Saturday 18 June 2022

8) உபநிடதம் - பிரம்ம சூத்திரம் ஆகியவை பற்றிய எளிய அறிமுகம்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

67 வது வார வகுப்பு – 18-06-2022)

 


வேதாந்தத்தின் அடிப்படை உபநிடதத்தில் இருக்கிறது. சனாதன தர்மம், இந்துத் தத்துவம் என்று பல பெயர்களில் வேதாந்தம் அழைக்கப்படுகிறது. உபநிடதங்கள் வேத சம்கிதையின் சாரமாக வேதாந்திகள் கூறுகின்றனர். வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதி பகுதி. உண்மையில் வேத சம்கிதைக்கும் உபநிடதத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மையாகும். உலகில் நூறாண்டு காலம் சிறப்பாக வாழ்வது பற்றி வேத சம்கிதை பேசுகிறது. மனிதனின் இறுதிக் குறிக்கோளாக, சம்சாரம் என்கிற வாழ்வைத் துறந்து முக்தியை அடைவது பற்றி உபநிடதம் பேசுகிறது. வேத சம்கிதையில் முக்தி பற்றிய கண்ணோட்டம் கிடையாது. மண்ணில் மகிழ்வாக வாழ்வது பற்றியே சிறப்பாக பேசப்பட்டுள்ளது.

 முண்டக உபநிடதத்தில் உள்ள முதல் அத்தியாயம் 4-5 மந்திரத்தில் கர்ம காண்டத்தை அபர ஞானம் என்று ஞான காண்டத்தை பர ஞானம் என்று கூறப்பட்டுள்ளது. “பர" என்றால் மேலான, உயர்ந்த என்றும்; "அபர" என்றால் சாதாரண, தாழ்ந்த என்றும் பொருளாகும். ரிக், யசுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்கள், உச்சரிப்பு, சடங்குகள், இலக்கணம், அகராதி, யாப்பு, வானவியல், சோதிடம் ஆகியவை தாழ்ந்த அறிவைச் சேர்ந்தவை என்கிறது இந்த உபநிடதம். அதாவது வேத சம்கிதையை பின்பற்றுகிற அனைத்து முறையையும் இந்த உபநிடதம் தாழ்ந்த அறிவு என்று கூறியுள்ளது.

 அழிவற்ற பிரம்மத்தை அறிவதே உயர்ந்த ஞானம் என்று கூறுகிறது. அதாவது பிரமத்தை அறிவதே உயர்ந்த அறிவு என்றும் இக உலக வாழ்வில் கடைபிடிக்கப்படுவது தாழ்ந்த அறிவு என்றும் முண்டக உபநிடதம் கூறியுள்ளது. இதே நிலைப்பாட்டை அனைத்து உபநிடதங்களும் கொள்ளவில்லை, ஆனால் வேத சம்கிதைக்கும் உபநிடதத்துக்கும் உள்ள வேறுபாட்டை முண்டக உபநிடதம் தெளிவாக விளக்கியுள்ளது.

 வேதாந்தத்தின் அடிப்படையாக மூன்று நூல்கள் கூறப்படுகிறது. அதனை பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது.

 உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றும் பிரஸ்தானத்திரயம் ஆகும். எந்த நூலில் தத்துவம் நன்றாக நிறுவப்பட்டுள்ளதோ அதற்குப் பெயர் பிரஸ்தானம். முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்களையும் பிரஸ்தானத்திரயம் என்று கூறப்படுகின்றன.

 சாந்தோக்கியம், பிருகதாரண்யகம் ஆகிய இரண்டும் மிகமிகப் பழைமையான உபநிடதங்களாகும். இங்கே தத்துவ விவாதங்கள் உரையாடலாகக் காணப்படுகின்றன.

இவ்விரு நூல்களும் மற்ற உபநிடதங்களைவிட மிகவும் பெரியது. இதில் காணப்படும் தத்துவக் கருத்துக்கள் ஒர் ஒழுங்குமுறையில் முன்வைக்கப்படாமல் தனித்தனியாக, துண்டுதுண்டாகக் காணப்படுகின்றன.

 உபநிடதங்கள், ஒரு குறிப்பிட்ட முனிவரின் கருத்தை மட்டும் கொண்டதாக இல்லாது, பல முனிவர்களின் கருத்துக்கள் விரவிக்கிடக்கின்றன. முனிவர்கள் வேறுபடுவதனால் தத்துவப் போக்குகளும் வேறுபடுகின்றன, முரண்படுகின்றன.

        இந்த முரண்பாடுகளை நீக்கி, ஒருமுகப்படுத்துவதற்கு எழுதப்பட்டதே பிரம்ம சூத்திரம். ஆனால், இந்தப் பிரம்ம சூத்திரம் மிகவும் சுருக்கமாகச் சூத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் இதனைப் படித்துப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. விளக்கவுரை இல்லாமல் பிரம்ம சூத்திரத்தை நேரடியாகப் படித்துப் புரிந்து கொள்வது சிரமமானது.

 ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் பிரம்ம சூத்திரத்திற்கும், பகவத்கீதைக்கும் விரிவுரை (பாஷியம்) எழுதியுள்ளனர். உபநிடதங்களுக்கு ராமானுஜர் விரிவுரை எழுதவில்லை, ஆனால், தமது நூல்களில் விசிட்டாத்வைத தத்துவத்தை நிறுவுவதற்கு உபநிடதங்களைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். ஆதிசங்கரர், மத்துவர் ஆகிய இருவரும் உபநிடதங்களுக்கு விரிவுரை எழுதியுள்ளனர்.

 உபநிடதங்களில் காணப்படும் முரண்பாடுகளை நீக்குவதோடு, வேதாந்தத் தத்துவத்தைப் பிரம்ம சூத்திரம் உயர்த்திப் பிடிக்கிறது. அதில் சாங்கியம் முதலாகப் பல்வேறு எதிர் தத்துவங்களை விமர்சித்து வேதாந்தத் தத்துவம் நிலைநிறுத்தப்படுகிறது.

 மகாபாரதத்தில் ஒரு பகுதியாகப் பகவத்கீதை காணப்பட்டாலும் தனிநூலாகவும் மதிக்கப்படுகிறது. பிரம்ம சூத்திரத்தில் வேதாந்தத் தத்துவத்தை முன்வைத்து விமர்சித்த தத்துவங்கள், பகவத்கீதையில், வேதாந்தத்தின் பேரில் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன.

 பிரம்ம சூத்திரத்தில், பவுத்தம், சமணம் ஆகியவற்றின் தத்துவங்களை மறுக்குகின்ற அதே பிரிவில் அன்றைய நிலையில் உள்ள சைவமும், வைணவமும் மறுக்கப்பட்டுள்ளது.

       இன்றைய வகுப்பில் நாம் பிரஸ்தானதிரயத்தில் உள்ள முன்று நூல்களில் இரண்டை மட்டுமே பார்க்கப் போகிறோம். அடுத்த வகுப்பில் கீதையைப் பார்ப்போம்.

 வேதாந்தத் தத்துவப் பேரறிஞர்களான ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர்களின் தத்துவங்கள் வேறுபட்டாலும் இவர்களின் ஆதார நூல்கள் இந்தப் பிரஸ்தானத்திரயமே ஆகும்.

 மூன்று ஆச்சாரியர்களும் தங்களது கருத்துக்கள் மட்டுமே பிரஸ்தானத்திரயம் கூறுவதாகச் சாதிக்கின்றனர். ஆனால், சுவாமி விவேகானந்தர் மூன்று போக்குகளை, படிப்படியான வளர்ச்சி நிலையாகப் பார்க்கிறார். துவைதம் தொடக்க நிலை தத்துவமாகவும், விசிட்டாத்வைதம் இடைப்பட்ட தத்துவமாகவும், அத்வைதம் இறுதி நிலைத் தத்துவமாகவும் கூறுகிறார். அதாவது தத்துவத்தின் படிநிலை வளர்ச்சியாக விவரிக்கிறார். அத்வைதத் தத்துவங்களின் தொடக்கநிலைக் கூறுகள் பழைய உபநிடதங்களில் காணப்பட்டாலும், சுவாமி விவேகானந்தரின் இந்தக் கூற்று ஏற்கத் தக்கதாகவே இருக்கிறது.

 உபநிடதங்கள்

 வேதத் தொகுப்பின் இறுதியில் உபநிடதங்களை வைத்து எண்ணப்படுவதனால் வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. அந்தம் என்றால் இறுதி என்று பொருள். வேதத்தின் அந்தம் வேதாந்தம். ஆனால், வேத தொகுப்பில் முதலில் உள்ள சம்கிதைகள் வேள்விச் சடங்குகளைப் பற்றியே பேசுகின்றன. அதில் தத்துவக் கருத்துக்கள் காணப்படவில்லை. இறுதி பகுதியான உபநிடதங்களில் தத்துவங்கள் தொடங்குகின்றன.

 உபநிடதம் என்ற சொல்லிற்கு "அருகில் அமர்தல்" என்பதாகக் கூறப்படுகிறது. குருவிற்கு அருகில் கீழே அமர்ந்து உபதேசத்தைக் கேட்பதைக் குறிப்பிடுவதாகக் கூறுவர். ஆனால் உபநிடதங்கள் பெரும்பாலும் உரையாடலாக அமைந்துள்ளன. ஆக உபநிடதங்களைத் தத்துவ உரையாடல்களின் தொகுப்பு என்று கூறலாம்.

 முக்கிய உபநிடதங்கள், புத்தர் பிறப்பதற்கு முன்பும்-பின்பும் தோன்றியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு சற்று முன்னதாகவும் பின்னதாகவும் கொள்ளலாம்.

 உபநிடதத்தின் எண்ணிக்கை பற்றிக் கூறுவது அவ்வளவு எளிதல்ல, 10, 12, 13, 18, 108, 1031 என்கிற கணக்குகள் காணப்படுகின்றன. ஆனால், இன்று 108 உபநிடதங்களே கிடைக்கின்றன.

 உபநிடதங்களின் முதன்மையானவை (Major Upanishads) என்று கூறப்படுகின்ற பத்தை முதலில் தொகுத்துக் காண்போம்.

 1) ஈசா உபநிடதம்              2) கேன உபநிடதம்

3) கட உபநிடதம்               4) பிரச்ன உபநிடதம்

5) முண்டக உபநிடதம்         6) மாண்டூக்ய உபநிடதம்

7) தைத்திரீய உபநிடதம்        8) ஐதரேய உபநிடதம்

9) சாந்தோக்கிய உபநிடதம்      10) பிருகதாரண்யக உபநிடதம்

 அடுத்து, முதன்மையான பத்து உபநிடதங்கள் எந்த வேதப் பிரிவைச் சார்ந்தது என்று பார்ப்போம்.

 ரிக் வேதம் சார்ந்தவை 1) ஐதரேய உபநிடதம்.

 யசுர் வேதம் சார்ந்தவை 1) ஈசா 2) கட 3) தைத்திரிய 4) பிரகதாரண்யகம்

 சாம வேதம் சார்ந்தவை 1) கேன 2) சாந்தோக்கியம்

 அதர்வண வேதம் சார்ந்தவை 1) பிரச்னம் 2) முண்டகம் 3) மாண்டூக்யம்

 சாந்தோக்கியம், பிருகதாரண்யகம் ஆகிய இரண்டு உபநிடதங்களே மிகமிகப் பழைமையானது. தத்துவங்களின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் இவ்விரண்டிலும் பார்க்கலாம். இந்த இரண்டு உபநிடதங்களில் காணப்படுகிற அனைத்துத் தத்துவக் கருத்துக்களும் சம காலத்தில் தோன்றியவை அல்ல. அதனால் பல முரண்களுக்கு இடையில் தான், அந்தத் தத்துவங்களைப் படித்தறிய வேண்டி உள்ளது.

 இந்தத் தத்துவங்களைச் சத்திரியர்களே அதாவது அரசர்களே முதலில் படைத்தனர். வளர்ச்சிக் கண்ட சமூகத்திற்கு ஏற்ற தத்துவங்கள் தேவைப்பட்டன. அன்றைய காலப் பிராமணர்கள் வேள்வி கிரியைகளிலேயே மூழ்கி கிடந்தார்கள். அதனால் சத்திரியர்கள் தத்துவத்தைப் படைக்கத் தொடங்கினர். இந்தக் கருத்தையும் இரண்டு உபநிடதங்கள் வெவ்வேறுவிதமாகக் கூறுகின்றன.

 சாந்தோக்கிய உபநிடதம், தத்துவக் கருத்துக்கள் பிராமணர்களுக்கு அளிக்கப்படவில்லை, சத்திரியர்களுக்கே இவை சொந்தமானதாக இருந்தன (5:3.7) என்று கூறுகிறது. ஆனால், சத்திரியனிடம் ஒரு பிராமணன் உபதேசம் பெறுவது வழக்கத்துக்கு மாறானது (2:1.15) என்று பிருகதாரண்யக உபநிடதம் கூறுகிறது. அதே போல் முண்டக உபநிடதத்தில், வேத கிரியைகள் அபர ஞானம், அதாவது தாழ்ந்த ஞானம் என்றும், உபநிடதங்களில் காணப்படும் ஞானப் பகுதிகளான தத்துவங்களைப் பர ஞானம், அதாவது உயர்ந்த ஞானம் என்றும் கூறப்படுவதை முதலில் பார்த்தோம். வேத கிரியைகள் செய்வதைக் கீழானது என்று எந்தப் பிராமணரும் சொல்லி இருக்கமாட்டார். அதை சொன்னவர் சத்திரியராகவே இருக்க முடியும்.

 இந்த இடத்தில் இவ்வாறு கூறப்பட்டாலும், உபநிடதங்களில் பெரும் அளவுக்கு, வேத கிரியைகளைச் செய்கின்ற பிராமணர்களின் கருத்துக்களின் ஆதிக்கத்தைக் காண முடிகிறது. ஞானப் போக்கை உயர்ந்தது என்றும், கர்மப் போக்கை தாழ்ந்தது என்றும் கூறுகிற முண்டக உபநிடதத்திலும் “ஓம்” என்ற மந்திரம் ஞான நிலைக்கும், பிரம்ம நிலைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. கேனோ உபநிடதம், ஐதரேய உபநிடதம் ஆகிய இரண்டைத் தவிர மற்ற ஏழு உபநிடதங்களும் “ஓம்” என்ற மந்திரத்தை ஞான நிலைக்கு உயர்த்திப் பேசுகிறது. மேலும் வாசிப்பதற்குச் சலிப்பேற்படுத்தும் வகையில், நீண்ட பகுதிகளில், வேத கிரியைகளுக்குத் தத்துவ முலாம் பூசப்பட்டுள்ளது. ஈசா உபநிடதத்தின் தொடக்கத்தில் ஓம் என்ற சொல் முதல் மந்திரத்துடன் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது.

 பத்து உபநிடதங்களில் உள்ள தத்துவக் கருத்துக்களை, தனியே திரட்டுவது சிரமமான ஒன்றாகும். இருந்தாலும் பத்து உபநிடதங்களில் கூறப்பட்ட தத்துவங்களை தொகுக்க முயற்சிப்போம்.

 சாந்தோக்கியம், பிருகதாரண்யகம் ஆகிய இரண்டு உபநிடதங்களில் தத்துவத்தின் தொடக்கநிலையை அறிய முடிகிறது என்றால், ஈசா, கேனோ ஆகிய இரண்டு உபநிடதங்களில் தத்துவ வளர்ச்சியின் இறுதியைக் காண முடிகிறது. ஈசா உபநிடதம் தத்துவத்தின் நோக்கத்தையும், கேன உபநிடதம் தத்துவத்தின் போக்கையும் வெளிப்படுத்துகிறது. உபநிடதங்களின் முடிவுரையாக ஈசா உபநிடத்தைக் கூறலாம்.

 சாந்தோக்கியம், பிருகதாரண்யகம், ஈசா, கேன என்கிற இந்த நான்கு உபநிடதங்களுக்குப் பிறகு தான், மற்ற ஆறு உபநிடதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 ஆத்ம ஞானத்தைப் பெற்றவர்கள், உலக இன்பங்களை விடுத்து, மரணமில்லாப் பெருநிலைக்கு (மோட்சம்-முக்தி), கேன உபநிடதம் வழிகாட்டுகிறது. ஆத்ம ஞானம் பெறும்வரை, அனைத்தும் இறைவனால் சூழப்பட்டதாகக் கருதி, தியாக உணர்வோடு உழைத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படி ஈசா உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது.

 உபநிடதங்களில் காணப்படும் தத்துவத்தின் குறிக்கோள் (லட்சியம்) என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்:-

 

உலகத்தில் கிடைக்கின்ற இன்பம் நிலையானது அல்ல, அது மீண்டும் மீண்டும் பிறப்பை ஏற்படுத்துகிறது. பிறப்பில் இருந்து விடுபட வேண்டும் என்ற வைராக்கியத்தைப் பெற்றவன் ஆத்மாவை உணர்ந்து, அந்த ஆத்மாவே பரமாத்மா, பரமாத்மாவே ஜீவாத்மா என்கிற ஐக்கிய உணர்வை பெற்று, புலன்களால் அறியப்படும் உலகை விடுத்து, மரணமில்லாப் பெருநிலையான, நிலைத்த ஆனந்தத்தை அடைய வேண்டும்.

 

இந்த உலகம் அனைத்தும் இறைவனால் சூழப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, பிறரது பொருளுக்கு ஆசைப்படாமல் கிடைப்பதைக் கொண்டு, தியாகத்தோடு வாழ்ந்து, வினைகள் முழுமையாக முடித்து, மரணமில்லாப் பெருநிலை என்கிற அமரத்துவத்தை அடைய வேண்டும். முக்தி பெறுவதே இறுதி குறிக்கோள். அநித்தியமான உலகப் பொருட்களின் உறவால் மனிதனுக்குப் பிறவி தொடர்கிறது. அநித்தியம் என்றால் நிலையானது அல்ல. வேறுபாடுகளைக் கொண்ட இந்த உலகப் பொருள்கள் அநித்தியமானது. இதனால் கிடைக்கின்றன இன்பமும் அநித்தியமானது. வேறுபாடுகள் அற்ற ஆத்மாவே நித்தியமானது. ஆத்ம இன்பமே நித்தியமானது.

 

நன்மை-தீமை, இன்பம்-துன்பம் போன்ற பன்மைகளே பயத்தை ஏற்படுத்துகிறது. ஆத்மா-பிரம்ம ஐக்கியமான ஒருமையே பயத்தை போக்குகிறது.

 

சம்சாரச் சுழற்சியில், மனிதன் துயர்படுவதற்குக் காரணம் அநித்தியமானதில் அகப்பட்டு, நித்தியமானதை அறியாததே ஆகும். ஆத்மாவை அறியாததினால் சம்சாரப் பந்தம் ஏற்படுகிறது. அநித்தியமானதில் இருந்து விடுபட்டு நித்தியமான ஆத்மாவை அறிவதினால் சம்சாரத்தில் இருந்து விடுதலையும், முக்தியும் கிடைக்கிறது. முக்தி தான் உபநிடதத்தின் குறிக்கோள்.

       மோட்சமே மனிதனின் இறுதி குறிக்கோளாக வேதாந்த மத-தத்துவங்கள் கூறுகிறது. மோட்சம் அடைவதற்கே ஆத்ம போதனை செய்யப்படுகிறது. மோட்சம் அடைய சம்சாரம் தடையாக கருதப்படுகிறது. சம்சாரத்தில் இருந்து விடுபட்டு ஆத்ம முக்திக்கு செல்லும் வழியையே வேதாந்தத் தத்துவங்கள் வழிகாட்டுகிறது.

 ஈசா உபநிடதம்

 பத்து உபநிடதங்களைப் பட்டியலிடும் போது ஈசா உபநிடதம் முதல் இடம் பெற்றுள்ளது. அவ்வாறு முதலிடம் பெற்று இருந்தாலும், கால அளவில் இது மிகவும் பிற்பட்டதே ஆகும். இதனை இரண்டு சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தொடக்கால உபநிடதங்கள் உரைநடையிலானது, பிற்காலத்தவை செய்யுளாக எழுதப்பட்டுள்ளது.

 ஈசா செய்யுள் நடையில் அமைந்துள்ளது, அதனால் இது பிற்காலத்தவை. பிற்காலத்தவை எனக் கூறப்படுவதால் இந்த உபநிடதம் எந்த வகையிலும் குறைந்து போகவில்லை. இதில் உள்ள கருத்து நிலையில் காணப்படும் முதிர்ச்சியை பிற எந்த உபநிடதங்களிலும் காண முடியாது.

 மொத்த உபநிடதங்களில் காணப்படும் தத்துவங்களின் சாராமாக இந்த உபநிடதம் அமைந்துள்ளது. சம்கிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் என்ற வரிசையில் தான் வேதத் தொகுப்புக் காணப்படும். ஆனால், ஆரண்யகத்துக்கு அடுத்து இடம் பெறாமல், யசுர் வேத சம்கிதையின் இறுதிப்பகுதியில் இந்த ஈசா உபநிடதம் காணப்படுகிறது. இந்த உபநிடதத்தில் 18 மந்திரங்கள் இருக்கின்றன.

 சுருக்கமாக ஈசா என்று கூறப்படும் இந்த உபநிடதத்தின் முழுப்பெயர் ஈசாவாஸ்யம். முதல் பாடல் ஈசா எனத் தொடங்குவதால் இதற்கு அதையே பெயராக இடப்பட்டுள்ளது. ஈசா என்றால் ஈஸ்வரன் அதாவது இறைவன்.

 தத்துவத்திற்கு என்று ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை இந்த உபநிடதம் நேரடியாக முன்வைக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட, பதினெட்டுப் பாடல்களில் தத்துவத்தை மிகவும் சுருக்கமாகத் தெரிவித்துள்ளது இந்த உபநிடதம்.

 சமூகத்தில் உள்ள மக்கள் ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகின்றனர். அதாவது சிலர் பணக்காரர்களாகவும், பெரும்பான்மையினர் எவ்வளவு உழைத்தும் ஏழைகளாகவும் தமது குடும்ப வாழ்க்கைக்குத் தேவைப்படுவதில் பற்றாக்குறையிலும் வாழ்கின்றனர். இதனால் சமூகத்தில் ஏற்படும் குழப்பத்தால் உருவாகும் கலகத்தைத் தடுப்பதற்கு ஏற்பட்டதே கருத்துமுதல்வாதத் தத்துவம் என்பதை இதன் முதல் பாடல் தெளிவுபடுத்துகிறது.

 

“பூமியில் காணும் உலகம் அனைத்தும் இறைவனால் சூழப்பட்டுள்ளது. தியாகத்தால் உன்னைக் காப்பாற்றிக்கொள். மற்றவருடைய செல்வத்திற்கு ஆசைப்படாதே.” (1)

 அனைத்தும் இறைமயமானது, உழைக்கும் மக்கள் தமக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு திருப்தியாக வாழ வேண்டும். பணம் போதவில்லை என்று புலம்பாமல் தியாக உணர்வோடு தம்மை காத்துக் கொள்ள வேண்டும். மற்றவருடைய செல்வத்துக்கு ஆசைப்படக்கூடாது. இவ்வுலகில் உள்ள அனைவரும் செல்வத்திற்கு ஆசைப்படக் கூடாது என்று கூறாமல், மற்றவருடைய செல்வத்திற்கு ஆசைப்படாதே என்றே இங்கு கூறப்பட்டுள்ளது. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள நூலில், உரையாசியர் அண்ணா அவர்களின் விளக்கம் இப்பாடலின் நேரடிப்பொருளை வலியுறுத்துகிறது.

 

“ஓம், (தோன்றி மறையும்) இவ்வுலகில் தோன்றி மறைவதாயுள்ளது எது உண்டோ அது அனைத்தும் ஈசனால் வியாபிக்கப்பட்டதாக (காண) வேண்டும். (ஈசுவர பாவனையால் ஏற்பட்ட) அந்தத் தியாகத்தால் உன்னை ரட்சித்துக்கொள்- (உயிரை ரட்சிப்பதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்ததென ஏற்றுக் கொண்டு வாழ்வாயாக). எவருடைய பொருளுக்கும் பேராசைப் படாதே.”

 ஒவ்வொரு நாளும், பெரும்பான்மை நேரம் உழைத்தும் வாழ்வாதாரங்களுக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, உயிரை பேணுவதற்கு மட்டும் அவசியமான பொருளை இறைவன் கொடுத்தது என்று தியாக உணர்வோடு ஏற்றுக்கொள் என்கிறது இந்த முதல் பாடல்.

 இரண்டாவது பாடல் “இவ்வுலகில் விதித்த கர்மங்களைச் செய்த வண்ணம் நூறாண்டு வாழ விரும்ப வேண்டும். இப்படி விரும்புகின்ற மனிதனாகிய உனக்குக் கர்மம் செய்வதைத் தவிர வேறுவழி கிடையாது. இவ்வகையில் கர்மம் செய்து வாழ்ந்தால் பந்தம் உருவாகாது” என்று கூறுகிறது. கர்மம் என்றால் சுயதர்மம், சுயதர்மம் என்றால் பிறப்பால் உருவான தொழில். பிறப்பால் உருவான தொழிலை சிறப்பாக செய்தால் சம்சாரம் தொடராமல் முக்தி பெறலாம். முக்தி என்ற வார்த்தையை இந்த உபநிடதம் நேரடியாக கூறவில்லை, பந்தம் நீங்கும் என்று கூறியுள்ளது. பந்தத்துக்குக் காரணம் வினைகளே, வினைகள் நீங்க வேண்டுமானால், பிறப்பின் அடிப்படையில் கூறப்படுகிற வேலையை மனம் கோணாமல் செய்ய வேண்டும் என்கிறது இந்த உபநிடதம்.

 முற்பிறவியினால் தோன்றிய கர்மத்தை நீக்கும் பொருட்டு, இன்றைய வாழ்க்கையைத் தியாக உணர்வோடு ஏற்றுக் கொண்டு செயல்படுவதின் மூலம், அடுத்தப் பிறவி ஏற்படுவதற்கான பந்தத்தைத் தடுக்கலாம் என்று கூறுகிறது. இப்படிக் கருத்துக்களை நேரடியாகக் கூறுகிறபடியால் இந்த உபநிடத்தைப் பலரும் வரவேற்கின்றனர்.

 இவ்வுலகில் உள்ள இன்ப-துன்பங்களை விரும்பாது விலகி, ஆத்ம நாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதை மீதமுள்ள பாடல்கள் வலியுறுத்துகின்றன. கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் நோக்கத்தையும் போக்கையும் இந்த ஈசா உபநிடதம் தெளிவுபடுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே பிற உபநிடதங்களைப் படித்தறிய வேண்டும். தமது கருத்தை தெளிவாக முன்வைக்காத உபநிடதங்களைப் புரிந்து கொள்வற்கு இந்த உபநிடதம் உதவிடும்.

 உபநிடதங்களில் தத்துவம்

       தோன்றிய அனைத்துக்கும் ஒரு தொடக்கநிலை என்று ஒன்று இருக்கும் வளர்ச்சிநிலை என்று ஒன்று இருக்கும். ஆனால், வேதாந்தத்துக்கு தொடக்க நிலையோ வளர்ச்சிநிலையோ இல்லாததாக வேதாந்திகள் கூறுகின்றனர். அதனால் தான் வேதாந்த தத்துவங்களை சனாதனம் என்று கூறுவர். சனாதனம் என்றால் நிலையானது, தொடக்கமும் முடிவும் அற்றது. ஆனால், அனைத்து நாடுகளிலும் தத்துவத்தின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் காணமுடிகிறது. புதிய நிலைமைக்கு ஏற்ப புதிய விளக்கங்கள் கொடுப்பதின் மூலமே தத்துவம் வளர்ச்சிப் பெறுகிறது. புதிய நிலைமைக்கு ஏற்ப தம்மை புதுப்பிக்காத (Up to date) எந்தத் தத்துவமும் அழிந்து போகும்.

       உபநிடதத்தில் காணப்பட்ட தத்துவமும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது, பிற்காலங்களில்தான் வளர்ச்சி பெற்றுள்ளது. இத் தத்துவங்கள் புதிய நிலைமைக்கு ஏற்ப மாற்றம் அடைந்ததினால் தான் இன்றும் அது தாக்குப் பிடிக்கிறது. இல்லை என்றால் பழைய நிலைமை அழியும் போது அதுவும் அழிந்திருக்கும்.

வேதாந்தத் தத்துவங்கள் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது, அதில் துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்றும் முதன்மையானதும் பிரபலமானதும் ஆகும். துவைதத்துக்கு மத்துவரும், விசிட்டாத்வைதத்துக்கு ராமானுஜரும், அத்வைதத்துக்குச் சங்கரரும் ஆச்சாரியராக விளங்கினர். இவர்களுக்கு முன்பே இந்தத் தத்துவத்தின் அடிப்படைகள் இருந்தது. உபநிடதத்தில் தொடக்கநிலையாக காணப்பட்ட தத்துவங்களை இம்மூவரும் மேலும் வளர்த்து நிலைநிறுத்தினர்.

 இந்த மூன்று தத்துவவாதிகளுக்கும் மூல நூல் ஒன்றாக இருக்க, அவர்களின் தத்துவங்கள் ஏன் வேறுபடுகின்றன என்ற கேள்வி எழுவது இயற்கையே.

 உபநிடதங்களில் சில வாக்கியங்கள் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்று  பேத (வேறுபட்ட) சுருதியாகவும், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறாக இருந்தாலும், வேறானவற்றில் (உடனாய்) ஒன்றி அந்தர்யாமியாய் பரமாத்மா இருப்பதாக,  பேத அபேதக (வேறுபட்டும் வேறுபடாத) சுருதியாகவும், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று  அபேதக (வேறுபாடற்ற) சுருதியாகவும் அமைந்துள்ளது. 

 பேதஅபேத என்பது போன்ற சொற்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். எளிமையாக இப்போது பார்ப்போம். உபநிடதங்களில் மூன்று போக்குகள் காணப்படுகிறது. ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு அதாவது மனிதனிடம் காணப்படும் ஜீவாத்மா வேறு உலகைப் படைக்கும் பரமாத்மா வேறு (பேத சுருதி).  இந்தப் போக்கினை ஏற்றுக் கொண்டவர்கள் துவைதிகள்.

       அடுத்து சில உபநிடதங்களில் ஜீவாத்மா வேறாக இருந்தாலும் அந்தர்யாமியாக அதாவது உள்ளார்ந்ததாக பரமாத்மா இருக்கிறது (பேத அபேதக). இந்தப்  போக்கினை ஏற்றுக் கொண்டவர்கள் விசிட்டாத்வைதத் தத்துவத்தைச் சேர்ந்தவர்கள்.

 இறுதியாக ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்கிற ஐக்கியத்தை பேசுகிற உபநிடதப் பகுதிகளை (அபேதக) ஏற்றுக் கொள்பவர்கள் அத்வைதிகள்.

 உபநிடதங்களில் தங்களுக்குச் சாதகமான பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்டு, பிறவற்றைச் சிதைத்தும், திரித்தும் ஆதிசங்கரர், ராமானுஞர், மத்துவர் ஆகியோர் விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், விவேகானந்தர் போன்றோர் இந்த மூன்றையும் ஒரு படிநிலை வளர்ச்சியாகப் பார்த்தனர். எடுத்தவுடன் இறுதிப் பகுதிக்கு அனைவரும் செல்ல முடியாது. அதனால், ஒவ்வொரு பகுதியாக முன்னேறி இறுதிப் பகுதிக்கு வந்தடைவதாகக் கூறியுள்ளார். பரிணாமப் போக்காக இதனைப் பார்க்கலாம்.

 ஆதி சங்கரரின் காலத்துக்குப் பிறகு வந்த அத்வைத ஆச்சாரியர்கள் உபநிடதங்களில் காணப்படும் வாக்கியங்களில் சிலவற்றை எடுத்து மகாவாக்கியங்களாகக் (Great Sayings) குறிப்பிட்டு விளக்கம் கொடுக்கின்ற போக்கு ஏற்பட்டது. நான்கு மகாவாக்கியங்களும் ஒவ்வொரு வேதத்துக்கும் ஒன்றாக, நான்கு உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 ரிக் வேதத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஐதரேய உபநிடதத்தில், “பிரம்மம் பேருணர்வுப் பொருள்” - (ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம - 5-3).

 அதர்வண வேதத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மாண்டூக்கிய உபநிடதத்தில், “இந்த ஆத்மா பிரம்மம்” - (அயமாத்மா ப்ரஹ்ம - 2).

 யசுர் வேதத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பிருகதாரண்யகம் உபநிடதத்தில், “நான் பிரம்மமாக இருக்கிறேன்” - (அஹம் ப்ரஹ்மாஸ்மி – 1:4.10).

 சாம வேதத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சாந்தோக்கியம் உபநிடதத்தில் “அது நீயாக இருக்கிறாய்” - (தத்துவமசி – 6:9.4) - ஆகியவையே அந்த நான்கு மகாவாக்கியங்களாகும்.

 இந்த நான்கு மகாவாக்கியங்களும் அத்வைதத் தத்துவமான ஜீவ-பிரம்ம ஐக்கியத்தையே வலியுறுத்துகிறது. அதாவது ஆத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறானது அல்ல, ஒன்றேயானது.

 ஆத்மா பரமாத்மாவில் இருந்து பிரிந்திருப்பதாகக் கருதுவது அஞ்ஞானம் (அறியாமை), ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பதே ஞானம் (அறிவு). தத்துவமசி என்ற மகாவாக்கியத்தை நன்றாகப் புரிந்து கொண்டால் மற்ற மூன்று மகாவாக்கியங்களையும் புரிந்து கொள்வது எளிதாகும். சாந்தோக்கியம் உபநிடதத்தில் “தத்துவமசி” என்ற மகாவாக்கியம் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. அந்த உதாரணங்கள் அத்வைதத்தையே வலியுறுத்துகிறது.

 உபநிடதத்தின் இறுதிநிலை அத்வைதம் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.

       தத்துவம் பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது, ஆனால், அதன் அடிப்படை நோக்கம் ஒன்றுதான். அந்த ஒன்றை ஈசா உபநிடதத்தின் முதல் மந்திரம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவர் தம்மையும் தம் குடும்பத்தையும் பேணுவதற்கு மட்டும் அவசியமான பொருளை இறைவன் கொடுத்தது என்ற தியாக உணர்வோடு உழைக்கும்படி வலியுறுத்தியுள்ளது. இதுவே கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் நோக்கமாகும். இந்த தியாக உணர்வை பிற்கால நூல்களில் குறிப்பாக பகவத்கீதையில் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று நேரடியாகவே கூறப்பட்டுள்ளது.

 பலனை எதிர்பார்த்து உழைப்பவர்களிடம் குடும்ப பந்தம் (சம்சார சூழற்சி) ஏற்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது. பலனை எதிர்பார்க்காமல் உழைத்தால், பந்தம் ஏற்படாமல் ஆத்மா முக்தி அடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவே இந்தியத் தத்துவங்களில் குறிப்பாக வேதாந்தத் தத்துவங்களின் கூற்றாக உள்ளது.

 உபநிடதங்களில் துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகிய கருத்துக்கள் தொடர் வரிசையாக இல்லாமல், அங்கும் இங்குமாக விரவிக்கிடக்கிறது. இந்த மூன்றையும், படிநிலை வளர்ச்சியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் இறுதி நிலையாக அத்வைதம் வருகிறது. ஆனால், இவைகள் அனைத்தும் தொடக்க நிலையில்தான் உபநிடதத்தில் காணப்படுகிறது.

 ஒவ்வொரு தத்துவமும் தமது வர்க்க நலன்களையே வெளிப்படுத்துகிறது. கருத்துமுதல்வாதம் ஆளும் வர்க்கத்தின் நலன்களையே வெளிப்படுத்தியுள்ளதை ஈசா உபநிடதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். கருத்துமுதல்வாதம் பல போக்குகளைக் கொண்டதாக இருந்தாலும் அதன் அடிப்படை நோக்கம் பணக்கார வர்க்கத்தின் நலன்களை தூக்கிப் பிடிப்பதே ஆகும்.

  பிரம்ம சூத்திரம்

 உபநிடதங்கள் அனைத்தும் ஒரே காலகட்டத்திலோ, ஒரே தத்துவப்பிரிவுக்காகவோ எழுதப்படவில்லை. அரச சபைகளில் ஞானிகளுக்கு இடையே நடைபெற்ற உரையாடலாகவும், அரசருடன் ஞானிகள் நடத்திய உரையாடலாகவும், தந்தைக்கும் மகனுக்கும், குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாகவும் பெரும் பகுதி அமைந்துள்ளது. அனைத்து உரையாடல்களும் சமகாலத்தில் நடைபெறவில்லை, அதனால், அதில் ஒன்றைப் பற்றி, ஒத்த கருத்தாக இல்லாமல், பல்வேறு வகைப்பட்டதாகக் காணப்படுகிறது

 கி.லக்ஷ்மணன்:-

“உபநிடதம் முழுவதையும் ஒரே ஓர் ஆசிரியரே ஆக்காத காரணத்தால் எந்த ஒரு விஷயமும் தொடர்ச்சியாகவோ, ஓர் ஒழுங்குக்கு உட்படவோ ஆராயப்படுவதை உபநிடதத்திலே நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு விஷயத்தைப்பற்றியும் பற்பல இடங்களில் பற்பல விதமான குறிப்புகளைக் காணலாம். அவையாவற்றையும் ஒருங்கு கொணர்ந்து ஒழுங்குபடுத்தினால்தான் அவ்விஷயத்தைப் பற்றி முடிவாக உபநிடதங்கள் என்ன கூறுகின்றன என்பதை அறிய முடியும். அவ்வாறு செய்வது சுலபமான செயலன்று.”

(இந்திய தத்துவ ஞானம் - பக்கம்- 39)

 . உபநிடதங்களில் காணப்படும் சில கருத்துக்களிடையே முரண்பாடு காணப்படுகிறது. அந்த முரண்களைச் சமன் செய்வதற்கு எழுதப்பட்டதே இந்தப் பிரம்ம சூத்திரம். இதனைப் பாதராயணர் எழுதியதாகக் கூறப்படுகிறது. வியாசர் எழுதியதாகவும் சிலர் கூறுகின்றனர். இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

 இதன் பெயருக்கு ஏற்ப இந்நூல் சூத்திர வடிவில் எழுதப்பட்டுள்ளது. அதாவது இதில் கருத்துக்கள் சுருக்க வடிவில் சூத்திரமாகக் காணப்படுகின்றன. அதனால் இதனைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு, உபநிடதங்களில் சிறப்பான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இல்லை என்றால் விரிவுரையாளர்களின் உதவியை நாட வேண்டும்.

 பிரம்ம சூத்திரங்களின் எண்ணிக்கை விரிவுரையாளர்களிடம் மாறுபட்டுக் காணப்படுகிறது. சங்கரர் விரிவுரையில் 555 சூத்திரங்களும், ராமானுஜர் விரிவுரையில் 545 சூத்திரங்களும், மத்துவர் விரிவுரையில் 564 சூத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. சில சூத்திரங்களை இரண்டாகப் பிரித்தும், இரண்டு சூத்திரங்களை ஒன்றாக இணைத்தும் கொடுக்கப்பட்டுள்ளதால் தான் இந்த வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

 தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பிரம்ம சூத்திர நூல்கள், விசிட்டாத்வைத, துவைத சம்பரதாய விரிவுரை நூல்களைத் தவிர மற்ற நூல்கள் சங்கரரையே அதிகம் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன. ஏன் என்றால் பிரம்ம சூத்திரத்தில் அத்வைதத்தின் கருத்துக்களே மேலோங்கிக் கிடக்கிறது.

 இறைவன் (பிரம்மம்), ஜீவன் (மனிதன்), உலகம் இவைகளைப் பற்றி மூன்று ஆச்சாரியர்களின் கருத்துக்கள் வேறுபடுவதினால் இவர்களின் தத்துவங்களும் வேறுபடுகின்றன.

 துவைதம் பல காலமாக இருந்தாலும் இதனைச் சிறப்பாகத் தத்துவமாகவும் தனித்த வைணவ மதமாகவும் வகுத்தவர் மத்துவர். ஜீவாத்மா-பரமாத்மா வேறுபாட்டை முன்வைத்தே இந்தத் தத்துவத்திற்குத் துவைதம் (இருமை) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீமந்நாராயணனே பிரம்மம். அவனே சர்வ வல்லமை பொருந்தியவன், அனைத்து கல்யாண குணங்களையும் பெற்றவன். ஆத்மாக்களுக்கு ஆத்மா. உலகம் ஸ்ரீமந்நாராயணனால் படைக்கப்பட்டது. உலகம் மாயை அல்ல உண்மையானது. ஜீவன்களின் மோட்சம் அவரவர் செய்கிற உபாசனைக்கு ஏற்ப மாறுபடும். இதுவே துவைதம்.

விசிட்டாத்வைத தத்துவத்தைத் தனித்த தத்துவமாகவும் வைணவ மதமாகவும் வகுத்தவர் ராமானுஜர். பிரம்மம் பற்றிய கருத்தில், துவைதத்தில் உள்ளபடியே ஏற்பர். உலகையும் அதே போல் உண்மை என்றும் கூறுவர். ஆனால், பரமாத்மா அனைத்துள்ளும் அந்தர்யாமியாய் இருக்கிறார் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.

 அத்வைதம், உபநிடதங்களில் காணப்பட்டாலும் அதற்கான தனிச்சிறப்பான தத்துவமாக மேம்படுத்தியவர் ஆதி சங்கரர். பிரம்மமே உண்மைப் பொருள். பிரம்மம் குணங்களற்றது. என்றென்றும் ஆனந்த மயமானது. கனவுக் காட்சியைப் போல் இந்த உலகமும் ஜீவனும் மாயையானது. பன்மைத் தன்மைகளுடைய இந்தப் பிரபஞ்சம் மித்யா, அதாவது மாயை ஆனது. ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பிரிந்ததாகக் கருதுகிற அறியாமை நீங்கினாலேயே ஐக்கியம் உணரப்படும். ஜீவாத்மா பரமாத்மா ஆகியவற்றின் ஐக்கிய உண்மையை அறிதலே முக்தி. சம்சாரத்தில் இருந்து விடுதலைப் பெறுவதே முக்தி.

 பிரம்ம சூத்திரத்தில் உள்ள நான்கு அத்தியாயங்களும், ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நான்கு பாதங்களும் (உட்பிரிவுகள்) உள்ளன. இந்தப் பாதங்கள் ஒவ்வொரு தனிக் கருத்தை ஆராய்கிறது. ஒவ்வொரு பாதத்திலும் பல அதிகரணங்கள் இருக்கிறது.

 முதல் அத்தியாயம் சமன்வயம். உபநிடதங்களில் காணப்படும் முரண்பட்ட கருத்துக்கள் இந்த அத்தியாயத்தில் சமன் செய்யப்படுகின்றன..

       முதல் அத்தியாயம் முதல் சூத்திரத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

       “எனவே, இனி பிரம்மத்தைப் பற்றிய விசாரணை” (1:1:1)

 உலகில் கிடைக்கின்ற இன்பங்களைத் துய்த்து, இந்த இன்பங்கள் நிலைத்த தன்மை உடையவை அல்ல, அதாவது நித்தியமானது அல்ல என்பதை அறிய வேண்டும். அறிந்த பின்பு, நித்தியமானதான பிரம்மத்தை பற்றிய விசாரணையைத் தொடங்கலாம். இதுவே இந்த அத்தியாயத்தின் முதல் சூத்திர விளக்கம். இந்த விளக்கம் ஆதிசங்கரருடையது. கர்ம காண்டத்தை முடித்து, ஞானக் காண்டத்தைத் தொடங்கலாம் என்பது ராமானுஜரின் விளக்கம். மங்கலமாகப் பிரம்மத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கலாம் என்று விளக்கம் கொடுக்கிறார் மத்துவர்.

 நாம் சுருக்கத்தையே பார்க்கிறோம் என்பதனால், ஆச்சாரியர்களின் வேறுபாடுகளை விடுத்து நூலின் சுருக்கத்தைத் தொகுப்போம். பிரம்மமே பிரபஞ்சத்தைப் படைத்தது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு என்ற கருத்தே முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. பிரம்மமான பரமாத்மா ஜீவாத்மாவில் அந்தர்யாமியாக இருந்தாலும், அந்த ஜீவன் செயலால் ஏற்படுகிற நன்மை தீமை ஆகியவை அந்தர்யாமியான (உடனாயுள்ள) பரமாத்மாவை ஒட்டாது. தன்னில் இருந்தே பிரபஞ்சத்தை பிரம்மம் படைத்தது. படைப்பை நிகழ்த்துவதற்குத் துணைக் கருவிகளோ, மூலப் பொருட்களோ பிரம்மத்துக்குத் தேவைப்படவில்லை.

 இரண்டாவது அத்தியாயம் அவிரோதா. இதில் வேதாந்தக் கருத்துக்களுக்கு எதிரான தத்துவங்கள் விமர்சிக்கப்படுகிறது. சாங்கியம், வைசேஷிகம், பவுத்தம், சமணம், பாசுபத சைவம், பாஞ்சராத்ர வைணவம் ஆகியவை வேதாந்தக் கருத்துக்களின் அடிப்படையில் மறுக்கப்படுகின்றன. பவுத்தம், சமணம் ஆகியவற்றோடு அன்றைய நிலையில் உள்ள சைவம், வைணவம் ஆகியவையும் மறுக்கப்பட்டுள்ளன. பிரம்ம சூத்திரம் எழுதப்பட்ட காலத்தில், வைதீகத்துக்கு அதாவது வேதாந்தத்துக்கு எதிராகவே சைவம், வைணவம், சாங்கியம், வைசேஷிகம் ஆகிய தத்துவங்கள் கருதப்பட்டன. பின்னாட்களில் இவைகள் வைதீகத்தில் இணைக்கப்பட்டன. குறிப்பாக பகவத் கீதையில் பல்வேறு தத்துவங்கள் வைதீகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 பிரபஞ்சமே படைக்கப்பட்டது, பிரம்மம் படைக்கப்பட்டது அல்ல; என்றும் உள்ளது, நித்தியமானது; பிரபஞ்சம் அநித்தியமானது, பிரம்மம் நித்தியமானது; பிரம்மம் சத்தியமானது அதாவது உண்மையானது, பிரபஞ்சம் மாயையானது அதாவது பொய்த் தோற்றம் கொண்டது என்று விவரிக்கிறது இரண்டாவது அத்தியாயம்.

 மூன்றாவது அத்தியாயம் சாதனா. இதில் பிரம்மத்தை அறிவதற்கான முறைகள் கூறப்படுகின்றன. மனிதனின் மரணத்துக்குப் பிறகு அடுத்த பிறவி எடுப்பதற்காக, உடலில் இருந்து ஜீவாத்மா வெளியேறுகிறது. ஆத்மாவின் பயணம் தொடர்கிறது. மரணத்துக்குப் பிறகு வினையினால் கிடைக்கக்கூடிய பலனை அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்பெடுக்கிறது.

 ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவாத்மா பரமாத்மாவில் தங்குகிறது. நான்காம் பிரிவில் பரமாத்மாவை அடைவதற்குச் சாதகன் செய்ய வேண்டிய தியானங்கள் பற்றி கூறப்படுகின்றன.

 நான்காவது அத்தியாயம் பவா. இதில் பிரம்மத்தை அறிவதால் கிடைக்கும் பலன் கூறப்படுகிறது. அதாவது முக்தி அடைவது பற்றிப் பேசப்பட்டுள்ளது.

 மரணத்தின் போது நிகழ்வது பற்றியும், மரணத்துக்குப் பிறகு ஆத்மா செல்கின்ற பாதை பற்றியும், ஆத்மாவின் ஒடுக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இறுதியில் ஆத்மா முக்தி நிலையினை அடைவது பற்றியும், அது மீண்டும் பிறப்பது இல்லை என்பதையும் சுட்டுகிறது. ஆகப் பிரம்ம சூத்திரம் உலகை விடுத்து முக்திக்கு வழிகாட்டுகிறது.

       வேத சம்கிதையில் உலகில் நூறாண்டு காலம் வாழ்வதையே சிறப்பித்துக் கூறுகிறது. ஆனால் உபநிடதம் உலகை துன்பமயமானதாக கருதி அதை விடுத்து முக்தி பெறுவதையே சிறப்பித்துக் கூறுகிறது. அதனால் வேத சம்கிதையின் சாரமாக வேதாந்தத்தை அதாவது உபநிடதத்தை காண முடியாது என்பதே உண்மையாகும்.

       வேதாந்தமானது இந்த முக்தித் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதாந்தம், துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் என்கிற மூன்று தத்துவங்களை பேசுகிறது. இந்த மூன்றையும் அடுத்தடுத்த வகுப்புகளில் பார்போம்.

பொருளடக்கம்

No comments:

Post a Comment