Tuesday 11 April 2017

ஏப்ரல் ஆய்வுரைகள்- லெனின் (நூல் அறிமுகம்)

(இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், இரட்டை ஆட்சி, செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்.)

-இந்நூல் என் சி பி எச் புத்தக நிறுவனத்தினால் 1967ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது-

நாடு கடந்து வாழ்ந்து வந்த லெனின், 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் பெத்ரோகிராத்திற்கு சென்றார். புரட்சிகர ருஷ்யா லெனினை உற்சாகத்துடன் வரவேற்றது.

       பின்லாந்து ரயில் நிலையத்தில் வந்திறங்கிய லெனினை வரவேற்க தொழிலாளர்களும் விவசாயிகளும் மக்களும் குழுமியிருந்தனர். தரைப்படை, கடற்படை வீரர்களின் புரட்சிகரப் பிரிவுகள், லெனினுக்கு ராணுவ மரியாதையை அளித்தன. கூடியிருந்த மக்களிடம் லெனின் உரை நிகழ்த்தினார்.

       பெத்ரோகிராத் வந்தடைந்த உடனே அடுத்த நடவடிக்கைகளில் இறங்கினார். ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் போல்ஷிவிக்குகளின் கூட்டத்தில், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். பெத்ரோகிராத் வருவதற்காக ரயிலில் பயணிக்கும்போது லெனின் இதனை எழுதினார். இந்த ஆய்வுரையை இரண்டு இடங்களில் நிகழ்த்தினார். போல்ஷிவிக்குகள் கூடியிருந்த கூட்டத்திலும், தவ்ரீதா மாளிகையில் போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் சேர்ந்திருத்த கூட்டத்திலும் இவ்வுரையை நிகழ்த்தினார். இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (1917ஆம் ஆண்டு எப்ரல் 4-5) என்ற தலைப்பில் இந்த ஆய்வுரை பிராவ்தாவில் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவையே பின்னால் ஏப்ரல் ஆய்வுரைகள் என்று புகழ்பெற்றது. இந்த ஆய்வுரையில் கூறிய கருத்தை விரிவாக்கி எழுதிய செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் (ஏப்ரல் 8-13), நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (ஏப்ரல் 10) ஆகியவற்றை இணைத்து ஏப்ரல் ஆய்வுரைகளாக கூறுவது வழக்கம்.

இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்

                இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற கட்டுரையில் பத்து ஆய்வுரைகளை வைக்கிறார் லெனின்.

1) தற்போது ஏற்பட்ட புரட்சியில் தோன்றிய இடைக்கால அரசு, முதலாளித்துவத் தன்மை கொண்டதாக இருப்பதனால் கொள்ளைக்கார ஏகாதிபத்தியப் போராகவே தொடர்கிறது. இதன் காரணமாக “புரட்சிகரப் பாதுகாப்புவாதத்திற்கு” என்ற முழக்கத்தின் மூலம் இந்த இடைக்கால அரசை ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். இந்தப் புரட்சிகரப் பாதுகாப்புவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நேர்மையைச் சந்தேகிக்க முடியாது என்றும் கூறுகிறார். அவர்களிடம், முதலாளித்துவ வர்க்கத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்படுவதை, விடாப்பிடியாகவும், பொறுமையுடனும் விளக்கிக் கூற வேண்டுவது அவசியமானதாகும். மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட முடியாது.

“மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை உண்மையிலேயே ஒரு ஜனநாயகப்பூர்வமான சமாதானத்தோடு, வன்முறையால் திணிக்கப்படாத ஒரு சமாதானத்தோடு முடித்துக் கொள்வது சாத்தியமல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.” 1

2, தற்போதைய புரட்சியின் முதல் கட்டத்தின் பிரத்தியேக நிலைமைகளை கூறுகிறார். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வின் ஒழுங்கமைப்பு போதாமையினால், அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திடம் சென்று விட்டது. புரட்சியின் இரண்டாவது கட்டமாக ஆட்சி அதிகாரம் பாட்டாளி மற்றும் விவசாயிகளிடம் வந்தடைய வேண்டும்.

3) இடைக்கால அரசின் பிரமைகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்த அரசினுடைய வாக்குறுதிகளின் பித்தலாட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்.

4)தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் போல்ஷிவிக்குகள் சிறுபான்மையாகவே இருக்கின்றனர். மக்கள் சோஷலிஸ்டுகள் என்ற குட்டி முதலாளித்துவ கட்சியினர், பல்வேறு நரோத்னிக்கு குழுக்களையும் இணைத்து நிறுவிய சோஷலிஸ்ட்-புரட்சியாளர் கட்சியினர் போன்றோர்களே பெரும்பான்மை இடங்களில் அமர்ந்துள்ளனர். இவர்கள் இடைக்கால அரசை மறைமுகமாக ஆதரித்தனர். முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்குக்கு இவர்கள் பணிந்து கிடக்கின்றனர் என்பதை பாட்டாளி வர்க்கத்திடம் அம்பலப்படுத்த வேண்டும்.

5) தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். தேர்வு செய்யப்படவும் எந்த நேரமும் திரும்பி அழைக்கப்படக் கூடியவர்களுமான  பிரதிநிதிகளடங்கிய, அடிமுதல் முடிவரை தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் ஆகியோர்களைக் கொண்ட சோவியத்துகளின் குடியரசு வேண்டும். இவர்களின் ஊதியம் ஒரு தொழிலாளியின் சாராசரி ஊதியத்தைவிடக் கூடுதலாக இருக்கக் கூடாது.

6) நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும். வட்டார சோவியத்துகள் நிலத்தை விநியோகிக்கும். பெரிய எஸ்டேட்டுகள் ஒவ்வொன்றிலும் மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்படும்.

7) நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் உடனடியாக தனியொரு தேசிய வங்கியில் இணைத்தல்.

8)“சோஷலிசத்தைப் “புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்”.

9) கட்சிக் காங்கிரசை கூட்டுவது, வேலைத்திட்டத்தை மாற்றுவது, பாரிஸ் கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட அரசமைத்தல், மற்றும் கட்சியின் பெயரை மாற்றுவது.

10)  சமூக-தேசிய வெறியர்களையும், நடுநிலைவாதிகளையும் எதிர்க்கின்ற ஒரு புதிய அகிலம் உருவாக்குதல்.

இந்த பத்து ஆய்வுரைகளும் ஏப்ரல் மாதத்தில் 7ஆம் நாளில் பிராவ்தாவில் வெளிவந்ததன.

இரட்டை ஆட்சி

                ருஷ்யாவில் இரட்டை ஆட்சி ஏற்பட்டதின் சூழ்நிலைமையைப் பற்றி இரட்டை ஆட்சி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை லெனின் எழுதினார். இது ஏப்ரல் மாதம் 9ஆம் நாளில் பிராவ்தாவில் வெளியிடப்பட்டது. இதில் தற்கால சூழ்நிலையைப் பற்றிய விளக்கம் கொடுத்து அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு லெனின் அழைப்புவிடுத்தார்.
               
                இந்த இரட்டை ஆட்சி என்கிற யதார்த்தத்தை முதலில் ஏற்றுப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
:
“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் கிரகித்துக் கொள்ள வேண்டும், இது புரிந்து கொள்ளப்படா விட்டால் நாம் முன்னேற முடியாது. பழைய “சூத்திரங்களை” உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் ஸ்தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது. ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.” 2

                இதற்கு அடுத்து இரட்டை ஆட்சியின் தன்மையை விவரிக்கிறார். முதலாளித்துவ வர்க்கத்தின் அரசுக்குப் பக்கத்தில் தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் இருக்கிறது. இந்த சோவியத் பலவீனமாகவும், முளைப்பருவத்திலும் இருந்தாலும் உண்மையில் வளர்ந்து வருகிற ஓர் அரசாகும். இந்த அரசு கீழிருந்து மக்களின் நேரடியான முன்முயற்சியின் அடிப்படையில் அமைந்த புரட்சிகரமான சர்வாதிகாரமாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் நடாளுமன்றத்தைப் போன்றதல்ல. இது பாரிஸ் கம்யூன் வழியில் வந்தது என்றும், அதன் தன்மைகளைத் தொகுத்தும் தருகிறார்.

“இந்த ஆட்சி 1871 பாரிஸ் கம்யூனுடையது போன்ற அதே மாதிரியானது. இந்த மாதிரியின் அடிப்படை குணாம்சங்களாவன,

1) ஆட்சியின் மூலாதாரம் முன்னதாக விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதான ஒரு சட்டம் அல்ல, மாறாக கீழிருந்து அந்தந்த இடங்களில் மக்கள் மேற்கொண்டதன் நேரடி முன்முயற்சி, நடப்புத் தொடரைப் பயன்படுத்திக் கூறினால் நேரடிப் “பற்றுகை”,

2) மக்களிடமிருந்து விலகி நின்று மக்களுக்கு எதிராக இயக்கப்படும் அமைப்புகளான போலீசையும், ராணுவத்தையும் அகற்றி அதற்குப் பதில் மக்கள் அனைவரையும் நேரடி ஆயுதமேந்தச் செய்தல், இத்தகைய ஆட்சியின் கீழ் உள்ள அரசில் ஒழுங்கமைதியை ஆயுதமேந்திய தொழிலாளர்களும் விவசாயிகளும் தாமாகவே ஆயுதமேந்திய மக்களும் கட்டிக் காப்பார்கள்,

3) பணித்துறையாளர், அதிகார வர்க்கத்தார் இதே போன்று மக்கள் தாமாகவே நடத்தும் நேரடி ஆட்சியால் மாற்றீடு செய்யப்படுவர் அல்லது குறைந்தபட்சம் தனிப்பட்ட கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவர், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணித்துறையாளர்கள் ஆவது மட்டும் அல்ல, ஆனால் மக்களின் முதல் கோரிக்கையின் பேரில் திருப்பி அழைக்கப்படுவதற்கும் உட்பட்டோராவர், அவர்கள் சாமான்ய இயக்கிகள் நிலைக்குத் தாழ்த்தப்படுவர், உயர்ந்த முதலாளித்துவ விகிதத்தில் ஊதியம் பெறும் “தொழில்களை” வைத்திருக்கும் தனிச்சலுகை பெற்ற குழு என்பதிலிருந்து தாழ்த்தப்பட்டு, அவர்கள் “சேவைத் துறையின்” விசேஷ “பிரிவின்” ஊழியர்களாவர், அவர்களது ஊதியம் ஒரு திறம்படைத்த தொழிலாளியின் சாமான்ய சம்பளத்தைவிட அதிகமாக இருக்காது.”3

                சோவியத்தின் தனிமாதிரியான அரசை இவ்வாறு லெனின் விளக்கியிருக்கிறார். இடைக்கால அரசு உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை அவரே எழுப்பி அதற்கு பதிலளிக்கிறார்.

“இடைக்கால அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை “அப்படியே” முன்வைக்கும் போது, நமது தோழர்களும் கூட ஏன் இத்தனை பல தவறுகளைச் செய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிய வரும்.

இதற்கு எனது விடை:
1) அது வீழ்த்தப்பட வேண்டும், காரணம் அது ஒரு சிலராட்சி, முதலாளித்துவ அரசாங்கம், மக்கள் அரசாங்கமல்ல, மேலும் அதனால் சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரத்தை வழங்க முடியவில்லை.

2) அதை இந்தக் கணத்தில் வீழ்த்த முடியாது. ஏனெனில் அது, தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளுடன், முதன்மையாயும் பிரதான சோவியத்தான பெத்ரோகிராத் சோவியத்துடன் நேரடியாயும் நேரடியின்றியும், ஒரு சகஜமான மற்றும் மெய்யான உடன்பாட்டின் மூலம் அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

3) பொதுவாக அதை சாதாரண வழியில் “வீழ்த்த” முடியாது, காரணம் அது இரண்டாவது அரசு – தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்- முதலாளித்துவ வர்க்கத்திற்கு அளிக்கும் “ஆதரவின்” மீது நிற்கிறது.” 4

                இறுதியாக லெனின் கூறுகிறார், குட்டி முதலாளித்துவ பிரமைகளுக்கு எதிராக, தேசியவெறிக்கு எதிராக, சொற்ஜாலம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்து இருப்பதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம். பாட்டாளி வர்க்க இயல்புடைய கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டு முறியடிப்போம். பாட்டாளி வர்க்கப் பணிகளுக்காக அணிகளை ஒன்றுதிரட்டி போராடுவோம். குட்டி முதலாளித்துவ மயக்கங்களில் இருப்பவர்களின் மனங்களில் தெளிவு ஏற்படுத்தப் போராடுவோம், முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருப்பவர்களிடம், நமது வர்க்க நலனுக்கு உகந்த அரசாக செயற்படாத இடைக்கால அரசை அப்பலப்படுத்துவோம். இவ்வரசு சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரம் வழங்காததை மக்களுக்கு சுட்டிக்காட்டி விழிப்படையச் செய்வோம்.

செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்

ஏப்ரல் மாதத்தில் எழுதிய கட்டுரைகளில் செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் அதிக விவரங்களைக் கொண்டுள்ளது. நிதானமாகவும், முழுமையாகவும் இதனைப் படிக்க வேண்டும்.

நமது போதனை செயலுக்கு வழிகாட்டியே அன்றி வறட்டுச் சூத்திரம் அல்ல என்று மார்க்சும் எங்கெல்சும் கூறியதை வலியுறுத்தி லெனின் கூறுகிறார்

“இந்தச் சூத்திரங்கள் அதிகபட்சமாகச் சொன்னால் பொதுவான கடமைகளை வரையறுக்க மட்டுமே முடியும், இந்தப் பொதுவான கடமைகள் சரித்திர இயக்கப் போக்கின் குறிப்பிட்ட ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய ஸ்தூலமான பொருளாதார அரசியல் நிலைமைகளால் அவசியம் மாற்றப்படவே செய்யும்” 5

மார்க்சியப் பகுப்பாய்வைப் பற்றி முதலிலேயே லெனின் சொல்லிவிடுகிறார்.

“வர்க்கங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளையும் ஒவ்வொரு வரலாற்று நிலைமைக்கும் தனிச்சிறப்பாயுள்ள ஸ்தூலமான இயல்புகளையும் பற்றிக் கறாராகத் துல்லியமான எதார்த்த வழியில் சரிபார்க்கத்தக்க பகுப்பாய்வு செய்யுமாறு மார்க்சியம் கோருகிறது.6

இதன் அடிப்படையில், ருஷ்யாவின் ஸ்தூலாமான இந்த இரட்டை ஆட்சி நிலைபெற்றிருப்பதை மனதில் கொண்டே நமது செயற்பாட்டை வகுத்துக் கொள்ள  வேண்டும். பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பு பிரபுத்துவ நிலச்சுவான்கள் கையில் அரசு இருந்தது. புரட்சியின் போது வேறு வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கு மாறியுள்ளது. இந்த அளவுக்கு, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுள்ளது என்பதை கூறுகிறார். இந்தக் கூற்றை நிறுவுவதே ஏப்ரல் கட்டுரைகளின் பணியாகும்.

“1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் அரசு அதிகாரம் பழைய வர்க்கத்தின் கையில், அதாவது நிக்கொலாய் ரொமானவ் தலைமை தாங்கிய பிரபுத்துவ நிலச்சுவான்தார்கள் கையில் இருந்தது.

இப்புரட்சிக்குப் பிறகு அதிகாரம் வேறு ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் இருக்கிறது.

இரண்டு வகையிலும், சரியான விஞ்ஞான அர்த்தத்திலும், நடைமுறை அரசியல் அர்த்தத்திலும், அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொன்றுக்கு வந்து சேருவது தான் புரட்சியின் முதற் பெரும் அடிப்படை அறிகுறி.

இந்த அளவுக்கு, முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுவிட்டது.”7

லெனினது இந்த முடிவை ஏற்காமல், சில போல்ஷிவிக்குகள் ஆட்சேபித்தனர். இவர்கள் பழைய போக்கையே பிடித்துக் கொண்டிருக்கிறபடியால் இவர்களை பழைய போல்ஷிவிக்குகள் என்கிறார் லெனின். பாட்டாளி, விவசாயி ஆகிய வர்க்கங்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தின் மூலமாகத்தான் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றிட முடியும் என்றுதானே இதுவரை சொல்லி வந்துள்ளோம். அது இன்னும் தொடங்கக்கூட இல்லை. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப் பெற்றுவிட்டதா? என்பதே இவர்களின் ஆட்சேபம்.

இதற்கு பதிலாக லெனின்:-
“போல்ஷிவிக்கு முழக்கங்களும் கருத்துகளும் பொதுப்படையாய் வரலாறு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஸ்தூலமான விவகாரங்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன, அவை யாரும் எதிர்ப்பாத்திருக்கக் கூடிய அளவுக்கு மேலாகத் தனிமாதிரியாகவும், சிறப்பாகவும் பலவாறாகவும் உருவாகியுள்ளன.

இந்த உண்மையைப் புறக்கணிப்பது அல்லது பார்க்கத் தவறுவது என்பதற்கு பொருள், புதிய உயிர்ப்புள்ள எதார்த்தத்தின் பிரத்தியேக இயல்புகளைப் பயில்வதற்குப் பதிலாகப் பொருள் விளங்காமல் மனப்பாடம் செய்து கொண்ட சூத்திரத்தை திருப்பிச் சொல்லி, நம் கட்சியின் வரலாற்றில் ஏற்கெனவே ஒரு தடமைக்கு மேலாகவே எவ்வளவோ வருந்தத்தக்க பாத்திரம் வகித்த அந்தப் “பழைய போல்ஷிவிக்குகளைப்” பின்பற்றிச் செல்வதேயாகும்.” 8

                மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். நேற்றைய (பழைய) முடிவுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்திடவில்லை என்றால் உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துகளுக்கு பலியிடுவதாகிவிடும்.

“ஒரு மார்க்சியவாதி உண்மையான வாழ்க்கையை, எதார்த்தத்தின் உண்மையான நிலவரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள வேண்டும், நேற்றைய கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது (not cling to a theory of yesterday). அது எல்லாக் கோட்பாடுகளையும் போல் அதிகபட்சமாக போனால் பிரதானமானதையும் பொதுவானதையும் மட்டுமே குறிக்கக் கூடியது, வாழ்க்கையை அதன் எல்லாச் சிக்கலோடும் முழுமையாய்க் காட்டும் நிலையை நெருங்குவதோடு நின்றுகொள்வது- என்கிற மறுக்க முடியாத உண்மையைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை இங்கு வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
..
பூர்ஷ்வாப் புரட்சியின் “நிறைவேற்றம்” என்கிற பிரச்சினையைப் பழைய வழியிலே அணுகுவதானது உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்குப் பலியிடுவதாகும்.” 9

                ஒரு ஸ்தூலமான இடத்திற்கு கூறியதை மற்றொரு பொருந்தாத எதார்த்தத்திற்கு பொருத்தக் கூடாது. மார்க்சியத்தைப் பொறுத்தளவில் கோட்பாடு (theory) என்பது ஒரு ஸ்தூலமான நிலைமைக்கு எடுக்கப்பட்ட முடிவாகும். கோட்பாடு (theory) என்பது அந்தந்த காலத்திற்கு உரிய நடைமுறையை (practice) வகுத்தளிக்கிறது. சமூக வளர்ச்சியோடு ஏற்படும் மாற்றத்தோடு கோட்பாட்டையும் (theory) மாற்ற வேண்டும். புதிய நிலைமைக்கு பொருந்தாத பழையக் கோட்பாட்டை பிடித்துத் தொங்கக்கூடாது.

                எதார்த்தத்தை புரிந்து கொண்டு நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மிகமிக சுயமான புதிதான, முன்னெப்போதும் கண்டிராதபடி ஒரே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியான இடைக்கால அரசும், பட்டாளி - விவசாயிகளின் சோவியத்தும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. இத்தகைய இரட்டை ஆட்சி முறையை ருஷ்யா மட்டுமல்ல எந்த நாடும் கண்டதில்லை.

தொழிலாளர்களின் சோவியத்தின் மீது இடைக்கால அரசு தாக்குதல் தொடுக்கவில்லை, தொடுக்கவும் முடியாது. காரணம் அந்த அரசாங்கத்திடம் போலீஸ், ராணுவம் இல்லை. மக்களுக்கு மேல்நிலையில் நிற்கும் பலம் பொருந்திய அதிகார வர்க்கம் இல்லை. இந்த நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

                ருஷ்யப் புரட்சியை உடனடியாக, சோஷலிசப் புரட்சியாக மாற்ற வேண்டும் என்று தான் திட்டமிடவில்லை என்றும், தமது ஏப்ரல் ஆய்வுரை ஏட்டில் “சோஷலிசத்தைப் புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்” என்று கூறியதை லெனின் நினைவுபடுத்துகிறார். அங்கு கூறப்பட்ட உற்பத்தி விநியோகத்தை இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக்கி எழுதியுள்ளார்.

“அதிக அளவில் தானியம் உற்பத்தி செய்தல், அதைத் திறம்பட விநியோகித்தல், படைவீரர்களுக்குத் திறம்படக் கிடைக்கச் செய்தல் முதலான கடினமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளைக் காட்டிலும், போலீசைக் காட்டிலும் தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் சிறந்த முறையில் தீர்வு காண்பார்கள்- இந்த ஒன்றின் மீது மட்டுமே, முழுக்க முழுக்க இதன்மீதுதான் நான் “திட்டமிடுகிறேன்”” 10

                இதனைப் பாராளுமன்ற குடியரசைக் காட்டிலும் சோவித்துகள் விரைவாகவும் பயனுள்ள முறையிலும் செய்திட முடியும். இந்த முடிவு விருப்பம் சார்ந்த முடிவு கிடையாது. இந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி சூழ்நிலைமைகளே கட்டாயப்படுத்துகின்றன. “பஞ்சம், பொருளாதாரச் சீர்குலைவு, நெருங்கிவரும் தகர்வு, போரின் பயங்கர விளைவுகள், போரால் மனிதகுலத்துக்கு ஏற்படும் பயங்கர கொடுமைகள்,” இவைகளே இன்றைய புரட்சியை, சோஷலிசப் புரட்சியை நோக்கி இட்டுச் செல்வதாக லெனின் இக் கட்டுரையிரையில் வலியுறுத்துகிறார்.


நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (படைப்பு)

நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற இக்கட்டுரை ஏப்ரலில் நடக்க இருக்கும் ருஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (போல்ஷிவிக்) ஏழாவது அகில ருஷ்ய மாநாட்டிற்கு எழுதிய நகல் அறிக்கையாகும்.

நிலப்பிரபுக்களின் எதேச்சதிகார ஜார் அரசு நீக்கப்பட்டு, முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவப் போக்குடைய நிலவுடைமையாளர்களின் கைக்கு அரசு மாறிய வகையில், ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமை அடைந்து விட்டது என்று இந்த அறிக்கையின் முதல் பக்கத்திலேயே லெனின் கூறிவிடுகிறார்.

“ருஷ்யாவில் அரசு அதிகாரம் புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடைந்துவிட்டது” 11

                ஆனால் இந்த புதிய முதலாளித்துவ ஆட்சி, முடியாட்சிவாதிகளுடன் ஒரு கூட்டை நிறுவியுள்ளது. புரட்சிகரத் தொடர்களின் திரையின் பின்னே இந்த அரசாங்கம் பழைய ஆட்சியின் சார்பாளர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளது. புதிய அரசின் சீர்திருத்தங்கள் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான நாளைக்கூட முடிவு செய்யாமல் அறிவிப்போடு நிற்கிறது. அதனால் இந்த அரசு பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெறத் தகுதியானதல்ல என்பதை நடைபெற்றுள்ள புரட்சியின் வர்க்கத் தன்மை என்ற உட்தலைப்பில் லெனின்  விவரிக்கிறார்.

                புதிய அரசின் அயல்துறைக் கொள்கையும் இதனடிப்படையில் தான் அமைந்துள்ளது. அதனால்தான் ஏகாதிபத்தியப் போரை தொடர்ந்து நடத்துவதாகவே உள்ளது. இந்த அரசின் மீது மக்கள் சிறிதும் நம்பிக்கை வைப்பதற்கு அருகதையற்றதாகிறது.

                அடுத்து, இரட்டை ஆட்சியின் பிரத்தியேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும் பற்றி பேசுகிறார். இன்றைய புரட்சி ருஷ்யாவில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதலாளித்துவ இடைக்கால அரசு மற்றொன்று தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அதற்கு இணையான சோவியத் வடிவிலான ஒரு அரசு. இந்த அரசிற்கு அதிகார அமைப்புகள் எதுவும் இல்லை, ஆனால் நேரடியான மக்களின் பெரும்பான்மையைப் பெற்றுள்ள, ஆயுதம் ஏந்திய தொழிலாளர் படைகளையும் கொண்டுள்ளது.

                இப்படி இரட்டை வர்க்கத்தின் ஆட்சி பிணைப்புற்று நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமேயில்லை.  இவற்றில் ஒன்று மறைந்தாக வேண்டும். முதலாளித்துவ இடைக்கால அரசு மக்களின் சோவியத்தை பலவீனப்படுத்த தன்னாலான அனைத்தையும் செய்துவருகிறது. இந்த மாறிவரும் கட்டத்தைப் பற்றி கூறுகிறார் லெனின்:-
“சாதாரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் சுத்தமான சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இந்த இரட்டை ஆட்சி”12

                இந்த அடிப்படையில்தான், இந்தப் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றப்படியான செயற்தந்திரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த செயற்தந்திரம் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.

“நமது பணி விமர்சனப் பணியாக இருத்தல் வேண்டும். குட்டிமுதலாளித்துவ சோஷலிஸ்டு-புரட்சியாளரின் மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளின் தவறுகளை விளக்குவதாக இருத்தல் வேண்டும். உணர்வு பூர்வமான பாட்டாளி வர்க்க, கம்யூனிஸ்டுக் கட்சி சக்திகளைத் தயாரித்து சீராக இணைப்பதாக இருத்தல் வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் “பொதுவான” குட்டிமுதலாளித்துவ போதை மயக்கத்தைப் போக்கிக் குணப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

இது பிரச்சாரப் பணி “மட்டுமே” என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது மிகப்பெரும் நடைமுறைப் புரட்சிகரப் பணியாகும். ஏனெனில் நிலைத்து நின்றுவிட்ட புரட்சி முன்னேற வழியில்லை.” 13

                புரட்சி தொடராமல் போனதற்கான முட்டுக்கட்டை வெளிக்காரணங்களால் ஏற்பட்டதல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் வன்முறையும் காரணமல்ல, இவர்களின் மீதான மக்களின் நியாமற்ற நம்பிக்கையே காரணமாகும் என்கிறார் லெனின். அவர்களின் வர்க்கச் சார்பை புரிந்து இந்த போக்கில் இருந்து விடுபட வேண்டும். குட்டிமுதலாளித்துவத் தலைவர்கள் இடைக்கால அரசை நம்பும்படி போதிக்கின்றனர். முதலாளிகளை நம்பக் கூடாது என்று பாட்டாளிகளுக்கு சமூக பொருளாதாரக் காரணங்களைக் கொண்டு விளக்க வேண்டும்.

“.. நாளுக்கு நாள் நம்பிக்கையுள்ள நியாயமின்மையும், நியாயமில்லாத நம்பிக்கையும் விஷேசமாயும் பாட்டாளிகள் மற்றும் ஏழ்மை மிக்க விவசாயிகளிடையே வீழ்ச்சி அடையும். முதலாளிகளை நம்பக் கூடாது என்று அவர்களுக்கு அனுபவம் (அவர்களது சமூக, பொருளாதார நிலை) போதிக்கிறது.”14

                ஏகாதிபத்திய போரிலிருந்து ருஷ்யாவை காப்பதற்காக, முதலாளித்துவ இடைக்கால அரசை காப்பது என்கிற “பாதுகாப்புவாதம்” பற்றி லெனின் எழுதுகிறார்.

                பாதுகாப்பு வாதத்தில் நம்பிக்கையுள்ள அணியினர், சாதாரண மனிதனைப் போன்று எளிய முறையில் இதனை நோக்குகின்றனர். பிரதேசக் கைப்பற்றல்களை விரும்பாதவன், ஆனால் ஜெர்மனி நம்மை தாக்கும் போது, நாட்டைக் காப்பது என்பது ஏகாதிபத்தியத்தின் நலன்களின் அடிப்படையிலானது கிடையாது என்கின்றனர். இந்த குட்டிமுதலாளித்துவ கண்ணோட்டம், புரட்சியின் மேற்பட்ட முன்னேற்றத்துக்கும் இறுதி வெற்றிக்கும் படுமோசமாக விரோதமானதாகும்.

“புரட்சிகரப் பாதுகாப்புவாதம் என்பது ஒரு புறத்தில் முதலாளித்துவ வர்க்கத்தால் மக்கள்திரள் ஏமாற்றப்படுவதன் விளைவாகும், விவசாயி மக்கள் மற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரிடம் நிலவும் நியாயமில்லாத நம்பிக்கையின் விளைவாகும். மறுபுறத்தில் இது சிறு உடைமையாளரின் நலன்கள் மற்றும் கருத்து நிலையின் ஒரு வெளியீடாகும்.” 15

                காலகாலமாக இருந்து வருகிற தப்பெண்ணங்களின் தொடர்ச்சியே பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாகிறது. அதனால் இந்த நம்பிக்கைகளின் தவறை மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்குரிய திறமைகள் போல்ஷிவிக்குகளுக்குத் தேவைப்படுகிறது. தவறுகள் நேராமல் இதனை உடனடியாகச் செய்வது எளிதானதல்ல என்பதையும் லெனின் சுட்டுகிறார்.

முதலாளித்துவ வளர்ச்சியில் ஏகாதிபத்தியக் கட்டத்தின் உள்முரண்பாட்டால் போர் தோன்றியது. இது ஏகாதிபத்தியவாதிகளின் சித்தத்தில் தோன்றியது கிடையாது. மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கையில் எடுத்துக் கொள்ளாமல், போரில் இருந்து விடுபட முடியாது.

“கொடுங்கொள்ளைக்கார முதலாளிகளினுடைய நலன்களுக்காக மட்டுமே போர் நடத்தப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை, அதனால் செல்வம் குவிப்போர் அவர்கள் மாத்திரமே என்ற போதிலும் போர் அவர்களின் தீய சித்தத்தின் விளைவு அல்ல. இந்தப் போர் உலக முதலாளித்துவத்தின் அரை நூற்றாண்டுக் கால வளர்ச்சி மற்றும் அதன் லட்சக்கணக்கான இழைகளினுடைய தொடர்புகளின் விளைவாகும். மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்துக்கு மாற்றி அளிக்காமல் ஏகாதிபத்தியப் போரிலிருந்து வெளியேறி ஒரு ஜனநாயகமான பலவந்தமில்லாத சமாதானத்தை அடைவது சாத்தியமல்ல.” 16

                ருஷ்ய புரட்சியின் இக் கட்டத்தில் காணப்படும் இந்த நிலைமைகளை அறிந்து கொள்ளாமல், ருஷ்யாவின் சோஷலிசப் புரட்சியைப் பற்றி லெனின் குறிப்பிடுகின்றவைகளை புரிந்து கொள்ளமுடியாது. அனைத்து நிலத்தையும் தேசவுடைமையாக்க வேண்டும் என்பது போன்ற மக்களின் சோஷலிசக் கோரிக்கையை, இரட்டை ஆட்சியில் ஒன்றான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ இடைக்கால அரசால் நிறைவேற்ற முடியாது.

இரட்டை ஆட்சியில் ஒருபக்கம் சோவியத்தை வைத்துக் கொண்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதில் மார்க்சிய வளர்ச்சி பற்றிய வறட்டுக் கண்ணோட்டத்தின் படி முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சிக்குப் பிறகு சோஷலிசப் புரட்சி என்று பேசிக் கொண்டிருப்பது, ருஷ்ய எதார்த்த சூழலுக்கு எதிரான போக்காகும்.  பழைய தப்பெண்ணங்களில் வீழ்ந்துகிடக்கும் பிளாகானவ், காவுத்ஸ்கி போன்ற போலி மார்க்சியவாதிகளிடம் இருந்து விடுபட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இது பற்றி அடுத்த உட்தலைபான நமது புரட்சியிலிருந்து ஒரு புது மாதிரியான அரசு தோற்றமளிக்கிறது என்பதில் விவரிக்கிறார்.

“பொருளாதார வீழ்ச்சியும் போரினால் ஏற்பட்டதான நெருக்கடியும் எந்தளவு அதிக ஆழமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆக முழுநிறைவான அரசியல் வடிவத்தின் தேவையும் அதிக அவசரமானதாகி விட்டது. இது போர் மூலம் மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்ட பயங்கரமான காயங்களை ஆற்றுவதற்கு நிச்சயம் துணை செய்யும். ருஷ்ய மக்களின் ஒழுங்கமைப்பு அனுபவம் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உறுதியுடன் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் “நல்ல நிலையிலுள்ள” அதிகார வர்க்கத்தார் மூலம் மட்டும் அன்றி, மக்கள் தமக்குத் தாமே ஒழுங்கமைப்பை வளர்த்துக் கொள்ளுவதை செயலூக்கத்துடன் துவக்க வேண்டும்.

போலி மார்க்சியத்தின், பிளாகானவ் காவுத்ஸ்கி வகையறாக்களால் புரட்டப்பட்டதான மார்க்சியத்தின் பழைய தப்பெண்ணங்களை எவ்வளவு விரைவாக நாம் விட்டொழிக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகச் செயலூக்கத்துடன் மக்கள் எல்லா இடங்களிலும் உடனடியாகவும் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிதிகள் சோவியத்துகளை ஒழுங்கமைப்பதற்கு நாம் உதவி புரிய ஏற்பாடு செய்கிறோமோ- அந்த சோவியத்துகள் வாழ்க்கை முழுவதையும் தமதுகண்காணிப்புக்குள் மேற்கொள்ளலாம்- லுவோவ் வகையறாக்கள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு எந்தளவு அதிகத் தாமதம் செய்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்கள் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிகளின் சோவியத்துகளின் குடியரசுக்குச் சாதகமாக முடிவு எடுப்பது எளிதாகும்.
..
நாம் நம்மையே ஒழுங்கமைத்துக் கொண்டு, நமது பிரசாரத்தைத் திறம்படச் செய்வோமானால், பாட்டாளிகள்  மட்டுமின்றி விவசாயி மக்களில் பத்தில் ஒன்பது பங்கினர் போலீஸ் மீண்டும் நிலைநாட்டப்படுவதை எதிர்ப்பார்கள். நீக்கம் செய்ய முடியாத தனியுரிமையுள்ள அதிகாரவர்க்கத்தையும், மக்களிடமிருந்து விலகி நிற்கும் ராணுவத்தையும் எதிர்ப்பார்கள். புதிய மாதிரியான அரசை ஆதரித்து நிற்பது இவற்றை குறித்தே.” 17


                இதற்கு அடுத்து, நிலம் மற்றும் தேசிய வேலைத்திட்டத்தைப் பற்றி பேசுகிறார். பாட்டாளி வர்க்கக் கட்சி உடனடியாக விவசாயிகளின் நலன்களுக்கு உகந்த ஒரு வேலைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். எல்லா நிலமும் தேசவுடைமையாக்கப்பட வேண்டும், அதாவது நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் மைய அரசு அதிகாரத்தின் உடைமையாக்கப்பட வேண்டும்.

                தேசியத் திட்டத்தில், தேசிய இனப்பிரச்சினையைப் பற்றி பேசுகிறார். ஜாராட்சியால் ஒடுக்கப்பட்ட, அரசின் எல்லைக்குள் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள அனைத்து தேசங்களுக்கும் மக்களினங்களுக்கும் பிரிந்து போவதற்கான முழுசுதந்திரத்தை அறிவித்து அதனை உடனடியாக நிறைவேற்றுவதையும் ஆதரிக்க வேண்டும். இதற்கான காரணத்தை லெனின் கூறுகிறார்:-
“பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப் படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவுப்புகளும் பிரகடனங்களும் அறிக்கைகளும் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புக்களே அல்லது குட்டிமுதலாளித்துவத் தன்மையானதே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.
..
முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம், ஆக விரிவான ஸ்தல (மற்றும் தேசிய) சுயாட்சி, தேசியச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு விரிவான உத்தரவாதம்- இதுவே புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம்.” 18

                பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சியின் வேலைத்திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை சுருக்கமாகவும் தெளிவாகவும் லெனின் முன்வைத்துள்ளார். பிரிதலை மறுக்கவும் இல்லை அதே நேரத்தில் இந்தப் பிரிதல் பின்னாளைய இணைவுக்காகவே என்பதையும் தெளிவுப்படுத்தப்படுகிறது. அதனால் இங்கே குட்டி முதலாளித்துவ கோட்பாடான “தேசிய-கலாசார தன்னாட்சி”யை ஏற்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பது சர்வதேசியவாதமல்ல.

                லெனின் ருஷ்யாவில் சோஷலிசத்தை உடனடியாகப் புகுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கூறுகிறார்.

“சோஷலிஸ்டுப் புரட்சியின் அவசியத்தை மக்கள் தொகையின் மிகப் பெரிய பெரும்பான்மை தெளிவாக உணராத காலம் வரையில், ஒரு சிறு விவசாயிகளின் நாட்டில் சோஷலிசத்தைப் “புகுத்தும்” நோக்கத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி எந்தவொரு சந்தர்ப்ப சூழ்நிலையின் கீழும் முன்வைக்கக் கூடாது.

ஆனால், “மார்க்சியத்திற்கு நெருங்கியதான” கவர்ச்சித் தொடர்களின் பின்னே ஒளிந்து நிற்கும் முதலாளித்துவக் குயுக்திவாதிகள் மட்டுமே, இந்த மெய்விவரத்தில் இருந்து, உடனடியாக புரட்சிகர நடவடிக்கைகளை ஒத்திப்போடுவதற்கான ஒரு கொள்கையை நியாயப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளுக்கான உரிய காலம் ஏற்கெனவே கனிந்துவிட்டது. இவை பல முதலாளித்துவ நாடுகளால் போரின் தறுவாயில் ஏற்கெனவே அடிக்கடி கையாளப்பட்டன. வர இருக்கும் முழுமையான பொருளாதாரக் குலைவு மற்றும் பஞ்சத்தை எதிர்த்துப் போராட இவை முற்றிலும் இன்றியமையாதவை.

நிலம், அனைத்து வங்கிகள் மற்றும் முதலாளித்துவ சிண்டிகேட்டுகளை சேதவுடைமையாக்குதல் அல்லது குறைந்த பட்சம் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் கட்டுப்பாட்டை உடனடியாக அவற்றின் மீது நிலைநாட்டுதல் போன்ற நடவடிக்கைகள் (எந்த வழியிலும் சோஷலிசத்தைப் “புகுத்துவது” என்று அமையாத நடவடிக்கைகள்) முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும். எப்பொழுது சாத்தியமோ அப்பொழுது இவை புரட்சிகரமான வழியில் செய்து முடிக்கப்பட வேண்டும்” 19

                அடுத்து இரண்டாம் அகிலத்தின் நிலையினை விமர்சிக்கிறார். முதலாளிகளுக்கு இடையேயான ஒர் போர் எற்படும்போது அதனை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பது அகிலத்தின் முடிவு. ஏகாதிபத்திய உலகப் போர் தொடங்கிய போது மேலே எடுக்கப்பட்ட கருத்தோடு சோஷலிஸ்டுகள் முரண்பட்டனர். அப்போது மூன்றுவிதமான போக்குகள் தோன்றியது. முதல் போக்கு, ஏகாதிபத்தியப் போரை எதிர்க்காமல் தாயகத்தைப் பாதுகாப்போம் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் விளைவித்து முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் போய்ச் சேர்ந்த தேசிய வெறியர்கள். சொல்லில் சோஷலிசம் செயலில் தேசியவெறி.

                இரண்டாவது, “நடுநிலைவாதிகள்” இவர்கள் சமூக தேசிய வெறியர்களுக்கும் உண்மையான கம்யூனிச சர்வதேசியவாதிகளுக்கும் இடையே ஊசலாடினர். சொல்லில் சர்வதேசியம் செயலில் கோழைத்தனமான சந்தர்ப்பவாதம்.

மூன்றாவது, உண்மையான சர்வதேசியவாதிகள். நமது முதன்மையான எதிரி உள்நாட்டில் என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பதை ஏற்றவர்கள்.

அடுத்து, மூன்றாவது அகிலத்தை நிறுவ வேண்டியதின் அவசியத்தை கூறுகிறார். இரண்டாம் அகிலத்தினுடைய தகர்வின் காரணமானவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் கொண்டிராத புதிய மூன்றாம் அகிலத்தை அமைக்க வேண்டும். செயலிலும் சர்வதேசிய வாதிகளாக செயற்படுகிற ருஷ்ய போல்ஷிவிக்குகளுக்கே இத்தகைய பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“நாம்தான் இக்கணமே எவ்விதத் தயக்கமும் இன்றி ஒரு புதிய புரட்சிகரமான பாட்டாளி வர்க்க அகிலத்தை நிறுவ வேண்டும். அதைவிடவும் இந்தப் புதிய அகிலம் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டு விட்டது, இயங்கி வருகிறது என்பதைப் பகிரங்கமாக அங்கீகரிப்பதற்கு நாம் அஞ்சக்கூடாது.”20

                கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றிக் கொள்வது பற்றி இக்கட்டுரையின் இறுதியில் லெனின் பேசுகிறார். சமூக ஜனநாயகம் என்பது விஞ்ஞான வழியில் பிழையாகாது. ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவம். மார்க்சியவாதிகள் ஒவ்வொரு வகையான அரசையும் எதிர்ப்பவர்களே. ஆனால் இன்றைய நிலையில் அதாவது சோவியத்துக்கு எதிராக செயற்படும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் சார்பாளர்களையும் இவர்கள் முற்ற முழுக்க எதிர்த்தாக வேண்டும். அதனால் ருஷ்யாவிற்கு ஆயுதமேந்திய படைகள் தேவை, ஆனால் இந்த வழக்கமான அரசு அச்சொல்லின் சரியான பொருளில் அரசு அல்ல. ஏன் என்றால் இந்த அரசில் ஆயுதமேந்திய படைகள் மக்கள் திரளினரிடையே தாமே தோன்றியதாகும். மக்களுக்கு மேல் அமர்த்தப்பட்ட எந்த அதிகார சக்தியும் இதில் கிடையாது. இது முதலாளித்துவ மாதிரியான ஜனநாயகமாக அல்லாது புதியதாய் பிறந்து வரும் புதிய ஜனநாயகமாகும். இதன் தொடர்ச்சியாய், வளர்ச்சியாய் எல்லா விதமான அரசும் உலர்ந்து உதிர்வதன் முன்னடையாளமான அரசாகும்.

பயன்படுத்திய நூல்கள்

1.இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் – தேர்வு நூல்கள் 5 பக்கம் 31
2.இரட்டை ஆட்சி - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 39
3. மேற்கண்ட நூல் -பக்கம்- 40-41
4. மேற்கண்ட நூல் - 5 பக்கம்- 42
5.6.7.8.9&10.செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்
11.நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 45
12. மேற்கண்ட நூல் - பக்கம்- 51-52
13. மேற்கண்ட நூல் - பக்கம்- 54-55
14. மேற்கண்ட நூல் - பக்கம்- 56
15. மேற்கண்ட நூல் - பக்கம்- 57
16. மேற்கண்ட நூல் - பக்கம்- 61
17. மேற்கண்ட நூல் - பக்கம்- 64-65-66
18. மேற்கண்ட நூல் - பக்கம்- 70-71
19. மேற்கண்ட நூல் - பக்கம்- 72-73
20. மேற்கண்ட நூல் -பக்கம்- 85

No comments:

Post a Comment