பிப்ரவரிப் புரட்சியின் தொடக்கத்தில் போல்ஷிவிக்
கட்சியினர் தமது தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்படையான செயற்பாட்டுக்கு வந்தனர்.
மீண்டும் 1917ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாளில் இருந்து பிராவ்தா வெளியிடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்த லெனினுக்கு புரட்சி
தொடங்கியது பற்றி செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்தபடியே புரட்சியின்
போக்கை கவனித்துக் கொண்டிருந்தார். பிப்ரவரி புரட்சியை அறிந்ததுமே, புரட்சி தொடர்பாக
கட்சி சந்தித்துவரும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தொலைவிலிருந்து
கடிதங்கள் என்ற பெயரில் ஐந்து கடிதங்களை எழுதி அனுப்பினார். ஐந்தாவது கடிதம்
முழுமையடையாத நிலையில் காணப்படுகிறது. முதல் கடிதம் மார்ச் பிராவ்தா இதழில் சுருக்கமாக
வெளிவந்தது. மற்றவை அக்டோபர் புரட்சிக்குப் பின்பே பதிப்பிக்கப்பட்டது. ஐந்தாவது கடிதத்தில்
காணப்படும் கருத்துக்களை செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள், நமது
புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற தொடர் கட்டுரைகளில்
விரிவாக்கினார்.
ஏகாதிபத்திய உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற
வேண்டும் என்ற போல்ஷிவிக்கின் முடிவின்படி, முதல் புரட்சி ருஷ்யாவில் ஏற்பட்டதைக் குறிப்பிட்டுத்
தொலைவிலிருந்து கடிதங்கள் என்ற சிறுகட்டுரை தொடங்குகிறது. எட்டே நாட்களில்
ஒரு முடியாட்சி தகர்ந்து விழுந்த அற்புதத்தைச்
சுட்டுகிறார்.
“இயற்கையிலேயோ வரலாற்றிலேயோ
அற்புதங்கள் கிடையா. ஆனால் வரலாற்றின் ஒவ்வொரு திடீர் திருப்பமும் அத்தகைய செழுமையான
உள்ளடக்கத்தினை வழங்குகின்றது. போராட்ட வடிவங்கள் மற்றும் போராடும் தரப்புக்களின் சக்திகளது
அணி சேர்க்கையில் இத்தகைய எதிர் பாராத பிரத்தியேக இணைப்புக்களை வெளிப்படுத்துகின்றன.
இது ஒவ்வொரு புரட்சிக்கும் பொருந்தும். எனவே சாமான்யர் மனதில் அற்புதமாகத் தோற்றமளிப்பவை
நிறைய இருக்கும்”1
ஜார் ஆட்சி இவ்வாறு வீழ்ந்து போனதற்கு பல காரணிகள்
இணைந்திருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை 1905-07ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வர்க்கப்
போராட்டம் ஆகும். அகிலத்தில் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக் கொள்ளப்படாத திட்டம்,
இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
“ஏகாதிபத்தியப் போர் புறவயப்பட்ட
தவிர்க்கவொண்ணாமையுடன், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப்
போராட்டத்தை முன் என்றும் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிதாகவே முடுக்கும், தீவிரமாக்கும்
என்பது திண்ணம், பகைமை வர்க்கங்களுக்கு இடையே ஒர் உள்நாட்டுப் போராக இது மாறுவது நிச்சயம்.
இந்த மாற்றமானது 1917ஆம்
ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சியால் ஏற்கெனவே துவக்கப்பட்டு விட்டது.” 2
இன்று போரிடுகிற முதலாளித்துவப் பிரிவுகளையும்,
முதலாளித்துவ அமைப்பின் எஜமானர்களையும், முதலாளித்துவ அமைப்பின் அடிமை உடமையாளர்களையும்
இந்தப் போர் இரும்புச் சங்கிலிகளால் ஒன்றுடன் ஒன்று பிணைத்திடுகிறது என்று லெனின் கூறுகிறார்.
“போர் வெடித்தவுடன் முதலாளித்துவ
வர்க்கத்தின் பக்கம் துறந்தோடியுள்ள சோஷலிஸ்டுகள்- ஜெர்மனியில் டேவிட்கள், ஷெய்டெமன்கள்,
ருஷ்யாவில் பிளாகானவ்கள், பத்ரேசவ்கள் குவஸ்தியோவ்கள் வகையறாக்கள் அனைவரும்- புரட்சியாளர்களின்
“பிரமைகளுக்கு” எதிராக, ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப போராக மாற்றும் “கேலிக்கூத்தான
கனவுக்கு” எதிராக உரத்தும் நீண்ட காலமாயும் ஆரவாரம் செய்து வந்தனர். முதலாளித்துவம்
வெளிப்படுத்துவதாகக் கூறப்படும் வலிமை, விடுபடாவுறுதி, தகவமைப்பு ஆகியவற்றுக்கு சர்வ
சுரங்களிலும் புகழ்மாலை பாடினார்கள். இவர்கள்தான் பல்வேறு நாடுகளிலுமுள்ள தொழிலாளர்
வர்க்கங்களைத் “தகவமைக்கவும்”, வதக்கி அடக்கவும், ஏமாற்றம் செய்யவும், பிளவுறுத்தவும்
முதலாளிகளுக்கு உதவியர்கள்!” 3
பாட்டாளி வர்க்க சிந்தனையில் இருந்து துறந்தோடியவர்களைப்
பற்றி கடுமையான கோபத்தில் இவ்வாறு லெனின் எழுதியுள்ளார். மேலும் இரட்டை ஆட்சியின் தோற்றத்தையும்
அதன் வர்க்க இயல்பையும் எடுத்துக் காட்டுகிறார். இன்றைய அரசியல் சூழ்நிலைகளின் எதார்த்தத்தை
துல்லியமாக வரையறுத்தால்தான் மார்க்சிய வழிப்பட்ட செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள
முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.
“ருஷ்யா முழுவதிலுமுள்ள
தொழிலாளர்களைப் போலவே பெத்ரோகிராத் தொழிலாளர்களும் ஜாரிச முடியாட்சியை எதிர்த்துத்
தன்னல மறுப்புடன் போராடினார்கள். சுதந்திரத்திற்காகவும், விவசாயிகளுக்கு நிலம் கோரியும்,
ஏகாதிபத்தியப் படுகொலையை எதிர்த்து சமாதானத்திற்காகவும் போராடினார்கள். அந்தப்
படுகொலையைத் தொடர்ந்து நடத்தவும் அதைத் தீவிரப்படுத்தவும் வேண்டி ஆங்கில-பிரெஞ்சு ஏகாதிபத்திய
முதலாளிகள் அரசபரிவாரச் சதிகளைத் தொடுத்தார்கள், காவற்படை அதிகாரிகளுடன் கூடிச் சதிபுரிந்தார்கள்.
குச்கோவ்களையும் மில்யுக்கோவ்களையும் தூண்டிவிட்டு ஊக்குவித்தார்கள், முழுமையான புதிய
அரசாங்கம் ஒன்றை அமைத்தார்கள். இவர்கள்தான் பாட்டாளி வர்க்கம் ஜாரிசத்தை எதிர்த்து
முதல் தாக்குதலைத் தொடுத்ததும் உடனடியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்.
…
இந்த அரசாங்கம், தற்போதைய
போரைப் பொருத்தவரை கோடி டாலர் “நிறுவனமான” “இங்கிலாந்து மற்றும் ஃபிரான்சின்” கையாளாகவே
இருந்து வந்துள்ளது. இதனுடன் அக்கம் பக்கமாக முக்கியமான, அதிகாரபூர்வமல்லாத இன்னும்
வளர்ச்சி பெற்றிராத, ஒப்பளவில் பலவீனமான தொழிலாளர் அரசாங்கம் தோன்றியுள்ளது.
அது பாட்டாளி வர்க்கத்தின், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற மக்கள் தொகையின் எழைகள்
பகுதி முழுமையின் நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே பெத்ரோகிராதில் உள்ள தொழிலாளர்
பிரதிநிதிகளின் சோவியத் ஆகும்.
இத்தகைய படைப்பாளிகளின்
சோவியத் விவசாயிகளுடனும், விவசாயத் தொழிலாளிகளுடனும் தொடர்பை நாடுகிறது. விவசாயிகளை
விட மேலதிகமாக விவசாயத் தொழிலாளிகளிடம் குறிப்பாயும் முதன்மையாயும் தொடர்புகளை நாடுகிறது.
மெய்யான அரசியல் நிலைமை
இத்தகையதே. இதை நாம் ஆகக்கூடுமான அளவு புறவயமான துல்லியத்துடன் முதலில் வரையறுக்க முயல
வேண்டும். அதன் வழி, மார்க்சிய செயற்தந்திரங்கள் சாத்தியமான ஒரே உறுதியான அடித்தளம்- மெய்நடப்புகளின் அடித்தளம்- மீது நிறுவப்படலாம்.
ஜாரின் முடியாட்சி நொறுக்கப்பட்டது,
ஆனால் இறுதியாக அழிக்கப்படவில்லை.” 4
தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத்தின்
கரு, மக்கள் தொகையின் பத்தில் ஒன்பது பேரின் நலனான சமாதானம், உணவு, சுதந்திரத்திற்காகப்
பாடுபடுகிறது. ஆனால் இடைக்கால அரசால் இதனைச் செய்திட முடியாது. காரணம் அது ஒரு முதலாளித்துவ
அரசு. உணவு இருக்கிறது, அதைத்தர முடியும்,
ஆனால் மூலதனம் மற்றும் நிலவுடைமையின் புனிதத் தன்மையினை மதிக்காத முறைகளின் மூலம் மட்டுமே
இது முடியும் என்பதால் வாய்ப்பில்லை. சுதந்திரத்தை வழங்க முடியாது. காரணம் அது ஒரு
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அரசாகும். இதனை தெளிவுபடுத்திய லெனின், பாட்டாளி வர்க்கம்
தமக்குரிய நேசசக்திகளை இணைத்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிறார். முதல்
நேசசக்தி சிறு விவசாயிகள், இரண்டாவது போரிடும் நாடுகள் அனைத்தின் பாட்டாளி வர்க்கமுமாகும்.
“இந்த இரு நேசசக்திகளுடன்
சேர்ந்து பாட்டாளி வர்க்கம் தான், இன்றைய மாறுதல் கட்ட நிலைமையின் பிரத்தியேகத் தன்மைகளைப்
பயன்படுத்தி குச்கோல், மில்யுக்கோவ் அரை-முடியாட்சிக்குப்பதில் ஒரு ஜனநாயகக் குடியரசை
அடைவதற்கு, நிலப்பிரபுக்களை எதிர்த்து விவசாயிகள் முழுவெற்றி பெறுவதற்கு முதலில் முன்செல்ல
முடியும். சோஷலிசம் மட்டுமே போரால் சோர்வுற்ற மக்களுக்கு சமாதானம், உணவு மற்றும் சுதந்திரத்தை
வழங்க முடியும்.” 5
புரட்சியின் விளைவாக ஜாரின் யதேச்சாதிகாரம் நீங்கியது.
பேசுவதற்கும், அச்சகங்களை நடத்துவதற்கும், கூட்டங்கள் கூடுவதற்கும், சங்கங்கள் அமைப்பதற்கும் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. இதனைப்
பயன்படுத்தி போல்ஷிவிக்குகள் மக்களை மேலும் விழிப்படையச் செய்தனர்.
பயன்படுத்திய நூல்கள்
1.தொலைவிலிருந்து கடிதங்கள் - தேர்வு நூல்கள் 5
- பக்கம்- 11-12
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 15
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 16
4. மேற்கண்ட நூல் - பக்கம்- 21-22-23
5. மேற்கண்ட நூல் - பக்கம்- 29
No comments:
Post a Comment