Friday 14 April 2017

ஏகாதிபத்தியமும் தேசிய இனப் பிரச்சினையும்.

(லெனின் நூல்களின் அடிப்படையில் சிறு அறிமுகம்)

ஏகாதிபத்தியப் போர் தொடங்கிய நேரத்தில் முதலாளித்துவம் தேசியஇனப்பிரச்சினையை தோற்றுவித்தது. மக்களையும் தொழிலாளர்களையும் பிளவுபடுத்துவற்கு இது சிறந்த வழியாக கண்டது. ஜார் அரசும் தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்கி, தேசியஇனங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டிவிட்டது. சர்வதேசியக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகவேண்டியது போல்ஷிவிக்குகளின் உடனடி கடமையாகியது.

1903ஆம் ஆண்டு நடைபெற்ற ருஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரசில் தேசியஇனங்களின் சுயநிர்யண உரிமை ஏற்கப்பட்டிருந்தது. மார்க்ஸ் எங்கெல்ஸ் கருத்துக்களுடன் இரண்டாவது அகிலத்தின் லண்டன் (1896) மாநாட்டிலும் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டிருந்தது.

தேசிய இனப்பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினைதான். ஆனால் வெறும் அரசியல் பிரச்சினையாக மட்டும் இதனை புரிந்து தீர்வினை வகுக்க முடியாது. ஏன் என்றால் இதற்கான பொருளாதார அடிப்படைகளையும் இதனைச் சார்ந்த மக்களின் கருத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சிய தேசியஇனப் பிரச்சினைக்கு தீர்வாக வைக்கப்படுகின்ற சுயநிர்ணய உரிமை என்பது பொருளாதார அடித்தளங்களைக் கொண்டும், வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களைக் கொண்டும் அணுகப்பட்ட அரசியல் முடிபாகும்.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற புகழ்பெற்ற நூலில் லெனின் தனது முடிவுகள் எப்படி மார்க்ஸ், எங்கெல்ஸ் வழிவந்தது என்பதைத் தொகுத்தளித்திருக்கிறார். 1864ஆம் ஆண்டு மார்க்ஸ் அகிலத்திற்கான உரையை தயார் செய்து கொண்டிருக்கும் போது மாஜினியின் தேசியவாதத்தை எதிர்த்து வாதிடும்போது மார்க்ஸ் கூறிய கருத்தைத் தொடர்ந்து லெனின் கூறுகிறார்:-
“”உரையில் சர்வதேச அரசியல் வந்தது என்ற அளவுக்கு நான் நாடுகளைப் பற்றியே பேசினேன். தேசியஇனங்களைப் பற்றியல்ல, ருஷ்யாவை கண்டித்தேனே தவிர சிறிய தேசங்களையல்ல.” “தொழிலாளர் பிரச்சினையுடன்” ஒப்பிடும் போது தேசியஇனப் பிரச்சினைக்கு உரிய இடம் இரண்டாவது இடமே என்பதில் மார்க்சுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது கோட்பாடு தேசியஇன இயக்கங்களைப் புறக்கணித்ததே கிடையாது”1

1866ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் தேதி மார்க்ஸ் எழுதியதை லெனின் குறிப்பிடுகிறார்:-
“ மார்க்ஸ் எழுதுகிறார் :- “நேற்று அகிலத்தின் கவுன்சிலில் தற்போது நடக்கும் போரைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது… எதிர்பார்க்கப்பட்டபடியே இந்த விவாதம் பொதுவாக “தேசியஇனப்” பிரச்சினை மற்றும் அதன்பால் நாம் எடுக்கும் உறவுநிலை என்ற விஷயத்தோடு முடிவடைந்தது… ‘இளம் ஃபிரான்சின் பிரதிநிதிகள் (தொழிலாளரல்லாதார்) எல்லாத் தேசிய இனங்களும் – தேசங்களும் கூட – பழைமைப்பட்டுப் போன தப்பெண்ணங்களே என்ற கருத்தை முன்வைத்தார்கள். இது புரூதோன்வாத முறையிலான ஷ்டிர்னரியம்…””2

இந்த மார்க்சின் குறிப்புகளில் இருந்து லெனின் தொகுத்து எழுதுகிறார்:-
“மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளில் இருந்து இயல்பாக எழும் முடிவு தெளிவானது: தேசியஇனப் பிரச்சினையை குருட்டு வழிபாடு ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு உகந்த செயல் அல்ல. ஏனெனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி எல்லா தேசிய இனங்களையும் கட்டாயமாக சுதந்திரமான வாழ்வை நோக்கியே எழுச்சியுறச் செய்வது கிடையாது. ஆனால் மக்கள் திரளின் தேசியஇன இயக்கங்களை அவை தொடங்கிய பிறகு ஒதுக்கித் தள்ளுவதும், அவற்றினுள் முற்போக்கானதாக இருக்கும் அம்சங்களை ஆதரிக்க மறுப்பதும் நடைமுறையில் தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு இடமளிப்பதாகும்,” 3

இதே போன்று போலந்து, அயர்லாந்து பிரச்சினைகள் பற்றி மார்க்ஸ் கூறியதை அடிப்படையாகக் கொண்டே லெனின் தனது சுயநிர்ணய உரிமைப் பற்றி கோட்பாட்டை வளப்படுத்தினார்.

மார்க்ஸ் மறைந்த பிறகு, எங்கெல்ஸ் மறைந்து ஒராண்டு கடந்த பிறகு கூடிய இரண்டாம் அகிலத்தின் லண்டன் மாநாட்டின் தீர்மானத்தை, லெனின் தமது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற நூலில் கொடுத்துள்ளார்.

“இத்தீர்மானம் கூறுவதாவது:
“எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணயத்துக்கான முழு உரிமை உண்டு என்பதை, ஆதரிப்பதாக இந்தக் காங்கிரஸ் அறிவிக்கிறது, ராணுவ, தேசியஇன அல்லது இதர வரம்பற்ற அதிகாரத்தின் நுகத்தடியின் கீழ் துயருறும் எல்லா நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இது தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது, சர்வதேச முதலாளித்துவத்தை முறியடிப்பதற்காகவும், சர்வதேச சமூக-ஜனநாயகத்தின் குறிக்கோள்களை அடைவதற்காகவும் ஒன்று சேர்ந்து போராடுவதற்காக உலகம் முழுவதுமுள்ள வர்க்க உணர்வு கொண்ட (தமது வர்க்க நலன்களைப் புரிந்து கொள்வோர்) தொழிலாளர்களின் அணிகளில் சேர வருமாறு அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் இக்காங்கிரஸ் அழைக்கிறது.”

நாம் ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருப்பது போல, நமது சந்தர்ப்பவாதிகளான செம்கோவ்ஸ்கி, லீப்மன், யுர்க்கோவிச் ஆகியோருக்கு இந்தத் தீர்மானம் இருப்பதே தெரியாது. ஆனால் ரோஸா லுக்சம்பர்க்குக்குத் தெரியும்.”4

இந்தத் தீர்மானம் இருக்கிறதைத் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிற சந்தர்ப்பவாதிகள் இந்த பெயர்பட்டியலில் இடம்பிடித்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டு, லெனினது கருத்துக்குச் செல்வோம்.

லெனின் தேசியஇனப்பிரச்சினைப் பற்றி சிறிய - பெரிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கவை, நமது வேலைத்திட்டத்தில் தேசியஇனப் பிரச்சினை- இஸ்க்ரா- 1903. தொழிலாளி வர்க்கமும் தேசியஇனப்பிரச்சினையும்- பிராவ்தா- 1913. மகா ருஷ்யர்களது தேசியப்பெருமித உணர்ச்சி குறித்து- 1914. ருஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்- 1913. தேசியஇனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- 1913. தேசியஇனங்களின் சுயநிர்ண உரிமை- 1914. சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்-1916. சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு-1917. தேசிய இனங்களின் பிரச்சினை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”-1922

இவ்வளவு நூல்களால் இப்பிரச்சினை பற்றி தெளிவுபடுத்திய பின்பும் லெனின் தேசியஇனப் பிரச்சினை பற்றி முழுமையாக வெளிப்படுத்தவில்லை அவரது முடிவுகள் குழப்பமானது என்று கூறுபவர்கள் இன்றும் உண்டு. அவ்வாறு எந்த குழப்பத்தையும் அவர் இந்தப் பிரச்சினையில் ஏற்படுத்தவில்லை என்பதைப் பார்ப்போம்.

தேசியப் பிரச்சினை இரண்டு காரணங்களால் தோன்றுகிறது. ஒரு பேரரசில் உள்ள முதலாளிகள் தனது பொருளாதார நலன்களின் அடிப்படையில் பிற அரசுகளை தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் நிலையில் அவ்வரசுகள் உரிமைக்காகப் போராடும் போது தேசியப் பிரச்சினை எழுகிறது. மற்றொன்று, ஒர் அரசு தேசியமாக உருவாகின்றபோது ஒரே அரசின் கீழ் உள்ள பேரினத்தைச் சார்ந்த முதலாளிகள் தமது பொருளாதார விரிவாக்கத்தின் காரணமாக மற்ற சிறிய தேசியத்தின் பண்பாடு, கல்வி, நீதி, பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றை ஒடுக்கும்போது ஏற்படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார வளாச்சி அடைகின்ற பொழுது தமது சரக்கைச் சந்தைப்படுத்தும் முனைப்பில் தனக்கு கீழ் உள்ள முதிர்ச்சியடையாத சிறிய தேசங்களை ஒருங்கிணைக்கும்போது ஏற்படுகிடுகின்ற பாதகமான சூழ்நிலையே தேசிய இனப்பிரச்சினையாக வடிவெடுக்கிறது. இவற்றில்தான் தேசிய இன இயக்கங்களின் தோற்றத்துக்கான பொருளாதார அடித்தளம் அமைந்திருக்கிறது.

"ருஷ்யாவில் தேசிய இன இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. இவை இந்த நாட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமானதும் அல்ல. உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும், அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும், குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் - இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது."5

சரக்கு உற்பத்தியின் முழு வெற்றிக்கு முதலாளித்துவம் உள்நாட்டு சந்தையை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும், அதற்கு ஒரே மொழி, ஒரே அரசியல் வழியில் ஒருங்கிணைக்கப்பட்டதான பிரதேசம் தேவைப்படுகிறது. இந்த ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அரசதிகாரம் போன்றவற்றை நிலைநாட்ட முற்படுகின்ற பொருளாதார நலன்களில்தான் தேசிய இன பிரச்சினைக்கான இயக்கங்கள் தோன்றுவதற்கான அடிப்படை அமைந்துள்ளது.

இதனை ஸ்டாலின் கூறுகிறார்:-
நிலப்பிரபுத்துவம் இன்னும் ஒழிக்கப்படாத இடங்களிலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி பலவீனமாக உள்ள இடங்களிலும் பொருளாதார அளவில் தங்களுக்குள் ஒருங்கிணைந்த தேசங்களாக இன்னமும் உருவாகாது, பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட தேசிய இனங்கள் வாழ்வின்ற இடங்களிலும் அரசுகளின் உருவாக்க முறை இப்படித் தான் காணப்பட முடியும்6
               
இந்த விடுதலை இயக்கங்கள் மேற்கு ஐரோப்பாவுக்கு மட்டுமல்லாது, நாகரிகம் அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் உரியது என்கிறார் லெனின்.

தேசிய இனப்பிரச்சினைக்கான கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டத்தை லெனின் தொகுத்துத் தருகிறார். அதில் எந்த தேசிய இனத்துக்கும், எந்த மொழிக்கும் தனி உரிமை என்பது கிடையாது, தேசிய இனங்களின் அரசுகள் பிரிவது ஜனநாயக வழியில் நடத்தப்பட வேண்டும்.

"தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:-
எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எவ்விதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை,

தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்,

எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாகவோ இருக்கும்படியான எந்த நடிவடிக்கையும் சட்ட விரோதமானது என்றும் செயலுக்கு வர முடியாதது என்றும் பிரகடனம் செய்து,

இம்மாதிரியான நடிவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும்,

இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிறப்பித்தல்."7

ஒரு தேசத்தில் காணப்படும் இரு தேசிய இனங்களில் உள்ள பாட்டாளிகளின் வர்க்க ஒற்றுமைதான் கம்யூனிஸ்டுகளுக்கு அவசியமானது, சிறிய தேசிய இனங்களின் பிரிதல் என்பது சிறிய தேசிய இன தேசியவாதத்துக்குத்தான் துணைபோகும் என்று சந்தேகிப்பவர்களுக்கு லெனினது பதிலளிக்கிறார்.

சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பது மிகவும் கடைக்கோடி முதலாளித்துவ தேசியவாதத்துக்கே உதவும் என்கிற கூற்று சிறுபிள்ளைத்தனமான மடமை. ஏனெனில், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரசாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது முதலாளித்துவ தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதையோ எவ்வகையிலும் விலக்குவதில்லை. இதற்கு மாறாக  பிரிந்து போகும் உரிமையை மறுப்பதுதான் மிகக் கடைக்கோடி தேசியவாதத்திற்கு உதவுவதாகிவிடும் என்பதே மறுக்க முடியாத உண்மை என்கிறார் லெனின்.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும். இக் கடமை பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சமாக உகந்ததாகும். இதனைத் தொடர்ந்து ஒர் எச்சரிக்கை வைக்கிறார் லெனின், ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனத்துக்கு கொடுக்கப்படும் ஆதரவின் வரம்பை தாண்டுவது முதலாளித்துவத்தின் தேசியவாதப் பக்கம் சாய்ந்து, பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் புரிவதில் போய் முடிந்துவிடும்.

பிரபுத்துவ ஆதிக்கம் அனைத்தையும், தேசிய இன ஒடுக்குமுறை அனைத்தையும், எந்த ஒரு தேசிய இனத்துக்கோ எந்த ஒரு மொழிக்கோ உள்ள எல்லாத் தனியுரிமைகளையும் ஒழித்துக் கட்டுதல் ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும், பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சயமாய் உகந்ததாகும்- தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமான பூசல்கள் இவ்வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பவை, தடுத்து மட்டுப்படுத்துகிறவை. ஆனால், பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் கண்டிப்பான இந்த வரம்புகளுக்கு- வரலாற்று வழியில் அமைந்த இந்தத் திட்வட்டமான எல்லைகளுக்கு - அப்பால் செல்வது, பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகம் புரிந்து முதலாளி வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும். இங்கு எல்லை வரம்பு இருக்கிறது, பல சந்தர்ப்பங்களிலும் இது மிக மெல்லியதாய் இருக்கக் கூடியது. புந்து, உக்ரேனியத் தேசியவாத சோஷலிஸ்டுகள் இதனை அறவே மறந்து விடுகிறார்கள்.”8

லெனினது எச்சரிக்கையின்படியே கவனமாக செயற்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். தேசிய இனப் பிரச்ச்சினையில் முற்போக்கான ஜனநாயகப் போராட்டத்தோடு நின்றுவிட வேண்டும், அதற்கு மேல் அதில் வீழ்ந்து கிடந்தால் முதலாளித்துவ தேசியவாதத்தை சார்ந்ததாகிவிடும்.

"..தேசிய இனப் பிரச்சினையின் எல்லாக் கூறுகளிலும் மிகவும் வைராக்கியமான, சிறிதும் முரணற்ற ஜனநாயகத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். இந்தப் பணி பிரதானமாய் எதிர்மறையானது. ஆனால் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்கு மேல் செல்வது சாத்தியமன்று, எனெனில் இதற்கு மேல் முதலாளி வர்க்கத்தின் "நேர்முகச்" செயற்பாடு, தேசியவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகி விடுகிறது."9

                முதலாளித்துவ தேசிய வெறி பலநேரங்களில் தேசத்தைத் துண்டாடும் நோக்கிலேயே செயல்படுகிறது. இதனையும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமான பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் ஒன்றென தவறாக புரிந்து கொள்கின்றனர். பிரிவினைவாதம் வேறு சுயநிர்ணய உரிமை என்பது வேறு. பிரிவினை வாதம் தேசத்தை துண்டாட வேண்டும் தனித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றுவது. பாட்டாளிகளின் சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு தேசங்களில் உள்ள தொழிலாளர்கள் நெருக்கமாக ஒன்றிணைத்து முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான வழியாக உருவாக்கப்பட்டது.

"ருஷ்யாவின் பகுதியாக உருவெடுத்துள்ள எல்லா தேசங்களும் தடங்கலின்றிப் பிரிந்து போகவும் சுதந்திரமான அரசுகளை உருவாக்கிக் கொள்ளவுமான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு இந்த உரிமையைத் தர மறுப்பதோ அல்லது அது நடைமுறையில் செயலுருப் பெறுவதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதோ நாடு பிடித்தல் அல்லது பிரதேசக் கைப்பற்றல் கொள்கையினை ஆதரிப்பதற்குச் சமமாகும். தேசங்களின் பிரிந்து போகும் உரிமையினைப் பாட்டாளி வர்க்கம் அங்கீகரிப்பது மூலம் மட்டுமே, பல்வேறு தேசங்களிலுமுள்ள தொழிலாளிகளிடையே முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த முடியும், தேசங்களை உண்மையிலேயே ஜனநாயகமான வழிகளில் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முடியும்."10

                இங்கு லெனின் கூறுவதை உணர்ந்தால் தேசங்களின் பிரிந்து போதல் என்ற உரிமை பாட்டாளிகளின் முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு துணைபுரியும். அத்தோடு தேசங்கள் ஜனநாயகமான வழிமுறையில் மேலும் நெருங்கி ஒன்றிணைந்து கலக்க முடியும்.

யாருடனும் ஒன்றாத தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கேட்கப்படுகின்ற பிரிவை பிரிவினைவாதம் என்கிறது மார்க்சியம். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையை கோருகின்றனர், அதாவது இன வேறுபாட்டால் உருவான மனவேறுபாட்டை முன்னிருத்துகின்றனர். தனக்கான ஒரு நாட்டை, அதாவது யாருடனும் நெருங்காத வகையில் தனித்திருக்க விரும்புதல், மற்றும் தனது மொழிக்கென ஒரு நாட்டை எங்கேயேனும் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருதலை மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது.

அது மட்டுமல்லாது முதலாளிகள் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு தேசிய வெறியை ஊட்டுகின்றனர். அதனால்தான் மார்க்சியவாதிகள் சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து இருப்பதற்கும் அல்லது  பிரிந்து போவதற்கும் தாம் விரும்பும் வேறொரு தேசிய இனத்தோடு இணைந்து கொள்வதற்குமான முயற்சியை வலியுறுத்துகின்றனர்.

தேசியத்தை ஒடுக்குகின்ற கொள்கையின் விளைவாகத்தான் தேசத்தில் பிரிவினை தூண்டப்படுவதாக மார்க்சியம் கருதுகிறது. சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது அவ்வளவே. இதனை தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்து சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்து விளக்குகிறார்.

பிரிந்து செல்லும் சுதந்திரத்தை வலியுறுத்துவோர், பிரிவினையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டுவது, விவாகரத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகளை அழிப்பவராக குற்றஞ்சாட்டுவது போன்றது.

முதலாளித்துவ அரசில் சுயநிர்ண உரிமையை நிராகரிப்பது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பதற்கு சமம் என்பதை லெனின் எச்சரிக்கையை யோடு நமக்கு விளக்குகிறார்.

சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரைத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முட்டாள்தானமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமூகத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு விவாகரத்துச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளுக்குக் கேடுவிளைக்கும் வகையில் போலீஸ் நிர்வாக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல.11

                விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே விவாகரத்துக்குக் காரணம் என்ற உதாரணத்தைப் போலவே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கையே தேசிய இன அரசைத் தோற்றுவிக்கிறது. தேசியவாத பிரிவினையை மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் பிரிவினைவாதமாகவே கருதுகிறது. அதனால் சுயநிர்ணய உரிமையை பிரிவினையைத் தூண்டும் கருத்தாக பார்க்க முடியாது. லெனின் மேலும் கூறுகிறார், ஒரு குறிப்பிட்ட தேசிய இன அரசின்  பிரிவு தேவையான ஒன்றா என்று, ஸ்தூலமான நிலைமைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதை கம்யூனிஸ்டுகள் நிராகரிப்பதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

"சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசின் பிரிவு அவசியமானதுதான் என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது நிச்சயமானது ஆகும்"12

-ஆக இணக்கம் காணமுடியா நிலைமையில் தான் பிரிதலை மார்க்சியம் முன்வைக்கிறது. பிரிந்து இருத்தலை வலியுறுத்துகிற தேசிய இனக் கலாச்சாரம் என்பதை மார்க்சியம் மறுதலிக்கிறது.

“தேசிய இனக் கலாசாரம் என்னும் முழக்கம் பூர்ஷ்வா ஏமாற்றாகும். நம்முடைய முழக்கம்:  ஜனநாயகத்தினுடைய, உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசியக் கலாசாரம்.”13

                சுயநிர்ணய உரிமை என்பதை குட்டிமுதலாளித்துவவாதிகள் தேசிய இனக் கலாச்சாரமாக புரிந்து கொள்கின்றனர். இது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் ஆகாது, நிச்சயமாக பூர்ஷ்வா தேசியவாதமேயாகும். அதைவிட இது தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வை பிரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிவது அவசியமா? அவசியம் இல்லையா? என்கிற சூழ்நிலையை கம்யூனிஸ்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

“சர்வதேசியவாதத்தை வார்த்தைகளில் அங்கீகரிப்பதும் ஆனால் செயலில், எல்லா விதமான பிரச்சாரம், கிளர்ச்சி, செய்முறை நடவடிக்கைகளிலும் அதற்குப் பதிலாகக் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அமைதிவாதத்தைப் பின்பற்றுவதும் இரண்டாவது அகிலத்தில் இருந்த கட்சிகளில் மட்டுமன்றி, அதை விட்டு வெளியேறி வந்த கட்சிகளிடமும் இருக்கின்றன, அதிலும் இப்பொழுது கம்யூனிஸ்டு என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற கட்சிகளிலும் கூட அதிகம் இருக்கின்றன.

இந்தத் தீமைக்கு எதிரான, மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு எதிரான போராட்டத்தின் அவசரத் தன்மை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஒரு தேசத்திலுள்ள சர்வாதிகாரம் என்பதில் இருந்து சர்வதேசச் சர்வாதிகாரமாக மாற்றுகின்ற கடமையின் அதிகரித்து வருகின்ற தேவையோடு இது மேன்மேலும் முக்கியத்துவம் அடைகிறது.

குட்டி முதலாளித்துவத் தேசியவாதம், தேசிய இனங்களின் சமத்துவத்தை அங்கீகரிப்பதையே சர்வதேசியவாதம் என்று பிரகடனம் செய்கிறது, அதற்கு மேல், அதில் ஒன்றுமில்லை. இந்த அங்கீகாரம் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே என்ற உண்மை ஒரு புறமிருக்கட்டும், குட்டி முதலாளித்துவத் தேசியவாதம் தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாக்கிறது. …”14

                தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்ததாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்கமற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

பயன்படுத்திய நூல்கள்

1. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை -தேர்வு நூல்கள் தொகுதி 3 – பக்கம்- 356
2. மேற்கண்ட நூல்– பக்கம்- 357
3. மேற்கண்ட நூல்– பக்கம்- 357 -358
4. மேற்கண்ட நூல்– பக்கம்- 347-348
5. மேற்கண்ட நூல்– பக்கம்- 291
6.மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்-பக்கம் 23
6. 7. & 8.தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
9.தேசிய இனப் பிரச்சினை தீர்மானம்- பக்கம் 276-277
10.தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 118-119
11.தேசிய இனப் பிரச்சினைப் பற்றி ஆய்வுரைகள் (1913 ஜுன் 26) - பக்கம் 89
12.தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக்கம் 25
13.தேசிய, காலனியப் பிரச்சினைகளைப் பற்றி பூர்வாங்க நகல் ஆய்வுரைகள்
(கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்காக)

No comments:

Post a Comment