Sunday, 1 January 2012

வேத மந்திரங்கள்


நூல் மதிப்பீடு

வேத மந்திரங்கள்
ஸ்ரீராமகிருஷ்ண மடம்
மயிலாப்பூர். சென்னை 600 004.

விலை ரூ. 60/-


மனித சமூகத்தில் காணப்படும் நூல்களில் மிகவும் பழைமையானது வேதம். வேதம் ரிக். யசூர், சாமம், அதர்வணம் என நான்கு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் ரிக் மிகவும் பழைமை வாய்ந்தது.

சம்கிதை, பிராமணம், ஆரண்யம், உபநிடதம் என்ற நான்கை உட்கொண்டதே வேத தொகுப்பு. முதலிரண்டு கர்ம காண்டம் என்றும், இறுதி இரண்டு ஞான காண்டம் என்றும்  அழைக்கப்படும்.

"வேத மந்திரங்கள்" என்ற பெயரில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது. இதில் வேத தொகுப்பில் உள்ளவற்றிலிருந்து சில சான்றுகளை காட்டுவது போல் மிகச் சில சூக்தம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள சூக்தம் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியாக்கம் இன்றைய தமிழில் இடம் பெற்றுள்ளது சிறப்பு.தைத்திரிய ஆரண்யகத்திலிருந்து சில சூக்தங்கள் இடம் பெற்றுள்ளது.

மதம் தம்மை படிநிலை வளர்ச்சியில் உருவானதாக சுட்டுவதில்லை. ஆனால் இந்த வேத தொகுப்பில் உள்ள பழைய பாடல்களில் நமது பார்வையை செலுத்தும் போது, மதத்தின் படிநிலை வளர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக வேத பாடல்களில் அதிகம் இடத்தை பெற்ற இந்திரன் தேவன் என்று சிறப்பித்து கூறினாலும் பிற்கால இந்து மதக் கடவுளில் இடம் பெறவில்லை. இதனை கணக்கில் கொண்டு தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள இந்நூலில் இந்திரனைப் பற்றி பாடல் இடம் பெறவில்லை. பிற்கால இந்து மத அறிஞர்கள் வேதம் என்று நமக்கு அறிமுகப்படுத்த விரும்பும் பிற்கால பாடல்களே இதில் இடம் பெற்றுள்ளது. இந்த வகையில் புருஷ சூக்ததைக் குறிப்பிடலாம்.

வேதகால வேதர்கள் மூன்று வகையினதாக காணப்படுகின்றனர். வானுறை தேவர் ஒரு வகையினர். இதில் மித்திரன், சூரியன், உஷை முதலியர்களைக் குறிக்கும். அக்கினி, சோமன் போன்றவர்களுடன் சிந்து, சரஸ்வதி போன்ற நதிகளும் மண்ணுறை தேவர்களாவர். இந்திரன், மருத்துவர், வாயு போன்வர்கள் விண்ணிற்கும் மண்ணிற்கும் இடைநிலையில் உறைபவர்களாவர்.

இந்த முதன்மை தேவர்களில் இந்திரனே மனித உருவம் பெற்றவர். மற்றவர்கள் இயற்கை சக்திகளை உருவகப்படுத்தப்பட்ட தேவர்களாவர்.

இன்றைய நிலையினை அடைந்த கடவுளின், தொடக்க கூறுகளை இந்த ரிக் வேத கால தேவர் சிந்தனையில் வெளிப்படுவதைக் காணலாம். இவர்கள் கடவுளர்களாகக் கூடிய மிகைப்படுத்தப்பட்ட மாமனிதர்கள். இந்த தேவர்கள் அனைவரையும் இணைத்து பிற்கால ரிக்குகளில் "இருப்பவன் ஒருவன் அவனை அறிஞர்கள் பலவித நாமங்களால் அழைக்கிறார்கள்" என்று காணப்படுகிறது. இது பிற்கால படிநிலை வளர்ச்சி எனலாம்.

பிரபஞ்சப் படைப்பைப் பற்றி "நாசதிய சூக்தம்" (ரிக் 10-129) என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதில் தேவர்கள் என்ற நிலையைக் கடந்து அனைத்தையும் படைக்கும் ஒரு சக்தியை நாடிச் செல்வதைக் காண முடிகிறது. இங்கு ஏழு பாடல்கள் காணப்படுகிறது.

முதல் பாடலில் படைப்பிற்கு முன, இருப்பு மற்றும் இல்லாமை இருந்ததாகக் கூறப்படுகிறது. கீழேயும் மேலேயும் எதுமில்லை. அப்பேர்து ஆழமானதும், அளப்பரியதுமான பெருவெள்ளம் அப்போது இருந்ததா? என்று பிரபஞ்சப் படைப்பிற்கு முனபின் இருந்த நிலையினை அறிய முயல்கிறது.

இரண்டாவது பாடல் இறப்பும், இறவாமையும். இர்வும் பகலும் இல்லாதிருந்தது. மூச்சற்ற அந்த (ஏகம்) ஒன்று தனது சக்தியால் சூவாசித்தது. அப்போது அந்த அந்த (ஏகம்) ஒன்றைத் தவிர ஏதும் இல்லாமல் இருந்ததைக் கூறுகிறது.

மூன்றாவது பாடல் அந்த (ஏகம்) ஒன்று வெளிப்படுத்திக் கொண்டதை குறிப்பிடுகிறது. தாவசஹ, இந்த வேத  சொல்லே படைப்புச் சிந்தனையை வெளிபடுத்துகிறது. இது கதகதப்பான நிலை. படைப்பிற்கான சிந்தனை. இதனை சங்கல்பம், இயக்கம் என்பதாக வேத ரிஷிகள் படைப்பினைப் பற்றி சிந்திதார்கள்.

நான்காவது பாடலில் படைப்பின் விருப்பச் - சங்கல்பம்- சிந்தனையின் விதை தொடங்கியதை ரிஷி தனது மனதின் உள்ளுணர்வால் தெரிந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

ஐந்தாவது பாடல் படைப்பு எப்படி விரைவாக உருவானது என்பது பற்றி கூறுகிறது.

ஆறாவது பாடல் ரிஷியின் உள்ளுணர்வால் (பாடல் 4) அறிந்ததில் நிறைவடையாமல், மேலும் சிந்தனையினை தொடர முயல்கிறது. இப்பாடல் தேவர்களை இப்படைப்பிற்கு பிறகு தோன்றியவர்கள் அதனால் அவர்களுக்குத் தெரியாது என்பதை தெரிவித்து. இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்ற சிந்தனை மேலும் செல்கிறது.

எழாவது பாடல:-
"இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியதோ, அது இந்தப் படைப்பைத் தாங்குகிறதா. இல்லையா. மேலான விண்ணில் வாழும் இந்தப் படைப்பின் தலைவர் யாரோ அவர் கட்டாயமாக அறிவார். ஒருவேளை அவருக்கும் தெரியாதோ என்னவோ?"

இவ்வாறு இந்த சூக்தம் கேள்விக் குறியோடு தமது சிந்தனையை மேலும் தொடர்கிறது.

வேத தொகுப்பில் இடம் பெற்ற பாடல்களின் காலகட்டம் என்பது மிகவும் நீண்டதாகும். ஆனால் "வேத மந்திரங்கள்" நூலில் மிகவும் பிற்காலத்தில் உருவான சூக்தங்களே இடம் பெற்றுள்ளது. வேதத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை தான் என்றாலும் காலவோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்து கொள்வதற்கு இந்த தொகுப்பு போதாமையாக உள்ளது. "அலைகள் வெளியீட்டகம்" நான்கு வேதங்களின் சம்கிதைகளை வெளியிட்டுள்ளது. இது ஜம்புநாதன் அவர்களின் மொழியாக்கமாகும்.
--------------------------------------------------
வேத சமூகத்தை அறிந்து கொள்ள பயன்படும் நூல்கள்


               முதல் பதிப்பு - டிசம்பர் 2011  : விலை: ரூ.200/-

2.ரிக் வேதகால ஆரியர்கள்   - ராகுல சாங்ருத்தியாயன்
            நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

3. பண்டைக்கால இந்தியா  -எஸ்.ஏ.டாங்கே
            அலைகள் வெளியீட்டகம்

4. ஆரியரைத் தேடி -ஆர்.எஸ்.சர்மா
            முதல் பதிப்பு - டிசம்பர் 2003  : விலை: ரூ.40/-
            நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

5. வேதங்கள் ஓர் ஆய்வு  -சனல் இடமருகு
            இரண்டாம் பதிப்பு - டிசம்பர் 2010  : விலை: ரூ.60/-
            அலைகள் வெளியீட்டகம்

6. வேதங்களின் நாடு     - இ. எம். எஸ்
            பாரதி புத்தகாலயம்

No comments:

Post a Comment