Saturday 21 May 2022

4. வைசேஷிகம் எளிய அறிமுகம்

 

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

63 வது வார வகுப்பு – 21-05-2022)


அறிவைப் பெறுகிற வழியை இந்தியத் தத்துவங்கள் பிரமாணங்கள் என்று கூறுகிறது. இந்த பிரமாணங்களை முதலில் நன்றாகப் புரிந்து கொண்டால் தத்துவங்களை படித்தறிவது எளிதாக இருக்கும். தத்துவங்களை அறியத் தொடங்குவதற்கு முன்பே இதனை அறிந்து கொள்ள வேண்டும்.

பிரமாணங்கள்

பிரமாணங்கள் என்றால் அறிவதற்கான வழிமுறை. இந்தப் பிரபஞ்சத்தை அறியவேண்டுமானால் அதற்கான வழிமுறையை சரியாக ஏற்க வேண்டும். எந்த பிரமாணங்களைக் கொண்டு அறிகிறோமோ முடிவுகள் அதன் தன்மையினதாகவே இருக்கும். பிரமாணங்கள் பலவாகும்.

பிராமாணங்களில் சிலவற்றைப் பார்க்கலாம். 1.பிரத்தியட்சம் (புலனுணர்வு), 2.அநுமானம் (உய்த்துணர்வு), 3.ஆப்தவாக்கியம் (உரைச்சான்று), 4.உபமானம் (ஒப்புநோக்கு), 5.அர்த்தாபத்தி (சூழ்நிலைசார் உய்த்துணர்வு), 6.அனுபலப்தி (எதிர்மறைச் சான்று).

1.பிரத்தியட்சம் என்பது நேரடியாக அறிவதாகும், பார்வை முதலான புலன்களின் உதவியினால் அறிவது அனைத்தும் பிரத்தியட்சம். இதனை தமிழில் காட்சியளவை, காண்டலளவை, புலனுணர்வு என்பர்.

2.அநுமானம் என்றால் காட்சிக்கு தெரியாதப் பொருளை, இதற்கு முன் நேரடியாக அறிந்ததைக் கொண்டு ஊகிப்பது. அதாவது உய்த்துணர்தல். வீட்டின் உள்ளே இருக்கும் போது வெளியே பெய்யும் மழையை கண்ணும் காதும் அறிவதில்லை, ஆனால் திடிரென்று ஏற்பட்ட குளிர்ச்சியின் மூலம் மழை பெய்வதை அறியலாம், அவ்வாறு ஊகித்து அறிவது அநுமானம். மழை பெய்யும் போதெல்லாம் குளிர்ச்சி ஏற்பட்ட நேரடி அனுபவங்களின் அடிப்படையில் இவ்வாறு முடிவெடுத்தல் அநுமானம். பிறர் அனுபவங்களின் அடிப்படையிலும் முடிவெடுப்பதும் அநுமானமாகும். ஊட்டி, கொடைக்கானல் என்கிற ஊர்கள், மலைகளைக் கொண்டது என்பதை நேரில் சென்று பார்க்காதவர்களும், பிறரது அனுபவத்தால் கூறிட முடியும். நெருப்பு சுடும் என்பதை அனுபவிக்காது கூறுவது பிறரது அனுபவமே.

3.ஆப்தவாக்கியம் என்றால் நேரடியாகவும் அநுமானத்தாலும் அறிய முடியாததை நூல்களின் மூலம் அறிந்து கொள்வது. ஆப்தவாக்கியத்தை சாஸ்திர பிராமாணம் என்றும் கூறுவர். தமிழில் இதனை உரைச்சான்று என்று கூறப்படுகிறது. முன்னோர்கள் கூறியது, பெரியோர்கள் கூறியது அனைத்தும் உரைச்சான்றே. கடவுள் உலகைப் படைத்தார் என்பது உரைச்சான்று. கடவுள் உலகத்தைப் படைக்கவில்லை என்பதும் உரைச்சான்றுதான். ஏதை ஏற்பது என்பதை அவரவர் அனுபவங்களின்படி உரைச்சான்றை முடிவெடுப்பர். பிரத்யட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் என்கிற இந்த மூன்றே பிரமாணங்களில் முதன்மையானதாகும்.

4.உபமானம் என்றால் தெரியாத ஒன்றை, தெரிந்ததை கொண்டு ஒப்பிட்டு அறிதல். அறிந்த ஒன்றின் அடிப்படையில் அறியாத ஒன்றை அறிதல், அதாவது ஒப்புநோக்குதல். பலவற்றில் உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு அதல் உள்ள ஒற்றுமை வேற்றுமை ஆகியவற்றைக் கொண்டு முடிவெடுப்பது.

5. அர்த்தாபத்தி என்றால் சூழ்நிலைசார்ந்து உய்த்துணர்தல். மேலே கண்ட பிரத்தியட்சம், .அநுமானம், .ஆப்தவாக்கியம், உபமானம் ஆகிய நான்கு வழிகளில் கிடைக்காததைப் “பெறும் வழி” என்று கூறலாம். அதாவது இந்த நான்கு வழியில் கிட்டாததை அறியும் “வழி முறையே” அர்த்தாபத்தி. தொடர் உண்ணா நோன்பு இருப்பதாக கூறியவன், ஒரு வாரத்துக்குப் பிறகும் சோர்வு அடையாமல் இருக்கிறான் என்றால், யாரும் அறியாத போது உணவு சாப்பிட்டிருக்கிறான் என்று அறிவது அர்த்தாபத்தி.

6.அனுபலப்தி என்றால் இல்லாத ஒன்றை “இல்லை” என்று அறிவது. அலுவலகத்தில் உள்ள கணவர் மனைவியிடம் அலைபேசியில், வீட்டிற்கு விருந்தினர் வந்துள்ளனரா என்று கேட்டதற்கு, “இல்லை” இதுவரை வரவில்லை என்று வராததை அறிவது அனுபலப்தி. நெல்லை விரைவு ரயில் வந்துவிட்டதா? என்று கேட்பவரிடம் ரயில் வரவில்லை என்பதை அறிந்து அவருக்கு சொல்வது அனுபலப்தி. இதை எதிர்மறைச் சான்று என்று கூறலாம்.

பிரத்யட்சம்  என்ற ஒரு பிரமாணத்தை மட்டும் ஏற்பவர் உலகாயதர். பிரத்யட்சம், அநுமானம் ஆகிய இரண்டை மட்டும் ஏற்பவர் வைசேஷிகர். பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம் ஆகிய மூன்றை ஏற்பவர் சைவசித்தாந்தி. பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம் ஆகிய நான்கை ஏற்றுக் கொள்பவர் நியாய தத்துவவாதி. பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம், அர்த்தாபத்தி ஆகிய ஐந்தையும் ஏற்பவர் மீமாம்சைப் பிரிவில் உள்ள பிரபாகரர். பிரத்யட்சம், அநுமானம், ஆப்தவாக்கியம், உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி  ஆகிய ஆறு பிரமாணங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் மீமாம்சைப் பிரிவில் உள்ள பட்டர், வைதீக வேதாந்திகள்.

வைசேஷிகம்

ஐந்து தரிசனங்கள் என்று கூறப்படுகிற மரபில் வைசேஷிகம் மூன்றாவதாக வருகிறது. இதுவும் மிகமிக பழையான தத்துவப் போக்காகும்.

      வைசேஷிகத்துக்கு தொடக்க நூலாகக் கிடைப்பது “வைசேஷிக சூத்திரம்”. இந்த நூலை கணாதர் என்பவர் சுமார் கி.மு. 200 ஆம் ஆண்டில் எழுதினார். பத்து அத்தியாயங்களையும் மொத்தம் 374 சூத்திரங்களையும் கொண்டது இந்த நூல்.

      பிரபஞ்சம் தோன்றுவதற்கு அணுவே அடிப்படை என்று வைசேஷிகம் அணுக்கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்தியத் தத்துவங்களில் அணுவை அடிப்படையாக பல தத்துவங்கள் கூறினாலும் வைசேஷிகம் அணுக் கோட்பாட்டை சிறப்பாக கூறியுள்ளது.

      அனைத்தும் அணுவில் இருந்து தோன்றுகிறது என்று கூறுகிற வைசேஷிகம். எந்த பொருளையும் பிரித்துப் பார்த்தால் இறுதியில் பிரிபடாத அணு காணப்படும், அந்த அணுவே பொருளாக பிறப்பெடுப்பதற்குக் காரணம் ஆகும். அத்தகைய அணுவை ஒற்றைப் பொருளாக பார்க்கவில்லை பல என்று கருதினர். ஒவ்வொரு பொருளுக்கு பல அணுக்கள் தேவைப்படுகிறது.

சிறிய பொருளுக்கு சிறிய தொகை அளவிலா அணுக்களும் பெரிய பொருளுக்கு பெரிய தொகை அளவிலான அணுக்களும் அடிப்படையாகும்.

ஒவ்வொரு பொருள் தோன்றுவதற்கும் ஒவ்வொரு அணு இருப்பதாக கூறுவதால், வைசேஷியர்கள் பன்மைவாதிகள் ஆவார். ஒவ்வொரு தனிப்பொருளும் பல்வேறு கூட்டுப்பொருளால் ஆனது, அந்த கூட்டுப் பொருளை ஒவ்வொன்றாக பிரித்தால் இறுதியில் அந்த பொருளுக்கு உரிய அணுவைக் காணலாம். இந்த அணுவை பிரிக்க முடியாது என்று வைசேஷியர்கள் கருதினர். இந்த அணு நிலைத்தவை. இதற்கு தொடக்கமோ இறுதியோ கிடையாது. அணுக்களால் உருவான பொருட்களே அழிவடையும், இந்த அணு அழியாது என்பதே வைசேஷிகத்தின் கருத்து.

      வைசேஷிகத்தின் அணுக் கோட்பாடு கிரேக்க சிந்தனையில் இருந்து வந்ததாக சில தத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர். எந்த கருத்தும் அது தோன்றுவதற்கு சூழ்நிலை இல்லாமல் ஏற்படாது. இதனடிப்படையில் எந்த சூழ்நிலைமையினால் கிரேக்கத்தில் அணுக் கோட்பாடு உருவாக்கியதோ, அதே நிலைமை இங்கே உருவான போது வைசேஷிகம் போன்று நம் நாட்டு தத்துவங்களில் அணுக் கோட்பாடு தோன்றி இருக்கலாம் என்று கருதுவது தவறாகாது.

      பொருட்களின் தோற்றத்துக்கு அணுக்களின் தொகையே காரணமாக கூறப்படுகிறதே தவிர, அணுவில் உள்ளே, அந்த பொருளுக்கான காரணம் இருக்கிறது என்று வைசேஷிகம் கருதவில்லை. அதனால் வைசேஷிகத்தை அசத்காரியவாதம் என்று கூறப்படுகிறது.

      காரணத்தில் இருந்தே காரியம் நிகழ்கிறது என்பது சத்காரியவாதம். வைசேஷிகத்தில் அணுவானது பொருளுக்கு காரணமாக கூறப்படவில்லை. தோற்றத்துக்கு அடிப்படையான அணுவை தொகை அளவால் விளக்கப்படுகிறது. அணுவே காரணம் என்று கூறப்படவில்லை என்பதனால் வைசேஷிகம் சத்காரியத்துக்கு எதிரான அசத்காரியவாதம் என்று அழைக்கின்றனர். காரணத்தில் இல்லாதது காரியத்தில் காணப்படுவதால் அசத்காரியவாதமாக கூறப்படுகிறது. அதாவது எந்த அணுவிலும் பொருள் உருவாவதற்கான காரணம் அதில் அடங்கி இருக்கவில்லை.

இருந்தாலும் உலகப் படைப்புக்கு, உலகுக்கு அப்பாற்பட்ட சக்தியாக-தெய்வமாக எதையும் வைசேஷிகத் தத்துவம் கூறாததால், இதனை தொடக்கநிலை பொருள்முதல்வாதமாகக் கூறலாம். தொடக்கால வைசேஷியத்தில் தெய்வத்தைப் பற்றி கூறவில்லை, உலகப் படைப்புக்கு தெய்வத்தை காரணமாகக் காட்டவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      அறியப்படும் உலகம் உண்மை எனவும் இந்த புறநிலையாக இருக்கிற உலகை அறிய முடியும் என்று வைசேஷிகம் உறுதியாகக் கூறுகிறது. அறியப்படும் பிரபஞ்சமே உண்மையானது என்று கருதுவதினால் படைப்புக்கு வைசேஷிகம் தெய்வ சக்தியை கூறவில்லை. அதற்கு பதில் பொருள்தன்மை உடைய “அதிர்ஷ்டம்” என்பதையே, பிரபஞ்சத் தொடக்கத்துக்கு உரியதாகக் கூறியது.

அணுக்கள் பொருளாக மாறுவதற்கு “அதிர்ஷ்டம்” என்ற ஒன்றை தொடக்க கால வைசேஷியர்கள் கூறினர். காரணம் எதுவும் இல்லாது இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதே வைசேஷிகர் கொள்கை. அணுக்களை ஒன்றிணைப்பது “அதிர்ஷ்டம்”. இந்த அதிர்ஷ்டம் என்பது பிரம்மம், தெய்வம் போன்றதல்ல. அணுக்களை பொருளாக மாற்றுவதற்கு சேர்க்கையின் தொடக்கத்தையே “அதிர்ஷ்டம்” என்றனர். “அதிர்ஷ்டம்” என்றால் தொடக்கம் என்று பொருள்கொள்ளலாம். இந்த “அதிர்ஷ்டம்” என்பதை சாங்கியம் கூறுகிற சுபாவத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

      நெருப்பு மேல்நோக்கி எரிவதற்கும், காற்று நாலாபக்கம் வீசுவதற்கும், அணுக்கள் செயல்படத் தொடங்கியதற்கும் “அதிர்ஷ்டம்” தான் அடிப்படை என்கிறது (5:2.13) வைசிஷேக சூத்திரம்.

தொடக்கால சைவேஷிகத்தில் தெய்வம் படைப்புக்குக் காரணமாகக் கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் பிற்காலத்திய வைசேஷிக நூல்களிலும், விளக்கங்களிலும் தெய்வம் சேர்க்கப்பட்டுள்ளது.

      இது பற்றி கி.லக்ஷ்மணன் கூறுவதைப் பார்ப்போம்.

 

“வைசேடிகருள், காலத்தால் முற்பட்டோர் “அதிர்ஷ்டம்” என்ற தத்துவம் அணுக்களை இயக்குகின்றது எனக் கொண்டனரேனும், பின்வந்தோர் அணுக்களை ஒன்று சேர்த்து உலகை ஆக்குவோனும், பின் அவற்றைப் பிரிப்பதன் மூலம் உலகை அழிப்போனும் இறைவனே எனக் கொண்டனர்”

(இந்தியத் தத்துவஞானம்- பக்- 241)

      அனைத்து தொடக்கநிலை பொருள்முதல்வாதத் தத்துவத்துக்கு என்ன நேர்ந்ததோ அதுவே வைசேஷிகத்துக்கும் நேர்ந்தது. அதனால் இன்றைய நிலையில் உள்ள வைசேஷிக விளக்கங்கள் கலப்புற்றதாகவே காணப்படுகிறது.

      இந்த உலகம் ஏழு வகையினங்களால் (பதார்த்தங்களால்) ஆனதாக பிற்கால வைசேஷிகம் கருதுதியது.

      1) பொருள் (திரவியம்) 2) பண்பு (குணம்) 3) செயல் (கர்மம்) 4) பொதுவானது (சாமான்யம்) 5) சிறப்பானது (விசேஷம்) 6) இயல்பு (சமவயம்) 7) இன்மை (அபாவம்).

1) திரவியம் என்றால் பொருள். ஏழு வகையினங்களில் பொருள் முதன்மையானது. உயிருள்ள பொருள், உயிரற்றப் பொருள் ஆகிய அனைத்தையும் பொருள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் ஒன்பது கருப்பொருளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் பண்புகளும் அதற்கான செயல்களும் கருப்பொருளில் உள்ளடங்கி உள்ளது.

1) நிலம் (பிருதிவி) 2) நீர் (அப்பு) 3) நெருப்பு (தேஜஸ்) 4) காற்று (வாயு) 5) வானம் (ஆகாசம்) 6) காலம் 7) திசை (திக்கு) 8) ஆத்மா 9) மனம்.

      முதல் ஐந்தும் ஐந்து பூதங்களே ஆகும். இதில் முதல் நான்கு நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது, வானத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்று வைவேஷிகம் கருதியது. முதல் நான்கும் இயக்கங்களைக் கொண்டதாகவும் வானம் இயக்க மற்றது என்றும் கூறுகிறது. காலம், திசை ஆகிய இரண்டும் வானத்தைப் போன்றே முடிவற்றவை அழியாதவை. ஆத்மா என்பது பேருணர்வு. இந்தப் பேருணர்வு உடலின் பகுதியாக கருதப்படவில்லை. பிறப்புக்கு முன்பும் இறப்புக்குப் பின்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

கண்களால் அறிய முடியாதது ஆத்மா. ஆத்மா பல என்பதே வைசேஷியர்களின் முடிவு. ஆத்மாவோடு இணைகிற இன்பம்-துன்பம், சிறப்பு-இழிவு ஆகியவை நிலைத்தவை அல்ல. விடுதலை அடையும் போது ஆத்மாவிடம் எந்தப் பண்புகளும் இருப்பதில்லை என்பதே பிற்கால வைசேஷிகத்தின் ஆத்மா பற்றிய கருத்தாகும். பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஆத்மா என்பது அணுக் கொள்கைக்கு முரணாக இருக்கிறது.

அடுத்து மனம். அனைத்து ஆத்மாவுக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறது. மனம் அறிதலுக்கான கருவியாக கருதினர். மனத்தின் மூலமே பொருட்களுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது மேலும் பொருட்கள்  அறியப்படுகிறது.

2) குணம் என்பது பொருட்களின் பண்பு ஆகும். பொருளுக்கான பண்புகளாக சிலவற்றைப் பார்ப்போம். நிறம், சுவை, மணம், ஊறு, ஓசை, எண், அளவு, தனித்திருத்தல், சேர்தல், பிரிதல், சேய்மை, அண்மை, அறிவு, இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, முயற்சி, மந்தம், நீர்மை, தீமை என்கிற இவை அனைத்தும் பொருட்களின் பண்புகளாகும்.

3) செயல் என்பது பொருளின் இயக்கம். அந்த இயக்கம் ஐந்து வகையினதாகும். மேல்நோக்கிய இயக்கம், கீழ்நோக்கிய இயக்கம், சுருங்குதல், விரிதல், இடப்பெயர்வு ஆகிய இவைகளே ஐந்து இயக்க வகைகள் ஆகும்.

4) பொதுவானது (சாமான்யம்) என்பது பொருட்களின் பொதுத்தன்மை ஆகும். அதாவது பல்வேறு பொருட்களுக்கு இடையே காணப்படும், குறிப்பிட்ட ஒத்த தன்மையைக் குறிக்கிறது. சிவப்பு, கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என்பது தனிப்பட்ட நிறங்கள். அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல் நிறம். இங்கே நிறம் என்பது பொதவானது. பொன் மீன், நட்சத்திர மீன் என்பது குறிப்பானது, மீன்கள் என்பது பொதுத்தன்மை ஆகும்.

5) சிறப்பானது (விசேஷம்) என்பது பல்வேறு பொருட்களுக்கு இடையே தனித்து காணப்படும் தன்மையைக் குறிக்கிறது. நிறம் என்பது பொதுவானது, சிவப்பு, கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என்பது குறிப்பானது-சிறப்பானது. அதே போல் மீன்கள் என்பது பொதுவானது. பொன் மீன், நட்சத்திர மீன் என்பது சிறப்பானது. ஒவ்வொரு பொருளுக்கும் உரிய குறிப்பானதையே சிறப்பானது என்று கூறப்படுகிறது. மனிதன் என்பது பொதுவானது, மார்க்ஸ், லெனின், பெரியார், அம்பேத்கர் என்பது சிறப்பானது.

6) இயல்பு (சமவயம்) என்பது “பிரிக்க முடியாது இணைந்தே” இருப்பதைக் குறிக்கிறது. நெருப்போடு வெப்பம் இணைந்திருப்பது இயல்பு, நீரோடு குளிர்ச்சி இணைந்திருப்பது இயல்பு. புயல் என்பதில் காற்றுக்கும் அதன் வேகத்துக்கும் உள்ள இணைப்பு இயல்பானது.

7) இன்மை (அபாவம்)  என்பது எதிர்மறை சொல். நான்கு வகையான இன்மை கூறப்படுகிறது. முன் இன்மை (பிராக அபாவம்), பின் இன்மை (பிரத்துவம்ச அபாவம்), நெருங்கிய இன்மை (அன்யோன்ய அபாவம்), முற்றிலும் இன்மை (அத்யந்த அபாவம்). 

ஒரு பொருள் உருவாக்காத போது கூறப்படுவதே முன்இன்மை. மரம் இருக்கிறது, அதனை செய்வதற்கு தச்சர் இருக்கிறார், தச்சுக்குத் தேவையான கருவிகளும் இருக்கிறது. நாற்காலி இல்லை என்று நாற்காலி செய்து முடிக்காதவரை கூறுவதே முன் இன்மை என்று கூறப்படுகிறது. நாற்காலி செய்யப்பட்டவுடன் முன் இன்மை முடிவுக்கு வருகிறது.

பின் இன்மை என்பது இருப்பது இல்லாது போதல், அதாவது அழிந்து போதல். புயலுக்கு முன் இங்கே ஒரு பெரிய மரம் இருந்தது. புயலுக்குப் பின் மரம் இல்லாது போனது, இந்த இல்லாததையே பின் இன்மை என்று கூறப்படுகிறது.

நெருங்கிய இன்மை என்பது பொருட்களின் வேறுபாட்டைக் குறிக்கும். குரங்கு என்பது மனிதன் அல்ல, மனிதன் மாடு அல்ல, மாடு ஆடு அல்ல, ஆடு வீடு அல்ல, வீடு அலுவலகம் அல்ல என்பது போன்று உள்ளவற்றைப் பிரித்தறிவதாகும்.

      இதுவரை ஏழு வகையினங்களை சுருக்கமாகப் பார்த்தோம்.

      சைவேஷிகத் தத்துவத்தின் அடிப்படை அணுக்கோட்பாடாகும் என்பதை அறிந்தோம். அனைத்தும் அணுக்களால் ஆனது, அனைத்தையும் பிரிக்கலாம், பிளக்கலாம், ஆனால்  அணுவைப் பிளக்க முடியாது. இதுவே அன்றைய அணுக்கோட்பாட்டின் அடிப்படை. இன்றைய விஞ்ஞானம் அணுவை பிளந்து காட்டி உள்ளது. இதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவர்கள் அறிந்திருக்க முடியாது. இருந்தாலும் பிரபஞ்சப் படைப்புக்கு பொருள்சாரா ஒரு சக்தியை கூறாது அணுவைக் கூறியது, அன்றைய நிலையில் அது போற்றத் தக்கதே. அணுவை இன்று பிளந்தாலும் அதன் பொருள் தன்மை மறைந்திடவில்லை, அணுவை ஒன்றுமில்லாது ஆக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      19ஆம் நூற்றாண்டு இறுதியில் அணுக்கள் பிளவுபடக்கூடியது என்று விஞ்ஞானத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் பொருட்களின் அடிப்படை அணுக்கள் என்ற கருத்து கேள்விக்கு உள்ளானது. அந்த நேரத்தில் சில கருத்துமுதல்வாதிகள் பொருளே மறைந்து போய்விட்டது, அதனால் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் தவறு என்பதை நிரூபித்துவிட்டது என்று கூக்குரல் இட்டனர்.

பருப்பொருள் மறைந்திடவில்லை, பருப்பொருளைப் பற்றி நாம் எந்தளவுக்கு தெரிந்திருந்தோமோ அந்த எல்லை தான் மறைந்தது என்று லெனின் கூறினார்.

 

““பருப்பொருள் மறைந்து விடுகிறது” என்றால் நாம் பருப்பொருளைப் பற்றி இதுவரை அறிந்திருக்கின்ற எல்லைகள் மறைந்து விடுகின்றன, நம் அறிவு மேலும் ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள், பருப்பொருளின் குணாம்சங்களும் (ஊடுருவ முடியாத் தன்மை, சடத்துவம், திண்மை, இதரவை) மறைந்து கொண்டிருக்கின்றன, முன்னர் அறுதியானவையாக, மாறாநிலை உடையவையாக, முதன்மையாகத் தோன்றியவை தற்பொழுது சார்பு நிலையானவையாக, பாருப்பொருளின் சில நிலைகளுக்கு மட்டுமே குறியடையாளமானவையாக தம்மை வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் பருப்பொருளின் ஒற்றை “குணாம்சம்” புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற குணாம்சமாகும், அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது”

(பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

      அணு பிளக்கப்பட்டதை அறிந்த பிறகு லெனின் பருப்பொருளைப் பற்றிய கருத்தை நுட்பமாக மேம்படுத்தினார். மனிதனுக்குப் புறத்தே இருப்பது பருப்பொருள். புறநிலையானது அனைத்தும் பருப்பொருள் என்று லெனின் விளக்கம் கொடுத்தார். இது போன்று ஒவ்வொரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கம் கொடுக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

      பிற்காலத்தில் ஆத்மாவை வைசேஷிகத்தில் சேர்க்கப்பட்டாலும் தொடக்கக் கால வைசேஷிகத்தில் ஆன்மீகக் கலப்பற்றதாகவே இருந்துள்ளது என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். ஹிரியண்ணா என்கிற அறிஞர் கூறுவதைப் பார்ப்போம்.

 

“இக் (வைசேஷிகத்தில்) கொள்கையைப் பற்றிப் பேசும்போது இந்தத் தர்சனத்தில் கடவுள் பற்றிய கருத்தைக் குறிப்பிடவேண்டும். இதுபற்றிய குறிப்புக்கள் இந்தத் தர்சனத்தில் இருக்கின்றன என்று உரையாசிரியர்கள் கூறினாலும், அவை அங்கே காணப்பெறவில்லை. கடவுளைப் பற்றிக் கௌதமர் தற்செயலாக மட்டுமே குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் நியாய தர்சனம் கடவுள் கொள்கை உடையதாயிருந்ததா என்பதைப் பற்றிச் சிலர் ஐயங் கொள்கின்றனர்”

(இந்தியத் தத்துவம்- பக்-74)

 

வைசேஷிகத்தை மட்டும் குறிப்பிடாது நியாயத்தையும் சேர்த்தே ஹிரியண்ணா கூறியுள்ளார். வைசேஷிகத்தை ஆன்மீகமாக அல்லாது, அணுக்கோட்பாட்டின் அடிப்படையாகக் கொண்ட தொடக்க நிலை பொருள்முதல்வாதத் தத்துவமாகத்தான் கூறிட முடியும். 

 

      ஆத்மாவையும், கடவுளையும் ஏற்றுக் கொண்ட பிற்கால வைசேஷிகம், இந்த உலகம் துன்பயமானதாக கருதி, இதனை விடுத்து ஆத்ம விடுதலைப் பற்றி பேசுகிறது. வைசேஷகரின் முக்தி பற்றிய கருத்தை அடுத்தப் பகுதியான நியாயத்தில் காண்போம். ஏன் என்றால் முக்தி பற்றிய ஒத்த கருத்தையே பிற்கால சைவேஷிக தத்துவமும் நியாயத் தத்துவமும் கூறுகிறது.

 

வைசேஷிகத்தில் ஆன்மீக கலப்பும், கடவுள் கலப்பும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என்ன? அதற்கு முக்கியமானக் காரணம், நம் நாட்டுத் தத்துவங்களில் பெரும்பான்மையான தத்துவங்கள் ஆன்மீகத்துக்கு மாறாக, தொடக்கநிலை பொருள்முதல்வாதமாக இருப்பதே ஆகும்.

 

அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள் நமது வேலையை நாம் செய்வோம்.

 

இந்திய தொடக்கநிலைப் பொருள்முதல்வாத வழியில் மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சென்று அடைவோம்.

பொருளடக்கம்

No comments:

Post a Comment