நா.வானமாமலை
அலைகள் வெளியீட்டகம்
4/9 இராகவேந்திரா கெஸ்ட் ஹவுஸ்,
4வது முதன்மைச் சாலை,
யுனைடெட் இந்தியா காலனி.
கோடம்பாக்கம், சென்னை-600 024
முதற்பதிப்பு:2009
விலை: ரூ.100/-
நூல் அறிமுகம்
தமிழகத்தில் மார்க்சியத்தின் பேரால் பல்வேறு புதுப்புதுப் போக்குகள் தோன்றியபடி இருக்கின்றன. அத்வைத மார்க்சியம், வைணவ மார்க்சியம், சைவ மார்க்சியம் என்றும் ஏன் சித்தர் மார்க்சியம் போன்ற போக்கும் தமிழகத்தில் காணப்படுகின்றன.
"மார்க்ஸ். எங்கெல்ஸ் ஆகியோர்களின் போதனைகள் வறட்டுச் சூத்திரம் அல்ல, செயலுக்கு வழிகாட்டியேயாகும்" என்ற லெனினது கருத்தை தவறாகப் புரிநது கொண்டவர்கள் சிறு குழுக்களாகவும். தனிநபர்களாகவும் பற்பல புதிய மார்க்சியப் போக்கை ஏற்படுத்தி. வளைத்தும் திருத்தியும் தமக்கு ஏற்ப மார்க்சியத்தின் அடிப்படைகளை சாதகமாக்கி கொள்ள முயற்சிக்கின்றனர்.
"தற்போது சர்வதேச சமூக-ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தில் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ், எங்கெல்ஸ் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதிவாய்ந்த அடித்தளமாகக் கருதப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்று பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன.
மார்க்சியத்தை 'புதுப்பிப்பதாய்' கூறிக் கொள்ளுவோர் புதிதாய் எதையேனும் வளர்த்திடுமாறு மார்க்சும். எங்கெல்சும் நம்மைப் பணித்துச சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முன்னேறச் செய்திடவில்லை"
என்று லெனின் 'நமது வேலைத்திட்டம்' என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
மேற்கூறிய தமிழகத்தின் புதிய கோக்குகளும் லெனின் கூறிய வழியிலேயே செல்கிறது என்பதை அறிந்து கொள்ள பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் "இந்தியத் தத்துவமரபும் மார்க்சிய இயக்கவியலும்" என்ற இந்நூல் துணையுரிகிறது. (முன்பு இந்நூல் "மார்க்சிய தத்துவம்" என்ற பெயரில் வெளிவந்துள்ளது) இத்தகைய போக்கு உருவாவதற்குக் காரணம் இந்தியத் தத்துவஞானத்தைப் பற்றியும், மார்க்சிய அடிப்படையையும் அறிந்து கொள்வல் ஏற்பட்ட இடர்பாடும். குறைபாடுமாகும்.
மார்க்ஸ். எங்கெல்சைத் தொடர்ந்து லெனின் தனது காலத்திற்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்த பங்களிப்பையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
தத்துவஞானங்கள் தோன்றியதற்கான சமூக முரண்பாடுகளையும். அதன் சார்புத் தன்மையையும். தத்துவஞானத்தின் அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களையும். இந்தியத் தத்துவஞானக் கருத்துக்களைப் பயன்படுத்தியே இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவஞான மரபில் காணும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் இவற்றிற்கிடையிலான முரண்பாடுகள், போராட்டங்கள், ஆகியவற்றை மார்க்சிய அடிப்படையில் விளக்குகிறார் பேராசிரியர்.
இந்நூலின் நான்காம் அத்தியாயத்தில் கூறப்படும் சாங்கியம், யோகம், வைசேசிகம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம், உலகாயதம், பௌத்தம், சமணம் போன்றவற்றில் காணும் கருத்துமுதல்வாத. பொருள்முதல்வாத போக்குகளை எடுத்துக் காட்டுகிறார் பேராசிரியர். வேத சம்கிதைகள் முதல் பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் வரையிலான சிந்தனையின் வளர்ச்சியின் வரலாற்றையும் சுருக்கமாய் விவரிக்கினறார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சிக்கல்கள், உலக சிந்தனையாளர்களை மீண்டும் மார்கசை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது. மார்க்சியரின் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பற்றி கணிப்புகளின் உண்மையினை, இன்றைய போக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
இதன் காரணமாக மார்க்சியத்தைப் பற்றிய தேடல் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் பேராசிரியரின் இந்நூலின் வரவு சிறப்பிடத்தைப் பெற்றுவிடுகிறது.
இந்தியத் தத்துவஞானத்தைப் பற்றிய பல்வேறு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் அவை அந்தந்த தத்துவக் கண்ணோட்டத்தை அவரவர்களின் வழியில் திரும்பச் சொல்வதற்கு மேல் செல்லவில்லை. பேராசிரியரின் இந்நூல் இந்தியத் தத்துவஞானத்தை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வதற்கான திசைவழியை நமக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் காட்டுகிறது.
மார்க்சியத்தைப் பற்றியும் தமிழில் நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மார்க்சியத்தை விஞ்ஞான மார்க்சியம், விமர்சன மார்க்சியம் என்று பிரித்து, மார்க்ஸ் கூறிய அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற கருத்தாக்கத்தை மறுதலிக்கும் போக்காக காணப்படுகிறது. இச்சூழலில் மார்க்சியத்தை மார்க்சிய வழியிலேயே விவரிக்கும் பேராசிரியரின் இந்நூல் பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியத் தத்துவ ஞானத்தையும், மார்க்சியத் தத்துவத்தையும் மார்க்சிய வழியில் புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு இந்நூல் சிறந்த அடித்தளத்தை அமைத்துத தந்திருக்கிறது.
(அலைகள் வெளியிட்டுள்ள இந்நூலின் முன்னுரைக்காக எழுதப்பட்டது)
No comments:
Post a Comment