(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட
70 வது வார வகுப்பு – 09-07-2022)
பகவத்கீதையை பற்றிய இரண்டு வகுப்பு முடிந்துவிட்டது, இன்று மூன்றாம் வகுப்பு. இது கீதையைப் பற்றிய இறுதிவகுப்பாகும். முதல் வகுப்பில் பகவத்கீதையில் உள்ள பக்தி யோகத்தைப் பார்த்தோம், இரண்டாம் வகுப்பில் கர்ம யோகத்தைப் பற்றி பார்த்தோம், இன்று ஞான யோகத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
அர்ச்சுனனுக்குச் சத்திரிய தர்மத்தை வலியுறுத்துவதற்கு எழுதப்பட்டதாக பகவத் கீதை இருந்தாலும் ஞான யோகத்தைப் பற்றியும் கீதையில் பேசப்பட்டுள்ளது.
சம்சாரத்தில் இருந்து விடுபட்டு, முக்தியை நோக்கி பயணிப்பதே ஞான யோகத்தின் நோக்கமாகும். உலகில் காணப்படும் நன்மை-தீமை, இன்பம்-துன்பம், ஏற்ற-தாழ்வு போன்ற இருமைகளைத் தருகிற பொருட்கள்; மாறுதலுக்கும், அழிவுக்கும் உட்பட்டது. இந்த உலகமானது அநித்தியமானது, ஆத்மாவே நித்தியமானது என்ற புரிதலோடு, சம்சாரப் பந்தத்திற்குக் காரணமான ஆசையை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகே உலகின் மீது வைராக்கியம் அதாவது விருப்பமின்மை ஏற்படும். இதுவே ஞான யோகத்திற்கு தொடக்கப்புள்ளி.
பிரம்மம் சத்தியம் உலகம் மாயை என்ற புரிதலோடு, ஆத்மாவும் பிரம்மமும் ஒன்று (தத்துவமசி) என்கிற ஐக்கியத்தை அறிந்து, பிரம்மத்தில் இருந்து பிரிந்ததாகக் கருதியதை விடுத்து, பிரம்மமாய் இருப்பதை உணர்வது ஞானம் ஆகும், அந்த ஞானமே முக்திக்கு இட்டுச் செல்கிறது. இதுவே ஞான யோகம் பற்றிய அத்வைதத்தின் கருத்தாகும்.
அடுத்து கீதை வழியில் ஞான யோகத்தைப் பார்ப்போம்.
கிருஷ்ணன் முதலில் ஞான யோகத்தில் இருந்தே தொடங்குகிறார். இரண்டாம் அத்தியாயத்தில், இதற்கு முன் எக்காலத்திலும் தான் இல்லாமல் இருந்ததில்லை, அதேபோல் அர்ச்சுனனும் இல்லாமல் இருந்ததில்லை, இனி நாம் அனைவரும் இல்லாமல் இருக்கப் போவதும் இல்லை (2:12) என்று கிருஷ்ணன் கூறியுள்ளார். அதாவது உடல்தான் மடிகிறது, ஆத்மா அழிவதில்லை என்பதை வெளிப்படுத்துகிறார்.
இந்த ஆத்ம போதம் ஞான யோகமாக தொடர்ந்து விரித்து உரைக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பொருட்களுடன் புலன்கள் இணையும் நிலையில் குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம் என்கிற உணர்ச்சியைத் தருகின்றன.
அவை தோன்றி மறைபவை, நிலையற்றவை (அநித்தியம்) என்று கூறப்படுவதைப் பார்க்கும் போது இங்கே உலகின் நிலையற்ற தன்மை விளக்கப்படுகிறது. இது ஞான யோகத்துக்குரிய கருத்தே ஆகும். இதற்கு அடுத்த சுலோகத்தில் இன்பம்-துன்பம் ஆகியவற்றைச் சமமாகக் கொள்வது பற்றிப் போதிக்கப்படுகிறது.
ஞான யோகத்தைப் பின்பற்றுபவர்கள், புலன்களின் மூலம் அறியப்படுகிற பொருட்களின் மீது விருப்பமின்மை (வைராக்கியம்) அகங்காரம், பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, துன்பம் முதலானவற்றிலுள்ள தீமைகளை உணர்ந்திருக்க வேண்டும். மனைவி, மக்கள், வீடு முதலியவற்றில் பற்றின்மை, இவற்றைத் தனது எனக் கருதாமையும்; வேண்டியன, வேண்டாதன ஆகியவற்றைச் சமமாகக் கருதவும் வேண்டும் (13:8-10) என்கிறது கீதை.
நிலையற்ற உலகப் பொருட்களை உண்மை என்று நினைப்பது அஞ்ஞானம் ஆகும். அதாவது அறியாமை ஆகும். ஞானம் அற்ற பொருட்கள் அநித்தியமானது. ஆத்மாவே-பரமாத்மாவே நித்தியமானது. எது நித்தியம், எது அநித்தியம் என்கிற ஆராய்ச்சியில் ஆத்மாவே நித்தியமானது என்று ஞான யோகி கருதுகிறார். இந்த நித்தியப் பொருளை ஆராய்ந்து அறிவதின் மூலமே சாகாத் தன்மை அடையப்படும் (13:11-12) என்கிறது கீதை.
பதினான்காம் அத்தியாயத்தில் ஞானத்தை அடைந்தவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை என்று கிருஷ்ணன் கூறுகிறார்.
இன்பம்-துன்பம், ஓடு-கல்-பொன் போன்றவற்றைச் சமமாகக் காண்பவரே, விருப்பையும் - வெறுப்பையும், புகழ்ச்சியையும் - இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுபவரே, மானத்தையும் அவமானத்தையும் சமமாகப் பார்ப்பவரே, நண்பரிடமும் பகைவரிடமும் நடுநிலையோடு இருப்பவரே, ஆசையால் உந்தப்பட்டுச் செய்யும் அனைத்துச் செயல்களையும் விட்டவரே, குணங்களைக் கடந்தவரே ஞானியாவார். இப்படிப்பட்ட ஞானிகளே சம்சாரத்தைக் கடந்து முக்தி அடைகிறார் என்கிறது கீதை. (கீதை 14:24)
பதினைந்தாம் அத்தியாயத்தில் இருமையில் இருந்து (இன்பம்-துன்பம்) விடுபட்டவரே முக்தியை அடைவர் என்பது பற்றிப் பேசிடும் போது, உலகப் பொருட்களின் மீதுள்ள பற்று, குற்றம் (தோஷம்) என்று சுட்டப்பட்டுள்ளது. பொருட்களின் மீதான பற்றை விட்டவரே ஞானி என்கிறது கீதை.
பதினாராம் அத்தியாயத்தில், ஆறாம் சுலோகத்தில் அசுர இயல்பைப் பற்றியும், தெய்வீக இயல்பைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. உலகப் பொருட்களின் மீது புலன்களைச் செலுத்தி இன்ப-துன்பங்களில் மூழ்குபவர், அசுர இயல்பைப் பெற்றவராகக் கூறப்பட்டுள்ளது. சம்சாரப் பந்தத்தில் இருந்து விடுபட்டவரே தெய்வீக இயல்பு உடையவர்.
தெய்வீக இயல்பு கொண்டவர்கள் பல நல்ல குணங்களைப் பெற்றவர்களாவர். பயமின்மை, மனத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெற்றிருத்தல், புலனடக்கம், வழிபாடு, சாஸ்திரங்களைப் படித்தல், தவம், நேர்மை, தீங்கு செய்யாமை, உண்மை, கோபமின்மை, தியாகம், அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்தில் இரக்கம், பிறரது பொருளை விரும்பாமை, மென்மை, நாணம், உறுதியான மனம், தைரியம், பொறுமை, தளராமை, தூய்மை, வஞ்கமின்மை, கர்வமின்மை ஆகியவைகளே அந்தக் குணங்களாகும்.
அசுர இயல்பு உடையவர்களின் குணங்கள் பின்வருமாறு: பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுமை, அறியாமை, ஆகியவை ஆகும்.
சாஸ்திரம் விதித்துள்ளதற்கு முரணாக, ஆசைக்கு ஆட்பட்டு, எவன் தொழில் செய்கிறானோ அவன் சித்தி அடைவதில்லை. இன்பம் அடைவதில்லை, உயர்ந்த நிலையான பரகதி அடைவதில்லை. ஆகையினால் எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று சாஸ்திரத்தில் விதித்துள்ளதை அறிந்து செயல்படுபவனே, அசுரத் தன்மையை விடுத்து தெய்வீகத் தன்மை பெறுகிறான் என்கிறது கீதை.
தெய்வீக இயல்பு மோட்சத்தைத் தருகிறது. அசுர இயல்பு பந்தத்தை ஏற்படுத்தும். பந்தம் என்றால் பிறப்பு இறப்பு; மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்கிற தொடர் நிகழ்வாகும். தெய்வீக இயல்பால் பிறப்பை தடுத்து முக்தி கிடைக்கிறது.
பதினேழாம் அத்தியாயத்தில், 25வது சுலோகம், மோட்சத்தை நாடுபவர்கள், பிரம்மத்தை முன்வைத்துப் பலனை விரும்பாது செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இது ஞான யோகத்திற்குத் தேவைப்படுகிற மனத்தூய்மை (சித்தசுத்தி) ஏற்படுத்தும்.
பதினெட்டாவது அத்தியாயத்தில், கர்ம யோகம், தியான யோகம், பக்தி யோகம் என்று தான் படிநிலையாகக் கூறப்பட்டுள்ளது. ஞான யோகத்தைப் பற்றிப் போகிற போக்கில்தான் பேசப்பட்டுள்ளது. தியான யோகத்தில் கூறப்பட்டது ஞான யோகத்திற்கான தொடக்க நிலை தகுதியே அன்றி, இறுதியாக எட்டப்படும் நிலை அல்ல என்றே சங்கரர் தமது விரிவுரையில் (18:50) கூறியுள்ளார்.
இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், சந்நியாசம், தியாகம் இரண்டின் தத்துவத்தைத் தனித்தனியாக அறிய விரும்புவதாக அர்ச்சுனன் கேட்கிறான். அதற்குக் கிருஷ்ணன், செய்கின்ற செயல்களை விடுவது சந்நியாசம். அனைத்து செயல்களின் பலனையும் துறப்பது தியாகம் என்று பதிலளிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தாமசம், ராஜசம், சாத்வீகம் ஆகிய மூன்று குணங்களின் அடிப்படையில் செய்யப்படுகிற தியாகம் கூறப்படுகிறது.
மூன்று குணங்ளைப் பற்றி கீதை கூறுவதைப் பார்ப்போம்.
“விதிக்கப்பட்ட கர்மத்தைத் துறந்துவிடுவது முறையல்ல. மோகத்தினால் அதை அப்படித் துறப்பது தாமச தியாகமாகும்.
ஒரு கருமம் துக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்தக் கருமத்தை விடுவது ராஜச தியாகம். அவன் தியாகத்துக்காக ஏற்பட்ட பலனை அடையமாட்டான்.
விதிக்கப்பட்ட கர்மத்தைத் தான் செய்தே தீர வேண்டும் என்ற நினைப்புடன், பற்றுதலையும், பலனையும் துறந்து செய்தால் அந்த தியாகம் சாத்வீகத் தியாகம் என்று கருதப்படுகிறது.” (கீதை: 18:7-9)
சாத்வீக தியாகம். யோகத்தைச் செய்வதற்குத் தகுதியானதாக இருக்கிறது. பற்றையும், பலனையும் விடுத்து, செய்யத்தக்கதை அறிந்து செயல்படுவது சாத்வீக தியாகம் ஆகும்.
பற்றுடன் வேலை செய்தால் மரணத்துக்குப் பிறகு; இன்பம், துன்பம், இரண்டின் கலப்பு என்று மூன்று விதமான வினைப்பயன்களை அனுபவிக்க வேண்டிவரும். சந்நியாசியானவர் செயலினால் விளையும் பலனை விட்டவர் என்பதனால் அவர் சம்சாரப் பந்தத்திற்கு ஆட்படுவதில்லை என்கிறது கீதை. (18:12)
உடல் பற்றை விடாதவனால் முக்தியை அடைய முடியாது. மீண்டும் மீண்டும் பிறந்து, இந்தச் சம்சாரச் சாகரத்தில் சுழல வேண்டும். வினைப்பயனை விடாததால் வினையின் பயணம் தொடர்கிறது.
பலனில் ஆசை கொள்ளாது, தனக்கு என்று விதிக்கப்பட்ட செயல்களைப் பற்று இன்றியும், விருப்பு-வெறுப்பு இல்லாதும் செய்கிற சாத்வீக குணத்தாலேயே வினைகளை முடித்து, முக்திக்கு செல்ல முடியும் (18:23) என்றுது கீதை.
மோட்சத்தைப் பற்றிக் கிருஷ்ணன் இங்கே பேசினாலும், அர்ச்சுனன் நிற்பதோ போர்க்களம். போர்க்களத்தில் சத்திரியன் செய்ய வேண்டியதை, செய்யாமல் இருப்பது அதர்மம், அதாவது சுயதர்மத்துக்கு எதிரானது. அதனால், சத்திரியனின் கடமையான எதிரியை போரில் அழிப்பதை வலியுறுத்துவதற்காக நான்கு வர்ணாசிரமத்தைக் கிருஷ்ணனன் விளக்குகிறார். (கீதை 18:41-44)
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர்களின் குணங்களுக்கேற்ப நான்கு வர்ணங்கள் உருவானதாக கீதை கூறுகிறது. அடுத்து நான்கு வர்ணத்தாரின் கடமைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, அறிவு, அனுபவம், ஆன்ம நாட்டம் ஆகியவை பிராமணருக்கு உரியது.
சூரத்தனம், மன ஆற்றல், செயல் திறன், சாதுரியம், போரில் புறங்காட்டாமை, கொடை, ஆளும் திறமை ஆகியவை சத்திரியருக்கு உரியது.
விவசாயம், மாடுகளைக் காத்தல், வாணிகம் ஆகியவை வைசியருக்கு உரியவை.
மேலே கூறிய மூவருக்கும் பணி செய்வது சூத்திரருக்கு உரியது. வர்ணாசிரம தர்மம் இவ்வாறு தான் கூறுகிறது.
எந்த வைதீக ஆச்சாரியர்களும் இந்த வர்ணாசிரமத்தை அதாவது சாதிய முறையை மறுக்கவில்லை. சங்கரரும், ராமானுஜரும் முன்பிறவியில் செய்த வினையின் தொடர்ச்சியாக நான்கு வர்ணங்கள் தோன்றியதாகக் கூறுகின்றனர். இந்த வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் சுலோகத்துக்கு மத்துவர் விரிவுரை எழுதவில்லை. அவர் மோட்சம் அடைவதற்கே தகுதியை எதிர்பார்ப்பவர், அதனால் இந்த வர்ணாசிரமத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்.
கர்ம யோகத்தை, ஞான யோகத்துக்குப் படிநிலையாக ஏற்றுக் கொள்ளாத சங்கரர், வியவகார உலகில் சாதியத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். நாராயணன் முன் அனைவரும் தாசர்கள் அதாவது அடிமைகள் என்று கூறுகிற ராமானுஜர் மக்களிடையே காணப்படும் வர்ண வேறுபாட்டை மறுக்கவில்லை என்பது அவரது கீதையின் விரிவுரையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
தாசப் பட்டத்தின் மூலம் ராமானுஜர் சாதியத்தை மறுதலித்ததாகக் கூறுவர். ஆனால், கீதை விரிவுரையில் வர்ணாசிரமத்தை மறுத்துக் கூறிடவில்லை. அதே போல, மநீஷா பஞ்சகம் என்ற நூலில் தெரிவித்த கருத்துக்களைக் கொண்டு சிலர், சங்கரர் வர்ணாசிரமத்தை ஏற்கவில்லை என்று கூறிவருகின்றனர். ஞானிகளுக்குத்தான் வர்ணாசிரம வேறுபாடு கிடையாது, ஆனால், வியவகார உலகில் உள்ளவர்களுக்கு உண்டு என்பதே சங்கரர் கருத்து. சங்கரர் விவேக சூடாமணியில் (148) சுயதர்மத்தைக் கடைப்பிடிப்பதே மனத்தூய்மை (சித்தசுத்தி) ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
உலக வாழ்க்கை என்னும் சம்சாரச் சாகரத்தைக் கடக்க வேண்டும் என்று கூறுகிற எவரும், வர்ணாசிரமத்தை கடக்க வேண்டும் என்று கூறிடவில்லை. கீதையே சுயதர்மத்தை சுட்டிக்காட்டுவதற்கு எழுதப்பட்டது தானே. கர்ம யோகம் என்றாலே வர்ணாசிரம தர்மம் (சுயதர்மம்) கூறுகிற தொழிலை, பலன் எதிர்பார்க்காமல் செய்வதை வலியுறுத்துவது தானே.
சுயதர்மத்தை கடைப்பிடிப்பதற்குக் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் போன்ற தத்துவங்கள் வலியுறுத்துகிறது. எப்படிப் பார்த்தாலும் செயலை வலியுறுத்துவதிலேயே அனைத்து யோகங்களும் கவனம் செலுத்தியுள்ளன.
“செயல்படாமல் இருப்பதால் மட்டும், ஒரு மனிதன் செயலில் இருந்து விடுபடுவதில்லை. அதேபோல, செயலைத் துறப்பதால் மட்டுமே அவன் இறுதி விடுதலையை -முக்தியை அடைந்து விடுவதில்லை.” (கீதை: 18:3-4)
கர்ம யோகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராமானுஜராக இருந்தாலும் சரி, கர்ம யோகம், ஞான யோகத்திற்கு அடிப்படை என்பதை ஏற்காத சங்கரராக இருந்தாலும் சரி, இருவரும் இந்தச் சுலோகத்தை முன்வைத்தே கர்மத்தை வலியுறுத்துகின்றனர்.
“கர்ம யோகத்தைத் தொடங்காமல் ஞான யோகம் அடைய முடியாது. தொடங்கிய கர்ம யோகத்தைக் கை விட்டாலும் ஞான யோகம் ஏற்படாது” என்கிறார் ராமானுஜர்.
சங்கரரோ, “இந்த உலகில் உள்ள எந்த ஒரு மனிதனும் கர்மங்களைச் செய்யாமல் இருப்பதன் மூலம், கர்மங்களைச் செய்ய வேண்டிய அவசியம் அற்றவன் என்ற நிலையை அடைய முடியாது. மேலும் கர்மங்களைத் துறப்பதன் மூலம் யாரும் சித்தி அடைய முடியாது” என்கிறார். கர்மத்தின் மீதான பலனை எதிர் பார்க்காமல் சுயதர்மத்தை கடைப்பிடிப்பது பற்றியே அனைத்து வேதாந்தத் தத்துவங்களும் போதிக்கின்றன. கர்மம் செய், அதுவும் பலனை எதிர்பார்க்காமல் செய் என்பதுதான் வேதாந்தத் தத்துவங்களின் நோக்கமாக இருக்கிறது.
தான் செய்கின்ற கடமையினை ஈஸ்வரார்ப்பணமாகச் செய்ய வேண்டும் என்பதை, கீதை தொடக்கத்திலேயே கூறியுள்ளது.
ஒவ்வொரு மனிதனும், சாஸ்திரம் விதித்துள்ள தன்னுடைய கர்மாவை கருத்துடன் செய்வதால் சித்தியடைகிறான்.
"அனைத்து கர்மங்களையும் என்னிடத்தில் (கிருஷ்ணனிடத்தில்) சமர்ப்பணம் செய்து, தான் ஆத்மா என்ற அறிவுடன் ஆசையில்லாதவனாய் என்னுடையது என்கின்ற பற்று இல்லாதவனாய் இருந்துகொண்டு மனக்கிளர்ச்சி முற்றிலும் நீங்கியவனாய் போர் புரிவாய்." (கீதை 3:30)
சத்திரியனான அர்ச்சுனனுக்கு போர்புரியும்படி தர்ம உபதேசம் செய்யப்பட்டுள்ளது. தர்மம் என்றால் சுயதர்மம், பிறப்பால் ஏற்படும் தொழிலே சுயதர்மம்.
நன்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குறையுடையதாயினும் தனக்கான சுயதர்மமே உயர்ந்தது. சாஸ்திரம் விதிக்கப்பட்ட சுயதர்மத்தை செய்பவன் கேடு அடையமாட்டான். நெருப்புக்கே புகை என்கிற குறை இருக்கிறது. அதனால் குறையுள்ளதாயினும் பிறப்பால் ஏற்பட்ட கர்மத்தை விடக்கூடாது.
.ஞான யோகத்தின் பயனான ஜீவ-பிரம்ம ஐக்கியம் பற்றி மூன்று சுலோகங்கள் கூறுகிறது.
"தூய புத்தியுடன், உறுதியாகத் தன்னை அடங்கி, ஒலி முதலான விஷயங்களை விடுத்து, விருப்பு வெறுப்பை நீக்கி, தனிமையில் இருந்து, மிதமாக உண்டு, சொல் செயல் மனம் இவற்றைக் கட்டுப்படுத்தி, எப்போதும் தியானயோகத்தில் திளைத்திருந்து, வைராக்கியத்தில் நிலைநின்று, அகங்காரம், வேகம், செருக்கு, காமம், கோபம், உடைமை இவற்றை ஒழித்து, எனது என்ற எண்ணம் இல்லாமல், அமைதியாக இருப்பவன் பிரம்ம நிலையை அடைவதற்குத் தகுதி உடையவன்." (கீதை 18:51-53)
மேலும் சமக்காட்சி நிலையில் உறுதிபெற்ற, தெளிந்த மனம் உடைய அவன் கவலைப்படுவதில்லை, ஆசை கொள்வதில்லை. அனைத்து உயிர்களிடமும் சமமாக இருக்கின்றான் என்பதாகத் தொடர்கிறது.
இதைத் தொடர்ந்து கீதையில் தன்னைச் சரணடைந்து அனைத்து கர்மங்களையும் செய்யச் சொல்கிறார் கிருஷ்ணன். தன்னிடம் மனதை வைத்து செய்தால் அனைத்து தடைகளையும் தனதருளால் கடந்து செல்வாய். அவ்வாறு இல்லை என்றால் அகங்காரத்தின் காரணமாக அழிந்துவிடுவாய் என்கிறார் கிருஷ்ணன்.
கீதையில் இவ்வாறு வேதாந்தத் தத்துவத்தை அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணன் உபதேசித்தார். இந்த உபதேசத்தை ஆராய்ந்து, முடிவெடுத்து செயல்படுத்து என்று அர்ச்சுனனிடம் கூறினார். மதிமயக்கம் ஒழிந்து, சந்தேகம் நீங்க பெற்று, மனம் சமநிலை பெற்ற அர்ச்சுனன்; கிருஷ்ணனின் உபதேசத்தின்படி செயல்படுவதாகக் கூறினான். போரை அர்ச்சுனன் தொடர்ந்தான், வெற்றியும் பெற்றான்.
அன்றைய சமூகத்தைக் காப்பாற்றுவதற்குச் சுயதர்மத்தின்படி செயல்பட வேண்டும் என்று கீதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தன்னைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி, இந்த நவீன உலகத்தவர்களின் மனதில் எழத்தான் செய்கிறது. அதற்கு ஏற்பவே இந்திய அரசியல் சட்டமும் எவரும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்று கூறியுள்ளது. எந்தத் தொழிலையும் சிறப்பாகச் செய்வதற்கு வழி வகை செய்வதே, வீட்டுக்கும், நாட்டுக்கும், சமூகத்துக்கும் இன்று நன்மை பயப்பதாக இருக்கும்.
பக்தி யோகமாக இருந்தாலும் சரி, கர்ம யோகமாக இருந்தாலும் சரி, ஞான யோகமாக இருந்தாலும் சரி அனைத்துமே பலனை எதிர்பார்க்காமல் உழைக்கும்படியே கூறுகிறது. பலன் கிடைப்பதற்கு இந்த உலகில் வழியில்லை என்றே ஆன்மீகமான கருத்துமுதல்வாதம் கருதுகிறது.
இந்த உலகில் காணும் துன்பத்திற்கான காரணத்தைச் சுட்டிக்காட்டி, அதனைப் போக்குவதற்கான வழியினையும் காட்டும் தத்துவம் கிடைக்குமானால், முக்திக்கு வழிகாட்டும் தத்துவத்தில் தடுமாறிக் கொண்டிருக்க மாட்டார்கள். சுயதர்மத்தையும், உழைப்பின் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்று கூறுகிற தத்துவத்தை விடுத்து, உழைப்பின் பலனை அடைவதற்கு வழிகாட்டும் தத்துவத்தை நாடிச் செல்வர் என்பதில் சந்தேகம் இல்லை.
உழைப்பின் பலனை தொழிலாளி அடைவதற்கான வழியினை பொருள்முதல்வாதத் தத்துவம் காட்டுகிறது. இதனை பொருள்முதல்வாதம் பற்றிய வகுப்பில் பார்ப்போம்.
No comments:
Post a Comment