Sunday, 26 June 2022

9. பகவத் கீதை எளிய அறிமுகம் - 1 ( பக்தி யோகம்)

 (“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

68 வது வார வகுப்பு – 25-06-2022)

 மகாபாரதத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட கீதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் பகவத் கீதை. பகவத்கீதை என்றால் பகவானின் கீதை என்று பொருள்படும். கீதை என்றால் பாடல், இங்கே பகவான் உபதேசித்த பாடல் என்று பொருள் கூறப்படுகிறது.

 கீதையை ஒர் இடைச்செருகல் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்ன இருந்தாலும் இன்றைய நிலையில் பகவத் கீதை, இந்துக்கள் என்று சொல்லப்படுகின்ற மக்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும். அதனால் கீதையை இடைச்செருகல் என்று கூறி கடந்துவிட முடியாது.

 மகா பாரதத்தில் உள்ள பகவத் கீதையைத் தனியே எடுத்து அதற்கு மட்டும் பலர் விரிவுரை எழுதி உள்ளனர். பகவத்கீதை ஒரு தனிநூலாகப் பல ஆண்டுகளாக பதிப்பிக்கப்படுகிறது, மேலும் இன்று இந்திய மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இதுவாகும். தமிழில் மட்டும் இருபத்தைந்துக்கு மேலான மொழியாக்கங்கள் வந்துள்ளன. தத்துவ அறிஞர்கள் மட்டுமல்லாது, இந்து பொதுப் பக்தர்களும் இந்த நூலை அதிகம் வாசிக்கின்றனர், பலர் வாசிக்க விரும்புகின்றனர். இந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

 மகா பாரதத்தில் பீஷ்ம பர்வத்தில், அத்தியாயம் 25 முதல் 42 வரை கிருஷ்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே பகவத்கீதை என்று அழைக்கப்படுகிறது.

 கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற பங்காளி சண்டையால் போர் மூண்டது. இந்தப் போர் குருச்சேத்திரம் என்னும் இடத்தில் நடைபெற்றது.

 போர்க்களத்தில், போர் துவங்கும் போது அர்ச்சுனன், தனக்கு எதிரில் உள்ள தன்னுடைய நெருங்கிய உறவினர்களையும், தமது குருவையும் கண்டு, மனம் தளர்ந்து, மதிமயங்கி தன் கையில் உள்ள வில்லைத் தூக்கி எறிந்து போரிட மறுக்கிறான். அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக உள்ள கிருஷ்ணன், இந்தப் போர் உறவினர்களுக்கு இடையேயானது அல்ல, தர்மம் நிலைநிறுத்துவதற்காக நடைபெறும் சத்திரியப் போர். ஒர் அரசன் தனது நாட்டில் தர்மத்தை நிலைநிறுத்துவதற்குப் போர் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தப் போரை நடத்துவதே சத்திரியரின் கடமையாகும் என்று கிருஷ்ணன் உபதேசிக்கிறார்.

 அர்ச்சுனனின் தடுமாற்றத்தைப் போக்குவதற்காக, சத்திரியருடைய கடமையை கர்ம யோகமாக வலியுறுத்தும் தத்துவ போதனையே பகவத்கீதை.

 அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெறும் இந்த உரையாடல், பதினெட்டு அத்தியாயமாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு    யோகமாகக் கூறப்பட்டுள்ளது.

 பகவத் கீதையில் மொத்தம் 700 சுலோகங்கள் காணப்படுகின்றன. இதில் திருதராஷ்டிரன் பேசியது-1, சஞ்ஜயன் பேசியது-39, அர்ச்சுனன் பேசியது-86, கிருஷ்ணன் பேசியது-574.

 பகவத் கீதையைச் சிலர் கொலையைத் தூண்டும் கொலை நூல் என்றும், தத்துவத்தைக் கூறும் தத்துவ நூல் என்று பலவாறு கூறிவருகின்றனர். காந்தி போன்றோர்களால், பதினெட்டு நாள் ரத்தக்களறியான போர்க்களத்தை வெறும் மனப் போராட்டமாகக்கூடக் கூற முடிகிறது.

 நான்கு வர்ணாசிரமத்தில் இரண்டாவதான சத்திரியரின் கடமை, நாட்டைப் பாதுகாப்பது என்கிறது வர்ணாசிரம தர்மம். பாதுகாப்பதற்கானப் போரில் அரசன் ஈடுபட வேண்டியிருக்கும். போரில் பலர் மடிய நேரிடும். வர்ணாசிரமத்தின் அடிப்படையில் பார்த்திடும்போது, இதனைக் கொலை நூலாகக் கூறிடமுடியாது. அதாவது வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீதையை கொலை நூலாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

 இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது, பகவத் கீதையில் பேசுவது சுயதர்மமே. சுயதர்மம் என்றால் வர்ணாசிரம தர்மமே, வர்ணாசிரம தர்மம் என்றால் சாதிய தர்மமே, சாதிய தர்மம் என்றால் பிறப்பின் அடிப்படையில் செயலை அதாவது கர்மத்தை வலியுறுத்துவதே. கீதையில் சுயதர்மத்துக்குத் தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

"பிறருடைய சுயதர்மத்தை நன்றாகச் செய்வதைவிட, குறைவுடையதாக இருந்தாலும் சுயதர்மத்தைப் பின்பற்றுவதே சிறப்பானது ஆகும். தன்னுடைய சுயதர்மத்தை செய்து மரணம் ஏற்பட்டாலும் சிறப்பானதே, ஏனென்றால் பிறருடைய சுயதர்மம் பயத்தை ஏற்படுத்தும்." (கீதை 3:35)

       அதாவது, சாதியப்படி ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை சிறப்பாக செய்ய முடியாது போனாலும் அதையே செய்ய வேண்டும், அடுத்த சாதியின் கடமையை சிறப்பாக செய்ய முடியும் என்றாலும் அதனை செய்யாதே என்று கீதை போதிக்கிறது.

 மேலும் இறைவனான கிருஷ்ணன் தானே வர்ணாசிரமத்தைப் (சாதிய அமைப்பைப்) படைத்ததாகவும் கூறியுள்ளார்.

 

"மனிதர்களின் குணம் மற்றும் செயல்களின் வேறுபாட்டிற்கு ஏற்ப அவர்களை நான்கு வர்ணமாக (சாதுர்வர்ணயம்) நான் படைத்தேன். இவ்வாறு செய்தவன் நான், எனினும் என்னை அப்படிச் செய்யாதவனாகவும், மாற்றங்கள் இல்லாதவனாகவும் அறிந்துகொள்." (கீதை:4:13)

 ராமானுஜரின் இந்தப் பகுதிக்கான விளக்கத்தைப் படிக்கும் போது, இங்கே பேசுவது தத்துவத்தின் அடிப்படையில் சுயதர்மம் வலியுறுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ராமானுஜர் சுயதர்மத்தை கர்ம யோகமாகவும், அதை மீறி செய்வதை ஞான யோகமாகவும் கருதுகிறார்.

ராமானுஜர்:-

"கர்மயோகம் ஞானயோகத்தினும் சிறந்தது. எளிதாகக் கைக்கூடி வருவதாலும், குறைவோடு செய்யினும், தடையற்றிருப்பதாலும், ஒருவனுக்கு இயற்கையானதாக இருப்பதாலும், தன் கருமத்தைச் செய்வதே நல்லது. மறுபுறம், ஞானயோகம் மிக நன்றாகக் கடைப்பிடித்தாலும், பிறரின் சுயதர்மத்தை சார்ந்தே இருக்கும். அதனால், தடை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கர்மயோகம் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டது. ஆகையால், அதைப் புரியும்போது உயிர் துறப்பினும் மேல்; ஏனெனில், அடுத்தப் பிறவியில் மேலும் சிறப்பாக இதனைத் தடையின்றி நடத்த அனுபவமிருக்கும். இயற்கையோடு ஒன்றியவர்களின் துணையோடு ஆற்றப்படும் ஞானயோகம் அச்சத்திற்குரியது. இன்னொருவனின் கடமை, நம் கடமையாவது எப்படி?"

(ராமானுஜரின் கீதைப் பேருரை)

 “பிரம்மம் உண்மையானது உலகம் மாயையானது” (பிரம்ம சத்தியம் ஜகத் மித்ய) என்று கூறுகிற சங்கரரும், வியவகார உலகில் பன்மை இருப்பதையும் ஏற்றுக் கொள்கிறார், வர்ணாசிரமத்தையும் ஏற்றுக் கொள்கிறார். இருந்தாலும் இதனை வெறும் வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் நூலாக மட்டும் பார்க்க முடியாது. தத்துவ விவாதங்களும், விளக்கங்களும் கொண்டுள்ள நூலாகக் கொள்ள வேண்டும்.

 வர்ணாசிரம தர்மத்துக்கு தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவதில் தவறில்லை.

 தத்துவம் கதைவடிவமாகவும், உரையாடல் மூலமாகவும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. பிரஸ்தானத்திரயமான உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய மூன்றினில் பகவத் கீதை மக்களிடையே பிரபலமாகக் காணப்படுகிறது.

 பகவத் கீதையில் அர்ச்சுனனை முன்வைத்து பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் போன்ற யோகங்கள் விளக்கப்பட்டுள்ளன.

 அர்ச்சுனனுக்குக் கர்ம யோகமே அவசியமாகும், ஏனென்றால் அர்ச்சுனன் ஒரு சத்திரியன். இருந்தாலும் அவனுக்கு ஏன் ஞான யோகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பங்காளிகளின் மரணத்தைப் பற்றி அர்ச்சுனன் அதிகமாகக் கவலை கொண்டு போரை தொடராது, மனம் தளர்ந்து போனான், அதனால் கிருஷ்ணனால் "உடலைப் பற்றித் தேவையின்றிக் கவலைக் கொள்ளாதே, அழிவது உடல்தான், ஆத்மா அல்ல" என்று ஞான யோக வழியிலான விளக்கம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

 உண்மையில் அர்ச்சுனன் கர்ம யோகத்திற்கு உரியவன்தான். ஞான யோகத்திற்குச் செல்ல வேண்டுமானால், மாறிக் கொண்டும் அழிந்து கொண்டும் இருக்கின்ற இந்த உலகம் நித்தியமற்றது, ஆத்மாவே நித்தியமானது என்கிற விவேகத்தின் மூலம் வைராக்கியம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் ஏற்பட்டதோ மதிமயக்கம், இந்த மதிமயக்கத்தை ஞான யோகத்துக்கு உரிய வைராக்கியமாக கருத முடியாது.

       ஞான யோகத்தை கடைபிடிக்க வேண்டுமானால், உலக வாழ்வை வெறுக்கும் அளவுக்கு வைராக்கியம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றிருக்காத ஒருவர் ஞான யோகத்தைக் கடைப்பிடிக்க முடியாது. உலகை வெறுக்கும் அளவுக்கு அர்ச்சுனன் வைராக்கியம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

 கர்ம யோகத்தின்படி சத்திரியன் போர்புரிவது தவறானது அல்ல. ஞான யோகத்தின்படி ஆத்மாவே அழிவில்லாதது, அழியக்கூடிய இந்த உடலைப் பற்றிக் கவலைப்படாது, சத்திரியனின் கடமையான போரைப் புரிந்து, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கிருஷ்ணன், கர்ம யோகியான அர்ச்சுனனுக்கு ஞான யோகத்தையும் சேர்த்துப் போதித்துள்ளார். சம்சாரத்தில் இருந்து விடுபட்டவர்களுக்கே ஞான யோகம் உரியதாகும். ஆனால், அர்ச்சுனன் சம்சாரத்தையோ, அரசையோ விடுத்தவன் அல்ல. அர்ச்சுனனுக்கு கர்ம யோகத்தை வலியுறுத்துவதற்கே ஞான யோகம் கூறப்பட்டுள்ளது.

 கர்மத்தை கைவிடுதல் என்கிற ஞான யோகத்தையும், கர்மத்தை செய்யாமல் இருக்காதே என்று கர்ம யோகத்தையும், கிருஷ்ணன் போதிக்கும் போது அர்ச்சுனனுக்கு குழம்பம் ஏற்படுகிறது. அதாவது கர்மத்தை கைவிடு என்கிற ஞான யோகத்தையும், கர்மத்தை செய்யாமல் இருக்காதே என்று கர்ம யோகத்தையும் சேர்த்து கிருஷ்ணன் போதிக்கும் போது அர்சுனனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

 பங்காளிகளைக் கொல்வதில் அவனுக்கு ஏற்பட்ட குழப்பம் இப்போது தத்துவக் குழப்பமாக மாறிவிட்டது.

  அர்ச்சுனன்:-

"கிருஷ்ணா! செயல்களை விடுவது பற்றியும் கூறுகிறாய், அதேநேரத்தில் கர்மயோகம் செய்வது பற்றியும் கூறுகிறாய். இவற்றுள் எது சிறந்தது என்று நன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளதோ அதையே எனக்குக் கூறுவாயாக." (கீதை 5:1)

 கிருஷ்ணன்:-

"செயல்களை விடுவது, கர்மயோகத்தில் ஈடுபடுவது ஆகிய இரண்டும் உயர்ந்த பயனையே கொடுப்பவை. அவற்றுள், செயல்களை விடுவதைவிடக் கர்மயோகம் சிறந்தது.

 

யார், (எதன் மீதும்) விருப்பு-வெறுப்பு இல்லாது இருக்கிறானோ அவனே துறவி, ஏனெனில் இருமைகள் அற்றவன் பந்தத்தில் இருந்து எளிதில் விடுபடுகிறான்.

 

செயல்களை விடுவது, செயல்களில் ஈடுபடுவது இரண்டும் வெவ்வேறானவை என்று சிறுவர்களே கூறுவர். பண்டிதர் அவ்வாறு கூறுவதில்லை. இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் உரிய முறையில் கடைப்பிடித்தவன் இரண்டையும் பின்பற்றிய பயனை அடைகிறான்." (கீதை 5:2-4)

 கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய இரண்டில் ஒன்றை உரிய முறையில் சிறப்பாக கடைப்பிடித்தவன் இரண்டையும் பின்பற்றிய பயனை அடைவதாக இங்கே கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தைத் துவைதிகளும், விசிட்டாத்வைதிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஞான யோகத்தை முன்னிறுத்திருகிற அத்வைதிகள் இந்த இடத்துக்கு வேறுவிதமாக விளக்கம் கொடுக்கின்றனர்.

 இந்தக் கீதைப் பகுதியில் கூறப்பட்டதை நேரடிப் பொருளாகத் துவைதமும், விசிட்டாத்வைதமும் விளக்குகின்றன. அத்வைதம் பின்னால் கூறப்பட்டதை இணைத்து கர்ம யோகமும், ஞான யோகமும் எவ்வாறு வெவ்வேறானது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதனை சங்கரரின் பகவத்கீதையின் விரிவுரையில் காணலாம்.

 கீதையில் கர்மத்தைத் துறப்பதைவிட, கர்மயோகம் சிறந்தது என்று கூறப்படுவதற்குச் சங்கரர் அளிக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.

 

"கர்மத்துறவு, கர்மயோகம் எனும் இவையிரண்டும் ஆன்மீக ஞானத்திற்குக் காரணமாதலினால், முக்தியை அளிக்கின்றன. இவையிரண்டுமே முக்தியளிப்பவைதான், என்ற போதிலும் ஞானமில்லாத கர்மத் துறவை காட்டிலும், கர்மயோகம் சிறந்தது..." (கீதை பேருரை 5:2)

 மேலே சங்கரர் தமது மறுப்பைத் தெளிவாக முன்வைத்துள்ளார்.

 

"..நீ சாதாரணக் கர்மத் துறவினையும், சாதாரணக் கர்ம யோகத்தையும் மனதில் கொண்டு அவற்றுள் எது சிறந்தது என்று கேட்டாய், அதற்கு நான் ஞானத்தினைக் குறிப்பிடாது, கர்ம யோகம், கர்மத் துறவினை விடச் சிறந்தது என்று பதிலளித்தேன்."

(கீதை 5:5 பேருரை)

 கீதையில் காணப்படும் தத்துவக் குழப்பத்தைச் சங்கரர் இங்கே நீக்குகிறார்.

 கர்மத்தை கர்மயோகமாகச் செய்யும் போது மனத்தூய்மை (சித்தசுத்தி) ஏற்படுகிறது. அந்த மனத் தூய்மையானது, ஞான யோகம் செய்வதற்குத் துணை செய்கிறது என்பதே சங்கரரின் கருத்தாகும். கர்ம யோகம் செய்யும் போது எது நித்தியமானது எது அநித்தியமானது என்பதில் தெளிவு பெற்று வைராக்கியம்  ஏற்படுவதையே மனத்தூய்மை (சித்தசுத்தி) என்று அத்வைதத்தால் கூறப்படுகிறது.

 

"ஒரு வேலைக்காரன் தனது எசமானனுக்காகப் பணி செய்வது போல், "நான் ஈஸ்வரனுக்காகக் கர்மங்களைச் செய்கிறேன்" என்று அனைத்துக் கர்மங்களையும் ஈசுவரனுக்கு அர்ப்பணித்து முக்தி என்னும் பயனிலும் பற்றின்றி அவற்றைச் செய்பவனைத் தாமரை இலை தண்ணீர் போல் பாவம் தீண்டுவதில்லை. அவன் செய்த கர்மத்தின் பயனாக எய்தப் பெறுவது சித்தசுத்தி (மனத்தூய்மை) என்ற ஒன்றினைத் தவிர வேறில்லை." (கீதை 5:10 பேருரை)

 சங்கரர் தமது கருத்துக்கு ஆதரவாக அடுத்த சுலோகத்தைப் பயன்படுத்துகிறார்.

 

"யோகிகள் பற்று நீங்கி ஆத்ம சுத்திக்காக உடலாலும், மனத்தாலும், புத்தியாலும், வெறும் புலன்களாலும் கர்மத்தை செய்கின்றனர்." (கீதை 5:11)

 சுலோகத்தில் ஆத்ம சுத்தி என்று கூறப்பட்டுள்ளது. இதைச் சங்கரர் சித்தசுத்தி (மனத்தூய்மை) என்று விளக்குகிறார். அதற்கு அடுத்து இந்த விளக்கத்தில் சத்திரியனான அர்ச்சுனனின் அதிகாரத் தன்மை கூறப்பட்டுள்ளது.

 இந்து மதத்தில் ஒரு தனி மனிதனின் முன்னேற்றத்துக்காக நான்கு ஆசிரம தர்மங்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம். இந்த நான்கில் வானபிரஸ்தம், சந்நியாசம் ஆகியவற்றுக்கு முன்பானதே அர்ச்சுனனுக்கு உரியது. முதல் இரண்டு ஆசிரமத்துக்கு உரிய யோகம் கர்ம யோகம். இறுதி இரண்டு ஆசிரமத்துக்கு உரிய யோகம் ஞான யோகமாகும். ஆசிரம தர்மத்தின்படி அர்ச்சுனனுக்கு கிருஷ்ணனால் கர்ம யோகம் போதிக்கப்பட்டுள்ளது.

 சங்கரரின் கீதை விரிவுரையின் முகவுரையில், இவ்வுலகம் நிலைபெறுவதற்காகப் பிரவிருத்தி, நிவிருத்தி என்கிற இரண்டு தர்மத்தை வேதம் எடுத்துரைக்கிறது என்கிறார். பிரவிருத்தி தர்மம் கர்ம யோகத்தையும், நிவிருத்தி தர்மம் ஞான யோகத்தையும் குறிப்பிடுகிறது.

 அடுத்து பக்தி யோகத்தையும், கர்ம யோகத்தையும், ஞான யோகத்தையும் கீதையை அடியொற்றி தொடர்ந்து பார்ப்போம். இன்றைய வகுப்பில் பக்தி யோகத்தை மட்டும் பார்க்கப் போகிறோம். அடுத்த வார வகுப்பில் கர்ம யோகத்தையும், ஞான யோகத்தையும் சேர்த்துப் பார்க்கலாம்.

 பக்தி யோகம்

 யோகம் என்றால் ஒன்றித்து இருத்தல் என்பதாகும். ஐம்புலன்களை அடக்கி, சமபுத்தியுடன், எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாது, தன்னை உணர்தலே யோகம்.

  இன்னும் நுட்பமாகச் சொல்ல வேண்டுமென்றால், யோகம் என்பது சித்தத்தில் ஏற்படும் விருத்திகளை அடக்குதல். அதாவது மனதில் ஏற்படுகிற ஆசைகளை அடக்கி மனதிலேயே ஒன்றித்து இருத்தல். இதுவே யோகம் பற்றிய வைதீக யோகிகளின் கருத்து.

 துவைதம், விசிட்டாத்வைதம் போன்ற தத்துவவாதிகள் பக்தி யோகத்தினாலேயே மன அமைதியும், முக்தியும் கிடைக்கும் என்று கூறுகின்றனர். ஞான யோகமே சிறந்தது என்று அத்வைதம் போன்ற தத்துவவாதிகள் கூறுவர்.

 பக்தி யோகமே ஆன்மீக வாழ்வின் தொடக்கம் ஆகும். இது ஞான யோகத்தைவிட எளிமையானது. ஞான யோகத்தைக் கடைப்பிடிப்பது கடினம், அதுமட்டும் அல்லாது பலன் கிடைப்பதற்குத் தாமதமாகும். பக்தி யோகம் எளிமையானது மட்டுமில்லாது, அதற்கான பலனும் விரைவில் கிடைக்கும் என்று பக்தி யோக அறிஞர்கள் கூறுகின்றனர்.

 இறுதிப்பலனான முக்தியை, ஞான யோகம் மட்டுமே தரும் என்றே அத்வைதம் கூறுகிறது. அத்வைதம் வியவகார உலகை அவித்தை என்றே கருதுகிறது. அவித்தை என்றால் அறியாமை. அறியாமை அறிவுக்குத் தடையாகும், அறிவுக்கு அறியாமை வழிகாட்ட முடியாது என்பதே அத்வைதம். மற்ற யோகங்கள் மனத்தூய்மையை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அதாவது ஞான யோகத்தை மேற்கொள்வதற்கான மனதை அது தயார் படுத்தலாம். ஆனால், அது ஞான யோகத்திற்கு முதற்படியாகவோ, முக்திக்கு வழிகாட்டும் என்றோ கூறிட முடியாது என்பதே அத்வைதத்தின் கருத்தாகும்.

 பக்தி என்பது தேவைப்படுவதை இறைவனிடம் கேட்டு எதிர்ப்பார்ப்பது, பக்தி யோகம் என்றால் அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து பலனை எதிர்பார்க்காதது.

 பக்தியானது பக்தனையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. இறைவனைப் பக்தன் நாடுவதற்குப் பக்தியே எளிமையான வழியாகும். மனம் உவந்து பக்தன் தருகிற எதையும் இறைவன் மிகத் திருப்தியோடு ஏற்கிறான்.

 கிருஷ்ணன் கூறுகிறார், “எனக்கு, இலை, மலர், பழம், நீர் போன்றவற்றைத் தூய மனத்துடன் பக்தியோடு அளிப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” (9:26). குசேலனின் அவலை அன்போடு ஏற்றவன் இந்தக் கிருஷ்ணன் என்பதைக் கதைகளிலும் கூறப்பட்டுள்ளது.

 மேலும் மிகக் கொடியவனாக இருந்தாலும், வேறு எதையும் நினைக்காமல் என்னையே வழிபடுகிறவன் அவன் நல்லவனாகவே கருதப்படுகிறான். ஏனென்றால் அவனது நோக்கம் சரியானது (9:30) என்கிறார் கிருஷ்ணன். அனைவரும் தன்னை அடைந்தால் நற்கதி அடைவர் என்பதாக கிருஷ்ணனின் போதனையாக இருக்கிறது.

 “பெண்களும், வைசியர்களும், அதேபோலச் சூத்திரர்களும், கீழ்குலத்தில் பிறந்தோர்களும் என்னைச் சரணடைவதினால், நற்கதி அடைகின்றனர் (9:32). அதாவது, வேதத்தை ஓதுவதற்குரிய அதிகாரமில்லாத இத்தகையவர்கள் கிருஷ்ணனை சரணடைந்தால் உயர்ந்த கதியினை எய்துகின்றனர்.

 ஆக அனைவருக்கும் பக்தியே இறைவனை அடைவதற்கு எளிதான வழியாக இருக்கிறது என்று பக்தியோகத்தை ஆதரிக்கும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

 வைணவம் பக்தியைவிட பிரபத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. பக்தி என்றால் இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பது, பிரபத்தி என்றால், “வேண்டியது எது என்று எனக்குத் தெரியாது. இறைவனே, எனக்கு எது தகுமோ அதை கொடு” என்று சரணடைவது சரணாகதி. சராணாகதி அடைவதே பிரபத்தி. 

       பிரபத்தியை விளக்கும் சுலோகம் 18வது அத்தியாயத்தில் உள்ளது.

 

“எல்லா தர்மங்களையும் விட்டு, என்னை ஒருவனையே சரணாமாக அடைவாயாக! நான் உன்னை அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன், வருத்தப்படாதே.” (கீதை:18.66)

 இறைவனை முழுமையாக சரணடைந்தால், அடைந்தவனின் பாவங்கள் அதாவது வினைகள் அனைத்தும் விடுவிக்கப்படும். சுலோகத்தில் மோட்சம் என்ற சொல் வந்துள்ளது, மோட்சம் என்றால் விடுவித்தல் என்பதே பொருளாகும்.

 கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயம் பக்தி யோகமாகும். அதில் காணப்படும் கருத்துக்களைத் தொகுப்போம்.

       தனது உடலின் மீது பற்றுக் கொண்டவர்களுக்கு நிர்குண பிரம்மத்தை வழிபடுவது சிரமமாகும். நிர்குண பிரம்மம் என்றால் வடிவமற்ற சக்தி, சகுண பிரம்மம் என்றால் உடல் வடிவம் கொண்ட கடவுள். ஆத்ம ஞானம் பெறாதவர்கள் சகுண பிரமத்தையே வழிபவடுவர். அதாவது பொதுமக்களுக்கு சிலை வடிவில் உள்ள கடவுளை வழிபடுவதே எளிதாக இருக்கும் என்று பக்தி யோகிகள் கூறுகின்றனர்.

 சகுண பிரம்மத்தைப் பற்றி பேசுவது (மதம்) இறையியல் (Theology), நிர்குண பிரம்மத்தைப் பற்றி பேசுவது தத்துவம் (Philosophy).

 பக்தி யோகமாக இருந்தாலும் சரி, கர்ம யோகமாக இருந்தாலும் சரி, ஞான யோகமாக இருந்தாலும் சரி இதனைப் பின்பற்றுபவனின் இறுதியான குறிக்கோள், சம்சாரத்தில் இருந்து விடுபடுவதே ஆகும். பக்தி யோகத்தில் ஈடுபட்டவர்கள் சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தான் செய்யும் அனைத்து செயல்களையும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அப்படிப்பட்டவனே மரணத்தை ஏற்படுத்தக்கூடிய சம்சாரக் கடலை கடந்தவன் ஆகிறான்.

 

யார் அனைத்துச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, என்னையே மேலான கதியாகக் கொண்டு வேறெதையும் நாடாத யோகத்தால் என்னையே தியானித்து வழிபடுகிறார்களோ, என்னிடம் மனதைச் செலுத்துகின்ற அவர்களை மரணம் நிறைந்ததான சம்சாரக் கடலில் இருந்து விரைவில் கரையேற்றுகிறேன். (கீதை 12:6-7)

 இறைவனை அடைந்தவர்கள் பிறவிக்கடலைக் கடக்கின்றனர் என்று கூறிய கிருஷ்ணன், தொடர்ந்து அதற்கான வழியினையும் கூறுகிறார்.

 

என்னிடம் மனதை உறுதியாக நிறுத்துவதற்கு முடியாவிட்டால் ஈடுபாட்டுடன் கூடிய இடைவிடாத பயிற்சியால் என்னை அடைய முயற்சி செய். ஒழுங்காகப் பயிற்சியில் ஈடுபட முடியாது போனால், எனக்காக வேலை செய். எனக்காக வேலைகளைச் செய்வதன் மூலம் நிறைநிலையை அடைவாய். இதையும் செய்ய முடியாது போனால், பிறகு என்னில் இணைந்தவனாக, தஞ்சம் அடைந்தவனாக, சுயக்கட்டுப்பாட்டுடன் வேலை செய்து, அனைத்து வேலைகளின் பலன்களையும் (தியாகம்செய்) துறந்துவிடு. பயிற்சியைவிட ஞானம் மேலானது, ஞானத்தைவிட ஆழ்ந்த சிந்தனை சிறந்தது. ஆழ்ந்த சிந்தனையைவிட வேலைகளின் பலன்களைத் துறப்பது மேலானது. ஏனெனில் தியாகத்தில் இருந்து விரைவில் அமைதி கிடைக்கிறது.”

(கீதை 12:9-12)

 இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்து அமைதி நிலையினைப் பெற வேண்டுமானால், மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் கிருஷ்ணன் பட்டியலிடுகிறார். அப்படிப்பட்டவனே கிருஷ்ணனுக்குப் பிரியமானவனாக ஆகிறான். அந்தப் பிரியமானவன் துக்கமயமான இந்தச் சம்சாரத்தைக் கடக்கிறான்.

 

எந்த உயிரிடமும் வெறுப்பற்றவனாக, நண்பனாக, கருணை உடையவனாக, எனது என்ற எண்ணம் இல்லாதவனாக, ஆணவம் அற்றவனாக, சுக துக்கங்களில் சமமாக இருப்பவனாக, பொறுமை உடையவனாக, எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக, யோகியாக, சுயக் கட்டுப்பாடு உடையவனாக, அசைக்க முடியாத உறுதி உடையவனாக, என்னிடம் மனம் மற்றும் புத்தியை அர்ப்பணித்தவனாக உள்ள பக்தன் எனக்குப் பிரியமானவன்.

 

யாரால் உலகம் துன்பப்படுவதில்லையோ, யார் உலகத்தால் துன்புறுவதில்லையோ, யார் களிப்பு, கோபம், பயம், கலக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனோ அவன் எனக்குப் பிரியமானவன்.

 

ஆசையற்ற, தூய திறமைசாலியான, பற்றற்ற, பயமற்ற, அனைத்து விதத்திலும்,      தன்முனைப்புடன் செயல்புரிவதை (நான் என்கிற அகந்தை) விட்ட எனது பக்தன் எனக்குப் பிரியமானவன்.

 

யார் மகிழ்வதில்லையோ, வெறுப்பதில்லையோ, வருந்துவதில்லையோ, ஆசைப்படுவதில்லையோ, நன்மை தீமைகளை விட்டவனோ, பக்தியுடையவனோ அவன் எனக்குப் பிரியமானவன்.

 

எதிரி-நண்பன், மானம்-அவமானம், குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் போன்ற இருமைகளில் சமமாக இருப்பவன், பற்றற்றவன், புகழ்ச்சி - இகழ்ச்சி இரண்டையும் சமமாக கருதுபவன். மவுனமாக இருப்பவன். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவன். இருப்பிடம் இல்லாதவன், நிலைத்த அறிவு உடையவன், பக்தி உடையவன் எனக்குப் பிரியமானவன்.” (கீதை 12:13-19)

 உழைக்கும் மக்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவதற்கே இந்த போதனை கிருஷ்ணனால் கொடுக்கப்பட்டுள்ளது. “கிடைத்ததில் திருப்பி கொள், மேலும் எதிர் பார்க்காதே” என்பதையே மக்களிடம் இருந்து கிருஷ்ணன் எதிர் பார்க்கிறார்.

 கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவர்கள் மீது, இறைவன் பிரியப்படுகிறார் என்பதையே கீதை கூறியுள்ளது. நம் நாட்டிலும் இதையே பலர் விரும்புகின்றனர். வீட்டு வேலை செய்பவர், தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக இருப்பதையே, வீட்டு எஜமானர் விரும்புகிறார். இப்படிப்பட்ட எஜமானர், அலுவலகத்தில் தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக இருப்பதையே, எஜமானனின் மேலாளர் விரும்புகிறார், இப்படிப்பட்ட மேலாளர், தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக இருப்பதையே, முதன்மை மேலாளர் விரும்புகிறார், இப்படிப்பட்ட கம்பெனி முதன்மை மேலாளர்களையே முதலாளிகள் விரும்புவர். ஆக இறைவனுக்குப் பிரியமானது நம்நாட்டில் உள்ள பலருக்குப் பிரியமானதாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதுவும் முதலாளிகளுக்குப் பிரியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

 உழைக்கும் மக்களுக்குப் பிரியமானதை, பக்திக்கு ஈடாக, இறைவன் கொடுத்தால் சம்சாரம் செழிக்கும். இங்கேயே, இந்த உலகத்திலேயே இன்பங்கள் கிடைக்குமானால், சத்-சித்-ஆனந்த என்கிற ஆத்ம இன்பத்தை நாடமாட்டார்கள். முக்தியை விரும்ப மாட்டார்கள். ஆனால், உலகமானது சுக-துக்கம், எதிரி-நண்பன், மானம்-அவமானம், ஏற்றம்-தாழ்வு, ஏழை-பணக்காரன் போன்ற இருமையுடன் பன்மைத் தன்மை கொண்ட உலகில் ஒருமையை ஏற்படுத்த முடியாது என்று ஆன்மீகம் கருதுகிறது. அதனால் உலக வாழ்க்கை என்னும் சம்சார சுழற்சியில் இருந்து கடக்க வேண்டும் என்கிறது ஆன்மீகம்.

 சமூகத்தில் அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாது, சமமாக மதிக்கப்படும் போது, அனைத்து உழைப்பும் சமமாக மதிப்பிடப்படும் போது, அனைவருக்கும் உழைப்பின் பலன் சமமாகக் கிடைக்கும் போது, உலக வாழ்வை கடக்கப்பட வேண்டிய சம்சாரக் கடலாகப் பார்க்காமல், சம்சாரச் சாகரத்தில் ஆனந்தமாக நீந்தி மகிழ்வர். கடலின் ஆழம் தெரியாதவர்களுக்குத்தான் கடலைப் பற்றிய அச்சம் இருக்கும். கடலை ஆளத் தெரிந்தவர்களுக்குக் கடல் ஒரு வழிதடமே.

       இந்த உலகப் பிரச்சினைகளுக்கு வர்க்க முரணே காரணம் என்று அறிந்தவர், இதற்கான தீர்வை சொர்கத்திலோ, முக்தியிலோ தேடிக் கொடிருக்க மாட்டார்கள், உலகதைப் புரிந்து புரட்சிகரமாக மாற்றுவர். ஆன்மீகம் என்கிற கருத்துமுதல்வாதம் உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியவில்லை, வர்க்க முரணை புரிந்து கொண்ட பொருள்முதல்வாதத்தினால் தான் வர்க்கமற்ற உலகை நோக்கிப் பயணிக்க முடியும்.

பொருளடக்கம்

No comments:

Post a Comment