மதத்தைப் பற்றி மார்க்சியம்
- அ.கா.ஈஸ்வரன்
52/252 செல்லப்பா தெரு,
குயப்பேட்டை, சென்னை 600012,
மின்னஞ்சல்: chenthazhal@gmail.com
செல்பேசி: 9283275513
இந்நூலில் காணும் முன்னுரை
முகவுரை
மார்க்சிய முதலாசிரியர்களின் அணுகுமுறைப்படி செயற்பட விரும்பும் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துணைபுரிய வேண்டும் என்ற அடிப்படையில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் மதத்தைப் பற்றிய கருத்துகள் இந்நூலில் தொகுத்து விவரிக்கப்படுபட்டுள்ளது.
“மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.
.. .. ..
மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும்.”
மார்க்ஸ்- ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு
“நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். அதுதான் அனைத்துப் பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள்முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும், அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள்முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது.”
லெனின்-மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை
இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மதத்தின் தோற்றத்தையும், அதன் மறைவையும், அவ்வாறு மறையும் வரையில் மதத்தின் மீதான மார்க்சிய அணுகுமுறையையும் இந்நூலில் முதலாம், மூன்றாம், ஆறாம் இயல்களில் விவரிக்கப்படுகிறது. (1.மதம் தோன்றாக்காலமும், மதத்தின் தோற்றமும் 3. மதத்தைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை 6. மதத்தினுடைய தேவையின்மையும் மறைவும்)
எது குறித்தும் முடிந்த முடிவான கருத்துகளை முன்வைக்காததைப் போன்றே மதம் குறித்தும் கறாரான தீர்ப்புக்கள் எதனையும் மார்க்சியம் வழங்கவில்லை என்று ந.இரவீந்திரன் தாம் எழுதிய மதமும் மார்க்சியமும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியத்தின் பேராலேயே இதுபோன்ற கருத்துகள் தற்போது தமிழகத்தில் மிகஅதிகமாக பரப்பப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. இதன் மறுப்பாக மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூன்று மார்க்சிய முதலாசிரியர்களின், மதத்தைப் பற்றி கூறிய கறாரான கருத்துகள் இந்த சிறு படைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
மார்க்சியம் முடிந்த முடிவானதாக எதையும் முன்வைக்கவில்லை என்பது உண்மையே. ஏன் என்றால் மார்க்சியம் என்பது வறட்டு சூத்திரவாதமல்ல, மாறும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் போக்குடையதே. ஆனால், மார்க்சியம் எந்த கருத்தையும் கறாராக முன்வைக்கவில்லை என்பது அப்பட்டமான உள்நோக்கம் கொண்டதாகும். மாறும் சூழலுக்கு ஏற்ப மார்க்சிய அடிப்படைகள் மாறிவிட்டதாக கூறி, மார்க்சியத்துக்கு விரோதமான கருத்தை மார்க்சியத்தினுள் புகுத்துவது என்பதே அந்த உள்நோக்கமாகும்.
லெனின் :-
“மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல. இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அலல. அது செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது. சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிடுப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும்”
மார்க்சியத்திடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பு இயல்புகள்
இதனை வலியுறுத்துவதாக சொல்லிக் கொண்டு, மார்க்சியம் எதையும் முடிந்த முடிபாக, கறாரான தீர்ப்பு எதையும் வைக்கவில்லை என்கின்றனர். ஆனால் இதனைத் தொடர்ந்து லெனின் கூறிய கருத்தை இவர்கள் மறைத்தும் - மறந்தும் விடுகின்றனர்.
லெனின் கூறுகிறார்:-
“பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினால் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை”
மார்க்சியத்திடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பு இயல்புகள்
“நாம் முற்றிலும் மார்க்சியத் தத்துவார்த்த நிலையையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்: மார்க்சியம் தான் முதன்முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது, இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது, இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று.”
நமது வேலைத்திட்டம்
மார்க்சியக் கண்ணோட்டம் எது என்பதைக் கூட முடிவாக வைக்கவில்லை என்பது அப்பட்டமான பொய் என்பது மேலே காணும் லெனின் கூற்றால் அறிந்து கொள்ளலாம்.
“வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம், உபரிமதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று, இனி அடுத்தப்படிச் செய்ய வேண்டியிருந்த பணி அதன் எல்லா விவரங்களையும் உறவுகளையும் வகுத்தமைத்திடுவதுதான்.”
எங்கெல்ஸ் - கற்பனாவத சோஷலிசமூம் விஞ்ஞான சோஷலிசமும்
வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரிமதிப்பு இதனைப் பற்றி மார்க்ஸ் கறாக வைக்கவில்லை என்று கூறினால் அது எப்படிப்பட்ட அபத்தம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இதன் அடிப்படையில் மார்க்சும் எங்கெல்சும் தமது படைப்புகளை இறுதிகாலம்வரை எழுதியுள்ளனர். விஞ்ஞான கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்வதில் தடுமாறுபவர்களே மார்க்சியத்தின் கறார் தன்மையை சந்தேகிக்கின்றனர்.
மார்க்ஸ் தனது கண்டுபிடிப்பான வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை நம்முன்வைப்பதைப் பார்ப்போம்.
“இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.”
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை
இங்கு மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை, கண்டுபிடித்தது முதல் தமது ஆராய்ச்சிகளுக்கு அதையே வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தியிருகிறார். இவ்வழியிலேயே காலம் முழுமையும் தமது படைப்புகளை படைத்தளித்துள்ளார். இதன் அடிப்படையில் எழுதப்பட்டது தான் மூலதனம் என்ற மாபெரும் அரசியல் பொருளாதார நூல். முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி போன்றவற்றை மூலதன நூலில் கூறிய கருத்துகள் எவ்வளவு கறார் தன்மை பெற்றதாக இருக்கிறது என்பதை அவ்வப்போது முதலாளித்துவம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் நமக்கு உணர்த்திவருகிறது. இந்நிலையில் ந.இரவீந்திரன் எது குறித்தும் முடிந்த முடிவான கருத்துகளை முன்வைக்காததைப் போன்றே மதம் குறித்தும் கறாரான தீர்ப்புக்கள் எதனையும் மார்க்சியம் வழங்கவில்லை என்ற கூற்று மார்க்சியம் அறிந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற வழிபிறழ்ந்த கூற்று மார்க்சியம் என்ற பெயருடனேயே உலவுகிறது.
சமூகம் வர்க்கமாக உருவானது முதல், சமூகத்தில் காணும் கருத்துகள் ஒரு வர்க்கத்துக்கு சார்பாகவும், மற்றொரு வர்க்கத்துக்கு பாதகமாகவும் காணப்படுகிறது. சமூகத்தில் வர்க்கம் நிலவும் வரையில் மார்க்ஸ் காட்டிய வழிகாட்டுதல் நமக்கு பயன்படும். இதனை மறுப்பது மார்க்சியத்தை மறுதலிப்பதாகவே அமையும். இந்த மறுதலைப்புகளை மார்க்சியத்தன் வளர்ச்சி! என்று சுட்டுவதன் மூலம் மார்ச்சியத்தின் அடிப்படைகள் மறுக்கப்படுவதை கம்யூனிஸ்டுகளால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
மாறும் சூழலுக்கு ஏற்ப போர்தந்திரம் மாற்றம் பெறும். அந்த மாற்றம் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தான் கம்யூனிட் கட்சி அமைத்துக்கொள்ளும். இதனை புரிந்து கொள்ளாமல் ந.இரவீந்திரன் போன்றோர்கள் போர்தந்திரத்தையும் தத்துவத்தையும் ஒன்றாக குழப்புகின்றனர்.
அதுமட்டுமல்லாது மதத்தின் தோற்றத்தையும், அதன் மறைவையும், அவ்வாறு மறையும் வரை மதத்தின் மீதான அணுகுமுறையையும் பற்றிய, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூன்று முதல் ஆசிரியர்களின் கருத்தை ந.இரவீந்திரன் போன்றோர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பது தான் உண்மை.
“மிகப் பெருந் திரள்களான மக்களை, ஏனையோருக்காகத் தாம் செய்யும் ஓயாத வேலையாலும் மற்றும் இல்லாமையாலும் தனிமைப்பாட்டாலும் நசுக்கப்படும் இம்மக்களை, எங்கும் அழுத்தி இருத்திவைக்கும் ஆன்மீக (அறிவுசார்) ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.
..
மதம் மக்களுக்கு அபினியைப் போன்றது. மதம் ஒரு வகையான ஆன்மீக பெரும் போதை கொண்டது. அதில் மூலதனத்தின் அடிமைகள் மூழ்கி அவர்களுடைய மனித உருவத்தையும், மனிதப் பிறப்புக்குகந்த முறையிலான வாழ்க்கை நடத்துவதற்கான உணர்வையும் கோரிக்கைகளையும் மழுங்கடித்து மூழ்கடித்து வருகிறார்கள்”
-சோஷலிசமும் மதமும்
மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் மாறி, மக்களுக்கு அபினியாக எப்படி செயல்படுகிறது என்பதை மார்க்ஸ் விளக்கியிருக்கிறார். இந்தக் கூற்றை மிகவும் கொச்சப்படுத்தி, மார்க்சின் கருத்துக்கு விரோதமாக பலர் விளக்கமளித்து வருகின்றனர். இதனை விமர்சித்து, ஆன்மீக ஒடுக்குமுறையான மதத்தை மக்களின் அபின் என்பதையும் மதத்தின் வர்க்கத் தன்மையையும் மார்க்ஸ் எவ்வாறு விளக்குகிறார் என்பதை லெனின் கூறும் விளக்கத்தோடு இரண்டாம் இயலில் (2. மதத்தின் வர்க்கத் தன்மை) தொகுக்கப்பட்டுள்ளது.
மார்க்சியத்தை சொல்லளவில் ஏற்று, மார்க்சிய சொற்களை பயன்படுத்தி, மார்க்சிய அடிப்படைக்கு விரோதமாக கருத்துரைப்பதென்பது தற்போது அதிகரித்து வருகிறது. மார்க்சிய அடிப்படையை ஏற்கமுடியாமல் இருப்பவர்கள் மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுகளை திரித்தியும் புரட்டியும் விளக்கமளித்து வருகின்றனர்.
மார்க்சிய முதலாசிரியர்களின் அடிப்படை நூல்களை படித்தறிய வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இதனை உணராமல் இருந்தால், நாம் எதிராளியின் குழப்பத்துக்கு ஆட்படவேண்டிவரும். ஏன்னென்றால் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்கள் மார்க்சியம் என்ற பெயர் தாங்கியே நடமாடுகிறது.
லெனின் கூறுகிறார்:-
“நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமாக ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.”
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
இந்து மதத்தின் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே எந்த வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்கின்றன என்பதை, நான்காம் இயலில் (4. இந்து மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்) விளக்கப்படுகிறது.
பகுத்தறிவுவாதத்தின் தொடக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு வாதத்தைப் பற்றியும் ஐந்தாம் இயல் ஆராய்கிறது. மார்க்சிய நாத்திகத்துக்கும் பகுத்தறிவுவாத நாத்திகத்துக்கும் இடையே உள்ள முதன்மையான வேறுபாட்டை சுட்டுகிறது.
தோற்றம் பெற்ற மதம் அதன் மறைவுவரையான காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பணியைப் பற்றி 3. மதத்தைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை என்ற மூன்றாம் இயல் விவரிக்கிறது. மத நம்பிக்கை பெற்ற பொதுமக்களை நாத்திகமாக்குவதே தமது தலையாய குறிக்கோளாக கம்யூனிஸ்ட் கட்சி கொள்ளவில்லை. வெகுஜன அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு நாத்திகராக இருக்க வேண்டும் என்று கட்சி வலியுறுத்துவதில்லை. ஆனால் மதத்தின் மாய்மாலதத்தை கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடமும் வெகுஜன அமைப்பிடமும் அம்பலப்படுத்தும்.
மக்களை விழிபுறச் செய்திட துணைபுரியும் கம்யூனிஸ்ட் போராளி மதத்தின் வர்க்கத் தன்மையை புரிந்தவராக இருக்க வேண்டும். மதத்தின் மாய்மாலத்திலிருந்து விடுபட்டு இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களால் வழிகாட்டியாகச் செயற்படமுடியும்.
“சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் கழகமாகும். இப்படிப்பட்ட ஒரு கழகம் மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.
.. .. ..
மதத்தின் மூலமான எல்லாவித மாய்மாலங்களாலும் தொழிலாளர்கள் ஏய்க்கப்படுவதை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்தும் பொருட்டே ருஷ்யாவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகிய நமது கழகத்தை நாம் நிறுவிக் கொண்டோம். ஆகவே நமக்குச் சித்தாந்தப் போராட்டம் தனிநபரது சொந்த விவகாரமல்ல, கட்சி அனைத்துக்கும், பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரிய விவகாரமாகும்”.
லெனின்-சோஷலிசமும் மதமும்
லெனின் வழிகாட்டுதலின்படி அமைந்துள்ள கம்யூனிஸ்ட்கட்சி மதத்தைப் பற்றி பாராமுகமாக இருக்க முடியாது. இந்தப் புரிதலோடு விடுதலை இறையியல் என்ற லத்தீன் அமெரிக்காவில் காணும் போக்கை அணுகவேண்டும்.
ஏழைகளே தேவனுக்கு உரியோராவர் என்று ஆதிகாலக் கிறிஸ்துவத்துக்கு புத்துயிர் ஊட்டுவதையும், மத வழியில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதையும் பற்றிய கருத்தை எங்கெல்ஸ் தம் காலத்தில் எதிர்ப்பையும் மறுப்பையும் வெளியிட்டுள்ளார். இன்றைய லத்தீன் அமெரிக்காவில் காணும் விடுதலை இறையியல் என்ற புதிய போக்கை புரிந்து கொள்ள எங்கெல்சின் அணுகுமுறை நமக்கு உதவும்.
விடுதலை இறையியல் போன்ற போக்கு மார்க்சிய முதலாசிரியர்கள் காலத்தில் பார்க்கப் பட்ட ஒன்றுதான். அந்த போக்கு புதுப்புது வடிவமாக அந்தந்த நாட்டின் சூழல்களுக்கு ஏற்ப தோன்றுகிறது.
கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என்ற நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ் கூறுகிறார், மக்கள் திரள்களிடையிலே இருக்க வேண்டிய மத உணர்ச்சிகள் மறையுமாயின் என்ன நேரும் என்பதைப் பாரிசில் நடைபெற்ற ஆட்சி நிரூபித்துக் காட்டவில்லயா? என்ற கேள்வியைத் தொடுக்கிறார். பொருள்முதல்வாதமும், கட்டுப்படுத்தப்படாத சுதந்திரச் சிந்தனையும் பொதுவாகக் கண்டத்தில் பண்பட்டவர்களுக்கான அத்தியாவசியத் தகுதிகளாகி வந்தனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான பிடிவாதத்துடன் ஆங்கில நடுத்தர வர்க்கத்தார் தமது பல்வேறுபட்ட மத நெறிகளையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டனர். இந்த நெறிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கலாம். ஆனால் இவையாவும் ஒன்று விடாமல் தெளிவான மத முத்திரை பெற்ற கிறிஸ்துவ நெறிகளாகும் என்பதைத் தெரிவித்து, மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார்:-
“.. சாதாரண மக்களைச் சமய மனப்பாங்கு கொண்டோராக வைத்திருப்பது அவசியமென்று முன்பே ஐயமற உணர்ந்திருந்த பிரட்டிஷ் முதலாளி, இந்த அனுபவங்கள் யாவற்றுக்கும் பிற்பாடு இந்த அவசியத்தை இன்னும் எவ்வளவு அதிகமாக உணர்ந்திருப்பார்?
கண்டத்தைச் சேர்ந்த தனது சகாக்களின் ஏளனப் பேச்சுக்களைப் பொருட்படுத்தாமலே அடிமட்டத்து மக்களைக் கிறிஸ்துவச் சமயநெறிக்கு வயப்படுத்தும் பணிக்காகத் தொடர்ந்து ஆண்டுதோறும் அவர் ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக்கணக்கிலும் செலவிட்டு வந்தார். சமயப் பணிக்காகத் தமது சொந்த நாட்டில் இருந்த ஏற்பாடுகளுடன் திருப்தியடையாமல் தொழில்முறையாக சமயப் பணிக்கு ஏற்பாடு செய்வதில் உலகிலுள்ள மிகப்பெரிய ஒழுங்கமைப்பாளராகிய சோதரர் ஜானாத்தனுக்கு வேண்டுகோள் விடுத்து அமெரிக்காவிலிருந்து சமயப் புத்தெழுச்சியையும் மூடியையும் சாங்கியையும் இன்ன பிறரையும் இறக்குமதி செய்து கொண்டார்.
முடிவில் ரட்சணியச் சேனையின் அபாயகரமான உதவியையும் ஏற்றுக் கொண்டார். இந்த ரட்சணியச் சேனை ஆதிகாலக் கிறிஸ்துவத்தின் பிரசாரத்துக்குப் புத்துயிர் அளித்து ஏழைகளே தேவனுக்கு உரியோராவர் என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. மத வழியில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுகிறது, இவ்விதம் அது ஆதிகாலக் கிறிஸ்துவ வர்க்கப் பகைமையின் ஓர் அம்சத்தை வளர்த்திடுகிறது, இன்று விரும்பி இதற்குப் பணம் வழங்கும் செல்வந்தர்களுக்கு இவ்வம்சம் ஒரு நாள் வினையாய் முடிவுறலாம்”
ரட்சணியச் சேனை என்பது அன்றைய வடிவமாகும். ஆதிகாலக் கிறிஸ்துவத்தில் ஏழைகளே தேவனுக்கு உரியோராவர் என்று தெரிவித்து, மத வழியில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட வைத்த அன்றைய போக்கிற்கு, சில முதலாளித்துவ வர்க்கத்தாரே பணம் செலவழித்து வளர்த்தனர். இப்போக்கு முதலாளித்துவ வர்க்கத்தாரின் நேரடியான உதவியோடு நடைபெற்றபோது எங்கெல்ஸ் இதனை இன்று விரும்பி இதற்குப் பணம் வழங்கும் செல்வந்தர்களுக்கு இவ்வம்சம் ஒரு நாள் வினையாய் முடிவுறலாம் என்று விமர்சிக்கிறார்.
விடுதலை இறையியல் என்பது கிறிஸ்துவப் பாதிரியார் போன்றோர்களால், யேசு ஏழைகளுக்குத் தோழன் என்ற புரிதலின் அடிப்படையில் லத்தீன் அமெரிக்காவில் தோன்றிய அண்மைய போக்காகும்.
ஃபிடல் காஸ்ட்ரோவுடன், பிரேசில் நாட்டு பாதிரியார் ஃபிரே பெட்டோ நிகழ்த்திய நேர்க்காணல், ஃபிடலும் மதமும் (மதம் மக்கள் புரட்சி (தமிழ்)) என்று நூல்வடிவம் பெற்றுள்ளது. அதில் பாதிரியார் ஃபிரே பெட்டோ, தமது பேட்டியில், அரசியல் இயக்கமாகிய மார்க்சிய லெனினிய இடதுசாரி இயக்கம் மதம் குறித்த தனது மதிப்பீட்டில் லத்தீன் அமெரிக்காவில் நாத்திகத்தைப் போதித்ததில் தவறு செய்திருப்பதாகக் கூறியதற்குப் பதிலளிக்கும் போது ஃபிடல்:- ஓர் அரசியல் இயக்கம், ஒரு புரட்சிகர இயக்கம், வெறும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொள்ளாமல் குறிப்பிட்ட காலகட்டத்தில் நிலவும் நிலைமைகளை அடிப்படையாக கொண்டே தனது மதிப்பீடுகளைச் செய்ய வேண்டும். தனது உத்திகளையும் அணுகுமுறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன்தான் நான். .. சரியான திட்டமோ உத்திகளோ இல்லாமல் ஓர் அரசியல் கருத்து கடைப்பிடிக்கப்படுமானால், அது எவ்வளவு சரியான கருத்தாக இருந்தாலும், அது கற்பனாவாதமாகி விடும். (பக்கம் 307)
இப்படித் தெரிவிக்கும் ஃபிடல் நேரடியாக மதத்தின் மீதான விமர்சனத்தை ஃபிரே பெட்டோயிடத்தில் வைக்காமல் இல்லை. அடிமைச் சமூகம் முதல் இன்றைய சமூகம் வரையில் சுரண்டலுக்கு ஆளான மக்களுக்குச் சார்பாக, கிறிஸ்துவ மதம் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அத்துடன், ஃபிரே பெட்டோ நியாயமாக நடந்து கொள்வது என்பது யேசுவைப் பின்பற்றுவதற்கான ஓர் அடிப்படைத் தகுதி என்று தனது விளக்கத்தில் கூறிய கதைக்கு, ஃபிடல் பதிலளிக்கிறார்:- .. ஒரு நுட்பமான மாறுபாட்டை வெளிபடுத்த விரும்புகிறேன். ஒரு பணக்காரன் தான் திருடியதைப் போன்று நான்கு மடங்கு செல்வத்தை ஒருபோதும் திருப்பித் தரமாட்டான். ஏனென்றால், ஒரு பணக்காரனிடம் இருப்பதெல்லாமே திருடப்பட்டவையாகத்தான் இருக்கும். .. ஏனென்றால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவன் மறுபடியும் நான்கு மடங்கு திருடியாக வேண்டும். (மதம் மக்கள் புரட்சி, பக்கம் 350)
இந்தச் சுரண்டலைப் புரிந்துகொள்வதற்கான பொருளாதாரக் கண்ணோட்டம் விடுதலை இறையியலில் கிடையாது. பணக்காரனிடம் செல்வம் எப்படிச் சேர்கிறது என்பதும் ஏழைகள் ஏன் ஏழைகளானார்கள் என்பதும் விடுதலை இறையியலுக்குப் புரியாது. விடுதலை இறையியல் இந்த விளக்கத்திற்கு மார்க்சியத்திடம் வந்தடைய வேண்டும்.
ஃபிரே பெட்டோ தனது கேள்வியில், ரீகன், சிலி நாட்டுக் கொலைகார ராணுவ ஜெனரல்கள், பினோசெட் போன்றவர்கள் நம்புகிற கடவுளுக்கும், லத்தீன் அமெரிக்கத் தொழிலாளர்கள் நம்புகிற கடவுளுக்கும் இடையே எந்த ஒற்றுமையும் கிடையாது என்கிறார்.
இந்த இரட்டைப் கிறிஸ்துகளைப் பற்றி ஜார்ஜ் தாம்சன் தமது மதத்தைப் பற்றி என்ற நூலில் எழுதியிருக்கிறார். அவர் கூறுகிறார், கிறிஸ்துகள் இருவர் இருக்கின்றனர். ஒருவர் தொழிலாளி கிறிஸ்து, மற்றொருவர் ஆளும் வர்க்கத்தின் கிறிஸ்து.
தொழிலாளிகளின் விடுதலைக்கான நம்பிக்கை ஒளியாகவும், துன்பங்களின் குறியீடாகவும் ஏழைகளின் யேசு கிறிஸ்து இருக்கிறார். மற்றொரு யேசு கிறிஸ்து ஆளும் வர்க்கத்தின் சார்பாக, தொழிலாளர்கள் பொருளாதார முறையில் சுரண்டப்படுவதை ஏற்றுக் கொள்கிறார். எல்லா மதங்களிலும் இதுபோன்ற இரண்டு போக்குகள் இருக்கின்றன. தொழிலாளர்கள் தம்மோடு வேலை செய்யும் கிறிஸ்துவ தொழிலாளர்களுடன் இணைந்து, அவர்களின் முன்னேற்றத்துக்குத் துணைபுரிய வேண்டும். கிறிஸ்துவத் தொழிலாளர்கள் காண விரும்பும் சமாதானம், நல்லெண்ணம், அண்டை வீட்டாரிடம் நேசம், சமூகத்திற்குச் சேவை செய்தல் ஆகிய அவர்களுடைய லட்சியங்கள், இதே லட்சியத்திற்காகப் போராடும் தொழிலாளர்கள், கிறிஸ்துவத் தொழிலாளாகளிடம், நீங்கள் நினைக்கும் லட்சியத்தை அடைவதற்கு, சமூக அமைப்பை மாற்றினால்தான் முடியும். அதனை ஒன்று திரண்ட தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களால்தான் அடைய முடியும் என்பதை எடுத்துச் சொல்லும்படி ஜார்ஜ் தாம்சன் வலியுறுத்துகிறார். இவ்வழியில்தான் சமூக அநீதிக்கு எதிராக மத வடிவில் வெளிப்படும் கண்டனமாகவும், எதிர்ப்புக் குரலாகவும் விளக்குகிறார் ஜார்ஜ் தாம்சன்.
“.. சமாதானம், நல்லெண்ணம், அண்டை வீட்டாரிடம் நேசம், சமூகத்திற்குச் சேவை புரிதல் போன்ற மானுட உணர்வுகள் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ள உதவுகின்றன. இவ்வுணர்வுகள் முதலாளித்துவ சமுதாயத்தில் எவ்வளவுதான் உரக்கப் பறைசாற்றப்பட்டாலும் நடைமுறையில் மிதித்து நசுக்கப்படுகின்றன. 1381ஆம் ஆண்டில் நிலப்பிரப்புத்துவ ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஆங்கில உழவர் எழுப்பிய முழக்கம்: நாம் யேசு கிறிஸ்துவின் வடிவில் வளர்க்கப்பட்ட மனிதர்கள். ஆனால் விலங்குகளைப்போல் நடத்தப்படுகிறோம் என்பதே. இங்கிலாந்தின் வரலாற்றில் இந்த முழக்கம் பலமுறை மீண்டும் மீண்டும் லெவலர்களாலும் டிக்கர்களாலும் லடைட்டுகளாலும் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இது இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் ஓர் உணர்ச்சியின் குரலாக விளங்குகிறது. சமூக அநீதிக்கு எதிராக மத வடிவில் வெளிப்படும் கண்டனமாக, எதிர்ப்புக் குரலாக உள்ளது”
-மதத்தைப் பற்றி
இவ்வாறு மத நம்பிக்கையுள்ள தொழிலாளர்களை, அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே சென்று, சமூக அநீதிக்கு எதிராக, மத வடிவில் வெளிப்படும் கண்டனமாக, எதிர்ப்புக் குரலாக மாற்ற வேண்டும். மதத்தைப் பற்றிய விமர்சனத்தை அனைத்தும் பற்றிய விமர்சனமாக விரிவுபடுத்த அவர்களுக்குத் துணைபுரிய வேண்டும்.
இந்தியப் பாட்டாளிகள் விமர்சனக் கண்ணோட்டத்தில் விடுதலை இறையியல் போக்கைப் படித்தால் அல்லது அவர்களுக்குத் தெளிவாக்கினால், இந்துத் தொழிலாளர்கள், கிறிஸ்துவத் தொழிலாளர்கள், முஸ்லிம் தொழிலாள்கள் மற்றும் பிற மதப்பிடிப்புள்ள தொழிலாளர்களுடன் எவ்வாறு இணைந்து சமூக முன்னேற்றத்திற்குப் போராடுவது என்பதில் உறுதிகொள்வார்கள். மத நம்பிக்கைகொண்ட தொழிலாளிகள், இன்றைய பாட்டாளி வார்க்த்துடன் இணைந்து போராடுவதிலுள்ள தயக்கங்கள் படிப்படியாக நீக்கம் பெற்று புதிய சமூகத்தைப் படைக்கத் துணைபுரிவர்்.
இவைகளையே விடுதலை இறையியல் என்பது பற்றிய எனது பார்வையாக இங்கு பதிந்துள்ளேன்.
மேலும் லெனின் கூறுவதை பார்ப்போம்:-
“பேராசிரியர்கள் தமது கருத்துமுதல்வாத, விமர்சன அமைப்புகளை ஆதிக்கத்திலிருந்த மத்திய காலத் தத்துவவியலுக்கு (அதாவது இறையியலுக்கு) உகந்தவாறு சரிசெய்து அதிகார பூர்வமான தமது சம்பளங்களைச் சம்பாதித்துக் கொண்டனர் - திருத்தல்வாதிகளும் உடனே அவர்களை நெருங்கிச் சென்று மதத்தை, தற்கால அரசு சம்பந்தமாய் மட்டுமின்றி முன்னேறிய வர்க்கத்தின் கட்சி சம்பந்தமாகவுங்கூட, அவரவரது சொந்த விவகாரமாக்க முயன்றனர்”
மார்க்சியமும் திருத்தல்வாதமும்
மதத்தை, தற்கால அரசு சம்பந்தமாய் மட்டுமின்றி முன்னேறிய வர்க்கத்தின் கட்சி சம்பந்தமாகவுங்கூட, அவரவரது சொந்த விவகாரமாக்க முயற்சிப்பதை, லெனின் திருத்தல்வாதமாகவே விமர்சிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விடுதலை இறையியலை இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமா? இறையியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டுமா? இதனோடு இந்திய மதங்களை குறிப்பாக இந்து மதத்தை விடுதலை இறையியல் என்ற புதிய கண்ணோட்டத்தின் வழியில் விவரிக்க வேண்டுமா? இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டுமா? தொடரும் விவாதத்தை பொருத்திருந்து பார்ப்போம்.
இதன் தொடர்ச்சியாக நடைபெறும் விவாதங்களால், விடுதலை இறையியல் என்பதுபற்றி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான முடிவிற்கு வரலாம்.
இந்து மதத்தில் உள்ள முதன்மைப் பிரிவான அத்வைதத்தை இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இந்நூல் ஆராய்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய மதங்கள், தத்துவங்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோத்தில் அணுகப்பட்டு நூலாக வெளிவரும்.
மார்க்சிய ஆசிரியர்களின் கருத்தை நேரடியாக படித்து அறிந்து கொள்வது சரியாக இருக்கும் என்பதால் அவர்களின் கருத்துகள் நீண்ட மேற்கோள்களாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களை நேரடியாக படிக்கத் தூண்டுவதற்கே இவ்வழிமுறை கையாளப்பட்டுள்ளது. இம்மேற்கோள்கள் புதிய வாசகர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் சிறுசிறு பத்தியாக பிரிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம் என்ற நூல் வெளிவந்தது. இந்த ஆண்டு மதத்தைப் பற்றி மார்க்சியம் வருகிறது. அடுத்து மார்க்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகள் (வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரி மதிப்பு) என்ற நூல் வரயிருக்கிறது.
அ.கா.ஈஸ்வரன் அலைபேசி எண்: 9283275513
மின்னஞ்சல்: marxism.eswaran@gmail.com
மின்னஞ்சல்: marxism.eswaran@gmail.com
செந்தழல் வெளியீட்டகம்
சென்னை டிசம்பர், 2011
---------------------------
No comments:
Post a Comment