Saturday 11 June 2022

7) மீமாம்சை எளிய அறிமுகம் (பூர்வ மீமாம்சை)

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

66 வது வார வகுப்பு – 11-06-2022)


 

சென்ற வகுப்பில் வேதத்தைப் பற்றி பார்த்தோம். வேதம் நான்கு ஆகும். ஒவ்வொரு வேதமும் சம்கிதை, பிராமணியம், ஆரண்யம், உபநிடதம் என்ற நான்கு உட்பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டும் கர்மகாண்டம் பின்னால் உள்ள இரண்டும் ஞான காண்டம் என்று அழைக்கின்றனர். கர்ம காண்டத்தில் இருந்து குறிப்பாக. வேத சம்கிதையில் இருந்து ஒரு மதம்-தத்துவம் எழுமானால் அது மீமாம்சையாகத் தான் இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

     தங்களை வேத மதமாகக் கூறிக் கொள்ளும் சைவமோ, வைணவமோ, அதே போல வேதாந்தமாகக் கூறும் அத்வைத தத்துவமோ வேதத்தில் உள்ள பழைய சம்கிதையை பின்பற்றவில்லை என்பதே உண்மையாகும். சைவமும் வைணமும் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவை, ஆனால் பழைய ரிக் வேத சம்கிதைகள் சிலை வழிபாட்டை ஏற்காது, சைவத்தில் உள்ள அருவுருவான லிங்கத்தையும் ஏற்காது. அதனால் மீமாம்சையின் தனித்தன்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா:-

"ஒரு தத்துவம் என்ற வகையில் வேதங்கள் இல்லாமல் மீமாம்சையைக் காண்பது சாத்தியமில்லை. இது வேதத்தினால் வளர்ந்தது. இதனுடைய அறிவு ஆதாரங்கள் அனைத்தும் வேதத்திலிருந்து கிடைக்கப் பெற்றவை. வேதத்தை சரியாகப் புரிந்துகொள்ள இதைக்காட்டிலும் வேறோன்றும் இல்லை என்பது இதன் முக்கியமான பங்களிப்பாகும். உண்மையில் வேதத்தை நியாயப்படுத்துவதே அன்றி மீமாம்சை வேறொன்றும் அல்ல."

(மதமும் சமூகமும், பக்-115)

       இங்கே வேதம் என்பது சம்கிதைப் பகுதியே ஆகும். வேத சம்கிதையை நியாயப்படுத்துவதே மீமாம்சையின் அடிப்படையாகும்.

       மீமாம்சை என்றால் ஆராய்ந்து ஏற்றல் என்று பொருள்படும். ஆராய்ச்சி என்றால், வேதம் கூறியது சரியா? தவறா? என்ற ஆராய்ச்சி அல்ல. வேதங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் சரியா? தவறா? என்று மீமாம்சை ஆராய்கிறது.

       பிற்காலத்திய மீமாம்சை வேத சம்கிதையை மட்டும் பின்பற்றியதாக கூறிட முடியாது. அதனைத் தொடர்ந்து ஆராய்ந்தவர்கள் என்று கூறலாம். ஏன் என்றால் ரிக் வேத சம்கிதை காலத்தின் கருத்தோடு மீமாம்சகர் பலவற்றை வளர்த்தனர்.

       மீமாம்சை தத்துவத்தைப் பேசும் நூலில் முக்கியமானது ஜைமினி எழுதிய “மீமாம்சை சூத்திரம்”. இந் நூல் சுமார் கி.மு. 400ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இந்த நூல் பன்னிரண்டு  அத்தியாயங்களையும் 2,500 சூத்திரங்களையும் கொண்டுள்ளது.

 வேதம் மனிதனால் படைக்கப்பட்டதல்ல. அதனால் வேதத்தை அபௌர்ஷேயம் என்று கூறினர். அபௌர்ஷேயம் என்றால் புருஷனால் படைக்கப்பட்டதல்ல, புருஷன் என்றால் மனிதன், வேதம் மனிதனால் படைக்கப்பட்டதல்ல என்பதே மீமாம்சையின் கருத்து. அதுமட்டும் அல்லாது, வேதம் தெய்வத்தால் படைக்கப்பட்டது என்று கூறுவதையும் மீமாம்சையினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதம், என்றும் இருப்பது என்பதே அவர்களின் நம்பிக்கை.

 மீமாம்சம் பற்றி “ஜனசக்தி” இதழில் சென்ற வாரம் (மே29 – ஜீன்04-2022) எஸ்.தோதாத்ரி எழுதியதில் ஒரு பகுதியை பார்ப்போம்.

 

“மீமாம்சை என்ற சொல்லுக்கு ஆராய்தல் என்று அர்த்தம். இவர்கள் வேதங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். அதேசமயத்தில் வேதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இவ்வாறு ஆராயும்போது இவர்கள் மிகச் சிறப்பாக மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களது கருத்துப்படி எந்த ஒரு சொல்லையும் அது குறிக்கும் பொருளில் இருந்து காணமுடியாது. உதாரணமாக மலர் என்ற சொல் அந்தப் பொருள் இல்லாமல் உருவாக முடியாது. இதில் பொருள்முதல்வாதத் தன்மை இருந்தாலும் மீமாம்சவர்கள் அதிக அளவு சொல்லுக்கே (முக்கியத்துவம்) கொடுத்தனர். மீமாம்சகர்கள் வேதம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. வேதமானது மனிதனாலும் படைக்கப்படவில்லை. இது அவர்களது கொள்கை.”

       வேதம் இயற்கையானது என்று மீமாம்சையினர் கருதியதால், வேதத்தில் கூறப்பட்டதை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதினர். வேதத்தில் உள்ளவற்றுக்கு கூறப்படும் பொருள் சரியானதா என்ற ஆராய்ச்சியைத்தான் மீமாம்சையினர் செய்தனர்.

       வேத வாக்கியங்களை எப்படி அணுகுவது என்று வகைப்படுத்தியுள்ளனர். தனி வாக்கியங்கள் பொருள் கொடுக்கவில்லை என்றால், கூட உள்ள வாக்கியங்களை சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். தனி வாக்கியங்கள் பொருள் தருமாயின் அதனை அப்படியே பொருள் கொள்ள வேண்டும். சில வாக்கியங்களில் பொருள் முழுமையற்று இருக்கும், அதாவது புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியம் இல்லை என்றால், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அதனைப் பொருள் கொள்ள வேண்டும்

       சொல் பொருளோடு இணைந்தது, பொருளில்லாத சொல் என்பது கிடையாது. சொல்லை உச்சரிக்கும் போது உருவாகும் ஒலியையும் மீமாம்சையினர் ஆராய்ந்தனர். “ஓ” என்ற சொல்லை ஒருவர் பலமுறை உச்சரித்தாலும், பலர் ஒருமுறை உச்சரித்தாலும் அதன் பொருள் ஒன்றே. ஒருவன் உச்சரித்தாலும் உச்சரிக்காவிட்டாலும் அந்த சொல்லில் அந்த ஒலி இருக்கிறது. ஒலி நித்தியமானது. இதன் தொடர்ச்சியாக மொழி நித்தியமானது என்று மீமாம்சையினர் கூறினர். இறுதியாக வேதம் நித்தியமானது என்ற முடிவுக்கு வந்தனர்.

       வேதத்தில் கூறப்பட்டதை கடைப்பிடிப்பது மீமாம்சகரின் தர்மம் ஆகும். தர்மம் என்றால் வேதத்தில் கூறப்பட்ட அறநெறியை கடைபிடித்தல் என்று பொருள் கொள்ளக்கூடாது. வேதத்தில் எதைச் செய்ய வேண்டும்?. எதைச் செய்யக்கூடாது? என்று கூறுகிற கட்டளைகளை பின்பற்றுவதே தர்மம் என்கின்றனர்.

       வேதத்தில் கூறப்பட்ட நித்திய கருமங்கள், நைமித்திக கருமங்கள் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். நித்திய கருமங்கள் என்றால் அன்றாடம் செய்ய வேண்டிய கருமங்கள் அதாவது செயல்கள், நைமித்திக கருமம் என்றால் சிறப்பு (விஷேச) காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கருமங்கள்.

       உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்பதை தொடக்ககால மீமாம்சை ஏற்கவில்லை. பிரபஞ்சம் என்றும் உள்ளது என்பதே மீமாம்சையின் கருத்து.

 வி..ராமசாமி ஐயர்:-

"பிரபஞ்சத்திற்குத் தோற்றக் கேடுகள் இல்லை என்பது பூர்வ மீமாம்சையின் கருத்தாகும். பிரபஞ்சம் இருந்தது, இருக்கும், இன்று உள்ளதுபோல் என்றுமுள்ளதாகும். படைப்போ அல்லது பிரபஞ்சத்தின் முற்றழிவோ இல்லை. ஆதலால் பிரபஞ்சத்தின் தோற்றக் காரணமாக இறைவன் கருதப் பெறுவதற்கு இல்லை. வேதங்களின் தலை சிறந்த தலைமையினைக் குறிக்கும் எக்கொள்கையினையும், பூர்வ மீமாம்சகர்கள் ஏற்பதற்கில்லை."

(கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு, தொகுதி 1- பக்)

       உலகில் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்கிறது வேத சம்கிதை. வேதாந்தத்தைப் போல உலகையும், குடும்ப உறவுகளையும் துன்பமயமாகக் கருதாமல் உலகில் சிறப்பாக வாழ்வது பற்றியே வேத சம்கிதை பேசுகிறது. தொடக்கக் காலத்தில் சொர்க்கம் பற்றிய கருத்து மீமாம்சையிடம் இல்லை என்றாலும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வேதக் கடமைகளை சரியாக செய்வதின் மூலம் இறப்புக்குப் பிறகு சொர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கலாம் என்ற கருத்து நுழைந்தது.

       வேதாந்தத்தில் குறிப்பாக அத்வைத வேதாந்தத்தில் ஞான யோகமே வலியுறுத்தப்படுகிறது, அதாவது உலகத்தை மறுத்து முக்திக்கு வழிகாட்டுகிறது. மற்ற வேதாந்தத் தத்துவமான துவைதம், விசிட்டாத்வைதம் ஆகிய இரண்டும்கூட உலகம் துன்பமயமானதாக, சம்சார சுழற்சி கொண்டதாக கருதி, ஆத்ம முக்தியே அனைத்துக்குமான விடுதலை என்று கூறுகிறது. ஆனால் வேத சம்கிதையை அடிப்படையாக ஏற்கும் மீமாம்சை முக்தியை பற்றி தொடக்கக் காலத்தில் ஏற்றுக் கொள்ளாது, உலகில் இன்பமாக வாழ்வதையே தமது கடமையாகக் கொண்டிருந்தது.

       இல்வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளுக்காகவே வேள்விகளை மீமாம்சையினர் செய்தனர். வேள்வியை முறைப்படி செய்து அதனால் கிட்டும் பலனை அனுபவிக்கவே மீமாம்சையினர் விரும்பினர்.

       உலகாயதர்களின் இன்ப நாட்டத்தை வைதீகர்கள் (வேதாந்திகள்) இழிவாகக் கருதுவார்கள், ஆனால் உலகாயதரைப் போலவே இந்த மீமாம்சையினரும் உலகில் கிடைக்கும் இன்ப நாட்டத்திலேயே கவனம் செலுத்தினர்.

 பத்மன் கூறியதைப் பார்ப்போம்.

 

“ஒருவகையில், நாத்திகர்களான லோகாயதர்களுக்கும் ஆத்திகர்களான மீமாம்சகர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரு சாராரின் பொது நோக்கமும் இன்ப நாட்டமே. ஆன்மா இல்லை என்று கூறும் முன்னவர்கள் இகத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து அதிலே இன்பத்தை அனுபவிப்பதுதான் வாழ்வின் இலக்கு என்று கருதினால், ஆன்மா உண்டு என்று ஏற்கும் பின்னவர்கள் இகத்தில் மட்டுமில்லாது பரத்திலும் இன்பம் அனுபவிப்பதுதான் பிறவியின் இலக்கு என்று கருதுகிறார்கள். பின்னவர்களான இந்த மீமாம்சர்களின் பரமானது முக்தி அல்ல, சொர்க்க போகமே. இருப்பினும் பிற்காலத்தில் வேதாந்தத்தின் செல்வாக்கு காரணமாக முக்தியை ஏற்றுக் கொண்டாலும், வெறும் ஞானத்தால் முக்தி கிடைத்து விடாது, கர்மங்களைக் கைவிடாமல் நிறைவேற்றினால் மட்டுமே அது கிடைக்கும் என்று புதிய வியாக்கியானம் (விளக்கம்) கொடுத்தார்கள்.”

(தத்துவ தரிசனங்கள், பக்-177)

       மீமாம்ச சூத்திரத்துக்கான மிகவும் பழைமையான விளக்கவுரை கி.மு. முதல் நூற்றாண்டில் சபரர் என்பவரால் எழுதப்பட்டது. இந்த விளக்கவுரைக்கு பிற்காலத்தில் குமாரிலபட்டர், பிரபாகரர் ஆகிய இருவர் விளக்கவுரை எழுதினர்.

       அறிவு பெறும் வழியாக பிரமாணங்கள் உள்ளன என்று ஏற்கெனவே பார்த்தோம். 1.பிரத்தியட்சம் (புலனுணர்வு), 2.அநுமானம் (உய்த்துணர்வு), 3.ஆப்தவாக்கியம் (உரைச்சான்று), 4.உபமானம் (ஒப்புநோக்கு), 5.அர்த்தாபத்தி (சூழ்நிலைசார் உய்த்துணர்வு), 6.அனுபலப்தி (எதிர்மறைச் சான்று). இந்த ஆறு பிரமாணங்களையும் குமாரிலபட்டர் ஏற்கிறார். பிரபாகரர் முதல் ஐந்து பிரமாணங்களை மட்டுமே ஏற்கிறார். ஆறாவதான அனுபலப்தி என்கிற பிரமாணத்தை ஏற்கவில்லை.

       அணுக்களே அனைத்துக்கும் அடிப்படை என்பதை மீமாம்சையினர் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த அணுவை மற்றவர்கள் காண முடியாத நிலையாக இவர்கள் கருதவில்லை. அணுக்கள் காணக்கூடியது என்பதே மீமாம்சையினரின் கருத்து.

       வேதத்தை மட்டுமே பிரபாகரர் ஏற்கிறார். குமாரிலபட்டர் வேதத்தோடு வேத உண்மைக்கு இணையான வாக்கியங்களையும் ஏற்கிறார்.

       ஜைமினி எழுதிய “மீமாம்சை சூத்திரம்” என்ற நூலில் கடவுள் பற்றி எதுவும் கூறவில்லை. தொடக்ககால மீமாம்சை கடவுளை ஏற்கவில்லை என்பது தெரிகிறது. மீமாம்சை சூத்திரத்துக்கு பிற்காலத்தில் சபரர் எழுதிய விளக்கவுரையிலும் கடவுள் மறுப்பே காணப்படுகிறது.

           குடம் செய்வதற்கு களிமண்ணும், அதற்கான துணை கருவிகளும் இருந்தால் மட்டும் போதாது, அதனை செய்து முடிக்க குயவன் தேவை. அதே போல உலகப்படைப்புக்கான பொருட்கள் இருந்தால் மட்டும் போதாது அதனை ஒழுங்காகப் படைக்க வேண்டும் என்றால் உணர்வுள்ள சக்தியான கடவுள் தேவை என்பதை மீமாம்சையினர் மறுக்கின்றனர். உலகில் காணப்படும் தனிப்பொருட்கள் உருவாவதும் அது அழிந்து போவதும் உண்மையே. இதனை வைத்து உலகம் படைக்கப்பட்டதாக கருதிட முடியாது என்பதே மீமாம்சையினரின் முடிவு.

       குயவனின் பானைப் படைப்பை, ஒப்பிட்டு உலகப் படைப்புக்கு கடவுள் தேவை என்பதை குமாரிலபட்டர் மறுக்கும் விதத்தைப் பார்ப்போம். பானையை படைத்தவன் குயவன் என்றால் இந்தப் படைப்பை கடவுள் நிகழ்த்தவில்லை என்றாகிறது. அதுபோலவே அனைத்துப் பொருட்கள் உருவாவதற்கு கடவுள் காரணமல்ல என்கிற முடிவுக்கு வருகின்றார்.

       கடவுள் உலகை படைத்தார் என்றால் அவர் ஓர் உடலைப் பெற்றிருக்க வேண்டும். கடவுள் உடலைப் பெற்றிருந்தார் என்றால் உடலைக் கொண்ட கடவுளைப் படைத்தது யார்? என்ற கேள்வி எழும். இப்படியே கேட்டுக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. மேலும் ஒருவர் ஒன்றைப் படைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். துக்கமயமான இந்த உலகத்தை, அனைத்து சக்தியும் பொருந்திய கடவுள் படைத்திருக்க மாட்டார். முக்காலங்களையும் அறிந்த சக்தி பொருந்திய படைப்பாளன், இன்று காணும் துக்கமயமான உலகத்தை  எப்படி படைத்திருக்க முடியும் என்று மீமாம்சையினர் கேட்கின்றனர். நோக்கம் இன்றி எதையும் யாரும் படைக்க விரும்பமாட்டார்கள், இத்தகைய துன்பமயமான உலகை எப்படி கடவுள் படைதிருக்க முடியும்? என்று கேள்வியை மீமாம்சையினர் எழுப்புகின்றனர்.

 தேவி பிரசாத் சட்டோபாத்யாயா:-

"ஆத்திக நிலைப்பாட்டில் காணப்படும் பல முரண்பாடுகளை குமாரிலர் எள்ளி நகையாடுகிறார். உடல் இல்லாத ஆத்மா எதையும் படைக்க முடியாது. அப்படி படைக்க வேண்டுமானால், படைப்பு கர்த்தா அல்லது பிரஜாபதிக்கு ஒரு உடல் அவசியமாகிறது. ஆனால், ஒருவர் தனது உடலை படைத்துக் கொள்ள முடியாது. படைப்பு கர்த்தாவின் உடலைப் படைக்க வேறொரு படைப்புக் கர்த்தா தேவைப்படுகிறது. இவ்வாறு முடிவில்லாமல் கூறிக் தொண்டே போக முடியும். அத்துடன் ஒர் அறிவற்றவன் கூட நோக்கம் எதுவுமின்றி எதையும் செய்ய மாட்டான். அப்படி இருக்கும் போது, துன்பமும் வலியும் காணப்படும் உலகை சர்வ வல்லமையுள்ள சகலத்தையும் அறிந்த கடவுள் ஏன் படைக்கப் போகிறார்? வேதாந்தம் கூறும் படைப்புத் தத்துவத்தைக் கூட குமாரிலர் எதிர்த்தார்."

(இந்தியத் தத்துவம் ஓர் எளிய அறிமுகம், பக்-86)

       வேத சம்கிதையில் தேவர்களைப் பற்றி பேசப்பட்டுள்ளது. அந்த தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்பதே மீமாம்சையினரின் பதிலாகும். அதிலும் குறிப்பாக சபரர் இதனை விரிவாக ஆராய்ந்துள்ளார். உண்மையான வடிவம் கிடையாது, அதாவது உடல் கிடையாது. அப்படியிருக்க அளிக்கப்பட்ட உணவை தேவர்கள் எப்படி உண்டு மகிழ்வு அடைவர். அதனால்  தேவர்கள் உண்டு மகிழ்ந்து பலனை தருகிறார் என்பதை ஏற்க முடியாது. தேவர்களுக்கு இந்த உலகப் பொருட்களின் மீதான எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்பதே சபரரின் முடிவாகும்.

       வேதங்களில் கூறப்பட்டுள்ள வேள்வியில் ஓதப்படும் தேவர்கள் என்பது வெறும் பெயர்களே ஆகும் என்கிறார் சபரர். கடவுளின் தேவையை மீமாம்சையினர் தொடர்ந்து மறுத்துவந்துள்ளனர்.

       வேள்வியின் பலன் தேவர்களால் கிடைப்பதில்லை, வேள்வியின் சக்தியினாலேயே கிடைக்கிறது. முறைபடி செய்கின்ற வேள்வியே அதற்குரிய பலனை கொடுக்கும் என்பதே மீமாம்சையினரின் கருத்து. மீமாம்சையினர் வேதகால தேவர்களை கடவுள்களாக ஒப்புக் கொள்ளவில்லை. வேதகால வேள்வி என்பது பழங்குடியினரிடம் காணப்பட்ட மாயவித்தையின் சிதைவாகவே காணப்படுகிறது. இறைவனிடம் வேண்டி இறைஞ்சுவதாக வேதப் பாடல்கள் காணப்படவில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

 வேத சம்கிதைகள் மாயவித்தையின் சிதைவாகக் காணப்படுவதனால், இதில் மதத்தின் தன்மையோ, தத்துவத்தின் தன்மையோ காண முடியவில்லை என்பதே உண்மையாகும்.

       இதுபற்றி ஓ.ரா.ந.கிருஷ்ணன் கூறுவதைப் பார்ப்போம்.

 

“வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகளும் சடங்குகளும் ஒரு தத்துவ அடிப்படையை வழங்கி அவற்றிற்கு முதன்மையும் முக்கியத்துவம் அளித்து புரோகிதத் சடங்கு மரபையும் புரோகிதர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது மீமாம்ச ஞான மரபு. இதன் தத்துவ சிந்தனைகள் மெய்யறிவு என்பது கிஞ்சித்தும் இல்லை. மெய்ஞான தரிசனம் என்று கூறப்படும் இந்த மீமாம்ச தத்துவத்தில் எல்லாமே கற்பனையாக புனைந்து உருவாக்கப்பட்ட கருத்துக்களாக உள்ளன.”

(இந்திய ஞான மரபுகள் பௌத்தத்தின் பார்வையில்)

      மாவைவித்தையின் சிதைவு வர்க்க சமூகத்தில் வேறுவிதமாக உருப்பெற்றது. என்பதைப் பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.

 

"மாயவித்தை புராதனகால, வர்க்கத்துக்கு முந்திய சித்தாந்தம் என்ற வகையில் புராதன சமுதாயத்தில் சில செயல்பாடுகள், குறிப்பாக கூட்டு உழைப்பு என்ற அம்சத்தில் அதன் பொருத்தப்பாட்டை நினைவு கூர்வது அவசியமாகும். மாறாக, வேத யக்ஞம் - மாயவித்தையைத் தவிர வேறொன்றும் இல்லாதாதாக இருப்பினும் - அது வர்க்கமாகப் பிளவுபட்ட சமூகத்துக்கு மாற்றப்பட்டது. அது மாயவித்தையின் செயல்பாட்டை நேரெதிராக மாற்றியது. உண்மையான தொழில்நுட்பத்துக்கு உதவுகின்ற மாயையான தொழில்நுட்பமாக இருப்பதற்குப் பதிலாக இது ஒட்டுமொத்தப் பொருளாதார விரயமானது. ஒட்டுண்ணித் தனமான மதகுரு வர்க்கம் மட்டும் கொழுத்தது.

 

அதற்குமேல் வேத வேள்வியில் மிஞ்சி இருப்பது என்ன? கடவுள் - அல்லது எதார்த்தமாக உள்ள வேத தெய்வங்கள் என்ற அனுமானத்தை ஒழித்தாகிவிட்டது. வேதகால மதகுருவின் சித்தாந்தம் அதன் சரியான அர்த்தத்தில் மீமாம்சை என எளிதில் அறியப்படுகிற பூர்வ மீமாம்சைத் தத்துவமாக உருப்பெற்றுவிட்டது."

(மதமும் சமூகமும், பக்-114-115)

       கடவுளை தர்க்க வழியில் மீமாம்சை மறுத்தது. சக்தி பொருந்திய கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால், இங்கே இவ்வளவு அநீதிகளும், தீமைகளும் நிறைந்து இருக்குமா என்று கேள்வி எழுப்புகிறது என்று ஏற்கெனவே பார்த்தோம்.

 கடவுளுக்கு வடிவம் இருக்கிறது என்பதையும், கடவுளுக்கு படைத்த உணவை  அவர் சாப்பிட்டார் என்பதையும் நீருபிக்க முடியாது என்கிறார் சபரர்.

     மிகமிக பிற்கால மீமாம்சையினர் அல்லது மீமாம்சை கோட்பாடுக்குள் நுழைந்தவர்கள், பிற்கால வைசேஷிகர் கூறியது போலவே “அதிர்ஷ்டம்” செயல்படுவதற்கு ஒரு கடவுள் தேவை என்று கூறினர். பிற்காலங்களில் பிற தத்துவங்களின் தாக்கத்தால் முக்தி பற்றிய கருத்து மீமாம்சையினரிடம் வந்தது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் மீமாம்சையை ஆன்மீகமயமாக்க முயற்சித்தவர்களே முக்தியைப் பற்றிய கருத்தை மீமாம்சை தத்துவத்தில் நுழைத்தனர் என்று கருதுவதே சரியானதாக இருக்கும்.

       உலகில் இன்பமாக வாழ்வது பற்றியே மீமாம்சை கவனம் செலுத்தியது. இதுதான் உண்மை. இந்தியத் தத்துவங்களில் ஒன்றாக கூறப்படும் மீமாம்சையின் உண்மையான நிலை இதுவே. வேத சம்கிதை காலம்வரை சொர்க்கம் என்ற கருத்துக்கூட கிடையாது. பிற்காலங்களில் சொர்க்கம் என்ற கருத்து சேர்க்கப்பட்டது, சொர்க்கத்தை அடைவதே முக்தி என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. முக்தியைப் பற்றி பேசினால் அங்கே ஆத்மாவும் வந்துவிடும்.

       பிற்காலத்தில் மீமாம்சை தத்துவத்தில் ஆத்மா என்ற கருத்து நுழைந்தது. உடல் உறுப்புகளுக்கு அப்பாற்பட்டது ஆத்மா, இந்த ஆத்மா இறப்புக்குப் பின்பும் இருக்கும். இந்த ஆத்மா அணுத்தன்மை அற்றது. இந்த ஆத்மா பல என்பதே மீமாம்சையின் கருத்து.

 முக்தி என்கிற கோட்பாட்டை ஜைமினி, சபரர், பிரபாகரர் ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை. குமாரிலரும் அவரது சீடர்களும் முக்தியை மீமாம்சையில் நுழைத்தனர். முக்தி பெற்ற நிலையில் ஆத்மாவுக்கு உடல், புலன் அறிதல் போன்றவை இல்லாது போகிறது.

 பிறவிகளால் உருவான கர்மங்களை (வினைகளை) முற்றிலும் தீர்த்த பிறகே முக்தி கிட்டும் என்று கருதினர்.

       தற்காலத்தில் பூர்வ மீமாம்சத்தைப் பின்பற்றுபவர்கள் எவரும் இல்லை. உண்மையில் வேத சம்கிதையை அடிப்படையாகக் கொண்ட மதம் நம் நாட்டில் முற்றிலும் இல்லாது போய்விட்டது என்பதே உண்மையாகும்.

 இது பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.

 

"இந்த நாட்டிலுள்ள ஏராளமான புண்ணியத்தலங்கள், கோயில்கள் எதிலும் பெரும் வேதக் கடவுள்கள் ஏதுமில்லை. வருணன் பற்றிப் பேசும் லூயிஸ் ரெனு, “இந்திய எல்லைக்கு அப்பால் வெகு தொலைவிலுள்ள பாலி தீவில்தான் அவருக்கான ஒரு கோயிலை நம்மால் இன்று கண்டறிய முடியும்” எனக் குறிப்பிடுகிறார். வேதங்கள் ஒரு மதம் என்ற வகையில் இந்தியாவில் அழிந்து போய்விட்டன. வேத மதம் இல்லாத ஒன்றாகிவிட்டது. சில சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிற வெகு சில அபூர்வமான வாக்கியங்கள் அல்லது அரைகுறை வாக்கியங்களுக்கு அப்பால், வேதம் என்ற வார்த்தை மட்டுமே இன்று எஞ்சியுள்ளது."

(மதமும் சமூகமும், பக்-112)

 இன்று சைவம், வைணவம் போன்ற மதங்களை உள்ளடக்கிய இந்து மதமானது வேத வழியில் வந்தவை கிடையாது. அவை சிந்துவெளி நாகரீகத்தில் இருந்த சிலை வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு ஆகியவற்றில் இருந்து தோன்றியது. இது பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாயா சிறப்பாக கூறியுள்ளார்.

 

"அவை அவர்களுக்கு பண்டைய ஹரப்பாப் பண்பாட்டுக் காலத்திலிருந்து மரபுவழியாகக் கொண்டிருந்த சிறு தெய்வங்கள் மற்றும் பல புதிய உள்ளூர் தெய்வங்கள் மூலமாகக் கிடைத்தன. இவ்வாறுதான் வேதம் என்ற வார்த்தை பரந்த வேத இலக்கியம் முழுவதிலும் இருந்து வந்தது. ஆனால், இவை, இன்று வறிய நிலையிலுள்ள மதகுருமார்களுக்கு வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளவை. ஸ்ராதம் (Sradha) போன்ற வீட்டுச் சடங்குகளே இவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிற சில வாக்கியங்கள் அல்லது அரைகுறை வாக்கியங்களுக்கு அப்பால் வேறு எந்த முக்கியத்துவத்தையும் அவை பெறுவதில்லை. அதற்குமேல் வேதம் இந்தியாவின் உண்மையான மதத்துக்கு எந்தப் பங்களிப்பும் செய்துவிடவில்லை.

 

இது ஓர் எளிய உண்மையை வெளிப்படுத்துகிறது. வேத அணுகுமுறையிலான அர்த்தத்தில் இன்று மதம் என்று ஏதுமில்லை “வேத மதம்” என்பது வெறும் மாயைதான் என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டுவிடுகிறது."

      (மதமும் சமூகமும், பக்-151)

       வேத சம்கிதை அடிப்படையில் ஒரு மதம்-தத்துவம் வளர்ச்சி அடைகிறது என்றால் அது பூர்வ மீமாம்சமாகத்தான் இருக்கும் என்பதை ஆதாரத்தோடு பார்த்தோம். அந்த பூர்வ மீமாம்சை தத்துவத்தையோ, மதத்தையோ கடைபிடிப்பவர்கள் இன்று யாரும் இல்லை. இன்று வேத மதம் என்பது சட்டோபாத்யாயா கூறுவது போல் மாயையானதே, அதாவது இல்லாததே.

       ஆனால், வைதீகவாதிகள் வேத சம்கிதையின் சாரமே உபநிடதம். உபநிடதமே வேதாந்தம், அதாவது வேதத்தின் இறுதி முடிவுகள் என்று ஆதாரமற்று கூறிவருகின்றனர். உண்மையில் வேத மதம் அழிந்துவிட்டது. இந்து மதம் வேத சம்கிதைக்கு மாறான அடிப்படைகளைக் கொண்டுள்ளது. இன்றைய இந்து மதத்துக்கும் வேத சம்கிதைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

       சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், மீமாம்சை ஆகியவையே ஐந்து தரிசனங்கள் ஆகும். இந்த ஐந்து தரிசனங்களும் உபநிடத தத்துவப் போக்குக்கு மாறானது, ஏதிரானது என்றுகூட சொல்லாம். இந்த மீமாம்சையை பூர்வ மீமாம்சை என்றும் தங்களை உத்திர மீமாம்சை என்று பிற்காலத்தில் வைதீகர்கள் கூறிக் கொண்டு, ஐந்தாவது தரிசனமான மீமாம்சையில் ஒட்டிக் கொண்டனர். ஓட்டிக் கொண்டதோடு மட்டுமில்லாது, இந்த ஐந்தையும் வைதீகத் தத்துவம் என்று ஆதாரமற்று கூறிவருகின்றனர். என்ன செப்பிடுவித்தை செய்தாலும் ஐந்து தரிசனங்களும் வேதாந்தத்தோடு (உபநிடதங்களோடு) முரண்படுவதை வைதீகர்களால் மறுத்திட முடியாது.

     ஐந்து தரிசனங்களும் வைதீக சிந்தனைக்கு மாறான, எதிரான போக்கு உடையவை என்பதையே ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

பொருளடக்கம்

No comments:

Post a Comment