Saturday 23 October 2021

5) அரசியல் பொருளாதாரம் ஓரு சிறிய அறிமுகம்

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 40 வது வார வகுப்பு – 23-10-2021)


மார்க்சியத்தை சுருக்கமாக அறிமுகப் படுத்தும் விதமாக எட்டு தொடர் வகுப்பு எடுப்பதாக கூறியிருந்தோம். தத்துவம் பற்றிய நான்கு வகுப்பு முடிந்துவிட்டது. இது ஐந்தாவது வகுப்பு. இன்றைய தலைப்பு அரசியல் பொருளாதாரம். 

அரசியல் பொருளாதாரம் என்பது உற்பத்தி, பரிவர்த்தனை, நுகர்வு, வினியோகம் ஆகிய செயல்களின் போது மக்களுக்கு இடையே தோன்றுகிற பொருளாதார உறவுகளை ஆராய்கிறது. உற்பத்தி, பரிவர்த்தனை, நுகர்வு, வினியோகம் ஆகியவை திட்டவட்டமான பொருளாதார விதிகளுக்கு உட்பட்டவையாகும். இந்த விதி மனிதனை சாராது புறநிலையில் இருக்கின்றன. இந்த புறநிலை விதியை ஆராய்வதே அரசியல் பொருளாதாரத்தின் நோக்கமாகும்.

 ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகியவற்றை ஆராய்வதே அரசியல் பொருளாதார போதனையின் உள்ளடக்கம்.

 உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டும் சேர்ந்ததே உற்பத்தி முறை.

 உழைப்பு (Labour), உழைப்புக் குறிப்பொருள் (Objects lf Labour), உழைப்புக் கருவிகள் (Instruments of Labour) ஆகியவைகளை உழைப்புச் சக்திகள் என்று அழைக்கப்படுகிறது. கச்சாப் பொருளைக் கொண்டு மனிதனுக்கு தேவைப்படுகிறவற்றை உற்பத்தி செய்வது உழைப்பு. உழைப்பை செலுத்துகிற கச்சாப்பொருள் போன்றவை உழைப்பின் குறிப்பொருள். உழைப்பின் போது கச்சாப் பொருளின் மீது செலுத்துகிற கருவிகள் அனைத்தும் உழைப்புக் கருவிகள்.

 உற்பத்தி நிகழ்வின் போது ஏற்படுகிற பொருளாதார உறவுகள் உற்பத்தி உறவுகள் ஆகும். உற்பத்திக் கருவிகளின் மீதான உடைமையே உற்பத்தி உறவை நிர்ணயிக்கிறது. இந்த உடைமை, சமூக உற்பத்தியின் வினியோக உறவுகளை மட்டுமில்லாது சமூகத்தில் வர்க்கங்களையும், சமூக குழுக்களின் நிலைமையை நிர்ணயிக்கிறது.

 சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை உற்பத்தி முறை என்று அழைக்கப்படுகிறது. இதுவரை உலகம் ஐந்து உற்பத்தி முறைகளைக் கண்டுள்ளது. 1.ஆதிகம்யூனிச சமூக உற்பத்தி முறை, 2.அடிமை சமூக உற்பத்தி முறை, 3.நிலப்பிரபுத்துவச் சமூக உற்பத்தி முறை, 4.முதலாளித்துவ உற்பத்தி முறை, 5.சோஷலிச சமூக உற்பத்தி முறை.

 மார்க்ஸ்மூலதனம்” நூலில் முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியவற்றை ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

 புறநிலை விதிகளின் படியே அரசியல் பொருளாதாரம் செயல்படுகிறது. அந்த அரசியல் பொருளாதார விதியின் அடிப்படையில்தான், முதலாளித்துவத்தில் காணப்படும் உள்முரண்பாடுகள் அதனால் தீர்க்கப்பட முடியாமல், சமூகப் புரட்சியின் மூலம், முதலாளித்துவ உற்பத்தி முறை தூக்கி எறியப்பட்டு, சோஷலிச உற்பத்தி முறை அமைக்கப்படுகிறது.

 முதலாளித்துவ உற்பத்தி முறை, வீழ்ச்சி அடையும் என்பது அரசியல் பொருளாதார வளர்ச்சியின் விதியின் அடிப்படையில்தான் கூறப்படுகிறது.

 கம்யூனிஸ்ட்டாக இருக்கும் சிலருக்கு புறநிலை விதி என்று கூறினால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இப்படி ஒவ்வாமை உடையவர்களால் முதலாளித்துவ உற்பத்தி முறை தூக்கி எறியப்படும் என்பதை எவ்வாறு புரிந்து கொண்டிருப்பர். முதலாளித்துவம் தூக்கி எறியப்படுவது என்ற கூற்று, எவரது விருப்பத்தின் அடிப்படையில் தோன்றியது அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளின் விடுதலையாக - தீர்வாக ஏற்படுகிறது.

 அரசியல் பொருளாதாரமும் வர்க்க சார்பானதே, மார்க்சிய அரசியல் பொருளாதாரம் விளக்குகிற, முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என்பதை எந்த முதலாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டார், எந்த முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

 மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால், உழைக்கும் வர்க்க சார்பானவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதவரால் உபரி மதிப்பு போன்ற மார்க்சின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் லாபம் என்கிற கண்ணோட்டத்திலேயே முடங்கி கிடப்பர். அரசியல் பொருளாதாரம் என்பது வர்க்க சார்பானது, கட்சி சார்பானது என்பதை முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஒர் உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியவற்றை ஆராய்வது அரசியல் பொருளாதாரம் என்று பார்த்தோம். முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, மறைவு பற்றி மார்க்ஸ் எவ்வாறு விளக்கியுள்ளார் என்பதை எட்டு தலைப்புகளில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 1) பணமும் மூலதனமும்

   (Money and Capital)

 நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியில் இருந்தே முதலாளித்துவம் தோன்றியது. முதலாளித்துவம் தோன்றுவதற்கு இரண்டு முன்நிபந்தனைகள் உள்ளன. சிலரது கைகளில் பணம் குவிந்துகிடத்தல், மற்றொரு பக்கம் உழைப்புச் சாதனங்களில் இருந்து விலக்கப்பட்ட, கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி துரத்தப்பட்ட தொழிலாளி இருத்தல். இந்த இரண்டும் இல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறை செயல்பட முடியாது.

 இந்த இரண்டும் வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்தில் காணப்பட்டது. வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்தில், வணிகத்தின் மூலம் பெரும் லாபம் அடைந்தவர்களிடம் சேர்ந்த பணம், வணிக மூலதனமாக மாறியது. இந்த வணிக மூலதனம், தொழில் மூலதனமாக மாற்றம் பெற்றது, வணிகர்கள் தொழில் முதலாளிகளாக மாறினர்.

 நிலப்பிரபுத்துவத்தால் ஓட்டாண்டியாக்கப்பட்ட உழைக்கும் விவசாயிகள் வேறு தொழில் செய்து பிழைப்பதற்கு நகர் புறத்தை நோக்கி படை எடுத்தனர். இதுவே முதலாளித்துவம் தோன்றுவதற்கான காரணங்களாகும்.

 இந்த நிலைமைகள் இன்னொரு முக்கியமானதையும் சுட்டிக்காட்டுகிறது. அது என்னவென்றால் சரக்கு உற்பத்தியின் வளர்ச்சி நிலை.

 வளர்ச்சி அடைந்த சரக்கு உற்பத்தி தோன்றுவதற்கு சமூக உழைப்புப் பிரிவினை அவசியமான தேவையாகும். இந்த வளர்ச்சி அடைந்த சூழ்நிலைமையில்தான் பணம், மூலதனமாக மாறுகிறது. தொழிலாளி, பாட்டாளி ஆகியோர். தொழிலாளி பல காலமாக சமூகத்தில் இருக்கின்றார். பாட்டாளி ஆலைத் தொழில் தோன்றிய போதே உருவாகிறார். இந்த ஆலைத் தொழிலாளியின் உழைப்பு ஒரு சரக்காக மாறுகிறது. தனது உழைப்புச் சக்தியை சரக்காக விற்கும் இந்தத் தொழிலாளியே பாட்டாளி ஆகும். இதை பின்னால் பார்க்கலாம்.

 முதலாளித்துவத்துக்கு முன்புவரை சரக்கு சுற்றோட்டம் எளிய வடிவில் நடைபெற்றது. சரக்கை விற்று பணமும், இந்தப் பணத்தின் மூலம் சரக்கும் என்கிற வழியில் சுற்றோட்டம் நிகழ்ந்தது. இதனை -- (C- M- C) என்று சூத்திரமாகக் கூறலாம். அதாவது கையில் உள்ள சரக்கை விற்று பணம் பெற்று, இந்தப் பணத்தால் தேவைப்படுகிற சரக்கு வாங்குவது என்பது எளிமையான சரக்கு சுற்றோட்டம். ஆனால் வளர்ச்சி அடைந்த சரக்கு சுற்றோட்டமான முதலாளித்துவத்தில் பணத்தைக் கொண்டு சரக்கு உற்பத்தியும், அந்தச் சரக்கை விற்பதினால் கூடுதல் பணமும் கிடைக்கிறது.

 முதலாளித்துவத்தில் -- (M-C-M) என்கிற சூத்திரத்தின்படி சரக்கு சுற்றோட்டம் நடைபெறுகிறது. இங்கே சரக்கு விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு, சரக்கு உற்பத்தி செய்யப்பட்டு, அந்த விளைபொருட்கள் விற்பதின் மூலம்கூடுதல் பணம்முதலாளிக்குக் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் பணம் எங்கிருந்து வந்தது என்பதில் தான் முதலாளித்துவத்தின் சுரண்டல் அடங்கியிருக்கிறது.

 இந்த முதலாளித்துவ சுரண்டலை அம்பலப்படுத்த மார்க்ஸ் தமது ஆய்வை சரக்கில் இருந்து தொடங்கினார். நாமும் சரக்கில் இருந்தே பார்ப்போம்.

 2) சரக்கு உற்பத்தி

 பழங்குடி அமைப்பு சிதைவுறும் போது சரக்கு உற்பத்தி தொடங்கியது.  

 விலங்குகளை வளர்த்தல், பயிர் தொழில் செய்தல் ஆகிய இரண்டும், முதலாவது உழைப்புப் பிரிவினை ஆகும்.  இந்த உழைப்புப் பிரிவினை பழங்குடி சிதைவின் போது ஏற்பட்டது.

 முதலாளித்துவ சமூகம் தோன்றும்வரை உபரிகளைத்தான் பரிவர்த்தனை செய்தார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையானது வாங்கப்பட்டது. சரக்கு விற்கப்பட்டு, கிடைக்கிற பணத்தைக் கொண்டு, தனக்குத் தேவையான சரக்கு வாங்கப்பட்டது. இதற்கான சூத்திரம் --(C- M- C) (சரக்குபணம் - சரக்கு). இதை நாம் முன்பே பார்த்தோம்.

 முதலாளித்துவ உற்பத்தியில் சரக்கு விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது. பணத்தைக் கொண்டு சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு விற்கப்பட்டு பணமாக பெறப்படுகிறது, அதுவும் செலவழிக்கப்பட்ட பணத்துக்கு கூடுதலாக பணம் கிடைத்துள்ளது. இதற்கான சூத்திரம் -- (M-C-M) (பணம்சரக்கு - பணம்). இதையும் நாம் முன்பே பார்த்தோம்.

 முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு ஆதிக்கம் செலுத்துகிறது. இச் சமூகத்தில் மனிதனது உழைப்பு, உழைப்பு சக்தியாக, ஒரு சரக்காக உருவாகிறது. இதுவரை உற்பத்தி உறவுகள் மனிதர்களுக்கு இடையேயான உறவாக இருந்தது. முதலாளித்துவத்தில் உற்பத்தி உறவுகள் சரக்குகளுக்கு இடையேயான உறவுகளாக காட்சித்தருகிறது.

 பழைய எளிய சரக்கு உற்பத்திக்கும் முதலாளித்துவ சரக்கு உற்பத்திக்கும் வேறுபாடு இருக்கிறது.

 எளிய சரக்கு உற்பத்தியில் சிறு விவசாயிகள், கைவினைஞர்கள் ஈடுபட்டனர். இது தனி மனித உழைப்பை ஆதாரமாக கொண்டிருந்தது. தாமே உழைப்பர், அல்லது குடும்ப உறுப்பினர்களை சேர்த்து உழைப்பர், அல்லது காசு கொடுத்து உழைப்பதற்கு சில ஆட்களை வேலைக்கு சேர்ப்பர்.

 முதலாளித்துவத்துக்கு முன்பான சரக்கு உற்பத்தி, பிறர் உழைப்பை சுரண்டாமல் நிகழ்ந்தது.

 எளிய சரக்கு உற்பத்தி முறையில், சிலவற்றில்தான் சமூக உழைப்புப் பிரிவினை உருவாகியிருந்தது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தி முறையில் அனைத்தும் படிப்படியாக சமூக உழைப்புப் பிரிவினையாக மாறுகிறது.

 மேலும் உடைமையாளரின் உழைப்பில் உற்பத்தி நிகழவில்லை. உழைப்பை செலுத்துவதற்கு என்றே பாட்டாளிகள் தொழிற்சாலையில் அமர்த்தப்படுகின்றார்.

 பாட்டாளியின் உழைப்புச் சக்தியை, மூலதனத்தை வைத்திருக்கும் முதலாளி விலைக்கு வாங்கிறார். விலைக்கு வாங்கிய உழைப்பே, இயந்திரங்களை இயக்கி புதிய சரக்கை உற்பத்தி செய்கிறது.

 3) சரக்கின் இரு காரணிகள்

    (The Two Factors of a Commodity)

 முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியானது, வளர்ச்சி அடைந்த சரக்கு உற்பத்தியாக இருக்கிறது. இந்த வளர்ச்சி அடைந்த உற்பத்தியில் விளையும் சரக்கு இரண்டு காரணிகளைக் கொண்டுள்ளது.

 ஒன்று பயன்மதிப்பு (use-value) மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு (exchange-value).

 சரக்கு என்பது எதாவது மனிதத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். கேளிக்கையையும் ஒரு சரக்காகவே மார்க்ஸ் பார்க்கிறார். இன்றைய நிலையில் சேவையையும் நாம் சரக்காகக் கொள்ளலாம்.

மனிதனின் தேவையை நிறைவு செய்யும் அந்தப் பொருளின் பயன்பாடே பயன்மதிப்பு எனப்படுகிறது.  

 அரிசி, கோதுமை, பால், இறைச்சி போன்றவை மனிதர்களது உணவுத் தேவையை நிறைவு செய்கிறது. சட்டை, புடவை, வேட்டி போன்றவை மனிதர்களது உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது. வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு போன்றவை குடியிருப்பு தேவையை நிறைவு செய்கிறது. இவ்வாறு மனிதர்களுடைய தேவைகளை நிறைவு செய்வது பயன்மதிப்பாகும்.

 சரக்கில், மற்றொரு மதிப்பும் இருக்கிறது. அது பரிவர்த்தனை மதிப்பு. முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு பரிவர்த்தனைக்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

 உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு பயன்மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டில் ஒன்றை மட்டும் கொண்டிருப்பது சரக்கு ஆகாது.

 ஒரு பயன்மதிப்பு மற்றொரு பயன்மதிப்புக்கு குறிப்பிட்ட அளவில் மாற்றிக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு மாற்றிக் கொள்ளும், அதாவது பரிமாறிக் கொள்ளும் தன்மையே அச் சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு ஆகும்.

 பத்து கிலோ அரிசிக்கு ஒரு சட்டை பரிமாற்றப்படுகிறது. ஒரு சட்டை நூறு முட்டைகளுக்கு பரிமாற்றப்படுகிறது.

 ஒரு கிலோ அரிசியின் விலை 50/- ரூபாய்.

 பத்து கிலோ அரிசியின் விலை 500/- ரூபாய்.

 500/- ரூபாய்க்கு உரிய அரிசி, 500/- ரூபாய்க்கு உரிய ஒரு சட்டைக்கு பரிமாற்றப்படுகிறது.

 ஒரு முட்டையின் விலை 5/- ரூபாய்.

 நூறு முட்டைகளின் விலை 500/- ரூபாய்.

 500/- ரூபாய் மதிப்புள்ள நூறு முட்டைகளுக்கு, 500 மதிப்புள்ள ஒரு சாட்டை, அல்லது 500/- மதிப்புள்ள பத்து கிலோ அரிசிக்கு பரிமாற்றப்படுகிறது.

 பயன்மதிப்பு என்ற வகையில் அரிசியும், முட்டையும் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது. சட்டை உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது. இந்த பயன்மதிப்புகளைக் கொண்டு பரிமாற்றம் என்கிற பரிவர்த்தனை நடைபெற்றிருக்க முடியாது. ஏன் என்றால் பயன்பாட்டை அளந்திட முடியாது.

 ஒரு சட்டை அதிக விலை உடையதாகவும் இருக்கிறது. சட்டையைவிட ஒரு கிலோ அரிசி விலை குறைகாவாகவும் இருக்கிறது, இண்டையும் விட ஒரு முட்டை மிகமிக விலை குறைவாக இருக்கிறது.

 முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞர்கள், ஒரு பொருளின், சந்தையில் வாங்குபவாகளுடைய தேவைக்கும் விற்பவர்கள் சந்தையில் கொடுக்கப் போகிற அளிப்புக்கும் (Demand and Supply) உள்ள விகிதத்தில் ஒரு சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு நிர்ணயிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

 தேவையைவிட அளிப்பு அதிகமாக இருக்கும் போது பொருளின் விலை குறைகிறது. அளிப்பைவிட தேவை அதிகமாக இருக்கும் போது விலை அதிகரிக்கிறது என்று முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும் போது, விலை எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

 அதே போல தங்கம், வெள்ளியை விட அதிக விலையாக இருக்கிறது. வெள்ளியைவிட இரும்பு ஏன் குறைந்த விலையாக இருக்கிறது என்பதற்கு இந்த தேவை-அளிப்பு என்கிற கோட்பாட்டினால் பதில் அளிக்க முடியவில்லை. முதலாளித்துவ அறிஞர்களின் கோட்பாடு பயன்தன்மையை மட்டும் கொண்டு அளவிடப்படுகிறது.

 பல சரக்குகளின் பயன்பாடு எவ்வளவு வேறுபாட்டாலும் அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுத் தன்மை இருந்தால் மட்டுமே, அதனைக் கொண்டு அளவிடப்பட முடியும். சரக்கின் அளவைக் கொண்டு ஒப்பிடுவதற்கு, இவற்றின் பயன்பாட்டைத் தவிர்த்து, ஏதோ ஒன்று, பொதுவாக உள்ளது என்பது தெரிகிறது.

 அந்தப் பொதுத் தன்மை மனித உழைப்பாகும். உழைப்பின் அளவைக் கொண்டே சரக்கு அளவிடப்படுகிறது. பத்து கிலோ அரிசி, ஒரு சட்டை, நூறு முட்டைகள் ஆகியவற்றை சமப்படுத்துவது அதில் உள்ள உழைப்பின் அளவவைக் கொண்டே ஆகும். ஒரு சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பின் நேரத்தைக் கொண்டே உழைப்பு அளவிடப்படுகிறது.

 ஒரு குறிப்பிட்ட சரக்கை உற்பத்தி செய்வதற்கு வெவ்வேறு உற்பத்தியாளர்கள், வெவ்வேறு அளவில் உழைப்பை செலுத்தியிருப்பர். உழைப்பாளர்களின் தொழில் திறத்தின் வேறுபாட்டாலும், பயன்படுத்துகிற தொழில்நுட்பம், இயந்திரம் ஆகியவற்றினாலும் உழைப்பினுடைய பலனின் அளவு வேறுபடும்.

 தொழிலாளர்களின் குறைந்த திறன் மற்றும் பின்தங்கிய இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் பொருட்கள், உற்பத்தி செய்யப்படுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதிக திறன் கொண்ட தொழிலாளர்களையும், நவீன இயந்திரங்களைக் கொண்ட உற்பத்தியாளர் குறைந்த நேரத்தில் உற்பத்தி செய்துவிடுவார். இந்த நிலையில் அதிக நேரம் உழைப்பை எடுத்துக் கொண்ட உற்பத்தியாளரின் பொருட்கள் அதிக விலை பெறுமா? நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய உற்பத்தியாளரின் பொருட்கள் விலை குறைவாக இருக்குமா? என்ற கேள்வி எழும்.

                 உழைப்பு நேரத்தை வெறும் மணி நேரத்தைக் கொண்டு முடிவு செய்யப்படுவதில்லை.

 சாராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டே உழைப்பு நேரம் அளவிடப்படுகிறது.

 ஒரு சட்டை செய்ய ஒர் உற்பத்தியாளர் இரண்டு மணி நேரமும், மற்றொருவர் நான்கு மணி நேரமும், வேறொருவர் ஆறு மணி நேரமும் எடுத்துக் கொள்கின்றனர் என்றால், இதன் சராசரி வேலை நேரத்தை, சமூக வழியில் அவசிய நேரமாக கணக்கிடப்படுகிறது.

 ஒரு சட்டையை செய்ய 2 மணி நேரம், 4 மணி நேரம், 6 மணி நேரம் என வேறுபடும் போது, சராசரி நேரத்தை 4 மணியாக கொள்ளப்படுகிறது. இந்த நான்கு மணி நேர உழைப்பே சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரமாகும்.

 பல்வேறு உற்பத்தியாளர்கள் சட்டை செய்ய 2 – 4 - 6 மணி நேரம் என எடுத்துக் கொண்டாலும், சாராசரி நேரமான 4 மணி நேரமே அளவாகக் கொள்ளப்படுகிறது. இரண்டாவது உற்பத்தியாளரின் சரக்கு, இந்த சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் விலை மாற்றம் அடைவதில்லை, ஆனால் 2 மணி நேரத்தில் உற்பத்தி செய்தவர் ஒரு மடங்கு கூடுதலான பணத்தை ஈட்டுகிறார். 6 மணி நேரம் எடுத்துக் கொண்டவரின் சரக்கு குறையான பணத்தையே பெறுகிறது.

 அதனால் தான் முதலாளிகள் தங்களது உற்பத்திச் சக்திகளை நவீனப்படுத்திக் கொண்டே செல்கின்றனர். புதிய இயந்திரத்தைப் பயன்படுத்துகிற உற்பத்தியாளர் மற்ற உற்பத்தியாளர்களைவிட கூடுதல் பணத்தை ஈட்டுகிறார். முதலாளிகளுக்கு லாபமும் வேண்டும், இது போன்ற கூடுதல் பணமும் வேண்டும்.

 இந்தக் கூடுதல் பணமே முதலாளியை இயக்குகிறது.

 4) உழைப்பின் இரட்டைத் தன்மை

    (The Two-fold Character of the Labour)

 சரக்கில் பயன்மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரட்டைத் தன்மை இருப்பது போலவே உழைப்பிலும் இரட்டைத் தன்மை இருக்கிறது. ஒன்று ஸ்தூலமான உழைப்பு (concrete labour) மற்றொன்று ஸ்தூலமற்ற உழைப்பு (abstract labour). உழைப்பு இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவது மார்க்சின் புதிய கண்டுபிடிப்பாகும்.

 ஒரு சரக்கு என்னவாக வடிவம் கொண்டுள்ளதோ, அந்த வடிவத்தை உருவாக்குவதற்காக செலுத்தப்பட்ட உழைப்பு ஸ்தூலமான உழைப்பு. அதாவது குறிப்பிட்ட நோக்கமுள்ள உழைப்பு ஸ்தூலமான உழைப்பு.

 சட்டை நெய்யப்படுகிறது அரிசி விளைவிக்கப்படுகிறது. சட்டை செய்தற்கு உழைத்த நெசவு என்ற உழைப்பும், அரிசி விளைவிப்பதற்கு உழைத்த உழவு என்ற உழைப்பு வெவ்வேறு வகைப்பட்ட உழைப்புகள் ஆகும். இருந்தாலும் இவை இரண்டும் பயன்பாடு என்கிற தன்மையைக் கொண்டுள்ளது. ஸ்தூல உழைப்பே பயன்மதிப்பை படைக்கிறது.

 செலவிடப்பட்ட உழைப்பின் வகையை, அதாவது நெசவு, உழைவு என்கிற வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் பொதுவான மனித உழைப்பு ஸ்தூலமற்ற உழைப்பாகக் கொள்ளப்படுகிறது. அனைத்து பயன்பாட்டு சரக்குகளிலும் இந்த உழைப்பு இறுகிப்போன ஸ்தூலமற்ற உழைப்பை மொத்தமாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

 நெசவும், உழவும் பண்பு வழியில் வேறுபட்ட உழைப்பு நடவடிக்கை என்றாலும், இந்த இரு சரக்கிலும் செலுத்தப்பட்ட நரம்பு, தசை, மூளை இவற்றின் திறனுடைய உழைப்பே ஸ்தூலமற்ற உழைப்பு. சரக்கு உற்பத்தி செய்யும் போது அதில் செலவிடப்பட்ட சக்தியே ஸ்தூலமற்ற உழைப்பு. அனைத்து சரக்கிலும் காணப்பாடும் பொதுவான உழைப்பே ஸ்தூலமற்ற உழைப்பு.  இந்த ஸ்தூலமற்ற உழைப்பே சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.

 உழைப்பு என்பது ஒரு புறம் பயன்மதிப்பை படைக்கும் ஸ்தூலமான உழைப்பாகவும், மறுபுறம் தொழிலாளியின் உழைப்பு என்ற வகையிலும், சமூகத்தின் பொதுவான ஸ்தூலமற்ற உழைப்பாகவும் இருக்கிறது.

 5) மாறும் மூலதனமும் மாறா மூலதனமும்

    (Constant Capital and Variable Capital)

 பணத்துக்கும் மூலதனத்துக்கும் உள்ள வேறுபாட்டை முன்பே பார்த்தோம். பணம் தொழிலாளியை சுரண்டுவதில்லை, மூலதனமே தொழிலாளியை சுரண்டுகிறது.

 மூலதனத்தை வைத்துள்ள முதலாளி, புதியதாக உற்பத்தி நிகழ்த்துவதற்கு தொழில்கூடம், இயந்திரம், கருவிகள், கச்சாப் பொருட்கள் ஆகிவற்றுக்கு செலவு செய்கிறார். இதற்கு செலவிடப்படும் மூலதனத்தின் பகுதிக்கு மாறா மூலதனம் (Constant Capital) என்று பெயர்

 ஏன் இதற்கு மாறா மூலதனம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றால், இந்த மூலதனத்தைக் கொண்டு வாங்கப்படும் பொருட்கள், உற்பத்தியாகும் விளைபொருளில் எந்தப் புதிய மதிப்பும் படைக்கவில்லை. இயந்திரம், கருவி போன்றவற்றின் தேய்மானங்கள் புதிய பொருளுக்கு இடம் மாறுகிறது. அதாவது இடம் பெயர்கிறது.

 மாறா மூலதனம் மதிப்பைப் படைப்பது இல்லை என்பதனால் இதனை பூஜ்யம் என்று மார்க்ஸ் கூறியுள்ளார். இந்தக் கூற்று, முதல் பார்வைக்கு விசித்திரமாகத் தெரியலாம். உண்மையில் லாபத்தைக் கணக்கிடும் போது கச்சாப் பொருளுக்கு செலவிடப்பட்டதை கழிக்கவே செய்கின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 தொழிற்சாலை, இயந்திரம், கச்சாப் பொருள் போன்றவற்றை வைத்துள்ள முதலாளி, இதனை இயக்குவதற்கு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறார். தொழிலாளி செய்யும் உழைப்புக்கு, கூலி கொடுக்கிறார். கூலியாகக் கொடுக்கும் மூலதனத்தின் பகுதிக்கு மாறும் மூலதனம் (Variable Capital) என்று பெயர்.

 இந்த மூலதனத்தை ஏன் மாறும் மூலதனம் என்று கூறப்படுகிறது என்றால் கூலியாக கொடுக்கப்பட்ட இந்த மூலதனமே, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் புதிய மதிப்பை ஏற்றுகிறது.

 உழைப்பு சக்திக்குச் செலவிடப்பட்ட மூலதனம், கூடுதல் மதிப்பையும் அதன் மூலம் கூடுதல் பணத்தையும் தோற்றுவிக்கிறது. அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாக, தொழிலாளி உழைக்கும் உபரி நேரமே, உபரி மதிப்பைப் படைக்கிறது. உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது.

 உபரி மதிப்பு என்கிற மார்க்சின் கோட்பாடே முதலாளித்துவ உற்பத்தியின் சுரண்டலை வெளிப்படுத்துகிறது.

 6) உபரி மதிப்பு

  (Surplus-Value)

 முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் லாபம் ஏற்படுவதற்கே ஆகும். இந்த லாபம் யாரை சுரண்டுவதின் மூலம் முதலாளிகளுக்குக் கிடைக்கிறது என்பதை மார்க்ஸ் உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

 சந்தையில் சரக்குகளை விற்று, லாபம் அடைவதற்கு முதலில் சரக்கை உற்பத்தி செய்ய வேண்டும்.

 முதலாளியிடம் மூலதனம் இருக்கிறது, அதனைக் கொண்டு உற்பத்திச் சாதனங்களை வாங்கிக் கொள்கிறார், இச் சமூகத்தில் உழைப்புக் கருவிகளிடம் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளியான பாட்டாளியின் உழைப்பையும் வாங்கிக் கொள்கிறார்.

 இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள தொழிலாளி, அடிமை தொழிலாளிகளைப் போன்றோ, பண்ணையடிமைகளைப் போன்றோ எஜமானரைச் சார்ந்து இருக்கவில்லை. இந்த வகையில் சுதந்திரமானவனாக இந்தத் தொழிலாளி இருக்கிறார்.

 இந்தத் தொழிலாளி தனிப்பட்ட முறையில் முதலாளியை சார்ந்து இருக்கவில்லை. இந்த தொழிலாளி, அடிமை போன்றோ பண்ணையடிமை போன்றோ சவுக்கால அடித்து வேலை வாங்கப்படுவதில்லை. உழைப்புக் கருவிகளை இழந்த, இந்த தொழிலாளி பிழைப்பதற்காக தனது பசியால் உந்தப்பட்டு முதலாளியை நாடுகிறார். பிழைப்பதற்காக தனது உழைப்புச் சக்தி என்கிற சரக்கை விற்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

 மதிப்பைப் படைக்கும் உழைப்புச் சக்தி என்கிற சரக்கை வாங்குவதற்கு முதலாளி இருக்கிறார்.

 ஆலைத் தொழிலாளியை ஏன் சுதந்திர தொழிலாளி, பாட்டாளி என்று கூறப்படுகிறது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ளாமல் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

 தனது உழைப்புச் சக்தியை விற்பதற்கு, எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லாதவர், நிலத்தில் இருந்தும் உழைப்புச் சாதனங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவர் என்ற பொருளில் இந்தப் பாட்டாளி, சுதந்திரம் பெற்றவர் என்று கூறப்படுகிறது.

 உழைப்புச் சக்தியின் பங்கும், உற்பத்திச் சாதனங்களின் பங்கும் உற்பத்தியில் வேறுபடுகிறது.

 உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு புதிய உற்பத்திப் பொருளில் இடம் பெயர்கிறது. அது எத்தகைய புதிய மதிப்பையும் படைக்கவில்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், உழைப்புச் சாதனங்களின் மதிப்பு, தொழிலாளிகளின் உழைப்பால், புதிய சரக்கில் மாற்றப்பட்டுத் தக்க வைக்கப்படுகிறது. ஆனால் உழைப்பு சக்தியே புதிய மதிப்பை படைக்கிறது.

 ஒர் இயந்திரம் ஐந்து ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபடுகிறது என்றால், ஒவ்வொரு ஆண்டும் தனது மதிப்பில் இருபதில் ஒரு பங்கை இழக்கிறது. இந்த இழந்த மதிப்பு புதிய உற்பத்திப் பொருளுக்கு இடம் மாற்றப்படுகிறது.

தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி, தனது உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்பதின் மூலம், உழைப்புச் சக்திக்காக முதலாளியால் கொடுக்கப்பட்ட பணத்தைவிட கூடுதல் பணம், முதலாளிக்கு உபரியாக கிடைக்கிறது. இந்தப் பணம் எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.

 சரக்கை உற்பத்தி செய்வதற்கு முதலாளி பல்வேறு வழிகளில் செலவு செய்கிறார். தொழிற்சாலை கட்டுகிறார், இயந்திரம், கருவிகள், கச்சாப் பொருட்கள் போன்றவற்றை வாங்குகிறார். இதனை பயன்படுத்தி சரக்கை உற்பத்தி செய்ய உழைப்பாளியை வேலைக்கு அமர்த்துகிறார்.

 இவற்றின் செலவினங்களை கணக்கிட்டு, முதலாளிக்கு லாபம் எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.

 இயந்திரம், கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம், எரிபொருள், பயன்படுத்திய கச்சாப் பொருளின் செலவுகள் ஆகியவற்றின் மொத்தம் 10,000/- ரூபாய் எனக் கொள்வோம்.

 உழைப்பாளிக்கு கூலியாகக் கொடுத்தது 1,500/- ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.

 உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை, முதலாளி சந்தையில் 16,000/- ரூபாய்க்கு விற்கிறார். இந்தக் கூடுதல் பணமான 4,500/- ரூபாய் எங்கிருந்து வந்தது.

 உற்பத்தியில் சம அளவுக்கு தான் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பொருட்களின் பயன்பாடு, தேய்மானம் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது, அதே போல தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட கூலியும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த கூடுதல் பணம் (லாபம்) எங்கிருந்து வந்தது. மார்க்சுக்கு முன்பான அரசியல் பொருளாதார அறிஞர்கள் மனித உழைப்பில் இருந்து வந்தது, என்று பொதுவாகக் கூறினர்.

 தொழிலாளியின் உழைப்புக்கு ஈடாக கூலி கொடுத்தப் பின்பு, எப்படி உழைப்பில் இருந்து லாபம் ஏற்படும்.

 இந்தப் புதிரை மார்க்ஸ்தான் விடுவித்தார், தொழிலாளி விற்றது உழைப்பை அல்ல, உழைப்பு சக்தியை (Labour-Power). உழைப்புச் சக்தி என்னும் சரக்கையே தொழிலாளி விற்கிறார். இது மார்க்சின் கண்டுபிடிப்பாகும்.

 மற்ற ஒவ்வொரு சரக்கின் மதிப்பைப் போலவே, உழைப்பு சக்தியின் மதிப்பும் அதை உற்பத்தி செய்யவதற்கு அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டே கணக்கிட வேண்டும்.  இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் போது எவ்வாறு தேய்மானம் அடைகிறதோ, அதே போல உழைப்பாளியின் உழைக்கும் சக்தி இழக்கப்படுகிறது. அந்த இழப்புக்கு ஈடாகத்தான் கூலி கொடுக்கப்படுகிறது. இழந்த உழைப்புச் சக்திக்கு மட்டுமே அதாவது தம்மைப் பராமரித்துக் கொள்வதற்கு மட்டுமே கூலி தரப்படுகிறது. முழு உழைப்புக்கும் கூலி தரப்படுவதில்லை. உழைப்புச் சக்தியை மீட்டுக் கொள்வதற்கு மட்டுமே கூலி கொடுக்கப்படுகிறது.

 இயந்திரம் தனது ஆயுளை நிறுத்துக் கொண்டால் எப்படி மாற்றிடு செய்ய வேண்டுமோ அதே போல உழைப்பவர் மறைந்து போனாலோ, வேலையைவிட்டு வெளியேறினாலோ, உழைப்பதற்கு வெறொருவனை அமர்த்த வேண்டும். அதற்கு உழைப்பாளியின் குடும்பம் பராமரிக்கப்பட வேண்டும். உழைப்பை செலுத்துவதற்கு தொழிலாளிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதற்கான குறைந்தபட்ச பணமே கூலியாகக் கொடுக்கப்படுகிறது.

 இவ்வாறுதான் உழைப்புச் சக்தி கணக்கிடப்படுகிறது.

 உழைக்கும் தொழிலாளி, தான் இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கும், தனது குடும்பத்தை பராமரிப்பதற்கும் தேவையாக உள்ள குறைந்த அளவு பணத்தையே கூலியாக கொடுக்கப்படுகிறது.

 இந்த குறைந்தபட்ச பணமே உழைப்புச் சக்திக்கு உரியதாகக் கணக்கிடப்படுகிறது.

            தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு தேவைப்படுகிற குறைந்த அளவு வாழ்வாதாரத்துக்குத் தேவையானதையே கூலியாகக் கொடுக்கப்படுகிறது. குடும்பத்தை பராமரித்தால்தான் எதிர் காலத்தில் உற்பத்திக்குத் தேவைப்படுகிற தொழிலாளிகள் தொடர்ந்து கிடைப்பர். அதனால் இந்த செலவையும் உழைப்புச் சக்திக்கான செலவாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 தொழிலாளி விற்றது உழைப்பை அல்ல, உழைப்புச் சக்தியை என்பதை நினைவில் கொண்டு உற்பத்திச் செலவை மீண்டும் பார்ப்போம்.

 இயந்திரம், கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம், எரிபொருள், பயன்படுத்திய கச்சாப் பொருளின் செலவுகள் ஆகியவற்றின் மொத்தம் 10,000/- ரூபாய்.

 உழைப்பாளிக்கு கூலியாகக் கொடுத்தது 1,500/- ரூபாய்.

 தமக்கு கூலியாக ஒரு நாளுக்கு கொடுக்கப்பட்ட 1,500/- ரூபாயை, அந்த கூலி தொழிலாளி உழைப்பைச் செலுத்தத் தொடங்கிய சில மணி நேரத்தில் ஈட்டுத் தந்துவிடுகிறார். இந்த கணக்கில் இரண்டு மணி நேரத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடாக உழைப்பைத் தந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதுவே அவசியமான உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது உழைப்பாளி இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கு உரிய நேரமே, அவசியமான உழைப்பு நேரம்.

 சம அளவுக்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றால் இத்துடன் தொழிலாளி உழைப்பில் இருந்து வெளியேறலாம். ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் கூலி அமைப்பு முறை நிலவுவதினால், தொழிலாளியின் முழு நாள் உழைப்பை வாங்குவதற்கு முதலாளி உரிமைப் பெற்றவராகிறார். சட்டமும் அதற்கு ஏற்றப்படியே அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரம் உழைத்த தொழிலாளியை இன்னும் ஆறு மணிநேரத்துக்கு முதலாளி உழைக்க வைக்கிறார். ஆக மொத்தம் எட்டு மணி நேரம்.

 இந்த எட்டு மணிநேரத்தில் ஆறு மணி நேரம் தொழிலாளி கூடுதலாக உழைக்கிறார்.

 இந்தக் கூடுதல் உழைக்கும் மணி நேரமே, உபரி உழைப்பு மணி நேரமாகும். இந்த உபரி உழைப்பே, உபரி மதிப்பைப் படைக்கிறது. இந்த உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது.

 நாள் முழுதான எட்டு மணி நேரத்துக்கு, தொழிலாளி உழைத்தற்கு கூலியாக 1,500/- ரூபாய் கொடுத்துவிட்டு, கொடுபடாத கூலியான 4,500/- ரூபாயை முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். அதாவது அபகரித்துக் கொள்கிறார்.

 இது போன்று தொடர்ந்து முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பரிவர்த்தனை நடைபெறுவது, தொழிலாளியைத் தொழிலாளியாக மறுவுற்பத்தி செய்யவும், முதலாளியை முதலாளியாக மறுவுற்பத்தி செய்யவும் இந்த கூலி அமைப்பு முறை காரணமாகிறது. கூலி அமைப்பு முறை இருக்கும்வரை இத்தகைய சுரண்டல் தவிர்க்க முடியாது. கூலி அமைப்பு முறையை ஒழித்தால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

 7) அறுதி உபரி மதிப்பும் ஒப்பீட்டு உபரி மதிப்பும்

   (Absolute Surplus Value and Relative Surplus Value)

 உபரி மதிப்பால் முதலாளிக்கு லாபம் எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பார்த்தோம்.

 ஒவ்வொரு முதலாளியும் தனக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். பிற முதலாளிகளைவிட அதிகம் லாபம் கிடைப்பதற்கு வேறுவழி இருக்கிறதா என்று பார்க்கிறான். இதன் அடிப்படையில்தான் முதலாளிகளிடையே போட்டி நிலவுகிறது.

 உபரி மதிப்பு விகிதத்தை அதிகரிக்க இரண்டு முறைகளை முதலாளி கையாள்கிறான். ஒன்று அறுதி உபரி மதிப்பு (Absolute Surplus Value) மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு (Relative Surplus Value).

 முதலில் அறுதி உபரி மதிப்பு தோன்றுவதைப் பார்ப்போம்.

 தொழிலாளியின், வேலை நேரத்தை அதிக்கப்படுத்துவதால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு.

 கூலியாகக் கொடுக்கப்பட்ட அவசியமான உழைப்பு நேரம் மாறாமல் இருக்கும் போது, உபரி உழைப்பு நேரத்தை அதிகரிப்பதினால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு.

 இங்கே அவசியமான உழைப்பு நேரம் மாறுவதில்லை, கூலிகொடுக்காத உபரி மணி நேரமே நீட்டிக்கப்படுகிறது.

 முதலில் எட்டு மணி நேரம் உழைப்பு வாங்கப்பட்டது, இதில் அவசியமான உழைப்பு மணி நேரம் இரண்டு, உபரி உழைப்பு மணி நேரம் ஆறு. 

 எட்டு மணி நேரத்துக்கு பதில் பத்து மணி நேரம் வேலை வாங்கும் போது அவசியமான உழைப்பு மணி நேரம் இரண்டு, உபரி உழைப்பு மணி நேரம் எட்டு.

 முன்பு ஆறு மணி நேரம் உபரியாகக் கிடைத்தது, இப்போது எட்டு மணி நேரம் உபரியாக கிடைக்கிறது.

 எட்டு மணி நேரம் வேலை வாங்குவதற்கு பதிலாக, பத்து மணி நேரம் வேலை வாங்கும் போது இரண்டு மணி நேர உழைப்பு, முதலாளிக்குக் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த உபரி, அறுதி உபரி மதிப்பு என்று கூறப்படுகிறது.

 அடுத்து ஒப்பீட்டு உபரி மதிப்பு.

 உழைப்பு நேரம் அப்படியே இருக்க உழைப்பைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக அதாவது உற்பத்தி திறனை அதிகரிப்பதின் மூலமாக கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். இதை வேறுவிதமாகக் கூறினால், உழைக்கும் நேரத்தில் உள்ள அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதால் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு.

பிற முதலாளிகளிடம் இல்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும், நவீன இயந்திரத்தை உற்பத்தியில் புகுத்துவதும் தொழிலாளியின் உழைப்புத் திறனைக் கூட்டுகிறது. இந்த நவீனத்தினால் தொழிலாளியின் அவசியமான உழைப்பு நேரம் 2 மணி நேரத்தில் இருந்து, 1 மணி 30 நிமிடமாகக் குறைக்கப்படுகிறது. அதாவது தொழிலாளி தனது உழைப்புச் சக்திக்கு உரிய மதிப்பை இங்கே 1 மணி 30 நிமிடத்திலேயே நேரத்திலேயே தொழிலாளி உருவாக்கிவிடுகிறார்.

சரக்கின் மதிப்பு, சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் கணக்கிடப்படுகிறது என்று முன்பே பார்த்தோம். இந்த நிலைமையில் புதிய இயந்திரத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில், பிற முதலாளிகளைவிட அதிகமான சரக்கை, நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகிற முதலாளி உற்பத்தி செய்கிறார்.

 உதாரணத்துக்கு கார் உற்பத்தியை எடுத்துக் கொள்வோம். பழைய இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் முதலாளிகள் ஒரு நாளில் 200 கார்களை உற்பத்தி செய்கின்றனர். அதி நவீன இயந்திரத்தை பயன்படுத்திய குறிப்பிட்ட முதலாளி ஒரு நாளில் 250 கார்களை உற்பத்தி செய்துவிடுகிறார். கூடுதலாக 50 கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 காரின் மதிப்பு சமூக சராசரி உழைப்பைக் கொண்டே நிர்ணயிக்கப்படுவதினால், இந்தக் குறிப்பிட்ட முதலாளியின் கார் குறைந்த செலவில், உற்பத்தி செய்யப்பட்டதினால் கூடுதாலாக பணம் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் பணமே ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.

 இந்தக் கூடுதல் பணம் இவருக்குக் கிடைப்பதினால், மற்ற முதலாளிகளினுடைய காரின் விலையைவிட, தனது காரின் விலையைக் குறைப்பதின் மூலமும், அதிக காரை விற்று அதிகப் பணத்தையும் பெறுகிறார். லாபத்துக்காக முதலாளி எதையும் செய்வார்.

 ஒரு முதலாளி புதிய இயந்திரத்தைப் உற்பத்தியில் புகுத்துகிறார் என்றால் படிப்படியாக பெரும்பான்மையான முதலாளிகள் இந்த புதிய இயந்திரத்தையோ, இதைவிட புத்தம்புதிய இயந்திரத்தையோ பயன்படுத்தவே செய்வர். அந்த நிலைமைகளில், இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு படிப்பாக குறைந்துவிடும். இறுதியில் முழுமையாக நின்று போகும்.

 இந்த இடத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். உழைப்பே மதிப்பை படைக்கிறது. பழைய இயந்திரமோ, புதிய இயந்திரமோ மதிப்பைப் படைக்கவில்லை. விளைபொருளில் இந்த மதிப்பு இடம் மாற்றப்படுகிறது அவ்வளவே. மார்க்ஸ் பூஜ்யம் என்று கூறியதை இங்கு நினைவுப் படுத்திக் கொள்வோம்.

 8) பொருளாதார நெருக்கடியும் சமூக மாற்றமும்

 முதலாளியின் உற்பத்தியின் நோக்கம் லாபம் ஈட்டுவதே என்பது நாம் அறிந்தது.

 லாபம் என்பது அதிகமான பணம் என்ற அளவைக் கொண்டு மட்டும் முடிவெடுக்கப்படுவதில்லை. பிற முதலாளிகளைவிட அதிகமாக பணம் ஈட்டுவதையும் சேர்த்துக் குறிக்கிறது. உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்கிற விருப்பம் தனிப்பட்ட முதலாளியின் விருப்பத்தைச் சார்ந்து ஏற்படுவதில்லை, இது மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்பாகும்.

 முதலாளித்துவத்தில் போட்டி என்பது முதலாளிகளின் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்து உருவாவதில்லை, மூலதனத்தின் உள்ளார்ந்த விதியின்படியே ஏற்படுகிறது.

 முதலாளித்துவ உற்பத்தி முறையில், உற்பத்தி செய்ய வேண்டிய சரக்கின் அளவு, சமூகத் தேவையை கணக்கில் கொண்டு திட்டமிடப்படவில்லை. அதிகமாகத் தேவைப்படும் சரக்கையே முதலாளிகள் உற்பத்தி செய்ய முனைகின்றனர்.

 போட்டியின் காரணமாக அதி நவீன இயந்திரங்கள் தொடர்ந்து புகுத்தப்படுகிறது.

 மற்றைய உற்பத்தி முறையைவிட முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் பிரமாண்டமான உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிதீவிர வளர்ச்சியே முதலாளித்துவம் அழிவுக்குக் காரணமாகவும் இருக்கிறது.

 முதலாளித்துவத்தின் அழிவு மிகை உற்பத்தியில் (overproduction) தான் அடங்கி உள்ளது.

 முதலாளித்துவ உற்பத்தியில் லாபத்தை அடைவதற்கு போட்டி ஏற்படுகிறது என்று பார்த்தோம். ஒவ்வொரு முதலாளியும், அதிகம் லாபத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு சரக்கை உற்பத்தி செய்துவிடுகிறார்.

 இந்தப் போட்டியினால் உற்பத்தியில் அராஜகம் ஏற்படுகிறது. அராஜகம் என்றால் ஒழுங்கின்மை. சந்தையில் தேவை எவ்வளவு இருக்கிறதோ அதைவிட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகரித்த சரக்குக்காக புதிய சந்தை தேடப்படுகிறது. சந்தை கிடைக்காத போது, சரக்கு தேங்கி விடுகிறது. இதுவே மிகை உற்பத்தி என்று கூறப்படுகிறது.

 மார்க்ஸ் தமது காலத்தில் வணிக நெருக்கடியை தான் நேரில் பார்த்தார். இது ஒரு துறையில் ஏற்படுகிற நெருக்கடி. அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

 பொருளாதார நெருக்கடி என்பது ஒரு சுழற்சியாகும். ஏற்றம், மந்தம், வீழ்ச்சி, மீட்சி ஆகியவை முதலாளித்துவ உற்பத்தியில் திரும்பத்திரும்ப நிகழ்கிறது. மிகை உற்பத்தியால் தொழிற்சாலை முடக்கப்படுகிறது, தொழிலாளின் வேலை நிறுத்தப்படுகிறது.

 பொருளாதார நெருக்கடி உழைப்பாளர்களையே அதிகம் பாதிக்கிறது.

 பொது நெருக்கடி என்பது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1915ஆம் ஆண்டில், முதன் முறையாக ஏற்பட்டது. வணிக நெருக்கடி என்பது பொரளாதார நெருக்கடியை மட்டுமே குறிக்கும். பொதுநெருக்கடி என்பது பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, சித்தாந்த நெருக்கடி, பண்பாட்டு நெருக்கடி போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

 இந்த நெருக்கடியில் தான் ரஷ்யப் புரட்சி வெடித்தது.

 இரண்டாவது பொது நெருக்கடி 1930தில் தொடங்கியது. இந்த இரண்டாவது நெருக்கடியின் விளைவாக சீனாவில் புரட்சி வெடித்தது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச மாற்றம் ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

 முதலாளித்துவத்தில், வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகள், பழைய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் மோதுகின்றன.

         இதனையே மூலதனம் என்கிற நூலில், முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும், உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடுகிறது. ஆகவே முதலாளித்துவத்தின் மேலோடு உடைத்தெறியப்படுகிறது முதலாளித்துவ தனியுடைமைக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது. உடைமைப் பறித்தோரின் உடைமை பறிக்கப்படுகிறது என்று மார்க்ஸ் கூறியுள்ளார்.

பொது நெருக்கடியே புரட்சிக்கான, புறநிலை. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அகநிலையான உழைக்கும் மக்களும், இவர்களைத் தலைமைத் தாங்கும் கட்சி என்கிற முன்னணிப் படையும், புரட்சிகர நிலைமையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

 அவ்வாறு புரிந்து கொள்ளும் போது, புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் தூக்கி எறியப்பட்டு, சோஷலிச சமூகம் அமைக்கப்படுகிறது.

 சுருக்கமான வகுப்பு சுருக்கத்தையே தருகிறது. சுருக்கத்தை புரிந்து கொண்டால் முழுமையை, புரிந்து கொள்வதற்கு உதவிடும். மூலதனம் நூலைப் படித்து முழுமை பெறுவோம்.

 மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வோம் மார்க்சிய வழியில் சமூகத்தை மாற்றுவோம் என்று மீண்டும் கூறி விடைபெறுகிறேன்.

                          (மார்க்சியம் - சிறிய அறிமுகம் / அனைத்து வகுப்புகளும்)

No comments:

Post a Comment