(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட
61 வது வார வகுப்பு – 07-05-2022)
இந்தியத் தத்துவங்களில் மிகமிக பழைமையானது சாங்கியம். தொடக்கால அனைத்துத் தத்துவங்களும் சாங்கியத்தைப் பற்றி பேசுவதில் இருந்தே இதன் பழைமையை அறிந்து கொள்ளலாம். சாங்கியம் பழைமையானது என்றாலும் அதன் பழைமையான நூல் எதுவும் கிடைக்கவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஈஸ்வர கிருஷ்ணர் எழுதிய சாங்கிய காரிகை நூலே கிடைத்ததில் முதலாவதாகம்.
சாங்கியத்தை முதலில் உருவாக்கியது கபிலர் என்றும் அந்த கபிலர் வைதீகத்தோடு இணைத்து பேசப்படுவதும் உண்டு. ஆனால் தொடக்கால சாங்கியம் ஆன்மீகத்துக்கு எதிராகவே உள்ளது. அதனால் தான் வைதீக நூலான பிரம்ம சூத்திரம் சாங்கியத்தை மறுதலிக்க வேண்டி வந்தது.
சாங்கியம் என்ற சொல்லுக்கு பல பொருள் கூறப்படுகிறது. எண்ணிக்கை, முழுமையான அறிவு, விவேகம், பகுத்தறிவு, தர்க்க ஞானம் என்று பலவாகக் கூறப்படுகிறது.
உலகப் படைப்பை 25 எண்ணிக்கை உள்ள தத்துவங்களைக் கொண்டு விளக்குவதால் 25 தத்துவங்களின் தொடர்பு மூலம் விளக்கப்படுவதினால் இதற்கு எண்ணிக்கை என்ற பெயர் கூறப்படுகிறது. உலகப் படைப்பைப் பற்றி முழுமையான விளக்கம் கொடுப்பதினால் இதற்கு முழுமையான அறிவு என்று கூறப்படுகிறது. உலகப் படைப்புக்கு பிரம்மம் போன்ற பொருளற்ற, உலகுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக சக்தியை காரணமாக சாங்கியம் கூறாததால் இதனை பகுத்தறிவு, தர்க்க ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.
சாங்கியம் பெயரால் கிடைக்கிற பிற்கால நூல்கள் தொடக் கால சாங்கியத் தத்துவத்துக்கு மாறாக அப்பாலைத் தத்துவமாக-ஆன்மீக மயமாக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
“தொடக்கத்தில் முழுதும் நாத்திகவாதமாகவும், பொருள்முதல்வாதமாகவும் இருந்த சாக்கியம் காலப்போக்கில் தீவிரமாக ஆன்மீக மயாக்கப்பட்டு கருத்துமுதல்வாதம் ஊட்டப்பட்டு இறுதியில் உண்மையான மூல சாங்கியத்திற்கு நேர் எதிராக மாற்றப்பட்டது.”
(உலகாயதம்- பக்- 73)
இருந்தாலும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற தத்துவ ஆய்வாளர்கள் தொடக்கக்கால சாங்கியத்தை திரட்டித் தருவதில் பெரும்பாடுபட்டுள்ளனர்.
இன்றைய நிலையில் சாங்கியத்தைப் பற்றி பேசும் போது பிற்கால போக்குகள் இணைந்து காணப்படுவதை தடுத்திட முடியாது. எதிர் காலத்தில் பல்வேறு ஆய்வாளர்களின் உதவியுடன் தொடக்க கால சாங்கியத்தை தொகுத்துக் காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய நிலையில் பெரும்பாலான தத்துவங்கள் வைதீக மயமாதலுக்கு உட்பட்டே காணப்படுகிறது. வைதீக பட்டியலில் வேதத்துக்குப் புறம்பான பிற தத்துவங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சேர்ப்பின் வழியில், பிற தத்துவங்கள் விளக்கப்படுகிற போது அனைத்துத் தத்துவங்களும் வைதீகமாக காட்ட முயற்சிக்கப்படுகிறது.
என்ன முயற்சி செய்யப்பட்டாலும் பிரஸ்தானதிரயத்தில் உள்ள பிரம்ம சூத்திரம் என்ற நூலில் உபநிடதத் தத்துவங்களுக்கு எதிரான போக்காக சாங்கியத்தை விமர்சித்துள்ளதை மாற்றவோ, மறைக்கவோ முடியாது. ஆனால் இன்றைய நிலையில் சாங்கியத்தை இணைத்து ஐந்து அல்லது ஆறு தரிசனங்களாக கூறப்படுபவை வைதீக தத்துவமாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் வைதீகத்தை விளக்கும் நூல்களில் மிகவும் முக்கியமானதான பிரம்ம சூத்திரத்தில் சாங்கியம் ஏன் மறுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களால் நேர்மையான பதிலைத் தரமுடியவில்லை.
இந்தியத் தத்துவங்களை அவைதீக தத்துவங்கள், வைதீக தத்துவங்கள் என்று இரு பெரும் பிரிவாகப் பிரிப்பது வைதீக மரபு. இதில் உலகாயதம், பவுத்தம், சமணம் ஆகியவை அவைதீக தத்துவங்கள் என்று அழைக்கப்படுகிறது. சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை ஆகியவைகளை வைதீக தத்துவம் என்று கூறப்படுகிறது. இறுதியில் உள்ள மீமாம்சை தத்துவத்தை பூர்வ மீமாம்சை, உத்திர மீமாம்சை என்று பிற்சேர்க்கையாக வைதீகம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். வேதாந்தத்தையே உத்திர மீமாம்சை என்று கூறப்படுகிறது.
பூர்வ மீமாம்சை வேத சம்கிதையோடு தொடர்புடையவை, வேதாந்தமாகக் கூறப்படும் உபநிடதக் கருத்துக்களை இந்த பூர்வ மீமாம்சை ஏற்றுக் கொள்ளாது. உத்தர மீமாம்சை அதாவது வேதாந்தம் உலக வெறுப்பையும் சம்சார வெறுப்பும் அதாவது வாழ்க்கை வெறுப்பையும், முக்தியையும் முன்னிருத்துகிறது. ஆனால் பூர்வ மீமாம்சை உலகில் சிறப்பாக வாழ்வது பற்றியே பேசுகிறது. இருந்தாலும் உத்திர மீமாம்சை ஐந்து தரிசனத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பின் காரணமாக ஆறு தரிசனம் என்று கூறுகிற போக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. ஆறாவதாக தனித்து கூறப்பட்டு, சேர்க்கப்பட்ட வேதாந்தம் (உத்தர மீமாம்சை) ஆறு தரிசனங்களையும் வைதீகமாக முயற்சிக்கிறது. அதற்கான விளக்கங்கள் அனைத்திலும் புகுத்தப்பட்டுள்ளது. இவைகளை நீக்கி தொடக்ககால தத்துவப் போக்குகளை பிரித்தறிவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இருந்தாலும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர்கள் தொடங்கி உள்ளனர். பிற்கால ஆய்வாளர்கள் இதனை தொடர்ந்து ஆய்வு செய்து விவரித்து முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
சாங்கிய கலைச்சொற்களை வைதீகம் எடுத்துக் கொண்டு அதை வைதீகமாக விளக்கும் போக்கு அதிக இடங்களில் காணப்படுகிறது. கீதையில் சாங்கியம் வைதீகமாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கீதையின் பதினான்காவது அத்தியாயம் சாங்கிய கலைச்சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சத்காரியவாதத்தின் அடிப்படையில் சாங்கியம் காணப்படுகிறது முக்குணங்களின் அடிப்படையில் படைப்பைப் பற்றி பேசுகிறது. வைதீக விளக்கத்தில்தான் சாங்கியத்தில் இருபத்தைந்து தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது. புருஷனுக்கும் பிரகிருதிக்கும் வைதீக வழியிலான விளக்கம் பிற்காலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
சாங்கியத்தில் உள்ள புருஷ் என்பதை தமிழில் புருடன் என்று கூறப்படுகிறது. சாங்கிய புருடனின் வைதீக விளக்கத்தை முதலில் பார்ப்போம்.
கி.லக்ஷ்மணன்:-
“.இந்த ஆத்மா அல்லது புருடனின் இயல்புகளை ஆராய்வோம்:
உடலோடு சேராத நிலையில் புருடன் அறிவே சொரூபமாயது. அது அறிவைத் தனது குணமாக உள்ள ஒரு குணி அல்ல. அதாவது குணமுடைய பொருள் அல்ல. அது அறிவே மயமாயது. அது எங்கும் நிறைந்தது, என்றும் உள்ளது, மாற்றம் அற்றது. அது இயங்குவது கூடக் கிடையாது. அது செயல்களைச் செய்வதில்லை. செயல்கள் யாவும் நிகழ்வது பிரகிருதியில். புருடன் ஒரு கர்த்தா அல்ல. அதாவது, செயலைப் புரிபவன் அல்ல. புருடன் ஒரு போக்தா மட்டுமே. அதாவது அனுபவிப்பவன் மட்டுமே. அது அறிவு சொரூபமாய் இருந்தும் அதற்கு இந்த உலகப் பொருள்களை அறியும் அறிவு பிரகிருதியோடு சேர்வதனாலேதான் ஏற்படுகின்றது. அது செயல் புரிவதும் பிரகிருதியின் சேர்க்கையால்தான். பிரகிருதி பகுதிகளால் ஆயது. புருடன் பகுதிகள் அற்றது. புருடன் எங்கும் நிறைந்த பொருளாயினும் ஓர் உடலுள் நின்று அதனை விட்டுப் பிரிவது போன்ற உலகியல் நிலை அதற்குப் பிரகிருதியின் சேர்க்கையால்தான் நிகழுகின்றது.”
(இந்திய தத்துவஞானம்- பக்-211)
சங்கியத்தின் புருஷ் இங்கே ஆத்மாவாக ஆக்கப்பட்டுள்ளது. ஆத்மா என்பது உடல் தோன்றி அழிந்த பிறகும் தொடர்ந்து இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு மாறாக பிரகிருதியை பெண்ணாகவும் புருடனை ஆணாகவும் சாங்கியம் கூறுகிறது. இதனை புரிந்து கொள்ளவதற்கு தாந்தரீகத்தை அறிந்திருக்க வேண்டும்.
உண்மையை அறிந்து கொள்ளும் முயற்சியாக மூல சாங்கியத்தை தொடர்ந்து ஆராய்வோம்.
சாங்கியம் என்ற பெயரால் கிடைக்கிற நூல்கள் அனைத்தும் பிற்காலத்தவை என்று பார்த்தோம். மூல சாங்கியத்தை அறிந்து கொள்வதற்கு நேரடிய நூல் எதுவும் கிடைக்கவில்லை. கலப்பட சாங்கிய நூலில் காணப்படும் முரண்பாடுகளின் மூலம் ஆதி சாங்கியக் கருத்தை அறியலாம். அதாவது வைதீக சாங்கியத்தில் வைதீகத்தோடு முரண்படுகிறவற்றை திரட்டுவதன் மூலம் இதை சாதிக்கலாம். சாங்கியத்தை எதிர்ப்பதற்கு-மறுப்பதற்கு பிற தத்துவ நூல்களில் காணப்படும் சாங்கியக் கருத்துக்களைக் கொண்டு மூல சாங்கியத்தை அறிய முயற்சிக்கலாம்.
அவ்வாறான முயற்சிக்கு பாதராயணர் எழுதிய பிரம்ம சூத்திரம் என்கிற நூல் பயனுள்ளதாக இருக்கிறது. பிரம்ம சூத்திரத்தில் சாங்கியம் பிரதான காரண வாதம் பற்றி பேசுகிறது. பிரகிருதியை பிரதானம் என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மமே முதல் என்று வேதாந்தம் கூறப்பட்டதற்கு மாறாக சாங்கியம் பிரகிருதியை பிரதானம் என்று கூறப்படுவதாக பிரம்ம சூத்திரம் கூறியிருக்கிறது. இயல் உலகுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக கருதும் பிரம்மத்தை முதன்மையாக கருதும் வேதாந்தம் கருத்துமுதல்வாதத் தத்துவமாகும், பிரகிருதி என்கிற பொருளை முதன்மைப் படுத்துவதனால் சாங்கியத் தத்துவம் பொருள்முதல்வாதமாகும். பிரம்ம சூத்திரம் சாங்கியத்தை எதிர்ப்பதற்கு அதில் உள்ள பொருள்முதல்வாதக் கூறுகளேகாரணமாகும்.
பிரகிருதி என்பதை மூலப்பிரகிருதி என்றும் வேர்ப்பிரகிருதி என்றும் அழைக்கப்படுகிறது. பிரபஞ்சமாக தோன்றுவதற்கு முன்பு உள்ள பொருளாக பிரகிருதி கருதப்படுகிறது. அதனால் தான் மூலப்பிரகிருதி என்று குறிப்பிடப்படுகிறது. சத்துவம், ராஜசம், தாமசம் ஆகியவை பிரகிருதியின் மூன்று குணங்களாகும். இந்த மூன்று குணங்களும் சமநிலையில் இருப்பது மூலப்பிரகிருதி. இந்த மூன்று தன்மைகளின் மாறுதல்களே படைப்புக்குக் காரணமாகும்.
மூலப் பிரகிருதி சலனமற்று இருக்கிறது. சலனமற்று இருக்கும் மூலப் பிரகிருதி சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களின் சமநிலை மாற்றத்தால் பரிணாமம் ஏற்படுகிறது.
கண்ணாடி பளிங்கு போன்று பிரதிபலிக்கும் சக்தியும், நெருப்பு, நீராவி, காற்று ஆகிய மேல்நோக்கி செல்வதும் ஒளி, பிரகாசம், இன்பம் ஆகியவையும் சத்துவத்தின் குணங்களாகும். தானும் இயங்கி மற்றவற்றையும் இயக்குவதும் இயக்கம், சுறுசுறுப்பு, துன்பம் ஆகியவையும் ராஜசம், ராஜசமே துக்கத்திற்குக் காரணமாகும். இயக்கத்தை தடுப்பதும், மந்தம், அயர்வு, மயக்கம், சோம்பேறித்தனம் ஆகியவ ஆகியவைகளை ஏற்படுத்துவது தாமசம்.
இந்த உலகம் சூனியத்தில் இருந்து அதாவது இல்லாததில் இருந்து படைக்கப்படவில்லை. மூலப் பிரகிருதி என்கிற பொருளில் இருந்தே உலகம் படைக்கப்படுகிறது.
“இல்லது வாராது உள்ளது போகாது” என்கிற மக்கள் மொழியே சாங்கியத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை சத்காரியவாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் இருக்கிறது என்பது சத்காரியவாதம். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எள்ளில் இருந்தே எண்ணெய் எடுக்க முடியும். எள் காரணம் எண்ணெய் காரியம். காரணத்திலேயே காரியம் அடங்கி இருக்கிறது. அதே போலதான் அனைத்தும். மரம் காரணம் கட்டில் காரியம். இருப்பு காரணம் மேசை காரியம். தங்கம் காரணம் நகை காரியம். காரணத்தில் உள்ளதே காரியத்தில் வெளிப்படும் என்பதே சத்காரியவாதமாகும்.
கருவளர்ச்சி பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மூலப்பிரகிருதி பிரபஞ்சமாக, பரிணாமம் பெற்றதாக சாங்கியம் கருதியது. இந்த பரிணாமத்தை இன்றைய விஞ்ஞான கால பரிணாமக் கொள்கையுடன் இணைத்துப் பார்க்க கூடாது. ஏன் என்றால் விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத காலத்தில், படைப்புக்கு ஆன்மீக அடிப்படையை ஏற்காமல், பொருள்தான் படைப்புக்குக் காரணம் என்று கூறுவது முதல்நிலைப் பொருள்முதல்வாதமாகும். இந்த முதல்நிலைப் பொருள்முதல்வாதம் எப்படி இன்றைய விஞ்ஞான வழிப்பட்ட மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதத்தக்கு சமமாக இருக்காதோ, அதே போல சாங்கிய பரிணாமத்தையும் இன்றைய நிலையில் வைத்துப் பார்க்கக்கூடாது.
சாங்கியத்தை இதற்கு முன்பு உள்ள கோட்பாடான தாந்தரீகத்தை இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-
“மூல சாங்கியம் தாந்திரீகத்தில் அடிப்படையாக உள்ள நம்பிக்கைகளைப் பிரதிபலித்தது என்றால் ஆரம்பக்காலச் சாங்கியத் தத்துவவாதிகள் உலகப் பிறப்பினை, அதாவது பிரகிருதியில் இருந்து உலகம் தோன்றுவதை, குழந்தை - பிறப்பதை மாதிரியாகக் கொண்டு விளக்க முற்பட்டது இயல்பானதே ஆகும். அதாவது, கரு வளர்ச்சி பற்றிய கருத்து உலகப் பரிணாமம் பற்றிய கருத்துடன் ஒன்று கலந்து மூல சாங்கியத்தில் இடம்பெற்றது. பரிணாமம் பற்றிய சாங்கியக் கண்ணோட்டத்தில் மனித உடல் உருவாவது பற்றி அதிகம் பேசப்பட்டது. இதனால் பிந்திய காலத்தில் சாங்கியத்தினைப் புரிந்து கொள்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மூல சாங்கியத்தில் இக்காலப் பரிணாமக் கொள்கையை நாம் எதிர்பார்க்கவில்லை. இங்கு முக்கியமானது என்னவென்றால் இயற்கையில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருள்தான் காரணமாக உள்ளது என்பதுவும் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் இறுதியில் பொருள்தன்மையானவையே என்பதுவும்தான். இத்தகைய விமர்சனங்களை மனதில் கொண்டு நாம் இப்போது இந்த பரிணாமக் கொள்கையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.”
(உலகாயதம் பக்-586-587)
சாங்கியம் தொடக்கநிலை பொருள்முதல்வாதமாகும், அதனால் உலகில் நடைபெறும் இயக்கம், மாறுதல் ஆகியவைகளின் நிகழ்வுக்கு இயற்கையை மீறிய சக்தியை காரணமாகக் கூறவில்லை. இயக்கத்தையும் மாறுதலையும் சாங்கியர்கள் அந்தந்தப் பொருளின் சுபாவம் அதாவது இயற்கை விதி என்று கூறினர். சுபாவவாதம் சாங்கியத்தின் முக்கியமான கோட்பாடாகும். இன்றைய விஞ்ஞான வழியில் அன்றைய சாங்கியர்கள் இயற்கையின் விதிகளை விளக்க முடியாத நிலையில் அதனை சுபாவம் என்கிற விளக்கத்துக்குள் அடக்கினர். இன்றைய விஞ்ஞானிகள் இந்த சுபாவத்தையே இயற்கையின் விதிகளாக கண்டுபிடித்து வருகின்றனர்.
புல், இலைகள், நீர் போன்றவற்றை உண்ட விலங்கு எவ்வாறு பாலாக மாற்றுகிறது என்ற கேள்விக்கு, சாங்கியர்கள் அதன் சுபாவம் என்று பதிலளிப்பர். பிரபஞ்சப் படைப்பும் சுபாவக் கோட்பாட்டின்படியே சாங்கியர் விளக்கினர். இயற்கைக்கு மீறிய சக்தியை படைப்புக்கு காரணமாக சாங்கியர் கூறவில்லை. கன்றைக் கண்டதும் பசுவின் உடலில் பால் தானாக சுரப்பது போன்று வெளிப்புறச் சக்தியின் உதவியின்றி இந்த பிரபஞ்சம் பரிணாமம் பெற்றது.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-
“இத் தத்துவத்தின் பழம்பெரும் தொன்மையைக் கருத்தில் கொள்வோமாயின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியின் இருப்பைப் புறந்தள்ளி வளர்ந்திடும் வழிமுறையைப் பின்பற்றிய அதன் முயற்சியை அறிவுத் தளத்தில் ஒரு மாபெரும் சாகசம் என்றே சொல்ல வேண்டும். கபிலரின் சமகால அறிஞர்கள் எல்லாம் இயற்கையைப் பற்றிய தங்களின் புரிதலுக்கும் அதன் விதிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அந்த இயற்கைக்கு அப்பாற்பட்டதோர் ஆற்றலின் துணைகொண்டு நிரப்பிடத் - தலைசுற்றும்படியான உலகின் சிக்கல்களுக்கு அதனை வடிவமைத்த ஆண்டவனைப் பற்றிய கற்பனையின் மூலம் விடை காண - முயன்று கொண்டிருந்தபோது கபிலர் மட்டும் சடப் பொருளின் இயல்பு, இயக்கம் ஆகியன குறித்துத் தனக்குக் கிடைத்த விவரங்கள் அரைகுறையானவையே ஆயினும் அவற்றை முன்னிறுத்தி … … … உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். உலகத் தத்துவ வரலாற்றில் ஆதிப் பழைமையானதும் நன்கு திட்டமிட்டு வகுக்கப்பட்டதுமான நாத்திகத்தின் பிரதிநிதியாக மட்டும் சாங்கியம் விளங்கிடவில்லை. அதன் நாத்திகம் மிகத் தெளிவான அறிவியல் பார்வையால் அல்லது குறைந்த பட்சம் அறிவியல் கண்ணோட்டத்தின் முன்மாதிரியால் அமையப் பெற்றதுமாகும்.”
(இந்திய நாத்தீகம் – பக்-86-87)
பிரகிருதிக்கு அடுத்தப்படியாக சாங்கியத்தில் முக்கியமான கலைச்சொல் புருஷ் (புருடன்). சாங்கியத்தின் தொடக்க காலத்தில் புருஷ் என்பது ஆணையே குறிக்கிறது. இந்தப் புருடன் பல என்பதே தொடக்க கால சாங்கியத்தின் நிலை.
தொடக்க கால விவசயத்தையும் தாய்வழி சமூகத்தையும் சார்ந்தது சாங்கியம். பிரகிருதியை பெண் என்றும் புருடனை ஆண் என்று கருதியது சாங்கியம். பிரகிருதிக்கு மற்றொரு பெயர் “அஜ”, இதற்குப் பொருள் பிறக்காத பெண் என்பதாகும். அதாவது பிறப்பதற்கு தயாராக உள்ள பெண். தாய்வழி சமூகத்தில் சாங்கியம் தோன்றியதால், பெண்ணுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாங்கியத்தின் தத்துவ அடிப்படைகள் மனித வாழ்க்கையின் நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆண் பெண் இணைவால் குழந்தை பிறப்பது போல பிரகிருதி என்கிற பெண், புருஷ் என்கிற ஆண் ஆகியவற்றின் இணைப்பால் பிரபஞ்சம் தோன்றுவதாக மூல சாங்கியம் கூறுகிறது.
வளமைக் கோட்பாடான தாந்தரீகத்தின் தொடர்ச்சியாக இந்த சிந்தனை சாங்கியத்தில் வந்துள்ளதாக கொள்ளலாம். இதனை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா சுருக்கமாகக் கூறுவதைப் பார்ப்போம்.
“பிரகிருதி என்ற சொல் ஆரம்பக்காலச் சாங்கியர்களது கண்டுபிடிப்பு அல்ல. ஏனென்றால் அது தாந்திரீகத்தில் இருந்த அடிப்படையான கருத்து. இதன் வரலாறு மிகவும் பழமையானது. இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தில் பிரகிருதி என்பது பெண்மைக் கோட்பாட்டினைக் குறித்தது என்பதனை மறுக்க முடியாது. இது சக்தி என்பதற்கான மற்றொரு சொல். இதன் வெளிப்படையான வடிவம் தாய்க்கடவுள்; தாந்திரீகத்தில் மனித உடல் குறிப்பாகப் பெண்ணின் உடல் உலகின் நுண்மாதிரியாக உள்ளது. எனவே பிரகிருதி உலகின் அடிப்படையாக மாறியது. ஆகையினால் தாந்திரீகத்தில் உலகமானது பெண்ணிடமிருந்து வந்தது என்று பொருள் தரும்படியாக வமொத்பூதம் என்று அழைக்கப்படுகிறது.
உண்மையான தாந்திரீகத்தில் பிரகிருதி என்பது ஒரு தொல்கதையாக விளக்கப்பட்டது. சாங்கியத் தத்துவவாதிகளின் மிகப் பெரிய சாதனை இதனைப் பொதுமையான, புறவயமான கருத்துக்களாக மாற்றி வெளியிட்டதாகும். இந்த மாறுதல் முக்கியமானது. ஏனென்றால் தொல்பழங்கால சிந்தனையின் வடிவத்தினைப் புரட்சிகரமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதில் புதிய சிந்தனைக்கூறுகள் உள்ள உள்ளடக்கத்தினை அறிமுகப்படுத்தவும் அவர்கள் முயன்றனர்.
ஆரம்பக்காலச் சாங்கியத் தத்துவவாதிகள் இதனைப் பொதுமையாகவும் புறவயமாகவும் ஒரு கொள்கையாக உருவாக்கும்போது கடவுள் அல்லது படைப்பாளி என்ற கருத்தை மறுக்க வேண்டியிருந்தது. பிரகிருதியை ஆன்மீகம் அல்லாத அல்லது பொருள் சார்ந்த உலகத்தின் ஸ்தூலமான ஒன்றாக (அசேதனம்) வரையறுக்க வேண்டியிருந்தது.”
(உலகாயதம் பக்-525-526)
தாய்வழி சமூகத்தின் பிற்காலத்தில் பெண் கரு உருவாவதற்கு ஆணின் பங்கை அவர்கள் அறிந்து கொண்டனர். இருந்தாலும் ஒரு தார மண முறை இன்னும் அங்கே தோன்றவில்லை என்பதனால் அந்த கருவுக்கு உரிய ஆண் யார் என்பது தெரிந்து கொள்ள முடியாது. அதனால் பெண்ணுக்கு அடுத்தபடியான இடம் தான் ஆணுக்குக் கொடுக்கப்பட்டது. தாய் வழி சமூகம் தொடர்ந்தது.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-
“மனித இனவிருத்தி பற்றி விவரம் ஓரளவிற்குத் தெரிந்தபின்னர், ஆண், பெண் வீட்டிற்குச்சென்று அவளுடன் இணைந்தால்தான் இனம் விருத்தியாகும் என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவனுக்குப் பிள்ளைகள் மீது உரிமையில்லாதபடியால், அவனை அந்நியனாகவே கருதினர். அவனை ஒரு கருவி என்று அழைத்தனர்.
புருடனது இந்த முரண்பட்ட நிலைதான் சாங்கியத்தில் பிரதிபலித்தது. அதே சமயத்தில் மனித உடலை முன்மாதிரியாகக் கொண்டு உலக ரகசியத்தினைப் புரிந்து கொள்ளத் தாந்திரீகர்கள் செய்த முயற்சியைப் பயன்படுத்திச் சாங்கிய தத்துவவாதிகளும் ஆண் பெண் சேர்க்கையின் மூலம் குழந்தை பிறப்பதுபோல, இந்த உலகம் பிரகிருதியும், புருடனும் சேர்க்கையினால் உருவாகியிருக்க வேண்டும் என்று சிந்தித்திருக்க வேண்டும். மேலும் தாய்வழி உரிமைமுறையில் குழந்தைக்கும் தந்தைக்கும் உண்மையான உறவு எதுவும் இல்லாமல் இருந்தது. அதே போன்று உலகம் உண்மையாக இருந்த போதிலும் புருடனுக்கும் அதற்கும் எந்த உறவும் இல்லை என்று கருதப்பட்டது”
(உலகாயதம் பக்-529-530)
சாங்கியம் என்ற பெயரில் இன்று கிடைக்கின்ற நூல்களில் மூல சாங்கியக் கருத்துக்கள் திரிந்தே காணப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கவை கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய சாங்கிய காரிகை, இந்த நூல் ஈஸ்வர கிருஷ்ணரால் எழுதப்பட்டது. அடுத்து கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்திரம். இந்த இரு நூல்களும் தொடக்க சாங்கியத்தின மரபு வழியில் வராது, விலகி செல்லும் நூல் என்றாலும் இது போன்ற நூல்களில் காணப்படும் முரண்பட்டக் கருத்துக்களைக் கொண்டே மேலே நாம் கண்ட தொடக்க கால சாங்கியக் கருத்துக்கள் திரட்டப்பட்டது. அதனால் இந்த இரண்டு நூல்களையும் முற்ற புறக்கணிக்க முடியாது.
சாங்கியத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமானால் கிடைப்பதைக் கொண்டு தான் செய்திட முடியும். தேவிபிரசாத் சட்டோபாத்யாயா தாம் எழுதிய உலகாயதம் என்ற நூலில் கிருஷ்ண சந்திர பட்டாச்சார்யாவின் மேற்கோளை கொடுத்துள்ளார், அது சாங்கிய மீட்டுருவாக்கத்தைப் பற்றி சரியாக கூறியுள்ளது.
“பெரும்பாலான சாங்கிய நூல்கள் வழக்கொழிந்து விட்டன எனத்தெரிகிறது. தொல்பழங்காலத்திலிருந்து உரை ஆசிரியர்கள் காலம்வரை அதற்கு ஒரு தொடர் பாரம்பரியமும் இல்லை என அறிகிறோம். கிடைத்துள்ள சில நூல்களிலிருந்து, அனுமான அடிப்படையில் அப்பாலையியல் (இயக்க மறுப்பியல்) பற்றித் தெளிவற்ற கருத்தே கிடைக்கிறது. ஏராளமான செய்திகள் கவிதைகளாகவும், ஆன்மீகப்போர்வை உடுத்தியவையாகவும் உள்ளன. இவை பற்றிய உரை ஆசிரியர்களது விளக்கங்கள் நமக்கு அதிகம் உதவுவதில்லை. ஆனால் இவற்றின் உதவியுடன் இந்தத் தரிசனத்தைப் மறுநிர்மாணம் செய்யலாம். பழைய தரிசனங்களை விளக்குவதற்கு ஆக்கபூர்வமான முயற்சி தேவை. சில தரிசனங்களைப்பற்றி ஏராளமான நூல்கள் உள்ளன. அவற்றுக்குத் தொடர்ச்சியான பாரம்பரியம் உள்ளது. ஆனால் சாங்கியத்தில், காணாமல்போன தொடர்புகளைக் கற்பனையாக நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. இது ஒரு சிக்கலான மீட்டுருவாக்கம்.
இல்லையேல் சாங்கியத்தைத் தத்துவமாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்பணியை உவந்து ஏற்கக் கடமைப்பட்டுள்ளோம். இது ஆக்கப்பூர்வமானது ஏனெனில் சாங்கியம் துணிச்சலான தத்துவம் ஆகும்.”
(உலகாயதம்- பக்-475)
இதுவரை மேலே நாம் கண்டது மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சாங்கியமாகும். இந்த மீட்டுருவாக்கம் என்பது செயற்கையான ஒன்று என்று கருதிட முடியாது. தொடக்க கால சாங்கியம் முதல்நிலை பொருள்முதல்வாதத் தன்மை உடையது என்பதை மறுத்திட முடியாது.
சாங்கியமானது முதல்நிலை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் கொண்டது என்பதனால்தான் பிரம்ம சூத்திரம் நூல் சாங்கியத்தை மறுக்க வேண்டிவந்தது என்பதை ஏற்கெனவே கூறப்பட்டது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலகாயதத் தத்துவத்தை குறிப்பிட்டு தனியே பிரம்ம சூத்திரம் நூலில் மறுக்கவில்லை. இதற்கு காரணம் பொருள்முதல்வாதத் தத்துவமான சாங்கியத்தை மறுப்பதே உலகாயதத்தை மறுப்பதாக பிரம்ம சூத்திர நூலாசிரியர் கருதியதாகக் கொள்ளலாம். ஆக சாங்கியத்தை முதனிலைப் பொருள்முதல்வாதம் என்று கூறுவது தவறாகாது.
“சாங்கியத் தத்துவம் மிகப் பழைய காலத்தில் தாந்தரீகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மறுபடியும் கூறும் ஒரு அமைப்பாக விளங்கியது உண்மை என்றால், நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி உலகாயதம் என்பது தாந்திரீகத்தில் உள்ள நம்பிக்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றைக் குறிக்கும் என்றால், மூல சாங்கியத்தை இந்தியத் தத்துவ வரலாற்றில் உலகாயதத்தின் வளர்ச்சி என்றே கூறலாம். சாங்கியத்திற்கும் உலகாயதத்திற்கும் எந்தவித அடிப்படையான வேறுபாடுகள் இல்லை என்று ஜைன உரை ஆசிரியரான சிலங்கா கருதுகிறார். உலகாயதிகளை சாங்கியத் தத்துவவாதிகள் மேற்கோளாகக் காட்டுகிறார்கள் என்று சங்கரரும் குறிப்பிட்டுள்ளார். மூல சாங்கியம் சமரசம் செய்து கொள்ளாத நாத்திகவாதமாகவும், பொருள்முதல்வாதமாகவும் இருந்தது என்பது இதன் பொருள். உண்மையில் மிகப் பழங்கால இந்தியத் தத்துவப் பாரம்பரியத்தில் இத்தகைய கண்ணோட்டம்தான் இருந்தது. அது நிரிஸ்வர பிரதான காரண வாதம் - அதாவது முதல்நிலைப் பொருளின் கடவுள் மறுப்புக் கொள்கை - எனப்பட்டது. மேலும் ஆரம்பத்தில் உபநிடதங்களின் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் இடம்பெறுவதற்கான அடிப்படையாக இருந்த வேத பாரம்பரியத்திற்கு அல்லது வைதீகப் பாரம்பரியத்திற்கு இது எதிராக இருந்தது,...”
(உலகாயதம்- பக்-478-479)
இதற்கு அடுத்து சாங்கியம் என்ற பெயரில் ஆன்மீகக் கலப்பு ஏற்படுத்தியத்திற்குக் காரணத்தையும் அதன் விளக்கங்களையும் காண்போம்.
தொடக்க சாங்கியத்தில் பிரகிருதி என்பது பெண்ணையும் புருடன் (புருஷ்) என்பது ஆணையும் குறிக்கும் என்று பார்த்தோம். இந்த புருடனை ஆணாக கருதாமல் ஆத்மாவாக மாற்றுவதின் மூலம் சாங்கியத்தை ஆன்மீக மயமாக்கும் பணி பல்வேறு நூல்களில் செய்யப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானதா உள்ள சாங்கிய காரிகை என்கிற நூலில் இருந்தே தொடங்குகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சாங்கியத்துடன் ஆன்மீகத்தை கலந்த நூல்களே இன்று கிடைக்கிறது.
இந்த ஆன்மீகக் கருத்து முதல்நிலை பொருள்முதல்வாதமான தொடக்க சங்கிய கருத்துடன் முரண்படுவதை கலப்பாளர்களால் மறைத்திட முடிவில்லை
இதுபற்றி தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறியதை பார்ப்போம்.
“புருடன் பற்றிக் காரிகையின் கருத்து சாங்கியத்தின் அடிப்படைகளுடன் முரண்படுகிறது. உண்மையில் இது சுயம் பற்றிய வேதாந்தக் கருத்தாகும். இது சாங்கியத்தின் அடிப்படைகளுக்கு நேர் எதிரானது. எனவே மிகத் தந்திரமாகச் சாங்கியத்தின் அடிப்படைகளை விட்டுக் கொடுப்பதன் மூலம் ஈஸ்வர கிருஷ்ணர் புருடன் பற்றிய அவரது கருத்திற்கு ஆதரவாக வாதிட முடிந்தது. அதாவது, புருடன் பற்றிய அவரது கருத்தினை வலுப்படுத்துவதற்காக அவர் சாங்கியத்தினை வேதாந்தமாக மாற்றினார். பரிணாம வாதத்தினை விவர்த்த வாதமாக மாற்றினார்.”
(உலகாயதம்- பக்-544-545)
சாங்கிய சூத்திரத்தில் சாங்கிய நிலையில் புருடன் பல என்று கூறுவதுடன் புருடனை ஆத்மாவாகக் கூறி “ஒன்று” என்று வேதாந்தக் கருத்துடன் சாங்கியத்தை இணைக்க முயற்சிக்கிறது. புருடன் என்ற சாங்கியக் கருத்தை வேதாந்தாந்த கருத்தான ஆத்மாவாக விளக்கம் கொடுத்தது. இந்த போக்கு மிகவும் பழங்காலத்தில் இருந்தே தொடர்கிறது. மகாபாரத நூலில் காணப்படும் சாங்கியமும் ஆன்மீகமாக கலக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது.
இந்த கலப்பு வேலையை யார்? ஏன்? செய்தனர் என்கிற கேள்விகள் எழத்தான் செய்யும். இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் ஆன்மீகத் தத்துவமாக, ஒரே மதமாக, ஒரே தத்துவமாக காட்ட யார் முயற்சி செய்தனரோ, செய்கின்றனரோ அவர்களே இதனை செய்தனர், செய்கின்றனர். இது வைதீகமயமாக்கலாகும். இது நம் நாட்டின் பன்மைத் தன்மைக்கு எதிரான போக்காகும்.
சாங்கியத்தில் ஏற்பட்ட சிதைவை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்பாம்.
“உலகாயதத்தைத் தவிர வேறெந்தத் தததுவமும் சாங்கியத்தைப் போன்று இம் மண்ணில் இவ்வளவு பெரும் சேதாரத்தைச் சந்தித்ததில்லை. ஒரு காலத்தில் ஓங்கிச் செழித்திருந்த அறுதிப்பழைமையான இத் தத்துவத்தில் “தப்பிப் பிழைத்திருப்பவை” அதன் சிதிலடைந்த சில துண்டுகளே”
(இந்திய நாத்திகம் - பக்-77)
சிதைத்ததின் காரணமாக சாங்கியம் இரண்டு வகையாக பிரிந்து காணப்படுகிறது. தொடக்கால சாங்கியப் போக்குடையவைகளை நிரீஸ்வர சாங்கியம் என்றும், கலப்பான வைதீகச் சாங்கியத்தை ஈஸ்வர சாங்கியம் என்றும் அழைக்கப்படுகிறது. நிரீஸ்வர சாங்கியம் என்றால் கடவுளை ஏற்றுக்கொள்ளாத சாங்கியம். ஈஸ்வர சாங்கியம் என்றால் கடவுளை ஏற்றுக் கொண்ட சாங்கியம்.
மேலே பெரும்பாலும் தொடக்ககால சாங்கியமான நிரீஸ்வ சாங்கியம் பற்றி பார்த்தோம். அடுத்து ஈஸ்வர சாங்கியம் என்பதைப் பார்ப்போம். ஈஸ்வர சாங்கியம் என்பது வைதீகக் கலப்பு ஏற்பட்ட ஆன்மீக சாங்கியம் என்று எற்கெனவே கூறப்பட்டது. ஆன்மீகமாக ஆக்கப்பட்டாலும் ஈஸ்வர சாங்கியத்தில் வைதீகத்துடன் முரண்படும் நாத்திகக் கருத்துக்கள் வெளிப்படவே செய்கிறது. இதே போல பிற்கால சாங்கிய நூல்களில் முரண்பாடு காணப்படுகிறது.
பிரபஞ்சப் படைப்புக்கு 25 தத்துவங்கள் சாங்கியத்தில் கூறப்படுவது வைதீக மரபாகும். இது போன்ற விளக்கங்கள் ஆன்மீக கலப்புடனே காணப்படுகிறது.
1) பிரகிருதி 2) புருஷ் (புருடன்) 3) மகத் 4) அகங்காரம் 5) மனம்
6-10) ஐந்து புலன்கள் (பஞ்ச கர்மேந்திரியங்கள்) கண், காது, மூக்கு, நாக்கு, தோல்.
11-15) ஐந்து செயல்கருவிகள் (பஞ்ச ஞானேந்திரியங்கள்) கை, கால், வாக்கு, எருவாய் (மலத்துவாரம்), கருவாய் (சிறுநீர் குழாய் ).
16-20) ஐந்து தன்மாத்திரைகள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம்.
21-25 ஐந்து பூதங்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
ஆதி சாங்கியம் பிரகிருதி என்ற பெண் தன்மையும் புருடன் என்கிற ஆண் தன்மையும் இணைந்து உலகம் தோன்றியது என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம். இந்த விளக்கம் தாந்தரீகத்தின் அடிப்படையிலானது என்பதையும் சேர்த்துப் பார்த்தோம். பிற்காலத்தில் புருடன் என்பதை பிரகிருதியின் பெருக்கமாக கூறப்படுகிறது.
பிற்காலத்தில் ஆதி சாங்கிய தொடக்கநிலை பொருள்முதல்வாதத்தை மறுக்கும் விதமாக பிரகிருதிக்கும் புருடனுக்கும் எவ்வாறு விளக்கம் கொடுக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
பிரகிருதியின் வெளிப்பாடே இந்தப் பரிணாமம். பிரகிருதி அறிவற்ற அசேதனம். அசேதனம் என்றால் உயிரற்ற சடப்பொருள்.
புருடன் (புருஷ்) என்பது அறிவுள்ள சேதனம். அதாவது அறிவுள்ள பொருள். புருடனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. புருடன் அனுபவிக்கவே இந்த படைப்பு உருவானது என்று ஈஸ்வர சாங்கியம் கூறுகிறது. இந்தப் புருடனே ஆத்மா.
ஆதி சாங்கியத்தில் படைப்புக்கு பிரகிருதி-புருடன் ஆகிய இரண்டையும் சேர்ந்து கூறப்பட்டது, இங்கே புருடன் தனியே பிரித்து ஆத்மாவாக விளக்கப்படுகிறது. ஆத்மாவை நுழைத்துவிட்டால், ஆன்மீகமயமாக்கிவிடும் என்று அவ்வளவு எளிதாகக் கூறிட முடியாது. ஏன் என்றால் ஈஸ்வர சாங்கியத்தில் நாத்திகக் கருத்துக்கள் இருக்கவே செய்கிறது, ஈஸ்வர சாங்கியத்தில் உள்ள முரணை என்ன செய்தாலும் நீக்கிடமுடியாது.
புருடனை ஆத்மாவாக ஈஸ்வர சாங்கியம் கொள்வதால் முக்தியைப் பற்றி பேச வேண்டிவருகிறது. முக்தி என்றால் பிறப்பற்ற நிலை. மனிதப் பிறப்பை மனித வாழ்வை வெறுக்கும் நிலை.
“பொதுவாக, பாரதீய தத்துவங்களில் ஆன்மா என்று அழைப்பதைத்தான் சாங்கியம் புருஷன் என்கிறது. இந்தப் புருஷன் உடலோ, உடலின் சேர்க்கையால் உருவாவதோ, புத்தியோ, மனமோ அல்ல. இவையெல்லாம் இயற்கையாகிய பிரகிருதியின் வெளிப்பாடுகள். இவற்றில் இருந்து வேறுபட்ட ஒன்றே புருஷன். பிரகிருதி மூலமான அனுபவத்தைப் பெறுகின்றது எதுவோ அதுவே புருஷன்.”
(பத்மன், தத்துவ தரிசனங்கள், பக்-108)
புருடனை உடலுக்கு அப்பாற்பட்ட ஆத்மாவாக கருதுவதினால் அதன் ஒடுக்கத்தைப் பற்றி பேச வேண்டிவருகிறது. தாந்தரீகம், உலகாயதம், சாங்கியம் போன்ற கோட்பாடுகள் வாழ்வை கொண்டாடுகிறது. ஆனால் இந்த புருட கோட்பாடு அதாவது ஆத்மக் கோட்பாடு வாழ்வை வெறுக்கிறது. மாறுதலற்ற பிரம்மமே உண்மையானது என்கிறது. மாறுதலுக்கு உட்படுகிற இந்தப் பிரபஞ்சம், பிரம்ம உண்மைக்கு எதிரானது, அதனால் நிலையான உண்மையை முன்வைத்து மாறுதலுடன்கூடிய பிரபஞ்சத்தை வெறுக்கிறது-மறுக்கிறது. பிரபஞ்சத்தில் இருந்து விடுபடுவதை விடுதலையாக - முக்தியாக கருதுகிறது.
புருடன் பிரபஞ்சத்துடன் இணைவதே பந்தத்துக்குக் (சம்சாரத்துக்குக்) காரணம். அதாவது துக்கத்துக்குக் காரணம். ஆத்மத் தத்துவம் வாழ்க்கையை துக்கமயமாகப் பார்க்கிறது. துக்கத்தை ஏற்படுத்தும் பந்தமே முக்திக்குத் தடை என்பதை அறிந்து ஈஸ்வர சாங்கியம் முக்தியை முன்வைக்கிறது.
பிரகிருதி எனப்படும் மூலத்தில் இருந்து தோன்றிய ஐந்து புலன்கள், ஐந்து செயல்கருவிகள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து பூதங்கள் ஆகியவையே புருடனை மயக்கி துக்கப்படுத்துகிறது. பிரகிருதிக்கும் புருடனுக்கும் ஏற்படுகிற தொடர்பே துக்கத்துக்குக் காரணம். இந்த துக்கத்தில் இருந்து விடுபட்டு புருடன் தன்னை உணர்தலே முக்தி. வைதீகக் கலப்பால் ஈஸ்வர சாங்கியம் முரண்பாடுகளின் தொகுப்பாக காட்சி அளிக்கிறது.
இது பற்றி தேவபிரசாத் சட்டோபாத்யாயா கூறுகிறார்:-
“சாங்கிய காரிகை என்ற நூலின் காலத்தில் இருந்து வேதாந்தத் தத்துவத்தின் மோட்சத்தை வற்புறுத்திக் கூறுவதோடு, பிரகிருதி என்ற இயற்கைக்கும் முதன்மை கொடுத்து வற்புறுத்துவதும் தேர்ந்தே காணப்படுகிறது. முரண்பாடுகளின் கூடையாய் சாங்கியம் ஆனதே இதன் விளைவு”
(இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்)
பழங்குடிகளான தொடக்கக்கால விவசாயிகளின் தாந்தரீகம் உலகாயதம் சாங்கியம் ஆகியவைகளில், உலகில் சிறப்பாக வாழ்வது பற்றியே பேசுகிறது. இந்த காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை என்பது துக்கமயமாக மாறியது என்பது உண்மையே, இதற்கு ஈஸ்வர சாங்கியம் கூறுவது போல் பிரகிருதிக்கும் புருடனுக்கும் ஏற்படுகிற (பந்தம்) தொடர்பு காரணம் அல்ல.
தனித் சொத்துடமையும் சொத்துடமையால் ஏற்பட்ட வர்க்க வேறுபாடே காரணமாகும். இந்தக் காரணத்தை மறுப்பதற்கே ஆன்மீகம் ஆத்மா போதத்தை வளங்குகிறது. ஆத்ம விடுதலையே அனைத்துக்குமான விடுதலை என்று கூறுகிறது. இந்தக் கூற்று நிலவும் வர்க்க சமூகத்தை கட்டிக்காப்பதற்கே உதவுகிறது. இல்லாத ஆத்மாவுக்கு விடுதலைக் கிடைப்பது பற்றி பேசுவது, இருக்கும் வர்க்க வேறுபாட்டினால் ஏற்படும் துக்கத்தை மறைப்பதற்கே ஆகும்.
இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு உலகில் வழியில்லை என்று கூறுவதன் மூலம் ஆன்மீகத் தத்துவம் வர்க்க சமூகத்தில் சுரண்டலாளர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கிறது. வர்க்க சமூகத்தில் கருத்துமுதல்வாதத் தத்துவம் வர்க்க சுரண்டலாளர்களுக்கு பயன்படுகிறது, உழைத்தும் துக்கத்துக்கு ஆளாகும் உழைப்பாளர்களுக்கு பொருள்முதல்வாதமே சமூக விடுதலையைக் காட்டுகிறது. உழைப்பாளர்களுக்கு சமூக விடுதலையில் தான் முழுமையான விடிவு இருக்கிறது.
வர்க்கமற்ற சமூகத்தில் தோன்றியது சாங்கிய முதல்நிலை பொருள்முதல்வாதம். மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதமானது நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையில் வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாதமாகும்.
அருமையான விளக்கம் தோழர்! வாழ்த்துக்கள்.
ReplyDelete