Saturday, 12 February 2022

ஸ்டாலின் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்”-1

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 49 வது வார வகுப்பு – 12-02-2022)

ஸ்டாலின் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” என்ற சிறு நூலைத்தான் இன்றைய வகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

      இந்நூல் சுமார் ஐம்பது பக்களை கொண்ட மிக சிறிய நூல் ஆகும். சிறியது என்றாலும் ஸ்டாலின் பல விஷயங்களை இதில் செறிவாக கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் இந்த நூலைப் படிக்க வேண்டும். பலமுறை படித்தாலன்றி இதில் உள்ள கருத்துக்களை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது.

இது ஒரு விரிவான நூல் இல்லை என்பதனால் பலமுறை படித்தலன்றி புரிந்து கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

      இந்த நூல் உருவான வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகும். ஸ்டாலின் காலத்தில், 1938 ஆம் ஆண்டிவரையிலான சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷிவிக்) கட்சியின் வரலாறு தொகுக்கப்படும் போது அந்த நூலில் மார்க்சிய தத்துவம் சுருக்கமாக விளக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த தத்துவப் பகுதியை ஸ்டாலினே எழுதிக் கொடுத்தார். அந்தப் பகுதி ஸ்டாலின் பெயரால் தனியாக பதிப்பிக்கப்பட்டு பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

போல்ஷிவிக் கட்சியின் வரலாறு என்ற நூலின் நான்காவது அத்தியாயத்தின் ஒரு பகுதியை எடுத்து தனிநூலாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.

      இந்த “போல்ஷிவிக் கட்சியின் வரலாறு” என்ற நூல் ருஷ்யப் புரட்சியின் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஸ்டாலின் எழுதிய மார்க்சிய தத்துவத்தை அறிமுகப்படுத்தும் போது அந்த நூலில் உள்ள வாசகத்தை அப்படியே பார்ப்போம்.

“கம்யூனிசத்திற்கு அடிப்படையாக இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் இருக்கின்றன, இவை மார்க்சியக் கட்சிக்கு தத்துவ அடிப்படையாக இருக்கின்றன. ஆகவே இந்தத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது கட்சியில் செயல்படும் உறுப்பினர் ஒவ்வொருவருடைய கடமையாகும். இவற்றைக் கவனித்துப் படிக்க வேண்டியது அவசியமாகும்”

      போல்ஷிவிக்குகளின் வெற்றி மார்க்சிய தத்துவத்தைப் புரிந்து செயல்பட்டதில் அடங்கியிருக்கிறது, அப்படிப்பட்ட மார்க்சியத் தத்துவத்தை நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் படித்துப் புரிந்து கொண்டுள்ளனரா? என்ற கேள்விக்கு எதிர்மறையான பதிலே அதிகம் கிடைக்கும்.

கம்யூனிஸ்டுகளின் அரசியல் விஞ்ஞானத் தன்மை உடையதாக இருக்க வேண்டுமானால் மார்க்சிய தத்துவமும் மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் அறிந்திருக்க வேண்டும். இந்த இரண்டை அறிந்து கொள்வதில் உள்ள குறைபாடே, நம் நாட்டில் உள்ள கட்சிகளின் பின்தங்கிய நிலைமைக்கு, பல காரணங்களில் முக்கியமான காரணமாக இருக்கிறது.

      நூலுக்குள் செல்வோம்.

“இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய லெனினியக் கட்சியின் உலகக் கண்ணோட்டம் ஆகும்” என்றே இந்த நூல் தொடங்குகிறது.

மார்க்சிய தத்துவம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் (இயற்கைவியல் பொருள்முதல்வாதம்) மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

      இயற்கையை, இயக்கவியல் அடிப்படையில் அணுகுவதால் இதற்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனை இயற்கைவியல் பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கலாம். சமூகத்தின் தோற்றம், இருப்பு, மாற்றம் ஆகியவற்றை இயக்கவியல் அடிப்படையில் அணுகுவதால் இதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் எனறு அழைக்கப்படுகிறது.

      மார்க்சும் எங்கெல்சும் தங்களது இயக்கவியலைப் பற்றி பேசும் போதெல்லாம் ஹெகலே இயக்கவியலை உருவாக்கினார் என்றே பொதுவாகக் கூறுவார்கள். மார்க்சின் இயக்கவியலும் ஹெகலின் இயக்கவியலும் ஒன்று என்று நாம் நினைத்துவிடக்கூடாது. ஹெகலின் இயக்கவியலானது கருத்துமுதல்வாதம் என்கிற மாயையில் சிக்கி கிடக்கிறது. மார்க்ஸ் அதன் கருத்துமுதல்வாத மயக்கத்தை நீக்கி பொருள்முதல்வாத அடிப்படையில் இயக்கவியலை வளர்தெடுத்தார்.

      தொடக்கக் கால கிரேக்க தத்துவத்தில் இயக்கவியல் அணுகுமுறை இயல்பாய் காணப்பட்டது. பின்பு இது கைவிடப்பட்டு ஹெகலால் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஹெகலின் மாணவன் என்று மார்க்ஸ் தம்மை அழைத்துக் கொள்வார்.

      அதே போல மார்க்சும் எங்கெல்சும் தங்களது பொருள்முதல்வாதத்தைக் குறிப்பிடும் போது ஃபாயர் பாக் என்கிற பொருள்முதல்வாத தத்துவ அறிஞரை குறிப்பிடுவர்கள். மார்க்சும் எங்கெல்சும் இளம் ஹெகல்வாதியாக இருந்ததில் இருந்து பொருள்முதல்வாதியாக மாறுவதற்கு ஃபாயர் பாக் காரணமாக இருந்தார். இருந்தாலும் ஃபாயர் பாகின் பொருள்முதல்வாதமும் மார்க்சின் பொருள்முதல்வாதமும் ஒன்று என்று கருதிடமுடியாது.

      இயற்கையை அணுகுவதில் ஃபாயர் பாக் பொருள்முதல்வாதியாக இருந்தார், ஆனால் சமூகம் பற்றிய விஷயத்தில் அவர் கருத்துமுதல்வாதியாகக் காணப்பட்டார். நல்ல மதக் கருத்தே நல்ல சமூகத்தைப் படைக்கும் என்று ஃபாயர்பாக் கருதினார், அவர் பொருள்முதல்வாதியாக இருந்தாலும் இயக்க மறுப்பியலை அணுகுமுறையாகக் கொண்டிருந்தார். இயக்கவியல் அற்ற அணுகுமுறையே ஃபாயர் பாக்கின் பெரும் குறையாக இருந்தது. இயக்கவியலை, நாம் சரியாகக் கற்று கையாளவில்லை என்றால் அனைத்து தவறுகளுக்கு இதுவே காரணமாகிவிடும்.

      இயக்கவியல் என்பது மாறாநிலைத் தத்துவத்துக்கு (metaphysics) எதிரான அணுகுமுறை ஆகும்.

ஸ்டாலின் இந்த நூலை மூன்று தலைப்புகளில் எழுதியுள்ளார்.

1) மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை.

2) மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம்.

3)  வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

இதில் உள்ள முதலிரண்டு தலைப்புகளை மட்டும் இன்றைய வகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். மூன்றாம் தலைப்பு அடுத்த வார வகுப்பில் பார்க்கலாம்.

இந்த நூலில், இயக்கவியலைப் பற்றி 11 பக்கமும், இயற்கையைப் பற்றி 13 பக்கமும் வரலாறு சமூகம் பற்றி 27 பக்கமும் விளக்கப்பட்டுள்ளது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றதைவிட சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் இருந்தே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அவசியத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் தெளிவு பெற்றவர்காலால்தான் கம்யூனிச வழியிலான அரசியலில் சிறப்பாக செயல்பட முடியும்.

முதலில் மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையைப் பார்ப்போம்.

மார்க்சிய இயங்கியல் முறையின் முக்கிய தன்மைகள் என ஸ்டாலின் நான்கைக் குறிப்பிடுகிறார்.

1) இயற்கை இணைக்கப்பட்டது மற்றும் தீர்மானிக்கப்பட்டது

2) இயற்கை என்பது தொடர்ச்சியான இயக்கம் மற்றும் மாற்றத்தின் நிலை

3) இயற்கையான அளவு மாற்றம் பண்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது

4) இயற்கையில் உள்ளார்ந்த முரண்பாடுகள்

1) இயற்கை இணைக்கப்பட்டது மற்றும் தீர்மானிக்கப்பட்டது

      இயற்கையில் உள்ள பொருட்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றும் தனித்தனியாக பிரிந்தும் இருப்பதாக மாறாநிலைத் தத்துவம் (metaphysics) கருதுகிறது. ஆனால், ஒவ்வொரு பொருளும் பிற பொருட்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்தும் இணைந்து ஒரு முழுத்தன்மையாக ஒருமையாக – பொருளாதார ஒருமையாக – இருக்கிறது என்றும் இயக்கவியல் கருதுகிறது.

      ஒரு பொருளை மற்ற பொருளோடு இணைந்திருப்பதை மறுத்து தனித்து ஆராய்ந்தால் அந்த பொருளின் உண்மை தன்மையை அறிந்திட முடியாது.

எடுத்துக் காட்டை நாம் பார்ப்போம்

மழை என்பதை தனி நிகழ்வாக பார்த்தால் அதன் தன்மையை முழுமையாக அறிந்திட முடியாது. மழை என்பது பூமியில் உள்ள நீர் ஆவியானதாலும், அது மழைமேகமாக மாறியதாலும், மழை பெய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டதாலும், மழை பெய்கிறது. மழை பொய்ப்பதும் தனித்த நிகழ்வல்ல, அதன் இணைந்த நிகழ்வில் ஏற்பட்ட சிக்கலே மழை பொய்கிறது.

பூமி என்பதும் ஒரு தனித்த பொருள் அல்ல, அது சூரியக் குடும்பத்தில் இணைந்தும் பிணைந்தும் காணப்படுகிறது. பூமியைப் பற்றி ஆராய வேண்டுமனால் அதனோடு தொடர்புடைய மற்றதையும் ஆராயந்து அறிந்தால் தான் பூமி பற்றிய சரியான முடிவுக்கு வரமுடியும்.

2) இயற்கை என்பது தொடர்ச்சியான இயக்கம் மற்றும் மாற்றத்தின் நிலை

      ஒரு பொருளானது தன்னுள்ளேயும் மற்ற பொருட்களோடு இணைந்தும் சேர்ந்தும் இயங்குகிறது. இயற்கை இடையறாது இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது, தன்னைப் புதிப்பித்துக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது என்று இயக்கவியல் கூறுகிறது.

      ஒரு பொருளோ நிகழ்வோ நீண்ட நாள் நிலைத்து நீடித்துக் கொண்டிருப்பதாக பொதுவானப் பார்வைக்கு தோன்றுகிறது. அதனுள் ஏற்படுகிற மாற்றங்கள் நம் கண்ணுக்குத் தென்படாது போனாலும் அளவு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

பழையது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, புதியது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியானது முதிர்ச்சி நிலையில் பழையப் பண்மை மறுத்து புதிய பண்பாக மாறுகிறது. தொடக்கத்தில் நமது கண்ணுக்குத் தெரியாமல் ஏற்பட்ட சின்னசின்ன மாற்றங்கள் குறிப்பிட்ட கட்டத்தை எட்டியவுடன் பழைய பண்பை இழந்து புதிய பண்பை பெறுகிறது. இறுதி கட்டத்தில்தான் அந்த மாற்றம் கண்ணுக்குப் புலப்படுகிறது.

இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக, எங்கெல்ஸ் எழுதிய “இயற்கையின் இயக்கவியல்”, “டூரிங்குக்கு மறுப்பு” ஆகிய நூல்களின் இருந்து மேற்கோள்களாக ஸ்டாலின் தருகிறார். இந்த மேற்கோள்களையும் இந்த மேற்கோள்கள் உள்ள எங்கெல்சின் நூல்களையும் நாம் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும்.

      ஒரு பொருள் அல்லது நிகழ்வில் காணப்படும் உள்முரண்பாட்டின் இயல்பை, அதாவது விதியை தெரிந்து கொள்ள முடியாதவர்கள், இன்றைக்கு இருப்பவையே என்றும் நிலைத்து நிற்கக்கூடியதாக கருதுகின்றனர். ஆனால் அதனுள், அழிவை நோக்கி செல்கிற அளவு மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் இன்றைய முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சியையும் அதன் பலத்தையும் கண்டு முதலாளித்துவமே இறுதியானது என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால் இயக்கவியலானது முதலாளித்து உற்பத்தியில் காணப்படும் உள்முரண்பாடுகளைக் கணக்கில் கொண்டு அதன் அழிவை முன்னறிந்து அறிவிக்கிறது. இந்த முன் அறிவிப்பை அறிந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியே முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களைத் தயார்படுத்துகிறது.

3) இயற்கையான அளவு மாற்றம் பண்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது

மாறாநிலைத் தத்துவம் மாற்றத்தை தொடர் நிகழ்ச்சியாகப் பார்க்கிறது. இப்படிப் பார்ப்பத்தினால் இந்த தத்துவப் போக்கினர் ஒரு பொருள் அல்லது நிகழ்வில் ஏற்படும் மாற்றங்கள், புதிய பண்பு மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இயக்கவியல் இதற்கு மாறாக, கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் சிறிய மாற்றங்கள் படிப்படியாக வளர்ந்து, பழைய பண்பை இழந்து, புதிய பண்பாக மாறுகிறது என்கிறது. படிப்படியாக ஏற்படும் அளவு மாற்றங்கள் இறுதியில் பழையதை முறித்து பாய்ச்சலாக புதியதைப் படைக்கிறது.

      பொருளிலோ நிகழ்விலோ ஏற்படும் பண்பு மாற்றங்கள் தற்செயல் நிகழ்ச்சி அல்ல. அது ஒரு விதிக்குள் செயல்படுகிறது. அந்த விதியே இயக்கவியல் விதி.

      இயக்கவியல் தவறானது என்று பலபேர் சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டிருப்பர். நம் நாட்டிலும் இது போன்ற பலரைக் காணலாம். எங்கெல்ஸ் எழுதிய “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூலில் உள்ளதை ஸ்டாலின் மேற்கோள்காட்டுகிறார். அதில் இயக்கவியல் சரியா? தவறா? என்பதற்கு இயற்கையே சிறந்த உதாரணம் என்று கூறப்பட்டுள்ளது.

      சிலர் இயக்கவியலை மறுப்பதற்கு பெரும் காரணம் என்ன வென்றால், தற்கால சமூகம் அழிவுக்கு உள்ளாகும், அப்படி நேரும் போது இதைவிட சிறந்த புதிய சமூகம் தோன்றும் என்று இயக்கவியல் கூறுவதை, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்றைய முதலாளித்துவ சமூகமே இறுதியானது, அதனுள் ஏற்படும் வளர்ச்சி முதலாளித்துவத்தை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு செல்லும், முதலாளித்துவ சமூகத்துக்கு அழிவு கிடையாது என்பதே அவர்களின் அடிப்படைக் கருத்து. இந்தக் கருத்தை இயக்கவியல் மறுக்கிறது.

நிலப்பிரபுத்துவம் எவ்வாறு வளர்ச்சி அடைந்து அழிந்து போய் முதலாளித்துவம் பிறந்ததோ அதேபோல முதலாளித்துவமும் அழிந்து சோஷலிசம் தோன்றும் என்பதை இயக்கவியல் உறுதியாகக் கூறுகிறது.

4) இயற்கையில் உள்ளார்ந்த முரண்பாடுகள்

      அனைத்துப் பொருட்களிக்கு உள்ளேயும், அனைத்து இயற்கைத் தோற்றங்களுக்கு உள்ளேயும் முரண்பாடுகள் காணப்படுகிறது. அனைத்திலும் ஒரு நேர் நிலையும் ஒரு எதிர் நிலையும் இருக்கிறது. அதில் ஒன்று மடிந்து கொண்டிருக்கிறது, மற்றொன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. மடிவது பழையது வளர்வது புதியது. பழைய பண்பு மறைகிறது புதிய பண்பு பிறக்கிறது.

பழைமைக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் புதுமையே வெல்கிறது, பழைமை அழிகிழிக்கப்படுகிறது.

      இந்த இடத்தில் ஸ்டாலின், லெனின் எழுதிய “தத்துவார்த்த குறிப்பேடு” என்கிற நூலில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். அதில் குறிப்பிடத் தக்கது, வளர்ச்சி என்பது எதிர்மறைகளிடையே நடைபெறும் போராட்டமே ஆகும். அதாவது எதிர் நிலைகளுக்கு இடையே நடைபெறும் முரண்பாடோ வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.

      சுருக்கமாக கூறவேண்டுமானால், இவை தான் மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையின் முதன்மைத் தன்மை என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

சமூகத்தை அணுகுவதற்கு இயக்கவியலே கம்யூனிஸ்டுகளுக்கு உரிய வழிகாட்டியாகும். இதனை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியானது இயக்கவியல் என்னும் இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தமது நடைமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கம்யூனிஸ்டுகள் இயக்கவியலையும் பொருள்முதல்வாதத்தையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

      உலகில் நடப்பவை ஒவ்வொன்றும் தொடர்பில்லாது தனித்தனியாக செயல்படுவதில்லை, அனைத்தும் தொடர்போடும் சார்ந்தும் செயல்படுகிறது என்பதையே இயக்கவியல் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

      “நிரந்தர நீதி” என்ற பார்வையிலோ, முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்ட கருத்தினைக் கொண்டோ சமூகத்தை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்வதில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் உள்முரண்பாடுகளின் மூலமே அந்த சமூகத்தின் இயக்கத்தை புரிந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு சமூகமும் முந்தைய சமூகத்தைவிட முன்னேறிய நிலையில்தான் இருக்கிறது.

      இங்கே ஸ்டாலின், அன்றைய ரஷ்ய நிலைமையைக் கொண்டு இதனை விளக்கிறார். 1905ஆம் ஆண்டில் ஜாரிசமும் முதலாளித்துவ சமூகத்தையும் வைத்துப் பார்க்கும் போது ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு வேண்டும் என்ற கோரிக்கை ஒரு முன்னேற்றமானதும் புரட்சிகரமானதும் என்கிறார் ஸ்டாலின். அதே நேரத்தில் சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியம் அமைந்துள்ள நேரத்தில், ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு வேண்டும் என்று கருதுவது பொருளற்றது, புரட்சிக்கு எதிரானது. ஏனென்றால் சோவியத் குடியரசுடன் ஒப்பிடும் போது முதலாளித்துவ குடியரசு எனப்படுவது ஒருபடி பின்னுக்கு இழுப்பதாகும், மேலும் இது ஒரு பிற்போக்கு கருத்தாகும் என்கிறார் ஸ்டாலின்.

      நிலைமை, காலம், இடம் ஆகியவற்றைச் சார்ந்துதான் அனைத்தும் இயங்குகிறது என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நம் நாட்டில் உள்ள பலருக்கு சோஷலிசப் புரட்சியைத் தவிர எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படிப்படி மாற்றத்தில் ஏற்படும் காலகட்டம் இவர்களை சலிப்படையச் செய்கிறது. வரலாற்றை நாம் நினைக்கும்படி எல்லாம் உருவாக்கிவிட முடியாது. அதன் வளர்ச்சியை ஒட்டிதான் நமது செயல்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும்.

      சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய வரலாற்று வழிபட்ட கண்ணோட்டத்தின் வழியில்தான் சமூகத்தை அணுக வேண்டும். இதுவே விஞ்ஞான வழிப்பட்ட பார்வை ஆகும். இதுவல்லாது வேறுவழியில் கம்யூனிஸ்டுகள் தங்களது குறிக்கோளை அடைய முடியாது.

      சமூக-பொருளாதார வளர்ச்சியில், எந்த வர்க்கம் சத்தி பெற்று போராடும் என்பதை, கம்யூனிஸ்ட் கட்சி கணித்து அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களின் இன்றைய நிலைமையினை புரிந்து அவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் பயிற்சி கொடுக்க வேண்டும். வர்க்கப்படுத்த வேண்டும்.

தொழிலாளியாக இருப்பதினால், தானாகவே புரட்சிகரமாக மாறிடுவதில்லை, தொழிலாளர்களை வர்க்க அரசியலுக்கு வழிகாட்டுவது கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் இதில்தான் அடங்கியிருக்கிறது.

      முதலாளித்துவ சுரண்டலில் இருந்து உழைப்பாளர்களை விடுவிக்கவும், முதலாளித்துவ அமைப்பு முறையில் இருந்து சோஷலிச அமைப்பு முறைக்கு மாறிச் செல்வதற்கு சீர்திருத்தங்கள் மூலமாக சாத்தியப்படுத்த முடியாது. முதலாளித்துவ அமைப்பு முறையின் பண்பு வழியிலான மாற்றத்துக்கு சீர்திருத்தப் போராட்டத்தைக் கடந்து புரட்சியின் வழியில் செயல்பட்டால்தான் சாத்தியப்படும் என்கிறார் ஸ்டாலின்.

      கம்யூனிசக் கொள்கையில் தவறுசெய்யாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் சீர்திருத்தவாதியாக இருக்கக்கூடாது புரட்சியாளனாக மாறித்தீரவேண்டும் என்கிறார் ஸ்டாலின்.

      பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி சீர்திருத்தத்தினால் கிட்டப் போவதில்லை, பாட்டாளி வர்க்கம் நடத்தப் போகிற புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தின் மூலமே வெற்றி கிடைக்கும்.

      ஆகவே முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளை மூடிமறைக்காமல், அந்த முரண்பாடுகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். வர்க்கப் போராட்டத்தை தடைபடாமல் முடிவை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

      இந்த முதல் பிரிவின் இறுதியில் ஸ்டாலின் கூறியதை அப்படியே பார்ப்போம்.

 

“ஆகவே, கொள்கையில் தவறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், பாட்டாளி வர்க்கக் கொள்கையினை சமரசம் இல்லாது நாம் பின்பற்ற வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணக்கமாகப் பிணைக்கும் ஒரு சீர்திருத்தவாதக் கொள்கையைப் பின்பற்றக்கூடாது. “முதலாளித்துவம் வளர்ந்து தானாகவே சோஷலிசமாக மாறிவிடும்” என்கிற சமரசவாதிகளின் கொள்கையைப் பின்பற்றக் கூடாது.” என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால் கம்யூனிஸ்டுகள் புரட்சிகர இயக்கவியலைப் பின்பற்ற வேண்டும்.

இதுவரை மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையைப் பற்றி ஸ்டாலின் கூறியதைப் பார்த்தோம், இதற்கு அடுத்து “மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம்” என்ற தலைப்பில் கூறியதைப் பார்க்கலாம்.

மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதத்தின் பிரதான தன்மைகளாக ஸ்டாலின் மூன்றை குறிப்பிடுகிறார். 1) பொருள்முதல்வாதி 2) புறநிலை எதார்த்தம் 3) உலகமும் அதன் சட்டங்களும் அறியக்கூடியது.

1) பொருள்முதல்வாதி

      கருத்துமுதல்வாதி உலகை அதாவது பிரபஞ்சத்தை “அறுதியான கருத்து” “உலகலாவிய ஆத்மா” “உணர்வு” என்று கருதுகிறான். நம் நாட்டில் இதை பரம்பொருள், பரமாத்மா, பிரம்மம் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்றையே குறிப்பிடுகிறது.

பொருள்முதல்வாதி இதற்கு மாறாக, உலகமானது இயல்பிலேயே ஒரு பொருளாக அமைந்துள்ளது என்று கூறுகிறான்.

உலகில் காணும் பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கிறது, ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கிறது. இதுவே இயங்கிக் கொண்டிருக்கிற பொருளினுடைய வளர்ச்சியின் விதி ஆகும்.

உலகில் உள்ள பொருட்களின் இயக்கம், இயக்கவியல் விதிகளின்படியே நிகழ்கிறது, இந்த நிகழ்வுக்கு “உலகலாவிய ஆத்மா” அதாவது பரமாத்மா தேவையில்லை என்பதையே இயக்கவியல் விளக்குகிறது.

இந்த இடத்தில் ஸ்டாலின், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் மேற்கோள்களைக் கொடுத்துள்ளார், இங்கே நாம் எங்கெல்ஸ் மேற்கோளை அப்படியே பார்ப்போம்.

"இயற்கையின் மீதான பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்பது, எந்த ஒரு வெளிப்பொருளையும் சேர்க்காமல், இயற்கையை, உள்ளது உள்ளபடியே உணர்ந்து கொள்வதைத் தவிர வேறில்லை."

(இயற்கையின் இயக்கவியல்)

அதாவது, உலகைப் புரிந்து கொள்வதற்கு இயல் உலகுக்கு அப்பாற்பட்ட சக்தி எதுவும் தேவையில்லை. உலகின் இருப்பை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

2) புறநிலை எதார்த்தம்

கருத்துமுதல்வாதம் “உணர்வுநிலை”யை மட்டுமே ஏற்கிறது. பொருளாயத உலகம், வாழ்நிலை, இயற்கை ஆகியவை மனிதனது மனதில் தான் இருக்கிறது என்று அது கருதுகிறது. மனதின் வெளிப்பாடுதான் இந்த புறவுலகம் என்பதே கருத்துமுதல்வாதத்தின் அடிப்படை.

மார்க்சிய பொருள்முதல்வாதம் என்பது இதற்கு நேரெதிரானது.

பொருள், இயற்கை, வாழ்நிலை என்பது புறநிலை உண்மையாகும், இவை மனிதர்களது உணர்வுக்கு அப்பால், அவர்களைச் சாராமல் புறநிலையில் சுதந்திரமாக இருக்கிறது, இயங்குகிறது. சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும், தத்துவங்களுக்கும் இதுவே ஆதாரம்.

புறநிலையே கருத்துகளின் தோற்றுவாய்.

புறநிலை முதன்மையானது, கருத்துக்கள் இரண்டாம் நிலையானது. இந்த முதன்மையானதில் இருந்தே இரண்டாம் நிலையானது தோன்றுகிறது. புறநிலையே கருத்துக்களைத் தீர்மானிக்கிறது. புறநிலையின் பிரதிபலிப்பே சிந்தனைகள் கருத்துக்கள்.

வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலை தீர்மானிக்கவில்லை என்பதே மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

பருப்பொருளின் விளைபொருளே சிந்தனை ஆகும். பருப்பொருளின் மாற்றங்களும் வளர்ச்சிகளும் மூளையில் முழுமையாக பிரதிபலிக்கிறது. மூளைக்குக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டே மூளை முடிவெடுக்கிறது.

சிந்தனை என்பது பருப்பொருளின் படைப்பு, மூளைதான் சிந்தனையின் உறுப்பு. சிந்தனையை பருப்பொருளில் இருந்து பிரிக்க முடியாது. சிந்தனையைப் பருப்பொருளில் இருந்து பிரித்துப் பார்ப்பது பெரும் தவறு என்கிறது மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம்.

ஸ்டாலின் இந்தக் கருத்துகளுக்கு ஆதாரமாக, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களில் இருந்து மேற்கோள்களைக் கொடுத்துள்ளார். அதில் மார்க்சின் மேற்கோளை இங்கே பார்ப்போம்

பருப்பொருள் சிந்தனை ஆகியவற்றைப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-

“சிந்தனை செய்கிற பருப்பொருளில் இருந்து சிந்தனையைப் பிரிப்பது என்பது அசாத்தியம். அனைத்து மாறுதல்களுக்கும் அடிப்படையாக இருப்பது பருப்பொருள்”

ஸ்டாலின் இந்தப் பகுதியை ஆதாரத்தோடு, மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார், இதற்கு மேல் வெளிப்படையாகக் கூறிடமுடியாது. ஆதாலால் பொருள்முதல்வாதிகளான கம்யூனிஸ்டுகள் சிந்தனை அதாவது மனிதனது கருத்துக்கள் புறிநிலையினால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நான்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்சின் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு இதனையே வலியுறுத்துகிறது.

3) உலகமும் அதன் சட்டங்களும் அறியக்கூடியது.

புறவுலகை அறிய முடியாது என்று கருத்துமுதல்வாதம் கருதுகிறது. உலகையும் அதன் இயக்கத்தையும் உணர்ந்து கொள்வது சாதியமில்லை என்கிறது. அறிவின் உண்மைத் தன்மையை கருத்துமுதல்வாதம் ஏற்றுக் கொள்ளவில்லை. கருத்துமுதல்வாதத்தின் இந்தப் போக்கைத்தான் மார்க்சியம் அறிவொணாவாதம் என்கிறது. புறவுலகை அறிவியலால் எட்ட முடியாது. இதுவே கருத்துமுதல்வாதத்தின் இறுதி முடிவு.

அறிவியலுக்கு அப்பாற்பட்டவைகள் உலகில் நிறைந்துள்ளதாக கருத்துமுதல்வாதம் கருதுகிறது.

மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்துக்கு நேரெதிரானது. உலகையும், அதன் இயக்கத்தின் விதிகளையும் அறிந்து கொள்ள முடியும் என்கிறது பொருள்முதல்வாதம். இதுவரை அறிந்தவைகளை பரிசோதனைகளின் மூலம் சரியானது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது.

இதன் அடிப்படையில்தான், புறநிலை உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

அறிய முடியாதது என்று எதுவும் கிடையாது, ஆனால் அறியப்படாதது இன்னும் இருக்கிறது, அதுவும்கூட அறிவியலின் வளர்ச்சினாலும் மனிதனது முயற்சியினாலும் ஒவ்வொன்றாக அறிய முடியும் என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் உறுதியாகக் கூறுகிறது.

உலகில், அறிவுக்கு எட்டாத “தானே ஆகிய பொருட்கள்” ("Things-in-Themselves") இருக்கிறது என்று கான்ட் போன்ற கருத்துமுதல்வாதிகள் கூறுகின்றனர், இந்தியாவில் உள்ள கருத்துமுதல்வாதத் தத்துவம் தானேயானப் பொருளை “பிரம்மம்” என்கிறது. இதுபோன்ற போக்கை எங்கெல்ஸ், தமது “லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூலில் விமர்சித்துள்ளார். மேலும் அதில் மனிதனது அறிவு என்பது உண்மையான அறிவுதான் என்று பொருள்முதல்வாத அடிப்படையில் நிறுவியுள்ளார்.

இதற்கு அடுத்து ஸ்டாலின், மாகிவாதிகளின் அறியமுடியாது என்ற கருத்தை மறுத்து இயற்கையைப் பற்றிய நமது அறிவு உண்மையானதுதான் என்று லெனின் கூறியுள்ள நூலான, “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

அறிவியலின் விதிகள் புறநிலை உண்மையைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்று லெனின் அந்த நூலில் கூறியுள்ளார்.

அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் வரும் போது மார்க்சியம் தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும் என்பதை லெனினது “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூல் நமக்கு வழிகாட்டுகிறது. புதிய நிலைமைகளுக்கு ஏற்ப பொருள்முதல்வாத வழியில் விளக்கம் கொடுப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இந்த கடமையை நிறைவேற்றுவதற்கு மார்க்சிய அடிப்படைப் புரிதல் அவசியமாகும். மார்க்சிய புரிதலில் தடுமாறுபவர்களால் இத்தகைய கடமைகளை செய்திட முடியாது.

சமூக வாழ்வையும், சமூக வரலாற்றையும் ஆராய்வதற்கு பொருள்முதல்வாதக் கோட்பாடுகளை, அதனோடு பொருத்திப் பார்ப்பதன் அளவிடற்கரிய முக்கியத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார் ஸ்டாலின். மேலும் கூறுகிறார், சமூக வரலாற்றிலும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகளிலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கோட்பாடுகளைச் செயல்படுத்துவதன் அளவிடற்கரிய முக்கியத்துவத்தை இப்போது எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.

நம் நாட்டில் உள்ளவர்கள் இதைப் புரிந்து கொண்டார்களா? என்ற கேள்விக்கு பதில் எதிர்மறையாகவே இருக்கிறது.

நம் நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகளிடையே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் அதிகம் காணப்படுகிறது. அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்கிற இயக்கவியலுக்கு மாறான கதம்பப் போக்கையே அதிகமானவர்கள் பின்பற்றுகின்றனர். இந்தக் குழப்பம் அனைத்துக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

ஸ்டாலின் நேரடியாகவே இந்த நூலில் கூறியதைப் பார்ப்போம்:-

“பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு மேம்போக்கான நோக்கங்களை வழி காட்டியாகக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக, சமூக வளர்ச்சியின் விதிகளையும், அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடைமுறைக்கு உரிய முடிவுகளையும்தான் வழிகாடியாகக் கொள்ள வேண்டும்.

 

எனவே, மனித குலத்தின் இன்பமயமான எதிர்காலம், ஒரு கனவாக இருந்து வந்த சோஷலிசம், இப்பொழுது ஒரு அறிவியலாக மாற்றப்பட்டுள்ளது”

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புறக்கணித்து, அல்லது அதை சிதைத்து பின்பற்றப்படும் நடைமுறை விஞ்ஞான வழிப்பட்டதாக இருக்காது என்பதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஸ்டாலின் கூறுவதை அப்படியே பார்ப்போம்.

“ஒரு சமூகத்தின் நிலை எப்படியிருக்கிறதோ, ஒரு சமூகத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகள் எப்படியிருக்கிறதோ, அப்படித்தான் அந்த சமூகத்தின் கருத்துக்களும், அரசியல் நிறுவனங்களும் உள்ளன”

ஸ்டாலின் கூறுகிற இந்த கூற்றுதான் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் சாரமாகும். ஆனால் பலருக்கு இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால் என்ன செய்வது இதுதான் மார்க்சியம்.

பாட்டாளி வர்க்க கட்சியின் செயல்பாடு கனவாக போகாமல் நடைமுறைக்கு உகந்ததாக இருக்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் என்பதை ஸ்டாலின் மிகத் தெளிவாக நம் முன்வைக்கிறார்.

“கொள்கையில் தவறாமல் இருக்க வேண்டுமானால் - வீண் கனவு காண்பவர்களைப் போல ஆகாமலிருக்க வேண்டுமானால்- பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்ன செய்ய வேண்டும்?.

 

புறநிலைக்கப்பால் நிற்கும் “மனிதப் பகுத்தறிவுக் கோட்பாடுகளை" ஆதாரமாகக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்யக் கூடாது.

 

சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தி எது?

 

சமூகத்தின் பொருளாயத வாழ்விலுள்ள பருண்மையான நிலைமைகள்தாம் அந்த சக்தி.

 

எனவே, அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும்.

 

''பெரிய மனிதர்களின்” நல்லெண்ணங்களை ஆதாரமாகக் கொள்ளவும் கூடாது. அதற்குப் பதிலாக, சமூகத்தின் பொருளாயத வாழ்வு வளர்வதற்கு வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும்.”

      ஸ்டாலின் இங்கே புறநிலை விதியினால் உருவாவதையே “தேவை” என்று குறிப்பிடுகிறார். புறநிலை விதிகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் நமக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதப் புரிதல் அவசியமாகும்.

அடுத்த மூன்றாவதுப் பிரிவில் ஸ்டாலின் “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” பற்றி விளக்குகிறார். இதனை அடுத்த வகுப்பில் பார்ப்போம்.

இன்னொன்றையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும், பொருளாயத நிலைமைகள்தான் தீர்மானிக்கும் சக்தி என்று கூறுவதால், அரசியல் கண்ணோட்டங்கள், அரசியல் நிறுவனங்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றுக்கு சமூகத்தில் ஒரு முக்கியப்பங்கு கிடையாதா? என்று கேட்பவர்கள் எதிரணியிலும் இருக்கின்றனர், கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருக்கின்றனர்.

இங்கே சிந்தனைகளை குறைத்து மதிப்பிடப்படவில்லை, நாம் பேசுவது சிந்தனைகளைத் தோற்றுவித்த சூழ்நிலைமைகள் எது? என்பது பற்றியே ஆகும்.

சிந்தனைகள், கருத்துக்கள் புறநிலைமைகளினால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், இதனை அனைவரலாலும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை. சிலரால்தான் மிகச் சிறப்பாக கண்டிறிய முடிகிறது. இந்தக் குறிப்பிட்டவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு அவர்களின் தனித்திறமையை மார்க்சியம் மதிக்காமல் இல்லை. மதிக்கிறது, எங்கெல்சே மார்க்சை தனித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.

இங்கே நாம் சொல்லவருவது என்வென்றால், சிறந்த கருத்துக்கள், சிந்தனைகள் என்பது அந்த தனி மனிதரின் சொந்தப் படைப்பல்ல, அதைத் தீர்மானித்தது புறநிலைமைகளே என்றுதான் மார்க்சியம் கூறுகிறது. அந்தப் புறநிலைமைகளை சரியாக அறிந்து கொண்டதே இந்த தனிநவர்களின் தனிச் சிறப்பாகும்.

மேற்கட்டுமானம் அடித்தளத்தின்மீது தாக்கம் செலுத்துவதை மார்க்சியம் மறுத்திடவில்லை.

அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது மேற்கட்டமைப்பு தன்னளவில் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த தீர்மானிப்பதையும் தாக்கம் செலுத்துவதையும் சமப்படுத்தி அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானிக்கிறது என்று கூறப்படுகிற கதம்பப் போக்கைத்தான் மார்க்சியம் மறுக்கிறது.

அடித்தளத்தின் தீர்மானிக்கும் சக்தியையும் மேற்கட்டமைப்பின் தாக்கம் செலுத்தும் தன்மையையும் மார்க்சியம் ஏற்கிறது. இரண்டையும் சமப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்றைய வகுப்பில், மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை, மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டைப் பற்றி பார்த்தோம். “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” பற்றி நாம் அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.

ஸ்டாலின் எழுதிய 

“இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” -2

Thursday, 13 January 2022

அரசியல் பொருளாதார நூல்களின் சாரம் தொகுதி - I , முன்னுரை, அ.கா.ஈஸ்வரன்

முன்னுரை:-

அ.கா.ஈஸ்வரன்

9884092972

ak.eswarn@gmail.com



 

"அரசியல் பொருளாதார நூல்களின் சாரம்" என்கிற இந்த நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரும் எழுதிய மூன்று அரசியல் பொருளாதார நூல்களின் சாரமாகும்.

இந்நூலில் எனது வேலை என்னவென்றால், “கூலியுழைப்பும் மூலதனமும்”, “கூலி விலை லாபம்” “கூலி முறை” என்ற மூன்று நூல்களில் காணப்படும் கருத்துக்களின் சாரத்தைத் தொகுக்கும் தொகுப்பாளரின் வேலையே ஆகும். இந்தத் தொகுப்பு வேலையை ஒரு ஆசிரியனாக இருந்தல்லாமல், மார்க்சியத்தைப் படிக்கும் மாணவனாக இருந்து செய்துள்ளேன். பொதுவாக எனது நூல்கள் அனைத்தும் இவ்வகையில் தான் இருக்கும், எனது பங்காக விளக்குவதில் சிறு முயற்சி செய்திருப்பேன் அவ்வளவே. அதை இனம் கண்டு சுட்டிக்காட்டிய வாசகர்களே என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறார்கள்.

நூலின் நோக்கம் என்பது தேவைப்படுபவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதாகும். இவ்வகையில் எனது எழுத்துப் பணி வெற்றியே ஆகும்.

நூலின் நோக்கத்தை அறியாதவர்கள் கூறுகிற விமர்சனத்தைக் கடந்து, உண்மையான விமர்சனத்தை நோக்கி, எனது நூல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

“கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூல் 1847 ஆம் ஆண்டு ஜெர்மன் தொழிலாளர்களுக்குப் பிரஸ்ஸல்ஸில் (பெல்ஜியம்) மார்க்ஸ் நிகழ்த்திய சொற்பொழிவாகும் இதுவே பின்னாளில் பத்திரிகைகளில் நூலாகவும் வந்தது. 1865 ஆம் ஆண்டு முதலாம் அகிலத்தின் பொதுக்குழுவில் மார்க்ஸ் நிகழ்த்திய உரையின் நூல் வடிவமே “கூலி விலை லாபம்”. இந்த உரை மார்க்ஸ், எங்கெல்ஸ் மறைவுக்குப் பிறகு மார்க்ஸ் மகளால் 1898 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது. இங்கிலாந்து தொழிற்சங்கத்தின் (The Labour Standard) “தொழிலாளர் தரநிலை” என்ற பத்திரிகையில் எங்கெல்சால் மே 1881 முதல் ஆகஸ்டு 1881 வரை தொடராக எழுதப்பட்டு, பிறகு “கூலி அமைப்புமுறை” என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டது.

சாரத்தைப் படித்துவிட்டு மூல நூல்களை வாசித்தால், அதில் இருந்து கிடைக்கின்ற அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதல், நம்மை மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” என்ற நூலை வாசிப்பதற்கு இட்டுச் செல்லும்.

கால வரிசையில் அல்லாமல், இந்நூல் எங்கெல்ஸ் எழுதிய “கூலி அமைப்புமுறை” என்ற நூலில் இருந்து தொடங்குகிறது. தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பிற்கு நேர்மையான கூலி (சம்பளம்) கிடைக்கிறதா என்ற கேள்வியுடன் முதல் கட்டுரை தொடங்குகிறது. அடுத்துக் கூலிக்கான போராட்டம் என்கிற உடனடி போராட்டத்தைப் பற்றியும் கூலி அமைப்புமுறைக்கு எதிராகப் போராட வேண்டியதைப் பற்றியும் பேசுகிறது. தொடர்ந்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் கட்சி, இறுதியாக இன்றைய வளர்ச்சி அடைந்த சமூகத்தில் முதலாளிய வர்க்கம் தேவையற்றவர்களாவது பற்றிப் பேசுகிறது. ஆகத் தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை அனைத்தையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது. இதைப் படித்தவுடன் கண்டிப்பாக மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை வாசகர்கள் உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

“கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூல், கூலி என்றால் என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? ஒரு சரக்கின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும், கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள உறவு, மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துள்ளது.

இதே போல் “கூலி விலை லாபம்” என்ற நூல், உற்பததியும் கூலியும், கூலியும் விலையும், மதிப்பும் உழைப்பும், உழைப்பு சக்தி, உபரி மதிப்பின் உற்பத்தி, உழைப்பின் மதிப்பு, உபரி மதிப்பைப் பிரித்துப் பெறப்படும் பல்வேறு பகுதிகள், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டமும் அதன் விளைவுகளும் என்பது போன்ற தலைப்புகளில் சமூக மாற்றம் வரை எளிமையாகவும் தெளிவாக உறுதிபடவும் இந்நூல் விவரிக்கிறது.

நம் கையில் உள்ள இந்த நூல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர்களின் அரசியல் பொருளாதாரம் பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக இருக்கும். இந்த நூல் வெறும் அரசியல் பொருளாதாரமாக மட்டும் இல்லாது, அரசியல் பொருளாதார அடிப்படையில், அரசியலையும் தொழிலாளர்களின் விடுதலையான சமூக மாற்றத்தையும் சேர்த்து விவரிக்கிறது.

அதுமட்டுமல்லாது ஒரு களப் போராளி அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் ஏற்படுத்தும். அதற்கான அறிமுகத்தையும் கொடுக்கும்.

இடதுசிந்தனை உள்ள அனைவரும் அரசியல் பொருளாதார நூல்களைப் படிப்பது அவசியமாகும். மூலநூல்களைப் படிப்பதில் உள்ள சிரமத்தை மனதில் கொண்டு அந்த நூல்களில் உள்ள சாரம் மட்டும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுருக்கமாகக் கூறிவிட்டதாக சொல்ல முடியாது. அதனால் மூல நூலை எடுத்துப் படிக்க வேண்டும். சாரத்தை அறிவது நேரடி நூலை படிப்பதற்கே. இந்த நூல் இந்தளவுக்கு சிறப்பாக வந்துள்ளது என்றால் அதற்கு தோழர்கள் தா.சந்திரன், த.ஜீவானந்தன், த.ந.தனராமன், இரா.புருஷோத்தமன் ஆகியோர்களே காரணமாகும், அதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தோழர் தா.சந்திரன் தோழர் இரா.புருஷோத்தமன் ஆகிய இருவரும் இந்த நூல் சிறப்பாக வருவதற்காக கடும் முயற்சியும் உழைப்பும் செலுத்தியுள்ளார்கள். அவ்விருவருக்கும் எனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ள பொன்னுலகம் புத்தக நிலையத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I - முன்னுரை, அ.கா.ஈஸ்வரன்

முன்னுரை:-

அ.கா.ஈஸ்வரன்

9884092972

ak.eswarn@gmail.com




 

"கோட்பாடு முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது."

- எங்கெல்ஸ்          

ஒருவர் எந்தப் பிரச்சினையையும், தமது தத்துவக் கண்ணோட்டத்தின்படியே அணுகுகிறார். இதை அவர் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும் இதுவே உண்மை. எதன் அடிப்படையில் மனிதர்கள் குறிக்கோள்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதிலே தான், தத்துவங்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு அடங்கி உள்ளது.

குறிக்கோளில்லாமல் எவரும் செயல்படுவதில்லை, இந்தக் குறிக்கோளை அவரவர் புரிந்து கொண்ட தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.

தத்துவக் கண்ணோட்டம் ஒருவகையில் இயற்கையான திறன் தான். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழியில்லை என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார்.

கருத்துமுதல்வாதத் தத்துவத்தை ஏன் ஒரு பொருள்முதல்வாதி படிக்க வேண்டும்? கருத்துமுதல்வாதி ஏன் பொருள்முதல்வாதத் தத்துவத்தைப் படிக்கிறாரோ அதே காரணத்துக்குத் தான் பொருள்முதல்வாதியும் படிக்க வேண்டியுள்ளது. எதிர் தத்துவத்தை எதிர் கொள்ள வேண்டுமானால் அதனை அறிந்திருக்க வேண்டும்.

மக்களிடம் கருத்துக்குழப்பங்கள் ஏற்படுவதற்கும், போராட்ட குணம் குறைந்து காணப்படுவதற்கும் அவர்களிடம் உள்ள கருத்துமுதல்வாதச் சிந்தனையே காரணமாகும். உழைக்கும் மக்களிடம் காணப்படும் கருத்துமுதல்வாதச் சிந்தனையை புரிந்து கொள்வதற்கும், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கும், ஒரு பொருள்முதல்வாதி கருத்துமுதல்வாதத்தை அறிந்திருக்க வேண்டும்.

பொருள்முதல்வாதம் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டுமானால், கருத்துமுதல்வாதத்தைவிடப் பொருள்முதல்வாதம் எந்த வகையில் சிறந்தது என்பதை விளக்க வேண்டும். அப்படி விளக்கம் கொடுப்பதற்குக் கருத்துமுதல்வாதம் தெரிந்து இருக்க வேண்டும்.

      கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றி எங்கெல்ஸ் கூறியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். பழங்காலத்தில், சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவுபடத்தக்கூடிய அளவுக்கு அன்றைய விஞ்ஞானமும், தத்துவமும் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், கருத்துமுதல்வாதம் ஆத்மா என்ற கருத்தைப் படைத்து அதனை விளக்கியது. அன்றைய நிலையில் உள்ள தொடக்கநிலைப் பொருள்முதல்வாதத்தால் (Primitive Materialism), இதனை எதிர் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்கெல்ஸ் என்ன கூறுகிறார் என்றால், பழைய பொருள்முதல்வாதம், பழைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சியினாலும் தத்துவ வளர்ச்சியினாலும் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நவீன பொருள்முதல்வாதத்தால் இன்றைய கருத்துமுதல்வாதம் நிலைமறுக்கப்பட்டது.

எங்கெல்ஸ்:-

“தொன்மைக் காலத் தத்துவவியல் பழைமையான, தன்னியல்பாக உருவான பொருள்முதல்வாதமே. எனவே அது சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவு படுத்த இயலாததாக இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினை மீது தெளிவை அடைவதற்கான தேவை, உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியாக ஒரு கடவுட் கோட்பாட்டிற்கும் இட்டுச் சென்றது. எனவே பழைய பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. ஆனால், தத்துவவியலின் மேலதிக வளர்ச்சிப் போக்கில் கருத்துமுதல்வாதமும் செல்லுபடியாகாததாகிப்போய் நவீனப் பொருள்முதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது.”

(டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 241)

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சிகளை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பதற்கு இரு தத்துவங்களையும் படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்துப் புரிந்து கொள்ளாமல், ஒரு கம்யூனிஸ்ட் நவீனப் பொருள்முதல்வாதியாக சிறக்க முடியாது.

      கருத்துமுதல்வாதத்தை மார்க்சும் எங்கெல்சும் படித்து விமர்சித்துவிட்டனர், நவீனப் பொருள்முதல்வாதத்தையும் படைதளித்துவிட்டனர். நாம் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டாலே போதும் என்கிற போக்கு இங்கே நிறைய பேரிடம் காணப்படுகிறது. கடவுளை மறுப்பதோடு பொருள்முதல்வாதம் முடிந்துவிட்டதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம். இயக்கவியல் பொருள்முதல்வாதம் கடவுள் மறுப்போடு நின்றுவிடுவதில்லை, அது பல விஷயங்களைப் பற்றி விளக்கி இருக்கிறது, சமூகம் பற்றியும் பொருள்முதல்வாதம் பேசுகிறது. இந்த விளக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு நாத்திகம் மட்டும் போதுமானது அல்ல.

கம்யூனிச சிந்தனையினால் ஈர்க்கப்பட்டு, பொருள்முதல்வாதத்தை ஒருவர் ஏற்றவுடனேயே, அவர் மனதில் தேங்கியுள்ள கருத்துமுதல்வாத சிந்தனைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறிட முடியாது. அதை நீக்குவதற்குப் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். கருத்துமுதல்வாதம் என்ன சொல்கிறது, அதற்கு பொருள்முதல்வாதம் எப்படி பதிலளிக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை அறியாது போனதினால் தான், நம் நாட்டில் உள்ள இடதுசாரிகளிடம், கருத்துமுதல்வாத சிந்தனைப் போக்குகள் அவ்வப்போது தலைகாட்டுகிறது. அது கருத்துமுதல்வாதக் கருத்து என்பதைக்கூட அறியாமல் இருக்கின்றனர். இது மிகவும் பலவீனமான சித்தாந்தப் போக்காகும். சித்தாந்த தெளிவில்லாமல் எதையும் சாதித்திட முடியாது.

தத்துவத்தின் மீது இடதுசாரிகளிடம் அக்கறையின்மை காணப்படுகிறது. “தத்துவம், அதிகம் தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில் எந்தக் காலத்தைக் காட்டிலும் மிகுந்த உதாசீனத்திற்கு உள்ளாகி உள்ளது மிகவும் கவலை அளிப்பதாகும்” என்று தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      அரசியல் போராட்டத்துக்கு தத்துவம், ஒரு துணை சக்தி என்பதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளனர், ஆனால் சமூகத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்காண காரணத்தை தத்துவ அடிப்படையிலேயே அறிந்து அதனை மாற்றுவதற்கு போராடுகிறோம். அதனால் தத்துவம் அனைத்துப் போராட்டத்துக்கும் அடிப்படையாகும்.

      சோஷலிசத்தை, நம் நாட்டில் அமைப்பதற்கானப் போராட்டத்தில் இந்திய தத்துவ மரபுகளுக்கு இடையேயான போராட்டம் தொடர்புடையதாக இருப்பதையும், அந்தப் போராட்டத்துக்கு தத்துவம் ஓர் கூர்மையான ஆயுதமாக இருப்பதையும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா தமது நூலுக்கு எழுதிய முகவுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


"சோசலிசத்திற்கான இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்துடன் தொடர்புடையது என்கிற புரிதலே இந்நூலின் அடிப்படை பின்னர்க் குறிப்பிடப்பட்டதில் முக்கியமான் இரு பணிகள் அடங்கும்; முதலாவது, உண்மையில் இருந்த தத்துவ நூல்களைப் பற்றிய பாரபட்சமற்ற பகுப்பாய்வு மூலம் அவற்றில் இன்று நிலைத்திருக்கிற மற்றும் மறைந்து போனவற்றைக் கண்டறிவது; இரண்டாவது, உயிர்த்திருப்பனவற்றுக்கு ஊட்டம் ஏற்றுவதும் மறைந்தனவற்றை 'மண்ணில் புதைப்பதும்'; ஊட்டமேற்றுதல் எனில் அவற்றின் ஆற்றலைச் சரியான திசையில் திருப்பி அது எங்கே செல்கிறது எனப் பார்ப்பது எனப்பொருள் - அதாவது, அவற்றின் காலத்திற்குப் பின்னர் வரலாற்றின் போக்கில் திரண்டுள்ள அறிவியல் தரவுகளைக் கொண்டு அவற்றைச் செழுமைப் படுத்துவது எனப் பொருள்.

 

இப் பணியைச் செவ்வனே செய்தால் நாம் மார்க்சியத்தின் வேர்களை அங்கே காணலாம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை; இதனை இந்திய தத்துவ மரபில் மார்க்சியத்தைக் கண்டெடுப்பது எனக் கொச்சைப்படுத்திடக்கூடாது; இவ்விடத்தே 'கண்டெடுப்பு' எனும் சொல்லைப் பயன்படுத்த முடியுமாயின் இதன் பொருள் இந்திய தத்துவ மரபின் சில கூறுகளின் அடியொற்றிப் போகிற ஓர் இந்தியன் இறுதியில் வந்து சேருமிடம் மார்க்சியமாகத்தான் இருக்க முடியும் என்பதே அது மட்டுமன்று; சோசலிசத்துக்கான போராட்டத்திற்குத் தேவைப்படும் படைக்கலன்களில் வலுமிக்க, மிகவும் கூர்மையானதோர் ஆயுதமாக இச் சித்தாந்தம் அமைவதுடன் அதற்கு அவனது தேசியப் பாரம்பரியத்தின் அங்கீகாரமும் உண்டு என்கிற தெளிவு அவனை மேலும் உற்சாகப்படுத்தும்."

(இந்திய நாத்திகம், பக்கம்-7)

இயற்கையை, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகுவதைப் போல, சமூகம் பற்றிய விஷயத்தில் பொருள்முதல்வாதப் பார்வையில் அணுகுவது அவ்வளவு எளிதல்ல. இருக்கும் சமூகத்தை விமர்சிக்கும் வழியில் தான் புதிய சமூகத்தைப் படைக்க முடியும். இருக்கும் கருத்துமுதல்வாத தத்துவத்தை விமர்சிப்பதின் மூலம்தான் பொருள்முதல்வாத தத்துவம் வளம்பெறும்.

“இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I” என்ற இந்த நூல் ஒரு தொடக்கம்தான். இதில் இந்து தத்துவத்தின் அடிப்படைக்கான நூல்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவைகள் அடுத்த தொகுதியில் இடம்பெறும்.

இந்தியத் தத்துவங்கள் வேதத்தை ஒட்டியும் வெட்டியும் பேசப்பட்டுள்ளது. அதனால் வேதத்தை  அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது

விமர்சனப் பார்வையில்லாமல் எதையும் ஏற்கவோ, மறுக்கவோ முடியாது. விமர்சனம் இல்லாமல் எதையும் வெளிப்படுத்த முடியாது. இந்த நூலில் பெரிய விவாதங்கள் எதுவும் நிகழ்த்தப்படவில்லை, கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படவில்லை. அறிமுகம் என்பதனால் விமர்சனங்கள் மேம்பட்ட நிலையில் (Advanced Level) செய்யப்படவில்லை. எதையும் அறிந்தால் தான் அதனை விமர்சிக்க முடியும். அதனால் இந்த அறிமுகத்துக்குத் தேவைப்படுகிற விமர்சனம் மட்டும் இந்நூலில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க நிலை வாசகர்களுக்குத் தேவைப்படுகிற விமர்சனம் இதில் உள்ளது.

இந்த நூலுக்கு இந்தியத் தத்துவம் என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும், இந்த முதல் தொகுதியில் இந்துத் தத்துவத்தின் அடிப்படைகள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்து தத்துவத்தின் அடிப்படை நூல்கள் மூன்று (பிரஸ்தானத்திரயம்) மட்டுமே விளக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நூலில், இந்து தத்துவத்தின் அடிப்படை நூல்களின் கருத்துக்கள் உள்ளது உள்ளபடி (As it is) தொகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கள் இந்து தத்துவ நூல்களின் கருத்தாகவே கொள்ள வேண்டும், எனது கருத்துக்கள் போகிற போக்கில் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் உள்ளவை இந்து தத்துவ நூலின் கருத்தாகவே கொள்ள வேண்டும்.

 இதற்கு அடுத்தத் தொகுதியில்தான், இந்துத் தத்துவத்தின் போக்குகளான துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் போன்ற தத்துவங்கள் விளக்கப்பட இருக்கின்றன. மேலும் தொடக்கக் காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தத்துவ-மதக் கருத்துக்கள் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை), மணிமேகலையில் காணப்படும் தத்துவங்கள், நீலகேசியில் காணப்படும் தத்துவங்கள், சித்தர் தத்துவம், பக்தி இயக்கம், சைவ சித்தாந்தம், சிறு தெய்வ வழிபாடு, ஆசீவகம் போன்றவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியத் தத்துவத்தில் காணப்படும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகிய இரு சிந்தனைப் போக்குகளை பிரித்து விளக்கம் கொடுக்கப்பட இருக்கிறது.

தத்துவங்கள் வாழ்க்கைக்கு வழியாட்டியா? வாழ்க்கையை விடுவதற்கு (முக்திக்கு) வழியாட்டியா? என்ற கேள்வி இந்திய தத்துவங்களைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.

      இந்தியாவில் உள்ள பெரும்பாலான கருத்துமுதல்வாதத் தத்துவங்கள் வாழ்க்கையை விளக்குகிறது, அல்லது வாழ்க்கையை விட்டு விலகி முக்திக்கு வழிகாட்டுகிறது. ஆனால், பொருள்முதல்வாதம் வாழ்க்கையின் நிலைமையை அறிந்து கொள்வதோடு, அதனை மாற்றுவதற்கு வழியையும் காட்டுகிறது.

சுவேதாஸ்வதர உபநிடதம், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தத்துவங்கள் தோன்றுவதற்கு இந்த கேள்வியே அடிப்படையாகும். “சுகதுக்கங்களை ஏன் அனுபவிக்கிறோம்? உலகின் நடைமுறை எவ்வாறு அமைகிறது?”.

உபநிடதம் எழுப்பும் இந்தக் கேள்விக்கு சரியான விடையை, இந்த உலகத்திலேயே கண்டடைந்தால், அப்போது இந்த உலகில் சிறப்பாக வாழ்வதற்கு வழி பிறக்கும். அப்படிச் சிறப்பான வாழ்வு கிடைத்தால், ஏழு ஜென்மம் என்ன, தொடர் பிறப்பு கிடைக்கும் என்றால், அதை மக்கள் விரும்பி வரவேற்பர். அதாவது வாழ்வதற்கு விருப்பம் கொள்வர். மற்றவர்களை வாழ வைப்பதிலும் மகிழ்ச்சி கொள்வர். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்து கொள்வர்.

சுக-துக்கங்களை ஏன் அனுபவிக்கிறோம்?

இதற்கு ஆன்மீக தத்துவங்கள் கூறுவது என்ன?

கர்ம வினைகளால் ஏற்பட்டது என்பதே அதன் பதில், மேலும் சுகதுக்கங்கள் உலகின் இயல்பு, சுகதுக்கங்களில் இருந்து விடுபட வேண்டுமாயின், முக்தியை நாட வேண்டும். பிரச்சினைக்கானத் தீர்வை, பிரச்சினைத் தோன்றிய இடத்தில் தேடாமல், அதனை விட்டு விலகுவதற்கு வழிகாட்டுகிறது ஆன்மீகம்.

சுக-துக்கங்கள் சமூகத்தில் எப்போது ஏற்பட்டது, ஏன் ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, அதனைப் போக்கும் வழியினையும் பொருள்முதல்வாதம் எடுத்துக் காட்டுகிறது.

உலகில் ஏற்றத் தாழ்வு காணப்படுவதற்கான காரணத்தையும், அதனை மாற்றுவதற்கான வழியையும் பொருள்முதல்வாதம் காட்டுகிறது. இந்த நவீனப் பொருள்முதல்வாதம் மார்க்சியத் தத்துவமாகும். இதனை அடுத்தத் தொகுதியில் காணலாம்.

      இந்த நூலில் இடம் பெற்ற தொடக்கப்பகுதிகள் நீயூஸ்கடை (https://www.newskadai.com) என்கிற இணையத் தளத்தில் வெளிவந்தவையாகும், மற்றவைகள் அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டவையாகும். இந்த நேரத்தில் நீயூஸ்கடை நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாகத் தோழர் மகிவர்மனுக்கு மிக்க நன்றி.

இந்த நூல் இந்தளவுக்குச் சிறப்பாக வந்துள்ளது என்றால், அதற்கு உழைத்த தோழர்கள் இரா.புருஷோத்தமன், த.ஜீவானந்தன், தா.சந்திரன், சுந்தரசோழன் ஆகியோர்களுக்கு நன்றி.

எனது எழுத்துக்களை ஊக்கப்படுத்திய தோழர்கள் த.ந.தனராமன், ஆ.பத்மாவதி, மகேஷ் ராமநாதன், பழனி சின்னசாமி ஆகியோருக்கு நன்றி. இதனைச் சிறப்பாக வெளியிட்ட பொன்னுலகம் புத்தக நிலையத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அட்டைப்பட ஓவியர் தோழர் மாணிக்கம் நூலின் சாரத்துக்கு ஏற்ப அட்டைப் படத்தை வடிவமைத்துத் தந்துள்ளார் அவருக்கும் நன்றி.

இந்த நூல் எழுதும் போதும் சரி, எழுதி முடிக்கும் போதும் சரி, ஏன் எப்போதும் எனது நினைவில் வாழும் தோழர் கோவை ஈஸ்வரன் அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தியத்துவ மார்க்சியம் (அத்வைத மார்க்சியம்) என்ற பெயரில் கூறப்படும் தோழர் காலன்துரை அவர்களின் கருத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து எழுதினேன். அந்த விமர்சனத்தை படியெடுத்து காலன்துரை நாடுமுழுதும் எடுத்துச் சென்று பல தோழர்களுக்கு படிக்கக் கொடுத்தார். (இதற்குப் பதில் விமர்சனம் இதுவரை காலன்துரை அளிக்கவில்லை). அந்த விமர்சனத்தைக் கோவை ஈஸ்வரன் அவர்களும் படித்தார், படித்தது முதல் என்னை இந்தியத் தத்துவத்தை மார்க்சிய அணுகுமுறையில் எழுதும்படி கேட்டுக் கொண்டார். ஒவ்வொருமுறை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதையே வலியுறுத்தி வந்தார். அவர் நம்மோடு வாழ்கின்ற போதே எழுதி முடிக்கவில்லை என்பது வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் இந்த அறிமுக நூலை எழுதுவதற்குக் கோவை ஈஸ்வரன் அவர்கள் அன்று கொடுத்த ஊக்கமே பெரும் காரணம் ஆகும், அதனால் இந்த நேரத்தில் கோவை ஈஸ்வரன் அவர்களின் நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

      இந்த நூலுக்கு மூன்று பேர் அணிந்துரை அளித்துள்ளனர். ஒவ்வொரு அணிந்துரையும் ஒவ்வொரு பார்வையில் எழுதப்பட்டுள்ளது. இந்த அணிந்துரைகள் இந்த நூலைப் படிக்கு வாசகனை தயார்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

எனது தத்துவத் தேடல் சுமார் பதினெட்டு வயதில் தொடங்கியது. அப்போதே உபநிடதங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். பவுத்தம், சமணம் போன்ற தத்துவங்களையும் இளமைக் காலத்திலேயே படித்தேன். சைவ சித்தாந்தம் நான் பிறந்ததில் இருந்தே எனது காதில் விழுந்து கொண்டிருந்தது. வைணவம் தேடிபிடித்துப் படித்தேன். தொடக்கக் காலத்தில் இருந்தே அத்வைதம் படித்துவருகிறேன். ஆதி சங்கரரின் “விவேக சூடாமணி” என்ற நூலை இளமையிலேயே படித்தேன். அத்வைதத்தின் சாரம் விளக்கத்துடன் இந்நூலில் முழுமையாக உள்ளது.

எனது தத்துவத் தேடலின் தொடர்ச்சியானது பொருள்முதல்வாதத்தில் நிறைவடைந்தது. அதன் பிறகு தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நா,வானமாமலை போன்றோர்களின் தத்துவ நூல்களைப் படித்தேன், அது என் தத்துவக் கண்ணோட்டத்தை வளப்படுத்தியது.

என்னை ஒரு தத்துவ அறிஞராகவோ, தத்துவ எழுத்தாளராகவோ என்றுமே கருதியதில்லை. தத்துவம் படிக்கும் மாணவன் அவ்வளவுதான். நான் படித்ததை உங்களோடு பகிர்கிறேன். எனக்குப் புரிந்த தத்துவத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்கிறேன். சிரமப்பட்டுப் படித்ததை, மற்றவர்கள் குறைந்த சிரமத்திலேயே படித்து புரிந்து கொள்வதற்கு உதவி செய்ய நினைக்கிறேன்.

தத்துவத்தைப் படிக்கின்ற போதும் சரி, சமூகத்தை கவனிக்கும் போதும் சரி என்னுள் ஏற்படுகிற விமர்சனத்தை உங்கள் முன் வைக்கிறேன். இது ஒரு தொடக்கப் புள்ளிதான். இடதுசாரிகள் தத்துவத்தில் எவ்வளவோ கடக்க வேண்டியிருக்கிறது. தொடங்காமல் கடக்க முடியாது. யாராவது தொடங்கித்தானே ஆக வேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால், பயணம் விரைவாக செல்லும். தத்துவத்தில் விருப்பம் உள்ள அனைவரையும் இணைத்துப் பயணத்தைத் தொடர்வோம்.

தத்துவத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேவைப்படுகிற நூல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. படித்தறிவதற்கு நாம்தான் தயாராக வேண்டும். படித்ததை ஒழுங்குபடுத்த வேண்டும், அப்போதுதான் அது கண்ணோட்டமாக மாறும். கண்ணோட்டத்தின் வழியே தத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்த முடியும்.

ஒவ்வொரு தத்துவத்துக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எதார்த்தத்தைப் விமர்சிப்பதிலேயே, வியாக்கியானம் செய்வதிலேயே காலம் கடத்துகிற தத்துவம் இருக்கிறது, அந்தத் தத்துவம் கருத்துமுதல்வாதம். இந்தக் கருத்துமுதல்வாதத் தத்துவம் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குகிறது.

எதார்த்தத்தைப் புரிந்து சமூகத்தை மாற்றும் தத்துவமாக இருப்பது பொருள்முதல்வாதம் ஆகும். பொருள்முதல்வாதம் வாழ்ந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. பொருள்முதல்வாதத் தத்துவம் இந்த உலகை வெறுக்கவில்லை, உலகைப் புரிந்து மாற்றுகிறது. இதனை அடுத்த தொகுதியில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன் இந்த முதல் தொகுதியை படிப்போம்.

      படிப்படியாக புரிந்து கொள்வதற்கு மாறாக உடனடியாக படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களை மனதில் கொண்டு, இந்நூலின் இறுதியில் ஒரு பின்னிணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. “சுவாமி விவேகானந்தரின் “செயல்முறை வேதாந்தம்” என்கிற நூலுக்கு பொருள்முதல்வாதப் பார்வையில் விமர்சனம்” இதுவே அந்தப் பின்னிணைப்பு. இதைப் படித்தால் கருத்துமுதல்வாதத்தை பொருள்முதல்வாதம் எவ்வாறு விமர்சிக்கிறது என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படையில்தான் கருத்துமுதல்வாதத்தின் வர்க்க சார்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.