Saturday, 15 April 2017

மதமும் கம்யூனிஸ்ட் கட்சியும் – லெனின் (அறிமுகம்)

இருபதாம் நூற்றாண்டின், முதற்பத்தின் நடுப்பகுதியில், மார்க்சியம் மீது சந்தேகப் பார்வை ஏற்படுத்தும் முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் இறங்கினர். இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்று பழைமைப்பட்டு போய்விட்டது. காலத்துக்கு ஒவ்வாது போய் காலாவதியாகிவிட்டது என்று விமர்சித்தனர். மார்க்சியவாதிகளிடையேயும் மார்க்சியத்தின் போதாமையைப் பற்றி பேசத் தொடங்கினர். மார்க்சியத்தின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி மார்க்சியமும் ஒருவகை புதிய மதமாக கடவுள்-கருத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். இதனை எதிர்த்து லெனின் கடுமையாகப் போராடினார்.

சோஷலிசமும் மதமும், மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை என்ற கட்டுரைகளை பத்திரிகைகளில் லெனின் எழுதினார்.

ஒரு பேச்சாளர் மக்களுக்கு தெரிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, புரிந்திட வேண்டும் என்ற நோக்கோடு “சோஷலிசம் தான் என்னுடைய மதம்” என்று பேசுகிறார், ஓர் எழுத்தாளர் “கடவுள்- கருத்தை உருவாக்குதல்”, அதாவது கடவுள் கருத்தை தோற்றுவிக்கும் சோஷலிசத்தைப் பற்றி பேசுகிறார். இவை இரண்டும் கண்டனத்துக்கு உரியதே. பேச்சாளரின் செயல் மதத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வது என்கிற பொருளைத் தருகிறது, இந்தப் பேச்சாளரின் தவறு என்பது மக்களுக்கு வழிகாட்டும் முறையில் உள்ள சிக்கல் மட்டுமே, ஆனால் இந்த எழுத்தாளரின் பிரச்சினை அவ்வாறு அல்ல. மிகவும் கண்டனத்துக்கு உரியது, ஏன் என்றால் இவரது கருத்து, சோஷலிசத்தில் இருந்து மதத்தை நோக்கி பயணிக்கிறது. இது மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுக்கு முரணானது.

ஒரு கம்யூனிஸ்ட் தமது வழிகாட்டும் கோட்பாடாக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையே கொண்டுள்ளான். பொருள்முதல்வாதம், அடிப்படையில் மதத்துக்கு எதிரானது. அது மட்டுமல்லாது, கம்யூனிஸ்டுகளுடைய மதத்தின் மீதான அணுகுமுறை, அராஜகவாதியின் புரட்சிவாதத்துக்கும், குட்டிமுதலாளித்துவ மிதவாதியின் சந்தர்ப்பவாத அறிவாளர்களின் கண்ணோட்டத்துக்கும் எதிரானது. பகுத்தறிவுவாத அராஜவாதிகள், மாற்றத்திற்கு உள்ளாகாத கருத்துமுறையிலான தத்துவ வழியிலான போராட்டமாக முன்வைக்கின்றனர். சந்தர்ப்பவாதிகள் மதத்தின் மீதான எதிர்ப்பைக் காட்டுவதற்கு தடுமாற்றம் கொண்டனர். மதத்தை எதிர்ப்பதற்கான தமது கடமையை மறந்துவிட்டு, கடவுள் நம்பிக்கையோடு சமரசப்படுத்திக் கொண்டனர். இவ்விருவரையும் லெனின் விமர்சித்தார்.

“ஒருமார்க்சியவாதி ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் இருக்க வேண்டும், அதாவது மதத்தின் எதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒர் இயக்கவியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞானரீதியான, ஒரு போதும் மாற்றமடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப்போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்.

ஒருமார்க்சியவாதி ஸ்தூலமான நிலைமையை முழுமையாக அணுகிப்பார்க்கக் கூடியவராக இருக்க வேண்டும். அராஜகவாதத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டை (இந்த எல்லைக்கோடு சார்புநிலையானது, நகரக்கூடியது, மாறக்கூடியது ஆனால் அது இருக்கிறது) எப்பொழுதும் கண்டுபிடிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.”1

டூமாவில் ருஷ்ய கம்யூனிஸ்டுகள் மதம் மக்களுக்கு அபின் என்று கூறியது மிகச் சரியானது என்பதை லெனின் தமது கட்டுரையில் உறுதிப்படுதினார்.

“டூமா மேடையில் மதம் மக்களுக்கு அபின் என்று பிரகடனம் செய்ததன் மூலம் நமது டூமா குழுவினர் மிகவும் சரியாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் ஒரு முன்மாதிரியை உண்டாக்கி இருக்கிறார்கள். இதுதான் மதம் தொடர்பான பிரச்சினையில் ருஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் எல்லா கூற்றுகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும். அவர்கள் மேலும் சற்று அதிகமாகச் சென்று நாத்திகவாதத்தை மேலும் விரிவாக அபிவிருத்தி செய்திருக்க வேண்டுமா?

நாம் அவ்வாறு நினைக்கவில்லை. இது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்கு மதத்திற்கு எதிரான போராட்டத்தை மிகைப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டு வந்திருக்கக்கூடும். அது மதத்திற்கு எதிரான பூர்ஷ்வாக்கள் நடத்தும் போராட்டத்திற்கும், சோஷலிஸ்டுகள் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் உள்ள தெளிவான வேறுபாட்டைத் தடம் இல்லாமல் செய்வதில் கொண்டுபோய் விடக்கூடும்.” 2

                போல்ஷிவிக் கட்சியின் நகல் திட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை முழுமையாக வெளிப்பட்டுள்ளது. அதில், மதத்தை அரசியலில் இருந்தும், கல்வி நிலையங்களை மதத்தில் இருந்தும் பிரித்துவிட வேண்டும் என்ற கருத்தோடு கட்சியின் அணுகுமுறை நின்றுவிடவில்லை. இந்தக் கோரிக்கைகளை பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளும் வைக்கின்றனர், ஆனால் இதனை எங்கும் முழுமையாக நிறைவேற்றவில்லை. இதற்கு காரணம் மூலதனத்துக்கும் மதப்பிரச்சாரத்துக்கும் உள்ள பிணைப்பை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மதக்கேடுகளில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதே கட்சியின் குறிக்கோள். இதற்கு மிக விரிவான விஞ்ஞானக் கல்விக்கும், மத எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கும் கட்சி ஏற்பாடுகளைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று கூறியதோடு ஒர் எச்சரிக்கையை லெனின் வைக்கிறார்.

“எனினும் மத நம்பிக்கை உள்ளவர்களின் மெல்லிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏன் என்றால் அம்மாதிரி புண்படுத்துவது மதவெறியை அதிகப்படுத்த உதவி செய்துவிடும்”3

மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது, ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும் முழுமையான உரிமை பெற்றிருக்க வேண்டும் என்கிற கம்யூனிஸ்டுகளின் கருத்தை சந்தர்ப்பவாதிகள் மாற்றிப் பொருள் கொள்கின்றனர். இதனை மறுத்து லெனின்:-
“மதம் தனிப்பட்ட விவகாரம் என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று பாட்டாளி வர்க்கத்தின் கட்சி கோருகிறது. ஆனால் மக்களுடைய மதமெனும் அபினுக்கு எதிரான போராட்டம், மதச் சார்பான மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம், இதரவற்றைத் "தனிப்பட்ட விவகாரம்" என்று அது கருதுவதில்லை. சமூக - ஜனநாயகக் கட்சி மதத்தைத் தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகிறது என்று அர்த்தப்படும்படியாக இந்தப் பிரச்சினையைச் சந்தர்ப்பவாதிகளே திரித்துக் கூறுகிறார்கள்!” 4

                மக்களுக்கு வழிகாட்டும் கம்யூனிஸ்ட் போராளிகள், மதத்தின் வர்க்கத் தன்மையை உணர்ந்து, மூடத்தனத்தில் இருந்து விடுபட்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களாலேயே பாட்டாளிகளுக்கு சிறந்த வழிகாட்டியாக செயற்படமுடியும். கட்சியைப் பொருத்தளவில் மதம் என்பது தனிப்பட்டவர்களின் விவகாரம் அல்ல என்று லெனின் தெளிவுபடுத்துகிறார்.

சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் அமைப்பாமாகும். இப்படிப்பட்ட ஒரு அமைப்பு மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.
.. .. ..
மதத்தின் மூலமான எல்லாவித மாய்மாலங்களாலும் தொழிலாளர்கள் ஏய்க்கப்படுவதை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்தும் பொருட்டே ருஷ்யாவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகிய நமது அமைப்பை நாம் நிறுவிக் கொண்டோம். ஆகவே நமக்குச் சித்தாந்தப் போராட்டம் தனிநபரது சொந்த விவகாரமல்ல, கட்சி அனைத்துக்கும், பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரிய விவகாரமாகும். 5

பயன்படுத்திய நூல்கள்:-
1.மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை
2. மேற்கண்ட நூல்
3. ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷிவிக்) யின் நகல் வேலைத்திட்டத்தில் இருந்து மதத்தைப் பற்றிக் குறிப்பிடும் வேலைத்திட்டப் பகுதி
4.மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை
5. சோஷலிசமும் மதமும்

No comments:

Post a Comment