Saturday 2 July 2022

10) பகவத் கீதை எளிய அறிமுகம்? (கர்ம யோகம்)

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

69 வது வார வகுப்பு – 02-07-2022)


 

       இதுவரை நாம் ஐந்து தரிசனங்களைப் பார்த்தோம். அடுத்து ஆறாவது தரிசுனமான வேதாந்தம் அதாவது இந்து மத தத்துவம். இதனை உத்திர மீமாம்சை என்றும் அழைப்பர். வேதாந்தத்துக்கு அடிப்படையான நூல்கள் என்றால் உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்று ஆகும். இந்த மூன்றை பிரஸ்தானதிரயம் என்று அழைப்பர். உபநிடதம், பிரம்மசூத்திரம் ஆகிய இரண்டையும் பார்த்தவிட்டோம். பகவக்கீதையைப் பார்த்துவருகிறோம். சென்ற வகுப்பில் பகவத்கீதை பற்றிய சிறிய அறிமுகமும் பக்தி யோகமும் பார்த்தோம். இன்னும் பார்க்க வேண்டியது கர்ம யோகம், ஞான யோகம். இன்றைய வகுப்பில் கர்ம யோகத்தைப் பார்க்கப் போகிறோம்.

     ஒரு சத்திரியரான அர்ச்சுனன், போர்புரிய வேண்டிய இடத்தில், தனது கடமையை அதாவது சுயதர்மத்தை மறந்து தடுமாறும்போது கீதை உபதேசிக்கப்பட்டுள்ளது. ஆக கீதை கர்ம யோகத்தை வலியுறுத்துவதற்காகவே எழுதப்பட்டது. கீதையில் எத்தனை யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், கர்ம யோகமே அர்ச்சுனனைப் பொருத்தளவில் முக்கியமானதாகும்.

           மூன்றாவது அத்தியாயத்தில் ஜனகரை முன்வைத்தும் கர்ம யோகம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

“ஜனகர் முதலானோர் கர்மத்தினாலேயே சித்தி பெற்றனர். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் செய்தலே தகும்.” (3:20)

 சங்கரர் இதற்கான விளக்கவுரையில், "உனது (அர்ச்சுனன்) முன்வினைப் பயனால் நீ இப்போது சத்திரியனாகப் பிறந்துள்ளாய். அதனால் உலக மக்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுப்பதற்காக நீ உனது கர்மத்தைச் செய்தே ஆகவேண்டும்" என்று கூறியுள்ளார்.

 வினைப் பயனாகச் சம்சாரத்தில் மூழ்கி இருப்பவர்கள் கர்மத்தை செய்தே ஆக வேண்டும். அதுமட்டுமல்லாது உலக மக்களுக்காகவும் கர்மம் செய்ய வேண்டியது அவசியமாகவே இருக்கிறது.

 அர்ச்சுனனுக்கு கர்ம யோகத்துக்குத்தான் அதிகாரம் உண்டு என்பதை கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

       "கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பயனில் இல்லை,       பயனைக் கருதிக் கர்மம் செய்பவனாக இராதே, செயலின்மையில் உனக்குப்   பற்றும் ஏற்பட வேண்டாம்." (கீதை 2:47)

       இதற்கான விரிவுரையில் சங்கரர் கர்ம யோகத்தினை சுருக்கமாகக் கூறியுள்ளார். இதனை நன்றாகப் புரிந்து கொண்டால், கர்ம யோகத்தைப் படிப்பதற்கு இது பயன்படும்.

 

கர்மத்திலே தான் உனக்கு அதிகாரம். ஞானமார்க்கத்தில் அன்று. கர்மம் செய்கையில், எச்சூழ்நிலையிலும், அதன் பயன் மீது பற்று வைக்காதே. கர்மத்தின் பயனிலே உனக்கு எப்போது பற்று உண்டாகுமோ, அப்போது நீ கர்மத்தின் பயனைப் பெறுவதற்குக் காரணமாவாய். ஆகையினால் உனது நோக்கம் கர்மத்தின் பயன்கள் மீது இல்லாதிருக்கட்டும். கர்மத்தின் பயன் மீது பற்றுடையவனாக ஒருவன் கர்மத்தைச் செய்யும் பொழுது, அக்கர்மத்தின் பயனாக அவன் மீண்டும் பிறப்பெடுக்கிறான். பயன் மீது பற்று வைக்கக் கூடாதெனில் இத்துன்பமிகு கர்மத்தைச் செய்வதால் என்ன பயன் என்று கருதி நீ கர்மம் செய்யாமலும் இராதே.

 

கர்மத்தின் பயன் மீது பற்றுக் கொண்டு ஒருவன் கர்மம் செய்ய கூடாதெனில் பிறகு அக்கர்மங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன? பதில் பின்வருமாறு:

 

யோகத்தில் நிலைநின்று 'கடவுள் என் மீதும் பிரீதி அடைவாராக' என்பது போன்ற பற்றினையும் துறந்து வெற்றி தோல்வியைச் சமமெனக் கருதி கடவுளின் பொருட்டுக் கர்மங்கள் செய்வாயாக. பயனிலே பற்றின்றிக் கர்மத்தைச் செய்யும் பொழுது புத்தித் தூய்மையினால் அவன் ஞானத்தைப் பெறுவது வெற்றியாகும் (சித்தி) இதற்கு நேர்மாறாகப் புத்தியின் தூய்மையின்மையினால் விளைவது தோல்வியாகும் (அசித்தி). அந்த வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதி நீ கர்மங்களைச் செய்வாயாக.

 

எதிலே நிலைநின்று கர்மங்களைச் செய் என்று கூறப்பட்டதோ, அந்த யோகம் என்பது என்ன என்றால், வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதுதலே யோகம் ஆகும்.” (கீதைபேருரை  2:47-48)

       இந்துத் தத்துவம் இரண்டைத்தான் போதிக்கின்றது. ஒன்று கர்ம யோகம், மற்றொன்று ஞான யோகம். மற்ற அனைத்தும் இதனுள் அடங்கிவிடும். பகவத் கீதை கர்ம யோகத்தைச் சுட்டிக்காட்டுவதற்குத் தோன்றியதே. ஆனால், அர்ச்சுனன் தமது சத்திரிய கர்மத்தை செய்யத் தயங்கும் போது கிருஷ்ணன் கர்மத்தை யோகமாகச் செய்ய வலியுறுத்தி போதித்தார்.

 அதுமட்டுமல்லாது, உறவினர், குரு போன்றோர்களைப் பற்றிய கவலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட போது உடல் ரீதியான பற்றைப் போக்குவதற்கு, ஆத்ம தத்துவத்தைப் போதித்தார்.

 அந்த ஆத்ம தத்துவம் ஞான யோகத்துக்கு இட்டுச்செல்லும். இருந்தாலும் இது போர்க்களம், இங்கே ஒரு சத்திரியன் செய்ய வேண்டிய செயலுக்கு, வர்ணாசிரம அடிப்படையில் முதன்மை இடம் கொடுக்கப்பட்டு, கர்ம யோகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

       பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தில் கர்ம யோகம் போதிக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் அடிப்படையில் கர்ம யோகத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 இரண்டு யோகங்களைப் போதித்தாகக் கிருஷ்ணன் கூறுகிறார். சாங்கியர்களுக்கு ஞான யோகம், யோகிகளுக்குக் கர்ம யோகம் (கீதை 4:3).

       இங்கே சாங்கியர் என்று கூறப்பட்டுள்ளது துறவிகளையே ஆகும். ஆசிரம தர்மத்தில் உள்ள வானபிரஸ்தம், சந்நியாசம் என்ற இறுதி இரண்டு ஆசிரமத்தில் உள்ளவர்கள் துறவிகளாவர். அதே போல யோகிகள் என்று கூறப்பட்டது, ஆசிரம தர்மத்தில் உள்ள பிரம்மச்சர்யம், கிரகஸ்தம் என்ற முதல் இரண்டு ஆசிரமத்தில் உள்ளவர்கள் ஆவர். இவர்கள் தமது சுயதர்ம கர்மத்தை கடைபிடிக்கும் சம்சாரிகள் ஆவர்.

       கர்மங்களைச் செய்யாமல் இந்த உலகத்தில் எவரும் இருக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் இயற்கையாய் தோன்றிய குணங்களால் உந்தப்பட்டு, தம்மை அறியாமல் செயலில் இயக்குவிக்கப்படுகின்றனர். 

       ஐம்பொறிகளையும் அடக்கிச் செய்கின்ற காரியத்தின் பலனில் பற்று வைக்காமல், காரியங்களைச் செய்பவர்கள், கர்மத்தை கர்ம யோகமாகச் செய்கின்றனர். பலனை எதிர்ப்பார்த்து செயல்படுவது கர்மம். செய்கின்ற செயலில் பலனை எதிர்பார்க்காமல் செயல்படுவது கர்ம யோகம். அதாவது கர்மத்தை யோகமாக – பலனை எதிர்பார்க்காமல்- செய்வது கர்ம யோகம்.

 பலனை எதிர்பார்த்து செய்வதை காமிய கர்மம் என்றும், பலனை எதிர்பாராது செய்வது நிஷ்யாமிய கர்மம் என்றும் சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

 விதிக்கப்பட்ட கர்மங்களை வர்ணத்தார்கள் கடமையாக செய்ய வேண்டும்.  கர்மம் செய்யாது இருப்பதைவிடக் கர்மம் செய்வது சிறப்பானது. கர்மம் செய்யாது போனால் ஒருவன் உடலைப் பராமரிக்க முடியாமல் போய்விடும். இந்து மதம் உலகைத் துறந்து, துறவி ஆவதையே விரும்புகிறது என்று சிலரால் கூறப்படுகிறது.

 அது உண்மையே. ஆனால், துறவியாக ஆகாத சம்சாரிகள், செய்ய வேண்டிய கடமைகள் செய்வதை, அதுவும் சுயதர்மத்துக்கு ஏற்ப செய்வதை வலியுறுத்துகிறது. உடலை பேணுவதற்கு உலகில் செயல்படுவது அவசியம் என்று கீதை கூறுகிறது.

       சமூகம் இயங்குவதற்கும் செயல்கள் அவசியமே. அதுவும் ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில், குழப்பம் இல்லாது, கலகம் செய்யாமல் செயல்படுவதற்கு வர்ணாசிரம சுயதர்மம், அதாவது பிறப்பால் உருவான சாதிய தர்மம் வலியுறுத்தப்படுகிறது. அனைவரும் துறவிகளானால், அனைத்து மக்களுக்கும் தேவையான பொருளை உற்பத்தி செய்யப் போவது யார்?.

       அதனால்தான், கர்ம யோகமாக இருந்தாலும் ஞான யோகமாக இருந்தாலும் சுய தர்மம் வலியுறுத்தப்படுகிறது. செயலின்றி சமூகம் இருக்க முடியாது, உழைப்பின்றி சமூகம் வாழ முடியாது.

 இந்தச் சமூகம் தடைபடாது செயல்படுவதற்கும், குழப்பங்கள், கிளர்ச்சிகள் தோன்றாமல் இயங்குவதற்கும் மதம்-தத்துவம் ஆகிய இரண்டும் சுயதர்மத்தை வலியுறுத்தியுள்ளது.

 எப்போது தர்மத்திற்கு அழிவும், அதர்மத்துக்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்போது தான் பிறப்பித்துக் கொள்வதாக, அதாவது அவதாரம் எடுப்பதாக கிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

“எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் பிறப்பெடுக்கிறேன்.

 

நல்லவர்களை பாதுகாக்கவும், கெட்டவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்.” (4:7-8)

 இங்கே, தர்மத்தின் அழிவு, அதர்ம எழுச்சி என்றெல்லாம் கூறப்படுவது சுயதர்மத்தை மீறுவதையே குறிக்கிறது. பிறப்பால் செய்கின்ற தொழிலை மீறுவதே அதர்மம் ஆக கீதை கூறுகிறது. இதே அத்தியாயத்தில் கிருஷ்ணன், மனிதர்களின் குணங்களுக்குத் தக்கபடி அவர்களுக்கான கர்மங்கள், தன்னால் நான்கு வர்ணங்களாகப் படைக்கப்பட்டது (4:13) என்றும் கூறியுள்ளார். ஆக தர்மம் எனப் பேசப்படுவது சுயதர்மமே என்பது தெளிவாகிறது.

 கீதை விளக்கத்துக்கான முகவுரையில் அவதாரத்திற்கான காரணத்தைச் ஆதிசங்கரர் கூறியுள்ளார். பிராமணத்துவம் நிலைபெற்றால்தான், வேத தர்மம் பாதுகாக்கப்படும். மேலும் வர்ணாசிரம தர்மங்கள் அதைச் சார்ந்தன்றோ நிற்கின்றன.

 அவதாரமும் தர்ம உபதேசமும் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றுவதற்கே ஆகும். வர்ணாசிரம தர்மத்தை கடைப்பிடிப்பதற்கு தத்துவ விளக்கம் கொடுக்கப்படுகிறது.

 இயங்குகின்ற சக்கரத்தை யார் பின்பற்றவில்லையோ, அதாவது வேதம் விதித்துள்ள கடமைகளை யார் செய்வதில்லையோ, அவன் புலன் இன்பத்தில் மூழ்கிவிடுகிறான், பாவம் செய்வதிலேயே தனது ஆயுளை கடத்துகிறான், ஆக மொத்தத்தில் வீணான வாழ்வையே வாழ்கிறான் என்கிறது கீதை. (3:16)

 புலன் இன்பத்தை நாடாது, ஆத்ம இன்பத்தில் மூழ்கி இருக்கிற, ஞானிகளுக்குச் செய்ய வேண்டிய கர்மம் ஒன்றும் இல்லை. ஆனால், சம்சாரத்தில் ஈடுபட்ட மக்களுக்கு, இடைவிடாமல் கர்மம் செய்ய வேண்டும். அதுவும் அந்தக் கர்மத்தின் பலனில் பற்றில்லாது செய்ய வேண்டும். செய்கின்ற செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்ய வேண்டும்.

 அவ்வாறு செய்பவர்கள் பிறவி சுழற்சியில் அகப்படாமல், வினைகள் ஏற்படாமல், சம்சாரப் பந்தத்தில் இருந்து விடுபடுவார்கள் என்பதே இதன் அடிப்படை.

       பிறவிகளை ஏற்படுத்தும் கர்மவினைகள் மூன்றாகும். அவை சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம். கர்மவினைகளை மூவினைகள் என்றும் கூறப்படுகிறது.

 சஞ்சித கர்மம் என்றால், நிகழ் காலத்தில் செய்கிற செயல்களால் ஏற்படுகிற நல்வினை, தீவினை ஆகியவற்றின் தொகுதியாகும். இதனைக் கழிப்பதற்காகவே பிறவிகள் ஏற்படுகிறது. சேர்த்து வைத்துள்ள நல்வினையும் தீயவினையும், அடுத்து பிறக்கின்ற வாழ்வில் நன்மையும்; தீமையும் ஏற்படுத்துகிறது.

 சேர்த்து வைத்த சஞ்சித வினைகள் அனைத்தும், எடுக்கின்ற ஒரே பிறவியில் தீர்க்கப்படுவதில்லை. சேர்க்கப்பட்ட கர்மவினையில் சிலது மட்டுமே அனுபவிக்கப்படுகிறது, அதற்குப் பெயர் தான் பிராப்த கர்மம்.

 சேர்க்கப்பட்ட வினைகளில், எவைகள் எல்லாம் குறிப்பிட்ட பிறவியில் அனுபவிக்கப்படுகிறதோ அது பிராப்த கர்மம். அது நல்லதாகவும் இருக்கலாம் தீயதாகவும் இருக்கலாம். எதற்கெல்லாம் பிராப்தம் இருக்கிறதோ அதை மட்டும் எடுத்த பிறவியில் தீர்க்கப்படுகிறது. மீதமுள்ளவை அடுத்த பிறவிகளுக்குத் தொடர்கிறது.

 ஆகாமிய கர்மம் என்றால், பிறப்பெடுத்த புதிய பிறவியில் செய்கின்ற கர்மத்தால் ஏற்படுகிற புதிய வினைகளைக் குறிக்கும். சாஸ்திரத்தால் விதிக்கப்பட்ட கர்மமான சுயதர்மத்தை, அதாவது பிறப்பால் உண்டான தொழிலை பற்று இன்றியும், பலன் இன்றியும் தியாகத்தோடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் வினைகள் ஏற்படுவதில்லை. அனைத்து வினைகளும் கழிந்துபோவதாலும், புதிய வினைகள் ஏற்படாத காரணத்தாலும் அடுத்தப் பிறவி உண்டாவதில்லை. பிறப்பின் தொடர்ச்சியில் இருந்து விடுபட்ட ஆத்மாவுக்கு முக்தி கிட்டும்.

 இதுவே மூவினைக் கோட்பாடாகும்

 ஞான யோகமாக இருந்தாலும் சரி, கர்ம யோகமாக இருந்தாலும் சரி இரண்டும் முக்தியையே முன்னிறுத்துகிறது. இந்த உலகில் காணப்படும் ஏற்றத்தாழ்வு போன்ற இருமைகளைப் போக்க முடியாது. இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகளினால், வினைகள் ஏற்பட்டுச் சம்சாரச் சாகரத்தில் மனிதன் அகப்படுகிறான்.

 ஏற்றத்தாழ்வான இவ்வுலகில் சமநிலை என்பது உருவாக்க முடியாது. ஆத்ம நிலையில் அனைவரும் சமம். அதனால் ஆத்ம ஞானம் பெற்று முக்தியில் அனைவரும் சமநிலை அடைவது பற்றியே வேதாந்தத் தத்துவம் போதிக்கிறது. சமூகத்தில் சமநிலையைப் பற்றி பேசுவதில்லை. சமூகத்தை மாற்ற முடியாது என்று வெளிப்படையாக கூறுகிறது வேதாந்தம்.

       உலகில் காணப்படும் பிரச்சினைகளுக்கு, இந்த தத்துவத்தால் தீர்வைத் தர முடிவில்லை என்பதே உண்மையாகும். ஆத்மாவைப் புரிந்து கொண்டதாகக் கூறும் இத்தகைய தத்துவங்கள், சமூகத்தை புரிந்து கொண்டு அதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க முடியவில்லை. சமூகத்தை மாற்ற முடியாது என்று முடிவெடுத்துவிட்டதனால், சமூகப் பிரச்சினைகளுக்கு இத்தகைய தத்துவம் பயனளிக்கும் என்று கூறிட முடியாது. சமூகப் பிரச்சினைகளுக்கான காரணத்தை சமூக வழியில் அறிந்து கொள்ள முடியாது என்று கருதுகிற இந்தத் தத்துவம் இல்லறத்தை கடக்க வேண்டிய சம்சாரக் கடலாகத் தான் கருதும்.

 கானல் நீர், தாகம் தீர்க்காது என்பதை அறிந்த பின்பு கானல் நீரைப் பற்றி கவலைப்படுவோமா?.

 கனவில் கிடைத்த பொருளினால் ஏதும் பயன்கிட்டுமா?

 ஆனால், உலகை மாயை என்று கூறிவிட்டு, உழைப்பவனின் உழைப்பில் மட்டும் அக்கறை செலுத்துகிறது வேதாந்தத் தத்துவம்.

 உழைப்பால் கிடைப்பது மாயையில்லையா? உலகை மாற்ற முடியாது, ஆனால் உலகில் உழைப்பவனின் விளைபொருட்கள் மட்டும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.  

 சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் கூறுகிறார்:-

“உலகத்தை நம்மால் மாற்ற முடியாது. உலகம் தானாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் ஒவ்வொருவனும் அவனவனுக்குப் பொருத்தமான வழியில் சென்று கொண்டிருக்க வேண்டும். உலகத்தில் ஓரளவு பற்று வைத்திருப்பவனை நோக்கி, “நீ கர்மாவைச் சரிவர செய்துகொண்டு வா! உலகத்தையும் பார்த்துக் கொண்டு வா” என்று கூறுகிறது.”

(முத்தி நெறி பக்கம் 113)

 சமூகத்தை மாற்ற முடியாது என்று முடிவெடுத்து, இல்வாழ்வை விட்டு விலகிச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறது இத்தகையத் தத்துவம். இவ்வாறு சமூகத்தைவிட்டு தப்பிச் செல்லும், இத்தகையத் தத்துவம் சமூகத்தில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

 சமூகத்தை மாற்ற முடியாது என்று கூறுகிற வேதாந்தத் தத்துவம், இந்த சமூகத்தில் பலன்களை அனுபவித்து வருகிறவர்களுக்கு பிடித்தமாக இருக்கிறது. பலனைக் கருதாது கடமையை செய் என்று கூறுவதின் நோக்கம் யாருடைய நலன்களை வெளிப்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 உழைத்தும் ஓட்டாண்டியாகிப் போன மக்களுக்கு இந்த தத்துவம் எந்த வகையிலும் பயன்தாராது.

 உலகை மாயை என்று கூறும் இத் தத்துவம், உழைப்பவர்களை, தமக்கு விதிக்கப்பட்ட கர்மமாக நினைத்து உழைக்கும்படி கூறுகிறது. உழைக்கும் பலன் சமூகத்துக்கு என்றால், உழைப்பவர்கள் சமூகத்தில் இல்லையா?. இங்கே சமூகம் என்றால், உழைப்பைச் செலுத்தாதவர் தானோ. இந்தத் தத்துவம் உழைப்பவர்களுக்கு எந்த வகையிலும் உதவிடாது.

 உழைக்கும் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வை அளிக்கும் தத்துவத்தை நாடிச் செல்ல வேண்டும்.

 ஆதிசங்கரர் தமது கீதை விளக்கவுரையில், "முக்திபெற்ற ஆத்மாக்களுக்கு சம்சாரமும், சம்சாரத் தன்மையுள்ள செயல்களும் இல்லை என்பது ஆத்மாவை நம்பும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது" (13:2) என்று கூறியுள்ளார். கர்ம யோகத்தைத் தூக்கிப் பிடிக்கிற மற்ற தத்துவங்களும் சம்சாரத்தில் இருந்து விடுதலை பெறுவது பற்றித் தான் பேசுகின்றன.

 முக்தியைப் பற்றிப் பேசினாலும், முக்தி அடைவதுவரை செய்ய வேண்டிய சுயதர்மத்தை, அதாவது பிறப்பால் செய்ய வேண்டிய தொழிலை செய்தே ஆக வேண்டும் என்பதே அனைத்து வேதாந்த மத-தத்துவத்தின் நோக்கமாகும்.

 கிருஷ்ணன் கூறுகிறார், (3:24) தான் கர்மம் செய்யாது போனால் இந்த உலகம் அழிந்துவிடும். மேலும் கலகத்திற்கும் சாதிக் குழப்பத்திற்கும் தானே காரணம் ஆகிவிடுவேன். அவ்வாறு செய்வேனாகில் உலக மக்களை அழித்தவனாகி விடுவேன். செயல்படாமல் போனால், உலக மக்களும், உலகமும் அழிந்து போகும்.

  இந்தக் காரணத்தினால்தான், கர்ம யோகமானாலும் சரி ஞான யோகமானாலும் சரி கர்மத்தை துறக்காமல் செயற்பட வலியுறுத்தப்படுகிறது.

 மனத்தூய்மைக்காகவே (சித்தசுத்திக்காகவே) கர்ம யோகம் என்று கூறுகிற அத்வைதமும் கர்மத்தை வலியுறுத்தவே செய்கிறது. பிறர் நன்மைக்காக என்றால் இங்கே சமூக நன்மைக்காகவே என்பதே பொருளாகும். சமூகத்தில் குழப்பம், கலகம் ஆகியவை ஏற்படாமல் இருப்பதற்காகவே வர்ணாசிரமம் அதாவது சாதிகள் நிலைநிறுத்தப்படுள்ளது என்கிறது அத்வைதம்.

 கி.லக்ஷ்மணன்:-

“பலனைக் கருதலாகாது என்னும்போது அதனால் நமக்கு என்ன பலன் எனக் குறுகிய அளவில் கருதலாகாது என்பதே கருத்தெனக் கொள்ள வேண்டும். நமது செயல்களினால் பிறருக்கோ சமுதாயத்துக்கோ ஏற்படக்கூடிய பலன்களைக்கூடக் கருதலாகாது என்பது கருத்தல்ல. இன்னும் ஆழ்ந்து நோக்குவோமாயின், நாம் நம் நலத்தைவிடச் சமுதாய நலத்தைக் கருதியே ஒவ்வொரு செயலையும் மேற்கொள்ள வேண்டுமென்பதே கீதாவாசகத்தின் உட்கிடை என்றுகூடத் தோன்றுகிறது.”

(இந்திய தத்துவஞானம் - பக்கம் -73)

 அடுத்தச் சுலோகமும் பலனை எதிர்பாராத உழைப்பைப் பற்றியே பேசியுள்ளது.

 பாமர மக்கள் தங்களின் செயல்களில் பலனை எதிர்ப்பார்த்தே செய்கின்றனர், அறிவாளிகள், தங்களது கர்மங்களை உலகத்திற்கு நன்மை ஏற்பட வேண்டும் என்று செயலில் பற்று வைக்காமல் செய்கின்றனர் (3:25) என்கிறது கீதை.

 பலனை எதிர்பார்க்காமல் செயல்படுவது அவ்வளவு எளிதானது அல்ல. அதனால் தான் கிருஷ்ணன், செய்கின்ற செயல்களை இறைவனிடம் அர்ப்பணித்துச் செய்யும்படி கூறுகிறார். அனைத்து கர்மங்களையும் தன்னிடத்தில் சமர்ப்பணம் செய்துவிட்டு, “தான் ஆத்மா” என்ற அறிவுடன், பலனில் ஆசையில்லாதவனாய், தன்னுடையது என்ற பற்று இல்லாதவனாய் இருந்து கொண்டு, மனத்துயரம் முற்றிலும் நீங்கியவனாய் செயல்பட வேண்டும் என்கிறார் கிருஷ்ணனர் (3:30).

 தனது இந்தக் கொள்கையை நம்பிக்கையுடனும், பொறாமை ஏற்படாமலும் பின்பற்றுபவர்கள், கர்மப் பிடிப்பில் இருந்து விடுபட்டு, புதிய வினை ஏற்படாத காரணத்தால் சம்சாரக் கடலில் இருந்து விடுபடுவர் என்கிறார் கிருஷ்ணனர்.

 இந்தச் சுயதர்மம் என்பது, அவரவர் திறமைக்கு ஏற்ப வகுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கீதையின் அடுத்தச் சுலோகம் பிறப்பின் அடிப்படையில் சுயதர்மத்தை வலியுறுத்துகிறது.

 வர்ணதர்மம் அதாவது சாதியம் என்பது அந்தக் கால சமூக ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தச் சுலோகத்தில் திறமையாகப் பிறர் தர்மத்தை செய்வதைக்காட்டிலும், குறைவுடையதாயினும் தன் சொந்த தர்மத்தை பின்பற்றுவது சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது.

 

"பிறருடைய சுயதர்மத்தை நன்றாகச் செய்வதைவிட, குறைவுடையதாக இருந்தாலும் சுயதர்மத்தைப் பின்பற்றுவதே சிறப்பானது ஆகும். தன்னுடைய சுயதர்மத்தை செய்து மரணம் ஏற்பட்டாலும் சிறப்பானதே, ஏனென்றால் பிறருடைய சுயதர்மம் பயத்தை ஏற்படுத்தும்." (கீதை: 3:35)

 சுயதர்மத்தை அதாவது பிறப்பால் ஏற்படுகிற தொழிலை செய்யாது மீறப்படுவதைக் கீதை ஏற்றுக் கொள்ளவில்லை. அர்ச்சுனனும், முதல் அத்தியாயத்தில்; போரினால் குலதர்மம் அழியும், குலதர்மம் அழிந்தால் குலம் முழுதும் அதர்மம் பரவும், குலப் பெண்கள் கற்பை இழப்பர், பெண்கள் கெட்டால் வர்ண கலப்பு - சாதி கலப்பு ஏற்படும், சாதி கலப்பால் காலம்காலமாகக் கடைபிடித்துவந்த சாதி தர்மமும், குல தர்மமும் அழிவடையும் என்று கூறி போரிட மறுக்கிறான். அரசனுக்கும், மதத்துக்கும், தத்துவத்துக்கும் சாதி தர்மத்தை காப்பது கடமையாக இருக்கிறது.

 விருப்பம் இல்லாவிட்டாலும், பலவந்தமாக ஏவப்பட்டவனைப் போல் எதனால் தூண்டப்பட்டு, மனிதன் பாவத்தை செய்கிறான் என்று கிருஷ்ணனிடம் அர்ச்சுனன் கேட்கிறான் (கீதை: 3:36). மனிதன் இந்த உலகில் பாவம் செய்வதற்கு விருப்பம், கோபம், இன்பம், பற்றுதல், அகங்காரம், பொறாமை போன்றவை காரணம் ஆகிறது என்று கிருஷ்ணன் பதிலளித்தார்.

 

"பொருட்களில் விருப்பும் வெறுப்பும் கொள்வது புலன்களின் இயல்பு, யாவரும் அவற்றிற்கு வசப்படக்கூடாது. ஏனெனில் அவை மனிதனின் எதிரிகள்." (கீதை: 3:34)

 சம்சாரத்துக்கு, எதிரியாக இருப்பது, பெரும்பாவமாகக் கருதுகிற ஆசையும், கோபமும் தான். ஆசையே அனைத்துப் பாவத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. இன்பம்-துன்பம், ஏற்ற-இறக்கம் என்பது போன்ற இருமைகள் நிறைந்த இந்தச் சம்சாரத்தில், அடைய முடியாத, நிறைவு செய்ய முடியாத ஆசைகள் மனிதனுக்கு நிரந்தர எதிரி ஆகும். புலன்களும், மனமும், புத்தியும் ஆசையின் இருப்பிடமாகும். இந்த ஆசைகள் உண்மையான ஞானத்தை மறைக்கின்றன என்பது வேதாந்தக் கருத்தாகும்.

 முதலில் புலன்களைக் கட்டுப்படுத்தி, அறிவையும் தெளிவையும் அழிக்கின்ற பாவத்தின் வடிவமாக உள்ள ஆசையை வெல்ல வேண்டும். ஆசையை வெல்வதற்கு ஆத்மாவை நாட வேண்டும் என்கிறது கீதை.

 புலன்களைவிட மனம் சக்தி வாய்ந்தது, மனதைவிடப் புத்தி சக்தி வாய்ந்தது, புத்தியைவிட ஆத்மா சக்தி வாய்ந்தது. புத்தியைவிட மேலான ஆத்மாவை அறிந்து ஆசை என்னும் எதிரியை ஆத்மாவினால் அடக்கி வெல்ல வேண்டும். (3:42-43) புலன்களைக் கட்டுப்படுத்த ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்கிறது கர்ம யோகம்.

 ஏற்றத்தாழ்வான இந்தச் சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால், தமது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, அதனால் கிடைக்கும் பலனில் நாட்டம் இல்லாது செயற்பட்டால் மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து அவதிப்படாமல், முக்தி பெறலாம்.

 ஏற்ற-தாழ்வான இந்த வர்க்க சமூகத்தில், முக்தி கோட்பாடு உழைப்பை சுரண்டும் வர்க்கத்துக்கு சாதகமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு முக்தி கோட்பாடு பாதகமாக இருக்கிறது. இந்தத் தத்துவம் உலகில் காணும் பிரச்சினைகளுக்கத் தீர்வை கொடுக்காமல் அதனை அப்படியே ஏற்க வைக்கிறது. முக்தியைப் பற்றி பேசும் தத்துவங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்ற-தாழ்வான இந்த சமூகத்தில் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானது ஆகும். ஏன் என்றால் அது இந்த சமூகத்தை மாற்றுவதற்கு எதிராகவும், இருக்கும் சமூகத்தை அப்படியே காப்பதற்கும் போராடுகிறது.

       முக்தி கோட்பாடான கருத்துமுதல்வாதம் சுரண்டலாளர்களின் நலனை பிரதிபலிக்கிறது, பொருள்முதல்வாதத் தத்துவம் உழைக்கும் மக்களை விடுவிக்கிறது. அது எப்படி என்பதை பொருள்முதல்வாதத் தத்துவம் பற்றிய வகுப்பில் பார்ப்போம்.

பொருளடக்கம்

No comments:

Post a Comment