Saturday 16 October 2021

4) அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்கிற கோட்பாடு

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 39 வது வார வகுப்பு – 16-10-2021) 

மார்க்சியத்தை சுருக்கமான தொடர் வகுப்பாக பார்த்துவருகிறோம். தத்துவத்தின் இறுதி வகுப்பு இன்று. இதுவரை இயற்கைவியல் பொருள்முதல்வாதம், இயக்கவியல் இயக்கவியல் வகையினங்கள், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற மூன்று பகுதிகளைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்ற கோட்பாடு. மார்க்ஸ் கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானக் கோட்பாடு இது. அதனால்தான் திருத்தல்வாதிகள் இதில் அதிகம் திருத்தல் வேலைகளை செய்கின்றனர். 

இந்த தொடர் வகுப்பில் நான் எந்த மேற்கோள்களையும் நேரடியாகக் இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய பல குழப்பங்கள் இன்றும் நிலவுகிறது என்பதனால், எங்கெல்ஸ், ஸ்டாலின் ஆகியோரின் மேற்கோளுடன் இன்றைய வகுப்பை தொடங்குகிறேன். 

முதலில் நான் பார்க்க இருப்பது மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை:-

“அங்கக இயற்கையின் (organic nature) வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார் (Marx discovered the law of development of human history). மனிதன் அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடமும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடித்தளத்தின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்களும் வளர்ச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.” 

பொருளாதார வளர்ச்சி என்னும் அடிப்படையில் தான் அரசு, சட்டம், மதம், தத்துவம், கலை போன்றவை தோன்றுகின்றன. மார்க்சுக்கு முன்பாக தலைகீழாகவே விளக்கம் கொடுக்கப்பட்டன. அதாவது சிந்தனையினால்தான் வாழ்நிலைத் தோன்றுகிறது என்பது மார்க்சுக்கு முன்பானவர்களின் கண்ணோட்டம். இதை மறுத்து வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பது மார்க்சின் புதியக் கண்டுபிடிப்பு. 

இந்த கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர், இன்றும் மார்க்சியம் அடித்தளத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று மறுத்துரைத்து வருகின்றனர். 

அதன் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால், வாழ்நிலைதான் சிந்தனையைத் தோற்றுவிக்கிறது. இதற்கு மாறாக இதுவரை சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானித்தாக கருதப்பட்டது. இதனை மறுத்தே மார்க்சியம் தன் கருத்தை நிலைநிறுத்தியுள்ளது. 

கருத்துமுதல்வாதமாக இருந்தாலும்சரி, பொருள்முதல்வாதமாக இருந்தாலும்சரி சமூகம் பற்றிய பார்வையில் கருத்துமுதல்வாதமாகத்தான்  மார்க்சுக்கு முன்புவரை இருந்தது. சமூகத்தையும் வரலாற்றையும் வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் மார்க்ஸ் அணுகினார். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே மார்க்சின் புதிய கண்டபிடிப்பு. இன்று பல இடதுசாரிகள் இதனை மறுத்து பொருளாதாரக் காரணங்களை பின்னுக்குத் தள்ளி கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தை புகுத்தப் பார்க்கின்றனர். இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது என்று எங்கெல்ஸ் கூறியதை மறுத்து மார்க்சியத்தை கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் சிக்க வைக்கப் பார்க்கின்றனர். 

இத்தகைய தவறானப் பார்வைக்கு எதிராக 1938ஆம் ஆண்டு ஸ்டாலின் கூறியது சரியான தொகுப்பாக இருக்கிறது. அதனை அப்படியே பார்ப்போம். 

“பருப்பொருள், இயற்கை, வாழ்நிலை என்பவைதான் புறநிலை உண்மை; நமது உணர்வுக்கு அப்பால் - நமது உணர்வைச் சார்ந்திராமல், ஆதாரமாகக் கொண்டிராமல், சுயேட்சையாக - இயங்குபவை அவை. பொருள்தான் முதல். ஏனெனில், அதுதான் புலன் உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் உணர்வுநிலைக்கும் மூலாதாரம்; தோற்றுவாய். உணர்வுநிலை என்பது இரண்டாம் பட்சமானது; மூலத்திலிருந்து பெறப்படுவது. ஏனெனில், பருப்பொருளின் பிரதிபலிப்பே உணர்வுநிலை, வாழ்வின் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்று மார்க்சிய பொருள்முதல்வாதத் தத்துவம் கருதுகிறது. மேலும் பருப்பொருளின் விளைவாகச் சிந்தனை வளர்ச்சியுற்று, மிகவும் உயர்ந்த நிலையை எட்டும் போது அது மூளை ஆகிறது. சிந்தனை என்பது பருப்பொருளின் படைப்பு. மூளைதான் சிந்தனையின் உறுப்பு. எனவே, பருப்பொருளிலிருந்து சிந்தனையைப் பிரிக்கமுடியாது. அப்படிப் பிரிப்பது மிகப் பெரிய தவறு செய்வதாகும் - என்று மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம் கருதுகிறது.”

(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்) 

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. இந்த இயக்கவியல் தொடர்பில் அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை செலுத்துகிறது. அடித்தளம் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு தாக்கம் செலுத்துகிறது. இதனைப் புரிந்து கொள்ளாமல் அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையுள்ள உறவை பரஸ்பர வினையாகக் கூறுவது, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டில் உள்ள இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையை அறிந்து கொள்ளாததின் விளைவே ஆகும். 

எங்கெல்ஸ் 1894 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் நமக்கு முழுத் தெளிவை ஏற்படுத்துகிறது. 

“…சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை. மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள் - ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது), ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில்; இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்--அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்-எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) இறுதியில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன; அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடி இருக்கின்றன; அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்கின்றன.” 

இவற்றின் மீது மற்ற உறவுகள்--அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்-எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும் இறுதியில் பொருளாதார உறவுகள் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன என்ற புரிதலுக்கு எந்த சிக்கலும் ஏற்பாடாத வகையில் எங்கெல்ஸ் கூறியுள்ளார். 

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வதற்கு, இந்த எங்கெல்சின் கூற்றில் இருந்து விலகாமல் இருக்க வேண்டும். பொருளாதார நிலைமைகள் தாமாகவே செயலில் இறங்குவதில்லை என்றுதான் இங்கே கூறியுள்ளார். மேற்கட்டமைப்பு அடித்தளத்தை ஒட்டியே செயல்படுகிறது என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் ஏற்படக்கூடாது. 

அடித்தளத்தை சுருக்கமாகப் பார்த்துவிட்டு மேற்கட்டமைப்பை சற்று விரிகாகப் பார்க்கலாம். 

   உற்பத்தி உறவுகளின் தொகுப்பே அடித்தளம் ஆகும். உணவு, உறைவிடம், உடை ஆகிவற்றுக்காக மனிதன் உழைத்திடும்போது ஏற்படுகிற பொருளாதார உறவுகளே உற்பத்தி உறவுகள் என்றும் சமூக வாழ்நிலைமைகள் என்றும் அழைக்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் செயல்பாட்டின் போது உற்பத்தி உறவுகள் ஏற்படுகின்றனது. உழைப்பு, கச்சாப்பொருள் (உழைப்பின் குறிப்பொருள்), உழைப்புக் கருவிகள் ஆகியவைகளே உற்பத்திச் சக்திகளாகும். 

இயற்கை பொருட்களை, சமூகத்திற்கான விளைபொருள்களுக்காக, தொழிலாளி தனது கை, கால், தோள் போன்றவற்றை பயன்படுத்தி தொழில்புரிவதே உழைப்பாகும். புறஉலகின் மீது இவ்வாறு செயல்பட்டு, அதனை மாற்றுவதன் மூலம் தொழிலாளி அதே நேரத்தில் தனது தன்மைகளையும் மாற்றிக் கொள்கிறான். இத்தகைய உழைப்பு மனிதனுக்கே உரியதாகும். 

கன்னி நிலம், தாதுப் பொருட்கள் போன்றவை இயற்கையாகக் கிடைக்கும் கச்சாப்பொருளாகும். கச்சாப்பொருட்களை பயன்படுத்தியே புதிய விளைபொருட்களை தொழிலாளி உழைத்துத் தருகிறான். 

கச்சாப்பொருளை விளைபொருட்களாவதற்கு உழைப்பின் போது தொழிலாளி பயன்படுத்துகிற பொருட்கள் அனைத்தும் உழைப்புக் கருவிகளாகும். உழைப்புக் கருவிகளை பயன்படுத்துவதே, மனிதனை விலங்கிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. சில விலங்கிடம் மட்டும் முதிராத வகையில் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. 

ஒர் உற்பத்தி முறையில் இருந்து மற்றொரு உற்பத்தி முறையை வேறுபடுத்திக் காட்டுவது, அந்த உற்பத்தியில் தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டல்ல. அந்தப் பொருட்கள், எத்தகைய கருவிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதே உற்பத்தி முறையைத் தீர்மானிக்கிறது. அரிசியை அனைத்து உற்பத்தி முறையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் எந்த கருவிகளைக் கொண்டு உற்பத்தி செய்கிறோம் என்பதை கொண்டு அந்த உற்பத்தி முறை மாறுகிறது. உழவு மாடுகளைக் கொண்டு பயிரிடும்போது காணப்படும் உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, அதே பயிரை இயந்திரங்களைக் கொண்டு விரிவாக உற்பத்தி செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறை. 

இயந்திரம், போக்குவரத்து வாகனம், தொழிற்கூடம், அணைகள் போன்றவை உழைப்புக் கருவிகளாகும். தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகியவை மேம்பாடு அடைவதைத் தொடர்ந்து உற்பத்திச் கருவிகள் செம்மை அடைகிறது. கருவிகள் வளர்ச்சி அடையும் போது அதைப் பயன்படுத்துகிற உழைப்பாளியின் திறமை, தேர்ச்சி, அனுபவம் ஆகியவை விரிவடைகிறது. 

உற்பத்திக் கருவிகளே, மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சியையும், சமூக நிலைமைகைளையும் சுட்டிக்காட்டும் குறிகளாக இருக்கிறது. 

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாகும். 

உற்பத்தி நிகழும் போது ஏற்படும் பொருளாதார உறவுகள், உற்பத்தி உறவுகளாகும். குறிப்பாக உற்பத்தி, பரிவர்த்தனை, நுகர்வு, வினியோகம் ஆகியவை நிகழும்போது ஏற்படுகிற உறவுகளே உற்பத்தி உறவுகள். 

கச்சாப்பொருள், உழைப்புக் கருவிகள் என்கிற உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு உடைமையாக இருக்கின்றதோ, அதை ஒட்டியே உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு தனிச்சொத்துடைமையாக இருக்கின்றன என்பதே, உற்பத்தி உறவுகளை நிர்ணயிக்கின்றன. உற்பத்திச் சாதனங்கள் முதலாளிக்கு சொந்தமாக இருக்கும் போது தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் விளைபொருட்கள் முதலாளிக்கு சொந்தமாகிறது. அந்த விளைபொருட்கள் சுரண்டல் கூட்டத்தின் நலன்களின் அடிப்படையில் வினியோகம் நடைபெறுகிறது. 

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான தொடர்பில் உள்ள இயக்கவியலை அடுத்துப் பார்ப்போம். 

உற்பத்திச் சத்திகளின் இயல்புக்கு பொருத்தமான உற்பத்தி உறவுகள் அமைகிறது. இந்தப் பொருத்தம், இந்த உற்பத்தி முறையின் தொடக்க காலத்தில் ஐக்கியம் மேலோங்கிக் காணப்படுகிறது. அப்போது இரண்டுக்குமான போராட்டம் பக்குவம் பெறாமல் தொடக்கநிலையினதாக இருக்கிறது. 

உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டும் வளர்ந்து கொண்டிருக்கிறது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியை ஒட்டு உற்பத்திச் சக்திகள் வளர்கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை ஒட்டு உற்பத்தி உறவுகள் வளர்கிறது. உற்பத்தி கருவிகளின் அதிநவீன வளர்ச்சியின் போது, இருக்கும் உற்பத்தி உறவுகள், வளர்ச்சி அடைந்த உற்பத்திக் கருவிகளுக்கு ஏற்ப வளர்ச்சி பெறாமல் பின்தங்கிவிடுகிறது. பின்தங்கிய உற்பத்தி உறவுகள் நவீன உற்பத்திச் சக்திகளுக்கு பொருந்தாமல் தூக்கி எறியப்படுகிறது. இவ்வாறு தூக்கி எறிவதே சமூகப் புரட்சியாகும். 

சமூக நெருக்கடிக்கான புறநிலைமைகளை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி தக்க தருணத்தை அறிந்து புரட்சியை நிகழ்த்துகிறது. புறநிலைமைக்கு ஏற்ற அகநிலை மாறினால் மட்டுமே புரட்சி ஏற்படும். 

அகநிலை புறநிலை ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ப தயாராகாமல் இருந்தால் புரட்சி நழுவிப் போய்விடும். புரட்சி நிகழ்வதற்கு புறநிலை-அகநிலை பொருத்தப்பாடு அவசியமாகும். 

உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் தொடர்பே சமூக வாழ்நிலை ஆகும். 

இந்த வாழ்நிலைமைகளே சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தை ஒட்டியே அரசு, மதம், தத்துவம், அறநெறி, கலை போன்ற சிந்தனைகளும் நிறுவனங்களும் சமூக உணர்வு நிலையின் வடிவங்களாக - மேற்கட்டமைப்பாக ஏற்படுகின்றன. 

சமூகத்தில் தோன்றும் கருத்துக்களும், சிந்தனைகளும் சமூக வாழ்நிலை என்று கூறப்படுகிற பொருளாதார உறவுகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையேயான தொடர்பு உள்ளது. அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதே இயக்கவியல் தொடர்பாகும். இந்தத் தாக்கம் என்பதை நிர்ணயகரமான செயலாகக் கொள்ள முடியாது. 

சில இடதுசாரிகள் அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இடைத்தொடர்பு பரஸ்பர வினைபுரிவதாகக் கூறுகின்றனர். பரஸ்பர வினைபுரிதல் என்பது சமமான இடைநிலைத் தொடர்பாகும், இந்த போக்கு இயக்கவியலுக்கு எதிரானதாகும். 

எங்கெல்ஸ் 1890ஆம் ஆண்டு பிலோகுக்கு எழுதிய கடிதம் நமக்குத் தெளிவை ஏற்படுத்துகிறது. அந்த கடிதத்தின் பகுதியை அப்படியே பார்ப்போம். 

“நமது வரலாற்றை நாமே உருவாக்குகிறோம், ஆனால் முதலாவதாக, மிகவும் திட்டவட்டமான அனுமானங்கள் மற்றும் நிலைமைகளின் கீழ் உருவாக்குகிறோம். இவற்றில் பொருளாதார வழியிலானவை, இறுதியில் தீர்மானகரமானவை ஆகும். ஆனால் அரசியல் நிலைமைகள், இதரவை, மனித அறிவை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற மரபுகளும்கூட ஒரு பாத்திரத்தை – அது தீர்மானகரமானதல்ல என்றாலும் – வகிக்கின்றன.”

(எங்கெல்ஸ் ஜோ.பிலோகுக்கு எழுதிய கடிதம் 21(22) 1890) 

எங்கெல்ஸ், தீர்மானகரமானதாக இல்லாத பாத்திரத்தையே தாக்கம் (Influence) என்று விளக்கிக் கூறியுள்ளார். 

இது ஒரு பொது விதி. பொது விதியில் இருந்தே அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விதிவிலக்கில் இருந்து பொது விதியை உருவாக்க முடியாது. விதிவிலக்குகள் விதியாகாது. 

      மனித கரு ஒன்பது மாதத்தில் முழு வளர்ச்சி அடையும் என்பது பொதுவிதி. ஒன்பது மாதம் நிறைவடைந்தவுடன் முழு வளர்ச்சி அடைந்த குழந்தை பிறக்கும். சில நேரங்களில் ஏழு அல்லது எட்டாவது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும். அவ்வாறு பிறந்த குழந்தையை ஒன்பது மாதத்துக்கு முன்பே பிறந்துவிட்டதால், பிறப்பின் விதிக்கு இது முரண்படுவதாக கருதி, குழந்தை பராமரிக்காமல் விட்டுவிட்ட போக்கு, இந்த சமூகத்தில் முன்பு இருந்தது. குழந்தை குறை பிரசவமாக பிறந்து மடிந்துவிட்ட கதைகள் நம் நாட்டில் நிறைய இருக்கிறது. 

விதியைப் புரிந்து கொண்டவர்கள், அவ்வாறு குறைந்த மாதத்தில் பிறந்தால், அந்தக் குழந்தையை கருவறை போன்ற சூழ்நிலை உருவாக்கி மீதமுள்ள மாதங்களில் பராமரிக்கப்பட்டு குழந்தை காப்பாற்றப்படும். விதியை விதியாகப் புரிந்து கொண்டதினால் இங்கே குழந்தை பிழைத்துள்ளது. முன்பு விதிவாதமாக புரிந்து கொண்டதினால் குழந்தை பராமரிக்காமல் விடப்பட்டு குழந்தை இறந்து போனது. விதியை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தால் அந்த விதிப்படி, விதி விலக்கை விதிகளால் காப்பாற்றப்பட முடியும். 

அதே போல சில நேரங்களில் ஒன்பது மாதத்துக்கு சற்று அதிகமாகவும் சென்றுவிடலாம். அதிகமாக சென்றால் குழந்தை அறுவை சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படும். இந்த இரண்டு உதாரணங்களின் மூலம் விதிவிலக்குகள் விதிகளால் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால் இங்கே சிலர் விதிவிலக்கை முன்வைத்து விதியை கேள்விக்குள்ளாக்கி விதிவிலக்கே விதியாக கூறுகின்றனர். 

அடுத்து, சமூக உணர்வுநிலையின் வடிவங்களான மேற்கட்டமைப்பில் உள்ள சிலவற்றைப் பார்ப்போம். நாம் பார்க்க இருப்பவை 1) அரசியல் சித்தாந்தம் 2) அரசு 3) மதம் 4) தத்துவம். இந்த நான்கை மட்டுமே, இந்த சுருக்கமான வகுப்பில் பார்க்கப் போகிறோம். 

1) அரசியல் சித்தாந்தம் 

பொருளாதாரத்துடன் நேரடியாகவும், நெருக்கமாகவும் தொடர்புடைய சித்தாந்த வடிவமாக அரசியல் இருக்கிறது. மேல் கட்டமைப்பில் உள்ள பிற வடிவங்களின் மீது அதிக செல்வாக்கை செலுத்தக் கூடியதாகவும் அரசியல் சித்தாந்தம் இருக்கிறது. 

வர்க்கமாக பிளவுண்ட சமூகத்தில் பொதுவான அரசியல் சித்தாந்தம் இருக்க முடியாது. சுரண்டும் வர்க்கத்துக்கு உரிய அரசியல் சித்தாந்தம் சுரண்டலாளர்களின் நலன்களின் அடிப்படையில் தோன்றியது. தொழிலாளர்களின் அரசியல் சித்தாந்தம் சுரண்டும் வர்க்கத்துக்கு எதிரான, தொழிலாளர்களின் நலன்களைக் கொண்டதாக இருக்கிறது. 

உற்பத்தி முரணால் தோன்றிய வர்க்க முரணானது சமரசப்படுத்த முடியாத வகையில் இருக்கிறது. முதலாளித்துவம் கூறுகிற ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் போன்ற முழுக்கங்கள் சொல் அலங்காரமே இருக்கிறது. ஏன் இவ்வாறு கூறப்படுகிறது என்றால், இந்த முதலாளித்துவ சுரண்டல் சமூகத்தில் முழுமையான ஜனநாயகம், முழுமையான சுதந்திரம் கிடைக்காது. அவ்வாறு கிடைக்குமேயானால் மனித உரிமை என்று போராட வேண்டிய நிலை இந்த முதலாளித்துவ சமூகத்தில் ஏற்பட்டிருக்காது. 

2) அரசு 

அரசு என்பது நாட்டின் பொது ஒழங்கை நிலைநாட்டுவதற்கும், வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களின் நலன்களையும் அது கவனித்துக் கொள்வதற்கும் உருவானதாக, நமக்கு போதிக்கப்படுகிறது. பொது பார்வைக்கு இப்படித்தான் பலருக்குத் தெரிகிறது. 

அரசு, ஏன் எதற்கு சமூகத்தில் தோன்றியது என்பதற்கான, வரலாற்று நிலைமைகளைக் கவனித்தால் இந்த போதனையின் தவறானத் தன்மை வெளிப்பட்டுவிடும். 

அரசு இல்லாக் காலம் ஒன்று இருந்தது. பழங்குடிகளாக மக்கள் வாழும் போது அங்கே அரசு இல்லை, தேவைப்படவும் இல்லை. இந்த சமூகத்தை ஆதி கம்யூனிச சமூகம் என்று அழைக்கப்படுகிறது. அரசு இல்லாது போனாலும் அனைவரும் ஒன்றாக உழைத்தனர், கிடைத்ததை சமமாகப் பங்கிட்டனர். பழங்குடி மக்களிடையே ஒற்றுமை மிகுந்து காணப்பட்டது. அவர்கள் சிறு குழுக்களாக வாழ்ந்தனர். அதனால் ஒவ்வொருவம் அந்த குழுவுக்கு அவசியமானவர்களாக இருந்தனர். 

குழுவில் உள்ள எந்த தனிநபரையும் இழக்க விரும்பவில்லை. விலங்கிடமிருந்தும், மற்ற பழங்குடி சமூகத்திடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு அனைவரின் ஒற்றுமை தேவைப்பட்டது. அவர்களது சமூக வாழ்நிலை அவர்களை ஒன்றிணைந்தது. அவர்களை ஒற்றுமைப்படுத்த அரசு என்ற ஒன்று அப்போது தேவைப்படவில்லை. 

அப்படி என்றால் எப்போது அரசு தோன்றியது? ஏன் தேவைப்பட்டது? 

இது மிகவும் முக்கியமான கேள்வியாகும். இதற்கான பதிலை நன்றாகப் புரிந்து கொண்டால் அரசின் மார்க்சியப் பார்வையை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். 

வர்க்கத்தின் தோற்றத்தைப் பற்றி சென்ற வகுப்பில் பார்த்தோம். ஆடு, மாடு வளர்ப்பதில் தனி பயிற்சி பெற்றவர்கள், அதே போல பயிர் செய்பவர்கள் என்று தனித்தனியான உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. உழைப்புப் பிரிவினைகளாலும், உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிகளாலும் உற்பத்திப் பொருட்கள் முன்பைக் காட்டிலும் உபரியாக சமூகத்துக்குக் கிடைத்து. 

உழைப்பை செலுத்துபவர்களும் உழைப்பைப் பெறுபவர்களும் பிரிந்த போது இந்த உபரியை உழைப்பை பெறுபவர்கள் அபகரித்துக் கொண்டனர். உழைப்பைப் பெறுபவர்களிடம் சொத்துடைமையும் உழைப்பை செலுத்துபவர்களிடம் சொத்துடைமை இல்லாமையும் உருவானது. இதுவே வர்க்கத் தோற்றத்துக்கான பின்புலம்.

 சமூகத்தின் உபரியை அபகரித்தவர் யாரோ அவரை, உழைப்பை செலுத்தியும் உபரி கிடைக்கப் பெறாதவர் எதிர்க்கவே செய்வர். அவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவற்கும், ஒடுகுவதற்கும் அரசு தோன்றியது. 

உழைப்பை பெறுபவர்கள் அதாவது உழைப்பைச் சுரண்டுபவர்கள் அடைகிற சமூகச் சலுகைகளை நியாயப்படுத்தவும், சுரண்டல் நிகழ்வதை நியாயப்படுத்துவும் அரசு தோன்றியது. சமரசப்படுத்த முடியாத வர்க்க வேறுபாடே அரசைத் தோற்றிவித்தது. 

இவ்வாறு கூறுவதினால் வர்க்க வேறுபாட்டைத் தவிர மார்க்சியம் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவில்லை என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இதில் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்பவர்களும் அடங்குவர். மார்க்சியம் அனைத்தையும் வர்க்கப் பார்வையில் பார்க்கிறது. வர்க்கப் போராட்டத்தைத் தவிர மற்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மார்க்சியம் இல்லை. 

அனைத்தையும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடக்கிப் பார்க்கிறது. எதையும் மார்க்சியம் புறக்கணிப்பதில்லை. 

அரசின் தோற்றத்துக்கு உபரியை மட்டும் மார்க்சியர்கள் பார்ப்பதாக பலர் குறைபட்டுக் கொள்கின்றனர். மார்க்சியத்தை அவர்கள் அறிந்து கொள்ளாததின் வெளிப்பாடே இது. 

“டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் ஓரே குலமரபு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே பாசன பங்கீடு போன்ற பொது நலன்களைக் முன்வைத்தும் அரசு தோற்றம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. வர்க்க வேறுபாடு தோன்றியவுடன் அல்லது முழுமை அடைந்தவுடன் தொடக்கால அரசின் பொதுத்தன்மை இழந்து வர்க்க அரசாக, ஒடுக்கும் கருவியாக நிலைபெறும். 

      அதே போல, ஒரு தார மண முறை, தனிச் சொத்து தோன்றும் போது உறுதிபெற்றது, ஆனால் இது மட்டுமே ஒரு தார மண முறைக்கு காரணம் அல்ல. பல்வேறு மண முறைகளைக் கடந்துதான் ஒரு தார மண முறை தோன்றியது. ஒரு தார மண முறை தனிச்சொத்துடைமைக்கு பொருத்தமானதாக இருந்ததால் தனிச் சொத்துடைமை இதனை உறுதியாக்கியது. 

வர்க்க முரணே சமூக வளர்ச்சிக்கு காரணமாக மார்க்சியம் கூறுகிறது. இதுதான் அடிப்படை. பிறவற்றை வர்க்க முரணுக்கு உள்ளடங்கிய வகையில் அணுகப்படுகிறது. மதமாக இருந்தாலும்சரி, சாதியாக இருந்தாலும் சரி அது வர்க்க போராட்டத்துடன் உள்ளடங்கியே புரிந்து கொள்ளப்படுகிறது. 

வர்க்க வேறுபாட்டால் எழும் வர்க்க எழுச்சியை ஒடுக்குவதற்கே அரசினுடை வர்க்க ஒடுக்கும் கருவிகளாக ராணுவம், நீதிமன்றம், சிறைகூடம், காவல்துறை போன்றவைகள் செயல்படுகிறன. இந்தக் கூற்று முதல்பார்வைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், ஒவ்வொரு நாளின் செய்திகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் அணுகும் போது அரசின் வர்க்க சார்பை அறிந்து கொள்ள முடியும். 

பாட்டாளிகள் முதலாளித்துவ உற்பத்தி முறையை வீழ்த்தி பாட்டாளி வர்க்க அரசை நிறுவும் போது, அந்த அரசு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சர்வாதிகாரம் என்ற சொல்லைக் கேட்டவுடன், அமைதி பிரியர்களுக்கு இட்லர்தான் நினைவுக்கு வருகிறார். ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் உழைப்பாளர்களை ஒடுக்குவதும் ரத்தக்களறியை ஏற்படுத்துவதையும் இவர்கள் எதோ தவறு நேர்ந்துவிட்டது அவ்வாளவுதான் என்பதாக கருதுகின்றனர். ஆனால் இது முதலாளித்துவ சர்வாதிகாரத்தையே காட்டுகிறது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

இந்த முதலாளித்துவ சர்வாதிகாரம் சிறுபான்மையினரின் நன்மைக்காக பெரும்பான்மையினரை ஒடுக்குகிறது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான சமூகத்தை எதிர்க்கின்ற சிறுபான்மையினரையே ஒடுக்குகிறது. 

முதலாளித்துவ சமூகத்தைக் கடந்து சோஷலிச சமூகம் வருகிறது, சோஷலிச சமூகத்தைக் கடந்து கம்யூனிச சமூகம் வருகிறது, வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் அரசு தேவையற்றதாகி படிப்படியாக உலர்ந்து விடும் என்பதே அரசு பற்றிய மார்க்சியப் பார்வையாகும். 

அரசு இல்லாது போனால் சமூகத்தை ஓழுங்கு படுத்துவது எவ்வாறு என்கிற கேள்வி எழுப்படுகிறது. வர்க்க வேறுபாடு இல்லாத போது வர்க்க ஒழுங்குபடுத்துதல் தேவையில்லை. 

அரசு உலர்ந்து விழ்ந்துவிடும் என்றால், அங்கே நிர்வாகமே இருக்காது என்பது பொருளல்ல. வர்க்க ஒடுக்குமுறையான வடிவம் தான் உலர்ந்து போகும், அன்றைய சமூகம் மிகவும் திட்டமிட்ட முறையில் நடைபெறும், அதற்கான நிர்வாக அமைப்பு நிச்சயம் இருக்கும். அதில் வர்க்க சார்பு இருக்காது. வர்க்க சார்புள்ள தன்மைகள் அனைத்தும் உலர்ந்து போய்விடும். 

3) மதம் 

மதம் என்பது இறை வெளிப்பாடாக, உலகுக்கு அப்பால் உள்ள சக்தியின் பிரதிபலிப்பாக விளக்கம் கொடுக்கின்றனர் மதவியல் அறிஞர்கள். ஆனால் உண்மையில் இந்த உலகினுடைய எதார்த்தத்தின் தலைகீழ் பிரதிபலிப்பே மதமாகும். 

தொடக்கக் காலத்தில் இயற்கையை எதிர்த்துப் போராடுவதில் மக்களிடம் ஏற்பட்ட இயலாமையே மதத்தின் தோற்றத்துக்கு முதல் காரணமாக இருந்தது. சமூக வளர்ச்சியின் போது சமூகம் பற்றிய புரியாத் தன்மையையும் மதம் நிலைநிற்புக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. 

மதம் தோன்றுவதற்கு இவ்விரண்டும் காரணங்களாக இருந்தாலும் மதத்தின் வர்க்க சார்பே மதத்தின் அடிப்படையாகும். மதத்தை மார்க்சியம் எதிர்ப்பதற்கு அதன் வர்க்க சார்பே காரணமாகும். 

அரசு தோன்றுவதற்கு எது காரணமாக இருந்ததோ அதுவே மதம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. அதாவது சமூகத்தில் ஏற்பட்ட வர்க்கப் பிரிவின் போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படுகிற குழப்பம், கிளர்ச்சி ஆகியவற்றை மட்டுப் படுத்துவதற்கே மதம் தோன்றியது. பிற மதத்தை எதிர்த்து நிறுவுவதற்கு மதம் வன்முறையைக் கையாண்டாலும் அது போதிப்பது அமைதிவாதமே ஆகும். சொல் ஒன்று செயல் வேறொன்றாக இருக்கிறது. 

மதத்தின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும். மதம் சுரண்டும் ஆதிக்க வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் காணப்படும் துயரங்கள், பாதுகாப்பற்றும் காணப்படும் உழைக்கும் வர்க்கத்துக்கு, இகலோக துன்பங்களுக்கு மாற்றாக பரலோக நன்மைகள் கிட்டும் என்று போதிக்கிறது. இவ்வாறு மதம் உழைக்கும் மக்களுக்கு மிக எளிமையான வழியினைக் காட்டுகிறது. 

விண்ணுலகில் இன்பமான வாழ்வு கிடைக்கும் என்று காரணம் காட்டப்பட்டு இகலோகத்தில் உழைக்கும் மக்கள் அடைகிற துன்பதை மறைக்க முயல்கிறது. அதனால் தான் மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் கூறினார். மதம் மக்களின் அபின் என்பதே மதம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டமாகும். 

சுரண்டல் செய்யும் ஆதிக்க வர்க்கத்துக்கு இகலோக இன்பமும், உழைக்கும் மக்களுக்கு, மறுக்கப்பட்ட இகலோக இன்பதத்துக்கு மாறாக பரலோகத்தில் இன்பம் கிடைக்கும் என்றும் போதிப்பதில் மதத்தின் வர்க்க சார்பு அடங்கியுள்ளது. 

சமூகத்தில் வர்க்கம் மறையும் போது மதமும் மறைந்து போகும். அதுவரை மதத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் விமர்சனங்கள் செய்ய வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபர் விவகாரமாகக் கொள்ள வேண்டும். அரசின் சலுகைகள் மதத்திற்குக் கிடைப்பதை படிப்படியாகத் தடுக்க வேண்டும். 

இதனை லெனின் “சோஷலிசமும் மதமும்” என்கிற சிறு கட்டுரையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். 

மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் இதுவே கம்யூனிஸ்டுகளின் மதத்தின் மீதான அணுகுமுறையாகும். அரசைப் பொறுத்தவரைதான் தனிநபரின் சொந்த விவகாரம். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுதவரை எவ்விதத்திலும் மதத்தைத் தனிநபரின் சொந்த விவகாரமாயக் கருத முடியாது. 

மத நிறுவனங்கள் அரசாங்கத்துடன் எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் எந்த மக்களும் தம் விருப்பம் போல் எந்த மதத்தை கடைப்பிடிப்பதற்கும், எம் மதத்தையும் சேராமல் நாத்திகராக இருக்கவும் முழுமையான உரிமை வேண்டும். 

குடிமக்களிடையே, மத நம்பிக்கையின் அடிப்படையில் எவ்விதமான பாகுபாட்டையும் காட்டக்கூடாது. அரசாங்க விண்ணப்பங்களில் குடிமகனுடைய மதத்தைக் குறிப்பிடும்படி கேட்கக்கூடாது. மத நிறுவனங்களுக்கு அரசு நிதிஉதவி செய்யக்கூடாது. மத நிறுவனங்கள் அரசைச் சாராத நிறுவனமாக்கப்பட வேண்டும். 

இது போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு மதத்தை பலவீனப்படுத்த மார்க்சியம் ஆலோசனைக் கூறுகிறது. மதம் முற்ற மறையும்வரை இதுபோன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் அரசு எப்படி உலர்ந்து உதிர்கிறதோ, அதே போல மதமும் உதிர்ந்துவிடும். முதலாளித்துவம் வீழும்வரை எப்படி அவர்களோடு போராடுகிறோமோ அதே போல மதம் மறையும்வரை மதத்துடன் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். 

4) தத்துவம் 

இயற்கை நிகழ்வுகள், சமூக சிந்தனைகள் ஆகியவற்றின் பொதுவான விதிகளை ஆராய்வதே தத்துவம் ஆகும். 

வர்க்கங்களாக பிளவுபட்ட சமூகத்தில், தத்துவம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. உழைப்பை செலுத்துபவர்களின் நலன்களும் உழைப்பை பெறுபவர்களின் நலன்களும் முரணாக இருக்கின்றன. அதனால் தத்துவம் இருவர்களுக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. 

கருத்துமுதல்வாதம் உழைப்பைப் பெறுபவர்களின் நலன்களை வெளிப்படுத்துகிறது. அது உழைப்பை செலுத்துபவர்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 

பொருள்முதல்வாதம் உழைக்கும் மக்களின் நலன்களை வெளிப்படுத்துகிறது. இது உழைப்பைப் பெறுபவர்களின் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது. 

தத்துவத்தின் வர்க்க சார்பைப் புரிந்து கொள்வோமாயின், சமூகத்தை சரியாகப் புரிந்து கொள்வோம். சமூகத்தை சரியாகப் புரிந்து கொண்டால், போராட்டத்தை சரியாக நடத்த முடியும். சமூக மாற்றத்தை எட்ட முடியும். 

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பின்பற்றுவோம், சமூக மாற்றத்தை போராடி பெறுவோம்.

  (மார்க்சியம் - சிறிய அறிமுகம் / அனைத்து வகுப்புகளும்)

No comments:

Post a Comment