Thursday 13 April 2017
எங்கிருந்து தொடங்குவது?- லெனின் (கட்டுரை அறிமுகம்)
1901ஆம் ஆண்டு மே மாத இஸ்க்ரா
இதழில் லெனின் எங்கிருந்து தொடங்குவது? என்ற கேள்வியை எழுப்பும் வகையில்
ஒரு கட்டுரை எழுதினார்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே
ஒன்றைத் தெளிவு படுத்திவிட்டார். மார்க்சியமே நமது திசைவழி என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
இப்போதையப் பிரச்சினை தேர்ந்து தெளிந்த திசைவழியில் செல்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை
எவ்வாறு மேற்கொள்வது என்பதேயாகும். அதாவது திட்டமும் அதனை நடைமுறைப்படுத்த தேவைப்படுகிற
அமைப்பு பற்றியதாகும். போராட்டத்தின் தன்மையையும் வழிமுறைகளையும் பற்றிய முடிவைத் தீர்க்க
வேண்டும் என்ற முனைப்போடு இக்கட்டுரையும், இதன் விரிவாக்கமாக என்ன செய்ய வேண்டும்?
என்ற நூலையும் லெனின் எழுதினார்.
தனித்தனிச்
சலுகைகளைப் போராடிப் பெறுவதோடு நிற்காமல், எதேச்சதிகாரக் கோட்டையை தகர்த்தெறிவதை நோக்கமாகக்
கொண்ட அமைப்பு முறையில் அணிதிரட்டப்பட்ட வலுமை வாய்ந்த கட்சியை அமைப்பதே முதன்மையான
திட்டமாகும். ‘24 மணிநேரத்தில் செயற்தந்திரப் பிரச்சினையை மாற்றிக் கொள்வது சாத்தியமே’
என்பது போன்ற சொற்களுக்குள், கட்சியின் அவசியத்தை மறுதலிக்கின்ற போக்கை லெனின் கண்டித்தார்.
புரட்சிக் கலகங்கள் திடீரென்று வெடித்தெழும் பொழுது, அந்நேரத்தில் அமைப்பை கட்டுது
என்பது காலங்கடந்த முயற்சி ஆகிவிடும்.
“நொடி நேர எச்சரிக்கையில் செயலில்
இறங்குவதற்குத் தயார் நிலையில் அமைப்பு இருக்க வேண்டும். “இருபத்துநான்கு மணி நேரத்தில்
செயற்தந்திரங்களை மாற்றிக் கொள்வதாம்”! ஆனால் செயற்தந்திரங்களை மாற்றிக் கொள்வதற்கு
முதலிலேயே செயற்தந்திரங்களை வகுத்திருக்க வேண்டுமே. எல்லாவிதச் சூழ்நிலைகளிலும் எல்லாக்
காலங்களிலும் நடத்தப்பட்ட அரசியல் போராட்டத்தில் சோதித்துப் பெற்ற வலுவான அமைப்பு இல்லாமல்,
உறுதியான கோட்பாடுகளால் ஒளியூட்டப்பட்டு விடாப்பிடியாக நிறைவேற்றப்பெறும் முறையிலான
செயல்திட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கே இடமில்லை.”
பயங்கரம் (Terror)
என்பது இன்றைய பிரச்சினையாகிவிட்டது என்று கூறுபவர்களிடம் லெனின் தமது நிலைப்பாட்டை
கூறுகிறார். ஆங்கிலத்தில் டெரர் (பயங்கரம்) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கே
பலப்பிரயோகம் (Force) பற்றிப் பேசப்படுகிறது என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.
பலப்பிரயோகம் பற்றிய மார்க்சிய கொள்கையை இதில் லெனின் பதிவிடுகிறார்.
“கோட்பாடு
முறையில் நாம் பயங்கரத்தை (Terror) ஒருபொழுதும் நிராகரித்ததில்லை, நிராகரிக்கவும் முடியாது.
பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கையில் ஒருவகையாகும். அது படைகளின் குறிப்பிட்ட
நிலைமையும், குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் பொறுத்து, போராட்டத்தின் குறிப்பிட்ட தருணத்தில்
முற்றிலும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி இன்றியமையாததாகவும்கூட இருக்கலாம். ஆனால்
இவர்களது கூற்றின் சாரம் என்ன?
போராட்டத்தின் முழு ஏற்பாட்டுடன்
நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த வகையில், களம் புகுந்து போர்புரியும் படையின் ஒரு நடவடிக்கையாக
இவர்கள் இப்போது பயங்கரவாதத்தைக் கருதாமல், எந்தப் படையுடனும், தொடர்பற்ற விதத்தில்,
தனித்து நிற்கும் தாக்குச்செயலாகவே அதனைக் கருதிப் பேசுகிறார்கள். மைய அமைப்பு இல்லாத
நிலையில், வட்டாரப் புரட்சி அமைப்புகள் பலவீனமாக இருக்கும் நிலையில் பயங்கரவாதம் இந்த
வகையிலேதான் உருவாகும். எனவேதான், தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய போராட்ட முறை காலத்திற்கு
ஒவ்வாததாயும் பொருத்தமற்றதாயும் உள்ளதென்று நாம் உறுதியாகச் சாதிக்கிறோம்.
மேலும்
இப்போராட்ட முறை தீவிரமாகப் போராடும் வீரர்களின் கவனத்தை, முழு இயக்கத்தின் நலன்களைக்
கருதுங்கால் மிகமிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த உண்மைக் கடமையில் இருந்து அப்பால்
திருப்புகிறது என்றும், அது அரசாங்கச் சக்திகளை அல்ல, புரட்சிச் சக்திகளையே சீர்குலைக்கிறது
என்றும் நாம் உறுதியாகப் பிரகடனம் செய்து வருகிறோம்.
…
தனிப்பட்ட வீரச் செயல்களின்
முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் நமக்குச் சிறிதும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்தை
மிக அதிகமாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும், அதை முதன்மையான, அடிப்படையான போராட்ட முறையாகக்
கருதுவதை எதிர்த்தும் கடுமையாக எச்சரிப்பது நம் கடமை. மேற்சொன்ன கருத்து இப்போது மிகப்
பலரை ஈர்த்திருக்கிறது. பயங்கரவாதம் என்பது
போராட்ட நடிவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. அதிகமாகச் சொல்லப்
போனால், தீர்மானமான தாக்குதலின் வழித்துறைகளில் ஒன்றாக அது பயன்படலாம்.”
புரட்சிச்
சக்திகளை சீர்குலைக்கிற இடதுதிரிபான அராஜகவாதத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையிலான
வேறுபாட்டை இங்கே லெனின் தெளிவுபடுத்துகிறார். பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில்
முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது என்று கூறியதின் மூலம் கம்யூனிஸ்டுகள்
வன்முறையாளர்கள் என்கிற பொய்யான கூற்று தவிடுபொடியாகிறது.
வட்டார
வேலைகளில் முழுகிக் கிடக்கும் சமூக ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) சிதறிக்கிடப்பதே
ஊசலாட்டத்துக்கு காரணமாகும். இதையே மிகப்பெரிய குறைபாடாக சுட்டிக்காட்டிய லெனின், இதில்
இருந்து விடுபடுவதற்கான வழியாக பல்வேறு வட்டார இயக்கங்களை ஒரே அகில ருஷ்ய இயக்கமாக
மாற்றியமைக்க வேண்டும் என்கிறார்.
அமைப்பை உருவாக்குவதற்கு முதலில்
ஓர் அகில ருஷ்ய அரசியல் பத்திரிகையை நிறுவவேண்டும். வெளிப்படையான கட்சி செயற்பட முடியாத
நிலையில் பத்திரிகையின் மூலம், சிதறலான கிளர்ச்சியை முறையான பொதுக் கிளர்ச்சி மூலம்
வலுப்படுத்துவதற்கு பத்திரிகை தேவையான ஒன்றாகும். இத்தகைய பத்திரிகை கூட்டுத்துவப்
பரப்புரையாளனாகவும், கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும்
செயற்படும் என்கிறார்.
“.. பத்திரிகை ஆற்ற வேண்டிய
பங்கு, கருத்துக்களைப் பரப்புவதிலும் அரசியல் அறிவைப் புகுத்துவதிலும், அரசியல் கூட்டாளிகளை
ஈர்த்துக் கொள்வதிலும் மட்டும் அடங்கிவிடுவதில்லை. பத்திரிகை என்பது கூட்டுத்துவப்
பரப்புரையாளனாகவும், கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும்
உள்ளது.
இவ்வகையில் இதனைக் கட்டிடம்
கட்டும் பொழுது அதனைச் சுற்றி எழுப்பும் சாரத்திற்கு ஒப்பிடலாம், சாரம் கட்டிடத்தின்
புற வடிவத்தைக் காட்டுகிறது, தனித்தனிக் கட்டிடத் தொழிலாளர்களிடையே உள்ள தொடர்புக்கு
வசதி ஏற்படுத்தி வேலையைப் பிரித்துக் கொடுக்கவும் ஒழுங்கமைந்த உழைப்பினால் அடையப் பெற்ற
பொதுப்பலன்களைக் கணித்தறியவும் உதவுகின்றது.
செய்தித்தாளின் உதவியாலும்
தொடர்பினாலும் ஒரு நிரந்தர அமைப்பு தானாகவே அமையத் தொடங்கும். அந்த அமைப்பு வட்டார
வேலைகளில் மட்டுமின்றி, முறையான பொது வேலையிலுங்கூட ஈடுபடும், அரசியல் நிகழ்ச்சிகளை
கவனமாகக் கண்காணிக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தையும் மக்கட்தொகையின் பல்வேறு பகுதியினரின்மீது
அவை செலுத்தும் செல்வாக்கையும் மதிப்பிடவும், புரட்சிகரமான கட்சி இந்நிகழ்ச்சிகளை மாற்றி
உருவாக்குவதற்கேற்ற வழிமுறைகளை வகுக்கவும் அது தன் உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கும்.”
இக்கட்டுரையின் இறுதியில்
லெனின் தப்பெண்ணத்தைத் தவிர்ப்பதற்காக சிலவற்றை கூறுகிறார். அதில், “முறையான திட்டமிட்ட
தயாரிப்பைப் பற்றி பேசிவருகிறோம், ஆனால் சரியான முற்றுகை அல்லது நன்கு ஒழுங்கமைந்த
தாக்குதல் மூலமே எதேச்சதிகாரம் வீழ்ந்து ஒழியும் என்று உட்குறிப்பாக உணர்த்துவது நம்முடைய
விருப்பம் அல்ல” என்று தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாது “அத்தகைய கருத்து முட்டாள்தனமானது,
புத்தகப் புழுவுக்கு உரியது?. மேலும் கூறுகிறார்.
“அதற்கு
மாறாக, எல்லாப் பக்கங்களில் இருந்தும் இடைவிடாமல் அச்சுறுத்தும் தன்னியல்பாகத் தோன்றும்
திடீர் வெடிப்புக்களில் ஒன்றின் நிர்ப்பந்தத்தாலோ, எதிர்பாராத அரசியல் சிக்கல்களின்
நிர்ப்பந்தத்தாலோ எதேச்சதிகாரம் தகர்ந்து ஒழியும் என்பது முற்றிலும் சாத்தியமானது,
வரலாற்றுப் போக்கில் அதிக வாய்ப்புள்ளது. ஆனால் யோசனையற்ற முரட்டுத் துணிச்சலான செயல்களில்
வழுக்கி விழுவதைத் தவிர்க்க விரும்பும் எந்த அரசியல் கட்சியும், மேற்சொன்ன திடீர் வெடிப்புக்களையும்
சிக்கல்களையும் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் தன் நடவடிக்கையை அமைத்துக் கொள்ள
முடியாது.
நம் வழியே நாம் போக வேண்டும்,
நம்முடைய முறையான வேலையில் ஒரே விடாப்பிடியாக ஈடுபட வேண்டும். எதிர்பாராத நிகழ்ச்சிகள்
மீது எவ்வளவு குறைவாக நாம் நம்பிக்கை வைக்கிறோமோ, அவ்வளவுக்கு “வரலாற்றுத் திருப்பங்கள்”
நம்மைத் திகைக்கச் செய்ய மாட்டா என்ற உறுதி அதிகமாகும்.”
எதிர்பார்த்த
நிகழ்வுகள் நடைபெறாமல் போனால், வரலாற்றுத் திடீர் திருப்பம் திகைப்படையச் செய்துவிடும்.
அதனால் போராட்ட வடிவங்களை முன்கூட்டி தீர்மானிப்பதை இங்கே லெனின் மறுக்கிறார். அனைத்துவித
போராட்டங்களுக்கும் தயாரா இருக்க வேண்டும் என்பதை இங்கே மறுப்பதாக தவறாக எண்ணக் கூடாது.
ஓரு குறிப்பிட்ட போராட்டத்திற்கு மட்டும் தயாராவதையே மறுக்கிறார்.
இக்கட்டுரையில்
பேசப்பட்டதை விரிவாக்கி ஒரு நூல் தயாராகிவருவதாக லெனின் குறிப்பிட்டுள்ளார். நூலின்
பெயர் என்ன செய்ய வேண்டும்?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment