Monday 2 January 2012

சமூக வளர்ச்சியின் - முன்னுரை


சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்
                                                                - .கா.ஈஸ்வரன்

52/252 செல்லப்பா தெரு,
குயப்பேட்டை, சென்னை 600012,

மின்னஞ்சல்: chenthazhal@gmail.com        

செல்பேசி: 9283275513
----------------------------------------------
இந்நூலில் காணும் முன்னுரை

முன்னுரை
எங்கெல்ஸ்  கூறினார்:-
அங்கக இயற்கையின் (organic nature)வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார், மனிதன் அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவைவும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது, ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தின் சிறப்பு                     விதியையும் கண்டுபிடித்தார். மிகை மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது,..
மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை

வரலாற்றின் உந்து விசை, மிகை மதிப்பு  ஆகிய இரண்டையும் மார்க்ஸ் கண்டுபிடித்தது, அவரது வாழ்க்கைச் சாதனை என்று கூறலாம். குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சியை, அச் சமூகம் அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவைக் கொண்டுதான், அரசு நிறுவனங்கள், சட்டயியல், கலை, மதம், சித்தாந்தம் போன்றவற்றின் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள்வரை செய்யப்பட்டுவந்ததுபோல் தலைகீழ் முறையில் அல்ல என்பதைத்தான் எங்கெல்ஸ் மேலே கூறுகிறார் இது தான் மார்க்ஸ் கண்டு பிடித்துக் கொடுத்த, சமூக வளர்ச்சியைப்பற்றிய விதிமுறை.   ..ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது  என்ற எங்கெல்ஸ் கூற்றை, பிற்காலத்தில் சோவியத் யூனியனும் மறுதலித்து செயல்பட்டதால்தான் தகர்வை அமைதியாகச் சந்தித்தது. இதுபற்றி தனிஆய்வாக செய்திட வேண்டும்.

அவ்வுரையில் மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார்மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார் .

வரலாறு இதுவரை கண்ட வளர்ச்சி, தற்காலத்தில் நிலவும் முதலாளித்துவ அமைப்பின் தோற்றம், சிக்கல், மறைவு, ஆகியனபற்றிய உண்மைநிலையை, மார்க்சின் இந்த இரு கண்டுபிடிப்புகள் வெளிப்படுதுகிறது.

ஒருவர் கண்டுபிடித்ததைப் பற்றி விமர்சிப்பதற்கு பதில் வெறுப்பும், அவதூறும் தெரிவிப்பதென்பது மிகவும் இழிவான செயலாகும். தங்களின் தத்துவயிலில் நின்று மார்க்சியத்தை விமர்சனமுறையில் மறுத்தால், நாம் மார்க்சிய வழியில் பதில் அளிக்கலாம். ஆனால் அவர்கள், தம் நிலையிலிருந்து மார்க்சை எதிர்க்க முடியாத நிலையில், தங்களை மார்க்சியவாதியாக காட்டிக் கொண்டு, மார்க்சின் கண்டுபிடிப்புகளின் உள்ளிருந்து திருத்தவும், சிதைக்கவுமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மார்க்சின் கண்டுபிடிப்புகளைப் பற்றி தங்களால் விமசர்னம் செய்ய இயலாத நிலையில் இருப்பதால் தான் இவ்வாறு செயல்படுகிறார்கள். இது பலகாலமாக தொடர்ந்து வருகிறது. இதனை எதிர்கொள்வது மார்க்சியவாதிகளின் கடமை. மார்க்சியத்தின் அடிப்படைகளை விளங்கிக் கொண்டவர்களிடம், இந்த  சிதைக்கும் போக்கு பயன்தராது, என்பதை அறிந்ததால், மார்க்சிய அடிப்படை நூல்களை வெளியிடுவதும், மார்க்சியத்தை அறியத் துடிப்பவர்களுக்கு துணைபுரிய வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு இக் குறுநூல் எழுதப்பட்டது.

சமூக வளர்ச்சியின் அடித்தளமும், மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்  என்ற இந்நூல் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்ட புதியவர்களுக்கும், மார்க்சியத்தின் அடிப்படைகளை வகுப்பெடுப்பவர்களுக்கும், மார்க்சியத்தை சொந்த முயற்சியில் படிக்க முற்படுபவர்களுக்கும், மற்றும் பல்கலைகழகத்தில் வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், தமிழ் ஆகிய பாடங்களை படிக்கும் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும்படியாக எழுதப்பட்டதாகும். குறிப்பாக    வரலாறு  படிப்பவர்களுக்கு  அடித்தளமும் மேற்கட்டமைப்பும்  என்ற முதல் இயலும், சமூகவியல் மாணவருக்கு  வர்க்கத்தின் தோற்றமும் சாரமும்  என்ற இரண்டாம் இயலும், பொருளியல் படிப்பவருக்கு  சமூக பொருளதார அமைப்பு  என்ற நான்காம் இயலும், தமிழ் படிக்கும் மாணவருக்கு  மேற்கட்டமைப்பு - சமூக உணர்வுநிலையும் அதன் வடிவங்களும்     என்ற மூன்றாம் இயலும் மிகுந்த பயனளிக்கும்.

மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்கும் நூல்களின் வரிசையில், முதலாவதாக   சமூக வளர்ச்சியின் அடித்தளமும், மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்  வெளியிடப்படுகிறது. மார்க்சிய தத்துவயியல், அரசியல் பொருளாதாரம், அறிவியல் பொதுவுடைமை ஆகிவற்றின் மையம் சமூக வளர்ச்சியும், மாற்றத்தையும் எடுத்துக் காட்டுவதாகும். சமூக மாற்றத்தைப் புரிந்து கொண்டு, நிலவும் சமூகத்தின் போக்கையும், மாற்றத்தையும் மார்க்சிய முறையில் அறிந்து செயல்பட விரும்பும் அனைவருக்கும் இந்நூல் வழிகாட்டியாய் இருக்கும். எந்த குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாரவாகவோ அல்லது எதிராகவோ, இந்நூல் எழுதப்படவில்லை. ஆதே நேரத்தில் தனிநபர் எவரையும் அவதூறு செய்வதற்காகவும் எழுதப்படவில்லை.

மார்க்சிய சித்தாந்தம் எதோ தனிநபருக்கு வகுக்கப்பட்டவையோ, அல்லது தனிநபருக்கு வழிகாட்டும் சித்தாந்தமோ அல்லசமூக வளாச்சியை புரிந்து கொண்டு, மையப்படுத்தப்பட்ட சிந்தனையின் வழியாக, (பெரும்பான்மைக்கு கட்டுப்பட்டு) கட்சி சமூக மாற்றத்தில் ஈடுபடுகிறது.

இதுவரை சமூகம் கண்ட மாற்றங்களை விட, தற்போதைய முதலாளித்துவ சமூகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாகும். புரட்சிகரமான கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள கட்சியால் தான் இதனை சாதித்திட முடியும். அனைத்துச் சமூக போக்குகளையும் புரிந்து கொள்ளும் திறம் பெற்ற கட்சியால் தான் முடியும்.

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பயன்படும்படியாக எழுதப்பட்டவையே இக்குறு நூல்

இந்நூலைத் தொடர்ந்து, மார்க்சிய அடிப்படையை விளக்கும் நூல்கள் வரிசையாக வரயிருக்கிறது, மிக விரைவில் வரயிருப்பவைமுதலாளித்துவ பொருளாதார பொது நெருக்கடி பற்றி மார்க்சியம்மதத்தைப் பற்றி மார்ச்சியம்அராஜகவாதம் பற்றி மார்க்சியம்மார்க்சியம் பற்றி மார்க்சியம் , மற்றவை அடுத்தடுத்து வரயிருக்கின்றன.

எதிர்ப்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் புரிந்த மார்க்சியம், மார்க்சியத்தின் பால் ஈர்த்தவருக்கும், ஈடுபாட்டோடு படிக்க முயல்பவர்களுக்கும் புரியாமல் போகாது, என்பதை அறிந்ததின் விளைவே, இந்நூல்களின் வரிசை. இந்திய நிலைமைகளையோ, இந்தியாவில் உள்ள மதம், தத்துவயியல் போக்குகளையோ, இங்குள்ள சமூக நிலைமைகளையோ புரிந்து கொள்ளாமல், இந்தியாவில் மார்க்சியத்தை முழுமையாய் அறிந்திட முடியாது. இந்நூல் வரிசையில்  இந்தியத் தத்துவயியல் பற்றி மார்க்சியம்  என்ற நூலும் இடம்பெறுகிறது.

மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது சமூக வளர்ச்சியையும், மாற்றத்தையும் அறிவியல் முறையில் விளக்குகிறது. இதனை மார்க்ஸ் சமூகத்தின் அடித்தளம், மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் வழிமுறையில் விளக்கியிருக்கிறார்.

சமூகஉற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் விளக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது, நீர்ணயிக்கிறது என்று தான்  மார்க்சியம் கூறுகிறது.  

இதனை விளக்குவதற்கே, இக் குறுநூல் எழுதப்பட்டது.

லூக்காஸ், கிராம்சி ஆகியோர், ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாகவும், இதன் மூலம் பொருளாதார காரணங்கள் சமூக அடிப்படை என்பது பின்னுக்கு தள்ளப்பட்டதாக தவறாக புரிந்து கொண்டு, பண்பாட்டு மார்க்சியம் என்ற சிந்தனையைப் போக்கைத் தொடங்கினர்.

தீடீர்புரட்சியாளரான நெப்போலியனைப் பற்றி மார்க்ஸ்  லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்   என்ற நூலில் எழுதியதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் மார்க்சியத்தின் அடிப்படைக்கு எதிரான பண்பாட்டு மார்க்சியம் என்று மார்க்சின் பெயரைத் தாங்கிக்கொண்டே, மார்க்சியத்தின் அடிப்படையை மறுக்கின்றனர்.

மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேற்கட்டமைப்பு என்பது, - குறிப்பாக பண்பாடு - அடித்தளத்தின் பிரதிபலிப்பல்ல, மேற்கட்டமைப்பிற்கு தனியான சுதந்திரம் உண்டு என்று பண்பாட்டு மார்க்சியர்கள் கூறுகின்றனர். அதாவது மார்க்சியத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள் பண்பாட்டு மார்க்சியர்கள்.

மேலைநாடுகளில் நடைபெற்ற இம்முயற்சி, தற்போது தமிழகத்திலும் காணப்படுகிறது. பண்பாட்டு மார்க்சியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள், மார்க்சால் எதிர்க்கப்பட்ட சித்தாந்தங்களை மார்க்சியத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர்இத்துடன் நில்லாது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையை மறுதலித்து, விளிம்பு நிலை மக்களைக் கொண்டு சமூக மாற்றம் செய்திட முடியும் என்று மார்க்சியத்திற்கு தொடர்பில்லா போக்கைக் கைக்கொள்கின்றனர்.

பண்பாட்டு மார்க்சியத்தை, மார்க்சியத்தின் அடிப்படையில் முழுமையான ஒரு விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இதற்கு மார்க்சியம் விவரிக்கும் சமூகத்தின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தை தெளிவாய் புரிந்து கொண்டிருக்க வேண்டியது மார்க்சியவாதிகளுக்கு இன்றியமையததாகிறது.

இதனை வலியுறுத்துபவர்களை மரபு மார்க்சியவாதிகள் என்றும் வைதீக மார்க்சியவாதிகள் என்றும் கொச்சப்படுத்தி மார்க்சிய மரபை சிதைக்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்நூலில் இந்தப் பண்பாட்டு மார்க்சியம் என்பது மார்க்சியத்தின் அடிப்படைக்கு எதிரானது என்பதையும், பண்பாட்டு மார்க்சியம் பேசுபவர்கள் மார்க்ஸ், எஙகெல்ஸ் படைப்புகளை திரித்து விளக்கம் அளிக்கின்றனர், என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பண்பாட்டு மார்க்சியத்தை அடிமுதல்முடிவரையான விமர்சனம் செய்வதென்பது இந்நூலின் எல்லைக்குட்பட்டதல்ல. இதனை தனிநூலாக படைத்திட வேண்டும்.

இந்நூல் ஐந்து இயல்களைக் கொண்டிருக்கிறது. முதலியல் அடித்தளம் மேற்கட்டமைப்பைப் பற்றி சிறுவரையறை கொடுக்கப்பட்டுள்ளது. உழைப்பின் குறிப்பொருள் (Objects of labour), உழைப்புக் கருவிகள் (Instruments of labour), உழைப்பு ஆகிய உற்பத்திச் சக்திகள் (Productive Forces) உற்பத்தி உறவுகள் (Relation of Production), உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான இயக்கவியல் தொடர்பு பற்றிய விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இயல் வர்க்த்தின் தோற்றமும் சாரமும். இதில்  முதலாளித்து சமூகத்தில் நடைபெரும் வர்க்கப் போராட்டத்தில், புரட்சிகரமான கொள்கைகளை வகுத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு பற்றி எழுதப்பட்டுள்ளது.

மூன்றாம் இயல் மேற்கட்டமைப்பு என்றழைக்கப்படுகின்ற சமூக உணர்வுநிலையும் அதன் வடிவங்களில்அரசியல் சித்தாந்தம், மதம், பண்பாடு, கலைகள், அறநெறி, தத்துவயியல் போன்ற சிலவற்றை மட்டும், சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்திடும் போது, விரிவாகப் படிக்கத் தூண்டும் வகையில்  மிகச்சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய தனிநூல்கள் பல தமிழில் கிடைக்கிறது. கலையைப் பற்றி பேராசியர் .வா எழுதிய  தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்  என்ற நூல் இப்போது கிடைக்கிறது.

இந்நூலைத் தொடர்ந்து தொடர்புடைய நூல்களை இனம்கண்டு கொண்டு படிக்க வேண்டும் என்பதே இந்நூலின் தலையாய நோக்கமாகும். ஏனென்றால் மார்க்சிய அடிப்படைகளை வாய்ப்பாடு போல் புரிந்து கொண்டுவிட்டால் பல தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அடித்தளம் தான் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதனை வாய்ப்பாடு போல் புரிந்து கொண்டவர்கள் மேற்கட்டமைப்பை அடித்தளமே உருவாக்கிக் கொள்ளும் என்ற தவறான புரிதலுக்கு சென்றுவிடுகின்றனர்

இது பற்றிஎங்கெல்ஸ் எழுதினார்:-
அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை, இதர வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின் மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. மற்றவை ஒவ்வொன்றும் செயலற்ற விளைவை மட்டுமே கொண்டிருக்கின்றன, பொருளாதார நிலைமை காரணமாக, தனியாக சுறுசுறுப்புடன் செயல் புரிகிறது என்பதல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் - அது இறுதியில் எப்பொழுதும் தன்னை வலியுறுத்துகிறது -     இடைச்செயல் நடைபெறுகிறது.

உதாரணமாக, காப்பு வரிகள், வர்த்தகச் சுதந்திரம், நன்மையான அல்லது தீமையான நிதி அமைப்பின் மூலம் அரசு தாக்கம் செலுத்துகிறது. 1648 முதல் 1830 முடிய ஜெர்மனியின் பரிதாபகரமான பொருளாதார நிலைமையிலிருந்து தோன்றிய ஜெர்மன் அற்பவாதியின் மிகப் பெரும் களைப்பு கையாலாகாத்தனமும்  அவை முதலில் பக்திவாதத்திலும் பிறகு உணர்ச்சிப் பசப்பிலும் அரசர்களையும் பிரபுக்களையும் அண்டிப்  பிழைக்கின்ற அடிமைத் தனத்திலும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டன - பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தாமலில்லை. புதிய மீட்சிக்கு அது மாபெரும் தடைகளில் ஒன்றாக இருந்தது. புரட்சிகரப் போர்களும் நெப்போலியன் போர்களும்  நெடுங்காலத் துன்பத்தைத் தீவிரமான துன்பமாக மாற்றுகின்ற வரையிலும் அது அசைக்கப்படவில்லை - ஆகவே சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை.

மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்  ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்
-எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894

எங்கெல்ஸ்  சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லைஎன்று எழுதியிருக்கிறார்ஆதே போல்  மேற்கட்டமைப்பின் சுயேச்சையை மறுக்கும் போது, மேற்கட்டமைப்பு வரலாற்றில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று தவறாக புரிந்கொண்டுள்ள சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தை மறுக்கிறார் எங்கெல்ஸ்.

எங்கல்ஸ் மேரிங்குக் எழுதிய (ஜுலை 14, 1893)கடிதம்:-
"...மற்றபடி ஒரே ஒரு விஷயம் மட்டுமே இடம் பெறவில்லை, ஆனால் மார்க்சும் நானும் எங்களுடைய எழுத்துக்களில் அதைப் போதுமான அளவுக் வலியுறுத்தத் தவறினோம், அதைப் பொறுத்தமட்டில் நாங்கள் சம அளவுக்குத் தவறு செய்தவர்களே. அதாவது, நாங்கள் பிரதான அழுத்தத்தை முதலாவதாக அரசியல், சட்டவியல் மற்றும் இதர சித்தாந்தக் கருத்துக்களையும் இக்கருத்துக்கள் என்னும் ஊடகத்தின் மூலமாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளையும் அவற்றின் அடிப்படையான பொருளாதார மெய்விவரங்களிலிருந்து பெறுவதற்குக் கொடுத்தோம், அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருந்தோம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்கின்ற பொழுது, உள்ளடக்கத்துக்காக வடிவத்தைப் பற்றிய பிரச்சினையை, அதாவது இக்கருத்துக்கள் ஏற்படுகின்ற வழிகளை, இதரவற்றைப் புறக்கணித்தோம். அது நமது எதிரிகள் எங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கும் திரித்துக் கூறுவதற்கும் விரும்பத்தக்க சந்தர்ப்பத்தை அளித்தது.

...விஷயத்தின் இந்த அம்சத்தை என்னால் இங்கே ஓரளவு தான் சுட்டிக்காட்ட முடிகிறது. இந்த அம்சத்தை நாம் அதற்குரியதைக் காட்டிலும் அதிகமாகப் புறக்கணித்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அது பழைய கதையே, உள்ளடக்கதுக்காக முதலில் வடிவம் எப்பொழுதுமே புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே நான் கூறியபடி நானும் இதைச் செய்திருக்கிறேன், அது தவறு என்று பிற்பாடுதான் எனக்குப் பட்டிருக்கிறது. ஆகவே நான் உங்களை இதற்காக எவ்விதத்திலும் குறைசொல்லாதது மட்டுமன்றி - தவறு செய்த தரப்பினரின் மூத்தவர் என்ற முறையில் அப்படிச் செய்வதற்கு எனக்கு உரிமையில்லை - அதற்கு மாறாக, எனினும் மற்றவை எப்படியிருந்தாலும் எதிர்காலத்தை முன்னிட்டு இந்த அம்சத்தை உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி  அடைவதை நாம் மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம் என்னும் சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தும் இதனுடன் சேர்ந்திருக்கிறது. காரணமும் விளைவும் தவிர்க்க இயலா எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச்செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும். வரலாற்று நிகழ்ச்சி மற்ற காரணிகளால், முடிவில் பார்க்குமிடத்து பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதன் சூழ்நிலை மற்றும் அதைத் தோற்றுவித்த காரணங்களின் மீது கூட அதனால் எதிர்ச்செயல் புரிய முடியும் என்பதை இந்தக் கனவான்கள் பெரும்பாலும் அநேகமாக திட்டமிட்ட முறையிலும் மறந்து விடுகிறார்கள்."

இதுபோன்றவர்களிடம் இயக்கவியல் கண்ணோட்டம் கிடையாது, காரணத்தை ஓரிடத்திலும் விளைவை மற்றொருயிடத்திலும் பார்க்கிறார்கள் என்று எங்கெல்ஸ் கூறுகிறார். அதே நேரத்தில் மேற்கட்டமைப்பின் தாக்கம் சார்பானது எதுவுமே தனிமுதலானது அல்ல என்றும் எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.

எங்கெல்சின் இந்த கடிதங்களை திருத்தி, சிதைத்து கருத்துரைக்கும் போக்கு அண்மையில் அதிகம் காணப்படுகிறது. அவர்களின் சித்தாந்தம் மார்க்சிய அடிப்படைகளுக்கு மாறானது என்பதை மட்டும் சுட்டிக் காட்டுகிறது ஐந்தாம் இயல். இதனை மார்க்சிய நோக்கில் முழுமையான விமசர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். மார்க்சியப் படிப்பாளிகள் மார்க்சியத்தின் அடிப்படைகளை, மார்க்சிய ஆசிரியர்களின் கருத்தை நேரடியாக படித்து அறிந்து கொள்வது சரியாக இருக்கும் என்பதால் அவர்களின் கருத்துக்கள் நீண்ட மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளதுமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களை நேரடியாக படிக்கத் தூண்டும் வகையில், மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மேற்கோள்கள் புதிய வாசகர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் சிறுசிறு பத்தியாக பிரிக்கப்பட்டுள்ளது.

நான்காம் இயல், சமூகம் கண்ட நான்கு பொருளாதார அமைப்பைப்பற்றி (1. பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூக உற்பத்திமுறை, 2. அடிமை சமூக உற்பத்திமுறை, 3. நிலப்பிரப்புத்துவ சமூக உற்பத்திமுறை, 4. முதலாளித்துவ சமூக உற்பத்திமுறை) மிகச்சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. கம்யூனிச சமூகத்தைப் பற்றி இந்த இடத்தில் எழுதப்படவில்லைசோஷலிசப் புரட்சிப் பற்றி மார்க்சியம்  என்ற தனிநூலில் சோஷலிசப் புரட்சிப் பற்றியும், சோஷலிச சமூக உற்பத்திமுறையையும் எழுததிட்டமிடப்பட்டுள்ளது. இந்த  இயலில், நான்கு சமூக பொருளாதார அமைப்பு ஒவ்வொன்றிலும் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள், முரண்பாடும் வீழ்ச்சி அகியவை எவ்வாறு, ஒரு பொருளாதார அமைப்பை நிலைமறுத்து, மற்றொரு மேலான பொருளாதார அமைப்பா மாறுகிறது என்பதையும், அது, எவ்வாறு சோஷலிச சமூகத்தை நோக்கி செல்கிறது என்பதையும் சுருக்கமாக விவரிக்கிறது.

பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூக உற்பத்திமுறை, முதலாளித்துவ சமூக உற்பத்திமுறை என்ற இருபகுதியில் உள்ளவை, வேறொரு நூலிற்காக எழுதப்பட்டவையாகும், அதனை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் மூன்றாம் இயலில் உள்ள தத்துவயியல் என்ற பகுதி, வகுப்பெடுப்பதற்காக வைத்திருந்த குறிபை இந்்நூலிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மார்க்சிய அடிப்படைகள் மார்க்சிய ஆசான்களின் வழியிலேயே விவரிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு இந்நூல் எழுதுப்பட்டுள்ளதால், இந்தியச் சமூக உதாரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இனிவரும் அடிப்படை நூல்களில் இந்தியச் சமூக வரலாற்றிலிருந்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டு எழுதப்படும்.
இந்நூலை ஏற்றும், மறுத்தும் எழுதப்படும் விமர்சனங்கள் அடுத்த எழுதுத்துப் பணிக்கு உதவும்.

விமசர்னங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

.கா.ஈஸ்வரன்                            மின்னஞ்சல்marxism.eswaran@gmail.com
செந்தழல் வெளியீட்டகம்                    கைபேசி எண்: 9283275513
சென்னை
----------
பொருளடக்கம்

No comments:

Post a Comment