Saturday 4 June 2022

6) வேதம் எளிய அறிமுகம்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

65 வது வார வகுப்பு – 05-06-2022) 


 

ஐந்து தரிசனங்களில் இதுவரை நாம் சாங்கியம், யோகம், வைசேஷிம், நியாயம் ஆகிய நான்கைப் பற்றிப் பார்த்துள்ளோம். இன்னும் பார்க்க வேண்டியது. மீமாம்சை, மீமாம்சையை பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்று இரண்டாக கூறுவர். ஜைமினி எழுதிய “மீம்சை சூத்திரம்” பூர்வ மீமாம்சையைப் பற்றி பேசுகிறது. பாதராயணர் எழுதிய “பிரம்ம சூத்திரம்” உத்தர மீமாம்சையைப் பற்றி பேசுகிறது. உபநிடதங்களின் கருத்துக்களை தொகுத்துத் தருகிறது “பிரம்ம சூத்திரம்”.

பூர்வ என்றால் முன்னது உத்திரம் என்றால் பின்னது. வேத சம்கிதையின் அடிப்படையில் தோன்றியது பூர்வ மீமாம்சை, வேதாந்தம் என்று கூறப்படுகிற உபநிடதங்களின் அடிப்படையில் தோன்றியது உத்தர மீமாம்சை. வேதாந்தம் என்றால் வேதத்தின் சாரம், வேதத்தின் இறுதி என்று பொருள் கூறப்படுகிறது. உண்மையில் வேத சம்கிதையின் சாரம்தான் உபநிடதமா என்று பார்த்தால் “இல்லை” என்றே தெரிகிறது. அதனால் பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்கிற இரண்டைப் பற்றி அறிவதற்கு முன், வேத சம்கிதை, உபநிடதம் ஆகிய இரண்டைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இன்று வேத சம்கிதைப் பற்றி பார்ப்போம். பொதுவாக வேதம் என்றால் வேத சம்கிதைதான். வேதாந்தம் என்றால் உபநிடதம். இன்று வேத சம்கிதையைப் பற்றி பார்ப்போம், அடுத்த வாரம், உபநிடதம், பிரம்ம சூத்திரம் ஆகிய இரண்டையும் பார்ப்போம்.

இன்று வேத சம்கிதை.

வேதங்கள் நான்காகும். ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்ற பெயர்களில் அவை அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேதத் தொகுப்பும், தம்முள் சம்கிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் என்கிற நான்கு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதல் இரண்டையும் சேர்த்து கர்ம காண்டம் என்றும் பிறகுள்ள இரண்டையும் சேர்த்து ஞானக் காண்டம் என்றும் பொதவாக அழைக்கப்படுகிறது. கர்ம காண்டத்தை இறையியல் (மதம்) (Theology) என்றும் ஞானக் காண்டத்தைத் தத்துவம் (Philosophy) என்றும் பிரித்தறியலாம். அதே நேரத்தில் பிராமணத்தை இறையியல் என்று கூறுவதுபோல் சம்கிதையைக் கூறிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக வேதம் என்று சொன்னால் அது சம்கிதைப் பகுதியையே குறிக்கும், வேதாந்தம் என்று கூறினால் அது உபநிடதத்தைக் குறிக்கும். வேத சம்கிதைகள் ஆரியர்களுக்கு உரியதாகும். அதாவது வேத சம்கிதைகள் ஆரியர்களால் படைக்கப்பட்டது ஆகும். இந்த ஆரியர்கள், இன்று இந்தியா என்று சொல்லப்படுகிற பகுதிக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்.

நான்கு வேதங்களில் மிகப் பழமையானது ரிக் வேதம். இது சுமார் 3,500 ஆண்டுகளுக்கு மேலாக வாய்வழியாகப் பாதுகாக்கப்பட்டது. குருவிடமிருந்து சீடனுக்குச் செவி வழியாகவே கற்பிக்கப்படுவதால் வேதம் “சுருதி” என்று அழைக்கப்படுகிறது. சுருதி என்றால் காதால் கேட்கப்பட்டது என்று பொருள்.

சம்கிதையில் காணப்படும் கருத்துக்கள், அன்றைய நாடோடி மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிற கருத்தாகத்தான் காணப்படுகிறது, அதில் எங்கேயும் ஆன்மீக கருத்தைக் காணமுடியவில்லை. அன்றைய நாடோடியான ஆரியர்கள் தங்களது சிந்தனைகளைப் பாக்களாகப் பாடி, அதனை வாய்வழியாகக் காப்பாற்றி வந்துள்ளதே சிறப்பான ஒன்றாகும். ஆன்மீகக் கண்கொண்டு ரிக் வேத சம்கிதைகளைப் படித்தால் அவை திகைப்பையே ஏற்படுத்தும். அதன் இயல்பான போக்கை உணர்ந்து படித்தால், நாடோடிகளின் வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம்.

தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா:-

“நமது உணர்வில் உள்ள எத்தகைய மத உணர்வையும் அல்லது ஆன்மீக மதிப்பையும் அசல் ரிக்வேதத்தின் பழைமை வாய்ந்த பக்கங்களில் எந்த அளவுக்குக் காணமுடியும் என்பது உண்மையில் கேள்விக்குரியதாக உள்ளது. இறைப்பாடல்கள் கடவுளை அல்லது தேவர்களை அளவு கடந்து புகழக்கூடியனவாக உள்ளன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் அறிவு வளர்ச்சி பெறாத மனித வீரர்களே. உணவையும், கால்நடைகளையும் கொள்ளையடித்து தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் மானுடப் பிறவிகளே. அவர்களுடன் அமர்ந்திருக்கக்கூடிய “நண்பர்கள்”, “மிகச்சிறந்த நண்பர்கள்” என அழைக்கப்படுபவை திடமான இயற்கைப் பொருட்களே.

      … … …

காட்டுமிராண்டிக் கவிஞர்கள் தங்கள் பசி காரணமாக உணவைக்கூட புகழ்ந்து பாடினர். ஏனெனில், அது உடலுக்குக் கொழுப்பை அளிக்கிறது. மிகச்சிறந்த ஆன்மீக அறிவு ரிக் வேதத்தில் பொதிந்து கிடக்கிறது என்று கூறி வரும்போது, பிது பற்றி பாடப்பட்ட இப்பாடல் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.”

(மதமும் சமூகமும் – பக்கம் 95-96)

இந்து மதத் தத்துவங்களில் காணப்படும் உலக வாழ்க்கையைச் சம்சாரச் சாகரமாகக் கருதி, உலகை வெறுத்து, முக்தியை நாடும் போக்கிற்கு மாறாக, வேத கால ஆரிய மக்கள் நூறாண்டு வாழ விரும்பியுள்ளனர். அவர்கள் உலக இன்பத்தை விரும்பி ஏற்றுள்ளனர்.

சம்சாரம் என்றால் துக்கம், முதுமை, இறப்பு, பிறவி ஆகியவற்றின் தொடர்ச்சி. சமுத்திரத்தைப் போலவே சம்சாரம் ஆழமாகவும், அதி பயங்கரமானதாகவும் காணப்படுவதாக நினைத்து, சம்சாரத்தை சமுத்திரமாக உருவகப்படுத்தினர். ஆனால், ஆரிய நாடோடிகளோ உலக வாழ்க்கையை விரும்பி அனுபவித்தனர்.

ஆரியர்களின் வாழ்வை ரிக் வேத சம்கிதையில் அறிந்து கொள்ளலாம், அவர்கள் போரில் ஈடுபட்டதைக் காணலாம். இத்தகைய வேத சம்கிதை மனிதனால் படைக்கப்படாத தெய்வீகப் பாடல்கள் என்று கூறிடுவதற்கு எந்த ஆதாரமும் அதில் இல்லை.

விடியலின் அதி காலைக் காட்சியை உஷை என்று ஆரியர்கள் வர்ணித்துப் பாடியுள்ளனர். இயற்கையை வர்ணித்துள்ள இந்தப் பாக்களைப் படித்தால், அதன் கவித்துவத்தை அனுபவிக்கலாம்.

ஆரிய நாடோடி மக்கள், தமது பகைவர்களுடன் போராடியதை எல்லாம் பாடி இருக்கின்றனர். பாரதப் போரினால் (தர்ம யுத்தத்தால்) கீதை எனும் தத்துவ உபதேசம் கிடைத்து போல, இந்த நாடோடிகளின் போராட்டத்தில் தத்துவத்தை தேடினால் எதுவும் கிடைக்காது. ஆனால், நாடோடி மக்களின் வாழ்க்கையை வேத சம்கிதையைப் படித்து அறிந்து கொள்ளலாம்.

 

“மன்யூவே! அக்கினியைப் போல் சொலித்து, சத்துருக்களை வெல்லவும். வெல்பவனான நீ போரிலே அழைக்கப்படுங்கால் எங்கள் படைத் தலைவனாயிருக்கவும். பகைவர்களை அழித்து அவர்களுடைய செல்வத்தை எங்களுக்குப் பகிர்ந்தளிக்கவும். எங்களைப் பலப்படுத்திப் பகைவர்களை அழிக்கவும்.” (ரிக் 10:84.3)

      பகைவர்களை அழித்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வங்களை பகிர்ந்து கொள்வதே பழங்குடியான நாடோடிகளின் வாழ்க்கை முறையாகும். இந்த முறையே அன்றைய தர்மமாகும்.

நம் நாட்டில் வேதம் என்ற பெயரைக் கேட்டாலே பெருமைப்படுபவர்களில் எத்தனை நபர்களுக்கு, வேதம் பற்றிய புரிதல் இருக்கிறது என்ற கேள்வி கேட்டால், கண்டிப்பாக எதிர்மறையான பதிலே அதிகம் கிடைக்கும். அதனால் வேதத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே இங்கே காண்போம். முன்னரே குறிப்பிட்டது போல, வேத தொகுப்பில் சம்கிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் ஆகியவை உள்ளடக்கி வைக்கப்பட்டுள்ளது.

உபநிடதத் தத்துவங்களே இன்று இந்து மதத் தத்துமாகப் பேசப்படுகிறது. இந்த உபநிடதங்கள் அனைத்தும் ஒரே காலத்தில் தோன்றியவை அல்ல.

வேத சம்கிதைகள் தோன்றிய காலத்திற்கும், உபநிடதங்கள் தோன்றிய காலத்திற்கும் உள்ள இடைவெளியும் மிகமிக பெரியதாகும்.

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா:-

“சம்கிதைகளைக் காட்டிலும் காலத்தால் பிற்பட்டவை எனினும், இப்பிரமாணங்கள் வேதங்களோடு இணைக்கப்பட்டன. இவற்றுக்குப் பின்னால் ஆரணியகங்கள் எனப்படும் பகுதிகள் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டன. இந்த ஆரணியகங்களின் இறுதியில் உபநிடதம் என்ற முற்றிலும் மாறுபட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த உபநிடதங்களே கடைசியாகத் தோன்றிய சரியான வைதீக நூல்கள் எனலாம்.”

(இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்- பக். 104-105)

வேத சம்கிதைகளும் உபநிடதங்களும் ஒரே காலத்தில் தோன்றிடவில்லை. அது மட்டுமல்லாது பேசும் பொருளும் வேறுபடுகிறது. அந்தந்த காலத்தினையே அவைகள் பிரதிபலிக்கிறது.

வேத சம்கிதையில் இயற்கையை உருவகப்படுத்தும் பாடல்களாகவே காணப்படுகிறது. அந்த உருவகங்கள், இறைவனாக முழுமை பெறவில்லை என்று கூறிடலாம். அதனால் தான் வேதத்தில் பேசப்பட்ட தேவர்கள், பிற்கால இந்து மதத்தில் கடவுளாகக் கொள்ளப்படவில்லை. வேதங்களில் அதிகம் பேசப்பட்ட இந்திரன் பிற்காலத்தில் இந்திர உலகத்தின் தலைவனாகவும், அதுவும் ஒரு பதவியின் பெயராகவும் சுருக்கப்பட்டுள்ளது.

இன்று இந்துமதம் என்று கூறப்படுகிற மதமானது சைவம், வைணவம் என்ற இரு பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறுசிறு மதங்களையும், அதில் காணப்பட்ட சில வழிபாட்டு முறைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. நாராயணன் என்ற கடவுளின் பெயரால் வைணவமும், சிவபெருமான் என்ற கடவுளின் பெயரால் சைவமும் இந்த ஒன்றிணைப்பு செய்யப்பட்டது. அவ்வாறு இணைக்கும் போது நாராயணனுடன் விஷ்ணுவை இணைத்தனர். இந்த விஷ்ணுவைப் பற்றிய சில பாடல்கள், ரிக் வேத சம்கிதையில் காணப்படுகிறது. வேத காலத்தில் முதன்மை பெற்ற தேவனாக விஷ்ணு காணப்படவில்லை. அதாவது இந்திரன், அக்கினி, சோமன் ஆகியோர்கள் பேசப்பட்ட அளவுக்கு விஷ்ணு அங்கு பேசப்படவில்லை. மிகமிக குறைவான பாடல்களே அங்கு காணப்படுகிறது.

பிற்காலத்தில் சிவபெருமானுடன் இணைக்கப்பட்ட ருத்திரன் பற்றிய மிகச் சில பாடல்களே, வேத சம்கிதையில் இடம் பெற்றுள்ளன.

 

“ருத்திரனே! நேர்மையற்ற வழிபாட்டின் மூலம் உன்னைக் கோபப்படுத்தாது இருப்போமாக. முறையற்ற துதிகளை உச்சரிப்பதன் மூலம் உன்னைச் சீற்றம் அடையச் செய்யாது இருப்போமாக. கலப்பான வழிபாட்டின் மூலம் உன்னைச் சினமூட்டாது இருப்போமாக.”

(சி.எஸ். தேவநாதன்

ரிக்-2:33-4 வேதநெறி சித்தாந்தம், பக். 37)

ருத்திரனை இங்கே பிற சமூகத்தைச் சேர்ந்த தேவனாகக் கூறப்பட்டுள்ளது.  கலப்பான வழிபாடாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால் ருத்திரனுக்கு கோபம் ஏற்படாது இருக்க வேண்டும் என்று இதில் துதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அருவுருவான லிங்கத்தை ரிக் வேத சம்கிதையில் சிஷ்ன தேவர் (ஆண்குறி பகவான்) என்று இழிவாகக் கூறப்பட்டுள்ளது.

ரிக் வேதத்தில் தேவர்களை மனித உருவமாக உருவகப்படுத்திப் பாடப்பட்டிருந்தாலும், அந்த உருவத்தை சிலையாக வடித்து வழிபடவில்லை. ஏனென்றால், உருவ வழிபாட்டை ஆரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற்காலங்களில்தான் இந்திரனுக்கும் அக்கினிக்கும் உருவம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது பரவலான வழிபாடாக மக்களிடம் சென்றடையவில்லை.

வேத சம்கிதைகளுக்கும் உபநிடதங்களுக்கும் இடையே கால இடைவெளியுடன் கூடவே மொழி மற்றும் கருத்து இடைவெளியும் காணப்படுகிறது. வேத சம்கிதையில் தத்துவக் கருத்துக்களைக் காணமுடியாது. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் பிற்சேர்க்கையாகச் சேர்த்தப் பாடல்களில் தான் தத்துவக் கூறுகள் காணப்படுகிறது.

வேத சம்கிதையில் உள்ள சில கருத்துக்களுக்கு, பிற்கால உபநிடதங்களில் தத்துவ விளக்கம் கொடுக்கும் போக்கும் காணமுடிகிறது. குறிப்பாக “ஓம்” என்ற சொல்லைக் குறிப்பிடலாம். ஓம் என்கிற மந்திரத்திற்கு உபநிடதத்தில் தத்துவ விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்தப் போக்கே உபநிடதங்களில் மேலோங்கி இருக்கிறது.

இந்துத் தத்துவ அறிஞர்கள், தமது தத்துவங்கள் உபநிடதங்களிலும், பிரம்ம சூத்திரத்திலும், பகவத்கீதையிலும் காணப்படுவதாக கருதினார்கள். அதனால் இந்த மூன்றும் பிரஸ்தானத்திரயம் (அடிப்படைநூல்கள் மூன்று) என்று இணைத்துக் கூறப்படுகிறது. எந்த இந்துத் தத்துவமாக இருந்தாலும் அதற்கான ஆதாரத்தை, இந்த மூன்றில் இருந்து காட்டப்பட வேண்டும். அதனால் தான் இந்துத் தத்துவ அறிஞர்கள் இந்த மூன்றுக்கும் பாஷியங்கள் (விரிவுரைகள்) எழுதி தமது தத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

ரிக் வேத சம்கிதை

ரிக் வேத சம்கிதையின் காலம் சுமார் கி.மு. 1500 – 1100 ஆகும். இதிலுள்ள அனைத்து சூக்தங்களும் சம காலத்தில் படைக்கப்பட்டவை அல்ல. இதில் உள்ள பெரும்பாலான சூக்தங்கள், ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வருவதற்கு முன்பே தோன்றியவை.

ரிக் வேத சம்கிதை பத்து மண்டலங்களைக் கொண்டது. ரிக் என்றால் பாடல் என்று பொருள். இதில் 10,522 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பத்து மண்டலங்களில் இரண்டாம் மண்டலம் முதல் ஏழாம் மண்டலம் வரை உள்ள சூக்தங்கள் மிகவும் பழைமையானவை. முதல் மற்றும் பத்தாவது மண்டலம் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

பத்தாவது மண்டலத்தில் மிகமிகப் பிற்காலத்தில் சில இடைசெருகல்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த இடைசெருகலை மட்டுமே இன்று ரிக் வேத சம்கிதையாகக் கருதிக் கொள்ளும் போக்கும் இருக்கிறது.

விண்ணுலகம், மண்ணுலகம், இரண்டுக்கும் இடையேயான வளியுலகம் சார்ந்து என வேதகால தேவர்களை மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர். மித்திரன், வர்ணன், சூரியன், விஷ்ணு, உஷை போன்றவை விண்ணைச் சார்ந்த தேவர்கள். அக்கினி, சோமன், பிருகஸ்பதி போன்றவை மண்ணைச் சார்ந்த தேவர்கள். இந்திரன், ருத்திரன், மருத்துக்கள், வாயு போன்றவை வளியைச் சார்ந்த தேவர்கள்.

ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றிய பாடலே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக அக்கினி, சோம பானம் பற்றிய பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

ரிக் வேத பாடல்கள் தேவர்களை விளித்து இகலோகப் பொருள்கள் வேண்டப்படுவதாக இருக்கிறது. இகலோகத்தை மறுத்து, சம்சாரத்தை விட்டுவிலகி முக்தியைக் கேட்கின்ற தத்துவப் போக்குகள் இங்கே காணப்படவில்லை. தத்துவப் பகுதியில் வெறுக்கப்படுகின்ற உலகம், இங்கே இன்பத்துக்குரிய இடமாகவே பார்க்கப்படுகிறது.

 

"புவியில் இருக்கும் செல்வங்கள் மனிதர்களுக்கு எல்லாம் உண்மையாகவே நன்மையைத் தருகின்றன. நீ உண்மையாகவே உணவை வகுத்தளிப்பவன், ஆதலால் நீ தேவர்களின் நடுவே ஆற்றலை ஏந்துகிறாய்." (ரிக் 6:36.1)

நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்கள் உணவுக்காகவும், உலகச் செல்வங்களுக்காகவும் ஆசைப்பட்டனர். அவர்கள் உலக இன்பத்தையே நாடினர்.

பிற மண்டலங்களில் பரவலாகக் காணப்படும் சோம பானம் பற்றிய பாடல், ஒன்பதாவது மண்டலத்தில் முழுமையாகக் காணப்படுகிறது. அதாவது அதிலுள்ள 114 சூக்தங்களும் சோம பானத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளன. ஆரிய நாடோடிகள் போதை தரும் சோம பானத்தைக் குடித்திருப்பது ஆச்சரியப்படுத்த கூடியதல்ல. அவர்களது அன்றாட வாழ்வில் அது ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. மக்கள் மட்டுமல்லாது அவர்கள் வணங்கும் தேவர்களும் சோம பானத்தைக் குடித்தனர்.

ஆரியர்கள் பஞ்சாப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு ரிக் வேத சம்கிதையின் பெரும் பகுதி படைக்கப்பட்டவை ஆகும். மீதமுள்ள பாடல்களைக் கொண்டு ஆரியர்கள் பஞ்சாப்பில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதை அறிய முடிகிறது. ரிக் வேத சம்கிதையில், வங்கத்து புலிகளைப் பற்றியும், சமஸ்கிருத இலக்கியத்தில் அதிகம் உவமையாகக் கூறப்படும் தாமரை மலரைப் பற்றியும் எத்தகைய குறிப்பும் காணப்படவில்லை. அதே போல் கர்மா, ஆத்மா, முன்பிறவி, துறவு போன்ற கருத்துகளையும் வேத சம்கிதையில் காண முடியவில்லை.

      ஆரியர்கள் இயற்கையைப் பற்றியே பாடினர், வழிபட்டனர்.

 

“ரிக் வேத கால ஆரியர்களுடைய சமயத்தின் அடிப்படை இயற்கை வணக்கமாகும். ஆரியர்கள் முதலில் இயற்கையை கண்டு அஞ்சினர், பிறகு அதனைக் கண்டு வியந்தனர், இறுதியில் அதனையே வழிபடவும் முற்பட்டனர். இயற்கை சக்திகளை உருவகித்து அவற்றை வணங்கலாயினர்.         

(வரலாறு- மேல்நிலை முதல் ஆண்டு

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் -1982 – பக். 24)

ரிக் வேத மந்திரங்கள் பெரும்பாலும் இயற்கையையும், வீரத்திற்குத் தலைவனாக இந்திரனையும் உருவகப்படுத்தி எழுதப்பட்டவை ஆகும். போர்களில் வெற்றியையும், வளங்களையும் வேண்டி எழுதப்பட்ட பாடல்களே, ரிக் வேத சம்கிதையில் இடம் பெற்றுள்ளது.

திருமணம், ஈமச் சடங்குகள், சூதாட்டம் போன்ற சமூக நிகழ்வுகள் பற்றிய பாடல்களும் ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளன. விட்டுப்போன மிகமிகப் பழைமையான பழக்கத்தைப் பற்றி, எமன் எமி உரையாடலாக ஒரு சூக்தத்தில் காணப்படுகிறது. பணம் படைத்தவன் ஏழைகளுக்குக் கொடுத்து உதவும்படி கேட்கிற ஒரு தனிச் சூக்தமும் இருக்கிறது. அதன் பெயர் பிக்ஷு சூக்தம். அதாவது பிட்சை.

      ஆரியர்களின் பழங்கால வாழ்க்கையை, ரிக் வேதத்தில் படித்தறிந்து கொள்ளலாம். அதில் ஆன்மீகத்தையோ, தத்துவத்தையோ தேடிப் பயனில்லை.

யசுர் வேத சம்கிதை

யசுர் வேத சம்கிதையின் காலம் சுமார் கி.மு. 1100 – 800 ஆகும். இதுவும் சம காலத்தில் தோன்றியவை அல்ல, நீண்ட கால எல்லைகளைக் கொண்டுள்ளது. இதில் 1984 பாடல்கள் காணப்படுகின்றன. யஜ் என்றால் வழிபடுதல், யாகத்தால் வழிபடுவதையே இந்த வேதத்தின் பெயர் குறிப்பிடுகிறது.

கிருஷ்ண யசுர், சுக்கில யசுர் என்று யசுர் வேத சம்கிதை இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. கிருஷ்ண யசுர் சம்கிதையில் மந்திரங்களுடன் அதற்கான விளக்கங்களும் காணப்படுகிறது. சுக்கில யசுர் சம்கிதையில் மந்திரங்கள் மட்டும் காணப்படுகிறது. “சுக்லம்” என்றால் வெள்ளை; "கிருஷ்ணம்” என்றால் கறுப்பு. விளக்கம் இல்லாத யசுருக்கு வெள்ளை (சுக்கில) யசுர் என்றும் விளக்கங்கள் உள்ள யசுருக்கு கறுப்பு (கிருஷ்ண) யசுர் என்று அழைக்கப்படுகிறது. தெளிவற்ற மந்திரங்களைத் தெளிவு பெறுவதற்காக விளக்கவுரை எழுதப்பட்டது.

ரிக் வேத சம்கிதையில் வேள்விகள் எளிமையாக நடத்தப்படுபவைகளாகும். யசுர் வேதத்தில் சிக்கலான விரிந்த கிரியைகளைக் கொண்ட வேள்வியாக அமைந்துள்ளது. ஒரே கருத்து சலிப்பை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் கூறப்படுவதோடு, கருத்தில்லாத வியப்பிடைச் சொற்களைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

ஒருவர் தமது சம்மதத்தைத் தெரிவிக்கும் பொருளில் தான் “ஓம்” என்ற சொல் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. யசுர் வேத சம்கிதையில் “ஓம்” என்ற சொல், தெய்வத் தன்மை பெற்றதாகவும், ரகசியப் பொருள் பொதிந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் உபநிடதங்களின் காலத்தில் “ஓம்” என்ற சொல் பிரம்மத்தை சுட்டுவதாகத் தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கா.கைலாசநாதக் சுட்டிக்காட்டியுள்ளார்:-

“‘ஓம்’ என்பது ஒருவர் மனத்தில் தோன்றிய சம்மத்தைத் தெரிவிக்கவே முதலில் எடுத்தாளப்பட்டது. இது இன்றுவரை மிகவும் தெய்விகமானதாகவும், உட்கருத்துக்கள் பல பொதிந்து விளங்குவதாகவும் போற்றப்பட்டு வருகின்றது. உபநிடதங்கள் இதை ‘பிரமம்’ எனச் சுட்டுகின்றன.”

(வடமொழி இலக்கிய வரலாறு, பக். 129)

ரிக் வேத சம்கிதை தோன்றிய காலத்தைப் போல் இல்லாது, இதில் வர்ண வேறுபாடுகள் வளர்ந்து உறுதி பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. வர்ணாசிரம கோட்பாடு அடிப்படையில், வேள்வி நடத்துவதை முன்வைத்துப் பிராமணர்கள், சமூகத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

சாம வேத சம்கிதை

சாம வேத சம்கிதையின் காலம் சுமார் கி.மு. 1200 – 800 ஆகும். இதுவும் சம காலத்தில் தோன்றியவை அல்ல, நீண்ட கால எல்லைகளைக் கொண்டுள்ளது.

சாம வேத சம்கிதைகளில் மொத்தம் 1875 மந்திரங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மீண்டும் மீண்டும் வருகிற மந்திரங்களை நீக்கிவிட்டு 1549 மந்திரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது.

சாம வேத சம்கிதையில் காணப்படுபவைகளில் பெரும்பாலானவை, ரிக் வேத சம்கிதையில் இருந்து எடுத்தாளப்பட்டவை ஆகும். சாமம் என்றால் கானம் என்று பொருள். ரிக் வேத சூக்தங்களையும், 75 புதிய சூக்தங்களையும் ராகத்தில் பாடுவதற்காகத் தோன்றியதே இந்த வேதம்.

இந்த வேதம் முழுவதும் கானங்களாக மட்டுமே இல்லாது மந்திரங்களும் கலந்து காணப்படுகிறது. இதிலும் அக்கினி, இந்திரன், சோமன் ஆகிய மூன்று தேவர்களைப் பற்றிய பாடல்களே அதிகம் காணப்படுகிறது. அக்கினியை நோக்கி பாடப்பட்ட பகுதியைப் பார்ப்போம்.

 

“அக்னியே! எங்களுக்குச் செல்வத்தை வழங்கிடு, வளமையை நோக்கி இட்டுச் செல்லும் பாதையை எங்களுக்குக் காட்டு. உணவு தானியங்களையும், ஆற்றலையும் அடைகிற வழியையும் எங்களுக்குக் காட்டு.”

(ஆக்னேய காண்டம், வேதநெறி சித்தாந்தம் – பக். 296)

சம்கிதை காலங்களில் இகலோக இன்பங்களை விரும்புகிற மக்களையே காண முடிகிறது. எதிரிகள் வீழ்த்துவதையும், செல்வங்கள் ஈட்டுவதையுமே சம்கிதை காலத்தில் உள்ள ஆரியர்கள் விரும்பினர். இதனை இந்த இந்திரன் பற்றிய பகுதியில் காணலாம்.

 

“இந்திரனே! எங்கள் பகைவர்களை அழித்திடு, நீ வஜ்ராயுதத்தைக் கையாள்கிறவன். எங்களுக்குச் செல்வங்களை வழங்கிடு. வேள்விகளை வெற்றி பெற செய்திடும் இந்திரன் வணங்கத்தக்கவன். இந்திரன் துணிச்சல் மிக்க வீரன், அவன் உங்கள் வேள்வியின்பால் ஈர்க்கப்படுவான். ஒரு நதியானது கடலில் கலப்பதைப் போன்று சோமரசமும் இந்திரனில் இரண்டறக் கலந்திடட்டும். இந்திரனே! உன்னைவிடச் சிறந்தவர் யார்? மக்கள் உன்னைத் திருப்திப்படுத்த சாமகானம் பாடுகிறார்கள். மக்கள் இந்திரனை வணங்குகிறார்கள். இந்திரன் செல்வங்களைக் கொடுக்கட்டும்.”

(ஐந்திர காண்டம், வேதநெறி சித்தாந்தம்- பக். 307)

அன்றைய மக்கள் செல்வங்களை வேண்டியே யாகம் நிகழ்த்தினர். இகலோக விருப்பங்களையே நாடினர். இந்திரனுக்கு அடுத்தபடியாக இந்தச் சம்கிதையில் சோம பானத்தைப் பற்றியே அதிகம் பாடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து அளவுக்குத்தான் அக்கினி பற்றிப் பாடப்படுகிறது. இந்திரனைப் பற்றிய சூக்தங்களில் மட்டுமல்லாது அக்கினி பற்றிய சூக்தங்களிலும் சோம பானம் பேசப்பட்டுள்ளது.

 

“சோமரசம் வேள்விக்காகப் பாத்திரங்களில் ஊற்றப்படுகிறது. அது தண்ணீரில் ஊற்றப்படுகிறது. காட்டை நோக்கி ஓடும் எருமையைப் போல் அந்த ரசம் தண்ணீருக்குள் பாய்கிறது. சோமரசம் புனிதப்படட்டும், எம்மை மனிதர்கள் நடுவே புகழுடையவராக்கட்டும். எங்கள் பகைவர்களை அது அழிக்கட்டும். சோமனே! எங்கள் வீரத்தைப் பெருக்கிடு.”

(பவமான காண்டம், வேதநெறி சித்தாந்தம்- பக். 331-332)

அதர்வண வேத சம்கிதை

ரிக் என்றால் பாட்டு, யசுர் என்றால் வேள்வியால் வழிபடுதல், சாமம் என்றால் கானம் அதாவது ராகத்துடன் பாடுவது, நன்மை தீமையை விளைவிக்கும் மந்திரங்களைக் கொண்டது அதர்வணம் என்று வேதங்களை, நான்காகப் பிரித்துக் கூறுவது வழக்கம்.

அதர்வண வேத சம்கிதையின் காலம் சுமார் கி.மு. 1000 – 800 ஆகும். இதுவும் சம காலத்தில் தோன்றியவை அல்ல, நீண்ட கால எல்லைகளைக் கொண்டது. இதில் 5848 பாடல்கள் காணப்படுகின்றன. மொத்தமும் இருபது காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதர்வண வேதத்தைத் தவிர்த்துவிட்டு, வேதங்கள் மூன்று (திரயீவித்யா) என்று கூறிவருகிற வழக்கம் நெடுங்காலமாக இருந்தது. வெகுகாலத்திற்குப் பிறகு தான் அதர்வணம் நான்காவதாக வேத எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது. சேர்ப்பதில் தயக்கம் ஏற்பட்டதற்குக் காரணம் இதில் பேசப்பட்ட பொருளாக இருக்கலாம். இதில் உள்ள பாடல்கள் வசிய மந்திரங்களாக இருக்கிறது.

அதர்வணம் வேதமாக மதிக்கப்படுவதற்காக பிற்காலத்தில் ரிக் வேத சம்கிதைகளில் சிலவற்றை எடுத்து மாற்றத்துடன் இதில் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.. இன்றைய காலங்களில் வேதம் நான்கு என்றே கணக்கிடப்படுகிறது.

அதர்வண வேத சம்கிதை எந்தக் காலத்திற்குரியது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது. அதர்வணம், ரிக் வேத சம்கிதைக்கு முற்காலத்தை சேர்ந்தவையா? இல்லை பிற்காலத்தை சேர்ந்தவையா? என்று முடிவெடுப்பதில் குழப்பங்கள் காணப்படுகின்றது. அதில் காணப்படும் கருத்துக்கள் இன்றைய நிலையில் மூடநம்பிக்கை கொண்டதாகக் காணப்படுவதனால், இது ரிக் வேதத்திற்கு முற்காலத்தை சார்ந்ததாக கருதப்பட்டது. அதுமட்டுமல்லாது, இது ஆரியர்களுக்கு உரியதா? இங்குள்ள வட்டார மக்களுக்கு உரியதா? என்று சிலர் சந்தேகம் கொள்கின்றனர். ஆனால், இதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

அதர்வணச் சம்கிதை மந்திரங்களாக இல்லாமல், மாந்தீரிகமாக உள்ளது.

நன்மை, தீமை ஆகியவைகளை விளைவிக்கும் பாடல்களைக் கொண்டுள்ளது. எதிரிகளைத் தோற்கடிப்பதற்கும் வரங்களைப் பெறுவதற்கும், நோயைக் குணப்படுத்துவதற்கும், பலத்தை அதிகரிப்பதற்கும், தூக்கமின்மையைப் போக்குவதற்கும், ஆயுளை அதிகரிப்பதற்கும், அமைதியை பெறுவதற்கும், கணவன்– மனைவி நல்லுறவுக்கும், ஆண்மை சிறந்திடவும், வாரிசை பெறுவதற்கும், சூதாட்டத்தில் வெற்றி பெறுவதற்கும், பேயை ஓட்டுவதற்கும், விஷத்தை அகற்றுவதற்கும் மந்திரங்கள் இதில் கூறப்பட்டுள்ளன. மேதைமை பெறுவதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. மேலும் இறுதிச் சடங்கு, முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்தல் பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

அதர்வண வேத சம்கிதையில் உள்ள சில தலைப்புகளை பட்டியல் இடுவோம்.

சிகிச்சை, பிரசவம், சந்ததி, மின்னல், செல்வம், காமாலை, குஷ்டம், காய்ச்சல், பிரம்மச்சரியம், காதல், கிருமி நாசம், பகை அழி, வேள்வி தோஷம், வசிய வழி, ஆரோக்கியம், விஷம் நீக்கு காப்பு, சிகிச்சை, புன்செயல் (பிறர் செய்த செய்வினையை எதிர்த்து), புழு நாசம், தூக்கம், மக்கட் பேறு, தீர்க்காயுசு, வலிமை, கீழாக்கு (துன்பம் செய்பவனைக் காலால் மிதி) நஞ்சு, துன்பமழி, பலம், பயமின்மை, மருந்து, துண்டமாக்கு (பகைவர்களை மிதித்துவிடு), எதிரிகள், புகழ், உணவு, வீரியம், துரத்து, பெருகு பெருகு, இருமல், உன்மத்தம் (பைத்தியம்), கேசம் வளர, துஷ்டரை நீக்கு, பகை கொல்லு, விஷம் நீக்கு, துன்பம் நீங்கு, பாம்பு, சத்துரு சம்காரம், சாந்தம், பயமின்மை, மேதை.

இந்தச் சம்கிதையில் உள்ள சூக்தங்களின் தலைப்புகளைக் கண்ணுற்றாலே அது மாந்தீரிகமாக உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

     இந்த சம்கிதையின் தொடர்க்சியாக மீமாம்சை வருகிறது. அதாவது சம்கிதையின் வளர்ச்சி மீமாம்சை தத்துவமாகும். ஆனால் வைதீகர்களால் சம்கிதையின் தொடர்ச்சியாகவும் சாரமாகவும் உபநிடதம் கூறப்படுகிறது. ஆனால் சம்கிதையையும் உபநிடதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.

பிராமணங்கள்

வேதத்தொகுப்பில் சம்கிதைக்கு அடுத்ததாகப் பிராமணங்கள் வருகின்றன. வேள்வி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய சடங்குகளைப் பற்றி பிராமணங்கள் விவரிக்கின்றன.

யசுர் வேதத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள யாகத்தைச் செய்யும் முறை பிராமணங்களில் விரிவாக விளக்கப்படுகிறது. மந்திரங்களுக்கும் வேள்விக் கிரியைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பையும் பிராமணங்கள் விரித்துரைக்கிறது.

கா.கைலாசநாதக் குருக்கள்:-

“நெய் முதலிய “ஆகுதிகளை” கொடுக்கும் இவ்வழிபாட்டு முறை, பல்கிப் பெருகி மிகவும் விரிந்த விரிவான முறையில் “வேள்வி” குறிப்பிடப்படலாயிற்று. இவ்வேள்வி முறையை விவரித்து விளக்கிக் கூறுவதற்கென்றே தனி நூல்கள் தோன்றின. இவை “பிராமணங்கள்” எனப் பெயர் பெறுவன.”

(வடமொழி இலக்கிய வரலாறு - பக்-77)

யாகத்தில் (வேள்வியில்) இடம் பெறும் ஒவ்வொரு கிரியைகளுக்கும் அதற்குரிய தட்சணையையும் வரையறுத்து இதில் கூறப்பட்டுள்ளது. யாகம் நிகழ்த்துவதனால் கிடைக்கும் இம்மை, மறுமைப் பயன்களையும் விவரிக்கின்றன.

நான்கு வேதங்களுக்கும் தனித்தனியாகப் பிராமணங்கள் இருக்கின்றன. மொத்தம் 19 பிராமணங்கள் தற்போது கிடைத்துள்ளன.

ரிக் வேதத்தைச் சேர்ந்தவை இரண்டு. ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம்.

யசுர் வேதத்தைச் சேர்ந்தவை ஐந்து. சுக்கில யசுரைச் சேர்ந்தவை சதபத பிராமணம், கிருஷ்ண யசுரைச் சேர்ந்தவை மைத்திரயானி சங்கிதை, கதா சங்கிதை, கபிஸ்தலகதா சங்கிதை, தைத்திரீய சங்கிதை.

சாம வேதத்தைச் சேர்ந்தவை பதினொன்று. அவை: தண்டிய மகாபிராமணம், சட்விம்ச பிராமணம், சாமவிதான பிராமணம், அர்சேய பிராமணம், தேவதாத்தியாயப் பிராமணம், சாண்டோக்கிய பிராமணம், சங்கிதோபனிடத பிராமணம், வம்ச பிராமணம், ஜைமினிய பிராமணம், ஜைமினிய அர்சேய பிராமணம், ஜைமினிய உபநிடத பிராமணம்.

அதர்வண வேதத்தைச் சேர்ந்தவை ஒன்று. அவை, கோப்பத பிராமணம்.

இவை அனைத்தும் சம காலத்தில் தோன்றியதாகக் கூறிடமுடியாது. சாம, அதர்வண வேதங்களைச் சேர்ந்த பிராமணங்கள் காலத்தால் பிந்தியவையாக இருக்கலாம். அதர்வணச் சம்கிதையை நான்காம் வேதமாகச் சேர்த்திடும் போது, இதற்கான பிராமணங்கள் புதியதாகச் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

பழைமையான ரிக் வேத சம்கிதைகளில், இந்திரன், அக்கினி போன்ற தேவர்களைச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கும். அதாவது அந்தப் பாடல்களில் தேவர்களை விளித்துப் பெருமைப்படுத்தப்பட்டிருக்கும். பிராமணங்களில் இந்தத் தேவர்களைப் பெருமைப்படுத்துவதைவிட வேள்விகளே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்திரன், அக்கினி போன்ற தேவர்களைவிட, வேத சம்கிதைகளில் குறைவாகப் பேசப்பட்ட விஷ்ணுவும் ருத்திரனும் பெரும் தெய்வங்களாக உயர்ந்து காணப்படுகின்றனர்.

பிராமணங்களில் எத்தகைய குறிக்கோளையும் முன்வைத்து யாகம் செய்வதில்லை, யாகம் செய்வதே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளப்படுகிறது. இதுவே மீமாம்சையிக்கு அடிப்படையாக இருக்கிறது.

பொருளடக்கம்

No comments:

Post a Comment