Saturday 30 October 2021

6) உபரிமதிப்பு சிறிய அறிமுகம்

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 41 வது வார வகுப்பு – 30-10-2021)

 


சென்ற வாரம் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை சுருக்கமாகப் பார்த்தோம். அதில் மிகமிக சுருக்கமாக உபரிமதிப்புப் பற்றி பார்த்தோம். இன்று அதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அரசியல் பொருளாதாரம் கற்பது, சற்று சிரமமானது என்று ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. உண்மை தான். ஒரு புதியத்துறையைப் படிக்கும் போது, சற்றுச் சிரமம் இருக்கத்தான் செய்யும்.

அந்தச் சிரமத்தை குறைப்பதற்கு என்ன வழி?

எளிதாக எடுக்கப்படும் வகுப்புகளில் கலந்து கொள்ளது, எளிதாக எழுதப்பட்ட நூல்களைப் படிப்பது. இதைத் தவிர வேறுவழி கிடையாது.

மெனகெடாமல் எந்தப் புதிய துறையையும் அறிந்து கொள்ள முடியாது. மெனக்கெடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த வகுப்பு இருக்கும் என்று நாம் நம்புகிறேன்.

மார்க்சுக்கு முன்பே, ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ போன்ற செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் (classical political economists), ஒரு சரக்கின் மதிப்பானது, அச் சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பால் உருவானது என்பதைக் கண்டுவிட்டனர். ஆனால் அவர்கள் இந்த விளக்கத்துடன் நின்றுவிட்டனர்.

மார்க்ஸ் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்தார். அந்த ஆராய்ச்சியின் முடிபே உபரி மதிப்பு என்கிற கோட்பாடு.

“உபரிமதிப்பு” என்ற தலைப்பில் பேசுவதற்குப் பயன்படுத்திய நூல்களை முதலில் பார்ப்போம்.

1849 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்”

1865 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய “கூலி, விலை, லாபம்”,

1867 ஆம் ஆண்டு மாக்ஸ் எழுதிய “மூலதனம்” முதல் தொகுதி,

1878 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு” இந்த நூலில் தான் மார்க்சியத்தின் மூன்று பகுதிகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் என்று பிரித்து, முதன்முறையாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சியத்தில் எதைப் பற்றிப் பேசினாலும், எங்கெல்சின் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலை தொடமால் இருக்க முடியாது.

இத்துடன், மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” என்கிற நூலுக்கு எங்கெல்ஸ், 1891 ஆம் ஆண்டு எழுதிய “முன்னுரை”.  இந்த முன்னுரை மார்க்ஸ் மறைந்த பிறகு எழுதியது ஆகும்.

குறிப்பாக இந்த முன்னுரையை அடிப்படையாக வைத்தே “உபரிமதிப்புக் கோட்பாட்டை” அறிந்து கொள்ளப் போகிறோம்.

உபரி மதிப்பு என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் நடைபெறுகிறது. அதே போலப் பணம், மூலதனமாக மாறுவதும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தில் தான்.  தொழிலாளி பாட்டாளியாக பரிணாமம் அடைவதும் முதலாளித்துவத்தில் தான். சரக்கு உற்பத்தி முழு வளர்ச்சி பெறுவதும் முதலாளித்துவத்தில் தான்.

மூலதனமும் பணமும் ஒன்றல்ல. மூலதனம் பணத்தைக் கொண்டது தான், ஆனால் பணத்தின் பணியும் மூலதனத்தின் பணியும் வெவ்வேறு ஆகும்.

தெருவில் காய்கறி விற்கும் பாட்டி ஒரு நாளைக்குத் தம்மிடம் உள்ள 1,000/-ரூபாய்க்கு காய்கறிகளை வாங்கி, அதனை 1,500 ரூபாய்க்கு விற்று 500 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்தச் சம்பாத்தியம் லாபம் ஆகாது. இது அந்தப் பாட்டியின் அன்றைய வருமானம், இது சம்பாத்தியம், லாபம் என்று கூறிட முடியாது.

லாபம் என்பது மூலதனத்தால் மட்டுமே கிடைக்கிறது. தம் கைப்பணத்தைப் போட்டு, காய்கறி வியாபாரத்தை நடத்துவதனால், அந்த காய்கறி விற்கும் பாட்டியை ஒரு முதலாளி என்று கூறிடமுடியாது.

முதலாளி உழைப்பைச் சுரண்டுகிறார். காய்கறி விற்கும் பாட்டி யாரையும் சுரண்டவில்லை. முதலாளித்துவ சமூகத்தில் சுரண்டல் மூலம் கிடைப்பதே லாபம்.

பணத்தைக் கொண்டு வருமானத்தைப் பார்க்கலாம் ஆனால் மூலதனத்தைக் கொண்டே லாபத்தைப் பார்க்க முடியும். முதலாளித்துவ உற்பத்தி முறை இந்த வகையில் தான் அமைந்துள்ளது.

முதலாளித்துவ உற்பத்தி முறை நடைபெற வேண்டுமானால் அதற்கு, இரண்டு முன்நிபந்தனைகள் இருக்க வேண்டும்.

ஒரு பக்கம் பணம் சிலரிடம் திரளாகச் சேர்ந்திருப்பதும், மறு பக்கம் நிலத்தில் இருந்தும், உற்பத்திக் கருவிகளில் இருந்தும் விலக்கப்பட்டு, உழைப்பால் மட்டுமே பிழைக்கக்கூடிய தொழிலாளியும் முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றுவதற்கு முன்நிபந்தனைகளாகும்.

இந்த இரண்டு சக்திகள் இருந்தால் தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நடைபெறும்.

முதலாளியிடம் தொழிற்சாலை நடத்துவதற்கு வேண்டிய “மூலதனம்” இருக்கிறது, தொழிலாளியிடம் அந்தத் தொழிற்சாலையில் உழைப்பை செலுத்துவதற்கான “சக்தி” இருக்கிறது.

முதலாளி தம்மிடம் உள்ள மூலதனத்தைக் கொண்டு தொழிற்சாலை நடத்த முற்படுகிறார்.

முதலில் எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இங்கே இரும்பு அலமாரி, அதாவது பீரோ செய்யும் தொழிற்சாலையை முதலாளி உருவாக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தொழிற்சாலைக்கு இடம் வேண்டும், இரும்பு அலாமாரி செய்வதற்குக் கச்சாப் பொருளான இரும்பு வேண்டும். அதனை உருக்கி செய்வதற்கு இயந்திரம் வேண்டும், இயந்திரம் செயல்பட மீன்சாரம் வேண்டும்.

இவற்றை எல்லாம் இயக்குவதற்குப் பாட்டாளி வர்க்கம் வேண்டும். அதாவது தொழிலாளியின் உழைப்பு வேண்டும்.

இரும்பு அலமாரி செய்வதற்கான தொழிற்சாலை தயாராகிவிட்டது.

உற்பத்தியைத் தொடங்க வேண்டியது தான்.

உற்பத்தி நிகழ்கிறது, தயாரான இரும்பு அலமாரி சந்தையைக் நோக்கி செல்கிறது.

சந்தையில் விற்கப்படுகிறது. முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது.

இந்த லாபம் எங்கிருந்து வந்தது.

இந்தப் புதிய மதிப்பு எவ்வாறு பிறந்தது.

இந்தக் கேள்விக்கான பதிலில்தான், முதலாளித்துவத்தின் சுரண்டல் அம்பலமாகிறது.

சரக்கின் மதிப்பானது, அச் சரக்கின் உற்பத்திக்கு செலவிடப்பட்ட உழைப்பால் உருவானது என்று செம்மை அரசியல் பொருளாதாரம் முதலில் கண்டபிடித்தது.

உழைப்பு தான் சரக்கின் மதிப்பை படைக்கிறது என்று கூறியவுடன், உழைப்பின் மதிப்பை நிர்ணயிப்ப எப்படி? என்ற கேள்வி எழுகிறது.

சரக்கில் அடங்கியுள்ள உழைப்பு, என்பதே அந்தக் கேள்விக்குப் பதில்.

ஒரு தொழிலாளி, ஒரு நாளைக்குச் செலுத்திய உழைப்பின அளவு எனன?

இதை எப்படி அளப்பது?

உழைப்பின் மதிப்பு “உழைப்பில்” தான் கூற முடியும். ஆனால் “ஒரு மணி நேர உழைப்புக்கு, ஒருமணி நேர உழைப்புச் சமம்” என்று கூற முடிகிறதே தவிர, ஒரு மணி நேர உழைப்பின் மதிப்பைப் பற்றி இன்னும் நாம் ஏதும் அறிந்து கொள்ளவில்லை.

செம்மை அரசியல் பொருளாதாரம், வேறொரு வழியில் முயன்று பார்த்தது. அது என்னவென்றால், சரக்கின் மதிப்பானது அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம்.

அடுத்து, உழைப்பின் உற்பத்திச் செலவு என்ன? என்ற கேள்வி எழுகிறது.

இதற்குச் செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள், தர்க்கவியலுக்கு எதிராகச் செயல்பட்டனர். அவர்களால் உழைப்பின் உற்பத்திச் செலவைக் கணக்கிட முடியவில்லை.

வேறு என்ன செய்வது என்று நினைத்த அவர்கள் தொழிலாளியின் உற்பத்திச் செலவை ஆராய முற்பட்டனர்.

தொழிலாளியின் உற்பத்தி செலவை கணக்கிடுவோம்.

தொழிலாளி தொடர்ந்து வேலை செய்வதற்கும், வேலை செய்யும்படியான திறனை பராமரிப்பதற்கும், மேலும் முதுமை, நோய் அல்லது மரணம் காரணமாக அவர் வேலையில் இருந்து நீங்கினால், அவருக்குப் பதிலாக ஒரு புதிய தொழிலாளியைத் தருவதற்கும், அதாவது, தொழிலாளி வர்க்கத்தை இனவிருத்தி செய்வதற்கும், குடும்பத்தை பராமரிப்பதற்கும் தேவைப்படுவதே தொழிலாளியின் உற்பத்தி செலவாகும்.

ஆக மொத்தத்தில் வாழ்வதற்குக் குறைந்தபட்ச தேவையை நிறைவேற்றுவதற்கு உரிய பணமே, தொழிலாளியின் உற்பத்தி செலவு ஆகும்.

ஒரு தொழிலாளி, தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பதற்கு ஆகும் செலவே தொழிலாளியின் பிழைப்பாதாரச் செலவாகும். இந்தக் கணக்கு அவர்களின் தேவையை முழுமையாக நிறைவு செய்வதற்காகக் கணக்கிடப்படவில்லை, அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையானதைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.

இந்தப் பிழைப்பாதாரச் செலவு ஒரு நாளைக்கு ரூபாய் 1,000/- என்று வைத்துக் கொள்வோம்.

நாம் இரும்பு அலமாரி செய்யும் தொழிலாற்சாலையை முன்வைத்தே கணக்கிடுகிறோம்.

தொழிற்சாலையில், ஒரு நாள் வேலை செய்வதற்கு 1,000/- ரூபாய் தொழிலாளிக்கு முதலாளி கொடுக்கிறார். இதற்காகத் தொழிலாளியை, முதலாளி ஒன்பது மணிநேரம் வேலை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த முதலாளி, எப்படிக் கணக்கிடுகிறார் என்று பார்ப்போம்.  

உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட தொழிலாளி இரும்பு அலமாரி செய்பவர். ஒரு நாளைக்கு ஒர் இரும்பு அலமாரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கணக்கிடுவதற்காக இங்கே ஒரு நபரின் உழைப்பாக கொள்ளப்படுகிறது. ஒரு அலமாரியை ஒரு தனி உழைப்பாளி செய்யவில்லை, என்றாலும் கணக்கிடுவதற்கு இவ்வாறு வைத்துக் கொள்வோம்.

இங்கே நாம் ஒர் அலமாரியைத் தான் கணக்கிடுகிறோம் என்பதை நினையில் கொள்வோம்.

கச்சாப்பொருளுக்கு ஆகும் செலவு ரூபாய் 8,500/-

இயந்திரம், கையாண்ட கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம், பயன்படுத்திய மின்சாரம் ஆகியவற்றின் ஒரு நாளைய செலவு ரூபாய் 500/-

தொழிலாளரின் ஒரு நாள் கூலி ரூபாய் 1,000/- என்று முதலிலேயே பார்த்தோம்.

ஆக மொத்தம் 10,000/- ரூபாய் முதலாளி செலவு செய்கிறார். இந்த செலவின் மூலம் ஒர் இரும்பு அலமாரி கிடைக்கிறது.

இந்த இரும்பு அலமாரியை, சந்தையில் ரூபாய் 18,000/-க்கு முதலாளி விற்கிறார்.

விற்பதின் மூலம், கூடுதலாக ரூபாய் 8,000/- கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார்.

லாபமாகக் கருதுகின்ற ரூபாய் 8,000/- எங்கிருந்து வந்தது? என்பது தான் கேள்வி?

செம்மை பொருளாதார அறிஞர்களின் கூற்றுப்படி, சரக்குகள் அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன.

விற்று கிடைத்த ரூபாய் 18,000/-த்தில், ரூபாய் 9,000/-ம், இந்த இரும்பு அலமாரி, செய்ய முற்படுவதற்கு முன்பே இருந்த மதிப்புகளாகும்.

அதாவது கச்சாப்பொருளின் மதிப்பு ரூபாய் 8,500/- உற்பத்திக் கருவிகளின் தேய்மானம் ரூபாய் 500/- ஆக விற்பனையானதில் உற்பத்திக்கு முன்பாக உள்ள பொருட்களின் மதிப்பு ரூபாய் 9,000/- இதனை விற்ற தொகையில் இருந்து கழித்தால மீதம் இருப்பது ரூபாய் 9,000/-.

செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்களின் அனுமானத்தின்படி இந்த ரூபாய் 9,000/-. தொழிலாளியால் செலுத்தப்பட்ட உழைப்பில் இருந்து பெறப்பட்டதாகும்.

தொழிலாளியுடைய ஒன்பது மணி நேர உழைப்பானது, ரூபாய் 9,000/-.க்கு உரிய, மதிப்பைப் படைதிருக்கிறது. ஆக இந்தக் கணக்கின்படி தொழிலாளியின் ஒன்பது மணிநேர உழைப்பு, ரூபாய் 9,000/-க்குச் சமம் ஆகும்.

ஒருவழியாக  “உழைப்பின் மதிப்பை”  செம்மை பொருளாதார அறிஞர்கள் வழிகாட்டுதலின் படி கண்டுபிடித்துவிட்டோம். அப்படா… கணக்கு தீர்ந்தது.

“நிறுத்துங்கள் நிறுத்துங்கள்” என்று நமது உழைப்பாளி அழைக்கிறார்.

“9,000/- ரூபாயா? எனக்கு 1,000/- ரூபாய் மட்டுமே முதலாளி கொடுத்துள்ளார். எனது ஒன்பது மணி நேர உழைப்பின் மதிப்புக்கு ரூபாய் 1,000/- தான் என்று எனது முதலாளி சத்தியம் செய்கிறாரே. இது நல்ல கதையா இருக்கிறதே” -என்று தொழிலாளி கோபப்படுகிறார்.

உழைப்பு தான், மதிப்பைப் படைக்கிறது என்று கணக்குப் போட்டு, பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்தால், பெரிய முரண்பாட்டில் அல்லவா அகப்பட்டுக் கொண்டோம்.

ஒன்பது மணி நேர உழைப்பின் மதிப்பு தொழிலாளிக்கு ரூபாய் 1,000/-மாக இருக்க, அதுவே முதலாளிக்கு ரூபாய் 9,000/- மாக உள்ளது.

இந்த 9,000/- ரூபாயில் இருந்து தொழிலாளிக்கு 1,000/- ரூபாய் கொடுத்துவிட்டு, மீதம் உள்ள ரூபாய் 8,000/-தை முதலாளி தனக்கென எடுத்துக் கொள்கிறார்.

இதன்படி பார்த்தால், உழைப்புக்கு ஒரு மதிப்பல்ல, இரண்டு மதிப்புகள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் “உழைப்பின்” உற்பத்திச் செலவாகக் கருதியது, உண்மையில் “உயிருள்ள தொழிலாளியின்” உற்பத்திச் செலவாகுமே அன்றி “உழைப்பின்” உற்பத்திச் செலவு ஆகாது.

உண்மையில், இந்தத் தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் “உழைப்பை” அல்ல, “உழைப்புச் சக்தியை”.  

இது, மார்க்சின் சிறந்த கண்டு பிடிப்பாகும். இந்த கண்டுபிடிப்பிடிப்பினால்தான் செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்களால் ஏற்பட்ட சிக்கல் தீர்க்கப்படுகிறது.

“உழைப்பு சக்தி” என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி, முதலாளிக்கு விற்கும் ஒரு “சரக்கு” ஆகும்.

உழைப்பு சக்தி எப்பொழுதுமே. இப்படி ஒரு பரிவர்த்தனைச் சரக்காக இருந்து இல்லை. உழைப்பு எப்பொழுதுமே கூலியுழைப்பாய், அதாவது சுதந்திர உழைப்பாய் இருந்து இல்லை. ஆனால் நவீன பாட்டாளி சுதந்திர உழைப்பாளி ஆவார்.

அது என்ன சுதந்திர உழைப்பாளி?

அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுபட்டவன். நிலத்தில் இருந்தும், உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டவன், தான் வாழ்வதற்காக, உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழி இல்லாதவன். இவன் தான் சுதந்திரம் பெற்ற உழைப்பாளி.

இவன் எந்த முதலாளியிடமும் தமது உழைப்பு சக்தியை விற்க சுதந்திரம் பெற்றவனாக இருக்கிறான். ஆனால் உழைத்திடாமல், வாழவழி இல்லாதவனாய் இருக்கிறான்.

இந்த அடிப்படையில் தான் பாட்டாளி வர்க்கம் விற்பது, உழைப்பாக இல்லாமல், உழைப்பு சக்தியாக இருக்கிறது என்று மார்க்ஸ் விளக்குகிறார்.

தொழிலாளி, முதலாளிக்கு விற்பது “உழைப்பை” அல்ல “உழைப்பு சக்தியை” என்ற தெளிவோடு, மீண்டும் நாம் இரும்பு அலமாரி உற்பத்திக்குச் செல்வோம்.

நமது தொழிலாளி ஒன்பது மணி நேரம் உழைப்பதின் மூலம், தனக்குக் கூலியாகக் கொடுத்த 1,000/-  மதிப்பை செலுத்துவதுடன், இரும்பு அலமாரியில் ரூபாய் 8,000/- பெறுமானமுள்ள புதிய மதிப்பையும் சேர்க்கிறார்.

உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு அலமாரியை முதலாளி விற்பனை செய்து, இந்தப் புதிய மதிப்பைப் பணமாக்குகிறார்.

1,000/- ரூபாயை தொழிலாளிக்கு ஏற்கெனவே முதலாளி கொடுத்துவிட்டார், புதிய மதிப்பான ரூபாய் 8,000/-த்தை தனதாக்கிக் கொள்கிறார்.

ஒன்பது மணிநேரத்தில், தொழிலாளி 9,000/- ரூபாய் மதிப்புள்ள சரக்கை உற்பத்தி செய்கிறார் என்றால், தொழிலாளி ஒரு மணி நேரத்தில் 1,000/- ரூபாய் பெறுமான மதிப்பை உருவாக்கி விடுகிறார்.

ஆகவே தமது கூலியில் அடங்கியுள்ள 1,000/- ரூபாய்க்கான மதிப்பை, ஒரு மணி நேரம் வேலை செய்ததுமே, தொழிலாளி முதலாளிக்குத் திரும்பித் தந்துவிடுகிறார்.

இந்த ஒரு மணி நேர உழைப்புக்குப் பிறகு இருவர் இடையிலும் கணக்குத் தீர்ந்துவிடுகிறது.

அதாவது “சம மதிப்புக்கு சம மதிப்பு” இருவரும் பரிமாறிவிட்டனர், எனவே இருவரில் எவரும் மற்றவருக்கு இனி தர வேண்டியது எதுவும் இல்லை.

“நிறுத்துங்கள் நிறுத்துங்கள்” என்று முதலாளி இப்போது கூவுகிறார்.

“லாபத்துக்குத் தான், நான் தொழிலாற்சாலையை நடத்துகிறேன். தொழிலாளியை நாள் முழுவதுக்கும் உழைப்பதற்குத் தான் வேலைக்கு அமர்த்தினேன். அதனால் தொழிலாளி ஒன்பது மணி நேரம் உழைத்துதான் ஆக வேண்டும். அப்போது தான் நம்மிடையே கணக்குத் தீர்வதாய்க் கொள்ள முடியும். இல்லை என்றால் எனக்கு லாபம் கிடைக்காது.” என்று பதட்டத்துடன் முதலாளி இவ்வாறு கூறி முடிக்கிறார்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில், நாள் முழுதும் உழைப்பதாய் தான் தொழிலாளியும் முதலாளியும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர், அதனால் தொழிலாளி, முதலாளித்துவச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நாள் முழுதும் உழைக்க வேண்டியவர் ஆகிறார்.

இது எந்த வகையில் நியாயம் என்று நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால் இது நீதி நெறியைச் சார்ந்த விஷயமல்ல, பொருளாதாரம் சார்ந்த விஷயம் ஆகும் அதனால் இதனைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்தான் தீர்க்க முயல வேண்டும்.

இதனை இறுதியில் பார்ப்போம்.

இப்போது, செம்மைப் பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ  ஆகியோர்களின் மதிப்புக் கோட்பாட்டில் உள்ள குறைபாட்டைப் பார்த்தோம்.

மதிப்பைப் படைத்தது “உழைப்பு” என்று கருதியதால் ஏற்பட்ட சிக்கல்களைப் புரிந்து கொண்டோம்.
    
இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு மார்க்சே நமக்கு வழிகாட்டுனார்.

உண்மையில் தொழிலாளி, முதலாளியிடம் விற்றது “உழைப்பை” அல்ல, “உழைப்பு சக்தியே” என்று புரிந்து கொண்டோம்.

இதுவரை உபரி மதிப்பு பற்றி, எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையின் அடிப்படையில் பார்த்தோம். இது சிறிய அளவு, கதை வடிவிலானது. ஆனால் இதனைப் பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பொருளாதார அடிப்படையில் அதற்குத் தீர்வு காண முடியும்.

இதற்கு அடுத்து, மார்க்ஸ் “கூலி விலை லாபம்” என்கிற நூலில் உபரி மதிப்பை எவ்வாறு விளக்குகிறார் என்று பார்ப்போம்.

இதுவரை உழைப்பு-உழைப்பு சக்தி, இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஓரளவுக்குப் புரிந்து கொண்டோம். அதனால் உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கூறுவதை, இப்போது பார்க்கும் போது கண்டிப்பாக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

.     “கூலி விலை லாபம்” என்கிற நூலில் தான் முதன்முதலாக உபரி மதிப்புக் கோட்பாட்டை மார்க்ஸ் விளக்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மார்க்ஸ் இதனை முதல் அகிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விளக்கியது தான், நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் அடிப்படையிலும், “மூலதனம்” முதல் தொகுதியில் கூறப்பட்டதைக் கொண்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் மூலதனம் முக்கியமான இரு பிரிவுகளாக வேலை செய்கிறது. இந்த இரண்டை சரியாகப் புரிந்து கொண்டால் தான் “உபரி மதிப்புக் கோட்பாட்டை” தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

மூலதனத்தை மார்க்ஸ் “மாறா மூலதனம்” (constant capital), “மாறும் மூலதனம்” (variable capital) என்று பிரிக்கிறார்.

தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்ட முதலாளி பல்வேறு செலவுகளைச் செய்கிறார். தொழிற்சாலைக்குத் தேவைப்படும் இடம், கச்சாப் பொருள், இயந்திரம், கருவிகள் போன்றவற்றை வாங்குகிறார். இதற்கு வாங்கும் மூலதனத்திற்குப் பெயர் “மாறா மூலதம்”.

தொழிலாளியின் உழைப்பு சக்திக்குக் கூலியாகக் கொடுக்கும் மூலதனத்திற்கு “மாறும் மூலதனம்” என்று பெயர்.

மாறா மூலதனத்தினால் வாங்கியவைகளைக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் போது, அதில் காணப்பட்ட மதிப்பு, புதிய சரக்குக்கு, பகுதிப் பகுதியாக, சிறிது சிறிதாக மாறுகிறது, அதாவது இடம் பெயர்கிறது. அவ்வாறு மாறும் போது எந்தப் புதிய மதிப்பையும் அது படைக்கவில்லை. இங்கிருந்த பழைய மதிப்பு, புதிய சரக்கில் இடம்பெயர்ந்துள்ளது. அதனால் தான் மாறா மூலதனத்தை “பூஜ்யம்” என்று மார்க்ஸ் கூறுயுள்ளார்.

ஆனால், மாறும் மூலதனம் என்று கூறப்படுகிற மூலதனத்தினால் வாங்கப்பட்ட “உழைப்பு சக்தி” என்பது, தனது மதிப்பை புதிய சரக்கில் மாற்றப்படும் போது, கூடுதலாக புதிதான மதிப்பையும் சேர்த்துப்படைக்கிறது.

முதலாளி, தொழிலாளியின் உழைப்பு சக்தியை பெற்று அதன் மதிப்பை சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார்.

பொருளை வாங்குவோர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமையும் பெற்றவர் ஆவார்.

அது போலவே தொழிலாளியின் “உழைப்பு சக்தி” என்கிற சரக்கை விலை கொடுத்து முதலாளி வாங்குகிறார். இதனை வாங்கிய முதலாளி, தொழிலாளியை நாள் முழுதும் வேலை வாங்கும் உரிமை பெற்றவராகிறார்.

தொழிலாளியின் உழைப்பு சக்தியை வாங்கிய முதலாளி, ஒரு நாளைக்கு, தொழிலாளியை ஒன்பது மணி நேரம் வேலை வாங்குகிறார். அதில் தொழிலாளி தமக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டதற்கு ஈடான மதிப்பை ஒரு மணி நேரத்தில் படைத்துவிடுகிறார்.

தொழிலாளியின் பிழைப்பும் அவனது குடும்பத்தின் வாழ்வும், தொழிலாளி வர்க்க மறுவுற்பத்திக்கும் சரிக்கட்டும் விதமாக இது கணக்கிடப்படுகிறது. இது ஊருக்கும் ஊரும், நாட்டுக்கு நாடும் வேறுபடும்.
    
“சம மதிப்புக்கு சம மதிப்பு தான்” பரிமாறப்படுவது வழக்கம் என்றாலும் முதலாளித்துவ “கூலி அமைப்பு முறை”யினால் தொழிலாளி நாள் முழுதும் முதலாளிக்கு உழைப்பதற்காக நிர்பந்திக்கப்படுகிறார். சூழ்நிலையின் காரணமாகத் தொழிலாளியும் வேறுவழியின்றி இதற்குச் சம்மதிக்கிறார்.

தொழிலாளி தன் உழைப்பு சக்திக்கு ஈடான ஒரு மணி நேரத்துக்கு மேலாக, எட்டு மணி நேரம் உழைக்க வேண்டி வருகிறது. இதனைக் கூடுதல் “உழைப்பு மணி நேரம்” என்று மார்க்ஸ் கூறுகிறார்.

கூடுதலாக உழைக்கிற உபரி உழைப்பு, உபரி மதிப்பாக, உபரி உற்பத்திப் பொருளாகப் பரிணமிக்கிறது.

இந்த உபரி நேரத்திற்கு என்று, முதலாளி தொழிலாளிக்கு எதையும் கொடுப்பதில்லை.

உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு “மூலதனம்” பெருகுகிறது. உபரி மதிப்பை, முதலாளி எதிர்பார்ப்பதும் மூலதனம் திரட்டுவதற்கே ஆகும்.

“கூலி அமைப்பு முறை” (Wage System) இருக்கும்வரை இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்காது. கூலி உயர்வுக்கான போராட்டமானது, தற்காலிகத் தீர்வே ஆகும். இதற்கு நிரத்திரத் தீர்வு “கூலி அமைப்பு முறை”யின் ஒழிப்பில் தான் அடங்கி இருக்கிறது.

கூலி உயர்வுக்கான போராட்டத்தை, கூலி அமைப்பு முறை ஒழிப்பதற்கான போராட்டமாக, வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும். இதுவே தொழிலாளர்களின் அரசியலாகும்.

இது உழைப்பாளிகளின் மனதை மட்டும் சார்ந்த விருப்பம் அல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடுகளே காரணமாகும். உள்முரண்பாடுகள் முற்றுகிற போது அதற்குத் தீர்வாக முதலாளித்துவம் தூக்கி எறியப்படுகிறது.

மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் இதனையே கூறுகிறது.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, நலிவு பற்றி விளக்குகிறது. முதலாளித்துவத்தின் தோற்றத்தைப் பற்றி ஓரளவுக்குப் பார்த்தோம் அதே போல அதன் அழிவு பற்றிப் பார்ப்போம்.

சரக்கு உற்பத்தியை அதிகரிப்பதிலும், உபரி மதிப்பை பெருக்குவதிலும், மூலதனம் திரட்டுவதிலும் பல்வேறு முதலாளிகளிடையே போட்டி நிலவுகிறது.

இந்தப் போட்டியினால் உற்பத்தி சக்திகள் நவீனமாகிக் கொண்டே செல்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களின் அதி நவீன வளர்ச்சியின், அதீதத் தன்மையை, நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அடுத்து, உபரி மதிப்பின் இரண்டு வகைகளைப் பார்ப்போம்.

உபரி மதிப்பில் இரண்டு தன்மைகள் காணப்படுகிறன, ஒன்று “அறுதி உபரி மதிப்பு” (Absolute Surplus Value), மற்றொன்று “ஒப்பீட்டு உபரி மதிப்பு” (Relative Surplus Value).

நாம் இதுவரை பார்த்தது அறுதி உபரி மதிப்பு.

தொழிலாளியின் உழைப்பு நேரத்தைக் கூட்டுவதின் மூலம் கிட்டுவது அறுதி உபரி மதிப்பு.

உழைப்பாளியின் நாள் ஒன்றுக்கான, ஒன்பது மணி நேர உழைப்பை, 10 மணி நேரமாகவோ, 12 மணி நேரமாகவோ நீட்டிப்பதால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு ஆகும்.

தொழிலாளியின் அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு.

அவசியமான உழைப்பு நேரத்தை பல வழிகளில் குறைக்கலாம், முக்கியமாக நவீன இயந்திரங்களை, மற்ற முதலாளிகளுக்கு முன்பாகப் பயன்படுத்துவதின் மூலம் அவசியமான உழைப்பு நேரம் குறைக்கப்படுகிறது.

நவீன இயந்திரங்களை முதலில் பயன்படுத்துவதால் இந்தக் குறிப்பிட்ட முதலாளிக்கு கிடைக்கும் உபரி மதிப்பு, ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும்.

அதாவது பிற முதலாளிகளுடன் ஒப்பிடும் போது இவருக்குக் கூடுதல் உபரி மதிப்பு கிடைப்பதால் இதற்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று பெயர்.

அது எப்படி என்றால், நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகிற முதலாளி மற்ற முதலாளிகளைவிட அதிக சரக்கை உற்பத்தி செய்கிறார். இந்த சரக்கு, சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் மதிப்பிடப்படுகிறது. இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய உற்பத்தியாளரின் சரக்கு, குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சரக்கு, சமூக வழியில் அவசியமான உற்பத்தி நேரத்தால் கணக்கிடும் போது கூடுதல் பணம் கிடைக்கிறது. இந்த கூடுதல் பணமே ஒப்பீட்டு உபரி மதிப்பு. மற்ற உற்பத்தியாளருடன் ஒப்பிடும்போது இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய முதலாளிக்குக் கிடைப்பதினால் இதற்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று கூறப்படுகிறது.

இதன் மூலம், அதாவது புதுப்புது உற்பத்திச் சக்திகளைப் பெருக்குவதின் மூலம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல, அதன் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாகிறது.

அது எப்படி என்று பார்ப்போம்.

“முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது” என்று “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” கூறுகிறது.

இது முதலாளித்துவத் தொடக்கக் காலத்திற்கு மட்டுமல்லாது, ஏகாதிபத்தியம்-உலகமயமாதல்-நிதிமூலதனக் கட்டத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது.

முதலாளிகளுக்கு இடையேயான போட்டி உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியும் அதனால் மிகை உற்பத்தியும் ஏற்படுகிறது. இந்த மிகை உற்பத்தியால் சந்தைகளில் சரக்குகள் விற்காமல் தேங்கிவிடுகிறது. அப்போது பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது சரக்கு உற்பத்தி தடைப்பட்டுப் போகிறது.  தொழிலாளியின் வேலை நிறுத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்களே மிகவும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்

இந்த வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை, தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்தும், சக்தி அற்றுப் போனது. முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்தப் பொருளுற்பத்தி சக்திகளை நிர்வகிப்பதற்கான திறனை இழந்துவிட்டது.

முதலாளித்துவ வர்க்கம், வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் திணருவதையே இத்தகைய நெருக்கடிகள் காட்டுகிறது.

பொருளுற்பத்தி முறை, பரிவர்த்தனை முறையை எதிர்த்துக் கலகம் செய்கிறது. உற்பத்தி உறவுகளில் ஏற்படுகிற கலகம் சமூகம் முழுவதிலும் பிரதிபலிக்கிறது.

சமூகம் கொந்தளிக்கிறது. சமூகம்- புரட்சிக்குத் தயாராகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு, இந்த உற்பத்தி உறவுகள் பழைமைபட்டுப் பொருந்தாமல் போனதால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படுகிறது.

முதலாளித்துவத்துக்குச் சாவு மணி அடிக்கப்படுகிறது. உடைமைப் பறித்தோரின் உடமை பறிக்கப்படுகிறது. முதலாளித்துவம் தானே வளர்த்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் அழிந்து போகிறது.

முதலாளித்துவத்தின் கைகளில் இருந்து நழுவி கொண்டிருக்கும், சமூகமயமான உற்பத்திச் சாதனங்களை, சமூகப் புரட்சியின் மூலம், தொழிலாளி வர்க்கம் பொதுச் சொத்தாக்குகிறது.

தொழிலாளர்களின் ஆட்சியின் மூலம. “கூலி அமைப்பு முறை” என்கிற சுரண்டலின் ஆதிக்கம் படிப்படியாக முடிவுக்கு வருகிறது.

உபரி மதிப்பு என்கிற மார்க்சின் கோட்பாடு, கூலி அமைப்பு முறை என்கிற சுரண்டல் அமைப்பை ஒழிப்பது வரை செல்கிறது.

உபரி மதிப்பை அறிந்து கொள்வோம், கூலி அமைப்பு முறையை தூக்கி எறிவோம்.


                           (மார்க்சியம் - சிறிய அறிமுகம் / அனைத்து வகுப்புகளும்)

No comments:

Post a Comment