Thursday, 14 February 2019

தேசிய இனப் பிரச்சினை: லெனினியமும் குட்டிமுதலாளியத் தேசியவாதமும் - நூல் அறிமுகம்



தேசிய இனப் பிரச்சினை:
லெனினியமும்
குட்டிமுதலாளியத் தேசியவாதமும்

நூலாசிரியர்: மு.வசந்தகுமார்-குமணன்

விலை:ரூ70/-

வெளியீடு:   சோசலிசக் கல்வி மையம் – ஈரோடு
            சமூக விஞ்ஞான ஆய்வரங்கம் - ஓசூர்
மு.வசந்தகுமார், குமணன் ஆகிய இரு தோழர்கள் சேர்ந்து “தேசிய இனப் பிரச்சினை: லெனினியமும் குட்டிமுதலாளியத் தேசியவாதமும்” என்ற நூலை எழுதியுள்ளனர். இந்நூல் தோழர் கார்முகில் எழுதிய “பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கொள்கை” என்ற நூலை விமர்சித்துள்ளது. விமர்சன நூல்கள் மிகமிகக் குறைவாக எழுதப்படும் இக்காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது. தோழர் கார்முகில் எழுதிய “தவறுகளுக்கு தத்துவார்த்த முலாம்” விமர்சன நூல் ஏற்கெனவே வந்துள்ளது. இதற்குப் பதிலளிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்போம், ஆரோக்கியமாக விமர்சிப்போம்., விமர்சனங்களே நம்மை வளப்படுத்தும். இங்குள்ள பல குழப்பங்கள் விவாதத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டியுள்ளது.

தோழர் கார்முகில் அவர்களின் தேசியக் கண்ணோட்டம் இந்நூலில் விமர்சிக்கப்பட்டுள்ளது. நூலின் தொடக்கத்தில், பழங்குடி மக்கள் சமூக அமைப்பில் இருந்து முதலாவது வர்க்க சமூதாயம் தோன்றிய போது தேசிய இனங்கள் அமைந்தன, என்கிற தோழர் கார்முகில் அவர்களின் கருத்து விமர்சிக்கப்படுகிறது. இக்கருத்து ‘தேசிய இனப்பிரச்சினையும் லெனினியமும்” என்ற ஸ்டாலின் எழுதிய நூலில் காணப்படும் லெனின் மேற்கோள் மூலம் மறுக்கப்படுகிறது.

இனக்குழு பிணைப்புகளின் பொதுமைப்படுத்தலும் தொடர்ச்சியும் தேசியப் பிணைப்புகள் என்கிற மிகைலோவ்ஸ்கியின் கருத்தை லெனின் இங்கே விமர்சித்துள்ளார். அதே அடிப்படையில் தோழர் கார்முகில் அவர்களின் கருத்தை விமர்சிக்கின்றனர் இந்நூல் ஆசிரியர்கள். அவ்வாறு கூறும்போது, நீண்ட கால வரலாற்றுப் போக்கில் பல்வேறு இனங்கள் ஒன்று கலந்து முதலாளிய வளர்ச்சிக் கட்டத்தில் அது தேசிய இன அடையாளத்தைப் பெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். முதல் அத்தியாயத்தின் முடிவில் இந்நூலாசிரியர்கள் தோழர் கார்முகில் அவர்களின் மீதான விமர்சனமாக, “தேசிய இன விடுதலையைப் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும் மேலாக நிறுத்திக் குட்டி முதலாளியத் தேசிய இனவாதியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்” என்று நேரடியாகக் குற்றசாட்டை வைத்துள்ளனர்.

ஸ்டாலின் நூலிலும் இதற்கான விளக்கம் இருக்கிறது. "பேர்" போன்றோர்கள் தேசம் என்பதை வரலாற்று வகைப்பட்டதாக அறிந்து கொள்ளாமல், இன வகைப்பட்டதாகவும் பழங்குடியோடும் இணைத்து குழப்புவதைச் சுட்டிக்காட்டி மறுத்துள்ளார். ஆனால் தோழர் கார்முகில் அவர்கள் பழங்குடியில் இருந்து நேரடியாக தேசிய இனம் தோன்றியதாகக் கூறவில்லை. ”பழங்குடி மக்கள் சமூக அமைப்பிலிருந்து முதலாவது வர்க்க சமுதாயம் தோன்றியபோது..” அதாவது முதல் வர்க்க சமூம் தோன்றிய போது என்று தான் கூறியுள்ளார். இதுவும் தவறாகும்.

நாடும், தேசமும் ஒன்றல்ல. ஏன் பேரரசை கூடத் தேசம் என்று அழைக்கப்படுவதில்லை. பேரரசுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் மக்கள் குழுக்களாகப் பல்வேறு வழிகளில் பிடிப்பின்றிப் பிரிந்தே கிடக்கின்றனர். இந்தப் பேரரசில் திரண்டுள்ள மக்கள் போர்களின் போது ஏற்பட்ட வெற்றியின் விளைவாய் இணைந்தவர்கள்.

ஸ்டாலின் கூறுகிறபடி, தேசம் என்பதில் மக்கள் முதலில் நிலையான சமூகமாக இருக்க வேண்டும். அதற்கென்று பொது மொழியும், பொதுவான பிரதேசமும் இருக்க வேண்டும். நிலப்பிரபுத்துவக் கட்டத்தின் வழியாக ஏற்பட்ட பொதுவான பொருளாதார வாழ்வும், பொருளாதார ஒன்றிணைப்பு என்பதும் தேசத்துக்கான முதன்மையான அம்சமாகும். இங்குக் கூறப்பட்டது மட்டுமே தேசத்துக்குப் போதுமானவை அல்ல. இதனோடு தேசத்தில் உள்ள மக்கள் தனித்துவமான பொதுப் பண்பாட்டோடு உளவியல் வழிப்பட்ட ஒன்றிப்பும் தவிர்க்க முடியாததாகும்.

இறுதியில் கூறப்பட்ட பண்பாட்டோடு உளவியல் வழிப்பட்ட ஒன்றிப்பு என்பது இனவழியிலான காலச்சாரம் கிடையாது. ஸ்டாலின் தேசம் என்பது குறிப்பிட்ட மக்களைக் கொண்ட சமூகமாகும். இங்கு மக்கள் என்பது இனம் மற்றும் பழங்குடிகளைக் குறிப்பிடவில்லை என்று தெளிவுபடுதிவிடுகிறார். இனவழிப்பட்ட சிந்தனை என்பது மார்க்சியத்தில் கிடையாது.

இந்நூலின் முன்னுரையில் ஏராளமான ஆதாரங்களை அளித்தால் அது மேற்கோள்களின் தொகுப்பாக அமைந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் முடிந்தவரை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நிறைய மேற்கோள்கள் நூலில் சேர்க்கப்பட்டுப் பின்பு நீக்கப்பட்டு அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. நூலின் தொடர்ச்சி அறுபட்டுக் காணப்படுகிறது. இது வாசகருக்கு படிக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்தும். அதிகக் கவனம் செலுத்தி கூடுதலான காலத்தை எடுத்து இது போன்ற குறையை நீக்கியிருக்கலாம்.

“ஒரு தேசம் என்பது ஒரு பொது மொழி இன்றி இருக்க முடியாது, ஒன்றுக்கு மேற்பட்ட பொது மொழிகள் கொண்டதாகவும் இருக்க முடியாது. காரணம் வெவ்வேறு பொது மொழிகள் வெவ்வேறு தேசிய இனங்களைக் குறிப்பவையாகும்” (பா.வ,தே.கொ-பக்-10) மொழிவழிபட்ட தேசிய இனத்தையே தோழர் கார்முகில் கூறுகிறார் என்பது தெரிகிறது. நேசினல் (national) என்பதற்குத் தமிழில் தேசிய இனம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மார்க்சியத்தைப் பொருத்தளவில் தேசியம் என்பத இன வழிப்பட்டதல்ல.

ஒரு தேசத்தில் மூன்று மொழிகள் பேசப்படுவதால் எந்தக் கேடும் ஏற்படவில்லை என்று லெனின் கூறுகிறார்

“.. சின்னஞ் சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை அல்ல, ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது – இதனால் அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டுவிடவில்லை, நன்மையே உண்டாகியிருக்கிறது.”
(தேசியஇனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக்கம் -20)

இரண்டாம் அத்தியாயத்தில், லெனின் கூறுவதில் ஒற்றை தேசிய அரசை குறித்து மட்டுமே தோழர் கார்முகில் பேசுகிறார். பல்தேசிய அரசு குறித்த லெனினது கருத்தை மறைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மூன்றாவது அத்தியாயத்தில் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியே பிரிந்து  தனியான ஒரு தேசிய அரசை உருவாக்க வேண்டும் என்கிற தோழர் கார்முகில் அவர்களின் கூற்று லெனினது கருத்தைக் கொண்டு மறுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சின்னஞ்சிறிய இனங்களையும் என்றென்றைக்கும் தனித்திருத்தலை மார்க்சியர்கள் விரும்பவில்லை, இணைந்திருப்பதற்கான நிலைமைகள் இருப்பின் சேந்திருப்பதையே விரும்புகின்றனர். தாம் அதிகாரத்திற்கு வரும்போது பின்லாந்து, உக்ரேன், அர்மீனியா ஆகிய நாடுகளுடன் நெருக்கமான கூட்டணியையே லெனின் விரும்பியுள்ளார்.

எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல. பிற நிலைமைகள் பொருத்தமாய் இருக்கையில், சந்தேகத்துக்கு இடமின்றி நாம் மத்தியத்துவத்தையே ஆதரிக்கிறோம.”
(மகா ருஷ்யர்களின் தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து)

நாம் அதிகாரத்துக்கு வரும் பொழுது, பின்லாந்துக்கும் உக்ரேனுக்கும் அர்மீனியாவுக்கும் ஜாரிசத்தாலும் (மகாருஷ்ய பூர்ஷ்வாக்களாலும்) ஒடுக்கப்பட்ட வேறு எந்தத் தேசிய இனத்துக்கும் இந்த உரிமையை உடனடியாகவும் நிபந்தனை இல்லாமலும் அங்கீகரிப்போம். மறு பக்கத்தில் நாம் பிரிவினையைச் சிறிதும் ஆதரிக்கவில்லை.


சாத்தியமான அளவுக்குப் பெரிய அரசை, மகா ருஷ்யர்களின் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கின்ற தேசிய இனங்களின் மிக அதிகமான எண்ணிக்கையினரின் இயன்ற அளவுக்கு மிக நெருக்கமான கூட்டணியை நாம் விரும்புகிறோம், ஜனநாயகம், சோஷலிசத்தின் நலன்களுக்காக, வெவ்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களில் சாத்தியமான அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையினரைப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்குள் ஈர்ப்பதற்காக நாம் இதை விரும்புகிறோம். நாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரமான ஒற்றுமையை, இணைப்பை விரும்புகிறோமே தவிர பிரிவனையை அல்ல.”
(கட்சியின் வேலைத்திட்டத்தைத் திருத்தல் குறித்து)


ஐந்தாம் அத்தியாயமான கார்முகிலின் “செயல்பூர்வத்தன்மையும்” லெனினின் “செயல்பூர்வமற்றதன்மையும்” ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒவ்வொரு ஆதாரத்தையும் முழுமையாக ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. தோழர் கார்முகில் சார்பாக விமர்சிப்பவர்கள் தான் முழுமையாக ஒப்பிட்டுப் பதில் அளிக்க வேண்டும்.

     பிரிவினைவாதம் என்பது வேறு பிரிதலை அங்கிகரிக்கின்ற சுயநிர்ணய உரிமை என்பது வேறு. சுயநிர்ணய உரிமை என்பது பிரிதலை அங்கிகரிக்கின்றது என்பதை இந்நூல் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்ற ஜயம் ஏற்படுகிறது. இந்நூல் ஆசிரியர்கள் இதனை ஏற்றுக் கொண்டது பற்றி வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை. பிரிவினைவாதத்தை எதிர்க்கும் போது மார்க்சிய வழிப்பட்ட பிரிதலையும் வலியுறுத்தி எழுதியிருக்க வேண்டும்.

சுயநிர்ணய உரிமையைக்கு உதாரணமாக விவாகரத்து உரிமையை லெனின் சுட்டிக்காட்டுவார். “சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முட்டாள்தானமானது" (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை) என்று லெனின் கூறுகிறார்

விவாகரத்து என்பது சேர்ந்து வாழ முடியாத நிலையில் பிரிவதையே குறிப்பிடுகிறது. அதே போல் ஒடுக்கும் பெரிய தேசியத்தோடு இணைந்திருக்க முடியாத நிலையில் ஒடுக்கத்திற்கு ஆளான சிறிய தேசியம் ஒடுக்குதலில் இருந்து விடுபடப் பிரிந்து செல்ல வேண்டும்.

இந்தப் பிரிதலை இந்நூல் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பது பற்றி இந்நூலில் அறிந்து கொள்ள முடியவில்லை.

“பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தைக் காப்பாற்றும் கடமை ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமில்லை, ஒடுக்கும் இனத்தில் உள்ள பாட்டாளி வர்க்க்ததிற்கும் அந்தக் கடமை உண்டு. இரண்டு இனத்திலுமுள்ள பாட்டாளி வர்க்கமும் சுயநிர்ணய உரிமையை காப்பாற்ற வேண்டும். ஒன்றிணைந்த வர்க்கப் போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல வேண்டும்.” (பக்கம்-61)

ஐக்கியத்தை வலியுறுத்தி சுயநிர்ண உரிமையில் காணப்படும் பிரிதலை முற்ற புறக்கணிக்கப்பட்டத்கத் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 58ஆம் பக்கத்தில் உள்ள கருத்தும் காணப்படுகிறது.

“..ஒடுக்கப்படும் தேசிய இனம் தனியே பிரிந்து செல்வதை அந்த இனத்தில் உள்ள சமூக ஜனநாயகவாதிகள் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும், பிரிந்து செல்வதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் பிரிவினை என்பது முதலாய வர்க்கத்தால் நிறைவேற்றப்பட்டு வந்தது” (பக்கம்-58)

பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பதைப் பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டு ஐக்கியத்திற்கு மட்டுமே முதன்மை இடம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தேசிய ஒடுக்குமுறைக்கு ஆளான நாடு பிரிவது என்பது பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் உட்பட்டே அங்கீகரிக்கப்படுகிறது.

"பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறது." (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)

லெனின் தேசங்களுக்கு இடையே காணவேண்டிய ஒற்றுமையையும் கூறியுள்ளார், தேசியப் பிரச்சினை தோன்றிய போது பிரிய வேண்டியது பற்றியும் கூறியுள்ளார். இதில் ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்வது லெனினியமாகாது. லெனின் தேசிய பிரச்சினையைப் பற்றிக் கூறுகிறதை அவர் நூல்களில் நேரடியாகப் படித்தறிய வேண்டும்.

ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்போம்

ஆரோக்கியமாக விமர்சிப்போம்.

விமர்சனங்களே நம்மை மேம்படுத்தும்



****************************************************************************************************
லெனினது நூலை
முதல்முறையாகப் படிப்பவர்களுக்கு உதவிடும் வகையில்;-

“தேசிய-கலாசாரத்தன்னாட்சி” என்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின்


சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்

https://scientificcommunism.blogspot.com/2016/03/blog-post.html
*******************************************************************************


லெனின் எழுதிய 
என்ற நூல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தோழர் கார்முகில் எழுதிய 
நூலை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்





Monday, 28 January 2019

பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி (துரோகி) காவுத்ஸ்கியும் - நூல் அறிமுகம்


காவுத்ஸ்கி 1918ஆம் ஆண்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒரு சிறு வெளியீட்டை கொண்டு வந்தார்.

காவுத்ஸ்கி, தம்நூலில் சோஷலிசப் புரட்சி பற்றியும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகரத்தைப் பற்றியும் மார்க்சிய அடிப்படைகளுக்கு எதிராக திரித்து எழுதியுள்ளார். ஜனநாயகம் என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட தூயதாக காட்ட முயற்சித்தார். சோவியத் ஆட்சியை பழித்துரைத்தார், போல்ஷிவிக் கட்சியின் செயற்பாட்டைக் கறைபடுத்தினார். இதற்கெல்லாம் பதிலளிக்கும் படியாக, பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும் என்ற நூலை லெனின் 1918ஆம் ஆண்டில் எழுதினார். இரண்டாம் அகிலத்தின் திவாலான நிலைமை முழுவதும் வெளிபட்டுவிட்டதாக இந்நூலில் லெனின் எழுதியுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் என்ற வேறுபாட்டின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை காவுத்ஸ்கி விளக்குகிறார். சர்வாதிகாரம் என்பதை சொல்லின் இலக்கணத்தைக் கொண்டு விளக்க முனைகிறார். பொதுவான ஜனநாயகம் பற்றி பேசுவது மிதவாதிகளுக்கு இயல்பானதே, ஆனால் அவர் மார்க்சியத்தின் பேரால் விளக்குகிறார்.

“மார்க்சிய போலி பண்டிதரான காவுத்ஸ்கி மார்க்சியத்தை இவ்வாறு கோராமாகத் திரித்துப் புரட்டுவதை எவ்வாறு விளக்குவது?

இந்தப் புலப்பாட்டினுடைய தத்துவத்தின் வேர்களைப் பொருத்தவரை இயக்கவிலுக்குப் பதில் இவற்றில் கதம்பவாதமும் குதர்க்கவாதமும் பதிலீடு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த வகையான பதிலீடு செய்வதில் காவுத்ஸ்கி கைகண்ட வல்லுனராவார்.  நடைமுறை அரசியலின் கருத்து நோக்கிலிருந்து பார்த்தால் இது சந்தர்ப்பவாதிகளுக்கு அடிபணிவதாகும், அதாவது கடைசியாக ஆய்வு செய்து பார்த்தால் முதலாளித்துவ வர்க்கத்துக்கு அடிபணிவதாகும். இந்தப் போர் வெடித்தது முதல் காவுத்ஸ்கி சொல்லில் மார்க்சியவாதி, செயலில் முதலாளித்துவ வர்க்கத்தின் அடித் தொண்டராக இருக்கும் கலையில் மிகவும் அதிக விரைவான முன்னேற்றம் கண்டுள்ளார், இதில் அவர் ஒரு விற்பன்னர் ஆகிவிட்டார்.”1

மேலும் அவர் சர்வாதிகாரம் என்பதை ஒரு தனிநபர் வழியில் தவறான பொருள் கொண்டுள்ளார். அதனால் தான் சர்வாதிகாரம் என்றவுடன் அவருக்கு கொடுங்கோலனே நினைவுக்கு வருகிறார். கொடுங்கோன்மை பற்றி விவரித்துவிட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய இலக்கணத்தை தட்டிக் கழிக்கின்ற முட்டாள் தனமான மற்றும் மோசடியையும் செய்கிறார்.

தனிநவர் சர்வாதிகாரத்துக்கும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை லெனின் தெளிவுபடுத்துகிறார்.

“சர்வாதிகாரம் என்பது, நேரடியாக பலப்பிரயோகத்தை அடிப்படையாக்கிய, எந்தச் சட்டத்தாலும் கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பது, முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற்று கட்டிக் காத்துவரும் ஆட்சியாகும். எந்தச் சட்டங்களாலும் கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும்.”2

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திய பின்பு பாட்டாளி வர்க்கம் தமக்கான அரசை அமைத்துக் கொண்டு முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக செயற்படுத்தும் சர்வாதிகாரமாகும். இந்த சர்வாதிகாரம் என்பது புரட்சிகர மக்களின் அரசை எதிர்க்கின்ற முதலாளித்துவ போக்குகளை பலப்பிரயோகத்தால் ஒடுக்கும் அதிகாரமாகும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றி லெனின் வேறொரு நூலில் கூறுகிறார்:-
“சோவியத் ஆட்சியதிகாரமானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின், முன்னேறிய வர்க்கத்தினுடைய சர்வாதிகாரத்தின் ஓர் ஒழுங்கமைப்பு வடிவமே அன்றி வேறல்ல, உழைப்போரும் சுரண்டப்படுவோருமான கோடானு கோடியான மக்களை, பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாடு வாய்ந்த, வர்க்க உணர்வு கொண்ட முன்னணிப் படையினைத் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாய் உறுதியாய் நம்பத்தக்க தமது தலைவனாகக் கருதக் கற்றறிந்து கொள்ளும் அம்மக்களை, ஒரு புதிய ஜனநாயகத்துக்கு, அரசின் நிர்வாகத்தில் சுயேச்சையான பங்கு கொள்ளும் நிலைக்கு உயரச் செய்யும் முன்னேறிய வர்க்கத்தினுடைய சர்வாதிகாரத்தின் ஒரு வடிவமே அன்றி வேறல்ல.”3

மார்க்ஸ், எங்கெல்ஸ் வழிகாட்டிய இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மார்க்சிய அணுகுமுறையை காவுத்ஸ்கி ஏற்றுக் கொள்ளாததால் தடுமாற்றத்தோடு முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடியாகிறார்.

“காவுத்ஸ்கி மார்க்சியத்தில் இருந்து மிதவாதிகளுக்கு, முதலாளிகளுக்கு ஏற்புடையவற்றை (மத்திய கால நிலை பற்றிய விமர்சனம், பொதுவாக முதலாளித்துவத்தின், குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் முற்போக்கான வரலாற்றுப் பாத்திரம்) எடுத்துக் கொள்கிறார். மார்க்சியத்தில் முதலாளிகளுக்கு ஏற்புடையதல்லாதவற்றை (முதலாளித்துவ வர்க்கத்தின் அழிவுக்காக அதனை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பலாத்காரம்) அவர் நிராகரிக்கிறார், அவை குறித்து எதுவும் சொல்லாது, மௌனமாகிறார், பூசி மெழுகுகிறார். இதனால் தான் காவுத்ஸ்கி, அவரது அகநிலை பண்புகள் எதுவாக இருந்த போதிலும் தமது புறநிலை காரணமாக தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடியாகிறார்.”4

சோவியத் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் முகமாக லெனின் உரக்கக் கூறுகிறார்.

“பாட்டாளி வர்க்க ஜனநாயகம் எந்த ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தையும் விட மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகமானது, சோவியத் ஆட்சி அதிகாரம் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசை விடவும் மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகமானது.”5

காவுத்ஸ்கியினுடைய சருக்கலுக்குக் காரணம் வர்க்க பார்வையை இழந்ததேயாகும். தத்துவத்தில் சார்புத் தன்மையை ஏற்காமல் தூய ஜனநாயகம் பேசி பாட்டாளி வர்க்க கோட்பாட்டைவிட்டு ஓடி முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடியாகிவிட்டார்.

மார்க்சியத்தை திரிக்கின்ற, கொச்சைப்படுத்துகின்ற முயற்சிகளை விமர்சன வாயிலாக லெனின் முறியடித்தார். பல்வேறு நாடுகளில் புதியதாகத் தோன்றிய இளம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போல்ஷிவிக்குகளின் புரட்சிகர அனுபவத்தை அளிக்கும்படியாக ஒரு நூலை எழுதினார்.
**********************************************
1.பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும் - தேர்வு நூல்கள் தொகுதி 9 – பக்கம்- 15
2. மேற்கண்ட நூல் – பக்கம்- 19
3.சோவியத் அரசாங்கத்தின் உடடினப் பணிகள் - தேர்வு நூல்கள் 8 பக்கம்- 94
4.பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும் - தேர்வு நூல்கள் தொகுதி 9 – பக்கம்- 29-30
5. மேற்கண்ட நூல் – பக்கம்- 29-30



Thursday, 17 January 2019

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் - எல்.லியான்டியாவ்


- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288

“மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் என்ற இந்நூல் 1967ல் தோழர் தா.பாண்டியன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு என்சிபிஎச்-ஆல் வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் எல்.லியான்டியாவ் என்ற சோவியத் பொருளாதார அறிஞரால் எழுதப்பட்டது.

1)அரசியல் பொருளாதாரத்தின் பொருளடக்கம், 2)முதலாளிததுவத்தின் ஏகபோகக் கட்டம் ஏகாதிபத்தியம், 3)சோஷலிசத்தின் பொருளாதார அமைப்பு, 4)சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு என்ற தலைப்புகளில் கேள்வி-பதில் வடிவில் பொருளாதாரத்தை எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. அரசியல் பொருளாதாரத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள் இந்நூலைப் படித்து தமது பொருளாதாரம் பற்றிய தெளிவைப் பெறலாம்.



18) நெருக்கடிகளினால் ஏற்படும் தீமை என்ன?

(முதல் அத்தியாயத்தின் சில பகுதிகள் மட்டுமே இங்கே பதியப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு அத்தியாம் உள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., நிறுவனத்தில் நூலினை வாங்கி முழுமையாகப் படிக்கவும்)

Wednesday, 25 April 2018

கார்ல் மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது- அறிமுகம்


நூல் :- “கார்ல் மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது”
ஆசிரியர்: தோழர் தியாகு

விலை- ரூ.30/-

வெளியீடு – தமிழ்த் தேசம்
            எண்:13, வாசவி முத்தகம்,
            கந்தன்சாவடி பெருங்குடி,
சென்னை- 600096


தோழர் தியாகு எழுதிய “கார்ல் மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது” என்ற சிறு நூல், மார்க்சையும் மூலதன நூலையும் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளது.

இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள “மூலதனம்” நூலைப் பற்றிய செய்திகளை தொகுத்துத் தந்துள்ளார். “மூலமுதல்” என்ற பெயரில் “ஆங்கிலக் கலப்போ வடமொழிக் கலப்போ இல்லாமல் இயன்ற வரை தூய நற்றமிழில் எதிர்காலத் தலைமுறைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம்” என்று தோழர் தெரிவித்துள்ளார்.

ஒரு மொழியாக்கத்திற்கு மற்றொரு மொழியாக்க வேண்டுமா? என்றால் மொழியாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் வேண்டும் என்பதே பதிலாக இருக்கும். அதனை தோழர் தியாகுவே எடுத்து செய்வதில் மகிழ்ச்சி. ஆனால் தூய நற்றமிழில் மொழிபெயர்ப்பு என்னும் போது அது தனித்தமிழ் போல் தெரிகிறது.

மார்க்சின் “மூலதனம்” இன்னும் பலரால் படிக்க முடியாததாகவே இருக்கிறது. பொருளாதாரப் புரிதல் காரணமாக இந்நூல் படித்தறிவதில் சிக்கல் இருக்கிறது.  ஆனால் இன்று படிக்கத் துடிக்கும் இளைஞர்களை பலரைப் பார்க்க முடிகிறது. அவர்கள் படிக்கும் வகையில் பழகுதமிழில் செய்தால் நான்றாக இருக்கும்.

புதிய மொழியாக்கத்தின் தலைப்பு ”மூலமுதல்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மூலம் என்பது தமிழ் சொல்லா? இல்லையே. அவ்வாறு இருக்க தூய தமிழ் சொல்லையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமா? என்பது சிந்திக்க வேண்டியதே?. தமிழ்த் தேசியம் என்பதில் தேசம் என்பதும் தமிழ் கிடையாது.

தேவையற்ற மொழிக்கலப்பு என்பது எதிர்க்கப்பட வேண்டியதே, ஆனால் பிற மொழி கலப்பு என்பது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு பயன்பட்டுள்ளது என்பதே வரலாறு. மொழித் தூய்மையின் மேன்மையினால் தான் சம்ஸ்கிருதம் அழிந்தது.

மார்க்ஸ் “மூலதனம்” நூலை எழுதி முடிப்பதற்கு எங்கெல்சின் உதவியும் தியாகத்தையும் மார்க்சின் (16-8-1867) கடிதத்தின் வாயிலாக தோழர் சுட்டிக்காட்டியுள்ளார். மூலதனம் இரண்டாம் மூன்றாம் பகுதியை எங்கெல்ஸ் வெளியிட்டதின் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பர் மார்சுக்கு நினைவுச் சின்னத்தை நிறுவியதாக கூறியுள்ளார்.

மூலதனம் முதல் பகுதி மார்க்சின் தனிப்படைப்பாகவும், இரண்டாம், மூன்றாம் பகுதி மார்க்ஸ் எங்கெல்ஸ் கூட்டுப்படைப்பாக, லெனினை முன்வைத்து தோழர் குறிப்பிடுகிறார். ஆனால் எங்கெல்ஸ் எழுதிய பின்னுரை இவ்வாறு கூறவில்லை.

“இந்நூலை வெளியிட்டதில் எனக்கிருந்த தலையான அக்கறை முடிந்தவரை நம்பகத்தக்க ஒரு வாசகத்தை உருவாக்க வேண்டும், மார்க்ஸ் அடைந்த புதிய முடிவுகளை முடிந்தவரை மார்க்சின் சொற்களிலேயே வெளிப்படுத்த வேண்டும், வேறுவழியே இல்லாதவிடத்து மடடுமே என்னை இடையில் நுழைத்துக் கொள்ள வேண்டும், அப்போதுகூட வாசகருக்கு அவரிடம் பேசுவது யார் என்பதில் சந்தேகமே இருக்கக் கூடாது என்பதுதான்” (மூலதனம் மூன்றாம் பகுதி பக்கம்1267)

மூலதனம் நூலின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கக்கூடாது என்பதே எனது விரும்பம்.

மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ் ஆகியோரின் வாழ்க்கையை சுருக்கமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். மார்க்சின் கோட்பாடு எவ்வகையில் அறிவியல் தன்மையானது என்பதையும், மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளையும் சுட்டிக்காட்டி அதில் ஒன்றான மிகை மதிப்பைப் (உபரி மதிப்பைப்) சற்று விரிவாகவே தோழர் விளக்கியிருக்கிறார். சில பகுதிகளை புதிய மொழியாத்தில் மேற்கோளாக படைத்துள்ளார். இது மூலதனம் நூலுக்கு ஒரு சிறந்த அறிமுகமா இருக்கிறது. கண்டிப்பாக இடது சிந்தனை உள்ள இளைஞர்கள் படிக்க வேண்டும்.

மூலதனத்தின் முதல், இரண்டாம், மூன்றாம் பகுதிகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் அதில் விளக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இறுதியில் தோழர் முத்தாய்ப்பாக கூறியது கவனத்திற்கு உரியதாகும். மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் பெரிதும் மாறியிருக்கிறது, ஆனாலும் அது முதலாயித்துவமாகவே நீடிக்கிறது, மார்க்ஸ் முதலாளித்துவத்தின் விதிகள் என்று கூறப்பட்டதை, முதலாளித்துவத்தின் பின்னடைவுகள் பொய்யாக்கி விடவில்லை என்று தோழர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் ஆயுதத்தத்தின் தயாரிப்பிற்கான, அறிவியல் வகைப்பட்ட அரசியல் பொருளாதாரத்தை, தோழரின் புதிய கைவண்ணத்தில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.