மார்க்சியம்
இயற்கைவியல் பொருள்முதல்வாதம்
(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட
36 வது வார வகுப்பு – வகுப்பு 25-09-2021)
மார்க்சியம், என்கிற பொது தலைப்பில் எட்டு வகுப்புகள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
1) இயற்கைவியல் பொருள்முதல்வாதம்= (இயக்கவியல் பொருள்முதல்வாதம்)
2) இயக்கவியல், இயக்கவியல் வகையினங்கள்
3) வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
4) அடித்தளமும் மேற்கட்டமைப்பும்
5) அரசியல் பொருளாதாரம்
6) உபரி மதிப்பு
7) கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
8) விஞ்ஞான சோஷலிசம்
இவை அனைத்தும் பல்வேறு
நூல்களில் படித்ததை சுருக்கமாகத் தொகுத்து வகுப்பு எடுக்கப்பட இருக்கிறது.
இன்று நாம் இயக்கவியல்
பொருள்முதல்வாதத்தை மிகமிக சுருக்கமாகப் பார்ப்போம்.
மார்க்சியம் என்றால் என்ன?
மார்க்சியம், என்பது காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் அனைத்தையும் குறிப்பதாகும். இதில் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளது. மூன்று உட்பிரிவுகளும் தம்முள் உள்ளிணைப்புக் கொண்டவையாகும். எந்த ஒன்றையும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது.
பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம் கூறுகிறவகையில் அரசியல் பொருளாதாரமே முதன்மையானதாகிறது.
அரசியல் பொருளாதாரம் முதன்மையானது
என்றாலும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அல்லது பொருளாதாரத்தை
மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதமான மார்க்சிய தத்துவம்
அவசியமாகிறது. அதனால் தத்துவப் புரிதல் இல்லாமல் அரசியல் பொருளாதாரத்தை முழுமையாக அறிந்து
கொள்ள முடியாது.
விஞ்ஞான சோஷலிசம் என்பதுதான்
கம்யூனிஸ்டுகளின் நேரடி நடைமுறைக்கு வழிகாட்டி, அதுதான் அரசியலுக்கு வழிகாட்டுகிறது.
கம்யூனிஸ்டுகளின் அரசியல் விஞ்ஞானத் தன்மை உடையது என்று கூறப்படுகிறது. இயக்கவியல்
பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட சமூகக் கருத்தே
விஞ்ஞான சோஷலிசமாகும். ஆக மூன்றையும் புரிந்து கொள்ளாமல் எந்த ஒன்றையும் தனித்து புரிந்து
கொள்ள முடியாது.
தத்துவம் என்பது இயற்கை, சமூகம் பற்றிய அறிதலின் பொதுவான விதிகளை பற்றிய விஞ்ஞானமாகும்.
அரசியல் பொருளாதாரம் என்பது உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், உற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை,
நுகர்வு ஆகியவற்றை ஆளுகின்ற பொருளாதார விதிகளை ஆராய்கிறது.
விஞ்ஞான சோஷலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், மாக்சியத் தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவ சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளையும் வெளிப்படுத்துகிறது.
தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம்
ஆகிய மூன்று மார்க்சிய உள்ளடக்கத்தை எந்த ஒரு தனி நூலில் இருந்து எடுத்து விளக்காமல்
பொதுவான தொகுப்பாக, தொடர் வகுப்பில் பார்க்கலாம்.
இயற்கையையும் சமூகத்தையும் மார்க்சியம், இயக்கவியல்
பொருள்முதல்வாத அடிப்படையில் அணுகுகிறது.
இன்றைய நிலையில் இயற்கையைப்
பற்றி பேசும் தத்துவத்துக்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம்
என்றும்; சமூகம், வரலாறு ஆகியவற்றைப் பேசுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறது.
இதைப் பார்க்கும் போது
இயற்கைக்குத்தான் இயக்கவியல் பொருந்துமா? சமூகத்துக்கு பொருந்தாதா என்கிற கேள்வி எழுவதற்கு
வாய்ப்பிருக்கிறது. அதனால் இயற்கை பற்றிய மார்க்சியப் பார்வையை “இயற்கைவியல் பொருள்முதல்வாதம்” (Natural Materialism) என்றும், சமூகம் பற்றிய
மார்க்சியப் பார்வையை “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்”
(Historical Materialism) என்றும் அழைப்பது சரியாக
இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டையும் சேர்த்து குறிப்பிடும் போது இயக்கவியல் பொருள்முதல்வாதம் (Dialectical Materialism) என்று கூறலாம்.
முதலில் இயற்கைக்கும் சமூகத்துக்கும்
இடையுள்ள அடிப்படை வேறுபாட்டை பார்ப்போம்.
இயற்கையும் சமூகமும் புறநிலை
விதியின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்கை செயற்படுவதற்கு மனிதனின் நடவடிக்கை தேவையில்லை,
ஆனால் சமூகத்தின் புறநிலை விதிகள் மனிதனைக் கொண்டே நடைபெறுகிறது. இந்த அடிப்படை வேறுபாட்டை
நான்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூகத்தின் புறநிலை விதிகள் மனிதனது வளர்ச்சிப் போக்கின் தேவையாக
வெளிப்படுகிறது.
இயற்கைவியல் பொருள்முதல்வாதம்
பற்றி இன்றைய வகுப்பில் பார்ப்போம்.
இந்தப் பிரிவை சற்று விளக்கமாகப்
படிக்க வேண்டும் என்றால் 300 பக்கம் உள்ள நூலைப் படிக்க வேண்டும். அப்படிப்பட்டதை இங்கே
மிகமிக சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வகுப்பில்
கலந்து கொண்ட பிறகு இது போன்ற விரிவான நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும்.
சுருக்கம் என்பதனால் இங்கே
நாம் இயற்கைவியல் பொருள்முதல்வாதத்தில் உள்ள சிலவற்றை மட்டுமே அதையும் சுருக்கமாகவே
பார்க்கப் போகிறோம். அது என்ன என்பதை முதலில் கூறிவிடுகிறேன். பருப்பொருள், பருப்பொருளும் இயக்கமும், பொருளாயத
ஒருமை, விசும்பும் காலமும், உணர்வுநிலை, அறிவுத் தோற்றவியல், உண்மை என்கிற இந்த
தலைப்புகளை மட்டுமே இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம்.
இயக்கவியலையும் அதன் வகையினங்களையும்
அடுத்த தனி வகுப்பில் பார்க்கலாம்.
பருப்பொருள்
(Matter)
ஆங்கிலத்தில் Matter (மேட்டர்) என்று சொல்வதையே பருப்பொருள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொருள் என்று
பொதுப்படையாகக் கூறினாலும் அது பருப்பொருளையே குறிக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள உலகம்
எப்படிப்பட்டதாக இருக்கிறது? என்பதே தத்துவத்தில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
இந்த பிரபஞ்சத்தில் மிகமிக
சிறு பொருளில் இருந்து பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் வரை காணப்படுகிறது. அதே போல சிறு
உயிரணு முதல் உயர்வான ஒழுங்கமைக்கப்பட்ட உயிரினமும் இருக்கின்றன. பழங் காலத்தில் இருந்தே
பொருட்களின் மூல அடிப்படை எது என்ற தேடல்
காணப்படுகிறது. அடிப்படையானது தண்ணீர் என்பதாகவே பெரும்பான்மையினர் அன்று கருதினர்.
மற்றும் சிலர் நெருப்பு, மண் என்றும் முடிவெடுத்தனர்.
கிரேக்க தத்துவ அறிஞரான
டெமாக்கிரீடிஸ், மூலத்தை மிகமிக சிறியதான, பிரிக்க முடியாத பொருளான அணு என்று அன்று கூறினார். இதுவே அனைத்துக்குமான
“முதல் செங்கல்”. இதில் இருந்தே அனைத்தும்
படைக்கப்பட்டதாக அவர் கருதினார். ஆனால் விஞ்ஞானம் அணுவை பிளந்து அது சிக்கலான அமைப்பு
கொண்டுள்ளதையும், அதற்குப் பின்னால் நேர்மின்மம், நொதுமம் இன்னும் பல பிரிக்க முடியாத
துகள்கள் இருப்பதை கண்டுபிடித்தது. இந்த அணுவை அனைத்துப் பொருள்களையும் உருவாக்கக்
கூடிய எளிய தொடக்க கட்டிடப் பொருளாக குறிபிட முடியாது. இயற்கையின் வற்றாத வளத்தை “முதல்
செங்கலாக” சுருக்க முடியாது என்பதை, நவீன இயற்கை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
இயற்கையில் உள்ள அனைத்துப்
பொருட்களும் எத்தகைய தனித்தன்மை பெற்றிருந்தாலும் அவையனைத்தும் ஒரு பொதுத் தன்மையைக்
கொண்டுள்ளது. அது என்னவென்றால், அனைத்துப் பொருட்களும் மனிதனது உணர்வுநிலையைச் சாராது
இருக்கின்றது.
மனிதன் இதனைப் பார்க்கிறானா?
இத்தகையப் பொருட்களை புரிந்து கொண்டானா? என்பதை சாராது இருக்கிறது. அதனால் தான் பருப்பொருள்
புறநிலையானது என்று கூறப்படுகிறது. இப்படி
மனிதனைச் சாராது இருக்கிற புறப்பொருட்களை மார்க்சிய தத்துவம் பருப்பொருள் என்ற சொல்லின்
மூலம் அனைத்தையும் பொதுக் கருத்தாக ஒன்றிணைக்கிறது.
வெளியுலகில் காணப்படும்
பருப்பொருட்கள், நமது புலன் உறுப்புக்களின் மீது தாக்கம் செலுத்தி, நம் உணர்ச்சிகளில்
பிரதிபலிக்கின்றன என்பதில்தான் இவற்றின் பொருளாயதத் தன்மை அடங்கி உள்ளது.
ஐம்புலன்களால் அறியக்கூடியது
பருப்பொருள். ஆனால் ஐம்புலன்களால் அறியக் கூடியது மட்டுமே பருப்பொருள் என்று புரிந்து
கொள்ளக்கூடாது. ஏன் என்றால் குறிப்பிட்ட குறைந்த ஒலியையும், குறிப்பிட்ட அளவுக்கு மேல்
உள்ள ஒலியையும் நாம் உணர்ந்து கொள்ள முடியாது. இருந்தாலும் இதை கருவிகளின் உதவியால்
அறிந்து கொள்ள முடியும்.
நாம் அறிந்து கொள்ளாத எத்தனையோ
பருப்பொருட்கள் இவ்வுலகில் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்
என்றே மார்க்சியம் கூறுகிறது.
பருப்பொருளும்
இயக்கமும் (Matter and
Motion)
உலகில் உள்ள அனைத்தும்
இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கம் இல்லாத எந்த பொருளும் உலகில் காண முடியாது.
ஒவ்வொரு பொருட்களுக்கு உள்ளும் இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் இடையறாது நடைபெற்றுக்
கொண்டுதான் இருக்கின்றன.
உலகில் அனைத்தும் இயங்கிக்
கொண்டிருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது. நிலவுவது, வாழ்வது என்றாலே அது இயக்கத்தில்
இருக்கிறது மாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்.
இயக்கம் இல்லாமல் பருப்பொருள்
இல்லை என்பது போலவே பருப்பொருள் இல்லாமல் இயக்கமும் இல்லை. பொருளற்ற “சக்திவாதம்” என்பது பொருளற்றதே ஆகும். பொருட்களை
இயக்குவது சக்தியே என்று கருதுவது சக்திவாதம்.
பொருளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே பொருட்களை இயக்குவதாக இந்தவாதம் கூறுகிறது.
பொருளின்றி சக்தியை தனித்து
பேசுவது, அதாவது புறநிலை என்கிற எதார்த்தத்துக்கு வெளியே சக்தி நிலவ முடியும் என்று
கருதுவது, ஒன்றுமே இல்லாததில் இருந்து உலகைப் படைக்க வல்ல கடவுளை அங்கீகரிப்பதில் போய்
முடியும். இது அப்பாலைத் தத்துவமே (Metaphysics) ஆகும்.
சில இயக்க வடிவங்களைப்
பார்ப்போம். 1) இயந்திரவியல் இயக்கம் 2) இயற்பியல் இயக்கம் 3) வேதியல் இயக்கம் 4) உயிரியல்
இயக்கம் 5) சமூகவியல் இயக்கம்.
விசும்பில் நடைபெவறுகிற
பருப்பொருளின் இருப்பும் இடபெயர்ச்சியும் (Mechanics) இயந்திரவியல் இயக்கங்களாகும். விசும்பு என்றால் வெளி. இந்த வெளியில் தான்,
அனைத்துப் பருப்பொருட்களும் இருக்கின்றன. பருப்பொருளுக்கு இடையே உள்ள இடைவெளியும் இருக்கின்றன.
இடைவெளி பருப்பொருள் அனைத்தையும் சேர்த்தே விசும்பு என்று கூறப்படுகிறது.
வெப்பம், அணுவினுள் நடைபெறும்
நகர்வுகள், மின்சாரம் போன்றவற்றின் இயக்கங்கள் (Physics) இயற்பியல் இயக்கங்களாகும்.
மூலக்கூறுகளின் சேர்க்கையும்
பிரிதலும் (Chemistry) வேதியல் இயக்கங்களாகும்.
உயிரினங்களின் வாழ்க்கை,
வளர்ச்சி, மறைவு ஆகியவைப் பற்றியது (Biology) உயிரியல்
இயக்கங்களாகும்.
சமூக உற்பத்தி முறையும்,
அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியையும் பற்றியது (Sociology) சமூகவியல் இயங்களாகும்.
பொருளாயத
ஒருமை (Material Monotheism)
அளவற்ற பொருட்களால் மனிதன்
சூழப்பட்டுள்ளான். அந்த பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட உறவுநிலையில் செயற்படுகின்றன.
ஒரு பருப்பொருள் தன்னுள்ளும்
பிறவற்றோடும் சேர்ந்தே இயங்குகிறது. எந்தப் பருப்பொருளும் பிரபஞ்சத்தில் தனித்து ஒதுங்கி
இருக்க முடியாது. ஒவ்வொரு பருப்பொருளும் மற்ற பருப்பொருட்களுடன் இணைந்தே செயற்படுகிறது.
எந்த ஒரு தனிப் பருப்பொருளும் எத்தகைய தனித் தன்மை பெற்றிருந்தாலும் உலகில் காணப்படும்
பிற பருப்பொட்களோடு பல லட்சம், பல கோடி இழைகளால் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது.
அனைத்து இயக்கத்தையும்
பிணைப்பையும் சேர்த்து பொருளாயத ஒருமை (Material Monotheism) என்று கூறப்படுகிறது. இந்த பொருளாயத ஒருமையில் ஏற்படுகின்ற இயக்கங்கள்
அனைத்தும் விசும்பிலும் காலத்திலும் நிகழ்கிறது. பருப்பொருளின் வாழ்நிலை என்பது விசும்பிலும்
காலத்திலும் தான் இருக்கிறது.
விசும்பும்
காலமும் (Space and Time)
பருப்பொருளினுடைய வடிவத்தின்
இடம் சார்ந்தது, விசும்பு என்றும், அந்தப் பருப்பொருளின் தொடர் நிகழ்வை சார்ந்தது காலம்
என்றும் அழைக்கப்படுகிறது. காலமும் விசும்பும் பருப்பொருள் இருத்தலின் சர்வப்பொது வடிவமாகும்.
காலமும் விசும்பும் இல்லாது
பரப்பொருள் இல்லை. அதே போல் பருப்பொருள் இல்லாத காலமும் விசும்பும் கிடையாது.
விசும்பில் இருக்கிறது
என்றால் ஒன்றின் அருகே மற்றொன்று என்ற வடிவத்தில் நிலவுகிறது, அதே போல் காலத்தில் இருப்பது
என்றால் ஒன்றினை அடுத்து மற்றொன்று என்ற வரிசைபடியான வடிவத்தில் நிலவுகிறது, அதாவது
நேற்று இன்று நாளை என்று தொடர்கிறது.
பருப்பொருளைப் போலவே விசும்பும் காலமும் மனிதனைச்
சாராது புறநிலையில் இருக்கிறது.
இன்றைய இயற்கை விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்புகள்
பருப்பொருள், இயக்கம், விசும்பு, காலம் ஆகியவற்றின் ஒருமையை உறுதிப்படுத்துகிறது. அதாவது
ஒற்றுமையை வலியுத்துகிறது.
பலகோடி ஆண்டுகளாக இருக்கின்ற கோள்களுக்கும் தொடக்கம்
உண்டு, அதே போல அழிவும் உண்டு. அவ்வாறு அழியும் போது அது ஒன்றும் இல்லாது மறைந்து போவதில்லை.
மற்றொரு மூலக்கூறுகளாக மாற்றம் பெறுகின்றன. அதனால் தான் பொருள்முதல்வாதத் தத்துவமானது,
பருப்பொருள் காலத்தில் நிரந்தரமானது என்று கூறுகிறது.
ஒன்றுமில்லாததில் இருந்து எதையும் தோற்றுவிக்க
முடியாது, அதே போல இருக்கும் ஒன்றை ஒன்றுமில்லாததாக அழித்திட முடியாது. இதை தான் பேச்சு
வழக்கில் “உள்ளது போகாது இல்லது வராது” என்று கூறப்படுகிறது.
மதமும், கருத்துமுதல்வாதத் தத்துவமும் உலகமானது
ஒரு கடவுளால்- ஒரு சக்தியால் படைக்கப்பட்டது என்று இதுநாள்வரை கூறிவந்தது. இன்றைய புதிய
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இந்தக் கருத்தை தகர்தெறிந்து விட்டது. பிரபஞ்சம் படைக்கப்பட்டது
என்பதை நவீன விஞ்ஞானம் மறுதலிக்கிறது.
விசும்பு வரம்பற்றது, காலம்
முடிவற்றது என்பதையே விஞ்ஞானம் நிரூபிக்கின்றன.
பிரபஞ்சமானது விசும்பிலும் காலத்திலும் இயங்கும் பருப்பொருளாகும். ஆகவே விசும்பும்
காலமும், பருப்பொருள் போன்று நிலைத்தவை- முடிவற்றவை ஆகும்.
உணர்வுநிலை
(Consciousness)
மனிதனது உணர்வுநிலை எத்தகையது?
அவனது சிந்தனைகள் எங்கிருந்து வருகின்றன? அவனது அறிவுலகம் எத்தகையது என்ற கேள்வியை
நெடுங்காலமாக மனிதகுலம் எழுப்பட்டு வருகிறது.
மனிதன் தன்னுடைய உணர்வுநிலையின் மூலமே நிகழ்ச்சிகளையும், பிற
மனிதர்களையும் மதிப்பீடு செய்கிறான். அதனால் உணர்வுநிலையைப் பற்றிய ஆராய்ச்சி தத்துவத்தில்
முக்கிய இடத்தைப் பெறுகிறது.
கருத்துமுதல்வாதமும் மதமும்
உணர்வுநிலையானது “ஆத்மா”வின் பண்பு என்று
கருதியது. இந்த ஆத்மாவானது மனிதனது உடலைவிட்டு தனியாக இருப்பதாக அது கூறியது. ஆழ்ந்த
உறக்கத்தில் கனவு காண்பது ஏன் என்றால், மனிதன் அப்போது ஆத்மாவில் ஒன்றுபடுகிறான் (ஒடுங்குகிறான்).
அந்த ஆத்மாவே கனவுகளை தோற்றுவிக்கிறது என்று மதமும்-கருத்துமுதல்வாதமும் கருதியது.
இன்றைய நவீன உலகில் உள்ள உளவியல் இதனை ஏற்றுக் கொள்ளாது.
உணர்வுநிலைக்குக் காரணமானதை,
இயற்றைக்கு மேம்பட்ட ஒன்றாகப் பார்ப்பதை நவீனப் பொருள்முதல்வாதம் நிராகரிக்கிறது.
புலனுணர்வுகளை அனுபவிக்காத
ஒருவனால் எந்த சிந்தனையையும் கருத்தினையும் உருவாக்க முடியாது. புறநிலையோடு உறவுகொள்ளாமல்
உணர்வுநிலை ஏற்படாது. ஆனால் மார்க்சுக்கு முன்பான பழையப் பொருள்முதல்வாதமானது கொச்சைத்
தன்மையுடையதாக இருந்தது. அது கல்லீரலில் இருந்து பித்தநீர் சுரப்பது போலவே மூளையில்
இருந்து சிந்தனை உருவாகிறது என்று கருதியது. கருத்துமுதல்வாதமும் மூளையில் இருந்து
கருத்துக்கள் தோன்றுவதாகக் கருதியது.
மார்க்சிய பொருள்முதல்வாதமானது
மூளையில் இருந்து சிந்தனை பிறக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறது. ஆனால், அத்துடன் நில்லாமல்
மூளையில் எப்படி கருத்துக்கள் உருபெறுகின்றன என்பதை தொடர்ந்து ஆய்வு செய்தது. உணர்வுநிலையானது
மூளையின் நேரடிப் படைப்பு அல்ல, அதற்கு மாறாக பொருளாத உலகுடன் பரஸ்பர உறவின் மூலம்
மூளைக்கு கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் முடிவெடுத்ததின் விளைவாகவே உணர்வுநிலை
ஏற்படுகிறது.
உணர்வுநிலையானது சமூக உறவுகளின்
பிரதிபலிப்பாகும். மனிதனும் மனித சமூகமும் தோன்றிய போது அது தோன்றியது. சமூகக் கருத்துக்கள்
அந்த சமூகத்துக்கு வெளியில் இருக்க முடியாது. சமூக உறவுகளில் உள்ள முரண்களில் இருந்துதான்
சமூகக் கருத்துக்கள் –சமூகச் சிந்தனைகள் தோன்றுகின்றன.
மூளை செயல்பாடாதவனிடம்
கருத்துக்கள் தோன்றுவதில்லை, அவன் இந்த புற உலகோடு தொடர்பு ஏதும் கொள்வதில்லை. மனிதனது
உணர்வுநிலையானது தன்னை சுற்றி நிகழ்கின்றவற்றில் இருந்துதான் தோன்றுகிறது. பருப்பொருள்
இன்றி உணர்வுநிலை ஏற்படாது.
புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை.
எதார்த்த உலகில் இருந்தே
மனிதன் பிரதிபலிப்புக்கான தகவல்களை பெறுகிறான். அந்தத் தகவல்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட
அனுபவங்களில் இருந்து பெற்றதாகும். அந்த அனுபவங்களின்படி அடுத்த செல்வழியை அவன் வகுத்துக்
கொள்கிறான், அவ்வாறு அறிந்ததில் தவறானதை தவிர்க்கிறான், சரியானதில் பயணிக்கிறான்.
அறிந்தவற்றில் இருந்துதான்
மனிதன் தனது எதிர்காலத்தை நோக்கி செல்கிறான். சமூகத்தின் புறநிலை விதியை அறிந்தவனே
சமூக மாற்றத்தில் வெற்றி பெறுகிறான். சமூகத்தின் புறிநிலை விதியை புரிந்து கொள்ளாதவன்
தோல்வி காண்கிறான்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்,
உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்புதான் உணர்வுநிலை. பருப்பொருளுக்கும்
உணர்வுநிலைக்கும் உள்ள உறவை நான்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிவுத்தோற்றவியல்
(Epistemology)
இயற்கையையும் சமூகத்தையும்
அறிய முடியுமா? என்பது தத்துவத்தில் மிகவும் முக்கியமான கேள்வியாகும். தத்துவத்தில்
இந்தப் பிரிவுக்கு அறிவுத்தோற்றவியல் (Epistemology) என்று பெயர். அனைத்துத் தத்துவங்களையும்
வேறுபடுத்துவதில் மிகவும் முக்கியமானது இந்த அறிவுத்தோற்றவில். அதாவது அறிவுத்தோற்றவியல்
அடிப்படையில்தான் தத்துவங்களுக்கு இடையே வேறுபாடு காணப்படுகின்றன.
இயற்கையையும் சமூகத்தையும்
அறிய முடியும் என்பதை மறுக்கின்ற தத்துவப் போக்கு இருக்கிறது, அதற்குப் பெயர் அறிவொணாவாதம் (Agnosticism). மனிதனால் அனைத்தையும் அறிந்து கொள்ள இயலாது.
எதார்த்தத்தை சரியாக அறிந்து கொள்ள மனிதனால் முடியாது என்பது இந்த தத்துவத்தின் கருத்து.
மார்க்சியத் தத்துவமான,
இயக்கவியல் பொருள்முதல்வாதம் இயற்கையும் சமூகத்தையும் அறிய முடியும் என்று கூறுகிறது.
மனிதர்கள் தங்களது நோக்கங்களை இயற்கையையும் சமூகத்தையும் அறிந்து கொண்டதின் விளைவாகவே
அமைத்துக் கொள்கின்றனர்.
நடைமுறையே அறிதலுக்கான தொடக்கம். தன்னைச் சுற்றியுள்ள உலகோடு
மனிதன் எந்தளவுக்கு உறவாடுகிறானோ அந்தளவுக்கு அவனது அறிவு வளர்கிறது.
ஆதி மனிதன் தனது அறிதலை
ஐம்புலன்களின் முலம் மட்டுமே பெற்றான். பின்பு கருவிகளைப் பயன்படுத்தி மனிதன் அறிதலை
அதிகப்படுத்திக் கொண்டான். வெளிப்படையான அறிதலில் இருந்து நுட்பமான அறிதலுக்கு பயிற்சி
பெற்றான்.
அறிதலுக்கு மூன்று தேவைப்படுகிறது.
அறிதலுக்கான பொருள் (Object), அறிகின்ற மனிதன் (Subject), பொருளோடு
செயற்படுவதனால் மனிதன் பெறப்படுகிற அறிதல் (Cognition). அறிவை பெறுவதற்கு இந்த
மூன்றும் அவசியமாகும். இதனை தொகுத்து சொல்லும் போது அறிபடுபொருள்-அறிபவன்-அறிதல் என்று
கூறப்படுகிறது (Subject
Object Cognition).
அறிதல் நிகழ்ச்சியை சற்று
விரிவாக புரிந்து கொள்வோம். முதலில் அறிவதற்கான பொருள், இரண்டாவது கருவிகளின் உதவுயுடன்
பொருட்கள் மீது மனிதன் செய்யும் செயல், மூன்றாவது இந்தச் செயல்களின் விளைவாக ஏற்படுகின்ற
பொருட்களுடைய பண்புகளின் சிறப்பியல்புகள் மூளையில் பிரதிபலிப்பாக பெறுதல்.
அறிதலை இப்படி சுருக்கமாகப்
பார்ப்பது எளிதாகத் தோன்றும், ஆனால் அதன் நடைமுறையானது அவ்வளவு எளிதானது அல்ல, மிகவும்
சிக்கலானது.
அறிதலுக்கான மூன்று படிநிலைகள்
இருக்கின்ற. 1) புலனுணர்ச்சி (Sensation) 2) புலனறிவு (Perception) 3) எண்ணம் (Notion).
புலனுணர்ச்சி (Sensation)
நடைமுறையே அறிதலின் தொடக்கம்
என்று முதலில் பார்த்தோம். நடைமுறை மூலமாகப் பெறுவதே புலனுணர்ச்சி.
ஒவ்வொரு பொருட்களின், தனித்தனி
இயல்புகள், புலன்கள்மீது பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்புகள் மூலமே அந்தப்
பொருட்களின் பண்புகள் அறியப்படுகிறது.
புலனுணர்ச்சி இரண்டு வகையில் நிகழ்கிறது, முதலாவது வெளிப் பொருட்களுடன்
புலனுறுப்புகள் கொள்ளும் பரஸ்பர செயல்கள். இரண்டாவது இந்த பரஸ்பர செயல்களால் மூளையில்
பிரதிபலிப்பு ஏற்படுவது.
இங்கே பிரதிபலிப்பு என்று
கூறுவதனால் இதனை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதன் செயல்முறை நேரடியானது
அல்ல. பரஸ்வர வினைகளால் எற்படுகிறது. கைவிளக்கின் மூலம் ஒளையைப் பாய்ச்சுவதும், நிறுத்துவதினால்
அணைந்து போவது போன்று பிரதிபலிப்பானது எளிதானது அல்ல.
அறிதலுக்கு புறநிலையே அடிப்படைக்
காரணம் என்று கூறுவதனால், புறநிலையில் இருந்து அறிவை அகநிலை நேரடியாக அப்படியே பெறுகிறது,
அதைப் பிடித்துக் கொண்டால் மட்டும் போதும் என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக்கூடாது.
புறநிலையோடு உறவாடுவதின் மூலமே மனிதன் அறிவைப் பெறுகிறான்.
அறிதலுக்கு புறநிலையில்
இருந்து வரும் தகவல்களும், மூளையும் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. அகப்பொருள், புறப்
பொருள் ஆகிய இரண்டுக்கும் இடையே தீவிர பரஸ்பர செயல்களால் தான் அறிதல் பெறப்படுகிறது.
புலனறிவு (Perception)
புலன்களின் மூலம் கிடைப்பவை
தனித்தனியான தன்மைகளே ஆகும். ஒரு பொருளைப்
பற்றி, ஒரு புலன் அந்த புலனில் மூலம் கிடைக்கம் தன்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
ஒரு இனிப்பு தின்பண்டம் இருக்கிறது என்றால், மூக்கு அந்த பொருளின் மணத்தை மட்டுமே பெற்று
தருகிறது. கண் அந்தப் பொருளின் வடிவத்தை மட்டுமே தருகிறது. அதே போலத்தான் மற்றவையும்.
அந்த பொருளை முழுமையாக
அறிய வேண்டுமானால், ஐந்து புலன்களும் தருவதை, இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். இப்படி
ஒன்றைப் பற்றி முழுமையான ஒன்றாகத் திரட்டித்தருவதை புலனறிவு என்று கூறப்படுகிறது.
எண்ணம் (Notion)
புலன்களால் அறிந்தவற்றை
மூளை, தன் நினையில் வைத்துக் கொள்கிறது, அப்பொருள் இல்லாத போதும் நினைவில் வைத்திருந்த
தோற்றங்களை மீண்டும் கொண்டு வருவதையே எண்ணம்
என்று அழைக்கப்படுகிறது.
புலனறிவுகள், எண்ணங்கள்
ஆகியவற்றின் அடிப்படையில் தான் கருத்து (concept) உருவாகின்றன. அனைத்துக் கருத்துக்களையும் உருவடிவமாகப்
பார்க்க முடியாது. ஆட்டையோ மாட்டையோ நாம் வடிவமாகப்
பார்க்கலாம், ஆனால் விலங்கை வடிவமாகப் பார்க்க முடியுமா? முடியாது, மா மரத்தைப் பாக்கலாம்,
பலா மரத்தைப் பார்க்கலாம், ஆனால் தவாரயினத்தைப் பார்க்க முடியுமா? முடியாது. அதே போல
சமூகத்தை வடிவமாகப் பார்க்க முடியாது. ஆனால் புரிந்து கொள்வதற்கு இத்தகைய கருத்துக்கள்
அவசியமாக இருக்கிறது.
கருத்து வழிபட்ட அறிதல் என்பது மிகவும் சிக்கலுள்ள, முரண்களைக்
கொண்ட செயல்முறையாகும். கருத்துக்கள் எதார்த்தத்தில் இருந்து விலகிவிடுவதற்கான வாய்ப்புகள்
உண்டு. எதார்த்தத்தில் இருந்து விலகுவதே தோல்விக்குக் காரணமாகும். இதனை நடைமுறையில்
பல நேரங்களில் நாம் கண்டுள்ளோம். அதனால் எதார்த்ததுக்கு பொருத்தமான கருத்துக்களே சரியானது
என்றும் எதார்த்தத்துக்கு பொருந்தாதக் கருத்துக்கள் தவறானது என்றும் முடிவெடுக்கிறோம்.
தவறை சரி செய்கிறோம், சரியானதை பின்பற்றுகிறோம்.
அறிதலுக்கு புறநிலையும்
அகநிலையும் அவசியமானது. புறநிலை அறிவுக்கு ஆதாரமானது, அறிதலை பெறுவற்கு புறநிலையும்
அகநிலையும் பரஸ்பர வினைபுரிய வேண்டும்.
உண்மை (Truth)
அறிதலின் நோக்கம் உண்மையை கண்டு அதன்படி செயல்படுவதற்கே ஆகும்.
உண்மை என்று சொன்னால் மதமும்,
கருத்துமுதல்வாதமும் இந்த உலகுக்கு அப்பால் அதைத் தேடிக் கொண்டிருக்கிறது. முடிவல்
அது பிரம்மம் (absolute) என்கிறது. எதார்த்தத்தை அறிதலே உண்மை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது. இதன சற்று விரிவாக பார்ப்போம்.
புறநிலை எதார்த்தம், மனிதனிடம்
சரியாகப் பிரிதிபலிக்கப்படுதைத்தான் உண்மை என்று கூறப்படுகிறது. எதார்த்தம் எப்படி
நிலவுகிறதோ அப்படியே உணர்வில் மீண்டும் கொண்டுவருதலே உண்மை. உண்மை என்றால் எதார்த்தத்தை உணர்தலே ஆகும்.
இறுதியான உண்மை (Ultimate Truth) என்று எதையும் கூறிட முடியாது.
உண்மையானது எதார்த்தின் சார்பானதே ஆகும். அறிதல் என்பது புறநிலையானது, புறநிலை மாறிக்
கொண்டே இருக்கிறது, அதனை ஒட்டி உண்மையும் மாறிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது.
அதனால் இறுதியான உண்மை என்பதாக எதுவும் கிடையாது என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம்
கூறுகிறது.
எதார்த்த உண்மையை, அறிதல் என்பது புறநிலை விதியை
அறிந்து, அதன் வழியில் விரைவாக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கே ஆகும்.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை சரியாகப் புரிந்துகொண்டு
செயல்படுபவனால் தான் சமூகத்தை விரைவாகவும், புரட்சிகரமாகவும் மாற்ற முடியும்.
இயற்கையும் சமூகமும் இயக்கவியல் அடிப்படையில்தான்
செயல்படுகிறது. அதனால் இயக்கவியலை நன்றாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். அடுத்த வகுப்பில்
இயக்கவியல் மற்றும் அதன் வகையினங்களைப் பார்ப்போம்.
(மார்க்சியம் - சிறிய அறிமுகம் / அனைத்து வகுப்புகளும்)