Sunday 10 October 2021

3) வரலாற்றியல் பொருள்முதல்வாதம்

 

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 38 வது வார வகுப்பு – 09-10-2021) 

மார்க்சியத் தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தத்துவம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயற்கையைப் பற்றி ஆராய்கிறது, மற்றொன்று சமூகம், வரலாறு ஆகியவற்றை ஆராய்கிறது. 

இயற்கையைப் பற்றிய ஆராயும் பகுதிக்கு இயற்கையியல் (இயக்கவியல்) பொருள்முதல்வாதம் என்றும் சமூகம் பற்றி ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இன்று, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஐந்து தலைப்புகளில் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். 

1) வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஒரு விஞ்ஞானம்

2) பொருள் உற்பத்தியே சமூக வாழ்வின் அடிப்படை

3) அடித்தளமும் மேற்கட்டமைப்பும்

4) வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும்

5) சமூக மாற்றம் 

1) வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஒரு விஞ்ஞானம் 

சமூகம் பற்றி ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று பார்த்தோம். அரசியல், நீதித்துறை, பொருளாதாரம், வரலாறு ஆகியவையும் சமூகம் பற்றியே ஆராய்கிறது. ஆனால் இந்தத் துறைகள் சமூகத்தில் உள்ள எதாவது ஒரு துறையை மட்டும் தனித்து ஆராய்கிறது. அதாவது ஒரு பிரிவை மட்டும் ஆராய்கிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதமானது, சமூக முழுவதையும் ஆராய்கிறது. சமூகத்தில் காணப்படும் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்கிறது. 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், வரலாற்றியல் பொருள்முதல்வாதமானது சமூக வளர்ச்சியின் மிகப் பொதுவான அடிப்படை விதிகளை ஆராயும் சமூக விஞ்ஞானமாகும். 

அதனால்தான் வரலாற்றியல் பொருள்முதல்வாதமானது அனைத்தையும்விட முக்கியமானதாக கருதப்படுகிறது. அனைத்தும், வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில்தான் அணுகப்படுகிறது, அதனால்தான் இதனை அறிந்து கொள்ள வேண்டியது கம்யூனிஸ்டுகளுக்கு மிகவும் அவசியமாகிறது. 

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதின் குறைபாடே அனைத்திலும் வெளிப்படுகிறது. நம் நாட்டு இடதுசாரிகளின் பின்னடைவுக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள குறைபாடே முதன்மையானதாக இருக்கிறது. பல காரணங்கள் இருந்தாலும் இது  அனைத்தையும்விட முதன்மையானது. 

இயற்கையும் சமூகமும் 

இயற்கையில் இருந்து தோன்றியதே சமூகம். இயற்கையில் இருந்துதான் மனிதனும் தோன்றினான். இதனால் இயற்கைக்கும் சமூகத்துக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது என்று பொருள் கொள்ளக்கூடாது. 

இயற்கை நிலைமைகளே சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற காரணமாக கருதிடக்கூடாது. சமூகத்துக்கு என்று தனிப்பட்ட விதிகள் இருக்கின்றன. அதனை இயற்கையோடும் இயற்கை விதிகளோடும் குழப்பிக் கொள்ளக்கூடாது. 

தன்னுணர்வற்ற சக்திகள் மட்டுமே இயற்கையை இயக்குகின்றன. ஆனால் சமூகத்தை அவ்வாறு கூறிட முடியாது. சமூகத்தில் உணர்வுகளைக் கொண்ட மனிதன்  செயற்படுகிறான். குறிக்கோள் இல்லாமல் மனிதன் செயற்படுவதில்லை. 

மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவதில்லை. மனிதர்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள். 

மனிதர்கள் மீது அரசியல், தத்துவம், சித்தாந்தம் போன்ற பல துறைகள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இறுதியில் பொருளாதார காரணங்களே அடிப்படையாக இருக்கிறது. 

சமூகத்தின் புறநிலை விதி மனிதர்களைக் கொண்டே நிகழ்கிறது. 

புறநிலை விதியை அறிந்து கொள்ளுவதே அவசியத்தை அறிந்து கொள்வதாகும். அவசியத்தை அறிந்து செயல்படும்போது புறநிலைமை அவனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்காது. 

புறநிலை விதி என்று கூறுவது விதிவாதமாகாது, விதிவாதமானது எதார்த்தத்தை அறிந்து கொள்ள முடியாது என்று கூறுகிறது. புறநிலை விதி என்பது எதார்த்தத்தை  அறிந்து கொண்டதின் விளைவே ஆகும். 

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளே சமூகத்தை இட்டுச் செல்கிறது. 

சமூக வளர்ச்சியை அதன் விதிகளைக் கொண்டு விளக்குவதால் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஒரு விஞ்ஞானமாக திகழ்கிறது. 

2) பொருள் உற்பத்தியே சமூக வாழ்வின் அடிப்படை 

மனிதர்களின் பொருளாதார நலன்களின் அடிப்படையில் ஏற்படுகிற, உழைப்பு நடவடிக்கையே சமூக வாழ்வின் அடிப்படையாகும். இதனையே உற்பத்தி முறை என்று கூறப்படுகிறது.  உழைப்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் இணைந்ததே உற்பத்தி முறை. இந்த உற்பத்தி முறை மனிதனது மனங்களைச் சாராது புறத்தே இருக்கிறது. அதனால் தான் இந்த விதியை புறநிலை விதி என்று கூறப்படுகிறது. 

உற்பத்தி முறை எதுவாக இருந்தாலும், அதாவது அடிமை உற்பத்தி முறையாகவோ, நிலப்பிரத்துவ உற்பத்தி முறையகவோ, முதலாளித்துவ உற்பத்தி முறையாகவோ, சோஷலிச உற்பத்திர முறையாகவோ எதுவாக இருந்தாலும், அது இரண்டு கூறுகளை கொண்டதாக இருக்கிறது. உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்பதே அந்த இருண்டு. இந்த இரண்டைப் பற்றி நான்றாகத் புரிந்து கொள்ள வேண்டும். 

உற்பத்திச் சக்திகள் (Productive Forces) இல்லாமல் உற்பத்தியை நிகழ்த்த முடியாது. உற்பத்திச் சக்திகள் என்று மூன்றைக் குறிப்பிடுகிறோம். 1) உழைப்பு 2) உழைப்பின் குறிப்பொருள் 3) உழைப்புக் கருவிகள். இந்த மூன்றும் இல்லாமல் உற்பத்தியை நிகழ்த்த முடியாது. எப்படி உழைப்புக் கருவிகள் மட்டும் உழைப்பை நிகழ்த்த முடியாதோ அதே போல உழைப்பை மட்டும் வைத்துக் கொண்டு உற்பத்தியை நிகழ்த்த முடியாது. 

அனைத்து உழைப்பாளர்களிடமும் உழைப்பு தயாராகத்தான் இருக்கிறது. அதை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்ந்திட முடியாது. உழைப்புச் சக்திகள் அனைத்தும் இணையும் போதே உற்பத்தி நிகழ்கிறது. 

உழைப்பு (Labour) 

மனிதர்கள் தமக்குத் தேவையான வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்திச் செய்வதே உழைப்பாகும். உழைப்பாளர்களின் பங்கில்லாமல் உற்பத்தியை நிகழ்த்த முடியாது. அதனால்தான் லெனின் “முதலாவது உற்பத்திச் சக்தி தொழிலாளியே” என்று கூறியுள்ளார். லெனின் இவ்வாறு கூறியவுடன் உழைப்புச் சக்திக்கு உழைப்பாளர்கள் மட்டுமே முக்கியமானவர்களாக கருதிடக்கூடாது. 

இதே லெனின் மார்க்சின் கடிதத்தை சுட்டிக்காட்டி கூறியதைப் பார்ப்போம். அந்தக் கடிததத்தில் “உழைப்பின் ஒழுங்கமைப்பை உற்பத்திச் சாதனங்களே நிர்ணயிக்கின்றன என்பதே நமது கோட்பாடு” என்று கூறப்பட்டுள்ளது. உற்பத்திச் சாதனங்களோடு இணைந்தே உழைப்பை புரிந்து கொள்ள வேண்டும். உழைப்பை உற்பத்திச் சாதனங்களிடம் இருந்து பிரிக்கக்கூடாது. 

உழைப்பின் குறிப்பொருள் (Objects lf Labour) 

உழைப்பாளி எந்த பொருளின் மீது உழைப்பை செலுத்துகிறானோ அது உழைப்பின் குறிப்பொருள். அதாவது கச்சாப் பொருள். கச்சாப் பொருட்கள் இருவகைப்படும். இயற்கையாகவே கிடைக்கின்ற மரம், பருத்தி போன்றவை ஒரு வகை, மற்றொரு வகையானது ஏற்கெனவே உழைப்பால் உருவாக்கிய இரும்பு, பருத்திநூல் போன்றவை. கட்டில், மேசை செய்வதற்கு இரும்பு கச்சாப் பொருளாகவும், துணி நெய்வதற்கு பருத்திநூல் கச்சா பொருளாகவும் இருக்கிறது 

இவைகள் எளிமையான உழைப்பின் குறிப்பொருட்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் உழைப்பின் குறிப்பொருட்கள் விரிவடைந்துள்ளது. 

உழைப்புக் கருவிகள் (Instruments of Labour) 

உழைப்பாளி எதைக் கொண்டு உழைக்கிறானோ அதுவே உழைப்புக் கருவிகள். கச்சாப் பொருளைக் கொண்டு விளைவிப்பதற்கு உழைப்பாளி பயன்படுத்துகிற அனைத்தும் கருவிகளாகும். 

தொடக்க காலத்தில் கற்கள், கற்கோடாரி, வில் அம்பு போன்றவை கருவிகளாக செயல்பட்டன. நவீன காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்து வாகனங்கள், தொழில்நுட்பம், தொழில்கூடம், கிடங்கு, ரயில்வே, மின்சாரம் போன்ற சாதனங்களும் உழைப்புக் கருவிகளாகும். 

உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் ஆகிய இரண்டையும் சேர்த்து உற்பத்திச் சாதனங்கள் என்று அழைக்கப்படுகிறது. 

உற்பத்திச் சாதனங்களை உழைப்பாளர்கள் பயன்படுத்தியே உற்பத்தியை நிகழ்த்துகின்றனர். 

உற்பத்திச் சாதனங்களுடன் உழைக்கும் மக்களையும் இணைத்து உற்பத்திச் சக்திகள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கச்சாப்பொருள் (உழைப்பின் குறிப்பொருள்), உழைப்புக் கருவிகள், மனித உழைப்பு ஆகியவையே உற்பத்திச் சக்திகள். 

உற்பத்திச் சக்திகளின் தரத்தை, உற்பத்திக் கருவிகளைக் கொண்டே அளவிடப்படுகிறது. அந்தக் கருவிகளைப் பயன்படுத்துகிற உழைப்பாளியின் தரம் அந்த கருவியினை ஒட்டி மேம்பாடு அடைகிறது. 

உற்பத்தி உறவுகள் (Relation of Production) 

உற்பத்தியில் உழைப்பாளர்கள் ஈடுபடும்போது சில உறவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக  பொருளாதார உறவுகளையே உற்பத்தி உறவுகள் என்று கூறப்படுகிறது. 

உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு உற்பத்தி உறவுகள் அவசியமாகிறது. அதனால்தான் உற்பத்தி சக்திகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப உற்பத்தி உறவுகள் உருவாகிறது. 

உற்பத்திச் சாதனங்கள் யாருக்குச் சொந்தமாக இருக்கிறதோ அதைப் பொருத்தே உற்பத்தி உறவுகள் அமைகிறது. 

இந்த உற்பத்தி உறவுகள் மனிதனை சாராது புறநிலையாக இருக்கின்றன. இந்த புறநிலையின் அடிப்படையில் தான் உற்பத்தி உறவுகள் ஏற்படுகிறது. உற்பத்திச் சக்திகளின் குறிப்பிட்ட தரத்திற்கு ஏற்ற உற்பத்தி உறவுகள் தேவைப்படுகின்றன. 

உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளையும் சேர்த்தே உற்பத்தி முறை என்று அழைக்கப்படுகிறது. ஆதி கம்யூனிச சமூகம் ஒரு வகையான உற்பத்தி முறையாகும். உலகம் இதுவரை பல்வேறு உற்பத்தி முறையை சந்தித்துள்ளது. ஆதி கம்யூனிச உற்பத்தி முறை, அடிமை உற்பத்தி முறை, நிலப்புத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, சோஷலிச உற்பத்தி முறை. 

உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் தொடர்ந்து வளர்ச்சி அடைகிறது. ஆனால் இரண்டின் வளர்ச்சியில் அளவு வேறுபாடு காணப்படுகிறது.  உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைவிட மிக விரைவாக வளர்கிறது. 

உற்பத்திச் சக்திகளுக்கு பொருத்தமான உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது சமூக வளர்ச்சிக்கு அவசியமானதாகும். குறிப்பிட்ட உற்பத்தி முறையின் தொடக்கத்தில், உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்கள் வெளிப்படுவதில்லை. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி அதிகரிக்கும் போது உற்பத்தி உறவுகள் பின் தங்கிவிடுகிறது. 

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண்கள் அப்போது முற்றிய நிலையில் காணப்படுகிறது. புதிய வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளுக்கு, பழைய உற்பத்தி உறவுகள் பொருந்தாமல் போகிறது. அதாவது புதிய உற்பத்திச் சக்திகளுக்கு ஏற்ப, மாற்றம் பெறாமல் உற்பத்தி உறவுகள் பின்தங்கி பழையதாகிவிடுகிறது. 

குறிப்பிட்ட உற்பத்தி முறையில் ஏற்படுகின்ற இந்த முரண்களே அடுத்த உற்பத்தி முறை ஏற்படுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. அதாவது இந்த முரண்களே சமூக மாற்றத்தை கோருகிறது. 

. முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண்கள், சோஷலிச உற்பத்தி முறையை கோருகிறது. இதற்கு பழைய உற்பத்தி உறவுகள் தடையாகிப் போகும் போது அதை எதிர்த்து புரட்சி வெடிக்கிறது. புரட்சியின் விளைவாக புதிய உற்பத்தி முறை தோன்றுகிறது. அந்த உற்பத்தி முறை வளர்ச்சி அடைந்த உற்பத்திச் சக்திகளுக்கு பொருத்தமான புதிய உற்பத்தி உறவுகளை அமைத்துக் கொள்கிறது. 

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான உறவு இயக்கவியல் அடிப்படையில் நிகழ்கிறது. குறிப்பிட்ட உற்பத்தி முறையின் தொடக்கத்தில் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண்கள் சிறியதாக இருக்கிறது. இரண்டுக்குமான ஐக்கியம் பலப்பட்டுக் காணப்படுகிறது. போராட்டம் பலவீனமாக இருக்கிறது. முரண்களில் ஏற்படுகிற அளவு மாற்றம், ஒரு குறிப்பிட்ட அளவு எட்டியவுடன் புரட்சியின் மூலம் பண்பு மாற்றம் ஏற்படுகிறது. பழைய உற்பத்தி முறை, நிலை மறுக்கப்பட்டு புதிய உற்பத்தி முறை நிலைபெறுகிறது. அனைத்து சமூக மாற்றங்களும் இவ்வாறே நிகழ்கிறது. 

ஆதி கம்யூனிச சமூகத்தில் ஏற்பட்ட கருவிகளின் வளர்ச்சி, அந்த சமூகத்துக்கு பொருந்தாமல் அடிமை சமூகத்துக்கு மாறியது. அடிமை சமூகத்தில் ஏற்பட்ட கருவிகளின் வளர்ச்சி, அந்த சமூகத்துக்கு பொருந்தாமல் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு மாறியது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட கருவிகளின் வளர்ச்சி, அந்த சமூகத்துக்கு பொருந்தாமல் முதலாளித்துவ சமூகத்துக்கு மாறியது. முதலாளித்துவ சமூகத்தில் ஏற்பட்ட கருவிகளின் வளர்ச்சி, அந்த சமூகத்துக்கு பொருந்தாமல் சோஷலிச சமூகத்துக்கு மாறியது. 

3) அடித்தளமும் மேற்கட்டமைப்பும் (Base and Superstructure)

இயக்கத்தின் வடிவங்களாக இயந்திரிவியல், இயற்பியல், வேதியல், உயிரியல், சமூகவியல் என்று எங்கெல்ஸ் பிரித்துக் கூறியுள்ளார். அனைத்தையும் பொதுமைப்படுத்திப் பார்ப்பதோடு அதனை தனித்தனியாகவும் அறிந்திட வேண்டும். தனித்தனியாகப் பிரிக்காமல் போனால், அதன் குறிப்பான தன்மையை அறிந்திட முடியாது. இங்கே நாம் சமூகவியலை பற்றிப் பார்க்கப் போகிறோம். 

இயற்கையில் இருந்து சமூகம் பிரிந்து சென்ற பொருளாயத உலகின் ஒரு பகுதியே ஆகும். இந்த சமூகம் வரலாற்று வழியில் வளர்ச்சி பெறுகிற மனித வாழ்க்கையின் வடிவமாகும். சமூகத்துக்கு என்று ஒரு வளர்ச்சி விதி இருக்கிறது. அதனை மார்க்ஸ் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் விளக்கியுள்ளார். 

மார்க்சுக்கு முன்புவரை, சமூக உணர்வுநிலையே சமூக வாழ்வுநிலையை நிர்ணிக்கிறது என்று கருதிவந்தனர். சமூகம், ஒரு சிறந்த தனிநபரால் அல்லது குழுக்களால் உருவாகுவதாக இந்தக் கோட்பாடு கருதியது. அதாவது ஒரு சிறந்த அரசர், ராணுவத் தளபதி, தத்துவ அறிஞர் போன்றோர்களின் விருப்பப்படியே சமூகம் உருவாகுவதாக மார்க்சுக்கு முன்புவரை கருதிவந்தனர். 

மார்க்ஸ் இதற்கு மாறாக, சமூக வாழ்நிலையே சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்று சமூகத்தினுடைய வளர்ச்சியின் விதியைக் கண்டு பிடித்தார். 

வேறுவிதமாகக் கூற வேண்டுமானால், வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை. இதுவே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையாகும். 

சமூக வாழ்நிலைகளே அடித்தளம் என்றும் சமூக உணர்வுநிலைகளின் வடிவங்களே மேற்கட்டமைப்பு என்றும் கூறப்படுகிறது. 

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை செலுத்துகிறது என்பதே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் பொருள் ஆகும். 

மனிதன் வாழ வேண்டுமானால், உணவு, உறைவிடம், உடை ஆகிய அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வாறு உழைத்திடும் போது ஏற்படுகிற பொருளாதார உறவுகளே சமூக வாழ்நிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி உறவுகள் உழைக்கும் மனிதனைச் சாராது புறநிலையில் இருக்கிறது. அந்த உறவுகளின் போது ஏற்படுகிற பொருளாயத நலன்களே சிந்தனைகளாக கருத்துகளாக வெளிப்படுகிறது. 

மக்களின் சமூக வாழ்நிலையே அவர்களின் சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. 

எந்த ஒரு கருத்தையும், சிந்தனையையும், தத்துவத்தையும் எடுத்துக் கொண்டாலும் அவற்றின் வேர்கள் சமூக வாழ்நிலையின் பொருளாயத சூழ்நிலைகளில்தான் காணப்படுகிறது. 

சமூக வளர்ச்சியின் அடிப்படைகளை, மக்களின் உணர்வுநிலையில் தேடிக் கொண்டிருக்காமல், சமூக வாழ்நிலையில் தேட வேண்டும் என்று அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு கூறுகிறது. 

உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல், பண்பாடு, மதம், தத்துவம், கலை போன்ற மேற்கட்டமைப்பு தோன்றுகிறது இதுவே மார்க்ஸ் கூறுகிற அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடாகும். 

மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது எத்தகையத் தாக்கத்தை செலுத்தினாலும் இறுதியில் அடித்தளமே நிர்ணயகரமான பாத்திரம் வகிப்பதாக எங்கெல்ஸ் தமது இறுதிகாலங்களில் விளக்கி அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டை உறுதிப்படுத்தினார். 

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளன. அடித்தளத்தின் வளர்ச்சி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் உருவாகிறது, மேற்கட்டமைப்பு இந்த அடித்தளத்தின் வளர்ச்சியை ஒட்டி ஏற்படுகிறது. 

சிந்தனைகளே சமூக வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பது கருத்துமுதல்வாதம். அதாவது கருத்தே சமூகத்தைப் படைக்கிறது என்று கூறுவது கருத்துமுதல்வாதப் பார்வையாகும். 

சமூக வாழ்நிலைகளே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பது பொருள்முதல்வாதம். அதாவது பொருளாயத நலன்களே சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது என்று கூறுவது பொருளமுதல்வாதப் பார்வையாகும். 

பாட்டாளிகளின் தத்துவம் வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும். 

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது என்று மார்க்ஸ் கூறியதை நினைவில் கொள்வோம். 

இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவமானது பாட்டாளிகளின் வாழ்க்கையில் இருந்தும் அவர்களது நலன்களில் இருந்தும் தொகுத்து, ஒர் ஒருங்கிணைந்த பார்வையாக வகுக்கப்பட்டுள்ளது. அதனால் பாட்டாளி வர்க்கம் தனது வழிகாட்டியாக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. 

இயக்கவியல் பொருள்முதல்வாதமானது பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகிறது. சுரண்டல் வர்க்கமான முதலாளி வர்க்கத்தின் நலன்களை கருத்துமுதல்வாதம் வெளிப்படுத்துகிறது. 

சமூக உணர்வின் வடிவங்கள் தான், மேற்கட்டமைப்புகளாகும். அரசு, மதம், தத்துவம், கலை, அறநெறி  போன்ற, மேற்கட்டமைப்புகள் அடித்தளத்திற்கு ஏற்பவே உருவாகிறது. இங்கே நாம் இதனை விளக்கமாகப் பார்க்கப் போவதில்லை, அடுத்த வகுப்பில் சற்று விரிவாகப் பார்ப்போம். 

4) வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் 

சமூகம் வர்க்கமாக இருப்பதை மார்க்சுக்கு முன்பே பல அறிஞரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான். ஆனால் அவர்கள் சமூகம் தோன்றியது முதலே வர்க்கம் இருப்பதாகக் கருதினர். அதனால் சமூகத்தில் உள்ள வர்க்க வேறுபாட்டை ஒழிக்க முடியாது என்று முடிவெடுத்தனர். 

சமூகத்தின் இடையில் எவ்வாறு வர்க்கம் தோன்றியது அது எப்போது மறையும் என்பதை மார்க்ஸ் ஆராய்ந்து கூறியுள்ளார். 

வர்க்கம் இல்லாத சமூகம் ஒன்று இருந்தது. அது ஆதி கம்யூனிச சமூகமாகும், அதாவது மனிதகுலம் பழங்குடிகளாக வாழ்ந்த போது அந்த சமூகத்தில் வர்க்கம் இருக்கவில்லை. 

பழங்குடி சமூகத்தில் அனைத்து மக்களும் சேர்ந்து உழைத்தனர், கிடைத்ததை சமமாகவே பங்கிட்டனர். அவர்களிடையே வேற்றுமை ஏதும் காணப்படவில்லை. 

காலப் போக்கில், பழங்குடியினர் பயன்படுத்திய கருவிகள் சற்று மேம்பாடு அடைந்தது. ஆடு மாடுகளை வளர்ப்பதில் தனி பயிற்சி பெற்றவர்கள் தோன்றினர். இதுவே சமூகத்தின் முதல் உழைப்புப் பிரிவினை, பயிர் செய்பவர்கள் என்று தனியாகப் பிரிந்தது இரண்டாவது உழைப்புப் பிரினையாகும். இதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

உழைப்புப் பிரிவினைகளாலும், உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிகளாலும் உற்பத்திப் பொருட்கள் முன்பைவிட சற்று அதிகரித்தது. இந்த உபரி உற்பத்திகளை பழங்குடி தலைவர்களும், அன்றைய சமூகத்தில் செயல்பட்ட சில பொறுப்பாளர்களும், சடங்குகளை செய்தவர்களும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். இந்த உபரியை அபகரிப்பதின் மூலம் சிலர் சொத்துக்களை சேர்த்தனர். 

உடல் உழைப்பும் மூளை உழைப்பும் இரண்டாகப் பிரிந்தது. மூளை உழைப்பு உயர்ந்ததாகவும் உடல் உழைப்பு தாழ்ந்ததாகவும் கருதும் போக்கு படிப்படியாக உருவானது. சொத்துடைமையின் தோற்றத்தோடு, கூட்டுழைப்பு முடிவுக்கு வந்தது. இதுமுதல் சொத்துடைமை உடையவர், சொத்துடைமை இல்லாதவர்; உழைப்பை பெறுபவர் உழைப்பை செலுத்துபவர் என்கிற பிரிவின் மூலம் வர்க்கங்கள் தோன்றியது. 

      உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே ஏற்பட்ட சமரசப்படுத்த முடியா முரண்பாடுகள் வர்க்கத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் தோற்றுவித்தது. வர்க்கங்கள் தோன்றியது முதல், மனித சமூக வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே காணப்படுகிறது. 

சமூகத்தில் காணப்படும் சமரசப்படுத்த முடியாத முரண்களை கட்டுப்படுத்துவதற்கே அரசு, காவல் துறை, நீதி மன்றம், அறநெறி, தத்துவம் போன்றவைகள் தோன்றின. இவைகள் அனைத்தும் வர்க்க சார்பானதே ஆகும். ஆளும் வர்க்கத்துக்கு உரிய அறநெறி என்பது உழைப்பாளர்களை சுரண்டுவதற்கு உருவானது. உழைப்பாளர்களின் அறநெறி என்பது தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும், சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்து போராடுவதற்கு உருவானது. 

       நவின உலகின் வர்க்கப் போராட்டமானது, பொருளாதாரப் போராட்டத்தில் தொடங்கி, அது அரசியல் போராட்டமாகவும், சித்தாந்தப் போராட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. இதன் அடிப்படையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது வர்க்க அரசியலை அமைத்துக் கொண்டது. 

சமரசப்படுத்த முடியாத பொருளாயத அடிப்படைகளே வர்க்கத் தோற்றத்துக்குக் காரணமாகும் என்பதை அறிந்தோம். எந்தத் தனி நபர்களின் விருப்பதின் அடிப்படையில் வர்க்கப் பிரிவு ஏற்படவில்லை. அதனால் வர்க்கங்கள் அழிய வேண்டுமானால் அதற்கான பொருளாயத நிலைமைகள் ஏற்பட வேண்டும். 

இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் வர்க்கப் பிரிவும், வர்க்கப் போராட்டமும் உச்சத்தில் இருக்கிறது. இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான பொருளாயத நிலைமைகள் வளர்ச்சி அடைய வேண்டும்.  இந்த வளர்ச்சியை சமூக மாற்றம் என்கிற அடுத்தப் பிரிவில் பார்க்கலாம். 

5) சமூக மாற்றம் 

சமூகத்தில் புறநிலைமை-அகநிலைமை என்ற இரண்டு செயல்படுகின்றன. சமூக பொருளாதாரத் தன்மைகள் புறநிலைமைகள் அகும், அதற்கு ஏற்ப சமூகத்தில் காணப்படும் சிந்தனைகள், கருத்துக்கள், தத்துவங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அகநிலைமைகளாகும். கம்யூனிஸ்ட் கட்சியும் ஒர் அகநிலையே. புறநிலைமைகளை சரியாக காண்டறிந்த அகநிலைமைகளே வெற்றியை அடைகிறது. 

பொருளாதார முரண்கள் எவ்வளவு தீவிரமாக வளர்ச்சி அடைதிருந்தாலும் அதற்கான அகநிலைத் தயாரிப்பு செய்யவில்லை என்றால் புரட்சி நிகழாது. புறநிலைமைகளே சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது, அந்த புறநிலை விதியானது, மனிதர்களைக் கொண்டே செயல்படுகிறது. உழைக்கும் மனிதர்களை தலைமை தாங்கும் கட்சி இல்லாது புரட்சியை நிகழ்த்த முடியாது. 

புரட்சிகரச் சூழ்நிலை இல்லாமல் புரட்சி சாத்தியமல்ல, ஒவ்வொரு புரட்சிகரச் சூழ்நிலையும் புரட்சியை உண்டாக்குவதில்லை என்பதை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் நமக்கு போதிக்கிறது. 

      இயற்கையின் புறநிலை விதி செயல்படுவதற்கு மனிதர்கள் தேவைப்படவில்லை. அதாவது சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் மனிதர்களோ கட்சியோ தேயையில்லை. புவி ஈர்ப்பு விசை செய்படுவதற்கு, இயற்கை மனிதனது உதவியைக் கோரவில்லை. ஆனால் சமூகத்தின் புறநிலை விதி, மனிதர்களின் நடவடிக்கையின் வழியில்தான் செயல்படுகிறது. 

      இந்த புறநிலை விதியை புரிந்து கொண்ட மனிதனுக்கு, வரலாற்று அவசியத்தை அறிந்து செயல்படுவதினால் வெற்றியை சாத்தியப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 

      மார்க்சியம் கூறுகிற புறநிலை விதியை முதலாளித்துவ ஆதரவு அறிஞர்கள், விதிவாதமாக கருதுகின்றனர். வரலாற்று நிகழ்ச்சிகள் முன்கூட்டியே விதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சியம் கூறுவதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். 

நிலப்பிரபுத்துவத்தை எப்படி முதலாளித்துவம் நிலைமறுத்து நிலைபெற்றதோ அதே போல முதலாளித்துவமும் நிலைமறுக்கப்பட்டு சோஷலிசம் நிலைபெறும் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

அனைத்து சமூகமும் எப்படி முதலாளித்துவ சமூகத்தை நோக்கி பயணிக்கிறதோ அதேபோல முதலாளித்துவ சமூகத்தின் உள் முரண்பாடுகள் சோஷலிச சமூகத்தை ஏற்படுத்தவே செய்யும். இதனை மார்க்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மூலதன நூலில் விளக்கியுள்ளார். 

மனித செயல்பாட்டுக்கான வரலாற்று அவசியம், எதோ வெளியில் உள்ள விதிவாதப் போக்கால் உருவாவதில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது உழைக்கும் மக்களை, குறிப்பிட்ட திசையில் செயல்பட தூண்டுகிறது. 

புறநிலைமைகளே மனிதர்களிடம் அவசியத் தேவைகளாக வெளிப்படுகிறது. 

      சமூகத்தில், சுதந்திரமாக செயல்படுவது என்பது, எந்த தடைகள் இல்லாமல் நடைபோடுவதைக் குறிக்காது. வரலாற்று அவசியத்தை அறிந்து கொள்ளுதலே சுதந்திரத்தை தருகிறது. அதாவது, அவசியத்தை அறிவதிலும் அதை நடைமுறையில் பயன்படுத்துவதிலும்தான் சுதந்திரம் அடங்கியுள்ளது. 

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் உள்ள பொருளாயத அடிப்படையான விஞ்ஞானப் போக்கை முதலாளித்துவ அறிஞரால் புரிந்து கொள்ள முடியவில்லை, அல்லது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

      வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை விதிவாதமாக கருதுகிற கம்யூனிஸ்டுகளும் இருக்கின்றனர். இவர்கள் தங்களைத் தாங்களே கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால் வரலாற்றியல் பொருள்முதல்வாத்தை மறுப்பவர்கள் மார்க்சிய வழிப்பட்ட கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. 

மார்க்சின் மாபெரும் இரண்டு கண்டுபிடிப்புகளில் ஒன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று எங்கெல்ஸ் கூறினார். 

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை விதிவாதமாக கருதுபவர்கள், அல்லது அவற்றை மறுப்பவர்கள் மார்க்சியவாதி என்று கூறிட முடியாது. அவர்கள் எதை ஏற்றுக் கொண்டார்களோ அதையே அவர்களின் கோட்பாடாக அறிவிக்க வேண்டும். 

புறநிலைப் புரிதலில் உள்ள குறைபாடே நம்நாட்டு இடதுசாரிகளின் பின்னடைவுக்கு பெரும் காரணமாகும். பல காரணங்களில் இது முக்கியமானதாகும். 

 புறநிலை-அகநிலை என்கிற புரிதலோடு சமூக மாற்றத்துக்கு உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பயணம் நிச்சயம் வெற்றி பெறும். 

உழைக்கும் மக்கள், சமூகத்தை உணர்வுபூர்வமாக மாற்றுவதற்கு மகத்தான ஆயுதமாக வரலாற்றியல் பொருள்முதல்வாதம் திகழ்கிறது.

 

No comments:

Post a Comment