Monday 2 January 2012

ரிக் வேத சமூகம் முன்னுரை


ரிக் வேத சமூகம் ஒரு பார்வை
சுந்தரசோழன்

52/252 செல்லப்பா தெரு,
குயப்பேட்டை, சென்னை 600012,

மின்னஞ்சல்: chenthazhal@gmail.com        

செல்பேசி: 9283275513
----------------------------------------
இந்நூலில் காணும் முன்னுரை

உலகின் மிகவும் தொன்மையான வரலாறு கொண்ட நாடுகளைப் பட்டியலிட்டால். அவற்றில் இந்தியாவுக்குத் தனிச் சிறப்பானதொரு இடம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு மிகவும் முனனேறியதாக விளங்கும் மேற்கத்திய நாடுகளும்கூட இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பையும் அதன் தொன்மையையும் ஏற்றுக் கொள்கின்றன.

பண்டைய உலக நாகரிகங்களில் மிகவும் போற்றக்கூடியதாக சிறப்புப் பெற்றவை மெசபடோமியா மற்றும் சுமேரியா போன்ற நாகரிகங்கள் ஆகும். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் செழித்தோங்கியிருந்த அரப்பா நாகரிகம், இவற்றின் சம காலத்தைச் சார்ந்ததாக அமைந்திருந்தது மட்டுமின்றி பல காரணிகளின் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றிற்கு மேலானதாகவும் அமைந்திருந்தது. இன்றைய காலத்தில் இருந்து பின்னோக்கிப் பார்க்கும் போது சுமார் ஐயாயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடுகளை இது நம் முனனர் எடுத்து வைக்கிறது. இந்தியா கடந்து வந்துள்ள வரலாற்றுப் பாதையின் ஒரு முக்கிய மைல்கல் என்னும் வகையில் அது மிகச் சிறப்பானதாகும்.

பண்டைய இந்தியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு மற்றொரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது வேதங்கள் எனப்படும் மதவியல் நூல்கள் ஆகும். இவை காலத் தோற்றம் அற்றவை என்று பொருள்படும் விதமாக அனாதியானவை என்று அழைக்கப்படுகின்றன. இவை இயற்றப்பட்ட காலத்தில் இருந்து வெகு காலம் வரை வெறும் வாய்வழிப் பாடல்களாகவே மனப்பாடம் செய்யப்பட்டு பல தலைமுறைகள் வரை பாதுகாக்கப்பட்டன.

வைதீக இந்துக்களைப் பொறுத்தவரை இவை அறிவுப் பொக்கிஷங்கள் என்பது அவர்களது உறுதியான நம்பிக்கையாக அமைந்துள்ளது. அவற்றில் குறிப்பாக ரிக் வேதம் உலகின் பழமையான வாய்வழி மரபு (Oral tradition) என்னும் வகையில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மதவியல் நம்பிக்கைகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணிகள் பலவற்றின் துவக்கத்தை வேதகாலத்தில் தான் நாம் தேட வேண்டியிருககும். எனவே, இத்தகைய பண்டைய காலத்தைப் பின்னோக்கிப் பார்ப்பதும் அதன் வரலாற்றையும் சரிவரப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்,

ஆனால். வேத காலத்தைப் புரிந்து கொள்ள ரிக் வேதத்தைத் தவிர நமக்கு வேறு உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை,. எனவே ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் அகச்சான்றுகளின் (Internal evidence) அடிப்படையிலும், அது குறித்து இது வரை பல்வேறு துறை அறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களின் அடிப்படையிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வேத காலம் எனப்படுவது வரலாற்று ரீதியாக எந்த காலத்தைக் குறிப்பிடுவது என்பதில் தொடங்கி இது குறித்த ஒவ்வொன்றும் மிகுந்த சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. வேதங்கள் அடிப்படையில் மதவியல் வழிபாட்டு நூல்களே ஆகும் என்பதால், அன்றைய சமூகத்தன் இதர அம்சங்கள் பற்றிய தகவல்களைத் தேடி அவற்றைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் மட்டுமே அது குறித்த முழுமையான பார்வை கிடைக்கப் பெறும்.

இத்தகைய தேவையை எதிர்நோக்கும் ஒரு முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது குறித்துப பல நூல்கள் இருப்பினும் அவை பெரும்பாலும் தமிழ்மொழியில் கிடைப்பதில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கவும். வேத கால சமூகம் மற்றும் அவற்றின் பல்வேறு அம்சங்கள் பற்றிய ஒரு எளி அறிமுகத்தை அளிக்கவும் துணை நின்ற நண்பர்கள் அனைவருககும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சென்னை
19/12/2011                                                                                           சுந்தரசோழன்
sundaracholan@gmail.com                                                                                                   

-------------
பொருளடக்கம்

No comments:

Post a Comment