Sunday 31 July 2022

எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” 01

 

(எங்கெல்சின் இரண்டு முன்னுரைகள் மற்றும்

முதல் அத்தியாயமான ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தய கட்டங்கள்)

 (“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

73 வது வார வகுப்பு – 31-07-2022)

 எங்கெல்சின் இரண்டு முன்னுரைகள்

 லூயிஸ் ஹென்றி மார்கன் 1877 ஆம் ஆண்டு “பண்டைய சமூகம்” (Ancient Society) என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். வட அமெரிக்காவில் உள்ள பழங்குடிகளிடம் நேரடியாக பழகி இந்த நூலை எழுதியுள்ளார்.

 மார்கனின் நூலின் அடிப்படையில். மார்க்ஸ் தனி நூல் எழுதுவதற்கான குறிப்புகளை தயாரித்திருந்தார். ஆனால் அந்நூல் எழுதப்படவில்லை. எங்கெல்ஸ் மார்க்சின் இந்தக் குறிப்புகளை “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

 அரசு தோன்றிய பின்பே தனிச்சொத்துடைமை தோற்றம் பெற்றதாக மார்கன் கருதினார், தனிச் சொத்து முறை காப்பாற்றுவதற்கு அரசு தேவைப்படுகிறது என்பதின் அடிப்படையில் மார்க்ஸ் அரசு, தனிச் சொத்துடைமைக்குப் பிறகு தோன்றியது என்றார். தனிச்சொத்து ஏற்பட்ட பிறகு சொத்துடையவர்கள் சொத்தில்லாதவர்கள் ஆகியோரிடையே ஏற்பட்ட பகையை அதாவது வர்க்க முரணை கட்டுப்படுத்துவதற்கு அரசு தேவைப்பட்டது.

 மார்க்சின் பொருள்முதல்வாதத்தை மார்கன் அறிந்திருக்கவில்லை, இருந்தாலும் வட அமெரிக்காவில் அவர் நிகழ்த்திய ஆய்வு பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. மார்க்ஸ் 40 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த பொருள்முதல்வாதத்தை, மார்கன் தன்வழியில் கண்டடைந்தார்.

  “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை 1884ஆம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதி முடித்தார்.

 இந்தியாவை அணுகுவதற்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இந்தியாவைப் பற்றியும், குறிப்பாக தமிழர்களின் உறவு முறைகளைப் பற்றியும் இந்நூலில் எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். இந்த நூல் படிப்பது சிரமம் என்பது உண்மை தான், இருந்தாலும் படித்தறிய வேண்டிய நூல்.

 இந்நூலை படித்தறிவதற்கு உதவிடும் வகையில் அறிமுகத்தை வழங்குவதே இந்த வகுப்பின் நோக்கமாகும். நூலின் செல்வழியிலே செல்லாம். இந்நூலைப் படிப்பதற்கு எங்கெல்ஸ் எழுதிய இரண்டு முன்னுரைகள் உதவிடும்.

 முதற் பதிப்புக்கான முன்னுரை 1884ல் எழுதப்பட்டது. இம் முன்னுரையின் தொடக்கத்திலேயே இந்நூலின் நோக்கத்தையும் மார்கனைப் பற்றியும் எங்கெல்ஸ் பதிவு செய்கிறார்.

 

“ஓர் அர்த்தத்தில், பின்வரும் அத்தியாயங்கள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே. வரலாற்றைப் பற்றி மார்க்ஸ் தன்னுடைய – சில வரம்புகளுக்குட்பட்டு எம்முடைய என்று நான் சொல்லக்கூடும்- பொருள்முதல்வாத ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய விளைவுகளை மக்கள் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் கண்டு பிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார். அநாகரிகத்தையும் நாகரிகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது பிரதான விஷயங்களில் மார்க்ஸ் எந்த முடிவுகளை வந்தடைந்தாரோ, அதே முடிவுகளுக்கு மார்கனும் வந்தடைந்தார்.”

(பக்கம்- 1)

 உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும் என்பதையே பொருள்முதல்வாதம் கூறுகிறது.  இந்த மறுவுற்பத்தி இரு வகைகளில் நடைபெறுவதாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற சாதனங்களை உற்பத்தி செய்வது ஒன்று. மற்றொன்று, மனிதர்களையே உற்பத்தி செய்வதாகும். அதாவது மனித குலத்தைப் பெருக்குவதாகும்.

 

“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி, இறுதிக்கும் இறுதியான நிலையில் – உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாறற்றில் தீர்மானகரமான காரணியாகும்.” (பக்கம்- 2)

       மறுவுற்பத்தி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மறுவுற்பத்தி என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போபம். விவசாயிகளால் அரிசி விளைவிக்கப்படுகிறது. சமூகத்தில் உள்ள மக்களால் அவை உணவாக உட்கொள்ளப்படுகிறது. விளைவித்த அரிசி முழுமையாக பயன்படுத்தப்பட்டுவிடுகிறது. அடுத்துத் தேவைப்படுகிற உணவுத் தேவைக்கு அரிசி மீண்டும் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்குப் பெயர்தான் மறுவுற்பத்தி. இதே போலத்தான் அனைத்துக்கும், பஸ் உற்பத்தியாக இருந்தாலும் சரி, உடை உற்பத்தியாக இருந்தாலும் சரி, உறைவிடம் உற்பத்தியாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் மறுவுற்பத்தி அவசியமே ஆகும்.

       அதே போல எங்கெல்ஸ் மனித உற்பத்தியிலும் காணப்படும் மறுவுற்பத்தியையும் சேர்த்துக் கூறியுள்ளார்.

 வாழ்க்கைக்குத் தேவையானப் பொருளை மறுவுற்பத்தி செய்ய வில்லை என்றால் சமூகம் வாழ்வதற்கு வழியில்லாமல் அழிந்துவிடும். அதே போல மனிதனின் மறுவுற்பத்தி ஏற்படவில்லை என்றால் மனிதக்குலம் அழிந்து போகும். அதனால் மறுவுற்பத்தி மிகமிக அவசியமான ஒன்றாகும்.

 மக்கள் எந்த சமூக அமைப்பின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களை எது கட்டுப்படுத்துகிறது என்பதை அறிவதற்கு இவ்விரண்டையும் அறிந்து கொள்வது அவசியமாகும். உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் மறு பக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

 எந்த அளவுக்கு உழைப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கிறதோ, எந்த அளவுக்கு உழைப்பின் உற்பத்தியளவு குறுகியதாகவும் அதன் காரணமாகச் சமூகத்தின் செல்வம் குறுகியதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு, அந்த சமூக அமைப்பின் மீது குலமரபு உறவுகள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். அதாவது மிகமிக குறைவான உற்பத்தியளவு இருக்கின்ற இடங்களில் குலமரபு உறவுகள் காணப்படும். குலமரபு உறவுக்கு குறைந் அளவு உற்பத்தி அடிப்படையாக இருக்கிறது.

 இந்த நிலைமை அப்படியே இருந்துவிடுவதில்லை, இந்த உற்பத்தி முறையில் படிப்படியாக உழைப்பின் உற்பத்தித்திறன் மேன்மேலும் வளர்கிறது; புதியப்புதிய மேம்பட்ட கருவிகள் பயன்படுத்தப்படும் போது அந்த குலமரபுக் குழுவுக்கு வழக்கமான தேவைக்கு மேல் உபரி உற்பத்தி ஏற்படுகிறது. இந்த உபரி உற்பத்தி தனிச்சொத்தை தோற்றுவிக்கிறது.

 இந்த தனிச்சொத்து உடையர்வகளிடம் செல்வம் சேகரமாவதும், மற்றவர்கள் உழைப்புச் சக்தியை செலுத்துபவராகவும் மாறுவதின் மூலம் அவர்களுக்குள் வர்க்க முரண்பாடுகள் வளர்கிறது. இந்த முரண்பாட்டு நிலைமை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச் செல்கிறது. குலமரபுக் கட்டுக்கோப்புகள் உடைகிறது. அந்தப் பழைய சமூகத்தின் இடத்தில் அரசை மையமாகக் கொண்ட ஒரு புதிய சமூகம் தோன்றுகிறது. இந்தப் புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இந்தச் சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களும் சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த வரலாற்றுக்கும் உள்ளடக்கமாக இருக்கின்றன.

 “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

 அறிக்கை எழுதப்பட்ட 1847ஆம் ஆண்டின் போது எழுத்தில் பதிவாகாத வரலாற்றுக்கு முந்தைய சமூகம் இருந்ததை அறிந்திருக்கவில்லை. அதனால் தான் அறிக்கையில் சமூகத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகும் என்று கூறப்பட்டுள்ளது. எழுதப்பட்ட வரலாற்றுக்கு முன்பான சமூகம் பற்றி பின்னாட்களில் அறிந்து கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் எங்கெல்ஸ் 1888ஆம் ஆண்டு அறிக்கையில் ஒர் அடிக்குறிப்பு கொடுத்துள்ளார். அதில் சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்பதற்கு, எழுதப்பட்ட சமூக வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு, என்று திருத்தம் கொடுத்துள்ளார். பழங்குடிகளைப் பற்றிய ஆய்வுகள் அறிக்கைக்கு பிற்காலங்களில் வளர்ச்சி அடைந்துள்ளதை கணக்கில் கொண்டு எங்கெல்ஸ் இந்த மாற்றத்தை அறிக்கையில் சேர்த்தார்.

       எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்த நூல், எழுதப்படாத வரலாற்றைப் பற்றி பேசுகிறது.

       எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைக்கு செல்வோம்.

 

முதல் முன்னுரையின் இறுதியில், மார்கனின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டதையும், தானே எழுதியதையும் பிரித்தறிவது பற்றி எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். கிரீஸ், ரோமாபுரி ஆகியவற்றைப் பற்றி மார்கன் கூறியதுடன் தான் சேகரித்ததையும் பயன்படுத்தியுள்ளார். ஜெர்மானியர்களைப் பற்றி மார்கன் கூறியவை இரண்டாம் தரமான ஆதாரங்களேயாகும், ஜெர்மானியர்களைப் பற்றி கூறிய பகுதிகள் பெரும்பாலும் தன்னுடையதே என்கிறார் எங்கெல்ஸ். மார்கன் பயன்படுத்திய பொருளாதார வகையான வாதங்கள் போதுமானதாக இல்லாததால், புதியதாக தானே விரித்துரைத்திருப்பதாக கூறியுள்ளார். அதேபோது மார்கனை மேற்கோளாக சுட்டப்படாத பகுதிகளுக்கு தானே பொறுப்பு என்று கூறி முன்னுரையை முடித்துள்ளார்.

 

1891ஆம் ஆண்டு நான்காம் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரை சற்று பெரியதாகும். இந்நூலை வாசிப்பதற்கு இம்முன்னுரை வழிகாட்டியாக இருக்கிறது.

 

1860 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை குடுப்பத்தைப் பற்றிய வரலாறு என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை.

 

“குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்தநூல் வெளிவரும் வரை மோசஸ் எழுதிய நூல்களில் (பழைய ஏற்பாடு) காணப்படும், தந்தைவழிக் குடும்பத்தின் வடிவமே மிகத் தொன்மையான வடிவமாகக் கருதப்பட்டது. பலதார மணம், வரையறையற்ற பாலுறவு நிலவிய காலம் இருந்திருக்கலாம் என்று ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்திய – திபேத் பகுதியில் பல கணவர் மணமும் காணப்பட்டதை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். இந்தியாவைப் பற்றி எங்கெல்ஸ் இந்நூலில் பேசியிருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கூறுகின்றனர். உண்மையில் மார்க்சும் எங்கெல்சும் இந்தியாவை அறிந்தே உள்ளனர்.

 

இந்த நூலில் எங்கெல்ஸ் இந்தியாபைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பேசியதை முதலில் அறிந்து கொண்டு அதன் வழியில் பிறவற்றை நாம் ஆராய வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலோடு நாம் நின்று போக முடியாது. இந்த நூல் காட்டுகின்ற வழிகாட்டுதலில் மார்க்சிய அறிஞர்கள் புதியதாக கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் எழுத வேண்டும். இதற்கு இந்த நூல் வழியாட்டியாக இருப்பதனால், இந்நூலைப் படித்தறிய வேண்டியது அவசியமாகிறது.

 

இந்தநூலை படிக்கும் புதியவர்கள் பல திகைப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற உண்மையை முதலில் தெரிவிக்க வேண்டும். எந்த உறவு புனிதமானது என்பதை இந்நூல் ஆராயவில்லை. குடும்ப உறவின் பரிணாம வளர்ச்சியையே ஆராய்கிறது. இந்நூலை படிக்கின்ற இருபிரிவினர் தங்களுக்கு சாதகமானதை மட்டும் முன்வைக்கின்றனர். அது தவறானதாகும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன் தெளிவாக இந்நூலைப் படித்தறிய வேண்டும்.

 

ஒருதார மணத்தின் புனிதத் தன்மையில் தாக்கம் பெற்றவர்களும், முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் சோரம்போகும் பாலியல் கண்ணோட்டத்தின் தாக்கம் பெற்றவர்களும் எடுக்கின்ற முடிவுகளுக்கு இந்த நூல் ஆதாரத்தைத் தரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப உறவுகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்து எங்கெல்ஸ் எடுக்கின்ற முடிவுகள் இவ்விருவரின் முடிவுகளுக்கு மாறாகவே இருக்கிறது.

 

அதே போல் பல்வேறு பாலுறவு முறைகளை இந்நூல் பேசுவதைக் கண்டு திகைக்காமல், அந்த உறவுகள் தோன்றியதின் பின்னணியை புரிந்து கொள்ளவதற்கு முயற்சிக்க வேண்டும்.

 

ஏடறிந்த வரலாற்றுக்கு அதாவது எழுதப்பட்ட வரலாற்றுக்கு முன்பான திருமணமுறைகளை ஆய்வு செய்த போது தந்தைவழிக் குடும்பம் தோன்றுவதற்கு முன்பு பல மண முறைகளைக் கடந்து தான் இந்நிலையை அடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 

பண்டையக் காலத்தைச் சேர்ந்த சில மக்களிடையிலும், தற்காலத்தில் காணப்படும் சில காட்டுமிராண்டி நிலையில் உள்ள மக்களிடையிலும் உறவுகள் தந்தைவழியில் இல்லாது தாய்வழியாகவே காணப்படுகிறது.

 

குடும்பத்தின் வரலாற்றை அறிவதற்கு, 1861ல் பாஹொஃபென் (Bachofen) எழுதிய “தாய் உரிமை” என்ற நூலில் கொடுத்ததை எங்கெல்ஸ் தொகுத்தளிக்கிறார்.

 

“1) ஆரம்பத்தில் மனிதகுலம் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் தான் இருந்தது; இந்நிலைக்கு ஆசிரியர் பொதுமகளிர் முறை (hetaerism) என்று பெயரிட்டு இருக்கிறார். இந்தப் பெயர் முற்றிலும் பொருத்தமானது என்று கூற முடியாது;

 

2) இந்த வரைமுறையற்ற புணர்ச்சி காரணமாக யார் தந்தை என்று நிச்சயிக்க முடியவில்லை; ஆகவே மரபு வழியைத் தாய்வழியாகவே - தாய் உரிமைப் படிதான் - கணக்கிட முடியும்; மேலும் ஆரம்பத்தில் பண்டைக் கால மக்கள் எல்லோரிடமும் இந்த நிலைதான் இருந்தது;

 

3) எனவே தாய்மார்கள் என்ற முறையில், இளம் தலைமுறையினருடைய பெற்றோர்கள் என்று பெண்கள் மட்டுமே திட்டமாக நிச்சயிக்கப்பட முடிந்த காரணத்தால் அவர்கள் மிகவும் உயர்ந்த சலுகையுடனும் மரியாதையுடனும் நடத்தப் பட்டார்கள்; பாஹொஃபெனுடைய கருத்தின்படி பெண்களின் முழுமையான ஆட்சி (gynaecocracy) ஏற்படுகின்ற அளவுக்கு அந்த மரியாதை உயர்ந்திருந்தது

 

4) ஒரு பெண் ஓர் ஆணுக்கு மட்டுமே உரியவள் என்கிற ஒருதார மணத்துக்கு மாறிச் சென்ற நிலை ஆதிக்கால மதக் கட்டளையை மீறியதையே குறித்தது (அதாவது. ஒரு பெண் மீது மற்ற ஆண்களுக்கும் உரிமையுண்டு என்னும் பண்டைக்காலப் பரம்பரை உரிமையை மீறியதைத் தான் இது குறித்தது); இந்த மதக் கட்டளையை மீறியதற்குப் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும். அல்லது அதைப் பொறுத்துக் கொண்டு அனுமதி கொடுப்பதற்குத் தட்சிணை தர வேண்டும், அதாவது அந்தப் பெண்ணைக் குறிப்பிட்ட காலத்துக்கு மற்ற ஆண்கள் அனுபவிப்பதற்கு ஒப்படைக்க வேண்டும்.”

(பக்கம்6-7)

 

இது போன்ற உறவு முறைகள் இந்திய புராண, இதிகாசங்களில் காணப்படுவதை “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற இந்த நூலில் காணப்படும் ஆய்வுமுறையின் வழியில் ஆராய வேண்டும். மகாபாரதத்தில் காணப்படும் திரௌபதியை மணந்த ஐவர்களின் கதையை அந்த காவியக் கண்ணோட்டத்தில் அணுகாமல், திபெத்தில் இன்றுவரையிலும் காணப்படுகின்ற பலகணவர் முறையின் மூலம் விளக்கம் கொடுக்க வேண்டும். காவியத்தில் ஒருதார மண புனிதக் கண்ணோத்தில் கூறப்பட்டுள்ளது. அக்கதையின் களம் பல கணவர் மணமுறைச் சமூகத்தில் தோன்றியதாக நாம் விளக்கம் கொடுக்க வேண்டும்.

 

ஒருதார மணம் தோன்றுவதற்கு பல ஆயிரமாண்டுக்கு முன்பாக, ஒர் ஆண், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடனும், ஒரு பெண், ஒன்று மேற்பட்ட ஆண்களுடனும் பாலுறவு கொண்டனர். இன்றைய கண்ணோட்டத்தில் பார்த்தால் இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால் அன்றைக்கு இதுவே வழக்கமாக இருந்தது.

 

இந்த வழக்கம் மறைகின்ற பொழுது பழையதின் எச்சங்களை விட்டுச் சென்றுள்ளது. அவை வரம்புக்குட்பட்ட ஒப்படைப்பு என்கிற வடிவத்தில் காணப்பட்டது.

 

      ஆதி காலத்தில் மரபு வழியை தாய் வழியாகத்தான் கணக்கிட முடிந்தது. அன்றைய நிலையில் இந்த குழந்தைக்கு தந்தை இவர் என்று அறுதியிட்டுக் கூறிட முடியவில்லை. எந்த ஆணுடன் உறவு கொண்டதால் இந்தக் குழந்தை பிறந்தது என்று அவ்வளவு எளிதாகக் கூறிட முடியாது.

 

      இந்தக் குழந்தையை பெற்றவள் இவள்தான் என்று தாயை மட்டுமே நிச்சயத்துக் குறிப்பிடக்கூடியதாய் அன்றைய நிலை இருந்தது. இதனடிப்படையில் பெண்களுக்கு அன்றைய சமூகத்தில் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டது. அதனை தாய் வழி சமூகம் என்று அழைக்கப்படுகிறது.

எங்கெல்ஸ் அடுத்து ஜா.பெ.மாக்லென்னான் என்பரின் கருத்துக்களை குறிப்பிடுகிறார். இவர் நவீன காலத்தில் காணப்படுகின்ற திருமணத்தில் உள்ள சடங்கினைக் குறிப்பிட்டு, இது பழைய கால வழக்கமான பெண்ணை தூக்கிச் சென்று திருமணம் செய்வதுடன் இணைத்துக்காட்டுகிறார்.

 

      ஆதிகாலத்தில் தன் இனக்குழுவில் பெண் கிடைத்திடாத போது அதாவது பெண்கள் பற்றாகுறையாக இருந்த போது, பிற இனக்குழுவுக்குள் சென்று அங்குள்ள பெண்களை பலாத்காரமாக கடத்திச் சென்று மனைவிகளாக ஆக்கினர். இதனை 'களவு முறைத் திருமணம்'' என்று அழைக்கப்பட்டது. இம்முறை வழக்கொழிந்து போனப் பின்பு பாவனையாகத் தொடர்கிறது.

 

நாகரிகமடைந்த மக்களிடையே நடைபெறும் திருமணத்தின் போது, மணமகன் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ சென்று மணப்பெண்ணை அவர்களின் உறவினர்களிடம் இருந்து பலாத்காரமாகத் தூக்கி வருவதாகப் பாவனையாக செய்து காட்டுவர். இது பழைய வழக்கத்தினை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

 

தாயுரிமை மறைந்த பிறகு ஆண்வழி ரத்த உறவுமுறை உள்ள மக்களிடையே தான் பெண்களை கவர்ந்து சென்று மணக்கும் வழக்கம் ஏற்பட்டது.

 

நம் நாட்டில் உள்ள வைதீக திருமண முறையில் காணப்படும் ராட்சத திருமணத்தை இங்கே நினைவு கூறலாம். தமிழ் திருமண முறையில் இத்தகைய கவர்ந்து திருமணம் செய்வதை, வவ்விக் கொளல் என்று கூறப்படுகிறது. இம்முறையை பொருந்தாத் திருமணமாக தொல்காப்பியம் கூறுகிறது.

 

ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த ஆண் தனது சொந்த குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது அகமண முறை என்றும், ஒர் ஆண் பிற குழுவில் உள்ள பெண்ணை மணப்பதும், ஒரு பெண் பிற குழுவைச் சார்ந்த ஆணை மணப்பதும் புறமண முறை என்று அழைக்கப்படுகிறது.

 

குழு மணம் என்பது வெறும் கற்பனை என்றே மாக்லென்னான் போன்றோர்களால் கருதப்பட்டது. ஆனால் வரலாறு குழு மணத்தைக் (Communal Marriage) கடந்து தான் வந்துள்ளது.

 

வரலாறு கண்ட குழு மணம் முறையைப் பற்றி:-

“பலதார மணம், பல கணவர் மணம், ஒரு தார மணம் என்ற மூன்று மண வடிவங்கள் தான் மாக்லென்னானுக்குத் தெரியும். ஆனால் ஒரு தடவை இதன் மீது கவனம் திருப்பப்பட்டதும், வளர்ச்சியில்லாத மக்கள் இனங்களில் ஆண்களின் குழு ஒன்று, பெண்களின் ஒரு குழுவைப் பொதுவில் அனுபவிக்கின்ற மண வடிவங்கள் இருக்கின்றன என்ற உண்மைக்கு மேன்மேலும் அதிகமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.”

(பக்கம் - 14)

 

இதனைத் தொடர்ந்து மார்கனிடம் எங்கெல்ஸ் வருகிறார். இதை எங்கெல்ஸ் எவ்வாறு கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

 

“இந்தக் கட்டத்தில் தான் மார்கன் எழுதிய முக்கியமான நூலாகிய பண்டைக்கால சமூகம் (1877) பிரவேசிக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டுதான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. மார்கன் 1871 ஆம் ஆண்டில் எதைத் தெளிவில்லாமல் ஊகித்தாரோ அது இங்கே முழுத் தெளிவுடன் வளர்க்கப்பட்டிருக்கிறது.”

(பக்கம் - 17)

 

தாய் உரிமை வடிவமே ஆதி வடிவம், இதற்கு பிறகு தான் தந்தை உரிமை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக வளர்ந்தன என்று மார்கன் நிறுவுகிறார்.

 

“மார்கன் இத்துடன் திருப்தியடைந்து விடவில்லை. அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட துறையில் இரண்டாவது நிர்ணயமான முன்னேற்றத்தைச் சாதிப்பதற்கு அமெரிக்க செவ்விந்தியர்களின் குலங்கள் ஒரு சாதனமாக அவருக்குப் பயன்பட்டன. தாய் உரிமை அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்த குலங்களே ஆதி வடிவம், அதிலிருந்து தான் பின்னால் தந்தை உரிமையை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் வளர்ந்தன என்று மார்கன் கண்டுபிடித்தார். இப்படித் தந்தை உரிமை அடிப்படையில் அமைந்தவையே பண்டைக் கால நாகரிகத்தைச் சேர்ந்த மக்களிடையே நாம் பார்க்கும் குலங்களாகும். முந்திய வரலாற்று ஆசிரியர்கள் அனைவருக்கும் கிரேக்க, ரோமானியக் குலங்கள் ஒரு புதிராக இருந்தன; ஆனால் அவை இப்பொழுது அமெரிக்க செவ்விந்தியக் குலங்களைக் கொண்டு விளக்கப்பட்டன. ஆக, பூர்விக சமூகத்தின் வரலாறு முழுவதற்கும் ஒரு புதிய அடிப்படை கண்டுபிடிக்கப்பட்டது.”

(பக்கம் - 18)

 

பரிணாம வளர்ச்சியைப் பற்றி டார்வின் கண்டுபிடித்தது, உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கண்டுபிடித்தது ஆகியவற்றிற்கு இணையாக ஆதிகாலத்தில் தாய் உரிமை குலம் இருந்தது என்ற கண்டுபிடிப்பை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

 

“பரிணாம வளர்ச்சியைப் பற்றி டார்வின் கண்டுபிடித்த கோட்பாடு (theory) உயிரியல் துறையில் எவ்வளவு முக்கியமானதோ, உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கண்டுபிடித்த கோட்பாடு (theory) அரசியல் பொருளாதாரத் துறையில் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு நாகரிகமடைந்த மக்களினங்களின் தந்தை உரிமைக் குலத்துக்குப் பூர்வாங்கமான கட்டமாக ஆதிகாலத் தாய் உரிமைக் குலம் இருந்தது என்ற மறு கண்டுபிடிப்பும் பூர்விக சமூகத்தின் வரலாற்றுத் துறையில் அதே முக்கியத்துவத்தைக் கொண்டதாகும். அதைக் கொண்டு குடும்பத்தைப் பற்றிய ஒரு வரலாற்றை முதல் தடவையாக மார்கன் உருவரையில் காட்ட முடிந்தது. தற்சமயம் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனுமதிக்கின்ற அளவுக்கு, குறைந்தபட்சம் மூலச்சிறப்பான வளர்ச்சிக் கட்டங்களாவது மொத்தத்தில் அந்த வரலாற்றில் பூர்வாங்கமாக நிறுவப்பட்டுள்ளன. பூர்விக சமூகத்தின் வரலாற்றை விளக்குவதில் இது ஒரு புதிய சகாப்தத்தைத் துவக்குகிறது என்பது தெளிவு.

 

இந்த விஞ்ஞானம் தாய் உரிமைக் குலம் என்ற அச்சாணியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது; அது கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, நாம் எந்தத் திசையில் ஆராய்ச்சிகளைச் செலுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது: எதை ஆராய வேண்டும், ஆராய்ச்சியின் முடிவுகளை எப்படி வகைப்படுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது. எனவே மார்கனுடைய நூல் வெளிவருவதற்கு முன்பிருந்ததைக் காட்டிலும் தற்பொழுது இந்தத் துறையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.”

(பக்கம் – 18-19)

 

“குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை எங்கெல்ஸ் மார்கனை அடியொற்றியே எழுதியுள்ளார். இந்நூலின் தலைப்பின் அடியில் லூயிஸ் ஹெ.மார்கன் செய்த ஆராய்ச்சிகளின் ஒளியில் என்றே எழுதியுள்ளார். மார்கன் 1871ஆம் ஆண்டில் எதைத் தெளிவில்லாமல் ஊகித்தாரோ அது இந்நூலில் முழுத் தெளிவுடன் எங்கெல்சால் வளர்க்கப்பட்டுள்ளது.

 

1) ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தய கட்டங்கள்

 

குடும்பத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுகள் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற இந்த நூல் எழுதுவதற்கு முன்புதான் தொடங்கியுள்ளது.

 

மார்கன், எங்கெல்ஸ் ஆகியோர்களின் குடும்பம் பற்றிய கருத்துக்கள் பொதுவான அடிப்படையாகும். இன்று இதனை இன்னும் நுட்பமாகப் புரிந்து கொள்வதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இருந்தாலும் இதுவே அடிப்படை.

 மனிதகுலத்தின் ஏடறியா வரலாற்றுத் துறையில் திட்டவட்டமான ஆய்வினை செய்தவர் மார்கன். தமது ஆய்வின் அடிப்படையில் மனிதகுல வரலாற்றை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். முதலாவது காட்டுமிராண்டி நிலை (Savagery), இரண்டாவது அநாகரிக நிலை (Barbarism), மூன்றாவது நாகரிக நிலை (civilization).

 காட்டுமிராண்டி நிலையை இன்று பழைய கற்காலம், புதியகற்காலம் என்று பிரிக்கின்றனர். அநாகரிக நிலையை இன்று பெருங்கற்காலம் என்று பிரித்துள்ளனர். இதனை மேலும் செம்பு காலம், இரும்பு காலம் என்றும் பிரிக்கின்றனர்.

 மார்கன் முதல் இரண்டு நிலைகளைப் பற்றியும், மூன்றாவது நிலைக்கு மாறிச் செல்வதைப் பற்றியும் மட்டுமே கவனம் செலுத்தினார். மூன்றாம் கட்டத்தை எங்கெல்ஸ் இந்நூலில் எழுதியுள்ளார். ஒவ்வொன்றையும் தொடக்கக்கட்டம், இடைக்கட்டம் வளர்ச்சிக்கட்டம் என்று மூன்றாகப் பிரித்தார்.

 குடும்பத்தின் தோற்றம் இந்தக் கட்டத்தின் வழியே ஏற்பட்டது

 

மார்கன் கூறுகிறார்,”..உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் உணவு உற்பத்தியில் தனி முதலான கட்டுப்பாட்டைப் பெற்றிருந்தான் என்று கூறலாம். உயிர்வாழ்வதற்குரிய மூலாதாரங்களின் பெருக்கத்தை வைத்தே மனிதகுல முன்னேற்றத்தின் மகத்தான சகாப்தங்கள் அநேகமாக நேரடியாக அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கின்றன.”

 வாழ்வாதாரத்தின் தேடலின் ஊடேயே மனித குல வளர்ச்சி காணப்படுகிறது.

 1.காட்டுமிராண்டி நிலை (Savagery)

 அ) தொடக்கக் கட்டம்

 வெப்ப மண்டல அல்லது அரை வெப்ப மண்டலக் காடுகளில் தான் மனிதன் தோன்றினான். கொன்று தின்கிற பெரிய விலங்குகளிக்கு நடுவில் தான் வசித்து வந்தான். பழங்கள், கொட்டைகள், கிழங்குகள் ஆகியவை இந்தக் கட்டத்தில் மனிதனின் உணவுகளாக இருந்தது. ஓசை சீருள்ள பேச்சிகள் இந்தக் கட்டத்தில் தோன்றின. இந்தத் தொடக்கக் கட்டம் பல்லாயிரும் ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருந்தது.

 ஆ) இடைக் கட்டம்

 இடைக்கட்டம் மீன்களைப் பிடித்தல், நெருப்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இந்தப் புதிய உணவு தட்பவெப்ப நிலையில் இருந்தும், வட்டாரத்தில் இருந்தும் மனிதனை சுதந்திரம் அடையச் செய்தது. இந்தச் சுதந்திரம் அவனை ஆறுகளை நோக்கி நகர்வதற்கு உதவியது. இந்தக் கட்டத்திலேயே உலகின் பல இடங்களுக்குப் பரவிப் படர்ந்து சென்றுள்ளான். அக்கால மனிதன் கரடுமுரடான, பட்டை தீட்டப்படாத கற்கருவிகளைப் பயன்படுத்தினான். அத்தகைய கருவிகள் இன்று கண்டெடுக்கப்படுகிறது. இதன் மூலம் காட்டுமிராண்டிகளின் இடைக்கட்ட மக்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

 இக்கட்டத்தில் தடி, ஈட்டி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடினான். வேட்டைத் தொழில் ஒன்றை மட்டும் கொண்டு, உயிர் வாழ்கின்ற மக்கள் குலங்கள் என்று புத்தங்களில் குறிக்கப்பட்ட நிலை, ஒருபோதும் இருந்ததில்லை. வேட்டையின் மூலம் கிடைக்கின்ற பலன்கள் மிகவும் நிச்சயமில்லாது இருந்தது. உணவு கிடைப்பத்தில் உள்ள நிச்சயமற்ற நிலை, மனித இறைச்சியைத் தின்னும் முறை உண்டாகி அது நெடுங்காலம்வரை நீடித்திருக்கலாம். மனிதனை மனிதனே தின்கின்ற சமூகத்தையே காட்டுமிராண்டி நிலை என்று கூறப்படுகிறது

 இ) வளர்ந்த கட்டம்

 காட்டுமிராண்டி நிலையின் வளர்ச்சிக் கட்டம் வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்து தொடங்குகிறது. இக்கருவிகளின் உதவியால், காட்டு விலங்கின் இறைச்சியை உணவாக கிடைப்பது அதிகரித்தது. மரத்தால் செய்த கலயங்கள், கைகளால் துணி நெய்தல், நாணல் புல்களைக் கொண்டு கூடைகளை முடைதல், பட்டைத் தீட்டப்பட்ட கற்கருவிகள் ஆகிய வாழ்க்கை சாதனங்களை உற்பத்தி செய்வதில் தேர்ச்சி பெற்றதைக் காண்கிறோம்

 மரத்தைக் குடைந்து ஓடம் செய்தல், சில இடங்களில் வீடு கட்டுவதற்கு மரக்கட்டைகளும் பலகைகளும் பயன்படுத்தப்பட்டது.

 இரும்பு வாள் அநாகரிக நிலைக்கும், துப்பாக்கி நாகரிக நிலைக்கும் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதைப் போலக் காட்டுமிராண்டி நிலைக்கு வில்லும் அம்பும் நிர்ணயமான ஆயுதங்களாக விளங்கின.

 2. அநாகரிக நிலை (Barbarism)

 அ) தொடக்கக் கட்டம்

 மண் பாண்டங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இக்கட்டம் தொடங்குகிறது. கூடைகளும் மரப் பாத்திரங்களும் உணவிற்காக நெருப்பில் வைத்துப் பயன்படுத்தும் போது, அவற்றின் மீது களிமண் பூசியதில் இருந்து இந்தக் கலை தோன்றியது. நெருப்பில் இடப்பட்ட களிமண் கூடைகளில் இருந்து விலகிய போது, பார்த்தைக் கொண்டு சுட்டக் களிமண்ணே பாத்திரமாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மண் பாண்டங்களின் வளர்ச்சி பெருகியது.

 விலங்குகளைப் பழக்குதல், பயிரிடுதல் ஆகியவை அநாகரிக கட்டத்தின் சிறப்புத் தன்மையாகும்.

 ஆ) இடைக்கட்டம்

 கிழக்குக் கண்டத்தில் விலங்குகளைப் பழக்குவதில் இருந்தும், மேற்குக் கண்டத்தில் உணவுக்குரிய பயிர்களைச் சாகுபடி செய்தல், கல்லால் அமைந்த கட்டடங்கள் கட்டுதல் ஆகியவற்றில் இருந்து இந்தக்கட்டம் தொடங்குகிறது. செவ்விந்தியர்களைக் கண்டுபிடித்த போது அவர்கள் இந்தக் கட்டத்தில்தான் இருந்தார்கள்.

 தொடக்கக் கட்டத்தில் விலங்குகளுக்காகத்தான் சாகுபடி செய்யப்பட்டது. இதற்குப் பிறகான காலத்தில் தான் மனிதனுக்காகச் சாகுபடி செய்யப்பட்டது.

 இ) வளர்ந்த கட்டம்

 இருப்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதில் இந்தக் கட்டம் உருவாகிறது. எழுத்துக்களைக் கண்டுபிடித்தல், இலக்கிய ஆவணங்களுக்கு அதைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தக் கட்டம் நாகரிக நிலையை நோக்கி முன்னேறுகிறது. இக்கட்டத்தில் செய்யப்பட்ட உற்பத்தியின் முன்னேற்றம் முந்திய கட்டங்கள் அனைத்து உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும். அதாவது வளர்ச்சி அடைந்த அநாகரீக கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது, இதற்கு முன்பு செய்யப்பட்ட உற்பத்தி அளவுகளைவிட அதிகமாகும்.

 இரும்புக் கலப்பையைக் கொண்டு உழுவது, மண்ணைப் பண்படுத்திப் பயிரிடுவது ஆகியவை அன்றைய நிலையில் வளர்ச்சி அடைந்தது. அப்போது உயிர் வாழ்வதற்கு தேவையானது அதிகம் கிடைத்தது. இந்நிலையில் காடுகள் வெட்டித் திருத்தப்பட்டு வயல்களாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றப்பட்டது. இக்கட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்தது.

 மார்கனின் காலவரிசை முறையைப் பின்வருமாறு பொதுமைப்படுத்தலாம்:-

  

அ) காட்டுமிராண்டி நிலை – பயன்படுத்துவதற்குத் தயாராக இருந்த இயற்கைப் பொருட்களை உபயோகிப்பது, காட்டுமிராண்டி நிலை. காட்டுமிராண்டி நிலையின் மணமுறை குழு மணம்.

 

ஆ) அநாகரிக நிலை – கால்நடை வளர்ப்பு, நிலத்தில் பயிரிடுதல் ஆகியவை குறித்த அறிவைப் பெற்ற கட்டம் அநாகரிக நிலையாகும். அநாகரிக நிலையின் மணமுறை இணை மணம்.

 

இ) நாகரிக நிலை- இயற்கைப் பொருட்களை மேலும் பண்படுத்திக் கொள்வது, தொழில் மற்றும் கலையைப் பற்றிய அறிவைப் பெற்றது, சொத்துடைமை தோன்றியது நாகரிக நிலையாகும். நாகரிக நிலையின் மணமுறை ஒரு தார மணம்.

 நாடோடிகளான ஆரியர்கள் அநாகரீகநிலையின் இடைக்கட்டத்தில் இருந்ததாக எங்கெல்ஸ் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 காட்டுமிராண்டி நிலை என்று கூறப்படுகிற பழைய கற்கால மக்கள் தமிழகத்தில் வாழ்ந்தது பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் சமவெளியிலும் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வட ஆர்க்காடு ஆகிய மாவட்டங்களிலும் கரடுமுரமான பழங்கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள், உளிகள், கத்திகள்  ஆகிய கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டள்ளன.

       கீழடியில் நாகரிகத்தின் தொடக்கக் கட்டத்தில் தமிழர்கள் வாழந்து தெரிகிறது. இதன் காலம் கிமு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 9வது நூற்றாண்டு வரை ஆகும்.

 குடும்ப உறவுகளைப் பற்றி அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment