்தை. கூட்டு வாழ்க்கையோடு மாயவித்தை இணைந்து காணப்படுகிறது. கூட்டாக செய்வது அவர்களிடம் ஒர் உளவியல் வலிமையை ஏற்படுத்துகிறது. கூட்டு சக்தியே அந்த பழங்குடி மக்ககளை இயற்கையிடம் இருந்தும் பிற பழங்குடிகளிடம் இருந்தும் காத்தது.

       கூட்டு வாழ்க்கை சிதைந்த போது மாயவித்தையும் சிதைந்தது. உழைப்புக் கருவிகளின் மேம்பாடு ஏற்பட்ட போதும், உற்பத்தித் திறன் அதிகரிப்பின் போதும் கூட்டு உழைப்பாலன்றி தனிப்பட்ட உழைப்பால் மனிதன் வாழ்வதை சாத்தியமாக்கியது. உழைப்புப் பிரிவினையின் காரணமாக அந்த சமூகத்தில் தேவைப்பட்ட விளைபொருக்களைவிட சற்று கூடுதலாக கிடைத்தது. இந்த உருவாக்கம் உபரி உற்பத்தியைப் படைத்தது. அன்றைய சமூகத்திற்கு தேவைப்பட்டதைவிட சற்று கூடுதலாக உற்பத்தியானது. இந்த உபரி உற்பத்தி ஒரு சிலர் உழைக்காமல் வாழ வழிசெய்தது.

       தனிவுடைமையின் தோற்றம் வர்க்க வேறுபாட்டைப் படைத்து. வர்க்க வேறுபாடு கூட்டுழைப்பை முழுமையாக சிதைத்துவிட்டது.

கூட்டுழைப்பு சிதைந்ததின் விளைவாக கூட்டு மாயவித்தையும் சிதைந்து தனிமனித வழிபாட்டு முறையாக மதம் உருவானது.

       தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-

“உற்பத்தித் திறன் முன்னேறும்போது இந்தப் பழங்கால கூட்டுத்தன்மை சிதைகிறது. அது உபரி உற்பத்தியைத் தோற்றுவிக்கிறது. அதே சமயத்தில் பலருடைய உழைப்பில் ஒரு சிலர் வாழும் வாய்ப்பையும் தோற்றுவிக்கிறது. ஆனால் பழங்கால மந்திரத்தின் பயன்பாட்டின் நினைவு மறையவில்லை. அது ஒரு சிலருக்கு மட்டுமே ரகசியமாகத் தெரிந்த மர்மமான ஆன்மீக சக்தி என்னும் அறிவாகி விடுகிறது. இதுவே மூடநம்பிக்கை. இது உண்மையான உற்பத்தி முறைக்கு தடையாகிறது. மாயவித்தை அதன் எதிர்நிலையைச் சென்றடைகிறது. அது மதமாக மாறுகிறது”

(உலகாயதம், பக்-119-120) 

      தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ஜார்ஜ் தாம்சன் போன்றோர்கள் மாயவித்தையை விளக்கமாக விவரித்துள்ளனர். இவர்கள் மாயவித்தைக்கும் மதத்துக்கும் உள்ள வேறுபாட்டை சிறப்பாக கூறியுள்ளனர்.

      மாயவித்தையைப் போன்று தாந்திரீகத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். தத்துவத்தையும் மதத்தையும் புரிந்து கொள்வதற்கு இவை இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டியது தேவையாகிறது.

2. தாந்தரீகம்

பழைமையான ஒன்றை இன்றைய நிலையில் இருந்தோ அல்லது அதன் பிற்கால திரிபுகளில் இருந்தோ பார்க்கும் போது குழப்பத்தையே ஏற்படுத்தும். குறிப்பாக தாந்தரீகத்தை அது நிலவிய சூழ்நிலையில் இருந்து பார்க்க வேண்டும். இன்றைய ஒழுக்க நிலையில் இருந்து பார்க்கும் போது அது கொச்சையாக தெரியும், ஆனால் அது நிலவிய காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை என்பதை அறிந்திட வேண்டும்.

தாந்தரீகம் என்ற சொல்லுக்குப் பொருள் “விரிவாக்கல்” “பரவலாக்கல்.” இனத்தை விரிவாக்கலைப் பற்றியே தாந்தரீகம் பேசுகிறது. குடும்ப மறுவுற்பத்தி பற்றியே தாந்தரீகம் விளக்குகிறது.

      தாந்தரீகம் விவசாயத்துடனும் வளமை கோட்பாடுடனும் தொடர்புடையது. இதை இன்று பின்தங்கிய நிலையில் உள்ள மக்களிடம் காணப்படுவதைக் கொண்டு அறியலாம். ஆதி கால மக்கள் விவசாயத்தில் ஈடுபடும் போது சில மந்திரங்களை உச்சரித்தனர். இது மாயவித்தை போன்றதே.


 

      தொடக்கத்தில் பெண்களே விவசாயத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தை பெண்களே கண்டுபிடித்தனர். அதனால் விவசாய மந்திரத்தை பெண்களே உச்சரித்தனர்.

      வேட்டையின் போது தேவைப்படாத மந்திரம் விவசாயத்தில் மட்டும் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவது இயற்கையே. மனிதனின் தோற்றத்தோடு உணவு தேடுதல் வேட்டையாடுதல் ஆகியவைகள் இயற்கையாக இணைந்து காணப்பட்டது. ஆனால் விவசாயம் குறிப்பிட்ட வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் தோன்றியது. மனிதனது சிந்தனைகள் வளர்ச்சி அடைந்த நிலையில் உருவானது.

      விலங்குகளை வேட்டையாடுதல், அதனைப் பிடித்து வளர்த்தல் ஆகியவற்றிடம் இருந்து விவசாயம் வேறுபடுகிறது. புதியதாக உழுது கிடைக்கும் விளைச்சல் என்பது பல நாட்களை எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும். அதாவது இதற்கு காலம் அதிகம் தேவைப்படும். இந்த கால அதிகரிப்புக்கு ஏற்ற பொறுமை, நீண்ட நோக்கு, நம்பிக்கை ஆகியவை தேவைப்படுகிறது. விதைப்பில் இருந்து அறுவடை வரையிலான நிகழ்வை அன்றைய மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத மர்மமாக இருந்தது.

      இதனால் தான் விவசாயத்தில் மந்திரங்கள் உச்சரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. முன்பே கூறியது போல இது மாயவித்தை போன்று உளவியல் தொடர்பானது. மூடநம்பிக்கை சார்ந்தது கிடையாது.

மந்திரங்கள் மூலம் விவசாயத்தை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதாக அன்றைய மனிதன் நினைத்துக் கொண்டான். இந்த மந்திரம் விளைச்சலுக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை. ஆனால் மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு உளவியல் அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மந்திரத்தின் மூலம் விளைச்சலை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை அன்றைய மனிதனுக்குக் கிடைத்தது. கடின உழைப்புக்கு பலன் கிட்டும் என்ற நம்பிக்கை இந்த மந்திரம் ஏற்படுத்தியது. தொடக்கக் கால தாந்தரீகம் பெண்வழி சமூகத்தில்தான் காணப்பட்டது, அங்குதான் அது தோன்றியது.

      விவசாயத்தை பெண்களே தோற்றுவித்தனர் என்று பார்த்தோம். அதனால் விவசாய மந்திரங்களை உச்சரிக்கும் பூசாரியாக பெண்களே இருந்தனர். தொடக்கால தெய்வங்களில் பெண் தெய்வங்களே அதிகம் காணப்படுவதற்கு இதுவே காரணம்.

      தாந்திரீகத்தைப் பற்றி பேசும் போது பெண்களின் விவசாய மந்திரங்களைப் பற்றி ஏன் பேசுகிறோம் என்றால், இதற்கும் தாந்தரீகத்துக்கும் தொடர்பு இருக்கிறது.

      விவசாய மந்திரங்கள் வளமையைச் சார்ந்தது. பெண் வளமையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. இனவிரித்துக்கு பெண்ணே அதிமுக்கியமானவராக அன்று கருதப்பட்டது.

      தாந்தரீகத்தில் தாமரை குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது, அந்தத் தாமரை பெண்ணின் பிறப்புறுப்பினையே குறிப்பிடுகிறது. குடும்பம் விரிவடைவதற்கு பெண்களே அடிப்படைக் காரணம் என்று அன்றைய மனிதன் நினைத்தான். அதனால் பெண்ணே வளமைக்கு காரணமாக கருதினான். குடும்பத்தை விரிவாக்கும் பெண்களே விவசாயத்தைப் பெருக்க முடியும், இங்கே பெண் வளமையும் இயற்கை வளமையும் இணைத்து காணப்படுகிறது. அதாவது பெண்ணின் வளமை விவசாய விளைச்சலின் வளமைக்கு மாற்றப்படுகிறது. பெண்ணின் வளம் தாவரங்களின் வளத்தைப் பெருக்குகிறது.

      விவசாயத்தில் ஈடுபட்ட பெண்களே விளைச்சலுக்கு காரணம் என்று அன்றைய மனிதன் நம்பினான்.

      தானியங்களை நோய் தாக்கிய நிலையில், அந்த விவசாய மண்ணில் பெண்கள் இரவில் நிர்வாணமாக நடக்க வைப்பார்கள். அதன் மூலம் நோய் நீக்கமும் விளைச்சல் பெருக்கமும் ஏற்படும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பெண் பிறப்புறுப்புக்கு மந்திர சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையே தாந்திரீகத்தின் அடிப்படை. பெண்ணின் பிறப்புறுப்பே அனைத்து செல்வத்துக்கும் ஆதாரம்.

      தாந்திரீகத்தில் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எந்திரத்தில் காணப்படும் தாமரை படம் பெண்குறிகளை குறியீடாக காட்டப்படுகிறது. பெண் பிறப்புறுப்பை முக்கோண வடிவத்திலும் சுட்டப்படுகிறது.

      விதைப்பதற்கு முன்பு நிலத்தில் ஒரு கல்லை நட்டு அதில் சிவப்பு நிறம் பூசப்படுகிறது. அந்த சிவப்பு நிறம் மாதவிலக்கு ரத்தத்தின் குறியீடாகும். சிவப்புக் குறியீடு மாதவிலக்கு ரத்தத்தையே குறிப்பிடுகிறது.

      தாந்திரீகத்தில்  பஞ்ச மகரங்கள் குறிக்கிடப்படுகிறது. மது, மாமிசம், மீன், முத்ரா (தானியம்), மைதுனம் என்ற ஐந்தையே பஞ்ச மகரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்தின் முதல் எழுத்து ம-வில் தொடங்குவதால் இந்த ஐந்தை பஞ்ச மகரங்கள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஐந்து மகரங்கள்.

      தாந்திரீகம் பழங்குடி சமூகத்தின் தொடர்ச்சியாக வருவதால் இதில் மது காணப்படுகிறது. இனவிரித்திக்கு மது உணர்ச்சிகளை தூண்டுகிறது என்கிற நம்பிக்கை அன்றைய மனிதனிடம் இருந்தது. அதனோடு மைதுனம் அதாவது புணர்ச்சியும் இணைந்துள்ளது.

      ஆணும் பெண்ணும் புணர்வது செடி, கொடி, மரங்களை செழிப்பிக்கும் என்ற நம்பிக்கையே ஐந்தில் புணர்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. விதைக்கும் நிலத்தில் ஆணும் பெண்ணும் இரவில் உடலுறவில் ஈடுபட்டனர். புணர்ச்சிக்கு தாந்திரீகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான்.

      மனித உடல் பேரண்டத்தின் முன்மாதிரியாக தாந்தரீகம் கருதுகிறது. மனித உடலில் இடம் பெற்றவைகளே பேரண்டத்திலும் இடம் பெற்றுள்ளது. இதனடிப்படையில்தான் தாந்தரீகக் கோட்பாடு விளக்கப்படுகிறது. உடலை அகம் என்றும் பேரண்டத்தை புறம் என்று அழைக்கப்படுகிறது.

      அகம், புறம் ஆகிய இரண்டிலும் உள்ள சக்திகள் ஒரே முறையில் செயல்படுகிறது. உடலில் உள்ள சக்தியை வளர்ப்பதன் மூலம் பேரண்டத்தின் சக்தியை ஒருவன் தனக்கு சாதகமாக மாற்றிக் கட்டுப்படுத்த முடியும் என்று தாந்தரீகம் கருதுகிறது. மேலும் மனித உடலைப் போன்ற ஒர் அருமையான ஒன்று எதுவும் இல்லை என்று தாந்தரீகம் கூறுகிறது.

      மனிதனின் இனவிருத்திச் செயல் இயற்கையின் உற்பத்தித் திறனை வளப்படுத்தும் என்கிற அடிப்படையே தாந்தரீகத்தின் அடிப்படைக் கோட்பாடு. தேகத்தை முன்னிருத்தும் இந்தக் கோட்பாட்டில் ஆத்மா, கடவுள், மோட்சம், சொர்கம், துறவு போன்றவற்றுக்கு இடமில்லை. மனித உடலையே உண்மை என்று ஏற்கிறது. இதனை ஒட்டியே யோக நெறியை தாந்தரீகம் பின்பற்றுகிறது. உடலை பேணி காப்பதற்கான யோகங்களை அவர்கள் உருவாக்கினர்.

பிரபஞ்சத் தோற்றக் கோட்பாடு ஆண் பெண் புணர்ச்சி போன்ற செயலாகவே தாந்தரீகம் கருதியதின் வெளிப்பாடே லிங்கம். லிங்க வழிபாடு தாந்தரீகத்துக்கு நெருக்கமானது.

      சிந்து வெளி நாகரீகத்தில் தாந்தரீகத் குறியீட்டு முத்திரை காணப்படுவது போலவே, பல்வேறு யோக நிலையிலான முத்திரைகளையும் காண முடிகிறது. லிங்க சிலையும் காணப்படுகிறது.

      அரப்பாவில் (சிந்துவெளி) தலைகீழாக நிர்ணமாக உள்ள ஒரு பெண் முத்திரை கிடைத்தது. தலைகீழாக உள்ள அப் பெண்ணின் பிறப்புறுப்பில் செடிகள் வளமையாக வளர்ந்து காணப்படுகிறது. தாந்தரீகம் மிகவும் பழைமையான வழக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.                                                                                                                                                                                        

“பல தொல்பொருள் ஆய்வாளர்களை ஆதாரமாகக் காட்டி பந்தோபாத்யாயா கருவதுதைவிட இது பழைமையானது. சிந்துவெளி இடிபாடுகளில் தாந்திரீகம் தொடர்பான தடயங்களைக் காணலாம். இதனை மார்ஷல் குறிப்பிட்டார். பிரேம்நாத்தும் மற்றவர்களும் செய்த ஆய்வுகள் மார்ஷலின் கூற்றை உறுதி செய்கின்றன. “உண்மையில் சிந்துவெளிக்கலையின் பெரும்பகுதிக்கும் தாந்திரீக நோக்கங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்று நம்ப இடமிருக்கிறது.” இதில் ரகசியம் ஒன்றுமில்லை . மண்ணின் மூலம் செல்வத்தைப் பெறும் சிந்துவெளி நாகரீகத்தில் புராதன விவசாயத்திற்குரிய நம்பிக்கைகளும் நடைமுறைகளும் தொடர்ந்து இடம்பெறுவது இயல்பானதேயாகும். தாந்திரீகத்தின் தடம்கள் இந்திய வரலாற்றில், சிந்துவெளி இடிபாடுகளில் காணப்படுமானால் அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்.”

(உலகாயதம், பக்-418-419)

      மேலும் இதனை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா பொருள்முதல்வாதம் என்றில்லாவிட்டாலும் அதற்கு முந்திய நிலையில் உள்ள பொருள்முதல்வாதம் என்கிறார்.

      சிந்துவெளி மக்களிடம் தாந்திரீகம் இயல்பாய் காணப்பட்டது. இன்று அடித்தள மக்களிடம் தாந்தரீகத்தின் கூறுகள் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது இந்தியாவில் பெரும்பாலான மதங்களிலும் தாந்தரீகத்தின் தாக்கம் காணப்படுகிறது.

ஆனால் அது தாந்தரீகத்தில் காணப்பட்டதின் திரிபான வடிவமாக உள்ளது. இதில் பக்தி, பூசை, மோட்சம் போன்ற ஆன்மீகக் கருத்துக்கள் நுழைந்துள்ளது.

      மகாயான பவுத்தத்தில் தாந்தரீகத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. மகாயான பவுத்தத்தின் ஒரு பிரிவாக தாந்தரீகத்தை காணும் தவறானப் போகும் உள்ளது. தாந்தரீகம் மத சிந்தனைகளுக்கு முன்பு தோன்றியது, அதனால் தாந்தரீகத்தை மதத்திற்கு அப்பாற்பட்டதாகக் காண வேண்டும்.

      ஆனால் தாந்தரீகத்தின் தாக்கம் பின்னால் தோன்றிய மதங்களில் காணப்படுகிறது. தாந்தரீகத்தின் தாக்கத்தைப் பற்றி தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.

“சடங்குகளின் மூலம் ஆண்-பெண் சேர்க்கையோடு அதற்குப் புறம்பான கருத்துக்களைத் தாந்திரீகத்துடன் இணைக்க எத்தனை வகையான வழிகள் கையாளப்பட்டன என்பதைக் காட்ட முயல்வோம்.

 

பௌத்த தாந்திரீகத்தில் பிரஜ்னா, உபயா ஆகிய இரண்டும் ஒன்றுபடுவதன் மூலம் இது விளக்கப்படுகிறது. அதே போல இந்து தந்திரங்களில் சிவனும் சக்தியும் ஒன்றுபடுவது அல்லது ஹரனும் கௌரியும் ஒன்றுபடுவது அல்லது கிருஷ்ணனும் ராதையும் ஒன்றுபடுவது அல்லது ராசனும் ரதியும் ஒன்றுபடுதல் என்பதன் மூலம் இது விளக்கப்படுகிறது.”

(உலகாயதம், பக்-425)

மேலே கூறியபடி பல மதத்தினினுள் சிதைந்த வடிவில் தாந்தரீகம் காணப்படுகிறது. காஷ்மீர சைவத்தில் தாந்தரீகம் விஞ்ஞான பைரவ தாந்தரீகமாக விளக்கப்படுகிறது. அங்கே இது சற்று விரிவாக காணப்படுகிறது.

      வைதீக வழிமுறையில் காணப்படும் பூரண கும்பம் என்பதும் தாந்தரீகத்தின் தாக்கமே. பூர்ண கும்பம் என்பது நீர் நிரம்பிய சிறு குடமாகும். அதில் ஐந்து வகைத் தானியங்கள் தூவப்படுகின்றது. இச்சிறு குடத்தின் கழுத்தில் சிவப்பு கயிறு கட்டப்படுகிறது. இதன் வாயில் ஐந்து இலைகள் வைக்கப்படுகிறது. இந்த ஐந்தும் தாந்தரீகத்தின் ஐந்து மகரங்களை நிளைவுபடுத்துகிறது.

      கோவில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பதும் தாந்தரீகத்தின் தாக்கமே. பழையக் கோட்பாடுகள் அதே அடிப்படையில் இல்லை என்றாலும் தொடர்கிறது என்பதே உண்மையாகும்.

தாந்தரீகத்தை வளமைக் கோட்பாடாகப் பார்ப்பதற்கு பதில் காமக் களியாட்டமாகவும் பாலுறவு சுதந்திரமாகவும் மாற்றப்பட்டுள்ளது. ஓஷோ போன்றோர்களின் தாந்தரீகம் இது போன்றதே.

காமத்தின் வழியாக கடவுள் தன்மையை அடைவது பற்றி பேசுகிறது. சமூகக் கட்டுப்பாட்டை இது மறுதலிக்கிறது. ஓஷோவின் கூற்று அகத்தில் ஒடுங்குவதைப் பற்றியே காணப்படுகிறது. இதுவும் ஆன்மீகத்தை நோக்கியே செல்கிறது.

“ஆரம்ப மூலதார், ஆணிடம், ஆண் தன்மையாக இருக்கிறது. நீங்கள் வெளியில் இருக்கும் ஒரு பெண்ணோடு பேசும்பொழுது, உங்கள் உள்ளே உள்ள பெண்ணை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தந்த்ரா சொல்கிறது. உங்களுடைய பிரக்ஞைத் தன்மை, உள்நோக்கிச் செல்லட்டும் - அப்பொழுது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் பிரக்ஞைத் தன்மையை உள்ளேயே இருக்க அனுமதியுங்கள். அது ஒரு தியானமாகட்டும். உங்களுடைய சக்தி தூண்டப்படும் பொழுது, அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள். இந்தத் தருணத்தில் தான், நீங்கள் முழுமையாக ஒருங்கிணைய முடியும் - அதுவே உள் நோக்கிச் செல்லும் ஆன்மீக யாத்திரை.

சாதாரணமாக இதை ஆழ்ந்து பார்ப்பது கஷ்டம். ஆனால் காதல் விளையாட்டின் பொழுது, ஒரு சில நேரங்களில் நீங்கள் சாதாரண நிலையில் இருக்க மாட்டீர்கள். அப்பொழுது, நீங்கள் உச்ச உயர்வில் இருப்பீர்கள். அடுத்து உச்சகட்ட இன்பத்தில் (ORGASM) உங்களுடைய முழுசக்தியின் உணர்வு நாட்டியம் போல, துடிக்க ஆரம்பிக்கும். ஒவ்வொருதிசுவும், ஒவ்வொரு நரம்பும் ஒரே லயத்தில் இயற்கையோடு இயைந்து ஆனந்த ஆட்டம் போடும். அதை நீங்கள் சாதாரண வாழ்க்கையில் புரிந்துகொள்ள முடியாது. இந்த ஒருங்கிணைந்த தருணத்தை, உள்நோக்கிச் செல்லும் வழியாக உபயோகியுங்கள். நீங்கள் காதல் பண்ண ஆரம்பிக்கும்பொழுதே, அதை தியானமாக்க முயற்சி செய்யுங்கள். அதை ஆழந்து நோக்குங்குள். அதை சாட்சியாக நின்று பார்க்க முயலுங்கள்”

(ஓஷோ, தந்த்ரா-பக்-14) 

      ஓஷோவின் கூற்று அத்வைதத்தை நினைவுறுத்துவதாக இருக்கிறது.

உலகாயதம், சாங்கியம் ஆகிய தத்துவங்களின் அடிப்படைகளை அறிந்து  கொள்வதற்கு தாந்தரீகம் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. இங்கே மிகவும் சுருக்கமாகவே தாந்தரீகம் பார்க்கப்பட்டது, இதன் விரிவை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய “உலகாயதம்” என்ற நூலில் படித்தறியலாம்.

      ஒருதார மணம் சமூகத்தில் நிலைபெறுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தாந்தரீகம் தோன்றியது. இந்த ஒருதார மணத்தை அடிப்படை ஒழுக்கமாகக் கொண்டு தாந்தரீகத்தை புரிந்து கொள்ளக்கூடாது.

      ஆனால் இன்று பலர் தாந்தரீகத்தை தமது ஒழுக்கேட்டுக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.

புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் பற்றி தாந்தரீகம் விளக்கவில்லை. வளமையின் வெளிப்பாடாகவே புணர்ச்சி கருதப்படுகிறது. ஆனால் இன்று புணர்ச்சியின் உச்சக்கட்ட இன்பத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒர் ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடும் போது அவர்கள் காணும் இன்பத்தை மேன்மைப்படுத்தவும் அந்த மேன்மையை அதிக நேரம் நீடிக்கும்படி செய்வதும் தாந்தரீகம் என்று பயிற்சி கொடுக்கின்றனர்.

ஆனால் இங்கே தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கே தாந்தரீகம் விளக்கப்படுகிறது. ஆதிபொதுவுடைமை சமூகமான பழங்குடிகளிடம் காணப்படும் புணர்வு முறையை இன்றைய பொதுவுடைமையாளன் (கம்யூனிஸ்ட்) பின்பற்ற முடியாது. அந்தந்த சமூகத்துக்கு ஏற்றபடியே வாழ வேண்டும். ஒவ்வொன்றையும் அது தோன்றிய சூழ்நிலையின் அடிப்படையில் பார்க்க வேண்டும். பழையதை அப்படியே பின்பற்ற முடியாது.

பொருளடக்கம்

 

1 comment: